Saturday, September 16, 2006

சந்தனத் தெருக்களில் கந்தகம் மணக்கையில்

போராளிகள்!

ஒடுக்கப்படும் மக்களின், விடுதலைக்குரலாய் ஒலிப்பவர்கள் போராளிகள். இவர்கள் வெறுக்கத்தக்கவர்களல்ல.மாறாய் விரும்பத்தக்கவர்கள். அவ்விதமே பலராலும் நேசிக்கப்பட்டவர்கள். ஓமர்முத்தா, லெனின், சேகுவேரா, நெல்சன் மண்டேலா, மாவோ.... என இவர்கள் பட்டியல் நீண்டு கொண்டு செல்லும்.

அடிப்படையில் மெல்லிதயம் கொண்ட இம்மனிதர்கள், தங்கள் முன்னே நடைபெறும் அநீதிகள் கண்டு, கொதித்தெழும்போது, போர்க்குணம் மிக்கவர்களாக ஆகின்றார்கள். அநீதி செய்யும் மாந்தர்கள் சமூகத்தின் நன் மனிதர்களாக வேடம்கட்டபடுகின்ற வேளைகளில், போராளிகள் புறந்தள்ளப்படுகின்றார்கள். உண்மையில் வெறுக்கபட வேண்டியவர்கள் போற்றப்படுகின்றார்கள். இந்த அவலம் உலகில் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.

கலைஞர்கள்!
மெல்லிதயமும், மென் உணர்வுகளும் கொண்ட மனிதர்கள். தங்கள் செய்களில் ஒரு அழகியலை, வரைமுறையை, காண்பார்கள். காணும் காட்சிகள் யாவையும், ஒருவித ரசிப்போடு, நோக்குவார்கள். உற்று நோக்கும் பண்பெ, அவர்களை ஒரு கட்டத்தில் போராளிகளாகவும் மாற்றி விடுகிறது. இந்த வகைக் கலைஞர்கள் வரிசையில், பாரதி முதல், பொப் மார்லி வரை, பலரை நாம் காணலாம்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இணைந்து கொண்ட போராளிகள் பலருக்கும் இவ்விரண்டு தன்மைகளும் நிறைய ஒத்துப் போகின்றன. நான் சந்திந்த பல போராளிகள் மிக நல்ல கலைஞர்களாக இருந்திருக்கின்றார்கள். இருக்கின்றார்கள். இவர்களுடனான அனுபவங்கள் மட்டுமே, பல பதிவுகளில் பகிர்ந்து கொள்ளக் கூடியவை.

இங்கே, கலைஞனாக இருந்து போராளிக் கலைஞனாக மாற்றம் பெற்ற ஒரு மனிதனைப் பார்க்கவிருக்கின்றோம். நாச்சிமார்கோவிலடி கண்ணன். ஆம் ஒரு காலத்தில் அப்படிச் சொன்னால்தான் தெரியும். இன்று இசைவாணர் கண்ணனாக, போராளிக் கலைஞனாக உருவாகியுள்ளான்.

ஒருகாலத்தில் யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல, முழு இலங்கையிலும் பிரபலமாகியிருந்த பெயர் நாச்சிமார் கோவிலடி கண்ணன் கோஷ்டி. மெல்லிசைப்பாடல்களையும், சினிமாப்பாடல்களையும், விழாக்களிலும், கலைநிகழ்ச்சிக்களிலும் இசைப்பதில், மக்கள் மத்தியில் பிரபலம் பெற்ற ஒரு இசைக்குழு. இதன் இயக்குனர்தான் கண்ணன். பல கீழைத்தேய வாத்தியங்களையும், மேலைத்தேய இசைக்கருவிகளையும், வாசிக்கத் தெரிந்தவன். கண்ணனுடன் நான் அறிமுகமானது ஒரு வித்தியாசமான தருணத்தில். மேடைகளில் மெல்லிசைப்பாடல்களுக்கு இசையமைப்பவனாகத் தெரிந்த அவனை, அப்படிக் கண்ட தருணத்தில் ஆச்சரியமாகவிருந்தது.

