Wednesday, September 27, 2006

தமிழீழ வழிபாட்டு மரபும், சக்திவழிபாடும்.

நீண்ட நாட்களாகவே எழுதவேண்டும் என எண்ணியிருந்த ஒரு விடயம்.
என் நட்சத்திரவாரத்தில் எழுத வேண்டுமெனக் குறித்து வைத்திருந்த போதும், முடியவில்லை. இப்போது நவராத்திரிகாலம். சக்திவழிபாட்டில் அநேகர் ஆர்வமுறும் காலமாயிருப்பதால், தற்போது எழுதுவது கூடப் பொருத்தமென எண்ணுகின்றேன்.

தமிழீழத்தின் வழிபாட்டுப் பரம்பலானது, தமிழகத்தின் வழிபாட்டுப்பாரம்பரியத்திலிருந்து, பல இடங்களில், மாறுபட்டுள்ளது. தமிழீழமக்களில் கனிசமானோர், இந்துக்களாக இருப்பினும், அவர்கள் தங்களைச் சைவர்களாகவே அடையாளப்படுத்துவர். இச்சைவப்பாரம்பரியத்தின் தொன்மை தொட்டு நோக்குமிடத்து, அதிசயிக்கத்தக்க வகையில் அவர்கள் வாழ்வோடு, சக்தி வழிபாடும், முருகவழிபாடும், இணைந்திருப்பதைக் காணலாம். இலங்கைத்தீவின் மற்றெப்பகுதியிலும், பெருமளவில் காணப்படாத இவ்வழிபாட்டுத் தலங்களின் அமைவிடங்களும், அங்கே நடைபெற்று வரும் வழிபாட்டு முறைமைகளும், தமிழீழத்தின் நிலப்பரம்பலையும், வழிபாட்டில் தமிழர் முறைமையின் தாக்கத்தினையும் சுட்டுவதாக அமைகிறது.

இவ்வழிபாடுபற்றி விரிவாகநோக்குமுன், இவ்வழிபாட்டுத்தலங்களின் அமைவிடம்பற்றிய தெளிவினைக் காண்பது, இக்கட்டுரையின் சொல் பொருள் குறித்த புரிதலை, மேலும் இலகுவாக்கும் என கருதுகின்றேன். தமிழீழத்தின் மேற்குக் கரையிலிருந்து தொடங்குவோமேயானால், முதலில், சிலாபத்தில் முன்னேஸ்வரம் கோவிலுக்குப்பக்கத்தில் ஒருகாளிகோவில், புத்தளத்திற்குச் சமீபமாக, உடப்பில் திரெளபதி அம்மன், மன்னார் பிரதேசத்தில், திருக்கேதீஸ்வரத்துக்குச் சமீபமாக நானாட்டானில் ஒரு அம்மன், வடபகுதியில், நயினாதீவு நாகபூசணி அம்மன், புங்குடுதீவு கண்ணகை அம்மன், வல்வெட்டித்துறையில் அம்மன், பின் கிழக்குப்புறத்தில், கொக்கிளாயில் அம்மன், வற்றாப்பளையில் கண்ணகை அம்மன், திருகோணமலையில் பத்திரகாளி, சல்லி அம்மன். கீழே, மட்டக்களப்புப் பிரதேசத்தில், பாண்டிருப்பு திரெளபதை அம்மன், என்பவற்றைச் சிறப்பாகக் குறிப்பிடலாம்.

