Monday, May 29, 2006

கெல்வெத்தியாவின் முன்னால் தமிழீழத்தின் உரிமைக்குரல்



29.05.2006 பிற்பகல் 2.00 மணிக்கு சுவிற்சர்லாந்து பாராளுமன்றமான கெல்வெத்தியா விற்கு முன்னால், கொட்டும் மழையில் திரண்டெழுந்த தமிழீழ மக்கள், தங்கள் உரிமைக்காக குரல் கொடுத்தார்கள். வருட இறுதிப்பரீட்சைக்காலமாகவும், கடமைநாளாக இருந்த போதும், ஆயிரக்கணக்கில் குழுமிய மக்கள் மத்தியில், சுவிஸ் பசுமைக் கட்சியின் தலைவி, பேராசியர் ஜான் மரிய ஜுலியா, உட்பட பலர் உரையாற்றினார்கள். இளைய தலைமுறை உறுப்பினர்களால் சுவிஸ் மொழியிலும், தமிழ்மொழியிலும், உரிமைக்குரல்பிரகடனம் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சுவிஸ் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட சில நம்பிக்கைக் கூற்றுக்களும் வாசிக்கப்பட்டது.

உரிமைக்குரலும், உரத்த பாடல்களும்

விடுதலைப்போராட்டத் தளங்களில் கலைஞர்கள் பங்கு இன்றியமையாதது. உலகின் பல்வேறு கலைஞர்களது உணர்வுபூர்வமான பங்களிப்புப் படைப்புக்கள் வரலாற்றுச் சான்றாகவும், வளரும் போராட்டங்களுக்கு வாழ்த்துக் கூறுபவையாகவும் இருக்கின்றன.

இன்று உலகின் பலபாகங்களிலும் நடைபெறும் ஈழத்தமிழர்களின் உரிமைக்குரல் போராட்டத்திற்காக, எங்கள் கலைஞன் வர்ண. ராமேஸ்வரன் தன் மாணவர்களுடன் சேர்ந்து, தயாரித்து வழங்கிய இரு பாடல்கள் இப்போதுதான் தனிமடலில் கிடைக்கப்பெற்றேன்.

இந்நிகழ்வுபற்றி ஏலவே சந்திரவதனாவும் வேறுசில நண்பர்களும் பதிவுகள் இட்டுள்ளார்கள். புலத்தில் எங்கள் தேசியவிடுதலைகுறித்த ஒரு மக்கள் செயற்பாட்டில் கலந்துகொள்ள வேண்டிய அவசியம் தெரிந்திருந்தும், ஐரோப்பிய தொழில்முறை இயந்திரம் இடம்தராததால் மேற்படி நிகழ்வில் கலந்து கொள்ள முடியாத உணர்வினை, இப்பாடல் பதிவின் மூலம் உங்களோடு பகிர்ந்து கொள்ளுகின்றேன்.

எங்கள் கலைஞனின் இந்தப்பாடலை, உரத்துப்பாடவும் கேட்கவும் அருகேயுள்ள Stickam Player ல் 1, 2 வது பாடலை தெரிவுசெய்யுங்கள்.

1 வது பாடல்: கூடுவோம் கூடுவோம்

பாடல் வரிகள்: பொன்னையா விவேகானந்தன்

இசையும் குரலும்: வர்ண. ராமேஸ்வரன்

தயாரிப்பு: C.T.R. வானொலி கனடா

2 வது பாடல்: தமிழா தமிழா

பாடல் வரிகளும் இசையும்: வர்ண. ராமேஸ்வரன்

பாடல் குரல்: வர்ண. ராமேஸ்வரனும் மாணவர்களும்.

தயாரிப்பு: தமிழர் கலை பண்பாட்டுக் கழகம். கனடா

கனடா தமிழர் கலைபண்பாட்டுக் கழகத்தினர்க்கும், கனடா C.T.R வானொலியினர்க்கும்,வர்ணம் கலைக்கூடத்தினர்க்கும் எம் நன்றிகள்.

Sunday, May 28, 2006

வெறுப்பேத்தியிருக்கக் கூடிய பாடல்

பாடல்: ஆடுகின்றான் கண்ணன்..

பாடியவர்: சிறிநிவாஸ்

இசை: சத்யா

பாடல் இடம்பெற்ற திரைப்படம் எது என்று கேட்கின்றீர்களா? அதை நீங்கள் தான் கண்டுபிடிக்க வேண்டும். ஒரு உதவித்தகவல். சிலகாலங்களுக்கு முன், தமிழ்நாட்டில் கணவன்மார்களுக்கு வெறுப்பினைத் தந்திருக்கக் கூடிய பாடல். உண்மையில் நல்ல இசைக் கோப்புடனான பாடல். என் குடும்பத்தில் அனைவர்க்குமே பிடித்தபாடல். பாடலைக் அருகேயுள்ள Stickam player ல்
3 வது பாடலைக் கேளுங்கள்.