கொக்குவிலில் உள்ள என் நண்பர் ஒருவர் மிகுந்த சாயிபக்தர். குறிப்பிட்ட காலப்பகுதியில், மிகுந்த மனஉளைச்சலுக்குள்ளாகி இருந்த என்னை ஆற்றுப்படுத்தியவர். என்னிடம் உள்ள சிலைவடிக்கும் தகமையைக் கண்டு கொண்ட அவர், தனக்கு ஒரு சாயிபாப சிலை செய்து தரவேண்டுமென அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தார். எனக்கோ சாயிபாபாவைக் கண்ணில் காட்ட முடியாது. நண்பரோ வெறுத்தொதுக்க முடியாதவர். நிலமையைத் தந்திரமாகத் தட்டிக்கழிக்க எண்ணி, எனக்கு சாயிபாபாவின் உருவ அமைப்பு முழுமையாகத் தெரியாது எனச்சொன்னேன். அதற்கு அவர் மறுநாள் சிவராத்திரி தினமென்றும், நாச்சிமார் கோவிலடி கண்ணன் வீட்க்குச் செல்லுமாயும், அன்றிரவு முழுக்க அவர் வீட்டில், பஜனையும், பாபாபற்றிய வீடியோ படங்களும் காண்பிக்கப்படும் என்றும் சொன்னார்.

விருப்பமின்றிப் போனேன். விடியும்வரை இருந்தேன். காரணம் கண்ணனின் அழுகையும், இசையும் கலந்த பஜனைப்பாடல்கள். கண்ணன் மிகத்தீவிரமான சாயிபக்தன் என்பது அன்றுதான் எனக்குத் தெரியும். அவர் வீட்டின் பெயரே, பிரசாந்தி நிலையம். வீட்டின் வரவேற்பறையே ஒரு கோவிலாக வடிவமைக்கப்பட்டிருந்தது. அந்த மண்டபத்தில், ஆர்மோனியம், மிருதங்கம், தபேலா போன்ற இசைக்கருவிகள், எந்நேரமும் வைக்கப்பட்டிருக்குமாம். யார் வேண்டுமானாலும், எந்நேரமும் போய் பஜனை செய்யலாமாம், எனச் சொன்னார்கள். அன்று சிவராத்திரி என்பதால் விடிய விடிய பஜனை நடந்து கொண்டிருந்தது. ஆர்மோனியத்தை வாசித்துக் கொண்டு கண்ணன் பாடினார். மற்றவர்களும் பாடினார்கள். “ பிறேம முதித மனசே ககோ ராம ராம ராம் சிறி ராம ராம ராம்... “ கண்ணன் பாடினார் என்றா சொன்னேன். இல்லை இல்லையில்லை, இசையோடு இசைந்து, இசைந்து அழுது கொண்டிருந்தார். அப்படியே இருந்தவன் அதிகாலை வரை அங்கேயே இருந்தேன். பஜனை நடைபெறா வேளைகளில் பாபா பற்றிய பதிவுகள் காட்டினார்கள். அதையும் பார்த்தேன். அடுத்த வாரமே சிலை வடித்தும் விட்டேன். நண்பருக்கோ மிக்க மகிழ்ச்சி. எனக்கும் தான், இருக்காத பின்னே. அப்படியொரு இசையமுதம் பருகிய பின் மகிழ்ச்சி இல்லையென்றால்..நான் மனிதனே இல்லை.

தேசத்தில் மாற்றங்கள் பல வந்தன. தேசத்தில் மட்டுமா? மனங்களிலும்தான். அழுதழுதே பஜனை பாடிய கண்ணன், அழுதழுதே பரணி பாடுகின்றான். அவன் இசை பலரைப்பாட வைக்கிறது. சாம்பிராணியும், சந்தனமும், மணத்த தெருக்களில், கந்தகம் மணக்கையில், கற்பூரப்புகை விலக்கிக் கண்ணீர்புகை எழுகையில்....பிரசாந்தி நிலையத்தில் பக்தியைப் பிரசவித்த இசை விடுதலைக்கான பாடல்களைப் பிரசவிக்கிறது. போர்... போர் ...... போர்..... போரம்மா14 comments:

வசந்தன்(Vasanthan) said...

