Tuesday, December 18, 2007

குளிர், வெப்பம், சுவிஸ்.

சென்ற வாரம் சுவிற்சர்லாந்தின் பல பாகங்களிலும் வெப்பநிலை சைபர்பாகைக்கும் கீழே சென்றுவிட்டதால், தற்போது கடுமையான குளிர் நிலவுகிறது. கிறபுண்டன் மாநிலத்தில் அதி கூடிய குளிர்நிலையாக மைனஸ் இருபது பாகை பதிவாகியிருந்ததாம். இந்த நாட்களில்தான் சுவிஸ் அரசியலின் சூடான நிகழ்வும் நிகழ்ந்திருக்கிறது. அதற்குக்காரணமான, திருமதி. எவ்லின் விட்மர், இதே கிறபுண்டன் மாநிலத்தைச் சார்ந்திருந்தது அசாதாரணம்.


எனது முந்தைய இடுகையின் விரிவாக, அதில் தொடங்கிய விடயத்தையே இங்கும் குறிப்பிடவுள்ளேன். சென்றவாரத்தில் சுவிஸின் மத்திய கூட்டாட்சி அமைச்சரவைத் தெரிவுகளில், முக்கியத்துவம் நிறைந்ததாகவிருந்த திருமதி: எல்வின் விட்மர் ஸ்லும்ப் அவர்களின் தெரிவும், அவரது பதவியேற்பும், நடைபெற்றதபின், அது குறித்த கருத்துப்பகிர்வுகளும், கணிப்புக்களும் நடைபெற்று வருகின்றன. அந்தளவுக்கு அதன் முக்கியத்துவம் என்ன?அரசாங்க அமைச்சரவையிலிருந்து வெளியேறியுள்ள அரசியலாளர், திரு. கிறிஸ்தோவ் புளொக்கர் ஒரு சராசரியான அரசியல்வாதியல்ல. நிறைந்த அரசியல் அனுபவமும், தீவிர செயற்பாட்டளனுமாவார். தனித்துவமான சுவிஸ் எனும் சிந்தனையின் வழி, பல சிறப்புச் சட்டங்கள் உருவாக காரணமானவர். அப்படியிருந்தும், அவரது கட்சியின் மற்றொரு பெண்உறுப்பினரின் தெரிவின் மூலம் அரசகட்டமைப்பிலிருந்து வெளியேற்றபட்டிருப்பது ஏன்? எனக்கேள்வி எழும்போது, இனவாதத்துக்கெதிரான சுவிஸ் மக்களின் மனநிலை தெளிவாகிறது.பொதுத்தேர்தலுக்கு முன், திரு. கிறிஸ்தோவ் புளொக்கரின் "தூய்மையான சுவிஸ் உருவாக்கம் " எனும் கருத்துருவாக்கப் பிரச்சாரத்தினால், பல மாற்றுக் கருத்துக்களும், எதிர்ப்புக்களும், உருவாகின. ஆரம்பத்தில் அது குறித்து, திரு புளொக்கரும், அவரது ஆதரவாளர்களும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. " வெளிநாட்டவர்களுக்கெதிராக நாம் கருத்துக் கூறவில்லை, சுவிஸில் குற்றம் புரியும் வெளிநாட்டவர்களுக்கெதிராகவே செயற்படுகின்றோம்." என்று சொல்லிக் கொண்டே செயற்பட்டார்கள். ஆனால் அவர்கள் பாவித்த கறுப்பு ஆடு சுவரொட்டி ஓவியம், ஒரு இனவாத கருத்துச்சித்திரமே எனப் பலரது கண்டனத்துக்கும் உள்ளானது. போதாக்குறைக்கு ஜேர்மன், ஆஸ்திரியா போன்ற நாடுகளில் உள்ள, வெளிநாட்டவர்களுக்கெதிரான கருத்தாளர்களினாலும் அப்படம் கையாளப்பட்டது.

இப்படி எழுந்த எதிர்க்குரல்களாலும், தேர்தல் பிரச்சாரகாலங்களில் என்றுமில்லாதவாறு நிகழ்ந்த வன் முறைகளாலும், வெளிநாட்டவர்கள் மனதில் தங்கள் சொல்வதற்கு மாறாகவே, கருத்துருவாக்கம் நிகழ்வதையும், அதற்கும் மேலாக சுவிஸ் மக்கள் பலரிடமும் கூட அத்தகைய எண்ணம் எழுவதையும் , இது கூட்டமைச்சுத் தேர்வின் போது பாதகமான சூழ்நிலையைத் தோற்றுவிக்கலாம் என்பதையும் அவதானித்த திரு: புளொக்கர், தேர்தலின் பின் சில வெளிநாட்டுச் சமூகங்களின் பிரதிநிதிகளை நேரில் சந்தித்து, தனது நோக்கம் பற்றி விரிவாகப்பேசினார்.

இத்தகைய நிலையில்தான், மத்திய கூட்டாட்சி அமைச்சரவைத் தெரிவின்போது, திரு. புளொக்கரின் இடத்துக்கு, அவரது கட்சியைச் சார்ந்த திருமதி. எவ்லின் விட்மரும் தெரிவாகிறார். முறையே 115, 125, என்ற வாக்குகளின் அடிப்படையில் தெரிவாகிய எவ்லின், இறுதிக் கணங்கள் வரை தனது தெரிவை ஏற்பது குறித்து யோசித்தவண்ணமே இருந்திருக்கிறார். தனது பதிலிறுப்புகான அவகாசம் கேட்டிருந்த காலப்பகுதியில், பல குறுஞ்செய்திகள் பரிமாற்றம் நிகழ்ந்ததாம். ஏற்கவும் என ஆதரவாளர்களாலும், ஏற்கவேண்டாமென மற்றவர்களாலும் கூட, சொல்லப்பட்டதாம். ஆனாலும் அவரது தெரிவும், அதற்கான அவரது சம்மதமும், இன்று பல சுவிஸ் பிரஜைகளாலும் வரவேற்கப்படுகிறது. அவரது தெரிவு குறித்து எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில், அறுபது வீதமான மக்கள் அவரது தெரிவை வரவேற்றுள்ளனர். அதேசமயம் திரு. புளொக்கரின் வெளியேற்றத்தை விரும்பாத மக்கள் வெறும் இருபத்தியாறு வீதமானோரே.ஆக, சக்தி வாய்ந்த இந்த அரசியல் தலைவரை, அரச கட்டமைப்பில் இருந்து சுவிஸ் மக்கள் வெளியேற்ற காரணமாக அமைந்தது, அவர் பேசிய வெளிநாட்டவர்ளுக்கெதிரான கருத்துக்களே என்றே எண்ணத் தோன்றுகின்றது. " தனித்துவமான சுவிஸ்" என்ற எண்ணவோட்டத்திற்கு, சுவிஸ் மக்கள் ஆதரவாக இருந்த போதும், அந்த சிந்தனையோடு, வெளிநாட்டவர்கள் குறித்து, திரு. புளொக்கர் சொன்ன கருத்துக்களில் இனவாதத் தொனி இருந்ததாகவே சுவிஸ் பிரஜைகள் பலரும் எண்ணியுள்ளார்கள். இதன் காரணமாகவே, அவரது கட்சியைச் சார்ந்த இன்னொருவரைத் தெரிவு செய்துள்ளார்கள் என்று சொல்லலாம்.இந்தத் தெரிவில் பங்குகொண்ட அரசியல்வாதிகளின் மனநிலைக்கு, நல்ல உதாரணமாகக் கூட இத்தெரிவினை நோக்கலாம். நாட்டின் நலனும், அதேசமயம் தனிமனித நலனும், கருத்திற்கொள்ளப்பட்ட தேர்வாக இது அமைந்திருக்கிறது. தெரிவின் இறுதி முடிவை உறுதி செய்த திருமதி. எவ்லின் விட்மரது தெளிவும், துணிவும், பாராட்டத்தக்கது. தனது கட்சிக்குள்ளேயே, தான் எடுக்கும் முடிவினால் எதிர்த்தன்மை ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்கள் இருந்தபோதும், மனிதாபிமான நோக்கில் அமைந்த அவரது முடிவு மெச்சத்தகுந்தது.மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் நடந்த தெரிவின் மூலம், சுவிஸில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு, தம்மீதான சுயபார்வையை அதிகரித்துக்கொள்ள மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருக்கிறது. இனவாதத் தன்மைகொண்டிருந்தாலும் கூட, திரு. புளொக்கர் அந்த வாதத்திற்காக காட்டிய ஆதாரமான காவல் துறை அறிக்கையில் காணப்படும், குற்றச்செயல்களில் அதிக வெளிநாட்டவர்கள் ஈடுபடும் புள்ளிவிபரம், "தனித்துவமான சுவிஸ்" என்ற கருத்தியலில் வாழும் அநேக சுவிஸ் பிரஜைகளுக்கு விருப்பமானதல்ல. ஆதலினால் சுவிஸில் வாழும் வெளிநாட்டவர்கள் தமது செயற்பாடுகளை, இந்நாட்டு சட்ட விதிகளுக்கமைவாகச் செயற்படுத்த, சுவிஸ் பிரஜைகளால் வழங்கப்பட்ட இறுதிச் சந்தர்பமாகவும் கொள்ளலாம்.

Saturday, December 15, 2007

சுவிஸ் அரசியலில் அதிரடிப் பெண்.

சுவிற்சர்லாந்தின் சக்திமிக்க அரசியல் தலைவராக இருந்த, தீவிர வலதுசாரித் தலைவரான திரு.கிறிஸ்தோவ் புளொக்கரை, அதே கட்சியைச் சார்ந்த திருமதி எவ்லின் விட்மர் ஸ்லும்ப், புதிய கூட்டாட்சி அமைச்சரவைக்கு தான் தெரிவு செய்யப்பட்டதை ஏற்றுக்கொண்டதன் மூலம், சுவிஸ் அரசாங்கத்திலிருந்து வெளியேற்றியுள்ளார்.

வாக்கெடுப்பில் புளொக்கர் 115 வாக்குகளையும், எவ்லின் 125 வாக்குகளையும், பெற்றிருந்த நிலையில், தனது தெரிவை ஏற்றுக்கொள்வது குறித்த இறுதி முடிவை 13.12.07 காலை 8.00 மணிக்குத் தெரிவிப்பதாகச் சொல்லியிருந்த திருமதி. எவ்லின் விட்மர், நாட்டின் முக்கிய பதவிக்குத் தன்னைத் தெரிவு செய்தமைக்கு நன்றி கூறி, தனது தெரிவினை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார். இவரது அறிவிப்பினை பாராளுமன்றினுள் உறுப்பினர்களும், மன்றின் வெளியே அதிகாலை முதல் திரண்டிருந்த ஆதரவாளர்களும் கரவொலி எழுப்பி வரவேற்றனர்.


கடந்த காலங்களில் சுவிஸ் அரசியலில் மிகச் சக்திவாய்ந்த தலைவராக விளங்கிய திரு. கிறிஸ்தோவ் புளொக்கர் " தன்னை சுவிஸ் அரசாங்கத்திலிருந்து வெளியேற்றியிருக்கலாம், ஆனால் சுவிஸ் அரசியலில் இருந்து வெளியேற்ற முடியாது " என, ஊடகவியலாளருக்குத் தெரிவித்துள்ளார்.


தெரிவு செய்யப்பட்டுள்ள திருமதி: எவ்லின் விட்மர் மூன்று பிள்ளைகளுக்குத் தாய். ஏழுபேர் கொண்ட மத்திய கூட்டாட்சி அமைச்சரவையில், சுவிஸ் அரசியலில் முதற்தடவையாக மூன்று பெண்கள் அங்கம் வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.


திருமதி. எவ்லின் விட்மரின் ஏற்புரையைக் காணொளியில் காண

Tuesday, November 27, 2007

பொற்காலம் எமதாக்கப் போனவரைப் போற்றுவோம்.

மாவீரர்களுக்கு அஞ்சலிகள்.