Sunday, May 21, 2006

ஸ்ரீ ரங்கம் - ஒரு பண்பாட்டுக் கோலம் 2




மூன்று வருடங்களுக்கு முன் ஒரு மார்கழிமாத பகல் பொழுதில் ஸ்ரீ ரங்கம் செல்லும் வாய்புக் கிடைத்தது. ஸ்ரீ ரங்கத்தின் ராஜகோபுரம் உயர எழுந்ததினால்தான் இலங்கையில் பிரச்சனை என்றும், கோபுரங்களில் அழகானது ஸ்ரீரங்கக் கோபுரம் எனவும், ' பச்சை மாமலை போல் மேனி.. எனத்தொடங்கி அரங்க மாநகருளானே' என முடிவுறும், தெரிந்த சில பாசுரங்களின் தமிழகும், தமிழகப்பத்திரிகைகளில் ஸ்ரீரங்கம் ஏதோ ஒருவகையில் அடிக்கடி குறிப்பிடப்பட்டிருந்ததாலும், என்பெற்றோர் ஸ்ரீரங்கம் பற்றிப் பெருமிதமாகக் கதைப்பதை சின்னவயதுமுதல் கேட்டு வளர்ந்ததினாலும், ஸ்ரீரங்கம் செல்லவேண்டும் எனும் ஆவல் என்னுள் எழுந்திருந்தது என்னமோ உண்மைதான். வைணவ தலங்களில் முக்கியமானது ஸ்ரீரங்கம் என அறிந்திருந்தேன். அங்கே நடைபெறும் சுவர்க்கவாசல் ஏகாதசி பற்றியும் சிறிது தெரியும். ஆனால் அவை குறித்து வேறெதுவும் தெரியாது.

இந்நிலையில் அழைத்துச் சென்ற நண்பர் மேலதிகமாகச் சில தகவலகளைச் சொன்னார்.சுவர்க்க வாசல் ஏகாதசிக்கு முன்னதாக பத்து நாட்களும், பின்னதாக பத்து நாட்களும், விசேட விழாநாட்கள் என்றார். அதிலும் முதல் பத்து நாட்களைப் பகல் பத்தென்றும், பின்னைய பத்து நாட்களை இராப்பத்தென்றும் குறிப்பிட்டு விழா நடப்பதாகவும் சொன்னார்.
இதன்பின் அவர் பேசும்போது இந்தியக் கலாச்சாரமும், தத்துவார்த்தமும், அவ்வளவு விரைவில் அழிந்துவிடும் என யாரும் அஞசத்தேவையில்லை எனும் நம்பிக்கை தரும் ஒரு விடயம் இந்த விழாவிலே உண்டு. நீங்கள் கொடுத்து வைத்தவர், இப்போ பகல் பத்து காலம். ஆகையால், பகல் உற்சவத்தின் போதே நீங்கள் அதைக்காணக் கூடியதாகவிருக்கும் என்று சொல்லி என் ஆவலை அதிகப்படுத்தினார்.


ஸ்ரீரங்கம் சென்றடைந்தோம். வானுயர் வண்ணக் கோபுரம் கண்டோம். மூலவரின் அழகுபார்த்து வியந்தோம். பின் பிரகாரம் சுற்றி வந்தோம். பிரகாரத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் மக்கள் குழுமியிருந்தார்கள். பாசுரம் படிக்கும் சத்தம் கேட்டது. சுகமான ஒரு தாளலயத்தில் தனித்துவப் பண்ணோடு பாசுரம் கேட்டது. மக்கள் கூட்டத்தை அண்மிய பொழுது, ஆழ்வார்கள் போல் அலங்காரம் செய்த வண்ணமாய், அடியார்கள் சிலர் வரிசையாக நின்று, பக்தியுடன் பாசுரம் பாடும் காட்சி தென்பட்டது.
நண்பர் சொன்ன நாளைய நம்பிக்கையும் தென்பட்டதுபோலவே தோன்றியது. ஆம், பாசுரம் பாடியவர்களுள் இளையவர்களும் இருந்தார்கள். ஆகா இதுவல்லவோ நற்பணி என எண்ணிக் கொண்டிருந்தவேளையில், 'பெருமாள் வைர அலங்காரத்தில் காட்சி தாறார், சேவிச்சுங்கோ..' நண்பர் சொன்னார். ரங்கநாதரைத் தேடி என் கண்கள் சுழன்ற கணத்தில் விழிகளில் விழுந்த அந்தக் காட்சி அச்சம் தருவதாயிற்று.