இங்கே குறிப்பிட்ட சக்தி வழிபாட்டுத் தலங்களெல்லாம், தமிழீழத்தின் கரையோரப் பிரதேசத்தில் அமைந்திருப்பதைக் காணலாம். தமிழீழ நிலப்பரப்பின் உட் பிரதேசத்திலும் சில முக்கிய சக்தி வழிபாட்டுத்தலங்கள் அமைந்திருந்தபோதும், கரையோரப்ப பகுதியில் அமைந்திருக்கும் வழிபாட்டுத்தலங்களின் நடைமுறைகளுடன் பெரிதும் மாறுபாடுடையதாக விருப்தையும் காணலாம். மேலும் குறிப்பாக உடப்பு திரெளபதி அம்மன், வற்றாப்பளைக் கண்ணகை அம்மன், சல்லி அம்மன், பாண்டிருப்புத் திரெளபதை அம்மன், ஆகிய தலங்களின் வழிபாட்டு முறைமைகள் கூட, ஏனைய ஆலயங்களைப்போன்று, ஆகம வழிபாட்டுத் தலங்களாக அல்லாமல், சைவமரபிலான வழிபாட்டு முறைமைகளோடு, பிராமணர்கள் அல்லாத மக்கள் பூசகர்களாக இருப்பதைக் காணலாம்.

இக்கோவில்களின் வழிபாட்டு முறைமைகளில் காணப்படும், மற்றுமொரு மாறுபாடான விடயம், உழைக்கும் மக்களின் நம்பிக்கைத் தலங்களாகவும், வாரத்தில் ஒருநாள் மக்கள் கூடும் மன்றங்களாகவும், வருடத்தில் குறித்த சிலதினங்கள் கொண்டாட்டங்கள் மிகுந்த விழா நாட்களாகவும், விழாக்களின் நிறைவுநாட்கள், பொங்கல், குளிர்த்தி, என்பனவற்றில் நிறைவு பெறுவதாகவும் அமைந்திருக்கிறது. பொங்கல் என்பதும், குளிர்த்தி, என்பதும், மனங்களின் நிறைவையும், மகிழ்வையும், உருவகப்படுத்துவதாகக் கூடக் கருதமுடிகிறது.

இவற்றையெல்லாம் உற்று நோக்குமிடத்து, தமிழர்தம் பாரம்பரிய வழிபாட்டு முறைமைகளில் ஒன்றான கொற்றவை வழிபாடு, காவல்தெய்வ வழிபாடு, என்பவற்றின் தொடர்ச்சியாகவும், நீட்சியாகவும், தமிழீழத்தின் கரையோரப்பகுதியில் காணப்படும் சக்திவழிபாடுகளைக்காணலாம். இத்தலங்களில் காணப்படும் வழிபாட்டு முறைமைகளில் இன்றளவும் காணப்படும், இத்தனித்துவங்களோடு, மேலும் சிறப்பாகச்சுட்டுவதற்குரிய சில விடயங்களில் முக்கியமானவைகளைத் தொடர்ந்து கவனிப்போம்.

இத்தலங்களில் பூசைகள் நடைபெறும் போது, வடமொழி மந்திரங்கள் சொல்லப்படுவது இல்லை. அநேகமாக வாய்மூடிய மெளன பூசைகளாகவே நடைபெறுகின்றன. அதற்கப்பால், தமிழிலே அகவல்களும், தாலாட்டுக்களும், பாடப்பெறுகின்றன. வாத்திய இசைக்காக பறையும், உடுக்குக்களுமே, இசைக்கப்படுகின்றன. விழாக்களில் நிகழ்த்தப்படும், கலைநிகழ்ச்சிகளாகவும், கிராமியக்கலைவடிவங்களான காவடி, கோலாட்டம், தீப்பந்த நடனம், கூத்து, என்பனவே முக்கியமானவையாக நடைபெறுகின்றன. ஆலய அமைப்பும் கிராமியத்தொன்மை சார்ந்ததாகவே இருப்பதையும் காணலாம்.

இவ்விதமாக தமிழீழத்தின் தொன்மைப்பாராம்பரிய வழிபாட்டுமுறைமையில், தமிழீழத்தின் சக்திவழிபாடு தொடர்ந்து செல்வது, தமிழர்தம் தனித்துவ வழிபாட்டுத் தொன்மைக்குச் சான்றாகவும், நிகழ்காலச் சாட்சியமாகவும், வரலாற்றுப் பதிவாகவும் அமைகிறது என்றால் மிகையாகாது.