எங்களுக்கு இவரைத் தெரிந்ததெல்லாம் இசையமைப்பாளர் கண்ணணாகத்தான்.
இவருடைய ஒரு மகன் முரளியும் பிரபலமான இசையமைப்பாளர். இன்னொரு மகன் போராளியான இசைத்தென்றலும் அறிந்த இசையமைப்பாளர்.

செம்மணியில் புதைக்கப்பட்ட உறவுகளுக்காக வெளிவந்த
"செம்மணியின் மீதெழுந்து ஓலமிடும் சின்னச்சிட்டு"
என்ற பாடலின் முன்வரும் தொகையறா கண்ணன் அவர்களின் குரலிலேயே வரும். உருக்கமாக இருக்கும்.

தொன்னூறுகளின் தொடக்கத்தில் வந்த விடுதலைப்பாடல்கள் பல இவரின் இசையமைப்பில் வெளிவந்தவை. அவற்றை மறக்க முடியுமா? குறிப்பாக நெய்தல் இசைநாடா. அதுவொரு பொற்காலம். பிறகு புதிதாக வந்த பலரும் நன்றாகவே பாடல்கள் தந்தாலும் சிலபாடல்கள் தகரத் தட்டல்களாக அமைந்துவிட்டன.

இப்படியான பதிவுகளில்தான் உங்களைப்பற்றியும் ஆங்காங்கே அறிந்து கொள்ள முடிகிறது.
;-)

சின்னக்குட்டி said...

கண்ணன்- நேசம் இரட்டையர்களாக ஈழத்து திரைபடங்களுக்கும் இசை அமைத்து இருக்கிறார்களென்று நினைக்கிறன்

வெற்றி said...

மலைநாடான்,
நல்ல பதிவு.

கானா பிரபா said...

நாச்சிமார் கோயிலடிக் கண்ணன் வீட்டு சாயி பஜன்களில் அடிக்கடி கலந்துகொண்டிருக்கின்றேன், குறிப்பாக அகண்ட பஜன் என்று சொல்லப்படும் இடைவிடாத முழுநாட் பிரார்த்தனை.

வசந்தன் சொல்லுவது போல் தமிழீழ மெட்டுக்களில் நெய்தல் மகுடம் போன்றது.

இன்னொரு கண்ணன் யாழோசை கண்ணன் என்று அழைக்கப்பட்டார், தற்போது ஜேர்மனி என்று நினைக்கின்றேன், அவரும் சில எழுச்சிப்பாடல்களுக்கு இசையமைத்க்டிருக்கின்றார், கொஞ்சக்காலம் அவரிம் கீபோட் கற்றிறிருக்கின்றேன்.

மலைநாடான் said...

// புதிதாக வந்த பலரும் நன்றாகவே பாடல்கள் தந்தாலும் சிலபாடல்கள் தகரத் தட்டல்களாக அமைந்துவிட்டன//

வசந்தன்!
உங்களின் இந்தக் கருத்தோடு எனக்கும் உடன்பாடே. மேலதிகமாக நீங்கள் தந்த தகவல்களுக்கு நன்றி

Chandravathanaa said...

மலைநாடான்
உங்கள் பதிவுகளிலிருந்து பவல விடயங்களை அறிந்து கொள்ள முடிகிறது.
உங்களது மற்றைய சில பக்கங்களையும் அறிந்து கொள்யவும் முடிகிறது.

கானாபிரபா
ஜேர்மனியில் ஒரு கண்ணன் இருக்கிறார்.
மதுரக்குரலோன் என்பார்கள். அருமையாகப் பாடுவார்.
நீங்கள் குறிப்பிடுவது அவரையாகத்தான் இருக்கும்.

மலைநாடான் said...

சின்னக்குட்டி!

நீங்கள் சொல்வது சரி.
கண்ணன்- நேசம் இணைந்து கோமாளிகள் திரைப்படத்துக்கு இசையமைத்திருக்க வேண்டுமென நினைக்கின்றேன்.

மலைநாடான் said...

சந்திரவதனா, பிரபா!