ஆழ்வார்கள் பாசுரம் பாட அகமகிழ்ந்து கேட்கும் ரங்கநாதரைக்காண திரும்பிய என் விழிகளின் திரையில் ஸ்ரீரங்கநாதரும், நாச்சியாரும் மேடையில் வீற்றிருக்க, சூழவும் ஆயுதம் தரித்த சீருடைக் காவலர்கள். தூரத்தே செல்கையில் கேட்ட பாசுரத்தின் இனிமை மறந்துபோயிற்று. சூழல் ஏற்படுத்திய பக்திப் பரவசம் பறந்து போயிற்று.
கரும்படை காவல் சூழ வீற்றிருக்கும் அரசியலாளர் போலான இறையவரைப்பார்க்க முடியவில்லை.
விவரம் தெரிந்த நாள்முதலே, இராணுவ அடக்குமுறைகளுக்குள் வாழ்ந்ததாலோ என்னவோ, ஆயுதந்தரித்த வீரரைக் கண்டதும், அருவருப்பும் அச்சமும் இணைந்தே வருகிறது. என்ன செய்ய?

ஏன் இப்படி ? .....

'பெருமாள வைர அலங்காரத்தில பாரக்க புண்ணியம் பண்ணிருக்கோணும்.....' நண்பர் ஏதேதோ சொல்லிக்கொண்டு வந்தார்...

Wednesday, May 17, 2006

தமிழீழத்தின் தலைமுறைக்கலைஞன் -வர்ண.ராமேஸ்வரன்

திருகோணமலையில் என் இளம்பபராயத்தில் எங்கள் வீட்டுக்கு வரும் அந்தப் பெரியவருக்கு முருகேசர் எனத் தொடங்கும் ஒரு பெயர். என் அப்பாவுடன் மிக நெருக்கமானவர். எனக்கு அவரை ஐயா எனக் கூப்பிட்ட ஞாபகம்தான் இருக்கு. தினமும் எங்கள் வீட்டுக்கு வரும் அவர், சிலவேளைகளில் அப்பாவுடன் மிகுந்த ஈடுபாட்டுடன் இசைவடிவங்கள் பற்றிக் கதைத்துக் கொண்டிருப்பார். அவர்களது உரையாடலில் அம்மாவும். இடைக்கிடை சேர்ந்து கொள்வார்கள். அப்பாவிற்கு இசைக்கத் தெரியாது ஆனால் ரசிக்கத் தெரியும். அம்மா வயலின் வாசிக்கக் கூடியவர்கள். பெரியவர் சுருதிசேர்த்துப் பாடக்கூடியவர். இவர்களோடு எங்களுக்கு அருகாமையில் வசித்த நாதஸ்வர வித்துவானும் சேர்ந்துகொண்டால், அன்றைய மாலைப்பொழுது இசை அரட்டையாகவே இருக்கும். அப்படி இருந்த பொழுதுகளில், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் இரவு ஒலிபரப்பில் சங்கீதக்கச்சேரியில் முக்கிய வித்துவான் ஒருவரின் கச்சேரி இடம்பெறப்போகின்றதென்று பொருள்.இரவு மீண்டும் அந்த ரசிகர்வட்டம் சேரும். எனக்கும் றேடியோக் கச்சேரி கேட்க ஆசைதான். ஆனால் இலங்கை வானொலியில் கர்நாடக இசைக்கச்சேரி இரவு பத்துமணிக்குப் பின்தான் ஆரம்பமாகும். கச்சேரி ஆரம்பமாகும் போது நானும் நித்திரையாகிவிடுவேன். மறுநாள் முந்தைய இரவுக்கச்சேரி பற்றி ரசிகர்வட்டம் கதைக்கும்போது, எனக்கு ஏமாற்றம் அழுகையாக வரும். அம்மா அடுத்த கச்சேரி கேட்கலாம் என்பார்.

காலவோட்டத்தின் பின் யாழ்ப்பாணத்தில், சின்ன வயதில் கேட்க முடியாது போன அந்த வித்துவானின் கச்சேரியைக் கேட்கும் வாய்ப்புக் கிட்டியது. என் தோழியொருத்தி, நடன ஆசிரியை. அவளின் மாணவிகளினது நடன நிகழ்ச்சிக்கு என்னை அழைத்திருந்தாள். நிகழ்ச்சியில் அந்த வித்துவானின் கச்சேரியும் இருந்தது எனக்கு பெருவிருந்து.அவர்பாடப்பாட என்னுள் இனம்புரியா உணர்வொன்று எழுந்தெழுந்து மறைந்தது. ''பால் மணக்குது பழம் மணக்குது பழனி மலையிலே.. முருகா உன்னைத் தேடித்தேடி.. எங்கும்கானனே'' இது பெங்களுர் ரமணியம்மாளின் பாடலொன்று. கச்சேரியின் இடையில் இந்தப்பாடலும் அவர் பாடினார். ''முருகா! .. '' என விழித்து அவர் பாடின அந்தப்பாடல் இன்னும், இருபத்தைந்து வருடங்கள் கழித்தும், என் காதில் கேட்டுக் கொண்டிருக்கிறது. அந்தக் குரலுக்குச் சொந்தக்காரன் இலங்கை வானொலிபுகழ் கர்நாடக சங்கீத வித்துவான் எம். வர்ணகுலசிங்கம்.


