Monday, July 31, 2006

கெல்வெற்சியா எனும் சுவிற்சர்லாந்து.









ஆகஸ்ட் மாதம் முதலாந்திகதி. நான்கு மொழிகள், நான்கு மதங்கள், தங்கள் தனித்துவம் இழக்காது, ஒற்றையாட்சியில் இணைந்திருக்கும் சுவிஸ் சமஷ்டிக்குடியரசின் தேசியதினம். . ஜேர்மன், ஓஸ்திரியா, பிரான்ஸ், இத்தாலி, ஆகிய பேரரசுகளின் ஆட்சிச் செல்வாக்கு நிறைந்த பல்வேறு குறுநில அரசுகளில், மூன்று குறுநிலஅரசுகளின் இணைவுடனும் பிரகடணத்துடனும் 1291ம் ஆண்டில் தோற்றம் பெற்ற கெல்வெற்சியா கூட்டமைப்பே, இன்று உலகில், ஐரோப்பிய சொர்க்கம்மென்றும், உலகின் பூந்தோட்டமென்றும், போற்றப்படும் சுவிற்சர்லாந்து.



உலகமக்கள் பலராலும் பல்வேறு காரணங்களுக்காகவும் விரும்பப்படுகின்ற சுவிஸின் உருவாக்கத்திற்கு முன்னரும், பின்னரும், அம்மக்கள் அனுபவித்த துன்பங்கள் மிகக்கடுமையானவை. உருவாக்கத்திற்கு முன்னர், ஆட்சியதிகாரம் செய்த அயல்நாடுகள் காட்டிய கடும்போக்காலும், உருவாக்கத்தின் பின், வளம்குறைந்த மலைப்பிரதேச புவியியலமைப்பாலும் பல்வேறு துன்பங்களை அனுபவித்திருக்கின்றனர். எல்லோரும் மெச்சும் எழிலும், வளமும், கொண்ட நாடாக தங்கள் நாட்டினை மாற்றிட பாடுபட்ட அம் மக்களின் அர்ப்பணிப்பு மகத்தானது.


41,293, 2 சதுர கிலோமீற்றர்களைக் கொண்ட இச்சிறிய நாட்டின் மக்கள் தொகை 7.4 மில்லியன்களாகும்.ஜேர்மன், பிரெஞ், இத்தாலி, றோமன், ஆகிய நான்கு மொழிகளும், புரட்டஸ்தாந்து, றோமன்கத்தோலிக்கர், கத்தோலிக்கர், யூதர், நான்கு மதங்களும், உள்ள இந்நாட்டில், அனைத்து மொழிகளும், அனைத்து மதங்களும், தங்களின் இறைமையைப் பூரணமாக அனுபவிக்கும் வண்ணம் இந்நாட்டின் சமஷ்டி அரசியலமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.
26 மாநிலங்களும், அவற்றுக்கான சுயாட்சித்தன்மையும், இவையணைத்தையும் ஒன்றிணைக்கும் கூட்டரசும், சுவிஸ் நாட்டின் சிறப்பான அரசியலமைப்பாகும். நாட்டின் மொத்த சேவைகளை உள்ளடக்கிய ஏழுபிரிவுகளும், அதற்கான அமைச்சுக்களும், அந்த அமைச்சுப்பிரதிநிதிகளிலிருந்து, வருடமொருமுறை சுழற்சிமுறையில் தெரிவாகும் அரசுத்தலைவரும், சிறப்பின் உச்சமெனக் கொள்ளலாம். இதைவிடவும்; இங்குள்ள மற்றுமொரு சிறப்பம்சம், எந்தவொரு புதிய சட்டவாக்கத்திற்கும் சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் தீர்வு காண்பதாகும்.



