Sunday, November 26, 2006

கார்த்திகைத் தீபங்கள், பூக்கள், வேர்கள்.

முன்பெல்லாம் கார்த்திகை மாதம் வந்தால், பூரணை நாளில் வரும் விளக்கீடு நாள்தான் நினைவுக்கு வரும். இந்தியாவில் தீபாவளிநாட்களில் நடக்கும் தீபஅலங்காரங்களுக்கு இணையாக இவை இருக்கும். வீடுகள் கோவில்கள் வேலையிடங்கள் என எல்லாவிடங்களிலும், தீங்கள் ஜொலிக்கும். வளவுகளின் கோடிகளிலும், தோட்டந்துரவுகளிலும்,கூடச் சிறுதீப்பந்தங்கள் எரிந்து கொண்டிருக்கும். நாட்கள் சிலவற்றுக்கு முன்பே இந்த அலங்காரத்திற்கான ஆயத்தங்கள் ஆரம்பமாகிவிடும். அன்றைய தினத்தில் அரங்கேற்றுவதும், அரங்கேறியவைகளை பார்த்து ரசிப்பதிலும், சிலவேளைகளில் பகைகொள்வதிலும், பொழுதுகள் கழியும். கார்த்திகை மாதத்தீபவிழாவிற்குக் கதைகள் பலவிருந்தாலும், இதற்குமேல் பெரிதாக எதையும் என்னுள் ஏற்படுத்தியதில்லை.


கார்த்திகைப்பூக்களைக் காணும் வேளைகளில், அதன் வர்ணங்களும், வடிவும் மனதுக்கு பிடிந்திருந்ததுதான், ஆனால் அன்றைய பொழுதுகளில் அதன்மீதான் நேசிப்புக்கு, அழகான பூ என்பதற்கு மேலாக எந்தவித அர்த்தப்பாடும் இருந்திருக்கவில்லை.


ஆனால் இன்று, கார்த்திகைத்தீபங்கள் என்றால் நினைவுக்கு வருவதெல்லாம், எம்மோடு கள்ளன் பொலிஸ் விளையாடிய, சினிமாவுக்குச் சேர்ந்து சென்ற, அர்த்த ராத்திரிகள் வரைக்கும் அமர்ந்திருந்து கதைகள் பல பேசிய, பாடசாலைக் காலங்களைப் பங்குகொண்ட, நண்பர்களின் முகங்கள்தான். கண்மூடிக்கொண்ட கடைசிக்கணங்கள் வரைக்கும், சிரித்துப் பேசிய அந்தச் சிங்கார முகங்கள்தான். கனக்கும் நினைவுகளுக்கும், கண்ணீர்த்திரைகளுக்கும் மத்தியில் வந்து கண்சிமிட்டிச் செல்வது எம் மாவீரர் முகங்கள்தான். இதயம் களத்துபோகும் கார்த்திகை இருபத்தியேழு.....கார்த்திகைப்பூக்களை இப்போது காணும்போதெல்லாம், காதலிக்கத் தோன்றுகிறது. நேசிப்பிற்குரிய நண்பர்களின் முகங்களை நினைக்கத்தோன்றுகிறது. எதுவும் பேசாது எடுத்துணரத்தோன்றுகிறது. தொட்டுத் தழுவிச் சுகம் காணத் தோன்றுகிறது. கார்த்திகைப்பூவுக்கும் அர்த்தம் அதிகம் தெரிகிறது, அதன் அழகைப்போல,...
இந்த மாற்றங்களுக்கெல்லாம் காரணமான வேர்களெல்லாம் மண்ணின் அடியே மறைந்துபோய் படர்ந்திருக்கின்றன. பார்வைக்குப் புலப்படா வேர்களும், வேர்களின் மூலமும், வெளிப்படாது ஆழப்புதைந்து மறைந்துபோயிருப்பினும், ஈழத்தமிழினத்தின் இன்றைய துளிர்ப்பின் மூலம் அதுவே. இனிவரும் காலங்களில் தமிழின் வாழ்வும் அதுவே....

நினைப்போம், நெகிழ்வோம், நெஞ்சாரவாழ்த்துவோம்...

