Sunday, September 17, 2006

என் தீவிருந்து புறப்பட்ட டைட்டானிக்.

இழப்புக்கள் என்பது எம்மினத்தின் தலைவிதியாகிப்போனதோ என்னவோ, தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. புலப்பெயர்வும், அகதிவாழ்வும்,கூட அப்படியே. யுத்தத்தில் மட்டு மல்ல, இடப்பெயர்விலும் கூட இழப்புக்கள் வந்தன. தரையில், கடலில், என பல இடங்களில், பல நிலைகளில், ஏற்பட்டன.

தமிழீழத்திற்கும் அப்பால், ஐரோப்பிய எல்லைகளில், அரபிக்கடல்களில், பாக்குநீரிணையில், என பல இடங்களில் மடிந்துபோனார்கள் எம் மக்கள். மறுவாழ்வின் நம்பிக்கையோடு புறப்பட்டவர்களை மறுபடியும் காணமுடியாமலே போனது. என் உறவுகளிலும் இத்தகைய இழப்புக்கள் ஏற்பட்டிருக்கின்றன. அதில் என்னைப் பாதித்த ஒன்று...

இரண்டாம் ஈழப்போர் காலகட்டம். யாழ்ப்பாணத்திற்கு மேலேயுள்ள தீவுக்கூட்டங்களில் ஒன்றின் கரையிலிருந்து, இருளில் இந்தியக்கரை நோக்கி, அலையைக் கிழித்து, அந்தச் சிறிய படகு புறப்பட்டது. பெரியவர்கள் சிறியவர்கள் குழந்தைகள் என அறுபத்தைந்து பேர்கள் அப்படகில் பயணமானார்கள்.

உறவுமுறையில் என் சிறிய தந்தையர்களாக அமைந்த இருவர் குடும்பமும் அதில் அடங்கியிருந்தது. இலங்கைக்கடற்படையின் கண்களில் அகப்படாமல், அக்கரையில் தஞ்சம் தரும் தமிழகக் கரைக்குத் தப்பித்துவிட வேண்டும் என்பதே அவர்களின் பிரார்த்தனையும், நம்பிக்கையுமாக இருந்தது.

படகோட்டி, ஏற்கனவே சொல்லிய அறிவுறுத்தல்களின் படி அனைவரையும், மறுபடியும் ஒழுங்கு படுத்தி அமர்த்திக் கொண்டான். பாக்கு நீரினை அன்று என்னவோ பக்குவமாக இல்லை. அலையடித்து ஆர்பரித்தது. படகின் உள்ளே நீரலைகள் துளியாகத் தெளித்த போதெல்லாம் சிறுவர்கள் சிரித்து மகிழ்ந்தார்கள். பயணத்தின் பயங்கரத்திலுறைந்திருந்த பெண்கள் அவர்களின் சிரிப்பை அடக்க முயன்றார்கள். ஆண்களின் கண்களில் இருளைக்கிழித்த தேடல். அவ்விதமே படகோட்டியின் உதவியாளர்களும், கரியன் எனக் குறியீட்டுச் சொல்லில் கடலோடிகள் விழிக்கும், சிறிலங்காவின் கடற்படைக்கப்பல்கள் தெரிகின்றனவா என்பதே அவர்களின் தேடு பொருள்.

இருளும் பயமும் கலந்த அந்தப்பயணக்கணங்கள் மரணவலி தருபவை. எந்தநேரமும், எதுவும் நடக்கலாம், எனும் நிச்சயமற்ற சூழலில் நடக்கும் பணங்கள். நல்லதே நடக்கும். நமக்கும் வாழ்வு இருக்கும் என்ற நம்பிக்கையில் நடந்து கொண்டிருக்கும் இரவுப்பயணங்கள். எத்தனையோ பிரார்த்தனைகள், எத்தனையோ நேர்த்திகள், என்பவற்றுடனும், எங்கள் மண்ணைப் பிரிகின்றோமே எனும் ஏக்கத்துடனும், கடல்களில் மிதக்கும் கண்ணீர் பயணம்.

படகிலிருந்து பாரத்துக்கொண்டிருந்த ஆண்களின் கண்களில் எதிரே தெரிந்த கரிய தோற்றம் அச்சம் தர, அது கச்சதீவு பயப்பட வேண்டாம் என படகோட்டி உரைத்தான். எல்லோர் மனதிலும் நிம்மதிப் பெருமூச்சு. கச்சதீவு தாண்டிவிட்டால், எளிதாக இந்தியக்கடற்பரப்புக்குள் நுழைந்துவிடலாம் என்பதில் வந்த ஆசுவாசம் அது.