எங்கள் வாழ்வுக்காய், தங்கள் இன்னுயிர் ஈந்த மண்ணின் மைந்தர்களை, எங்கள் சொந்தப் புதல்வர்களை, பொற்காலம் எமதாக்கப் போனவர்களை, போற்றித் தொழுவோம்!

நிலத்துள் ஒளிரும் நிலவுகளுக்கு, விளக்கேற்றி அஞ்சலிப்போம்!
இணையத்தில் சுடரேற்ற

தமிழீழத்திலிருந்து மாவீரர் நாள் நிகழ்வுகளை புலிகளின் குரல் வானொலியூடாக நேரலையில் கேட்க

Wednesday, November 21, 2007

எனக்கு மூன்று காதலிகள்.


இளமை எனக்கு மிகவும் பிடித்தமானது. அது புதிதானது. சிந்தனை, செயல், என எல்லாவற்றிலும், ஒரு புதுவேகம் இருக்கக் கூடிய பருவம். தன்னைச் சார்ந்திருப்போரையும் கூட சற்றுத் தொற்றிக் கொள்ளும் சுறுசுறு பருவம். அதனால் எனக்கு இளமை பிடிக்கும். கருப்பு வெள்ளைச் சினிமாக்காலத்தவன் இல்லையென்றாலும், இளையவன் எனச்சொல்லும் வயதுக்குப் பிள்ளைகள் வளர்ந்துவிட்டதால், பெருசாகிப்போனவன். இளமையாய் எண்ணங்களை வைத்துக்கொள்ள விரும்பும் எனக்கு எப்போதும் இளைய நண்பர்கள் மீது சற்று விருப்பம் அதிகம். அப்படியான இளையவர்கள் மூவருடன் ஒரு மாலைப்பொழுது...புலம்பெயர் தேசத்தில் நான் பழகிய நம் இளைஞர் பலரிடத்திலும் காணப்பட்ட ஒரு கவலை, பெரியவர்கள் எப்போதும் தகமைபெற்று தலைநிமிரும் இளையவர்கள் பற்றிக் கருத்திற் கொள்ளாது, தவறிப்போகும் இளையவர்களையே முன்னுதாரணம் காட்டிப் பேசுகின்றார்களென்று. இதில் உண்மையில்லாமலும் இல்லை. இப்படியான சிந்தனைப்போக்கினால், சாதிக்க முனையும் எம்மிளைஞர்கள் பலரும் சந்திக்கும் சோதனைகளும், வேதனைகளும் நிறையவே. இவர்களுக்கும் அவைகளுண்டு....

" எனக்குத் தமிழ் நல்லாப் பேச வராது. ஆனாலும் நான் ஒரு தமிழன்தான். எம்மவர்களிடையே எனது "ரேப் " பாடல்களை பாடுவது, இலக்கியத்தரமற்றது எனும் நகைப்புப்குரியதாகிவிடும். அதனால்தான் பிறமொழிக்காறர்கள் மத்தியில் பாடுகின்றேன். " ரேப் " இசை வெறும் இசையல்ல. அது ஒருவாழ்வு. ரேப்பராக அனுபவித்து வாழாத ஒருவனால் சிறப்பான ரேப்பிசையைப் பிரசவிக்க முடியாது. என் உணர்வுகளை, அனுபவித்து இசையாகத் தருவதற்கு "ரேப்" இசைவாக இருக்கிறது. அதை நான் அனுபவித்து, சிறப்பாக இசைப்பதற்கு ஒரு ரேப்பராக வாழவிரும்புகின்றேன். இந்த விருப்பம் என் தோற்றத்தில் தரும் மாற்றங்கள், நம்மவர்கள் மத்தியில் என்னை பிழையாக அடையாளப்படுத்தலாம். அதனாலென்ன? நான் நானாகவாகவே இருக்கிறேன். ஒரு தமிழனால் ரேப்பிசையிலும் சிறந்திருக்க முடியும் என்பதை மாற்று இனங்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் எனும் வேட்கையோடே பாடுகின்றேன்..."

" சின்ன வயது முதலே நடனமும், காட்சிப்படுத்தலும், நானாகக் கற்றுக் கொண்டது. அந்நியச் சூழலில் நிறம், பொருளாதாரமுட்பட்ட பலவும் எம் முன்னேற்றத்துக்குத் தடையாக இருக்கின்றன. இவற்றோடு போட்டியிடுகின்ற எமக்குப் பெரியவர்களிடமிருந்து உதவிகள் வேண்டாம், உற்சாகமான சில வார்த்தைகள் வந்தாலே போதும். எங்களுக்குத் தெரியும், உயரங்களைத் தொடுவதற்கு வேண்டிய உழைப்பு என்னவென்று. எங்களுக்கான சுயகட்டுப்பாடுகளுடனேயே நாம் இருக்கிறோம்..."

" எல்லோரும் இசையை ரசிப்பதற்குத்தான் காதைப்பாவிப்பார்கள். ஆனால் எனது இசையைப் பிரசவிப்பது என்காதுகள்தான் என்பேன். எந்நேரமும் என்னைச் சுற்றிக் கேட்கும் சப்தங்களின் மீதான என் அவதானிப்பும், அது என்னுள் ஏற்படுத்தும் அனுபவமும், எந்தவொரு வாத்தியமும் இசைக்கத்தெரியாத என்னிடமிருந்தும் இசையைப்பிரசவிக்கிறது. இந்த அவதானிப்புக்கும், அனுபவத்திற்கும் நிறையத் தனிமை எனக்குத் தேவைப்படுகிறது. அது என்னைச் சுற்றிலுமுள்ளவர்களுக்கும் எனக்குமிடையில் ஒரு முரணைத் தோற்றுவிக்கிறதென்றும் சொல்லலாம். இவற்றையெல்லாம் மீறி, எனது ஆர்வம் என்னை வெளிப்படுத்தும்...."


ரேப்பிசை, நடனம் ஒளிப்பதிவு, இசையமைப்பு, எனும் துறைகளில், தங்கள் தடங்களை தமிழனாகவே பதிக்கும் இந்த இளம்கலைஞர்களின் எண்ணங்களுக்கும், ஆசைகளுக்கும் வானமே எல்லை. புலம்பெயர் சூழலின் நெருக்குதல்களோடு போட்டியிட்டு முன்னேறும் இவர்களும், இவர்களைப் போன்றவர்களும், எங்கள் சமூகத்தின் நாளைய நம்பிக்கைகள். அந்த நம்பிக்கைகளைச் செதுக்காவிடினும், சிதைக்காதிருப்போமா?

பி்.கு: இசை, வேலை, காதலி, ஆக எனக்கு மூன்று காதலிகள் என்னும் இந்த இசைஞனின் வாழ்வில், முதலாம் விருப்பம் விரைவில் மூன்றாமிடத்துக்குப் போகவிருக்கிறதாம். வாழ்த்துச் சொல்வோமா? வேண்டாமா? தன்னுள் எழுந்த இசையைப் புணர்ந்து, கணனிகளில் கருக்கட்டிக் அவன் காதுகளால் பிரசவித்திருக்கும் இந்த பிறந்தநாள் வாழ்த்துப் பாடலைக் கேட்டுச் சொல்லுங்கள்.

Friday, November 02, 2007

தமிழ்செல்வன் மறைவு குறித்து - சுவிஸ் வானொலி


தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியற் துறைச் செயலர் பிரிகேடியர்: சு.ப.தமிழ்ச்செல்வன் மறைவு குறித்து, சர்வதேச ஊடகங்களில் செய்திகளும், நோக்குகளும் வெளிவரத் தொடங்கியுள்ளன. சுவிஸ் இத்தாலிய மொழிக்கான அரசுசார் வானொலி Rete Uno இன்று மதியம் வழங்கிய செய்தியில் அன்னாரது மறைவு குறித்து, முக்கியத்துவம் வழங்கி வெளியிட்ட செய்தித் தொகுப்பில்:
சிறிலங்காவில் இன்று காலை இடம்பெற்ற விமானக்குண்டுவீச்சில், தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியற் பிரிவுத் தலைவர் தமிழ்செல்வன் ஏனைய ஐந்து போராளிகளுடன் கொல்லப்பட்டதாக விடுதலைப்புலிகளின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினூடாக, உலகெங்கும் வாழும் தமது மக்களுக்கு அறியத் தந்துள்ளது. இதனை சிறிலங்கா அரசும் உறுதிசெய்துள்ளது.
தமிழீழவிடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் நம்பிக்கைக்குரியவராக, சமாதானப் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டு தமிழீழ விடுதலைப்புலிகளின் கோரிக்ககைகளை மிக நிதானமாக வெளிப்படுத்தியவர் தமிழ்ச்செல்வன். கடந்த வருடம் தோல்வியில் முடிந்த ஜெனிவாப் பேச்சுவார்த்தைகளில் முக்கிய பங்கு வகித்தவர்.
சராசரி மக்களுடன் மிக நெருக்கமாகப் பழகியவர், அதன்மூலம் அவர்களது குறைகளை, தேவைகளை, பேச்சரங்குகளில் கொணர்ந்தவரென, தமிழ்மக்களினால் பாராட்டப்பட்டவர் எனச் சொல்லப்படும், இவரது மறைவு குறித்து பாதுகாப்புத் துறைசார்ந்து சிறிலங்காஜனாதிபதியின் சகோதரர் கருத்துக் கூறுகையில், " இவ்விதம் விடுதலைப்புலிகளின் தலைவர்கள் ஒவ்வொருத்தராக நிச்சயம் அழிக்கப்படுவார்கள் " எனத்தெரிவித்துள்ளார்.
சமாதான காலத்தில் சுமார் 5000 பேரளவில் கொல்லப்பட்டிருக்கும் சிறிலங்காவில் , இதன்பின்னான சமாதான நடவடிக்கைகள் கேள்விக்குரியதாகவும், நம்பிக்கையற்தாகவும் காணப்படுகிறது.
வானொலிச் செய்தியின் மூலவடிவம்:


Rete uno News
அரசியற்துறைச் செயலர் பிரிடிகேயர்: சு.ப.தமிழச் செல்வன் அவர்களுக்கும், ஏனைய போராளிகளுக்கும் எமது அஞ்சலிகள்.

Thursday, October 25, 2007

யாருக்காக ? ஆனந்தசங்கரி!

தமிழீழ விடுதலைப் போராட்டத்தினை, விசுவாசிப்பவர்கள், விவாதிப்பவர்கள், என எல்லோரும், அநுராதபுர விமானப்படைத்தாக்குதல் குறித்து அதிர்ந்து போன தினங்கள் இவை. இருபத்தியொரு உறவுகளின் தியாகத்தில் உணர்வுகள் உறைந்துபோன தருணங்களிவை.


இந்தத் தாக்குதல் குறித்தும், தாக்குதலுக்குப் பின்னும் ...

படைத்துறை எதிர்பாராத நேரத்தில் நடந்த தாக்குதலிது என்பது ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான்

- அமைச்சரும் பாதுகாப்பு விவகார, அரசாங்க பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல .

அநுராதபுர வான் படைத்தளம் மீதான தாக்குதலானது தமிழீழ விடுதலைப் புலிகளின் துல்லியமும், துணிவும் நிறைந்த செயல்

-இந்திய இராணுவத்தின் முன்னாள் ஆலோசகர் பி.இராமன்.

தாக்குதல்களை நடத்தியவர்களின் சடலங்கள் என்றாலும் அந்த சடலங்களுக்கு நாம் உரிய மரியாதை செலுத்தியிருக்க வேண்டும். சடலங்களை நிர்வாண கோலத்தில் எடுத்துச் செல்லாது மனித தன்மையுடன் எடுத்து சென்றிருக்கலாம்

- அநுராதபுரம் ஆயர் நோபர்ட்

வலைப்பதிவுகளில் புலிகளை விமர்சிக்கும் ஜனநாயகம் எனும் பதிவர் கூட இப்படி அழுதிருக்கிறார்.