பாடல் இடம்பெற்ற இறுவட்டு: அன்னைதமிழ்
வெளியீடு: சுவிஸ் பணியகம் - நன்றி

Wednesday, November 22, 2006

சகானா நீ இனிமையா சுகமும் கூட

கே.பாலசந்தரின் ''இரயில் சிநேகம்'' தொலைக்காட்சி நாடகத்தில், வந்த சகானா ராகப்பாடலைப்பற்றி, இரன்டு நாட்களுக்கு முன் பிரியமுடன் கே.பி. பதிவில் பார்த்தபோது எனக்கு மீண்டு வந்த ஞாபகங்களில், கீழேயுள்ள கவிதையும் அடங்கும்.

பாலசந்தர் இயக்கிய தொலைக்காட்சி நாடகங்களில், வித்தியாசமான கதை, வித்தியாசமான கமெராக் கோணக்கள், என அன்றைய பொழுதுகளில் என்னைக் கவர்ந்திருந்தது இரயில் சிநேகம். குறிப்பாக இப்போதுள்ளது போன்று பெரியதிரைக் காட்சிப் பெட்டிகள் வந்திராத அந்த நேரத்தில், சின்னத்திரை உண்மையில் சின்னத்திரையாக இருந்தகாலத்தில், இரயில் சிநேகத்தின் கமெராத் தொழில்நுட்பம், தொலைக்காட்சியில் பார்பதற்கு இதமாகவே இருந்தது.

அதைவிடச் சுகமாக இருந்தது சகானா ராகத்தில் அமைந்த இந்தப்பாடல். முறைப்படி சங்கீதம் கற்றிராத எனக்குச் சகானா ராகத்தைச் சொல்லிக் கொடுத்தது. ஆன்மா கரைந்துபோகும் வண்ணம், சோகத்தைத் தரும் அந்த ராகம் என்னுள் ஏற்படுத்திய தாக்கத்தில், அப்போ பிறந்த கவிதையிது.


சகானா
நீ மென்மையான ராகம் மட்டுமல்ல
இனிமையான சுகமும் கூட

நீ அழுதிடும் குழந்தைக்கு - தாய்
பாடும் தாலாட்டு
அலைமோதும் உள்ளங்களுக்கு - சுகமான்
இளந்தென்றல்
ஒரு சோலைக்குயிலின்
சோக கீதம் போல் - சுகமானது
உன் பாடல்கள்.

தெவிட்டாத திராட்சை ரசம் தரும்
போதைக்கிணையாகும் - உன்
ஆரோகண அவரோகண நிரவைகள்
அதியமானுக்கு ஓளவை கொடுத்த
நெல்லிக்ககனிபோல்
எனக்கு நீ

உன் ராக ஆலாபனையால் - என்
உள்ளம் உவக்கிறது
உள்ளம் உயிர்க்கிறது

சகானா
நீ மென்மையான ராகம் மட்டுமல்ல
இனிமையான சுகமும் கூடநினைவைத்தூண்டிய பதிவாளருக்கு நன்றி.

Saturday, November 18, 2006

திரைக்குப் பின்னாலும், முன்னாலும்.

திரைப்படத்துறைசார்ந்த ஆர்வம் எப்படி வந்ததென்பதை பிறிதொரு சந்தர்ப்த்தில் சொல்கின்றேன். இங்கே சென்ற வாரத்தில் வெளிநாட்டுத்திரைப்படக் குழுவினரோடு சேர்ந்து, ஒரு சில காட்சிகளில் , பணியாற்றிய அனுபவங்கள் சிலவற்றைப் பகிர்ந்து கொள்கின்றேன்

அவர்களோடு பணியாற்றியபோது பெற்றுக் கொண்ட அனுபவத்தில் கண்டுகொண்ட சில உண்மைகள்.

தென்னிந்தியச் சினிமாவுலகம் தொழில்நுட்பத்தில் இவர்களுக்கிணையாக நிரம்பவே முன்னேற்றம் கண்டுள்ளது.


நம்மவர்கள் எங்கே கோட்டைவிட்டு விடுகின்றார்கள் என்றால், திரைக்கதை அமைப்பிலும், படத்தொகுப்பிலும் எனலாம். படத்தொகுப்புக்காக அவர்கள் எடுத்துக்கொள்ளும் தரவுகளும், அக்கறையும் நிரம்பவே எனலாம்.


நடிகர்கள் பந்தா எதுவுமில்லாமல், வெகு இயல்பாக இருக்கின்றார்கள். சமயத்தில் அவர்கள் எங்கிருக்கின்றார்கள் என்பதே தெரிவதில்லை. துணைநடிகர்களுடன், அரட்டை அடித்தபடியோ, அல்லது படப்பிடிப்பைப் பார்வையிடும் மக்களுடனோ கலந்துவிடுகின்றார்கள்.

