Saturday, January 25, 2014

இந்த நாள் இசையின் நாள்


பனிப்பொழிவு, பரபரப்பான பயணங்கள், பணிநெருக்கடி என்பவை விட்டுவிலகி, வீட்டில் நிற்கமுடிந்த இன்றைய பொழுது சுகமானது.
காலைச் சூரியனின் கதிரொளி மனதுக்கும் உடலுக்கும் தந்தது மகிழ்வான உற்சாகம். பிரியத்துக்குரிய நாய்குட்டியுடன் விளையாடி, பிடித்தாகப் பூங்கன்றுகளுக்கு நீர் வார்த்து, இணையம் மேய்கையில், எங்கெங்கும் மனம் விரும்பும் இசையின் தொடுப்புக்கள்.

மலேசியாவிலிலுந்து கேரளம் பாடலைக் கேட்டு லயித்து, இங்கே பகிர்ந்து முடிக்கையில்,  " புதிய உலகை புதிய உலகைத் தேடிப் போகிறேன்... " இமானின் இசையில் மதன் கார்க்கியின் வரிகள், வைக்கம் விஜயலட்சுமியின் குரலில் வந்து ஒலிக்கிறது.

Monday, January 20, 2014

மனம் கொத்திச் செல்லும் மணிவர்மாவின் கோடுகள்


கோட்டோவியங்கள் எப்பொழுதும்  புதுவித ரசானுபவம் தருபவை. என் விருப்பத்துக்குரியவை.

சில்பி, பத்மவாசன், மணியம் செல்வன், யாழ்.ரமணி, என ஒவ்வொருத்தருடைய கோடுகளும் தனித்துவமான பாணியுடையவை. மணிக்கணக்கில் பார்த்து இரசித்திருக்கிறேன். குறைந்தளவிலான கோடுகளில் முகபாவங்கள் வெளிப்படுத்தும் ஓவியங்கள் ஏற்படுத்தும் ஆச்சரியம் அளவிடமுடியாதவை. ஓவியர் ஆதி மூலம், ஈழத்தில் மாற்கு மாஸ்டர், ஆகியோரது கோடுகள் அவ்வாறான ஜாலம் புரிபவை.
85களின் பின்னதாக யாழ்ப்பாணத்தில், ஓவியர் மாற்கு அவர்களின் ஓவியக் கண்காட்சி ஒன்று நடந்தது. காட்சியிலிருந்த ஓவியங்களைப் பார்த்தவாறு வருகையில், இரு கோடுகள் மட்டும் கொண்ட ஒரு ஓவியம் என்னுள் ஆச்சரியத்தையும் கேள்விகளையும், எழுப்பியது.

நீலம், சிவப்பு, நிறத்திலான வளைந்து நெளிந்திருந்த அந்தக் கோடுகளுக்கு ராதையும் கண்ணனும் எனத் தலைப்பிட்டிருந்தார் ஓவியர் மாற்கு. கண்கவர் வண்ணப்படங்களாக கண்ணன் ராதையைப்  பார்த்துப் பழகியிருந்த எம் பட்டறிவுக்கு, கோடுகளில் கண்ணன் ராதை தெரியவில்லை. இது தொடர்பாக மாற்கு அவர்களிடம் பின் பேச வாய்ப்பும் அமையவில்லை.
தங்கத் தாமரை விருது பெற்ற படமான இயக்குனர் சேது மாதவனின்,  'மறுபக்கம்' படம் பார்த்துக் கொண்டிருந்தேன். வசந்குமாரின் ஒளிப்பதிவில் நடிகை ராதா ஒரு காட்சிச் சட்டகத்தில், சிறு கோடுகளாய் தெரிய, ஆச்சரியமானேன்.  உச்சி மீதிருந்து, ஒரு கோணத்தில் ஒளியுமிழ, இருள் மறைப்பிலும், ஒளித்தெறிப்பிலும், ராதா கோடுகளில் தெரிந்த போது, மாற்கு மாஸ்டரின்  கண்ணன் ராதை ஓவியக் கோடுகள் நினைவுக்கு வந்தது மட்டுமன்றிப் புரியவும் தொடங்கியது. ஓவியனின் கற்பனையும், அவை பிரசவிக்கின்ற  கோடுகளும் அர்த்தமுடையவை. அழகியலின் கதை பேசுபவை.