புலிகள் விவகாரத்தில் முந்திரிக்கொட்டைபோன்று அறிக்கைவிடும் நாடுகளோ அல்லது ஏகாதிபத்தியத்தின் ஏககாவலர்களோ அறிக்கைவிடாமல் அடக்கிவாசிக்க,

அனுதாரபுரம் வான் படைத்தளத்தின் மீதான தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலை தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி மிக வன்மையாகக் கண்டனம் செய்கிறது

- வீ. ஆனந்தசங்கரி

எங்கள் நிலங்களில் குண்டுகள் வீசி, எத்தனையோ தமிழ்மக்களின் உயிர்களைக் காவுகொண்ட விமானப்படைகளின் தளம் தாக்குதலுக்குள்ளானதற்காக, உங்கள் கோடிக்குள் குண்டுவிழுந்ததுபோல் கண்டனக்குரல் எழுப்பியுள்ளீர்களே.

ஆனந்தசங்கரி நீங்கள் அழுவது யாருக்காக ?

Saturday, October 20, 2007

ஐரோப்பிய அரசியலில், அடிவைக்கும் தமிழிச்சி

"மனித உரிமை மீறல்கள் எங்கு நடைபெற்றாலும் அதற்கெதிராக குரல் கொடுக்க வேண்டிய கடப்பாடு நம் எல்லோருக்கும் உண்டு. அதிலும் முக்கியமாக எமது இரத்த உறவுகள் சந்திக்கும் மனித உரிமை மீறல்களுக்கெதிராக குரல் கொடுக்கவேண்டிய கட்டாயம் எனக்குண்டு.இது இயல்பானது. ஆனால் இது விளம்பரங்கள் இல்லாமல் செய்யப்படும் போது அதன் செயற்திறன்(Efficiency) மிகவும் உயர்வாக இருக்கும்" இப்படிச் சொல்கின்றார், ஏதுமற்ற ஏதிலிகளாக, சொந்த நாட்டிலிருந்து துரத்தப்பட்டு, வந்த நாட்டில் வசவுகளுக்கும், வடுக்களுக்குள்ளும், வாழ்ந்து கொண்டிருந்த போதிலும், சுவிற்சர்லாந்தின் தேசிய அரசியலுக்குள், தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் ஈழத்தின் இளைய தலைமுறைப் பெண் செல்வி: சுஜிதா வைரமுத்து.

21.102007 ல் சுவிற்சர்லாந்தின் பாராளுமன்றத்திற்கு நடைபெறும் தேர்தலில் சோசலிசக்கட்சியின் சார்பில், தேசிய பாராளுமன்ற வேட்பாளராகப் போட்டியிடும் சுஜிதா, " முரசம்" இணைய சஞ்சிகைக்கு வழங்கிய செவ்வியையும், ஏனையோரது கருத்துக்களையும் இங்கே , இங்கே , இங்கே காணலாம்.

தட்டுக்கழுவிகள் என்றும், தகமையற்ற அகதிகளென்றும், எள்ளப்படுகின்ற ஒரு சமுகத்தின் இளையதலைமுறைப் பெண்ணொருத்தியின், அந்நியதேசத்து அரசியல் பிரவேசம் அசாத்தியமானதுதான். அது சாத்தியமாகட்டும் என வாழ்த்துரைப்போம்.செய்திகள், படங்களுகாக: முரசத்துக்கு நன்றி.

Monday, October 08, 2007

கருப்பைக் காலால் உதை.

பெயரிலி ஏதோ கனக்க போபியாக்கள் பற்றி எழுதிறார் என்டதுக்காக நான் இதை எழுதுவதாக நினைக்கப்படாது.:)) சுவிஸின் இன்றைய பொழுதுகளில் க்ஸேனோபோபியா ( Xenofopia ) என வருணிக்கப்படுகின்ற சுவிஸ் உள்நாட்டு அரசியல் சர்ச்சை, குறித்த செய்திகளிவை.


சுவிற்சர்லாந்தில் என்றுமில்லாதவாறு, இவ்வார இறுதியில் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரங்களில் வன்முறைகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இது குறித்துத் கருத்துத் தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சர், " இது சுவிற்சர்லாந்தின் ஜனநாயக பாராம்பரியத்துக்கு முரணானது" எனக் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இம் முறை இவ்வளவு குழப்பங்களும் நிகழக் காரணம் என்ன? SVP எனும், வலதுசாரி மக்கள் கட்சியின் தேர்தல் பிரச்சார விளம்பரங்களும், பரப்புரைகளுமே இவ்வன்முறையின் தோற்றுவாயெனலாம். குறிப்பாக அது வெளியிட்டுள்ள சுவரொட்யும், அதே கருத்தைக்கொண்ட பிரச்சாரங்களும் பல தரப்பின் கண்டனங்களுக்கும் உள்ளாகியிருக்கிறது. அதுபோலவே பல சர்ச்சைகளும் உருவாகியுள்ளன.
சுவிஸின் இவ்வருட தேசியதினத்தின் போதே, இந்தச் சுவரொட்டிச்சித்திரம் சிறிய அட்டைகளாக வெளியிடப்பட்டது. சுவிஸின் பகுதியில் நிற்கும் மூன்று வெள்ளை ஆடுகளில் ஒன்று கருப்பு ஆடொன்றைக் காலால் உதைத்து வெளியேற்றுவது போன்று வரையப்பட்டுள்ளது. அத்தோடு "பாதுகாப்பை உருவாக்குவோம்" எனும் வாசகங்களும் இருந்தன. இதனுடைய விளக்கமாக வெளிநாட்டவர்களின் குற்றச் செயல்களில் இருந்து சுவிஸைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் சுட்டி எழுதப்பட்டுமிருந்தது. அதற்கான காரணங்களாக அல்லது ஆதாரங்களாக குறிப்பிட்டிருந்தது, சுவிஸ் காவல்துறை வெளியிட்டிருந்த, சுவிஸில் நடைபெற்ற குற்றச்செயல்கள் சம்பந்தமான அறிக்கையிலிருந்து, வெளிநாட்டவர்களின் விகிதா சாரம் . ஆகவே பாதுகாப்பான தூய சுவிஸை உருவாக்க அணிசேருமாறு அழைப்பும் விடுக்கப்பட்டது.
இது வெளியிடப்பட்டபோதே இலேசாக எதிர்ப்புக்களும் கிளம்பத் தொடங்கின. இப்படியாக ஆரம்பமாகிய இந்தப்பிரச்சாரம், அக்கட்சியின் தேர்தல்பிரச்சாரமாக மாறியபோது மேலும் எதிர்ப்புக்கள் அதிகரிக்கத் தொடங்கின. அதன் நீட்சியாக, தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் கலவரமும் நிகழ்ந்துள்ளன.

தேர்தல் பிரச்சாரத்திற்கா ஒரு கட்சியினால் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளில் வசனங்களை மாற்றி எழுதுவது, கிழிப்பது, போன்றவற்றை, முதல்முறையாக இந்த ஆண்டிலேதான் சுவிஸில் நான் காண்கின்றேன். இந்தளவிற்கு நிலமை செல்வதற்கு அந்தக் கட்சின் பரப்புரைகளும் காரணம் என்றுதான் சொல்ல வேண்டும். இது குறித்து எழுப்பப்படும் ஆட்சேபனைகளுக்கு முழு வெளிநாட்டவர்களையும் நாம் அப்பிடிச் சொல்லவில்லை, குற்றச் செயல்களைச் செய்பவர்களை மட்டுமே வெளியேற்றச் சொல்கின்றோம் என்கிறார்கள்.


இப்படிச் சொல்கின்ற அக்கட்சியின் இணையத்தளத்தில், இணைய விளையாட்டுக்களிலும் இதேவிதயத்தைப் புகுத்தியுள்ளார்கள். இதன் மூலம் சிறுவர்கள் மத்தியிலும், வெளிநாட்டவர்களுக்கெதிரான உளப்பாங்கை உருவாக்க முயல்வதாக. ஐ.நா. சபையின் மனிதஉரிமைகளமைப்பு குற்றம் ட்டியுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன.
வெளிநாட்டவர்மேல் வெறுப்பைக் காட்டும், க்ஸேனோபோபியா ( Xenofopia ) கருத்துருவாக்கம் என மாற்றுக்கருத்தாளர்களால் விமர்சிக்கப்படும் இப்பிரச்சாரத்தை, "தூய சுவிற்சர்லாந்திற்கான பாதுகாப்பை உருவாக்குவோம்" என முன்வைக்கின்றனர், SVP/UDC கட்சியினர். இவர்களது வேண்டுகோளுக்கு சுவிஸ் மக்கள் என்ன பதிலளிக்கப் போகின்றார்கள் என்பது அடுத்த வாரம் தெரிந்துவிடும்.
படங்கள் நன்றி: K Image

Wednesday, October 03, 2007

மற்றுமோர் தமிழ் நிமிர்வு.

போர்ச்சூழலினால் பாடசாலைகள் சரியாக இயங்காத நிலை, ஆசிரியர்கள் மாணவர்களின் உயிருக்கான அச்சுறுத்தல்கள் அதிகரித்த நிலை, பெற்றெடுத்த தந்தை காணாமற்போன நிலை, என சூழலின் பாதிப்புக்கள் அதிகமாகவே இருந்த போதும், நடைபெற்று முடிந்த ஆண்டு ஐந்து, புலமைப்பரிசுப் பரீட்சையில் சிறப்பாகச் செயற்பட்டு அகில இலங்கை ரீதியாக இரண்டாம் இடத்தையும் யாழ் மாவட்டத்தில் முதலாம் இடத்தையும் பெற்று தமிழ் மாணவர்களின் கல்வித்தரத்தினை மீண்டும் ஒருதடவை நிரூபித்திருக்கும் சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் செல்வன் மணிவண்ணன் மதுஸனுக்கு, மனம் நிறைந்த பாராட்டுக்கள்.


தமிழர்களுக்கெதிரான போரில், தமிழ் மக்களின் கல்வித்தரத்தை அழித்தொழிப்பதையும், முக்கிய இலக்காகக்கொண்டு செயற்பட்டுவரும், சிறிலங்கா அரசினதும், அதனது நேசசக்திகளினதும், நினைப்பில் மண்தூவி, நெஞ்சுநிமிர்த்திய தலைநிமிர்வு. நிச்சயம் இது மற்றுமோர் தமிழ்நிமிர்வு.

இது குறித்த முழுமையான செய்திக்கு இங்கேசெல்லுங்கள்.

Monday, September 10, 2007

புதிய உலகசாதனை முயற்சியில் சாரணர்.


சென்ற 08.09.07 சனிக்கிழமை சுவிற்சர்லாந்தின் தென்மாநிலமாகிய ரெசின் மாநிலத்தில், Mendrisio பிரிவு சாரணர்களால், சாரணர் அமைப்பின் 100 வருட நிறைவினை முன்னிட்டு, சாரணர்களின் கழுத்துப்பட்டிகளை இணைத்து உருவாக்கிய, உலகின் நீளமான கழுத்துப்பட்டித் தொடர் உருவாக்கும் சாதனை முயற்சியில், பல நாடுகளிலிருந்தும் சாரணர்கள் கழுத்துப்பட்டிகளை அனுப்பி வைத்திருந்தனர். சுவிற்சர்லாந்தின் பல மாநிலங்களிலும் இருந்து வந்த சாரணர்களும், தங்கள் பகுதிகளின் சாரணர்கள் சார்பில், கழுத்துப்பட்டிகளை இணைத்துத் தொடுத்தனர்.
பல வண்ணங்களில் அமைந்த இக்கழுத்துப் பட்டிகளை, நடுவர்களின் கண்காணிப்பில், சாரணர்கள் மகிழ்வோடு நீளமாகத்தொடுத்தனர். காலைமுதல் மாலை வரை நடந்த இச்சாதனை முயற்றியில், யப்பான், சீனா போன்ற ஆசிய நாடுகளில் இருந்து வந்த கழுத்துப்பட்டிகளில் நடுவில், " வெல்க தமிழ்" எனும் தலைப்புடன் தமிழீழசாரணர் சார்பிலும் கழுத்துப்பட்டி இணைக்கப்பட்டிருந்ததைக் காணக்கூடியதாகவிருந்தது.