27 comments:

Jeyapalan said...

நல்ல பதிவு.
// தமிழீழமக்களில் கனிசமானோர், இந்துக்களாக இருப்பினும், அவர்கள் தங்களைச் சைவர்களாகவே அடையாளப்படுத்துவர். //

அண்மைக் கால ஊடுருவல் பதமே "இந்து" என்ற அடையாளத்தை ஈழத்தில் கொண்டு வந்தது. ஈழ சமயங்கள் சைவம், புத்தம், இசுலாம், கிருத்துவம் அவ்வளவே. வைணவம் மிகச் சொற்பம், அண்மையில் கொண்டு வரப் பட்டது என்பது என் தாழ்மையான கருத்து.

குமரன் (Kumaran) said...

மலைநாடான் அவர்களே. நல்ல தொடர். மிக்க மகிழ்ச்சி. பத்தினித் தெய்வமாம் கண்ணகி தேவிக்கு ஈழத்தில் நிறைய கோவில்கள் உண்டு என்று ஏற்கனவே படித்திருக்கிறேன். ஆனால் த்ரௌபதி தேவிக்கும் கோவில்கள் உண்டு என்பது புதிய செய்தி.

தமிழகத்திலும் ஆந்திரத்திலும் த்ரௌபதி அம்மன் ஆலயங்கள் ஏராளமாக இருக்கின்றன. அங்கும் பெரும்பாலும் பார்ப்பனரல்லாதவரே வழிபாடுகள் நிகழ்த்துகின்றனர். அவைகளும் நீங்கள் சொன்னது போன்ற பண்பாட்டுக் கோலங்களுடனேயே. வடமொழி மந்திரங்கள் இல்லை. தமிழிலோ தெலுங்கிலோ தான் வழிபாட்டுப் பாடல்கள். கிராமியக் கலைகளே கொண்டாட்டங்கள்.

மதுரையிலும் தமிழகத்தின் வேறு சில நகரங்களிலும் வாழும் சௌராஷ்டிரர்கள் பெரும்பான்மையினர் பெருந்தெய்வங்களை வணங்குபவர்களாக இருந்தாலும் த்ரௌபதி தேவியையும் கொண்டாடிக் கோவில்கள் கட்டியிருக்கின்றனர். மதுரையில் தெற்கு மாசி வீதியிலும் தெற்கு மாரட்டு வீதியிலும் த்ரௌபதி அம்மன் கோவில்கள் சௌராஷ்டிரர்களல் கட்டப்பட்டு வழிபாடுகளும் அவர்களாலேயே செய்யப் படுகின்றன.

வெற்றி said...

மலைநாடான்,
நல்ல பதிவு.
இப்பதிவு பற்றி பின்னர் விபரமாக எழுதுகிறேன்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