Monday, January 06, 2014

புதிய கதைசொல்லிகள் !


கதை சொல்லலும், கேட்டலும், மனித வாழ்வியலின் முக்கியமானதொரு கூறு. தமிழர்கள் நாமும் கதைசொல்லிக் கேட்டு வளர்ந்தவர்கள்தான்.
ஆனால் வணிக நுகர்வுக்குக் கலாச்சார மாற்றமும், நில நிகழ்வின் துயரங்களும்,  எங்கள் இளையவர்களை அதிலிருந்து வெகுதூரத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டது. அவ்வாறு  தொலைதூரம் சென்று , நம் தொன்மம் தொலைந்து போகாதிருக்கும் முயற்சியாக இந்தக் கதை சொல்லிகள் புறப்பட்டிருக்கின்றார்கள்.

இக் கதை சொல்லிகள் சொல்லும் கதைகள் எமக்குத் தெரிந்தவையாகவும் இருக்கலாம். ஏனெனில் அக் குழுமத்தின் முதல்நிலையாளனாகிய ஞானதாஸ் காசிநாதர் " எமது பண்பாட்டில் .கதைகள், வயற்காட்டிலும், வரம்புகளிலும், வடலி வழியவும், தெருவோரங்களிலும், மதவுகளிலும், சந்தி வழியவும் சொல்லப்பட்டது. நாங்கள் பள்ளிக்கூட கழிவறைக்குள், சிறுநீர் கழித்தபடி கூட கதைகளும் பகிடிகளும் சொன்னதுண்டு.. "  எனக் குறிப்பிடுவதுபோல், எல்லா இடங்களிலும் நீக்கமற இருந்த எங்கள் கதைகளை மறந்து போனவர்களானோம்.

அவ்வாறு மறந்து போன கதைகளையும், கணினி விளையாட்டுக்களுக்குள் தங்களைத் தொலைத்துக் கொள்ளக் கூடிய இளைய தலைமுறையையும் மீட்டெடுத்து, விழியத்தின் வழியே இணையத்தில் கொண்டு வர முயல்கின்றார்கள் இக் கதை சொல்லிகள்.

Sunday, December 29, 2013

ஓயுதல் செய்யோம் !


கடுங் குளிர், பனிப்பொழிவு என்பவை கடந்து வீடு வந்து இணையம் தொடுகையில் இரண்டு உவப்பான செய்திகள் காத்திருந்தன.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் 4தமிழ்மீடியா படைபாய்வகம் வெளியிட்ட  " திருப்பூர் ஜோதியின் - டாலர் நகரம் " இந்த ஆண்டு வெளியான சிறந்த எட்டுப் புத்தகங்களில் விகடன் குழுமத்தால் தெரிவு செய்யப்பட்டுள்ளது என்ற செய்தியை ஜோதிஜி அறிவித்திருந்தார்.

பின் இணைப்பில் சென்று வாசித்த போது இப் புத்தகத்திற்கான தெரிவுக் குறிப்பில்,  ' தொழில் நகரங்களின் கதைகளை நாம் எப்படி எழுத வேண்டும் என்பதற்கு உதாரணமாகவும் இந்தப் புத்தகம் இருக்கிறது ' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. உண்மையில் ஜோதிஜியின் முதற் பிரதியைப் பார்த்த போது என மனதில் தோன்றியதும், பின் பிரசுரத்திற்கான காரணங்களில் முக்கியமானதாகவுமிருந்த விடயம் உணரப்பட்டிருப்பது மகிழ்ச்சி தருகின்றது. தொடர்ந்து வாசிக்க