காலை 10.00 மணிமுதல் மாலை 05.12 மணிவரை மேற்கொள்ளப்பட்ட இச்சாதனை முயற்சியில், 733 கழுத்துப்பட்டிகளை இணைத்து, 760 மீற்றர் நீளமான கழுத்துப்பட்டித் தொடரினை உருவாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இம்முயற்சியில் பிற்பகல் 2.26 மணியளவில், 500 கழுத்துபட்டிகளை இணைத்திருந்த போதே உலகசாதனை வரையறைக்குள் வந்துவிட்டபோதும், பார்வையாளர்கள் கொடுத்த ஆதரவின் காரணமாக மேலதிகமாக 233 கழுத்துப்பட்டிகள் சேர்க்கப்பட்டு புதிய சாதனை தோற்றுவிக்கப்பட்டது.

இந்த புதிய உலகசாதனை முயற்சிகள் பற்றிய தகவல்கள், தற்போது கின்னஸ் உலக சாதனை அமைப்பினர் கவனத்திற்கு அனுப்பி வைக்கபட்டுள்ளது.

Wednesday, September 05, 2007

நீங்கள் அதிகம் பேசுகின்றீர்கள்.


சற்று மெளனம் காத்தபின், மறுபடியும் வரும்போது, அதிகம் பேசியிருப்பது தெரிந்தது. உறவொன்றின் உயிரிழப்பு, உற்றவனின் உடல் இயல்மறுப்பு, என்பன தந்த அதிர்வுகளால், எழுதாது, மோனத்திருந்த போதும், அவ்வப்போது உங்கள் குரல்கள் அதிர்ந்தது அறிவேன். இவையெல்லாம் சிறு பிள்ளை விளையாட்டோ என் எண்ணியவாறு, அறிந்தவனுடன் உரையடிக்கொண்டிருந்த போது, அவனின் குழந்தை நறுக்கெனச் சொன்னான், " நீங்கள் அதிகம் பேசுகின்றீர்கள் " என்று. கணத்தில் கலகலத்து, பின் மெளனமானோம்.


எங்கள் காலப் பெரியவர்களைப் பார்த்து, என்றோ நாம் சொன்னவார்த்தைகள்தான் "நீங்கள் அதிகம் பேசுகின்றீர்கள்". இன்று எம்மைப்பார்த்து அதே வார்த்தைகள் வீசப்படுகின்றன. யோசித்துப்பார்க்கும் போது, உண்மையொன்று புரிந்தது. எம் முன்னவர்களிடம் சொன்னவார்த்தைகளில் பொதிந்திருந்த பொருள், அதிகம் பேசுகின்றீர்கள் ஆனால் ஆக்குவது அதிகமில்லை. அதே தவறு, அதே ஆக்குதல், எங்களிடமும் போதுமானதாய் இருக்கவில்லை. ஒருவேளை இருந்திருந்தால், குழந்தை அப்பிடிக் கேட்கும் வாய்பு வந்திராதோ?


"யூ ஆர் டோக்கிங் டூ மச்.."

நித்திலா!
தலைப்பிடவும், தலைப்புள்ளடங்கவும் வகைசெய்தாய். நன்றி கண்ணா!... என்னடா செய்வது, கதைகளில் உலகளந்த பெம்மான்கள் நாங்கள். நீங்களாவது நிஜங்களில் அளந்து வாருங்கள். உலகை மட்டுமல்ல, உள்ளன அனைத்தையும்...
படம்: ரமணீதரன். நன்றி!

Tuesday, July 17, 2007

தலைமுறை மறக்கும் தமிழ் விளையாட்டுக்கள்.


உங்களுக்கு, கிட்டிப்புள்ளு (கிட்டிப்பொல்லு, கில்லி) விளையாட்டு, விளையாடும் முறை ஞாபகமிருக்கிறதா? என சென்றவாரம் இணையத்தூதில் உரையாடியபோது நண்பரொருவர்,கேட்டார். என்ன திடீரென கிட்டிப்புள் விளையாட்டைப் பற்றி அக்கறையாக் கேட்கிறியள் என்ற கேள்வியோடு, உரையாடல் தொடர்ந்த போது, விளையாட்டு முறைகள் சற்று ஞாபகமற்றுப் போயிருந்தது எனக்கும் உறைத்தது.

ஒருகாலத்தில், நாளும் பொழுதும் இந்த விளையாட்டுக்களோடு திரிந்த நமக்கே, வாழ்நிலைச்சூழலின் சறுக்கலில் அவை நினைவற்றுப்போயுள்ளன. அப்படியாயின், போரும் வாழ்வுமாகிப்போன, எங்கள் புலத்திலோ, அந்நியச்சூழலே நம் வாழ்தளம் என்றாகிப்போன புலம்பெயர்சூழலிலோ, வாழுகின்ற நம் இளைய தலைமுறைக்கு, இந்த விளையாட்டுக்கள் பற்றி ஏதேனும் தெரிய முடியுமா?

இப்படியொரு கேள்வி இப்புலம்பெயர் சூழலில் எழுந்தபோதுதான், தொடக்கக் கேள்வி என்னையும் நோக்கி வந்தது. எதுவுமற்ற ஏதிலிகளாக, வேதனைகளைச்சுமந்த வண்ணம், இருப்பினை எண்ணிக் கொண்டு, புலம்பெயர்ந்த வேளையிலோ, பின் வந்த வெறுமை மிகு வாழ்க்கைக் காலங்களிலோ விளையாட்டுக்கள் எங்கள் மனதை நிறைத்திருக்கவில்லை. அதனால் அவை மறக்கப்படுமாறுமாயிற்று. வறண்டுபோன எங்கள் வாழ்வியலில், புது வசந்தங்களென் எங்கள் பிள்ளைகள் வளர்ந்தபோது, அவர்கள் ஓடியாடி விளையாடும் தருணங்கள் வந்தபோது, எங்கள் மனங்களிலும், இளமைக்கால ஞாபகங்கள் எழுந்து உட்கார்ந்தன. வீதிகளிலும், விளையாட்டுத்திடல்களிலும், நாங்கள் ஆடிய விளையாட்டுக்கள் ஞாபகத்திற்கு வந்தன. கூடவே, இவைபற்றியும் எங்கள் செல்வங்களுக்கு சொல்லிக்கொடுக்கவோ அல்லது சொல்லி வைக்கவோ வேண்டுமல்லோ என்ற எண்ணங்கள் இப்போ எல்லாத் திக்குகளிலும், எழும்பத் தொடங்கியுள்ளன.

இப்படியான இன்றைய காலச் சூழலில், சுவிற்சர்லாந்து தமிழ்மன்றத்தின் விளையாட்டுத்துறை, தனது பத்தாம் ஆண்டு நிறைவை மலர்வெளியிட்டு நினைவுப்படுத்த விரும்பியபோது, மேற்சொன்ன எண்ணங்கள் வீச்சாக எழ,வாழ்த்துச் செய்திகளோடல்லாது, வளமான தமிழர் நம் விளையாட்டுக்கள் குறித்த சங்கதிகள் பலவற்றுடன், வீச்சு என்ற விளையாட்டுச்சிறப்பிதழ் மலர்ந்துள்ளது. அருமையான வடிவமைப்பில், அழகான படங்களுடன், அருமையான கட்டுரைகளும் அடங்கிய வீச்சு, உண்மையில் நம் விளையாட்டுத்துறைசார் வெளியீடுகளில் பெருவீச்சாகவே உள்ளது.

விளையாட்டிலிருந்து வினைதீர்க்கும் மருத்துவம்வரை ஒரு அஞ்சலோட்டம் எனும், ஏ.ஜி. யோகராஜாவின் நீளமான கட்டுரை, வெறுமனே ஒரு கட்டுரை எனச் சொல்லிவிட முடியாது. எங்கள் சமூகத்தின் வாழ்வியல் கூறொன்றினை விரிவாகப் பார்க்கக் கூடிய புத்தகமொன்றின் முதல்வாசிப்பு எனச் சொல்லத்தக்கது. புலம்பெயர் சூழலில் தொடங்கி, ஆன்மீகம்வரை அஞ்சலோட்மெனச் செல்லும் கட்டுரையில், எத்தனை எத்தனை எண்ணங்கள், சான்றுகள், நோக்குகள்.

யாழ்ப்பாணத்திலிருந்து, பொன். சுந்தரராஜன் எழுதியுள்ள, தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்கள் ஒரு ஆய்வுக்கான அறிமுகம் எனும் கட்டுரை, எங்கள் பாரம்பரிய விளையாட்டுக் பலவற்றையும், சுருக்கக் குறிப்பில் அறிமுகம் செய்து வைக்கிறது. கிளித்தட்டு,கிட்டிப் புள் அடித்தல், பட்டம் விடுதல், படகோட்டல், மாட்டுவண்டில் சவாரி,போர்த்தேங்காய் அடித்தல், காளை அடக்குதல், பேய்பந்து அடித்தல், காயா, பழமா, சடுகுடு விளையாட்டு, புலியும் ஆடும், நொண்டி அடித்தல் அல்லது கெந்துதல், பகலாட்ட தாகம், என்உலக்கை குத்து, பச்சைக்குதிரை, அம்மானை, கீச்சுமாச்சுத் தம்பலம், தட்டாங்கல் என கட்டுரையில் பல விளையாட்டுகள் வந்து போகின்றன. இவை மட்டுமல்லாது, சுவிற்சர்லாந்தில் விளையாடப்படும் கோடைகால, குளிர்கால வினளயாட்டுக்கள் என்பன பற்றிய மதுரா குணசிங்கத்தின், சுவிஸ் சாரல்களில் எனும் கட்டுரையும், வேறுசில கட்டுரைகளும், கவிதைகளும், உள்ளடக்கி வீச்சு வந்திருக்கிறது.

புலம்பெயர் சூழலில் இத்தகைய முயற்சிகள், அவசியமானது ஆரோக்கியமானது. ஆனால் இத்தகைய முயற்சிகளின் வெற்றியும், உந்துதலும் பெற வேண்டுமாயின், நாமும், நமது இளைய தலைமுறையும், இவற்றை வாசிக்கவும், சுவாசிக்கவும் வேண்டும். அதுவே இத்தகைய பணிகளில் ஈடுபடுவோரை உற்சாகப்படுத்தும், உயர்வுக்கும் கொண்டு செல்லும். பயன்பெறவும் தரவும் விரும்புவோர், சுவிஸ், லுசேர்ண் தமிழமன்றத்துடன் தொடர்பு கொள்ளலாம் .


படங்களுக்கான நன்றிகள்: சுவிஸ் முரசம், சந்திரவதனா செல்வக்குமாரன்.

Thursday, June 14, 2007

வெல்க தமிழ்

படம்: நன்றி "புதினம்"

வெல்க தமிழ் பேரணிநிகழ்வும் சில அவதானிப்புக்களும்.

11.06.2007 திங்கள் கிழமை, சுவிற்சர்லாந்து ஜெனிவாவில் ஐ.நா சபை நோக்கி, புலம்பெயர்தமிழர்களால் "வெல்க தமிழ்" எனும் அடையாளத்தோடு, நடாத்தப்பட்ட பேரணி, அரங்க நிகழ்வுகள் குறித்த, நேரலை ஒலிபரப்பு நிகழ்ச்சியை ஐரோப்பியத் தமிழ்வானொலி, ஆவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், ஆகியவற்றுக்காக தொகுத்து வழங்கச் சென்றிருந்தேன். என் அவதானிப்பில் சில..

அன்று முழுவதும், சுவிற்சர்லாந்தின் எல்லாப்பகுதிகளிலும் அடைமழைபெய்து கொண்டிருந்த போதும் நன்பகல் முன்பதாகவே பலர், பேரணி ஆரம்பமாகிய மைதானத்தில் குவியத் தொடங்கினார்கள்.

நமது குடும்ப உறவுகள் ஐம்பது பேருடன் ஒரு வைபவத்தை நிகழ்த்துவதாயின் கூட நாம் படும் சிரமமே சொல்லி மாளாது. பல நாடுகளிலிருந்தும் வரும் முகந்தெரியா உறவுகளை, வரவேற்று உணவளித்து, நிகழ்வில் பங்கேற்கவைத்து, மீண்டும் வழியனுப்பி வைப்பது என்பது இலேசான காரியமல்ல. ஆனால் அதை இம்மியும் பிசகாமல் செய்த, அர்ப்பணிப்புமிக்க தொண்டு பணியாளர்களின் பணியும், அதை கட்டமைத்து வழிநடத்திய சுவிஸ் பணியகத்தின் திறமையும் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியது.