86 களிலென்று நினைக்கின்றேன். கொக்குவிலிலுள்ள என் நண்பரொருவர் சாயிபக்தர். அவர் வீட்டில் நடந்த ஒரு சாயி பஜனைக்கு என்னை வற்புறுத்தி அழைத்திருந்தார். அந்தப் பஜனையைப்பார்த்துக் கொண்டிருந்த என்னை மிருதங்கம் வாசித்துக் கொண்டிருந்த ஒரு இளைஞன் வெகுவாகக் கவர்ந்தான். என்னை மட்டுமல்ல இன்னும் பலரை அவன் இசை கவர்ந்திருந்தது என்பது பஜனையின் முடிவில் தெரிந்தது. அவன் நன்றாக பாடவும் செய்வான் என்பது எப்படியோ அந்தக் கூட்த்தில் தெரிந்து விட்டது. பலரும் விரும்பிக் கேட்க, கல்யாண வசந்த ராகத்தில், இயலிசைவாரிதி யாழப்பாணம் வீரமணிஐயர் எழுதிய கல்யாண வசந்த மண்டபத்தில்.. எனும் பாடலைப்பாடினான். மனதுக்குள் ஆசனமிட்டு அமர்ந்துவிட்ட அந்தக் குரலை சில வருடங்களுக்கு முன் புலத்தில், ஒரு தமிழ்க்கடையில் ஒலிக்கக் கேட்டேன். உரிமையாளரிடம் விசாரிக்க, அவர் ஒரு இறுவட்டினைத் தூக்கித் தந்தார். திசையெங்கும் இசைவெள்ளம் என்ற அந்த இசைஇறுவட்டில் பதினொரு பக்திப்பாடல்கள். பிரித்தானிய தமிழர் கலைபண்பாட்டுக்கழகத்தின் வெளியீடாக வந்த அந்த இறுவட்டிலுள்ள இசைக்கோலங்களை இசைத்தவன், 86களில் இசையால் எனைக்கவர்ந்த அந்த இளைஞன்தான் என்பதை அப்போதுதான் அறிந்தேன். அறிந்தது அதுமட்டுமல்ல. இப்பதிவின் முதல் பகுதியில் வரும் பெரியவர் முருகேசு ஐயா அவர்களின் மகன் வித்துவான் வர்ணகுலசிங்கம் அவர்களின் மகன்தான் ராமேஸ்வரன் என்பதும் அப்போது அறிந்ததே.

ஆம் வர்ண ராமேஸ்வரன், தமிழீழத்தின் தலைமுறைக்கலைஞன். இவன்குரலில் பல விடுதலைக்கீதங்கள் வெளிவந்ததாகவும் அறிந்தேன். ஆயினும் அவனது இந்த இறுவட்டின் இசைக்கோலங்களின் முதலாவது பாடலான ''இணுவையம்பதியில் இருந்திடும் கணபதி ..'' என்ற பாடல் எனக்கு மிகவும் பிடித்தது. பாடல் என்னவோ பக்திப்பாடல்தான். ஆனால் பாட்டினூடு ஒரு செய்தி வரும். இது எமக்குப்புதிது. இருக்காத பின்ன? பாடலை எழுதியது யார்?.. புதுவை இரத்தினத்துரை.

அருகில் உள்ள Stickam player ல் 4 வது பாடலில் அந்தத் தலைமுறைக்கலைஞனின் குரலைக் கேட்கலாம்.

பிரித்தானிய தமிழர் கலைபண்பாட்டுக்கழகத்தினர்க்கு நன்றிகள்.