சுவிஸ்நாடு தனக்கென பாதுகாப்பு இராணுவசேவையையும் வைத்துள்ளது. இந்நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அணைவருக்கும் கட்டாய இராணுவப்பயிற்சியும், சேவையும், உண்டு. ஆக்கிரமிப்புத் தன்மையற்ற, சுயபாதுகாப்புக்கான இராணுவத்திற்கு சுவிஸ் இராணுவத்தைச் சிறப்பான உதாரணமாகச் சுட்டலாம். இந்நாட்டின் தனிமனிதசுதந்திரமும், பத்திரிகைச்சுதந்திரமும், மதசுதந்திரமும், இவற்றைப் பேணுவதற்கான இறுக்கமான காவற்துறைக்கட்டமைப்பும், கூடச்சிறப்புடையதே.
பிரதான தொழிற்துறையாக கடிகாரத்தொழில், சொக்கலேட், பாற்பொருட்கள், என்பன இருக்கின்றன. கடந்த ஐம்பது ஆண்டுகளாக தொழிற்துறையில் கடுமையான போராட்டங்களினூடாக முன்னேறியுள்ள சுவிஸ், தற்போது நவீன தொழில்நுட்பத்திலும், தகவல் தொழில்நுடபத்திலும், சுற்றுலாப்பயணத்துறையிலும், மிகுந்த ஈடுபாடுகொண்டுள்ளது. தகவல்தொழில்துறையிலும், கணனித்துறையிலும், இந்தியர்களும் தொழில்புரிகிறார்கள்.


1983ம் ஆண்டின்பின், இனக்கலவரங்கள் காரணமாக, சுவிற்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் பெற்ற இலங்கைத்தமிழர்கள் பலர், தற்போது சுவிஸ் பிரஜா உரிமை பெற்றவர்களாகவும், பல்வேறு தொழிற்துறைப் பணியாளர்களாகவும், முதலீட்டாளார்களாகவும் திகழ்கின்றார்கள். ஈழத்தமிழர்களின் இளைய தலைமுறையினர் பலர் தற்போது, சுவிஸின் அரசபணித்துறைகளுக்குள்ளும், வங்கித்தொழிற்துறைகளுக்கும் பணியாற்றத் தொடங்கியுள்ளார்கள்.


இனம், மொழி, மதம், என்பவற்றின் அடிப்படையில் சிதறிப்போகும் நாடுகள் பலவற்றைக்காணும், இன்றைய நிலையில் சிறுபாண்மையினங்களின் இறையாண்மையைப் பேணியவண்ணம் சமஷ்டி அரசாக விளங்கும் சுவிற்சர்லாந்து அரசுக்கும், அதன் மக்களுக்கும், தேசியதினவாழ்த்துக்கள் கூறுவோம் வாருங்கள்!

Monday, July 17, 2006

ஏவுகணை எள்ளலும், எனது பார்வையும்.

இந்திய ஏவுகணைப் பரிசோதனை. ஒரு எள்ளல். எனும் எனது முன்னைய பதிவிற்குக் கருத்துக் கூறிய நண்பர்கள் பலரது குரலிலும் கோபம் தெரிந்தது. கூடவே அவர்களது நாட்டுப்பற்றும் தெரிந்தது. ஒரு நாட்டின் குறித்த பகுதிக்குள் வெளிவரும் பத்திரிகையில் வெளிவந்த ஒரு சித்திரத்தை உலகளாவியரீதியில் இயங்குதளம் கொண்ட தமிழ்மணத்தில் வெளிக் கொணர்ந்தவன் என்ற வகையில், அச்சித்திரம் பற்றியும், அதனோடினைந்த சில நோக்குகளையும் இங்கே பகிர்ந்து கொள்ள விழைகின்றேன்.

கீழைத்தேய மக்களை, அவர்களது கலாச்சாரப் பழக்கவழக்கங்களை, கேலி செய்வது, கேலியாக நோக்குவது என்பது மேலைத்தேய சுபாவம் என்னும் ஒரு கருத்து, அப்பதிவில் பின்னூட்டமிட்ட பலராலும் சொல்லப்பட்ட ஒன்று. இக்கருத்து மறுப்பதற்கில்லை என்ற போதிலும், இதில் சில விதி விலக்குகளும் உண்டு. இந்த இடத்தில் சுவிற்சர்லாந்தின் மனோபாவம் பற்றி சற்று அறிந்து கொள்வது சாலவும் பொருந்தும் என்பதனால், பதினைந்து ஆண்டுகளாக அந்த மக்களுடன் உள்ள பரிச்சயத்தில் தெரிந்து கொண்ட சில விடயங்களை கூறவிரும்புகின்றேன்.