மலை நாடர்!
இந்த பத்தினித் தெய்வவழிபாடு, "சேரன் தீவு" செரன்டீப்- சேர மன்னர்காலத்தவர்களில் சக்தி வழிபாடே!! கேரள மண்ணின் பகவதி வழிபாடே!! இளங்கோ அடிகளின் சிலப்பதிகாரத்தில்; கண்ணகியை சேரநாட்டுப் பெண்ணாகத் தான் கூறுகிறார்கள்.
இன்றும் பலர் ஈழத்தமிழ் மக்களின் வாழ்வு முறையில் மலையாள வாசம் இருக்கெனக் கூறக் கேட்டுள்ளேன்;
உடப்பு திரௌபதி அம்மன் தீமிதிப்பு பிரபலம்.புளியங்கூடம் மாரியம்மன்; வேலணை பெருங்குளத்து மாரியம்மன்; காரைநகர் வடக்கம்பரை மாரிஅம்மன் ஆலயங்களும்; சிறுவழிபாடாகத் தொடங்கி ஆகமவிதிகளுக்கு உட்பட்ட கோவில்களே!
புளியங்கூடம் மாரிஅம்மன் தேருக்கு காணிக்கையாக சுமார் 500 மாடாடு;1000 கோழி கொடுப்பார்கள்,இன்றும் என் கண்ணுக்குள் நிற்கிறது. யாழ் குடாநாட்டில் அதிக உயிர்க் காணிக்கை பெறும் அம்மன்.
என் அறிவுக் கெட்டாத காலங்களில் பலி இடும் பழக்கம் இருந்து; மனப் பண்பட்ட மக்களால்; அதைத் தவிர்க்க வேண்டுமெனும் கோரிக்கை வைத்த போது, சகலரும் ஏற்றுக்கொண்டு; காணிக்கைகள் ஏலம் விட்டு அக்காசில், திருப்பணி,அன்னதானம் இன்று வரை செய்கிறார்கள்.
ஏலத்தில் 2 மடங்கு,3 மடங்கு விலை கொடுத்து; வாங்குவோரும் உண்டு.
வடமராட்டியிலும் பல அம்மன் ஆலயங்கள் உண்டு.
பொக்குளிப்பான்; சின்னமுத்து வந்தால் அம்மனுக்குப் பொங்கலிடும் பழக்கம் இன்றுமுண்டு.
எங்கள் வாழ்வோடு இணைந்த இந்த வழிபாட்டை விளக்கியதற்கு நன்றி
யோகன் பாரிஸ்

வன்னியன் said...

நல்ல பதிவு.
புளியம்பொக்கணையை விட்டிட்டியள் போல கிடக்கு?

Anonymous said...

நல்ல பதிவு. ஈழத்தில் கண்ணகி வழிபாடு வரலாறு பற்றி எனது வலைத்தளத்தில் ஒரு கட்டுரை உள்ளது. பாருங்கள்.

சிங்கள கஜபாகு மன்னனால் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது தான் கண்ணகி அம்மன் வழிபாடு. கண்ணகி கோயில்களிலே சைவக் குருமார் பூசை செய்வதைக் கண்டித்தவர் ஆறுமுக நாவலர். “ஜைன மதச் செட்டிச்சியான கண்ணகியின் இரு மருங்கிலும் விநாயக, சுப்பிரமனிய விக்கிரகங்களை அச்சமின்றி வைத்துப் பூசிக்கும் அதி பாதகர்களாகிய இவர்களும் அன்றோ சைவக் குருமார் என்று கணிக்கப்படுகிறார்கள்” என்று நாவலர் குறிப்பிடுகிறார்.

எங்களூரில் பிரபல்யமான அம்மன் கோவில் சீரணி நாகபூஷணி அம்மன் ஆலயம்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வன்னியன் !
புளியம் பொக்கணையில் உள்ளது. நாகதம்பிரான் கோவில் தானே! அம்மனுமுண்டா??
யோகன் பாரிஸ்

வெற்றி said...

கனக்ஸ்,
வணக்கம்.

//சிங்கள கஜபாகு மன்னனால் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது தான் கண்ணகி அம்மன் வழிபாடு.//

தங்களின் இக் கருத்துடன் எனக்கு உடன்பாடில்லை. கண்ணகி வழிபாடு தமிழ்மன்னனாலேயே கொண்டு வரப்பட்டது எனத்தான் நான் படித்திருக்கிறேன். அது மட்டுமல்ல எனது ஊருக்கும் இந்த கண்ணகி வழிபாட்டுக்கும் பல தொடர்புகள் உண்டு. எனது ஊரில் வாய்மொழிக் கதை ஒன்று உண்டு. தமிழகத்திலிருந்து எனது ஊர் மூலமாகத்தான் கண்ணகி வழிபாடு ஈழத்திற்குக் கொண்டுவரப்பட்டதாம்.அதன் காரணமாகவே எனது ஊர் பெயரும் வந்தது என்பார்கள்.