Saturday, May 13, 2006

Locarno - சர்வதேச திரைப்பட விழா

சுவிசின் பாரம்பரிய இசைக்கருவிகளில் ஒன்று அல்ப்ஹோர்ன் ( Alphorn) . அன்னளவாக எமது நாதஸ்வரத்தை ஒத்திருக்கும். குழல் வடிவான இக்கருவி வாய்பகுதியிலிருந்து சிறிது சிறிதாக அகன்று சென்று, மேல் நோக்கி வளைந்து , பலத்த சத்தத்தை ஒலிக்கும் வகையில் பருத்து விரியும். நிலத்தில் நின்றவண்ணம் ஊதி இசைக்கும் இக்கருவியின் நீளம் கிட்டத்தட்ட இரண்டு மீற்றரைத் தாண்டும். கோடைகால வருகையுடன், மேச்சலுக்காக கால்நடைகளை அல்ப்ஸ் மலைச்சாரல்களை நோக்கி நகர்த்துகின்ற விவசாயிகள், கூடிக்குதுகலித்து குரலெழுப்பும் விவசாயிகளின் செய்தி கூறுமிசையாகவும் இதைப்பார்க்க முடிகிறது. இயற்கை வனப்புக்களோடு முட்டி மோதி வருகின்ற சுவிசின் சுவாசக்காற்றை, சுருதி பேதமின்றி ஒலிக்கும் அல்ப்ஹோர்ன் போன்று, சுவிஸ்வாழ் தமிழர்களின் வாழ்வியலைப் பேச வருகிறது எனும் செய்தியோடு , அல்ப்ஹோர்ன் தமிழ்குரல் என்ற பெயரில் புதிய தமிழ்ப்பத்திரிகை ஒன்று சுவிற்சர்லாந்தில் முகிழ்ந்திருக்கிறது.

சுவிஸ் தமிழ்சமுகம் சார்ந்த பல்வேறு விடயங்களையும் உள்ளடக்கி வெளிவந்திருக்கும் இதன் முதல் குரலில், உலக சினிமா சார்ந்து வெளிவந்த கட்டுரையொன்றினை, திரைப்பட ஆர்வம் நிறைந்த தமிழ்மணநண்பர்களுக்காக இங்கே, நன்றியுடன் பதிவு செய்கின்றேன்.

Pardo - Locarno சர்வதேச திரைப்படவிழா - சிலகுறிப்புக்கள்

- கபிலன் -

உலகத்திரைப்பட விழாக்களென்றதும், எமக்கு முதலில் ஞாபகத்துக்கு வருவது, அமெரிக்காவின் ஆஸ்கார் திரைப்பட விழாவும், பிரான்சின் கேன்ஸ் திரைப்பட விழாவுமே. ஆனால் அவ்விழாக்களில் இல்லாத தனித்துவ மெருகோடு சுவிற்சர்லாந்தில் நடைபெறும் உலகத்திரைப்படவிழா, லோக்கார்ணோ (Locarno) சர்வதேச திரைப்பட விழாவாகும். வருடந்தோறும் ஆவணி மாத முற்பகுதியில் நடைபெறும் இவ்விழாவின் தனித்துவம், உலககெங்குமிருந்து திரைப்படத்துறைக்குள் நுழையும் புதியவர்களை அடையாளப்படுத்துவதாகும். பிரபலமானவர்களுக்கே களம் தரும் ஏனைய சர்வதேச திரைப்படவிழாக்களிலிருந்து இவ்விதம் வேறுபடும், லோகார்ணோ சர்வதேச திரைப்படவிழா இத்துறையின் புதுமுகங்களுக்கு நல்லதொரு நுழைவாயில்.

இத்தகையசிறப்பு மிக்க இத்திரைப்பட விழா 1946ம் ஆண்டளவில் தொடங்கப்பட்டது. அக்காலப்பகுதியில் ஐரோப்பிய சினிமாவில் ஏற்பட்டிருந்த ஒருவிததேக்கநிலையை, களையும் நோக்குடனேயே முதலில், இத்திரைப்படவிழா ஆரம்பமானது. ஆரம்பமும் சுமுகமாக இருக்கவில்லை. பிரான்சிலும், இத்தாலி வெனிசிலும், இருவார இடைவெளிக்குள் நடைபெற்ற சர்வதேசவிழாக்களைத் தொடர்ந்து இவ்விழாவும் தொடங்கப்பட்டது. முதலில் Lugano நகரிலே இவ்விழாவினைத் தொடங்குவதாகத் தீர்மானிக்கப்பட்டபோதும், அப்பகுதி மக்களின் சம்மதம் கிடைக்காத காரணத்தால் Locarno வில் தொடங்கப்பட்டது.

தொடங்கப்பட்ட முதல் வருடத்தில், நான்கு இத்தாலிப் படங்களும், ஆறு வேற்றுமொழிப் படங்களும், இரண்டாம் உலகப்போர் குறித்த மூன்று திரைப்படங்கள் உட்பட பதினைந்து படங்கள் திரையிடப்பட்டன. இவ்வாறு தொடங்கப்பட்ட இத்திரைப்படவிழா முசோலியின் பாசிசக் கொள்கையாளர்களின் நெருடல்களுக்கு உள்ளானதென்பதும் குறிப்பிடத்தக்கதாகும். சுவிற்சர்லாந்தின் இத்தாலிய மொழிபேசும் மாநிலத்தில் அமைந்துள்ள Locarno நகரில் இவ்விழா நடைபெற்றபோதும், இவ்விழாவின் மூலமொழி பிரெஞ் மொழியாகவே இருக்கிறது.

