வெல்க தமிழ் பேரணிநிகழ்வும் சில அவதானிப்புக்களும்.
11.06.2007 திங்கள் கிழமை, சுவிற்சர்லாந்து ஜெனிவாவில் ஐ.நா சபை நோக்கி, புலம்பெயர்தமிழர்களால் "வெல்க தமிழ்" எனும் அடையாளத்தோடு, நடாத்தப்பட்ட பேரணி, அரங்க நிகழ்வுகள் குறித்த, நேரலை ஒலிபரப்பு நிகழ்ச்சியை ஐரோப்பியத் தமிழ்வானொலி, ஆவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், ஆகியவற்றுக்காக தொகுத்து வழங்கச் சென்றிருந்தேன். என் அவதானிப்பில் சில..
அன்று முழுவதும், சுவிற்சர்லாந்தின் எல்லாப்பகுதிகளிலும் அடைமழைபெய்து கொண்டிருந்த போதும் நன்பகல் முன்பதாகவே பலர், பேரணி ஆரம்பமாகிய மைதானத்தில் குவியத் தொடங்கினார்கள்.
நமது குடும்ப உறவுகள் ஐம்பது பேருடன் ஒரு வைபவத்தை நிகழ்த்துவதாயின் கூட நாம் படும் சிரமமே சொல்லி மாளாது. பல நாடுகளிலிருந்தும் வரும் முகந்தெரியா உறவுகளை, வரவேற்று உணவளித்து, நிகழ்வில் பங்கேற்கவைத்து, மீண்டும் வழியனுப்பி வைப்பது என்பது இலேசான காரியமல்ல. ஆனால் அதை இம்மியும் பிசகாமல் செய்த, அர்ப்பணிப்புமிக்க தொண்டு பணியாளர்களின் பணியும், அதை கட்டமைத்து வழிநடத்திய சுவிஸ் பணியகத்தின் திறமையும் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியது.
ஏதிலிகளாக இந்நாட்டில் வாழ்க்கையை ஆரம்பித்த எம்மவரை, சுயமற்ற சிலர் எள்ளி நகையாடினார்கள், இன்று சுயதொழில் முனைவர்களாக உயர்ந்துள்ள நம்மவர் பலர், நிகழ்ச்சிக்கு பல அனுசரனைகளை வழங்கியிருந்தது பெருமையாகவிருந்தது.
பிற்பகல் 2.00 மணிக்கு ஜெனிவா தொடரூந்துநிலையத்திற்கு அண்மையிலுள்ள பூங்காவில் ஆரம்பமாகிய பேரணி சுமார் 3.00 அளவில் ஐ.நா சபையை நெருங்கிக்கொண்டிருந்தது. அந்த வேளையிலும், பேரணி ஆரம்பமாகிய இடத்தில் பேரணியில் மக்கள் இணைந்து கொண்டிருந்தார்களாம்.
எங்கள் எண்ணங்களை, துன்பங்களை, உலகின் கண்ணுக்கு ஒப்புவிக்க ஒருகாலத்தில் ஊடகம் எதுவுமில்லாதிருந்த நிலைமாறி, உலகம் எங்கெனும், ஒலி,ஒளிஅலைகளில் உணர்வுகளைக் கொண்டு செல்ல எங்கள் ஊடகங்கள் திரண்டிருந்தன. அனைத்துலக தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், புலிகளின் குரல், ஐரோப்பியத்தமிழ் வானொலி, அவுஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், ஆகியவை ஒலிஅலை வழியாகவும், தரிசனம், ரீ.வி.ஐ ஆகிய தொலைக்காட்சிகள் ஒளி அலை வழியாகவும், உலகம் நிகழ்ச்சிகளைக் கருத்தாகவும், காட்சியாகவும் வெளிப்படுத்தின. இம்முறை இணைய ஊடகம் சார்ந்தும் செய்தியாளர்கள் நிறைந்திருந்தனர்.
பேரணியின் முன்னணியில் திரு. பழ.நெடுமாறன்ஐயா அவர்கள் மாறாத அதே மென்னகையோடு, ஐ.நாசபை வரை, கையில் தேசியத்தலைவரின் படந்தாங்கி நடந்தே வந்தார். ஐயா அவர்கள் உடல் நலம்குன்றியிருந்தபோது, புலத்தில் அவரது நலம் வேண்டி பிரார்த்தித்த ஒவ்வொரு தமிழனும், அகமகிழ்ந்திருப்பான். அதுபோன்றே ஐயா அவர்களும், ஈழத்தமிழருக்காய் குரல்கொடுத்ததற்காக, இரண்டாண்டுகள் சிறைப்பட்ட துயரம், மறந்திருப்பார். அரங்க உரையில் அவரே சொன்னார்.
அரங்க நிகழ்வில் பல வெளிநாட்டவர்கள் உரையாற்றியது, எங்கள் விடுதலைப்போராட்ட நியாயத்தினை சாட்சிப்படுத்துவதாக இருந்தது.
தமிழகத்தில் இருந்து வருகைதந்திருந்த பிரபல ஊடகவியலாளர் அப்துல் ஜப்பார், தன் உரையில் பேரணியின் ஒழுங்கமைப்பை வியந்தார். சுவைபட மக்களிடம் செய்திகள் சொன்னார்.
சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவர் சந்திரிக்கா குமாரணதுங்காவின் உறவினர், கலாநிதி, பிறையன் செனவிரட்னாவின் உரையில், சிறிலங்காவின் அரசியல் யதார்த்தம் தெரிந்தது. உலகத்தமிழர்களின் உறுதி எவராலும் கலைக்கப்படா முடியாது என்பதை தெளிவாகச் சொன்னார்.
நீண்ட தூரங்களிலிருந்து, ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவிலிருந்து பிரயாணம் மேற்கொண்டு வந்த களைப்போ, தூறலாகத் தொடங்கிய மழை உரக்கப் பெய்யத் தொடங்கியபோதோ, உறுதியாக நின்ற மக்களின் மனத்திடம் மகத்தானது. அந்த மகிமைதானே, தேசிய விடுதலைப்போராட்டத்தை இன்றளவும் முன்னெடுத்துச் செல்கிறது.