வெற்றி said...

கனக்ஸ்,

//எங்களூரில் பிரபல்யமான அம்மன் கோவில் சீரணி நாகபூஷணி அம்மன் ஆலயம். //

அட, நீங்கள் சீரணியா? நான் சென்ற வருடம் ஈழத்திற்குச் சென்றிருந்த போது சீரணி அம்மன் ஆலயத்திற்கும் சென்றிருந்தேன். ஆலயத்தை வீடியோவில் படமாக்கினேன். விரைவில் நிழற்படமாக்கி பதிவிடுகிறேன்.

வன்னியன் said...

யோகன்,
புளியம்பொக்கனைத் தகவல் தவறுதான்.
அது நாகதம்பிரான்தான்.

G.Ragavan said...

நல்லதொரு பதிவு..... ஒரு + முதலில் போட்டாகி விட்டது. :-)

// மலை நாடர்!
இந்த பத்தினித் தெய்வவழிபாடு, "சேரன் தீவு" செரன்டீப்- சேர மன்னர்காலத்தவர்களில் சக்தி வழிபாடே!! கேரள மண்ணின் பகவதி வழிபாடே!! இளங்கோ அடிகளின் சிலப்பதிகாரத்தில்; கண்ணகியை சேரநாட்டுப் பெண்ணாகத் தான் கூறுகிறார்கள். //

யோகன் ஐயா...எனக்குத் தெரிந்த சிலப்பதிகாரத்தை வைத்து விளக்குகிறேன். சரியா? அதில் தவறு இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன்.

சிலப்பதிகார காலத்தில் பிரபலமாக இருந்த பெண் தெய்வம் கொற்றவையும் வள்ளியும். வள்ளியை கதிர்வேல் வள்ளலிம் துணைவியாகப் பாடுகிறார்கள். காதலிக்கிறவர்கள் எல்லாம் காதலன் முருகன். தாம் வள்ளி என்று பாடுகிறார்கள். கொற்றவையின் குமரன் முருகன் என்றும் பாடுகிறார்கள். அதற்குப் பிறகு உள்ளே வருவது கண்ணகி வழிபாடு.

இளங்கோவடிகள் கண்ணகியைச் சேரத்தி என்று சொல்லவில்லை. சொல்வது செங்குட்டுவனும் அவனுடைய சுற்றத்தாரும். செங்குட்டுவன் கோயில் கட்டி இலங்கைக் கயவாகுவையும் வடக்கத்து அரசர்களையும் சிறை விடுத்த பிறகு கோயிலில் எல்லாரும் கண்ணகியைச் சேரர் செல்வி என்று புகழ்கிறார்கள். ஆனால் கண்ணகியே தெய்வமாக வந்து தான் பாண்டியன் மகள் என்கிறாள். பிறந்த நாடு சோணாடு. சோழத்தி என்றிருக்கலாம். சொர்க்கம் புகுந்தது சேரநாட்டு எல்லையில் செங்குன்றத்தில். முதற் கோயில் எழுந்ததும் சேர நாட்டில். எழுப்பியது சேரன். அப்படியிருக்க பாண்டியன் மகள் என்று சொல்லக் காரணம்?

கோவலன் தன்னை விட்டு மாதவியிடம் போனதைச் சரியென்று கண்ணகி ஒத்துக்கொண்டாள் இல்லை. ஆனாலும் அவனையே விரும்பியதால் திரும்பி வந்ததும் சேர்ந்து கொண்டாள். கோவலன் தவறு செய்த பொழுது தனது தந்தையார் தட்டிக் கேட்டிருக்க வேண்டும். கேட்கவில்லை. ஆனால் பாண்டியன் தண்டனை கொடுத்தான். ஆகையால் "நானவன் தன் மகள்" என்று தெளிவாகவே கூறி விடுகிறாள்.