சிவப்பி!
என் சித்தப்பாவின் செல்லப்பெண். அவள் மூன்றாவது குழந்தை. முதலும் ஒரு பெண் உண்டாயினும், இளையவளில் அதீதப் பிரியம். யாழ்ப்பாணக்குணாம்சத்தில் சிகப்புப் ( வெள்ளை) பிள்ளைகளுக்குக் கிடைக்கும் சிறப்பான மரியாதையும் ஒருகாரணம். அதனால்
எல்லோருக்கும் பிடிக்கும். அவள் சிரிப்பு கொள்ளை அழகு. அதனால் எனக்கும் பிடிக்கும். சிவப்பி இப்போதும் சிரித்துக்கொண்டிருந்தாள்.

படகு கச்சதீவைத்தாண்டிற்று என்பதையும் இந்திக்கடல் எல்லைக்குள் வந்துவிட்டதை உறுதிப்படுத்தி உரைத்ததான் படகோட்டி. சாட்சியத்திற்காய் சற்றுத் தொலைவில் தெரிந்த தமிழக மீன்பிடிப்படகுகளின் சிறு வெளிச்சத்தையும், தமிழகக் கரையில் மின்னிய ஒளியையும் காட்டி நின்றான். அனைவரிடத்திலும் நிம்மதிச் சந்தோசம்.

அதுவரையில் இருந்த பயம் கலைய ஒவ்வொருத்தரும், தாம் கொணர்ந்த, தேநீர், கோப்பி வகையறாக்களைப் பகிர்ந்து கொண்டிருந்தனர். இனியென்ன இன்னும் கொஞ்ச நேரத்தில் போயிடலாம் என்ற வார்த்தைப்பிரயோகங்களும் வந்து விழுந்தன. அந்த நேரத்தில் படகின் அடிப்பகுதியில் அமர்ந்திருந்தவர்கள் மத்தியில் சலனம்.

படகின் அடிப்பகுதியிலிருந்து உட்புகுந்த நீர் மெல்ல மெல்ல அதிகரிக்கத் தொடங்க, ஏற்பட்டிருந்த நிம்மதியும்,நம்பிக்கையும், இல்லாமல் போனது. படகோட்டியின் பணிப்பின் பேரில், ஆண்கள் சிலர், கிடைத்த பாத்திரங்களால், உடபுகுந்த நீரை வெளியே வாரி இறைத்தார்கள். கரைசேர்ந்து விடவேண்டும் எனும் வேட்கை, வேகத்தை அதிகரிக்க, நீரை வேகமா வாரியிறைத்தார்கள். களைத்தவர்கள் பின்வாங்க மற்றவர்கள் செயற்பட்டார்கள்.

அந்த நம்பிக்கைக் கணங்களில் படகின் அடிப்பகுதி உடைந்தது. தீடிரென ஒருபகுதியால் பெருமளவில் உட்புகுந்த நீர், படகை கவிழ்த்து விட்டது. படகிலிருந்த அனைவரும் பாக்கு நீரிணைக்குள். யார் யார் எங்கெங்கு என் தெரியவில்லை. யாரும் கதறக்கூடவில்லை. இருளோடு இருளாக, ஒருபயங்கரம் நடந்தது. ஒரு சித்தப்பாவும், சித்தியும், நன்றாக நீந்துவார்கள். ஆனால் அவர்களால் யாரையும் காப்பாற்ற முடியவில்லை. அவர்களையும் காப்பாற்ற முடியவில்லை.

நீந்தத் தெரிந்தவர்களெல்லோரும் ஏதோ ஒரு பக்கத்திற்கு நீந்த, பெற்றோர்கள் பிள்ளைகளைத் தேடி நீந்த, அவலம் ஒன்று அர்தசாமத்தில் அடங்கிப்போனது. மறுநாள் காலைவரை இடைவிடாது நீந்திய ஐந்து பேர்களை மட்டும், தமிழக மீனவர்கள் காப்பாற்றினர். காப்பாற்றப்பட்ட ஐவரில் என் இளைய சித்தப்பாவும் ஒருத்தர். பத்துப்பேர் கொண்ட இரண்டு குடும்பத்தில் எஞ்சியவர் அவர் ஒருவர் மட்டுமே.

பாக்கு நீரினை நடந்த பயங்கரம் எதையும் வெளிப்படுத்தாது, அமைதியாக இருந்தது. இறந்துபோனவர்களின் உடலங்கள், தமிழகக்கரையில் ஒதுங்கின. பிரிந்துபோன உறவுகளை உடலங்களாகத் தேடிக்கொண்டிருந்தனர், உயிரோடிருந்தவர்கள். தேடிக்கிடைத்த உடலங்களுக்குள் சிகப்பியும் சிரித்தபடியே செத்துக்கிடந்தாள்.