இப்படி உருப்பெற்ற லோகார்ணோ சர்வதேசதிரைப்படவிழா, 1970 ம் ஆண்டில் புதிய பாச்சலாக இளையதலமுறையினரை உள்வாங்கிக்கொண்டது. 1971ம் ஆண்டில் Livio Vacchini எனும் தொழில் நுட்பக்கலைஞரின் எண்ணத்தில் உதித்த திறந்தவெளித்திரையரங்கு, நகரின் மத்தியிலமைந்த பெரு முற்றத்தில் அறிமுகமானது. 1972ம் ஆண்டு தனது வெள்ளிவிழாவைக் கொண்டாடிய இவ்விழா, 1978ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக நடத்தப்படவில்லை. உலகத்திரைப்படவிழாவாக நடைபெறும் இவ்விழாவில், இந்தியத்திரைப்படங்கள் பலவும், இயக்குநர் அடூர், கோபாலகிருஷ்ணன், மணிரத்னம் உட்பட பல்வேறு கலைஞர்களும், இயக்குனர்களும் கலந்துள்ளார்கள்.

1989 ல் சாயிகருணின் 'பிறவி', 1992 ல் அஜயனின் 'பெருந்தச்சன்', 1994 ல் 'வாயு', 1995 ல் சந்தீப்ரேயின் 'ராக்கெட்', அதே ஆண்டில் மணிரத்தினத்தின் 'பம்பாய்', 1998 ல் மணிரத்தினத்தின் 'இருவர்', 2000 ல் கமலஹாசனின் 'ஹேராம்', என்பன இவ்விழாவில், கலந்து கொண்ட சில இந்தியத் திரைப்படங்களாகும்.

பல்வேறு நெருக்கடிகளின் மத்தியில் தொடங்கப்பட்டு, பாயும் வேங்கைப்புலியினை அடையாளமாகவும், மஞ்சள்நிறத்தினை வண்ணமாகவும், பார்டோ (Pardo) எனும் விருதுப்பெயரையும் கொண்டமைந்த இத் திரைப்படவிழாவின் வளர்ச்சிப்போக்கில், இவ்வாண்டு முதல் குறும்படங்களுக்கான பிரிவையும் இணைத்துக் கொண்டுள்ளதாக அறியப்படுகிறது. இவ்விழா தங்கள் பகுதியில் நடைபெறக்கூடாதெனக் கருத்துத் தெரிவித்த பகுதிகளில் கூட, தற்போது இவ்விழாவின் நகல்கள் போன்றமைந்த சிறு திரைப்பட விழாக்கள் நடைபெறுவதும், இவ்விழாவின் மற்றொரு பரிணாமம் எனக் கொள்ளலாம்.

கோடை வெயில் அடங்கிய மாலையில், ஏரிக்கரையிருந்து எழுந்து வரும் இதமான தென்றலில், நீள் விரியும் வானமே கூரையாக, திறந்த வெளியமர்ந்து, உலகப்பெருவெளியில் உதித்த உன்னதங்களை, அகலத்திரையில் அசையும் நிழலாய் பாரப்பது, அற்புதமான சுகானுபவம். இந்த அனுபவத்தினை பெறவேண்டுமாயின், இவ்வருடம் 02.08.2006 முதல் 12.08.2006 நடைபெறும் லோகார்ணோ சர்வதேச திரைப்படவிழாவிற்குச் செல்லலாம்.


Tuesday, May 09, 2006

சும்மா.. சில அனுபவப் பகிர்தல்

நான் வலைப்பதிவெழுதத் தொடங்கி இன்றுடன் முழுதாக இரண்டு மாதங்கள் நிறைவுபெறுகிறது. ஒரு நாளில் திடீரென நடந்த நிகழ்வு. தமிழ்மணம் தளத்திற்கு வந்த போது எழுந்த ஆசை, நீண்ட நாள் கனவை ஒரு பொழுதில் நிறைவேற்றியது. மகிழ்ச்சியாக இருந்தது. நீண்டகாலமாக விட்டுப்போயிருந்த எழுத்தார்வம் மீண்டும் தொற்றிக் கொண்டது. எழுதினேன் என்பதைவிட எழுதுவிக்கப்பட்டேன் என்பதுதான் பொருத்தமாக இருக்கும். நமது எழுத்தைத் தமிழ்மணப்பரப்பில் யாரவது கண்டு கொள்வார்களா? என எண்ணியிருந்த வேளையில், கணிசமானோர் வந்தது உற்சாகம் தந்தது. நல்ல அறிமுகங்கள் கிடைத்தது. சில நண்பர்கள் கிடைத்தனர். புதிய கருத்துக்கள் கிடைத்தன. இணைய வடிவமைப்பில் செய்யக் கூடிய சில விடயங்களைச் சுயமாகக் கற்றுக்கொள்ள முடிந்தது. இதுவும் ஒரு நல்ல அனுபவம்.