ஏதிலிகளாக இந்நாட்டில் வாழ்க்கையை ஆரம்பித்த எம்மவரை, சுயமற்ற சிலர் எள்ளி நகையாடினார்கள், இன்று சுயதொழில் முனைவர்களாக உயர்ந்துள்ள நம்மவர் பலர், நிகழ்ச்சிக்கு பல அனுசரனைகளை வழங்கியிருந்தது பெருமையாகவிருந்தது.

பிற்பகல் 2.00 மணிக்கு ஜெனிவா தொடரூந்துநிலையத்திற்கு அண்மையிலுள்ள பூங்காவில் ஆரம்பமாகிய பேரணி சுமார் 3.00 அளவில் ஐ.நா சபையை நெருங்கிக்கொண்டிருந்தது. அந்த வேளையிலும், பேரணி ஆரம்பமாகிய இடத்தில் பேரணியில் மக்கள் இணைந்து கொண்டிருந்தார்களாம்.

எங்கள் எண்ணங்களை, துன்பங்களை, உலகின் கண்ணுக்கு ஒப்புவிக்க ஒருகாலத்தில் ஊடகம் எதுவுமில்லாதிருந்த நிலைமாறி, உலகம் எங்கெனும், ஒலி,ஒளிஅலைகளில் உணர்வுகளைக் கொண்டு செல்ல எங்கள் ஊடகங்கள் திரண்டிருந்தன. அனைத்துலக தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், புலிகளின் குரல், ஐரோப்பியத்தமிழ் வானொலி, அவுஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், ஆகியவை ஒலிஅலை வழியாகவும், தரிசனம், ரீ.வி.ஐ ஆகிய தொலைக்காட்சிகள் ஒளி அலை வழியாகவும், உலகம் நிகழ்ச்சிகளைக் கருத்தாகவும், காட்சியாகவும் வெளிப்படுத்தின. இம்முறை இணைய ஊடகம் சார்ந்தும் செய்தியாளர்கள் நிறைந்திருந்தனர்.

பேரணியின் முன்னணியில் திரு. பழ.நெடுமாறன்ஐயா அவர்கள் மாறாத அதே மென்னகையோடு, ஐ.நாசபை வரை, கையில் தேசியத்தலைவரின் படந்தாங்கி நடந்தே வந்தார். ஐயா அவர்கள் உடல் நலம்குன்றியிருந்தபோது, புலத்தில் அவரது நலம் வேண்டி பிரார்த்தித்த ஒவ்வொரு தமிழனும், அகமகிழ்ந்திருப்பான். அதுபோன்றே ஐயா அவர்களும், ஈழத்தமிழருக்காய் குரல்கொடுத்ததற்காக, இரண்டாண்டுகள் சிறைப்பட்ட துயரம், மறந்திருப்பார். அரங்க உரையில் அவரே சொன்னார்.

அரங்க நிகழ்வில் பல வெளிநாட்டவர்கள் உரையாற்றியது, எங்கள் விடுதலைப்போராட்ட நியாயத்தினை சாட்சிப்படுத்துவதாக இருந்தது.

தமிழகத்தில் இருந்து வருகைதந்திருந்த பிரபல ஊடகவியலாளர் அப்துல் ஜப்பார், தன் உரையில் பேரணியின் ஒழுங்கமைப்பை வியந்தார். சுவைபட மக்களிடம் செய்திகள் சொன்னார்.

சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவர் சந்திரிக்கா குமாரணதுங்காவின் உறவினர், கலாநிதி, பிறையன் செனவிரட்னாவின் உரையில், சிறிலங்காவின் அரசியல் யதார்த்தம் தெரிந்தது. உலகத்தமிழர்களின் உறுதி எவராலும் கலைக்கப்படா முடியாது என்பதை தெளிவாகச் சொன்னார்.

நீண்ட தூரங்களிலிருந்து, ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவிலிருந்து பிரயாணம் மேற்கொண்டு வந்த களைப்போ, தூறலாகத் தொடங்கிய மழை உரக்கப் பெய்யத் தொடங்கியபோதோ, உறுதியாக நின்ற மக்களின் மனத்திடம் மகத்தானது. அந்த மகிமைதானே, தேசிய விடுதலைப்போராட்டத்தை இன்றளவும் முன்னெடுத்துச் செல்கிறது.Wednesday, June 06, 2007

தொண்டுப் பணியாளர்களும், தொலைந்து போகும்..


மனிதம் மரித்த பூமியில் மடிந்துபோன மற்றுமிரு தொண்டர்களுக்கு அஞ்சலித்து.


பணி என்றால், அதற்கான ஒப்பந்த வரைவு ஒன்றிருக்கும். அதற்குட்பட்டதான செயலிருக்கும். ஆனால் தொண்டு என்பது முற்றுமுழுதான சேவைக்குட்பட்டது. தொண்டுப்பணியாளர்களுக்கு சில உதவிகள் கிடைக்கப்பெறுவதாயினும், அவர்கள் சேவை, வழங்கப்படும் உதவிகளால் மட்டுறுத்திவிட முடியாததது. மற்றவர்களது மனத்திடம் கலைந்துபோன ஒரு சூழலில், திடமான மனத்துடனும், திறந்த மனப்பாங்கினுடனும் செயலாற்றுபவர்கள் சேவையாளர்கள்.

தொற்று நோய்சூழலிலும், தொடரும் யுத்தப்பிரதேசங்களிலும், இயற்கை அழிவுகளின்போதும், இந்தப் பணியாளர்களின் பணிநேரமென்பது காலவரையற்றது. சுருங்கக் கருத்துக் கூறமுடியாதது. அப்படியான ஒரு அர்ப்பணிப்புமிக்க பணியாளர்களது பணி, ஒரு போராளியின் பணிக்கோ, இராணுவவீரனின் பணிக்கோ, சற்றும் குறைவில்லாதது.


அத்தகைய அர்ப்பணிப்பு மிக்கப் பணியாளர்களைப் பலிகொள்ளும் பயங்கரம் தொடருகின்ற நாடாக சிறிலங்கா முன்னேறுகிறது. போராளிகள், பொதுமக்கள், ஊடகவியலாளர், மதகுருமார்கள், எனத் தொடர்ந்த கொலைப்பயங்கரம், தொண்டுப்பணியாளர்கள் வரை தொடர்ந்து வந்திருக்கிறது. நினைக்கவே கேவலமாக இருக்கக் கூடிய இந்த இழிசெயலில் இதுவரை மூதூரில் பிரான்ஞ் தொண்டுநிறுவனப் பணியாளர்கள், புனர்வாழ்வுக்கழகப் பணியாளர்கள், செஞ்சிலுவை சங்கப்பணியாளர்களென தொடர்ந்து பலியாகியுள்ளார்கள்.


ஏறக்குறைய இந்தப்படுகொலைகளுக்கான சூத்திரதாரிகள் யாரென தெரிந்திருக்கும் போதும், தெரியாதமாதிரி பாசாங்கு செய்யும் அரசு. அதற்குப் பச்சாதாபம் காட்டிக் கரங்கோர்க்கும் பார்வையாள பாத்திரம் வகிக்கும் பல்வேறுநாடுகள். பார்த்துக்கொண்டிருக்கும் நாங்கள். யாருக்கும் வலியில்லை.


யுத்தத்தின் பல்லிடுக்குகளில், இடுக்கிக்கொண்டதில் இடுப்பொடிந்து போன தாயொருத்தி, தன்னைத் தூக்கிச்சுமந்த அவனோ அவளோ அழிக்கப்பட்டசேதி கேட்டு அரண்டுபோவாள். அவளுக்கு வலிக்கும். தூக்கிவளர்த்த சொந்தச்சகோதரியும், பெற்றுமகிழ்ந்த அன்னையும், இந்தத்துன்பச் செய்தியில் துவண்டுபோவார்கள். அவர்களின் இழப்பில் வலிபடுபவர்களும், வதைபடுபவர்களும், இவர்களே. இனி..


மனிதநாகரித்தை மரிக்கச்செய்து, கிடப்பில் போட்ட தலைவர்கள், இரத்தம் தோய்ந்த கைகளோடு, எழுந்து நின்று கைகுலுக்கிக்கொள்வார்கள், கரங்கூப்பிக்கொள்வார்கள், அநியாயப்படுகொலையென அறிக்கைவிடுவார்கள். அஞ்சலித்துத் துக்கிப்பார்கள், துதிசொல்வார்கள். இறந்துபோன உயிர்களுக்கு இழப்பீட்டுத்தொகையில் விலைபேசுவார்கள். மனிதநாகரீகத்தை மறைத்திட்ட பேர்வழிகளை, விசாரணைக்குழுவைத்து விரட்டிப்பிடிப்போமென்பார்கள். விரைவில் மறந்து போவார்கள். மறந்தும், முக ஆடியில் தம் முகநாடி பாக்கமாட்டார்கள்..
Thursday, May 31, 2007

வெட்கம் கெட்டவர்கள்

1981ம் ஆண்டு மே மாதம் 31ம் நாள் சிறிலங்கா அரசின் சூழ்ச்சியில் எரிந்து சாம்பலாகிப் போன யாழ்ப்பாண நூலகம் பற்றி, சோமியின் காற்றோடு வலைப்பதிவில் அப்பால் தமிழ் இனையத்தளத்துக்காக செளம்யன் எழுதிய கட்டுரை, பல உண்மைகளையும், செய்திகளையும் பேசுகிறது. அதிலே கல்வியறிவு மிக்க ஈழத்தமிழ் சமூகம் மீது மறைமுகமாக மேற்கொள்ளபட்ட அறிவியல் அழிப்பு என்ற செய்தி முக்கியமாகச் சுட்டப்படிருக்கிறது.

தமிழ்மக்கள் மீது சிங்களப்பேரினவாதம், இனவாத யுத்தத்தை தொடர்ந்து மேற்கொண்டு வரும் வழிகளை உற்று நோக்கிக் கேள்விக்குட்படுத்தினால், ஈழத்தமிழ்சமூகத்தின் அறிவியல் மீது, உள்நாட்டு யுத்தத்தின் பெயரால் திட்டமிட்டு மேற்கொள்ளும், அழிப்பு நடவடிக்கை தெள்ளனெத் தெரியும்.

வடஇலங்கையில், யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டது வெளிப்படையாகத் தெரிந்த போதும், பல்வேறு கிராமங்களிலும் இருக்கும் சனசமுக நிலையங்கள் பல, பல் வேறு சந்தர்ப்பங்களிலும் இராணுவ நடவடிக்கைகளின்போது பாதிப்புக்குள்ளானது. இவற்றில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியதொன்றும், ஞாபகத்திலிருப்பதுமானது, வல்வெட்டித்துறையில் உள்ள ஒரு சனசமுகநிலையக் கட்டிடத்திற்குள் வைத்து, இராணுவச்சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்கள் இருபதுக்கும் மேற்பட்டோர் சுட்டுக் கொல்லப்பட்டது. அந்தகட்டிடத்தின் சூழலிலே சுற்றி வந்தவர்களின் குருதி, அந்தக் கட்டித்தின் சுவர்களிலும், படிக்கும் மேசைகளிலும், கொட்டிக்கிடந்தது.

எத்தனை பாடசாலைகள் மீது தாக்குதல் செய்திருக்கின்றார்கள். எத்தனை கல்விக்கூடங்களை இராணுவமுகாம்களாக மாற்றியிருக்கின்றார்கள். நாகர் கோவிலில் பாடசாலை மீதும், பாடசாலை மாணவர்கள் மீதும், நடாத்தப்பட்ட விமானக்குண்டுவீச்சு, செஞ்சோலையில் பள்ளிமாணவர்கள் மீது நடாத்தப்பட்ட விமானத்தாக்குதல், என்பவையெல்லாம் சொல்லுகின்ற செய்தி என்ன? இவற்றின் பின்னே மறைந்திருக்கின்ற நோக்கு, அறிவியல் அழிப்பென்பதன்றி வேறெதுவாக இருக்க முடியும். ஏன் ஈழவிடுதலைப் போராட்டத்தின் முகிழ்வே, தமிழ் இளைஞர்களின் அறிவியல் தரப்டுத்தலில் இருந்துதானே ஆரம்பமாகியது.

