Tuesday, December 18, 2007
குளிர், வெப்பம், சுவிஸ்.
எனது முந்தைய இடுகையின் விரிவாக, அதில் தொடங்கிய விடயத்தையே இங்கும் குறிப்பிடவுள்ளேன். சென்றவாரத்தில் சுவிஸின் மத்திய கூட்டாட்சி அமைச்சரவைத் தெரிவுகளில், முக்கியத்துவம் நிறைந்ததாகவிருந்த திருமதி: எல்வின் விட்மர் ஸ்லும்ப் அவர்களின் தெரிவும், அவரது பதவியேற்பும், நடைபெற்றதபின், அது குறித்த கருத்துப்பகிர்வுகளும், கணிப்புக்களும் நடைபெற்று வருகின்றன. அந்தளவுக்கு அதன் முக்கியத்துவம் என்ன?
அரசாங்க அமைச்சரவையிலிருந்து வெளியேறியுள்ள அரசியலாளர், திரு. கிறிஸ்தோவ் புளொக்கர் ஒரு சராசரியான அரசியல்வாதியல்ல. நிறைந்த அரசியல் அனுபவமும், தீவிர செயற்பாட்டளனுமாவார். தனித்துவமான சுவிஸ் எனும் சிந்தனையின் வழி, பல சிறப்புச் சட்டங்கள் உருவாக காரணமானவர். அப்படியிருந்தும், அவரது கட்சியின் மற்றொரு பெண்உறுப்பினரின் தெரிவின் மூலம் அரசகட்டமைப்பிலிருந்து வெளியேற்றபட்டிருப்பது ஏன்? எனக்கேள்வி எழும்போது, இனவாதத்துக்கெதிரான சுவிஸ் மக்களின் மனநிலை தெளிவாகிறது.
பொதுத்தேர்தலுக்கு முன், திரு. கிறிஸ்தோவ் புளொக்கரின் "தூய்மையான சுவிஸ் உருவாக்கம் " எனும் கருத்துருவாக்கப் பிரச்சாரத்தினால், பல மாற்றுக் கருத்துக்களும், எதிர்ப்புக்களும், உருவாகின. ஆரம்பத்தில் அது குறித்து, திரு புளொக்கரும், அவரது ஆதரவாளர்களும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. " வெளிநாட்டவர்களுக்கெதிராக நாம் கருத்துக் கூறவில்லை, சுவிஸில் குற்றம் புரியும் வெளிநாட்டவர்களுக்கெதிராகவே செயற்படுகின்றோம்." என்று சொல்லிக் கொண்டே செயற்பட்டார்கள். ஆனால் அவர்கள் பாவித்த கறுப்பு ஆடு சுவரொட்டி ஓவியம், ஒரு இனவாத கருத்துச்சித்திரமே எனப் பலரது கண்டனத்துக்கும் உள்ளானது. போதாக்குறைக்கு ஜேர்மன், ஆஸ்திரியா போன்ற நாடுகளில் உள்ள, வெளிநாட்டவர்களுக்கெதிரான கருத்தாளர்களினாலும் அப்படம் கையாளப்பட்டது.
இப்படி எழுந்த எதிர்க்குரல்களாலும், தேர்தல் பிரச்சாரகாலங்களில் என்றுமில்லாதவாறு நிகழ்ந்த வன் முறைகளாலும், வெளிநாட்டவர்கள் மனதில் தங்கள் சொல்வதற்கு மாறாகவே, கருத்துருவாக்கம் நிகழ்வதையும், அதற்கும் மேலாக சுவிஸ் மக்கள் பலரிடமும் கூட அத்தகைய எண்ணம் எழுவதையும் , இது கூட்டமைச்சுத் தேர்வின் போது பாதகமான சூழ்நிலையைத் தோற்றுவிக்கலாம் என்பதையும் அவதானித்த திரு: புளொக்கர், தேர்தலின் பின் சில வெளிநாட்டுச் சமூகங்களின் பிரதிநிதிகளை நேரில் சந்தித்து, தனது நோக்கம் பற்றி விரிவாகப்பேசினார்.
இத்தகைய நிலையில்தான், மத்திய கூட்டாட்சி அமைச்சரவைத் தெரிவின்போது, திரு. புளொக்கரின் இடத்துக்கு, அவரது கட்சியைச் சார்ந்த திருமதி. எவ்லின் விட்மரும் தெரிவாகிறார். முறையே 115, 125, என்ற வாக்குகளின் அடிப்படையில் தெரிவாகிய எவ்லின், இறுதிக் கணங்கள் வரை தனது தெரிவை ஏற்பது குறித்து யோசித்தவண்ணமே இருந்திருக்கிறார். தனது பதிலிறுப்புகான அவகாசம் கேட்டிருந்த காலப்பகுதியில், பல குறுஞ்செய்திகள் பரிமாற்றம் நிகழ்ந்ததாம். ஏற்கவும் என ஆதரவாளர்களாலும், ஏற்கவேண்டாமென மற்றவர்களாலும் கூட, சொல்லப்பட்டதாம். ஆனாலும் அவரது தெரிவும், அதற்கான அவரது சம்மதமும், இன்று பல சுவிஸ் பிரஜைகளாலும் வரவேற்கப்படுகிறது. அவரது தெரிவு குறித்து எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில், அறுபது வீதமான மக்கள் அவரது தெரிவை வரவேற்றுள்ளனர். அதேசமயம் திரு. புளொக்கரின் வெளியேற்றத்தை விரும்பாத மக்கள் வெறும் இருபத்தியாறு வீதமானோரே.