ஒரு திரைப்படத்தில் இருக்கக்கூடிய அதிக மனிதஉழைப்பை இங்கேயும் காணலாம்.

இங்கும் இயக்குநர், சமயத்தில் படப்பிடிப்புக்காக தன் குளிர்தாங்கு அங்கியைக் கூடத் தாரைவார்த்தது விட்டுப் பரிதாபமாகத்தான் நிற்கின்றார்.

உதவி இயக்குநர்களின் நிலை இங்கு கேவலமாக இல்லாவிடினும், பரபரப்ப மிக்கதாவே இருக்கிறது. எல்லாவகையான தேவைகளையும் ஈடுகொடுக்கின்றார்கள். சமயத்துக்கு துணை நடிகர்களாகவும் தலைகாட்டுகின்றார்கள். அந்தவகையில் அடியேனுக்கும் வெளிநாட்டுத்திரைப் படத்தில் தலைகாட்டும் வாய்ப்புக்கிடைத்தது. (எங்கே படத்தைக்காணவில்லை பிரபா சத்தமிடுவது கேட்கின்றது. சற்றுப் பொறுங்கள். படத்தொகுப்பாளரின் கத்தரிப்புக்குள் காணாமல் போகாது தப்பிப்பிழைத்து திரைக்கு வந்தால், அறிவிக்கின்றேன்)எவ்வளவுதான் கடுமையான பணியாக இருந்தபோதும், இந்தக் கலைஞர் களிடத்தில் இழையோடியிருந்த ஒருவித நட்புணர்வு உற்சாகம் தருவதாக இருந்தது.


ஏற்ற இறக்கம். உயர்வு தாழ்வு பார்க்காத, அந்த நட்புறவுக்காகவும், மேலும் நல்ல பலவிடயங்களை அறிந்து கொள்வதற்காகவும், எதிர்காலத்தில் ஒருபடத்திலேனும், முற்று முழுவதுமாக இணைந்து பணியாற்றவேண்டுமென எண்ணியுள்ளேன்.

Tuesday, November 14, 2006

துள்ளித்துள்ளி நீ பாடம்மா ( துளசிம்மா)

என் நட்சத்திரவாரத்தில் பதிவிடுவதற்கென எடுத்து வைத்திருந்த இப்பாடலை அப்போது பகிர்ந்து கொள்ள முடியாது போய்விட்டது. அதனாலென்ன, எனக்கும் என்னைப்போன்ற பல வலையுலக நண்பர்களின் பிரியத்துக்குமுரிய அம்மா, அக்கா, ரீச்சர், எனும் முப்பரிமாணங்கள் கொண்ட, மூத்த வலைப்பதிவாளர் துளசிம்மா சார்பாக இப்பாடலை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

துளசிம்மா!

பாடலை உங்களுக்கு அனுப்பி, உங்கள் பதிவிலிடலாமென்றே முதலில் நினைத்தேன். நட்சத்திரவாரத்தில் உங்களைக் குதுகலப்படுத்தலாமே தவிர, குழப்பக்கூடாது என்பதனால் உங்கள் சார்பாக இங்கேயே இட்டு விடுகின்றேன். இதுவும் உங்கள் பதிவுதான். ஓகேயா..?

துள்ளித் துள்ளிப் பாடலாமா..?

பாடல் இடம்பெற்ற படம்: சிப்பிக்குள் முத்து

பாடியவர்கள் உங்களுக்கு நன்கு தெரிந்தவர்கள்தான்.

Monday, November 13, 2006

வடக்கில்.. தெற்கிருத்தல்

நண்பர்களே! அண்மித்த சில நாட்களில் உங்களோடு பகிர்ந்துகொள்ளச் சில விடயங்கள் இருந்தபோதும், எழுதும் மனநிலை இருக்கவில்லை. எழுதவேண்டும் என எண்ணியவாறு அமர்ந்தால், எண்ணங்களை அலைக்கழிக்கும் அவலங்கள் என் மண்ணில். என்றில்லை அது ? எனக்கேட்டாலும், அண்மைக்காலங்கள் அதிக கனந்தருபவையாக, பயங்காட்டுபவையாக அமைந்து வருகிறது.... என்னத்தைச் செர்லவது..?