இப்படித் திட்டமிட்ட வகையில், அறிவியல் படுகொலை செய்து வரும் அரசும், அது சார்ந்த தலைவர்களும், உலகப்பரப்பில் தம்மை நாகரீக மனிதர்களாகவும், தமது அரசினைத் தார்மீக அரசாகவும் பறைசாற்றிக்கொள்வதையும், இதற்கு அகத்திலும் புறத்திலும், வக்காலத்து வாங்குபவர்களையும், வளங்கள் வழங்குபவர்களையும், என்னவென்று சொல்வது? வெட்கம் கெட்டவர்கள்.

Tuesday, May 15, 2007

Made in Switzerland.

அல்ப்ஸ் மலையின் சாரல்களில் - 2

இந்தத் தொடரில் , பல்வேறு தலைப்புக்களலிலும் இங்குள்ள வாழ்வியல் தொடர்பான பல்வேறு கூறுகளையும் பார்க்கலாம் என எண்ணிருப்பதால், அத்தியாயங்களுக்கான தலைப்பை பிரதான தலைப்பாகவும், தொடரின் பகுதிவரிசையை உபதலைப்பாகவும், சுவிற்சர்லாந்து எனும் வகைப்பிரிவுக்குள்ளாகவும், இத்தொடரினை எழுதுகின்றேன். வாசிப்பவர்கள் குழப்பமற்று வாசிப்பதற்கான சிறு வழிகாட்டுதலிது.


ஐரோப்பாவிலும் சரி, அனைத்துலகிலும் சரி, சந்தைப்படுத்தலில், Made in Switzerland, Swiss Quality, என்பவற்றுக்கான தரமும், விலையும், தனித்துவமானது. அவை குறித்து விபரமாக, பின்னர் பார்ப்போம். இந்தப் பகுதியில், தனது நாட்டுக்கான பிரசைகளை எவ்விதம் திட்டமிட்டு உருவாக்கிறது என்பதை பார்க்கவிருக்கிறோம். இவைகளில் பல நடைமுறைகள், ஐரோப்பிய, ஸ்கன்டிநேவிய நாடுகளில் நடைமுறையில் இருப்பவைதான். இந்நாடுகளில் வாழ்பவர்களுக்கு இவை புதிதாகவோ, அன்றிப் புதினமாகவோ இல்லாதிருக்கலாம். ஆனால் ஏனைய பலபகுதிகளில் வாழ்பவர்கள் தெரிந்து கொள்வதற்காகவும், சுவாரசியத்துக்காகவும் சற்று விரிவாகக் குறிப்பிடுகின்றேன்....

காரில் வெளியே சென்றுகொண்டிருந்தோம். ஒரு பெரிய சைகைவிளக்குச் சந்தி வந்தது. எங்கள் சாலையில் சிகப்பு வண்ணச் சைகைவிளக்கு. அதனால் வாகனங்கள் வரிசையாக நின்றன. பின் ஆசனத்திலிருந்த என் மகள், காரின் இயந்திரத்தை நிறுத்துமாறு அடம்பிடித்தழுதாள். மனைவிக்கு என்ன காரணம் எனப் புரியவில்லை. நான் புரிந்து , உடனடியாக இயந்திரத்தை நிறுத்திவிட்டேன். அதன்பிறகு காரணத்தை மனைவிக்குச் சொன்னேன். அவரும் அதுவரை அதனைக் கவனினக்கவில்லை. அது ஒரு பெரிய சைகைவிளக்குச் சந்தி என்பதால், சைகைவிளக்கு அணைந்து எரிய, கூடிய நேரம் தேவை. அந்த நேரத்தில் அங்கே நிற்கும் வாகனங்களின் இயந்திரங்கள் இயங்கிக் கொண்டிருக்குமாயின், அவற்றிலிருந்து வரும் புகையினால், சுற்றுச்சூழல் மாசுபடும் என்பதற்காக, அப்படியான பெருஞ்சந்திகளில், இயந்திரத்தை நிறுத்தி வைக்கும்படி அறிவுறுத்தல் பலகை வைக்கப்பட்டிருக்கும். அந்த அறிவிப்புப் பலகை கண்டுகொண்டதனால்தான் அவள், இயந்திரத்தை நிறுத்துமாறு அடம்பிடித்தாள். இத்தனைக்கும் அப்போது அவளுக்கு வயது ஆறு. பாலர் வகுப்புக்குச் செல்லத் தொடங்கியிருந்தாள்.பாலர்வகுப்புக்களிலேயே, சிறிது சிறிதாக நடைமுறை வாழ்வியலைச் சொல்லிக் கொடுக்கத் தொடங்கி விடுகின்றார்கள். பல்துலக்குவதிலிருந்து, உணவு உட்கொள்ளும் முறைமை, அதற்கான ஆயத்தம் செய்தல்,(மேசைஒழுங்கு செய்தல். கரண்டி எந்தப்பக்கம், கத்தி எந்தப்பக்கம், சாப்பாட்டுத்தட்டு எங்கே என்பனபோன்றவை) வீதியால் நடப்பது, வீதியை கடப்பது, என்றுபல விடயங்கள். இதைநேரில் பார்க்காதவர்களுக்கு சற்றுமிகுதியாகச் சொல்வது போல் கூடத்தெரியலாம். ஆனால் இதுதான் உண்மை.

இந்தியாவில் ஒருமுறை காரில் பயனம் செய்துகொண்டிருந்த போது, வெற்றுபிஸ்கட்பெட்டி, முடிந்த தண்ணீர்போத்தல் என்பவற்றை ஒரு பிளாஸ்டிக் பையில் நான் சேகரிப்பதைப்பார்த்த வாகனச்சாரதி, சிரித்தபடி " தூக்கி வெளியில போடுங்க சார்.." என்று சொன்னது மட்டுமல்லாமல், ஓடிக்கொண்டிருந்த வாகனத்திற்கு வெளியே சாலையில், அக்கழிவுப்பொருட்களை எறிந்துவிட்டுத் திருப்தியானார். ஆனால் இதுவென்னவோ, இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் மட்டும் என்று சொல்லமாட்டேன். ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் கூட இன்றும் காணக்கூடிய காட்சிதான். ஆனால் சுவிற்சர்லாந்தில் தெருக்களும் நகரங்களும் துடைத்த வைத்ததுபோல் காணப்படுவதற்கு, தன்நாட்டுப்பிரசைகளை இளவயதிலேயே பழக்கப்படுத்திக் கொள்கிறது.

பாலர் வகுப்புப் பிள்ளைகளாகவிருக்கும் போதே, சிலநாட்களில் வீட்டிலிருந்து வெற்றுப்பெட்டி, வெற்றுப்பிளாஷ்டிக் போத்தல், வெற்றுத்தகர டப்பா, என்பவற்றைப் பிள்ளைகளைக் கொண்டுவரச்சொல்லும் ஆசிரியர், அன்றையதினங்களில், பிள்ளைகளை அப்பொருட்களுடன் வெளியே அழைத்துச்சென்று, எங்கே எந்தக் கழிவுப்பொருளைப் போடவேண்டுமென்பதைக் காட்டிக் கொடுக்கின்றார். சிறுவயதில் பழகும் பழக்கம் தொடர்ந்து அவர்களிடம் வருகிறது. நாடும் துப்பரவாக இருக்கிறது. ஏதாவது ஒரு பெரிய கொண்டாட்டம் நடந்த மைதானங்கள், தெருக்கள், மண்டபங்கள், என்பவற்றில் சேரும் கழிவப்பொருட்கள், மறுநாள் அப்படியொரு நிகழ்வு நடந்த சுவடேதெரியாதவாறு துப்பரவு செய்யப்பட்டுவிடும்.

வீட்டினுள் சேரும் கழிவுப்பொருட்களைத் தனித்தனியாக, அதற்குரிய இடங்களில் சேர்க்கவேண்டும். தவறும்பட்சத்தில் அதை தண்டனைக்குரிய குற்றமாக ஆக்கும் வகையினைக்கூட சில மாநிலஅரசுகள் வைத்துள்ளன. வெளிநாட்டவர்கள் சுவிஸ் பிரசாஉரிமைகோரி விண்ணப்பிக்கும் போது, சில இடங்களில் அவர்கள் வீசும் கழிவுப்பைகளின் ஒழுங்கு, கண்ணகாணிக்கப்படுவதாகக் கூட ஒரு கதையுண்டு.பிள்ளைகள் பாடசாலை செல்லத் தொடங்கியதும், வீதியில் சைக்கிள்ஓட்டும் முறை, போதைவஸ்துக் கெடுதல், சுற்றாடல்பாதுகாப்பு, உனது கிராமம், உனது நகரம், உனது மாநிலம், உனது நாடு, எனப்படிப்டியாக அறிமுகம் செய்து வைக்கப்படுகிறது. சகமனிதனைப்புரிந்துகொள்ளலுக்கான ஆரம்ப நிலைவரை இந்தத் தொடர் உருவாக்கம், முதல்நிலைபள்ளிக்காலங்களில் நடந்தேறும்.
இந்த உருவாக்கத்தின் முதுநிலையை முதலில் கண்டபோது மேலும் வியப்புற்றேன்.

தொழிற்சாலையொன்றில் வேலை பார்த்தபோது, ஒரு திங்கட்கிழமை காலை வேலைக்குச் சென்றிருந்தேன். திங்கட்கிழமை காலைகள் எப்போதும் பரபரப்பானவை. வேலைகள் நிரம்பிக்கிடக்கும். பரபரப்பாகத் திரியும், என் பணிப்பகுதி மேலாளர் மிகுந்த அமைதியோடு செயற்பட்டுக்கொண்டிருந்தார். உதவி மேலாளர் என்னருகே வந்தபோது மெதுவாகச் சொன்னார், மேலாளரின் தாயார் சனிக்கிழமை மாலை இறந்துவிட்டார். இன்று மதியம் நல்லடக்கம் என்றார். அப்படியாயின் அவர் செல்லவில்லையா? பிற்பகல் இரண்டு மணிக்குத்தான் நல்லடக்கம். அவர் பன்னிரண்டு மணிக்குச் சென்றுவிடுவார் என்று. கட்சித்தலைவன் இறந்ததற்காக, கணக்கற்றவர்களை இறக்கப்பண்ணும் கலாச்சாரத்தில் பழக்கப்பட்ட எங்களுக்கு இது அதிகப்பிரசங்கித் தனமாகத் தோன்றலாம். ஆனால் ஒருநாளின் முக்கியத்துவம், பெறுமதி, உண்மையாக உணரப்பட்டதால் இது சாதாரணமாக இங்கு சாத்தியமாகிறது. இந்த உருவாக்கத்துக்கு கல்விபயில்காலக் கற்கைகள் மட்டும் காரணம் என்று சொல்லிட முடியாதாயினும், தொடக்கம் அதுவே.

இது ஒருவகை மூளைச்சலவை என்று சொல்லி வாதிடலாம். இதுகுறித்து வேறுபல விமர்சனங்களும் வைக்கலாம். ஆனால் சுவிஸ் என்ற வளம்குறைந்த ஒருபிரதேசம், வளம்பொருந்திய நாடாக நிமிர்திருப்பதற்கு, இத்தகைய உற்பத்தியும் ஒரு காரணம்.

Wednesday, May 09, 2007

தமிழ்மணத்தின் தார்மீகம் என்ன?


தமிழ்மணத்தின் தார்மீகம் என்ன? . தமிழ் மணத்திற்கு இது நியாயமா? இதற்குத் தமிழ்மணம் என்ன செய்யப் போகிறது? தமிழ்மணத்திலிருந்து சரியான பதில் கிடைக்குமா? தலைப்பினாலோ அல்லது என்மீதான அன்பினாலோ வந்திருக்கும் உங்களிடமும், தமிழ்மண நிர்வாகத்தினரிடமும், முதலில் இப்படியொரு தலைப்பிட்டமைக்கு, இவ்விடுகையின் தார்மீக காரணத்திற்காக மன்னிக்க வேண்டுகின்றேன்.