ஆக, சக்தி வாய்ந்த இந்த அரசியல் தலைவரை, அரச கட்டமைப்பில் இருந்து சுவிஸ் மக்கள் வெளியேற்ற காரணமாக அமைந்தது, அவர் பேசிய வெளிநாட்டவர்ளுக்கெதிரான கருத்துக்களே என்றே எண்ணத் தோன்றுகின்றது. " தனித்துவமான சுவிஸ்" என்ற எண்ணவோட்டத்திற்கு, சுவிஸ் மக்கள் ஆதரவாக இருந்த போதும், அந்த சிந்தனையோடு, வெளிநாட்டவர்கள் குறித்து, திரு. புளொக்கர் சொன்ன கருத்துக்களில் இனவாதத் தொனி இருந்ததாகவே சுவிஸ் பிரஜைகள் பலரும் எண்ணியுள்ளார்கள். இதன் காரணமாகவே, அவரது கட்சியைச் சார்ந்த இன்னொருவரைத் தெரிவு செய்துள்ளார்கள் என்று சொல்லலாம்.
இந்தத் தெரிவில் பங்குகொண்ட அரசியல்வாதிகளின் மனநிலைக்கு, நல்ல உதாரணமாகக் கூட இத்தெரிவினை நோக்கலாம். நாட்டின் நலனும், அதேசமயம் தனிமனித நலனும், கருத்திற்கொள்ளப்பட்ட தேர்வாக இது அமைந்திருக்கிறது. தெரிவின் இறுதி முடிவை உறுதி செய்த திருமதி. எவ்லின் விட்மரது தெளிவும், துணிவும், பாராட்டத்தக்கது. தனது கட்சிக்குள்ளேயே, தான் எடுக்கும் முடிவினால் எதிர்த்தன்மை ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்கள் இருந்தபோதும், மனிதாபிமான நோக்கில் அமைந்த அவரது முடிவு மெச்சத்தகுந்தது.
மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் நடந்த தெரிவின் மூலம், சுவிஸில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு, தம்மீதான சுயபார்வையை அதிகரித்துக்கொள்ள மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருக்கிறது. இனவாதத் தன்மைகொண்டிருந்தாலும் கூட, திரு. புளொக்கர் அந்த வாதத்திற்காக காட்டிய ஆதாரமான காவல் துறை அறிக்கையில் காணப்படும், குற்றச்செயல்களில் அதிக வெளிநாட்டவர்கள் ஈடுபடும் புள்ளிவிபரம், "தனித்துவமான சுவிஸ்" என்ற கருத்தியலில் வாழும் அநேக சுவிஸ் பிரஜைகளுக்கு விருப்பமானதல்ல. ஆதலினால் சுவிஸில் வாழும் வெளிநாட்டவர்கள் தமது செயற்பாடுகளை, இந்நாட்டு சட்ட விதிகளுக்கமைவாகச் செயற்படுத்த, சுவிஸ் பிரஜைகளால் வழங்கப்பட்ட இறுதிச் சந்தர்பமாகவும் கொள்ளலாம்.
Saturday, December 15, 2007
சுவிஸ் அரசியலில் அதிரடிப் பெண்.
வாக்கெடுப்பில் புளொக்கர் 115 வாக்குகளையும், எவ்லின் 125 வாக்குகளையும், பெற்றிருந்த நிலையில், தனது தெரிவை ஏற்றுக்கொள்வது குறித்த இறுதி முடிவை 13.12.07 காலை 8.00 மணிக்குத் தெரிவிப்பதாகச் சொல்லியிருந்த திருமதி. எவ்லின் விட்மர், நாட்டின் முக்கிய பதவிக்குத் தன்னைத் தெரிவு செய்தமைக்கு நன்றி கூறி, தனது தெரிவினை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார். இவரது அறிவிப்பினை பாராளுமன்றினுள் உறுப்பினர்களும், மன்றின் வெளியே அதிகாலை முதல் திரண்டிருந்த ஆதரவாளர்களும் கரவொலி எழுப்பி வரவேற்றனர்.
கடந்த காலங்களில் சுவிஸ் அரசியலில் மிகச் சக்திவாய்ந்த தலைவராக விளங்கிய திரு. கிறிஸ்தோவ் புளொக்கர் " தன்னை சுவிஸ் அரசாங்கத்திலிருந்து வெளியேற்றியிருக்கலாம், ஆனால் சுவிஸ் அரசியலில் இருந்து வெளியேற்ற முடியாது " என, ஊடகவியலாளருக்குத் தெரிவித்துள்ளார்.
தெரிவு செய்யப்பட்டுள்ள திருமதி: எவ்லின் விட்மர் மூன்று பிள்ளைகளுக்குத் தாய். ஏழுபேர் கொண்ட மத்திய கூட்டாட்சி அமைச்சரவையில், சுவிஸ் அரசியலில் முதற்தடவையாக மூன்று பெண்கள் அங்கம் வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
திருமதி. எவ்லின் விட்மரின் ஏற்புரையைக் காணொளியில் காண