வேலை, வீடு, தமிழ்மணத்தில் சில வாசிப்புக்கள், சில பின்னூட்டங்கள், என்றளவில் மனம் மட்டுப்படுத்திக் கொண்டது. திரும்பத்திரும்பச் சில நினைவுகள்...சில காட்சிகள்.. வலிக்கிறது.

அந்நாட்களில் அரசர்கள் பலர் தம் அந்திம நாட்களில் “தெற்கிருந்தல் “ எனச்சொல்லி, தென் திசை நோக்கித் தவமிருப்பார்களாம் என வாசித்ததுண்டு. இன்று ஈழத்தின் வடக்கிருக்கும் என் சொந்தங்களின் நிலை கூட ஒரு “தெற்கிருத்தல் “ போலத்தான் எனத் தோன்றுமளவுக்கு, அங்கிருந்து வரும் செய்திகள் பயங்காட்டுகின்றன.

நேற்று என் நண்பனொருவன், பருத்தித்துறையிலிருக்கும் தன் தமக்கையுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளான். இன்றளவும் அம்மண்ணைவிட்டு வெளியேற விரும்பாத அவன் அக்கா, இனிப்பட முடியாது என அழுதிருக்கிறாள். ஆயிரம் அறிக்கைகள், அளவிலா மாநாடுகள், என எல்லாம் நடந்தபோதும், அம்மக்கள் வாழ்வு, மரணத்துள் வாழ்வு என்றாகிற்று.

அதியுயர் சம்பளத்தில், அரச பணியில் வாழ்வு நடத்தும் அந்தப் பெண், வாழ்வாதாரத்தை தொடர்வதென்பது பெருந்துயராகிப் போனதெனப் புலம்புமளவிற்கு நிலமை வந்துள்ளதெனில், அன்றாடக் கூலிவேலையாட்களும், கடற்தொழிலாளர்களும் படக்கூடிய துன்பம் எப்படியிருக்குமென எண்ணிப்பார்க்கப் பயமாயுள்ளது.

இராணுவச்சூழலுக்குள் செல்லும் அரச ஊழியர்களும், பள்ளி மாணவர்களும் படும் அவலங்கள் அதைவிட மோசமானவை. தினம்தினம் செத்துப்பிழைக்கும் நிலைதான். தேசிய அடையாள அட்டையுடன் செல்வோர், காப்பரனில் அவற்றைச் சமர்ப்பித்து, சோதனைக்குட்பட்டு, பின் கிடைக்கும் பிரத்தியேக அட்டையுடன் உள் நுழையவேண்டும். மாலையில் மீண்டும் திரும்பவும், அதே சடங்குகள் அரங்கேறும். அருகில் நிற்பவன் அல்லது நிற்பவள் பற்றித் திரும்பிப் பார்க்க முடியாத பயங்கரம்.

இந்தனை அவஸ்தைகளுடன் சென்று வரவேண்டுமா? சென்றுவரத்தான் வேண்டும். இல்லையேல் சித்திரவதை வீட்டு வாசல்வரை தேடி வரும் திறந்தவெளிச்சிறைக்குள் அல்லவா அவர்கள் வாழ்வாகிப்போயிற்று. காலை செல்லும் ஒருவனோ ஒருத்தியோ திரும்பி வரலாம் வரமாலும் போகலாம்.

இத்தனைக்குள்ளும் அவள் சொன்ன ஆறுதல் வார்த்தைகள் என்ன தெரியுமா? இத்தனை இடர்களுக்கு மத்தியிலும்கூட, இந்தவருட உயர்தரப்பரீட்சையிலும் கூட நல்ல பேறுபேறுகளுடன் எங்கள் இளைய தலைமுறை சித்தி பெற்றுள்ளதாம்...

இறுதியாக அவள் சொல்லி முடித்தது, இருபது வருடங்களின் பின்நோக்கிய நிலையில், இப்போது வாழ்கின்றோம் என்பதே. எண்பதுகளின் தொடக்கத்தில் ஈழத்தமிழர் வாழ்வு எப்படி இருந்தது என்பது எல்லோர்க்கும் தெரிந்ததுதானே..

“இதுவும் கடந்து போகும் “ என்பது ஒரு ஆன்மீகப்பதம். இப்பொழுது அதையே சொல்லி ஆறுதல்படுவதுதைத்தவிர, தற்போதைக்கு எதுவும் சொல்லத் தோன்றவில்லை......