சுவிற்சர்லாந்து பற்றி குறைகாணவிழையும் யாரும் முதலில் சுட்டுவது சுவிஸ் வங்கிகளின் இரகசிய பணப்புழக்கம். இதேகுறை காணல் என்னிடமும் இருந்தது. பின்னர் இந்நாட்டினை சற்று அறியத் தொடங்க, இதன் பின்னால் ஒரு சோகமும், ஒரு நியாமும் இருப்பதாகக் கூட சிலவேளைகளில் சிந்தித்திருக்கின்றேன். தன்னுடைய மூலவளங்களைப் முற்றாகப் பயன்படுத்தினால், ஒருவாரத்திற்குக் கூட தன் நாட்டு மக்களுக்கு உணவளிக்க முடியாத ஒருநாட்டின் மாறுபட்ட பொருளாதாரச் சிந்தனையின் (சந்தேகமேயில்லை, முதலாளித்துவ சிந்தனைதான் ) பிறிதொரு வெளிப்பாடாகப் பார்க்கும் போது, அதன் தன்மை மாறுபட்டுத் தெரிகிறது. வங்கிகளின் பொதுவான பணவைப்பக விதிமுறைகளுடன், மேலும் சில நடைமுறைகளை தனது வாடிக்கையாளர்களுக்கு சுவிஸ் வங்கிகள் வழங்குகின்றன என்பது உண்மைதான். அதற்காக யாருக்கும் கொள்ளையடிக்கக் கற்றுக்கொடுக்கின்றன என்று சொல்ல முடியாதென்றே கருதுகின்றேன். இன்னுமொன்றையும் சொல்ல வேண்டும், இப்பொருளாதாரச் செயற்பாட்டில் சுவிஸ மக்கள் பலருக்கு விருப்பமில்லாவிடினும், நாட்டின் தேவை கருதி மௌனிகின்றார்கள், சிலர் எதிர்க்கவும் செய்கின்றார்கள்.

அண்மையில் '' ரீடர்ஸ் டையர்ஸ்'' சஞ்சிகை, உலகளாவிய ரீதியில் நடாத்திய பண்பொழுக்கம் பற்றிய ஆய்வில் முதலிடம் வகிப்பது சுவிற்சர்லாந்து எனக் கண்டறிந்து வெளியிட்டுள்ளது. நானறிந்தவரைக்கும் இது சரியென்றே சொல்வேன். அறிமுகமாகிய கணத்திலிருந்து அவர்கள் நம்மோடு காட்டும் நேசம் பாசாங்கற்றது (சில விதிவிலக்குகளும் உண்டு). எந்தவொரு விடயத்திலும் காட்டும் நடுநிலைத் தன்மையும், பிறர் விடயங்களில் தன்னிச்சையாக உள்நுழையாத் தன்மையும், உழைப்புக்குறித்த அக்கறையும், செய்தொழில் எதுவாயினும், அதில் காட்டும் நேர்த்தியும், சூழலை நேசிக்கும், ரசிக்கும் மனப்பாங்கும், எனக்கு மிகவும் பிடித்தமானவை. இவர்களது ஊடகசுதந்திரம் அருமையானது. தனிமனித உணர்வுகளை மதிக்கும் தன்மையது. தேவையற்றவிதத்தில் எந்தவொரு தனிப்பட்ட மனிதர்களையும் காயப்படுத்த முனையாதது.

சுவிற்சர்லாந்தைப் பொறுத்தவரையில், இந்தியா குறித்த நன்நோக்கே உண்டெனக்கொள்ளலாம். இந்த நன்நோக்கின் வெளிப்பாடாக அணமையில் இந்திய ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்கள் சுவிஸ் வந்தபோது அவருக்கு அளித்த வரவேற்பையும், இந்தியாவில் சுவிஸ் நிறுவனங்களினால் மேற்கொள்ளப்படும் உதவித்திட்டங்களையும், பல்வேறு உற்பத்தித் திட்டங்களையும், குறிப்பிடலாம். அதிலும் தமிழர்கள் எனும்போது அது ஈழத்தமிழர்களாயினும் சரி, இந்தியத் தமிழர்களாயினும் சரி, தொழில்துறைசார்ந்து, நல்லபிப்பிராயமே நிலவுகிறது.