அதற்குப் பிறகுதான் இலங்கைக் கயவாகும் வடக்கத்தியரும் கூட கண்ணகிக்குக் கோயில் கட்டுவோம் என்று உறுதி செய்து அவரவர் ஊர்களில் கோயில் எழுப்பினர். அடுத்த பாண்டியன் வெற்றிவேலனும் திருக்கோயில்களைப் பாண்டி நாட்டில் எழுப்பினான். சேரன் செங்குட்டுவனின் மாமன் மகனே சோழன் கிள்ளி. அவனும் சோழ நாட்டில் கண்ணகிக்குக் கோயில் எழுப்புகிறான்.

சின்னக்குட்டி said...

சின்னனிலை என்ரை அப்பம்மா சொல்லுவா.... கண்ணகி மதுரையை எரிச்சு போட்டு வந்து தங்கி நின்ற இடஙகள் தான் இவை என்று....வற்றாப்பளை அம்மன், மட்டுவில் பண்டிதலச்சி அம்மன், கரவெட்டி அத்துள்ளு அம்மன் , அல்வாய் முத்துமாரியம்மன்... என்று............

Anonymous said...

வெற்றி, மன்னிக்கவேண்டும். கஜபாகு மன்னனை சிங்கள மன்னன் என்று குறிப்பிட்டதற்கு. அவன் ஒரு சிங்கள மன்னன் என்பதற்கு ஆதாரமிருப்பதாகத் தெரியவில்லை. அநுராதபுரத்தை ஆண்டவன். இது பற்றி அறிந்து பிறகு தருகிறேன்.
//அட, நீங்கள் சீரணியா?// அல்ல, ஆனால் சீரணி அம்மன் குடிகொண்டுள்ள சண்டிலிப்பாய் (அல்லது சண்டிருப்பாய்) எனது ஊர். வீடியோ ஒளிப்பதிவு பதிவை எதிர்பார்க்கிறேன். சீரணி அம்மன் கோயில் நிழல் படம் உங்களிடம் உள்ளதா? இருந்தால் எனது முகவரிக்கு அனுப்பிவிடுவீர்களா?
kstharan@gmail.com

கானா பிரபா said...

எங்களூரிலும் வட்டுவினி அம்மன், சிவகாமி அம்மன் ஆலயங்கள் சக்திவழிபாட்டின் சான்றுகளாக உள்ளன.

மலைநாடான் said...

நண்பர்களே!

உங்கள் அனைவரது வருகைக்கும் நன்றி. உங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனி விரைவில் பதில் தருகின்றேன். தற்போது பதில்கருத்துத் தரமுடியாதுள்ளமைக்கு மன்னிக்கவும்.

நன்றி!

மலைநாடான் said...

ஜெயபால்!

// வைணவம் மிகச் சொற்பம், அண்மையில் கொண்டு வரப் பட்டது என்பது என் தாழ்மையான கருத்து //

வைணவம் மிகச் சொற்பம் எனும் உங்கள கருத்து ஏற்புடையதே. ஆயினும், அண்மையில் கொண்டுவரப்பட்டது என்பதை, நீங்கள் அண்மையில் இலங்கையில் வீச்சாக எழுந்துள்ள ஆஞ்சநேய வழிபாட்டை முன் வைத்து மொழிகின்றீர்கள் போலும். ஆனாலும் வல்லிபுர பெருமாள், பொன்னாலை வரதராஜர், கோவில்கள் முதலான பழமையான விஷ்ணு கோவில்களை வைத்துப் பார்க்குமிடத்து, இந்திய மன்னர்களின் வருகையினூடு வந்ததாயினும், சற்றுப் பழமையானதே என எண்ணத்தோன்றுகிறத. ஆனால் இவை எல்லாவற்றுக்கும் முன்னரே தமிழீழத்தில் தனித்துவமான ஒரு சைவமரபு வழிபாட்டு முறைமை இருந்துவந்துள்ளது என்பதில் மாற்று இல்லை.