Sunday, November 05, 2006

எங்களுக்கான சினிமா மொழி

AANIVAER, ஆணிவேர்


“ சினிமாவில் அரசியல்பேச அமெரிக்காவால் மட்டுமா முடியும்? இதோ இங்கே எங்களாலும் முடியும்..” சுவிற்சர்லாந்தின் விமான சேவையான “சுவிஸ் எயார்” நிறுவனத்தின் இறுதிக்காலத்தில் நடைபெற்ற ஊழல் விவகாரங்களை உள்ளடக்கி வந்த, “கிறவுண்டிங்” திரைப்படத்திற்கு, சுவிற்சர்லாந்தின் இத்தாலிய மொழிப்பத்திரிகை ஒன்று தந்த விமர்சனம் இது.

சினிமாவில் அரசியல் என்பது தமிழர்களுக்குப் புதிதல்ல. அந்தச் சினிமா அரசியல் கற்பித்த அனுபவம் என்பது கற்கண்டாக இனித்ததில்லை என்பதும் புதிதல்ல. மேலும் அது ஈழத்தமிழ் மக்களின் வாழ்வியலுடன் இணைந்ததாக இருந்ததுமில்லை. இத்தகைய சூழலில், ஈழத்தமிழரின் போரியல் வாழ்வையும், அதுசார் அரசியலையும் சுட்டி, முதலாவது ஈழத்தமிழரின் வெண்திரைக்காவியம் எனும் அடைமொழியுடன் வந்திருக்கும் திரைப்படம் ஆணிவேர்.

எங்களுக்கான சினிமாமொழியின் ஆரம்பம், ஆணிவேர்

தமிழ்த்திரைக்கண் நிறுவனத்தின் தயாரிப்பில், உதிரிப்பூக்கள் மகேந்திரன் அவர்களின் மகன் ஜான் அவர்களின் இயக்கத்தில், நந்தா, மதுமிதா, நிலீமா, ஆகிய தமிழகக்கலைஞர்களும், தமிழீழக்கலைஞர்களும் நடிக்க, சஞ்சயின் ஒளிப்பதிவில், எங்களுக்கான சினிமாமொழி, திரையில் எழுதப்பட்டிருக்கிறது.

கற்பனைகளில்லில்லாத, உண்மைச்சம்பவங்கள். தமிழீழ மண்ணின் போராட்ட களத்தில் நடந்த உண்மைச்சம்பவங்கள், காட்சிகளாகப் பதிவாகியிருக்கின்றன. இரத்தமும் சதையும், துன்பமும் துயரமும், நிறைந்த வாழ்வு திரையில் விரியும்போது, அவை நன்றாகவிருக்கிறது எனச் சொல்ல மனமிசையாவிடினும், காட்சிகளின் கடுமை மனதை நெருடினாலும் கூட, அதுதானே எமது மண்ணின் யதார்த்தம். திரையில் காட்ட முடிந்தவற்றை மட்டுமே காட்டப்பட்டிருக்கிறது என, இப்படத்தின் இயக்குனர் ஜான் செவ்வியொன்றில் கூறியுள்ளார். அதுதான் உண்மை என்பது, மண்ணின் துன்பக்களங்களில் நின்றவர்களால் உணர்ந்துகொள்ள முடியும்.

மொத்தப்படத்திலும் மனதை வருடிவருவது, அழகான ஒளிப்பதிவு. காட்சியின் யதார்த்தத்திற்குப் பொருத்தமான ஒளியளவுடன், பதிவாகியிருக்கும் காட்சிகள் அத்தனையும் அழகான ஒளிஓவியங்கள். அப்பப்பா அவ்வளவு அருமை. பெரும் பொருட்செலவில், வெளிநாடுகள் சென்று குப்பைத் தொட்டிகள் மேலும், தெருக்கோடிகளிலும், குத்தாட்டம் போட்டுப் படமாக்கும் சினிமாக்காறர்கள் கட்டாயம் இப்படத்தைப் பார்க்க வேண்டும். ஏன் தென்னிந்திய வர்த்தக சினிமா ரசிகர் வட்டமும்தான்

தமிழ்ச்சினிமாவின் பேச்சு மொழி எது? தென்னிந்தியத்தமிழா? தமிழீழத்தமிழா? வட்டார வழங்கு மொழியா? என்பதற்கு விடையளித்திருக்கிறது ஆணிவேர். சினிமாவிற்கான மொழி, பார்வையும் பதிவும் என்பதை ஆணித்தரமாகப் பதிவு செய்திருக்கிறது. மொழி என்பது இரண்டாம் பட்சமாகிப்போய், சினிமாவெனும் கட்புல ஊடகப்பெறுமானம் நிருபனமாகிவுள்ளதெனலாம்.