இனி பதிவில் சுட்டிய சித்திரத்துக்கு வருவோம். இச்சித்திரத்தை கேலிசித்திரம் எனச்சுட்டியபோதும், இதை ஒரு கருத்தோவியம் எனக்குறிப்பிடவே விரும்புகின்றேன். ஓவியத்திலே ஏவுகணையின் உந்துசக்தியாக ஒரு நலிந்த மனிதன் சித்தரிகப்படுகின்றான். மக்களின் நலிந்த நிலையைப்போக்கினால் எண்ணும் தூரத்தை எய்தலாம் எனச் சொல்லப்பட்டதாக ஏன் அதைக் கொள்ள முடியாது. இப்படி நான் சொல்வதற்கு இன்னுமொரு காரணமும் உண்டு. இதே ஓவியர் இதே பத்திரிகையில் முன்னர் வரைந்த மற்றுமொரு சித்திரத்தில் சீனாவின் மனிதவலு பற்றிச் சித்தரித் திருந்ததை நினைவில் கொள்வதே.
முன்னைய சித்திரத்தில் ( தற்போது என்னிடமில்லை. மன்னிக்கவும் ) சித்தரிக்ப்பட்ட விடயம் பின்வருமாறு அமையும்.

சுவிஸ் வர்த்தக உயரதிகாரியின் அலுவலகம். உள்ளே நுழையும்
விற்பனையதிகாரி: ஐயா இன்று இரண்டுசெய்திகள் எமக்குக் கிடைத்துள்ளன. ஒன்று நல்லது. மற்றது கெட்டது.

மேலதிகாரி: நல்ல செய்தி என்ன?

விற்பனையதிகாரி: சீனாவில் இருந்து ஒருலட்சம் குளியலறைத் தொட்டிகளுக்கான விண்ணப்பம் வந்துள்ளது.

மேலதிகாரி: கெட்ட செய்தி?

விற்பனையதிகாரி: நாளை மாலைக்குள் அவை வேண்டுமாம்.

மேலதிகாரி ஆச்சரியத்துடன் இருப்பார்.

இங்கு கேலி செய்வதுபோல சொல்லப்படும் கருத்து சீனாவின் மனிதவலுவும், உற்பத்தித்திறனும்.

சீனாவிற்கு நிகரான மனித வலுவுள்ள இந்தியா, தனது பிரதான வளத்தை மேம்படுத்த வேண்டுமெனச் சொல்லப்பட்ட செய்தியாக, இந்த எள்ளலை ஏன் எடுத்துக் கொள்ள முடியாது?



திருத்தம்பலேஸ்வரம் - பகுதி 1

Tuesday, July 11, 2006

இந்திய ஏவுகணைப் பரிசோதனை - ஒரு எள்ளல்.





சுவிற்சர்லாந்தின் மிகப்பெரிய அங்காடிகளில் ஒன்றான COOP நிறுவனம், வாரம்தோறும் ஜேர்மன், பிரெஞ், இத்தாலி, என மூன்று மொழிகளிலும், வெளியிடும் Cooperazione எனும் பத்திரிகையின் இத்தாலிய மொழிப்பதிப்பின் 2006 ம் ஆண்டு 28 வது வெளியீட்டில் இக்கேலிச்சித்திரம் வெளிவந்துள்ளது.


கேலிச்சித்திரத்தின் அடியில் குறிப்பிடப்பட்டிருக்கும் செய்தி வாசகத்தின் தமிழாக்கம்: - அணுஆயுதம் தாங்கிச் செல்லும் ஏவுகணைப் பரிசோதனை முயற்சியில் முதல் முறையாக இந்தியா.

சித்திரத்திலுள்ள முதலாம் விஞ்ஞானி :- எவ்வளவு முயற்சித்தும் ஏவுகணையை நீண்டதூரம் செலுத்த எங்களால் முடியவில்லையே !..

தலைப்பாகை அணிந்த இரண்டாம் விஞ்ஞானி :- இயந்திரத்துக்கு, பசுமதி அரிசியை கூடுதலாகக் கொடுத்துப் பார்த்தால் ?

நண்பர்களே!

இக் கேலிச்சித்திரம்பற்றிய உங்கள் எண்ணப் பதிவுகளை இங்கே எழுதுங்கள். உங்களிடமிருந்து வரும் ஆக்கபூர்வமான கருத்துக்களை, இச்சித்திரத்தை வரைந்த ஓவியருக்கு சேர்ப்பிக்க முயற்சிக்கின்றேன்.

இந்த எள்ளல் குறித்த என் எண்ணங்கள் சொல்லும் பதிவு