9 comments:

Sri Rangan said...

Mourning is not a consquence of our grief,but already a remedy against it.Life itself is a good therapy.

Chandravathanaa said...

இப்படி எத்தனையோ சோகங்கள் எம்மிடையே நடந்து முடிந்து விட்டாலும்
மீண்டும் ஒவ்வொன்றையும் வாசிக்கும் போது மனம் கவலையில் ஆழ்கிறது.

Anonymous said...

வணக்கம். இந்தக் கதையுடன் எனக்கும் பல தொடர்புகள் உண்டு. இந்த விபத்தில் எனது தம்பி ஒருவனையும் இளந்துள்ளேன். காப்பாற்றப்பட்ட ஐந்து பேரில் ஒருவர், எனது அயலவர், நண்பர். அவர் பிழைத்த செய்தி, அவருக்காக நடந்த 31ம் நாள் நிகழ்வின் போதே என்பது இன்னொரு வியப்பான விடயம். அவர் தற்போது கனடாவில் இஉக்கின்றார். மற்றும், இதே படகில் செல்ல இருந்த நானும் இன்னும் சில நண்பர்களும் சில மணி முன்னதாக அந்தப் பயணத்திலிருந்து பின்வாங்கிக் கொண்டோம். நெல்லி

மலைநாடான் said...

//இதே படகில் செல்ல இருந்த நானும் இன்னும் சில நண்பர்களும் சில மணி முன்னதாக அந்தப் பயணத்திலிருந்து பின்வாங்கிக் கொண்டோம். //

அனானி!

அந்த விபத்தில் தப்பிய என் சிறிய தந்தை முறையானவர் சொன்ன உண்மைத் தகவல்களை வைத்து, என்னால் எழுதப்பட்ட 'சிகப்பி செத்துப்போனாள்' எனும் சிறுகதையின் சுருக்க வடிவமே, இப்பதிவில் இடப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பான ஒருவர் வந்துக் கருத்துச்சொல்லியுள்ளமை ஆச்சரியம் தருகிறது.

அப்பிரயாணத்தைத் தவறவிட்ட நீங்களும், உங்கள் நண்பர்களும், அதிரஷ்டமானவர்களே.

விரைவில் அச்சிறுகதையை முழுமையாகப் பதிவிட முனைகின்றேன்

விரும்பின் எனக்கு ஒரு தனிமடலிடுங்கள்.

நன்றி!

malainaadaan at hotmail.com

Anonymous said...

வணக்கம் மலைநாடான்,
நான் உங்களுக்கு ஒரு தனிமடலிட்டுள்ளேன். நாம் அதிஸ்டமானவரே. அந்தப் பயணத்தில் பலையானவர்களில் (64 பேர் என நினைக்கின்றேன்) எனது தம்பியும்( சித்தப்பாவின் மகனும்) ஒருவர். தப்பிய எனது அயலவர் பெயர் விஜயகாந்தன். அவருடன் இதைப்பற்றிப் பலதடவைகள் பேசியுள்ளேன். நன்றி

மலைநாடான் said...

சந்திரவதனா!

நீங்கள் செர்லது உண்மையே. மரணத்துள் வாழ்வு என்பது விதியாகிப்போனாலும், நினைக்கும் கணங்களில் நெஞ்சு ஒருமுறையேனும் விம்மித்தணிகிறது.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

மலைநாடர்!
இப்படி பல மரணங்களை எங்கள் "மரணம் மலிந்த பூமியில் " கேட்டு; மனம் மரத்துவிட்டது. சாகும் வரை இத்துயர் சுமந்து வாழவேண்டியதே!
யோகன் பாரிஸ்

மலைநாடான் said...

யோகன்! வைசா!

\\மீண்டும் இத்தகைய அபாயகரமான பயணங்களைச் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டதே\\

அதுதான் மிகுந்த மனவேதனை தருகிறது.

உங்கள் வருகைக்கும், கருத்துக்கும், நன்றி.

மலைநாடான் said...

நெல்லி!

உங்கள் தனி மடல் பார்த்தேன். விரைவில் உங்களைத் தொடர்பு கொள்கின்றேன்.தனிமடலில் அழைத்தமைக்கும், இங்கே அபிப்பிராயத்தைப் பகிர்ந்துகொண்டமைக்கும்நன்றி!