இது ஒரு ஆவணப்படமா? அரசியல்படமா? கலைப்படமா? வர்தகப்படமா? என வரையறுக்க முடியவில்லை என முணுமுணுப்பவர்களுக்கு, இது எங்கள் வாழ்க்கைப்படம். எங்கள் மண்ணையும், மண்ணின் அழகையும், போரியல்வாழ்வின் அனுபவங்களோடு காட்சிப்படுத்திக் கண்டுள்ளோம் எனச்சொல்லலாம்.

போரின் துன்பகரமான அனுபவங்களைக் கோர்த்துச் செல்லும் ஒரு திரைக்கதை. திரைக்கதைக்குத் தேவையான காட்சிக்களம். கதைமாந்தர்களை கச்சிதமாகப் பிரதிபலிக்கும் கலைஞர்கள் என அத்தனையும் பொருத்தமாக அமைந்துவிட ஆணிவேர், ஆழமாகப் பதியனாகிறது.
வர்த்தகக் கவர்ச்சிக்காகவே பல படங்களில் வலிந்து சேர்க்கப்படும் வல்லுறவுக்காட்சிச் சினிமாக்களின் மத்தியில், பெண்களுக்கெதிரான அடக்குமுறை ஆயுதமாக வல்லுறவை இராணுவம் கையாளும் வகைதனை, எந்தவித ஆபாசமான காட்சியமைப்பும் அல்லாமல், உணர்வுளின் அவஸ்தையாகச் சொல்லியிருக்குமிடத்தில், எழுந்துநின்று இயக்குநருக்கு மரியாதை செய்யத் தோன்றுகிறது. துயரங்களையும், துன்பங்களையும், அவற்றின் வலியோடு, உணர்வோடு சொல்லியிருக்கிறார்.

வன்னி நிலப்பரப்பில் எடுக்கப்பட்ட திரைப்படம், விடுதலைப்புலிகளின் பிரச்சாரப்படமாகத்தான் இருக்கும் என நினைத்துச் செல்பவர்களுக்கு நிச்சயம் ஏமாற்றம்தான். அத்தனை கச்சிதமாகச் சினிமாவாக்கப்பட்டிருக்கிறது. அதற்காகச் செய்திகள் சொல்லப்படவில்லை என்று சொல்லவில்லை.

எல்லாமே நன்றாக இருந்தது என்றால், குறைகளே இல்லையா? இல்லையே குறைகள் இல்லாமலில்லையே. குறிப்பாகப் படத்தின் இறுதிக்காட்சி, செய்தியொன்றைச் சொல்வதற்காக வலிந்து சேர்க்கப்பட்டது வடிவாகத் தெரிகிறது. காட்சிகளின் ஒழுங்கமைப்பில் ஒரு பாச்சல் தெரிகிறது. ஆனால் நிறைவுகளோடு ஒப்பிடுகையில், இவைகளெல்லாம் குறைவானவையே..

ஆணிவேர் ஒரு நல்ல ஆரம்பம்.

Friday, November 03, 2006

வாத்தியஇசை

என்ன வீடு கனநாளாப்பூட்டிக்கிடக்கு, விடுமுறையில் போனதோ? அல்லது விட்டெறிச்சிட்டுப் போனதோ? ஒன்டுமா விளங்கேல்ல என்டு விண்ணானம் பேசாம விட்டிருந்த நண்பர்களே! உண்ணானச் சொல்லுறன், உங்களப்போல எனக்கும் கொஞ்சம் வேலைப்பளு கூடினதால விட்டிட்டிருந்திட்டன். வேறொன்றுமில்ல.

சரிசரி, வந்தவழியில கைத்தொலைபேசிக் கருவிக் கண்ணால, சுட்டு வந்தத சுடச்சுடப் பரிமாறுகிறன். சுவைத்துச்சொல்லுங்கள்.

சுவிற்சர்லாந்தின் தேசிய வாத்திக்கருவியான அல்ப்ஹோர்ன் இசைக்கருவியில் எழும் அற்புதமான இசைவடிவமிது.