அன்மைக்காலங்களில் தமிழ்மணம் என்னும் பெயர் , இடுகைகளில் அல்லது பதிவுகளில், தமிழ்சினிமாக்களில் கூட்டம் சேர்க்க கவர்ச்சி நடிகை என்பதற்கிணையாக, பதிவுகளுக்கு ஆட்களை அழைத்துவரும் உத்தியாக, இடுகைத்தலைப்புக்களில் பாவிக்கப்படுவது போல் ஒரு தோற்றம் தென்பட்டதாலும், தமிழ்மணம் என நான் இவ்விடுகையில் சுட்ட விழைவது, தமிழ்மணத்தின் பதிவர்களையும், வாசகர்களையும் என்பதாலும், இந்த இடுகைக்கு இப்படியொரு தலைப்பு. மற்றும்படி இந்த இடுகைக்கும் தலைப்புக்கு எந்தவொரு தொடர்புமில்லை. ஆனால் இடுகையின் நோக்கம் உன்னதமானது. ஆதலால் தயவு செய்து சற்றுப் பொறுமையுடன் வாசித்துச் செல்லுமாறு பணிவுடன் வேண்டுகின்றேன்.

சென்றவாரத்தில் ஒரு நாள் பதிவர் ஒருவரிடம், இணையவழி பேசிக்கொண்டிருந்தபோது, பலவிடயங்களையும் இணையவழி அறிந்துகொள்கின்றோம். உலகின் எல்லா நன்மை தீமைகளும் தெரிகிறது. ஆனாலும் வாசித்து விட்டு அப்படியே அயர்ந்துவிடுகின்றோம், வேறில்லை எனக் கவலைப்பட்டார். இதே கவலையை பல பதிவுகளிலும், இடுகைகளிலும் கூட அவ்வப்போது கண்டிருக்கின்றேன். ஆனால் என்ன? பின்னூட்ட ஒப்பாரியோடு, அவை முடிந்துவிடும். பின் பிறிதொரு நாளில் ஆரம்பிக்கும்.


சென்ற சில மாங்களுக்கு முன் ரவிசங்கர் இட்ட இப்பதிவினை இரு தினங்களின் முன் பார்க்கக் கிடைத்தது. அதிலும் ஆதங்கங்கள் பல எழுந்திருந்தன. இப்பதிவில் சொல்லப்பட்ட விடயத்துக்கு முழுமையான தீர்வென்பது, அரசுகளால் அன்றி, சாதரண மக்களால் ஏதும் ஆவதிற்கில்லை என்றபோதும், எங்களால் முடிந்தவரையில் முயற்சிக்கலாம்.


சுவிஸ் ஒரு முதலாளித்துவக் கொள்கைசார் நாடு என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால் இங்கிருந்து கூட இடதுசாரி நண்பர்கள் சிலர் கியூபாவில் உணவும், கல்வியும் பெறச் சிரமப்படும் குழந்தைகளுக்கான உதவிகளைச் செய்துகொண்டிருக்கின்றார்கள். இங்கிருந்து வந்து, இந்தியாவின் பின் தங்கிய கிராமங்களில், தங்கியிருந்து உதவிகள்புரியும் தன்னார்வத் தொண்டர்கள் இருக்கிறார்கள். இவர்கள் சிலருடன் எனக்கு அறிமுகமும் உண்டு. சில பணிகளில் இணைந்த அனுபவமும் உண்டு. நானறிந்தவரையில், அவர்களது அர்ப்பணிப்பு மிக்க அப்பணியின் பின்னால் இருப்பது வரையறையற்ற மனிதநேயமே.


இந்த நேயம், இணையத்தில் எழுதும் எங்களிடமில்லையா? இல்லாமலா மகாலட்சுமிக்கும், கெளசல்யாவுக்கும், வேறுசில உதவிகளுக்கும், எங்கள் கைகள் இணைந்தன. இத்தகைய பணிகளுக்கு முதலில் தேவையானது புரிந்துணர்வுமிக்க ஒரு கூட்டுழைப்பு. அந்தக் கூட்டுழைப்பு எங்களிடம் இருந்துவிட்டால், இத்தகைய செய்திகள் சுட்டும் இழப்புக்களில் ஒரு சிலவற்றையாவது இல்லாது செய்ய முடியும்.


உலகெங்கும் பரந்து வாழும் நண்பர்களே! உன் பின்னால் யார், என் பின்னால் நீ, என்றெல்லாம் எண்ணாது, மனிதநேயம் என்னும் மகத்தான சிந்தனையோடு மட்டும் செயலாற்ற விரும்புபவர்களே! வாருங்கள் ஒன்றாய் கூடி, ஒருமனதாய் திட்டமிட்டு, ஒருசில உயிர்களையாயினும் காத்திடுவோம். இதற்கான எண்ணம் மட்டுமே எம்மிடத்தில் இப்போதுண்டு. இணையும் கரங்களின் பலத்திலும், மனத்திலும், உருவாக வேண்டும் ஒரு பொதுவேலைத்திட்டம். ஆதலால் ஆர்வமுள்ளவர்கள் உங்கள் ஆலோசனைகளை இங்கே தாருங்கள், இணைந்து செயற்பட இங்கு uthavi@gmail.com மடலிடுங்கள். இணையும் பணி எல்லோர்க்குமாயினும், இணைக்கும் தமிழிலேயே முடிந்தவரை உறவாடுவோம், தொடர்பாடுவோம். இணையம் எனும் பெருந்துணையால், இயன்றவரை வழிநடப்போம்.....உங்கள் உறவாடல் கண்டபின் மறுபடியும் இது குறித்து உரையாடுவேன்.


- நட்புடன்

மலைநாடான்.

Monday, May 07, 2007

அல்ப்ஸ் மலையின் சாரல்களில் - 1

வரவேற்பு

"அல்ப்ஸ் மலையின் சிகரத்திலே.." என்று பாடலைப் பாடிக்கொண்டு, ஈழத்தின் தெருக்களில் திரிந்த போது, சிறிதும் எண்ணிப்பார்த்திராத இந்த மண்ணில், சில வருடங்களின் முன் ஓரு மே மாதத்தின் முதல் வாரத்தில்தான் கால் பதிந்திருந்தேன். எத்தனையோ தடவை எழுத வேண்டுமென்று எண்ணிய போதும், ரவிசங்கர் ' நாடு நல்ல நாடு' தொடர்வினைக்கு அழைத்த போதும், எழுதும் சோம்பலில் விடுபட்டுப் போயிருந்த எண்ணம், கால்பதித்த நாட்களின் ஞாபகங்கள், மீள்நினைவாய் வந்து விழும் இன்றைய பொழுதுகளில் எழுந்திட எழுதுகின்றேன். வாருங்கள் இந்தத் தொடர்வழி, அல்ப்ஸ் மலைகளின் சாரல்களில் அலைந்து வருவோம். நான் கண்ட, கேட்ட கதைகளினூடு, ஐரோப்பிய சொர்க்கம், உலகின் பூந்தோட்டம், என்றெல்லாம் நீங்கள் கேள்விப்பட்ட சுவிற்சர்லாந்தில் நடைபயில்வோம்.
Willkommen auf Schweizer சுவிஸ் டொச்.

Bienvenue dans le Suisse சுவிஸ் பிரெஞ்.

Benvenuto in Svizzera சுவிஸ் இத்தாலி.

Allegra de Svizra சுவிஸ் ரொமான்ஸ்


சுவிற்சர்லாந்தின் தேசிய மொழிகள் நான்கிலும் வரவேற்புக் கூறினால் மட்டும் போதுமா? சிறப்பு விருந்தினர்களாக வந்திருக்கும் உங்களுக்குத் தேசிய வாத்திய இசை மூலம் வரவேற்றால்தானே மரியாதையாக இருக்கும்.

தேசிய வாத்தியமான அல்ப்ஹோர்னைப் பற்றி, " சுவிசின் பாரம்பரிய இசைக்கருவிகளில் ஒன்று அல்ப்ஹோர்ன் ( Alphorn) . அன்னளவாக எமது நாதஸ்வரத்தை ஒத்திருக்கும். குழல் வடிவான இக்கருவி வாய்பகுதியிலிருந்து சிறிது சிறிதாக அகன்று சென்று, மேல் நோக்கி வளைந்து , பலத்த சத்தத்தை ஒலிக்கும் வகையில் பருத்து விரியும். நிலத்தில் நின்றவண்ணம் ஊதி இசைக்கும் இக்கருவியின் நீளம் கிட்டத்தட்ட இரண்டு மீற்றரைத் தாண்டும். கோடைகால வருகையுடன், மேச்சலுக்காக கால்நடைகளை அல்ப்ஸ் மலைச்சாரல்களை நோக்கி நகர்த்துகின்ற விவசாயிகள், கூடிக்குதுகலித்து குரலெழுப்பும் விவசாயிகளின் செய்தி கூறுமிசையாகவும் இதைப்பார்க்க முடிகிறது. இயற்கை வனப்புக்களோடு முட்டி மோதி வருகின்ற சுவிசின் சுவாசக்காற்றை, சுருதி பேதமின்றி ஒலிக்கும் அல்ப்ஹோர்ன் " முன்னரே எழுதியுள்ளேன்.
வரவேற்ற உங்களுக்கு வகையாய் சுவையாய் சொக்லேட் தரவிடின், பிறகென்ன சுவிஸ் வரவேற்பு. ஆகவே வந்த உங்களுக்கு வாய்க்கு ருசியாக, சுவிஸ் ப்ரீமியம் சொக்லேட்.Photo Sharing and Video Hosting at Photobucket
சொக்லேட் சாப்பிட்டாயிற்றா? இந்த இடுகையை இன்றைக்கு வாசியுங்கள். சுவிற்சர்லாந்து பற்றிய ஒரு அறிமுகம் கிடைக்கும். அடுத்த பகுதியில் அல்ப்ஸின் சாரல்களில் நடக்கத் தொடங்குவோம்....

Thursday, April 26, 2007

மொழி

சென்றவாரத்தில் இளைய மகளின் பாடசாலையில் பெற்றோர்களுடனான கலந்துரையாடலுக்கு அழைத்திருந்தார்கள். சற்று அலுத்துக் கொண்டேதான் போனேன். காரணம் சில சின்ன பிரச்சனைகளையும், தீவிரமாகக் கதைத்துக்கொள்வார்கள். ஐரோப்பியர்கள், வெள்ளையர்கள், எல்லா விவரமும் புரிந்தவர்கள் எனும் எண்ணம், இப்படியான சந்திப்புக்கள் சிலவற்றிலேயே என்னிடமிருந்து அற்றுப்போனது. ஆனால் ஒன்று பிடித்திருந்தது. புரியவில்லை, தெரியவில்லை என்பதை, எப்போதும் மறைத்துக் கொள்வதில்லை. இம்முறை சந்திப்புச் சற்றுச் சுவாரசியமாகவிருந்தது. காரணம் நாங்களும் அடிக்கடி பேசிக் கொள்ளும் ஒருவிடயம், அங்கும் அன்று விவாதத்திற்கு வந்திருந்தது.

சுவிற்சர்லாந்தில் மாநில அரசுகளுக்கான அதிகாரப்பரவலாக்கம் பலவிடங்களிலும், பல துறைகளிலும், அந்தந்த மாநிலங்களின் தனித்துவத்தை அதிகமாகப் பேணும். மொழிசார்ந்த விடயங்களில் இந்தத் தனித்துவத்தை எங்கள் மாநிலம் சற்று இறுக்கமாகவே கடைப்பிடிக்கும். அரச அலுவல்கள் தொடர்பான விடயங்களில் கண்டிப்பாக மாநில மொழியிலேயே எல்லாம் நடைபெறவேண்டுமென இறுக்கமாக இருப்பார்கள். அன்றைய கலந்துரையாடலிலும் இந்த மொழிசார்ந்த விடயமே பிரதானமாகப் பேசப்பட்டது.