இதமான இளவேனிற்காலம். ஐரோப்பாவில் கோடையின் ஆரம்பமும், முடிவும், வண்ணமயமானவை. மரங்களெல்லாம் துளிர்ந்திருக்கும் இந்த நேரத்தைய இளம்பச்சை வண்ணம், ரம்யமானது. அந்தப் பசுமைக்கு நடுவே, காலைச்சூரியனின் மிதமான வெப்பத்தையும், காலைப்பனியின் மெதுவான குளிரையும், ஒருசேர அனுபவித்து சாலைகளில் பயனிப்பது சுகமானது. மலைச்சாரல்களின் வளைந்தோடும் சாலைகளில், கார் ஓடுவது எனக்கு ரொம்பப்பிடிக்கும். சென்ற ஞாயிற்றுக்கிழமை. நான் நல்ல காலநிலை. அல்ப்ஸ் மலையின் சாரல்களில், அந்தச்சுகானுபவம் கிட்டியது. கத்ரி கோபால் முதல் பொப்மாலி வரை கதம்பமாக, என் கார் பயணங்களைப் பங்குகொள்ளும் இசைக்கோர்வையில் 'திங்கள் மாலை வெண்குடையா..' னும் (பிரபாவின் உதவியில்) 'கடலலையே கொஞ்சம் நில்லும்' சேர்ந்து கொள்ள இன்னும் சுவைத்தது.


இலங்கையில் இந்தியாவில் எதிரெதிராக விலத்திச் செல்லும் வாகனங்களின் சாரதிகள், முகப்பு விளக்கினை அழுத்தி அல்லது ஒலிச்சமிக்ஞை செய்து, தங்களுக்குள் தொடர்பாடல் செய்வதைக் கண்டுள்ளேன். கோடைகாலப் பயணங்களின் போது பல தடவைகள் கண்டிருந்தாலும், நேற்றுத்தான் அது எண்ணத்தில் உறைத்தது. ஐரோப்பாவில் கோடைகாலங்களில் அதிகம் வீதிகளில் வரும் மோட்டார் சைக்கிள் ஓட்டிகள், ஒருவரையொருவர் எதிரெதிராக விலத்திச் செல்லும் போது, ஒற்றைக்கையுயர்த்தி விரல் நீட்டி சமிக்ஞை செய்து போவார்கள். இப்படிச் சமிக்ஞை செய்து விலத்திச் செல்பவர்கள் ஒரே நாட்டைச் சேர்ந்தவர்களோ அல்லது ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்களோ அல்ல. ஆனால் கணப்பொழுதில் நிகழும் அந்த அசைவு, பேசு பொருள் எத்தனை? அந்தச் சைகையின் வரிகள், நானும் நீயும் ஒத்த விருப்புள்ளவன் எனத் தொடங்குமா? உன் பயணத்திற்கு என் வாழ்த்துக்கள் என்று சொல்லித் தொடருமா? முகந் தெரியா மனிதர்களின் அந்த உணர்வாடலைக் கண்டபோது என்னுள் எழுந்த வினா,....

சகமனித நேசிப்பை, மொழியால் முழுமையாக எழுத, பேச, உண்மையாக முடிகிறதா?

Saturday, May 06, 2006

தமிழீழக்குயில் - பார்வதி சிவபாதம்

வலைப்பதிவு செய்யத் தொடங்கிய போதே இதை எழுதவேண்டுமென எண்ணியிருந்தேன். எழுதத் தொடங்கிய சில நாட்களில் திருகோணமலை பற்றிய பதிவை எழுதத் தொடங்கி, அது தொடராக நீண்டதால் இந்தப்பதிவு தாமதமாயிற்று. ஆயினும் இதைப்போல் வேறு சில பதிவுகளும் எழுதுகின்ற எண்ணம் உண்டு. அதற்கான காரணம், எங்கள் கலைஞர்கள் குறித்த ஒர் அக்கறை அல்லது பெருமிதம் எனக் கொள்ளலாம்.