நீங்கள் இருவரும் குறிப்பிட்ட து போன்று, இன்னுமொரு கண்ணன் ஜேர்மனியில் இருக்கிறார். அண்மையில் ஜேர்மன் சென்றபோது, அவரைச் சந்தித்தேன். அருமையான குரல்வளம்மிக்கவர்.
எங்கள் கலைஞர்கள், பற்றிய என் தொடர்பதிவுகளில் அவரும் நிச்சயம், வருவார்

சின்னக்குட்டி said...

//நீங்கள் சொல்வது சரி.
கண்ணன்- நேசம் இணைந்து கோமாளிகள் திரைப்படத்துக்கு//உனக்கு தெரியுமா நான் உன்னை நினைப்பது... எனக்கு தெரியுமா ...நீ என்னை நினைப்பது.. என்ற ஈழத்து முதல பொப் இசை பாடலை இயற்றி இசையமைத்த இரட்டையர்கள் உவர்கள் தானா.. ..உவர்களாய் இருக்காது என்ற குழப்பமிருக்கிறது .. ஏனெனில் அவர்களின் இடம் திருகோணமலையென ஞாபகம்....மலை நாடனுக்கு உது பற்றி தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன்...

மலைநாடான் said...

//உனக்கு தெரியுமா நான் உன்னை நினைப்பது... எனக்கு தெரியுமா ...நீ என்னை நினைப்பது.. என்ற ஈழத்து முதல பொப் இசை பாடலை இயற்றி இசையமைத்த இரட்டையர்கள் உவர்கள் தானா.. ..உவர்களாய் இருக்காது என்ற குழப்பமிருக்கிறது .. ஏனெனில் அவர்களின் இடம் திருகோணமலையென ஞாபகம்....மலை நாடனுக்கு உது பற்றி தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன்...//

சின்னக்குட்டி!
தெரியாமல் பின்ன..ஆனால் ஒரு திருத்தம். உனக்குத்தெரியுமா பாடல் இசைத்தட்டில் வெளிவந்த முதலாவது ஈழத்து மெல்லிசைப்பாடல். இதைப்பாடியவர் எம்.பி.பரமேஸ். இசையமைத்தவர் எம்.பி. கோணேஸ். இவர்கள் திருகோணமலையைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பற்றிய விபரங்கள்உடனான பதிவினைத் தரும் எண்ணம் உள்ளது. சற்றுப் பொறுங்கள்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

மலைநாடர்!
அன்று கோவில் திருவிழாக்களில் "சின்னமேளம்" எனும் சதுர்க் கச்சேரி; ஒழிந்து அந்த இடத்தை நிரப்ப "கண்ணன் கோஸ்டி; இரட்டையர் குழு" "என இசைக் குழுக்கள் தோன்றின; அந்த கண்ணன் தான் இவர்.;;பின்பு இலங்கை வானொலி ஈழத்துப் பாடல்களுக்கும் முக்கியம் கொடுத்த போது, இவர்கள் திறமையும் புலமையும் வெளித் தெரிந்தது. தமிழ்நாதத்தில் அவர் பேட்டியும் கேட்டதாக ஞாபகம். இப்போ கனடா வாசம். நம் நாட்டுத் திறமைசாலி.;;
யோகன் பாரிஸ்

மலைநாடான் said...

யோகன்!

இசைவாணர் கண்ணன் இப்போ கனடாவிலோ. நிச்சயமாகத் தெரியுமோ?

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

மலைநாடர்!
இசைவாணர் (நாச்சிமார் கோவிலடி) கண்ணனின் பேட்டி, தமிழ்நாதத்தில் ,கனடிய இணைய வானொலியில் 2 வருடங்களுக்கு முன் கேட்டேன். பதிவு செய்யப்பட்டது. அவர் கனடாவில் தான் வாழ்வது போல் பேட்டி அமைந்தது. நம்மவர் ஐரோபாவில் இருந்து, கனடா செல்வதே! வழக்கம். கனடா வந்து மீண்டும் ஈழம் செல்லச் சாத்தியம் இல்லை. அதனால் "கனடா வாசம்" எனும் முடிவுக்கு வந்தேன்.
யோகன் பாரிஸ்

குமரன் (Kumaran) said...

சாயிராமா. தயை செய்வாய். தயை செய்வாய்.