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

மலைநாடான் said...

குமரன்!

வருகைக்கும், தமிழக வழிபாட்டு முறைமைகள் பற்றிய தங்கள் அறிமுகக் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

\\மதுரையில் தெற்கு மாசி வீதியிலும் தெற்கு மாரட்டு வீதியிலும் த்ரௌபதி அம்மன் கோவில்கள் சௌராஷ்டிரர்களல் கட்டப்பட்டு வழிபாடுகளும் அவர்களாலேயே செய்யப் படுகின்றன\\

இந்தத் தெற்கு மாசி வீதி பற்றி பல சந்தர்ப்பங்களில் கேள்விப்பட்டிருக்கின்றேன். அது ரொம்ப விசேடமான வீதியோ? அந்தப் பகுதியில் செளராஷ்டிரர்கள் அதிகமாக வாழ்கின்றார்களோ?

மலைநாடான் said...

வெற்றி!

ஆறுதலாக வந்து சொல்லுங்கள். வாசிக்கக் காத்திருக்கின்றோம்.
நன்றி!

மலைநாடான் said...

யோகன்!

நீங்கள் சொல்வது உண்மை. சிறுவழிபாடாக இருந்த பல சக்திவழிபாட்டுத்தலங்கள், தற்போது, ஆகமக்கோவில்களாக மாற்றம் பெற்று விட்டன

தங்கள் விரிவான கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

மலைநாடான் said...

வன்னியன்!

முதலில் தங்கள் வருகைக்கு நன்றி.

புளியம்பொக்கனை சக்தி வழிபாட்டுத்தலமல்ல என்பதால்தான் இங்கே சேர்க்கவில்லையே தவிர, புளியம்பொக்கனையை மறக்க வில்லை. நாகவழிபாடும் ஈழத்தமிழர்களும், எனும் எனது இன்னுமொரு பதிவில் புளியம் பொக்கனை நிச்சயம் வரும்.

Anonymous said...

மலைநாடான், நல்ல பதிவு! இங்கு பதியப்பட்டவை பற்றி நான் கேள்விப்பட்ட சில விடயங்கள்...(தவறெனின் மன்னிக்கவும்)

"கண்ணகியை வழிபட்ட பாண்டியனும் கொங்கிளங் கோசரும் நலம் பெற்ற செய்தியைக் கேட்ட கஜபாகு தானும் தவறாது பலியிட்டு கண்ணகியைப் போற்றினான்" என்று சிலப்பதிகாரம் சொல்கிறது. கண்ணகி வழிபாடு இன்றும் சிங்களவரிடையே உண்டு.

மேலும், சேர நாட்டவர்க்கும் ஈழவர்க்கும் உள்ள பல ஒற்றுமைகளை எனது மலையாள நண்பர்கள் வாயிலாக அறிந்துள்ளேன். ஈழத்தமிழர்கள், சேர நாட்டிலிருந்து, அவர்களது மொழி மலையாளமாக மாறுதலின் முன்னர், குடிபெயர்ந்தவர்கள் என்னும் ஒரு கருத்தும் சிலரால் சொல்லப்பட்டு வருகின்றது.

இராமனுக்கு ஈடாகப் படைக்கப்பட்ட சைவக் கடவுளே முருகன் எனவும் தோன்றுகிறது. முருகனுக்கு வட இந்தியாவில் கோயில்கள் இல்லை எனவும் கேள்விப்பட்டதுண்டு.
-நன்றி

மலைநாடான் said...

கனக்ஸ்!

உங்கள் கருத்துக்களில், நாவலர் கூற்றுப் பற்றி எனக்குச் சில மாறுபட்ட கருத்துக்கள் உண்டு. அவை பற்றி விரிவாகப் பின்னர் பேசுவோம்.