சில வருடங்களுக்கு முன்னர் தமிழகத்தின் பிரபலமான இளம் கர்நாடக இசைவித்தகி ஒருவரை, வானொலி நிகழ்சிக்காகச் செவ்விகண்டு கொண்டிருந்தேன். அப்போது, இலங்கைக்கலைஞர்கள் பற்றிய கருத்தாடல் வந்தபோது, இலங்கையின் பிரபலமான இசைக்கலைஞர்கள் சிலர் பற்றி நான் குறிப்பிட்டேன். அந்தச் சந்தர்பத்தில் அவர் தனக்கு அவர்களைப்பற்றி எதுவும் தெரியாது எனக் குறிப்பிட்டார். ஆனால் நான் குறிப்பிட்ட இசைக்கலைஞர்கள், தமிழகக் கலைஞர்களுக்கு இணையான தகமை மிக்கவர்கள். இலங்கை வானொலியுட்பட, வேறுபல தொடர்பூடக முன்னிலைக்கலைஞர்கள். அத்தகைய கலைஞர்கள் பற்றி அறிந்திராத அவர், மேலைத்தேய இசைக்கலைஞர்கள் பற்றியெல்லாம் வெகு ஆர்வமாகப் பேசினார். ஏன் அப்படி? எனக்குப் புரியவில்லை. தான் சார்ந்த துறையில், அதுவும் அண்டை நாட்டுக்கலைஞர்கள் பற்றி அறியாமைக்குக் காரணம் என்ன? ( ஆனால் பாகிஸ்தான் கலைஞர்கள் பற்றிக் கதைத்தார்.) இதேகேள்வியை எங்கள் ஈழத்துக் கலைஞர்களிடம் கேட்டிருந்தால், தமிழகக் கலைஞர்கள் பற்றிய நிறையச் சொல்வார்கள்.

எங்கள் ஈழத்துக்கலைஞர்கள் பற்றி, தமிழகக் கலைஞர்களும், தமிழக மக்களும், அறியாது போனதற்கான காரணங்கள் பலவாக இருக்கலாம். அவை பற்றி ஆராய்ந்து கொண்டிருப்பதிலும் பார்க்க, உலகை ஒன்றிணைக்கும் இணையத்தில், எங்கள் கலைஞர்கள் பற்றிய சிறிய அறிமுகங்களையும், அவர்களது இசை வடிவங்களையும், அவ்வப்போது பதிவாகத் தருவது நல்லதென்றெண்ணினேன். எழுதுகின்றேன்.

திருமதி பார்வதிசிவபாதம்.
இவர் யாழ்ப்பாணத்து இசைக்குடும்பம் ஒன்றில் பிறந்தவர். நீண்டகாலமாக மெல்லிசைப்பாடல்கள் பாடிவருபவர். பல்வேறு இசைக்குழுக்களிலும் பாடியவர். 80 களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திலும் , ஏனைய பிரதேசங்களிலும் நடைபெற்ற பல்வேறு கோவில் திருவிழாக்களிலும், கலைவிழாக்களிலும், நடைபெற்ற இசைக்கச்சேரிகளில் பங்கேற்றுக் கொண்டவர். இவரது தனித்துவமானகுரல்வளம், இவரது பாடல்களின் சிறப்பு. ஒரு காலத்தில் பார்வதி சிவபாதத்தின் இசைக்கச்சேரி இருப்பது, விழாவிற்கு பெருமையாகப் பேசப்பட்டதும் உண்டு.

விடுதலைப்போராட்டம் ஆரம்பித்த பின்னர், இவரது குரலில் , விடுதலைப்பாடல்கள் பல ஒலித்தன. கம்பீரமான அவரது குரலில், அவ்விடுதலைக் கீதங்கள் ஒருவித மிடுக்கோடொலித்தன என்றால் மிகையாகாது. தொடர்ந்து தமிழத்தேசியத்தின் இசைக்குரலாகப் பாடிடும் அவர், தேசிய விடுதலைப்போருக்காய் தன் குரலை மட்டுமல்ல, குழந்தைகளையும் கொடுத்து நிற்கும், தாய்.
அவரது குரலில் பல பாடல்கள் வந்திருந்த போதும் என்குப் பிடித்தது இந்தப் பாடல்தான். கடற்புலிகளின் ''நெய்தல்'' இசைத் தொகுப்பில் வந்த இப்பாடலுக்கு இசை அமைந்திருப்பவர், இசைவாணர் கண்ணன்.
இனி, எங்கள் ஈழத்து இசைக்குயிலின் குரலில் கடலலையே கொஞ்சம் நில்லு.....

அருகே பார்க்க கேட்க ரசிக்க பகுதியில் உள்ள Stickam player ல் 5 வது பாடல் கடலலையே கொஞ்சம் நில்லு.

கடற்புலிகளின் நெய்தல் இறுவட்டுக்குழுவினர்க்கு நன்றி!