நீங்க்ள் சண்டிலிப்பாய் என்பதை இப்போதுதான் அறிந்து கொண்டேன். உங்கள் ஊரும், சீரணி நாகம்மாள் கோவிலும் எனக்கு நிரம்பவும் பரிச்சயமானவை. தனிமடலில் தொடர்பு கொள்கின்றேன்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

மலைநாடான் said...

//எனது ஊருக்கும் இந்த கண்ணகி வழிபாட்டுக்கும் பல தொடர்புகள் உண்டு. எனது ஊரில் வாய்மொழிக் கதை ஒன்று உண்டு. தமிழகத்திலிருந்து எனது ஊர் மூலமாகத்தான் கண்ணகி வழிபாடு ஈழத்திற்குக் கொண்டுவரப்பட்டதாம்.அதன் காரணமாகவே எனது ஊர் பெயரும் வந்தது என்பார்கள். //

வெற்றி!

நீங்கள் குறிப்பிடும் இடம் எதுவென்று புரிய வில்லையே. ஊர்பெயருடன்சொல்லப்படும் கதையையும் தரலாமே

வருகைக்கு நன்றி!

மலைநாடான் said...

ராகவன்!

//சிலப்பதிகார காலத்தில் பிரபலமாக இருந்த பெண் தெய்வம் கொற்றவையும் வள்ளியும். வள்ளியை கதிர்வேல் வள்ளலிம் துணைவியாகப் பாடுகிறார்கள். காதலிக்கிறவர்கள் எல்லாம் காதலன் முருகன். தாம் வள்ளி என்று பாடுகிறார்கள். கொற்றவையின் குமரன் முருகன் என்றும் பாடுகிறார்கள். அதற்குப் பிறகு உள்ளே வருவது கண்ணகி வழிபாடு.//

உங்களுடைய இந்தக்கருத்தே எனக்கும் உள்ளது. கருத்துக்கு நன்றி!

உங்கள் புதிய படத்தில் ரொம்ப அழகாக உள்ளீர்கள்.:))

G.Ragavan said...

// மலைநாடான் said...
ராகவன்!

உங்களுடைய இந்தக்கருத்தே எனக்கும் உள்ளது. கருத்துக்கு நன்றி!

உங்கள் புதிய படத்தில் ரொம்ப அழகாக உள்ளீர்கள்.:)) //

நன்றி மலைநாடன். எல்லாப் புகழும் முருகனுக்கு. :-)

இந்தப் பதிவில் பலருடைய கருத்துக்கு பதில் சொல்ல விருப்பந்தான். ஆனால் நீங்களே சொல்லி விட்டீர்கள். :-)

வெற்றி said...

கனக்ஸ்,
//சீரணி அம்மன் கோயில் நிழல் படம் உங்களிடம் உள்ளதா? இருந்தால் எனது முகவரிக்கு அனுப்பிவிடுவீர்களா?
kstharan@gmail.com//

நிச்சயமாக. Oct 19 க்குப் பின்னர் அனுப்புகிறேன். அதுவரையில் கொஞ்சம் வேலைப்பளு.

குமரன் (Kumaran) said...

//இந்தத் தெற்கு மாசி வீதி பற்றி பல சந்தர்ப்பங்களில் கேள்விப்பட்டிருக்கின்றேன். அது ரொம்ப விசேடமான வீதியோ? அந்தப் பகுதியில் செளராஷ்டிரர்கள் அதிகமாக வாழ்கின்றார்களோ?
//

மதுரையின் தென் பகுதியில் சௌராஷ்டிரர்கள் அதிகமாக வாழ்கிறார்கள். தெற்கு மாசி வீதி பல காரணங்களுக்காகப் பிரபலமானது. நீங்கள் எந்தத் தருணங்களில் அதனைப் பற்றிக் கேள்விப்பட்டீர்கள் என்று தெரியவில்லையே?