அடுத்த ஆண்டுக்கான கல்வித்துறை மாற்றத்தில், ஒன்பதாம் ஆண்டு கல்வியை நிறைவு செய்து, மேற்படிப்புக்குச் செல்லும் மாணவர், கட்டாயம் மாநில மொழியில் கண்டிப்பாகத் திறமைச்சித்தி பெற்றிருக்க வேண்டும் எனத் திருத்தம் கொண்டுவரப்படவுள்ளது. இதுவே அன்றைய கலந்துரையாடலில் விவாதிக்கப்பட்ட விடயம். உயர்கல்வி கற்க விரும்பும் மாணவனுக்கு துறைசார் பாடங்களில் திறமைச்சித்தியிருந்தால் போதும்தானே? மொழியில் திறமைச்சித்தி ஏன் ? நிகழ்கால உலகில் ஆங்கிலம்தான் உலகத் தொடர்புக்கு உகந்தது, என்ற வகையில் விவாதங்கள் நடைபெற்றது. ஆனால் இறுதியில் தாய் மொழி என்ற வகையில் மாநிலமொழி திறமை பெற்றிருப்பது, உயர்கல்விகற்கும் எவருக்கும் கண்டிப்பாக இருக்க வேண்டியதகமை. இல்லையெனில் தாய்மொழிக்கான அவமானம் அது, என்ற வகையிலும் கருத்துக்கள் வந்தன. இம்மாற்றம், வெளிநாட்டவர்களின் பிள்ளைகளுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தலாம் என்ற எண்ணமும் எடுத்தாளப்பட்டது. உயர்கல்விக்குத் தெரிவாகும் மாணவன், தன் துறைசார் பாடங்களிலும், தாய்மொழியிலும்(மாநிலமொழி) கண்டிப்பாக திறமைச்சித்தி பெற்றிருக்க வேண்டும் என்பது, அநேகமாக அடுத்த வருடத்தில் நடைமுறைக்கு வரலாம். சந்திப்பு முடிந்து வரும் போது என் மனதில் மொழிகுறித்த இந்த அக்கறை நம்மிடம் அவ்வளவாக இல்லையோ?... என எண்ணத் தோன்றியது.


சென்றவாரத்தில் ஒரு நண்பரின் குழந்தை, அழகாகத் தமிழில் நன்றி என்று சொல்லியபோது, மனங்குதுகலித்தது. சுஜெய் எனும் பெயர்கொண்ட அக் குழந்தையின் வயது பதின்னான்கு மாதங்கள். குழந்தையின் தாய் சுவிஸ் ஜேர்மன் மொழியிலேயே தன் முழுக்கல்வி நிலையையும் கற்றுத் தேறியவர்.

Monday, April 09, 2007

ஊட்டியது யார் ?

" ஆண்களுக்குச் சமானமாக நின்று பேசத்தெரியாமல், அவர்கள் பகிடி என்ற பெயரில் செய்கின்ற சில்மிஷங்களுக்கெல்லாம் வெட்கம் பொத்துக்கொண்டு 'ப்ளீஸ் சரியில்லாத வேலை பாக்கிறியள் ' என்று கெஞ்சுகின்ற சில பெண்களை எனக்குத் தெரியும். அப்போதெல்லாம் எரிச்சல் எரிச்சலா வரும். அவையும் அவையின்ர வெட்கமும்... " இது வாரஇறுதியில் நான் சந்தித்த ஒரு இளைய எழுத்தாளரிடம் இருந்து பெற்றுக்கொண்ட ஒரு சிறுகதைத் தொகுதியின் முதலாவது கதையின் மேற்கோள் வாசகம்.. "

வார இறுதியில் குடும்பமாக வெளியே சென்று வரும் போது, பிள்ளைகளோடு பேசுகையில் என் பெரிய பெண், தன் வகுப்பில் விவாதிக்கப்பட்ட ஒரு விசயத்தைச் சொன்னாள். ஐரோப்பிய சமூகத்தைச்ச சார்ந்த ஒரு இளம்பெண் தனது ஆண்நண்பனுடன் ஏற்பட்ட மனமுறிவைச் சீர் செய்ய, தனது செல்லிடத்தொலைபேசியிலுள்ள ஒளிப்பதிவுக்கருவி மூலம் தன்னை நிர்வாணப்படமெடுத்து, தொலைப்படமாக அனுப்பிவைத்திருக்கிறாள். அதை அவளின் ஆண் நண்பன் தன் நண்பர்களுக்கெல்லாம் அனுப்பி மகிழ்ந்திருக்கிறான். ஒரு ஆணின் கோபத்தைத் தணிக்க தன்னை நிர்வாணமாக் காட்சிப்படுத்துவது எனும் சிந்தனையை அப்பெண்ணின் மனத்தில் ஊட்டியது யார்? பெற்றோரா? சுற்றமா? சமூகமா? சினிமாவா? பத்திரிகையா? இணையமா? விளம்பரங்களா?

என்னைக்கேட்டால் எல்லாமேதான் என்பேன். இந்தச் சிந்தனையாக்கம் சின்ன சின்னச் சந்தோசங்களினால் எல்லோராலும் கட்டி எழுப்பப்படுகிறது. அது சீர்குலைந்து, தன் பிரமாண்டத்தைக் காட்டும்போது மட்டும் ஆளையால் குற்றம் சாட்டி மற்றவர் தப்பித்துக்கொள்கின்றோம். அவ்வளவுதான்..


எழுத்தாளர்களிடம் நேரடியாக நூல்பெறும் போது அவர்களின் கையெழுத்துடன் பெற்றுக்கொள்ளும் என் வழக்கத்தின் படி அந்த இளம் எழுத்தாளரிடமும் கேட்க, அவர் சிரித்துக்கொண்டே கையெழுத்திட்டுத் தந்தார். எதிர்காலத்தில் பலர் கையெழுத்திட்டு வாங்கக் காத்திருக்கக்கூடும் என்னும் நம்பிக்கையை, அவர் எழுத்துக்கள் தோற்றுவிக்கின்றன...

"அர்த்தம்" எனும் அச்சிறுகதைத்தொகுப்பின் முதலாவது கதையான "கேள்விகளில்" உள்ளே வரும் உரையாடல்களில் ஒன்று..
“ எங்களில கன பிள்ளையள்கொம்பியூட்டரை கண்ணாலையே பார்த்ததில்லை. எனக்கு ஒரு பயம் இருந்தது. நாங்கள் அப்பிடியே இருக்கப்போறோமோ? எண்டு. ஆனா இப்ப இல்லை. இந்த யுத்தம் உங்களையெல்லாம் வேறை வேறை தேசங்களுக்கு தூக்கியெறிஞ்சதிலை உள்ள ஒரே நன்மை உங்களிட்டை இப்ப எல்லா நாட்டு கல்வியறிவும் இருக்கிறதுதான். அதை எங்களுக்கும் தர வேண்டியது உங்கடை கடமை. தா எண்டு கேட்கிறது எங்கடை உரிமை
"

Tuesday, March 27, 2007

Weird - வினையா விளையாட்டா ?

சிந்தாநதி , குமரன் இருவரும் என்னை இந்த தொடர்பகிரலுக்கு அழைத்திருக்கிறார்கள். இதை எவ்வளவு தூரம் சிறப்பாகச் செய்யமுடியும் என்று தெரியவில்லை. இது வினையா, விளையாட்டா? புரியவில்லை. இதற்கான விளக்கத்தை நான் விளங்கிக்கொண்ட வகையில் ஒருவித குழப்பத்துடனே எழுதுகின்றேன். எழுதப்பட்ட பதிவுகள் சிலதை வாசித்த போதும், குழப்பமான புரிதலே ஏற்பட்டது. எனக்குப் பிடித்த ஒரு விடயம், மற்றவர்களுக்கு வித்தியாசமாக அல்லது வேடிக்கையாகத் தெரியலாம் என்ற புரிதலுடன் எழுதுகின்றேன்.

மலைமுகடுகளுக்குப் போவதும், அதன் சூழலில் லயிப்பதும் எனக்குப் பிடிக்கும். அதன் மிதமிஞ்சிய ஆர்வத்தில், என்னிடம் வரும் நண்பர்களை, உறவினர்களை , வாறீர்களா மலைக்கு போகலாம் என்றழைத்தால், அவர்களும் சம்மதித்து வருவார்கள். சென்றபின் என்னை நோகடிக்கக்கூடாதென்று, பிரயத்தனப்பட்டுச் சமாளித்துக்கொண்டிருக்கும் அவர்களிடம் மலைகள்பற்றி நான் அளந்து கொட்டுவேன். அவர்களோ...
இறுதியில், இனி யாரையும் அப்படி அழைத்துச் செல்லக் கூடாதென எண்ணுவேன்.. வெறுமனே எண்ணுவேன்.

ஏரியில் படகுச் சவாரியை, அதுவும் பெடல் படகினை, ஏதோ கப்பல் ஓடுவது போன்று ரசித்துச் செய்வேன், பார்ப்பவர்களுக்கு அது சிறுபிள்ளை விளையாட்டாகத் தோன்றும்..ஆனாலும் செய்வேன். அதுபோலவே பயனிக்கும் படகுகளைப் பார்த்துக் கொண்டிருப்பதும் பிடிக்கும். ஆனால் மற்றவர்களுக்கு..

வீட்டில் எல்லோரும் திட்டித் தீர்த்தாலும், மலசலகூடத்திற்குப் போகும் போது, புத்தகம், பத்திரிகை கொண்டுபோய் வாசிப்பது.

ஒவ்வொரு வருடமும் அக்கறையாக வரவு செலவுக் கணக்கெழுத ஆரம்பித்து, ஒன்றிரண்டு மாதத்தில் நின்றுவிடுவது.

தேவையென ஒரு பொருளைத் தீர்மானித்து விட்டால் வேண்டித் தீருவது.

கடைகடையாய் ஏறியிறங்கி பொருள் பார்த்து வாங்கத் தெரியாது, ஆனால் வாங்கிவரும் பொருள் தரமாயிருப்பது.

ஒரு இடத்தில் இருக்கப்பிடிக்காது, இருந்தால் இலகுவில் எழும்பப்பிடிக்காது.


எழுதத் தொடங்கினால், வாசிக்கத் தொடங்கினால், மற்றவை மறந்து போவது.

வீட்டில் ஐந்து பொருள் வாங்கிவரும்படி வழிக்கு வழி சொல்லி விட்டாலும், ஏதாவது இரண்டு பொருளை மறந்துவிட்டு வந்து நிற்பது. ஆனால் வெளியே என் ஞாபகசக்திக்குப் பாராட்டப்படும்.

சடுதியாக யோசிக்க நினைவுக்கு வந்த இவைகளுடன் நிறைவு செய்கிறேன்.

நான் அழைப்பது

சயந்தன்
வசந்தன்
வி.ஜெ. சந்திரன்
மழை.ஷ்ரேயா
கொழுவி

Friday, March 16, 2007

அவன் நினைவுக்கு வந்தான்.

அந்தப் பெயர் கொஞ்சம் கொஞ்சமாக மறக்கப்பட்டு வருகிறது. ஆமாம் சதாம் எனும் ஒரு சர்வாதிகாரியின் பெயர் மெல்ல மெல்ல உலகில் மறக்கப்பட்டு வருகிறது. ஆனால் சதாமின் வாழ்வினூடு மறக்கப்படக் கூடாத பல விடயங்கள் உண்டு.

ஐரோப்பாவுக்கு புலம்பெயர்ந்து வரும் வழியில்தான் அவனைச் ச்ந்தித்தேன். சத்தார் என்ற வகையில் ஏதோ பெயர். அவனும், அவனது மனைவியும், அழகான இரண்டு குழந்தைகளுமாக வந்திருந்தனர். அவன் ஒரு குர்த்திஷ் விடுதலைப்போராளி. அவன் மனைவி ஒரு கிராமத்துப் பள்ளி ஆசிரியை. பிள்ளைகள் ஏதுமறியா இளமைப்பருவம். குர்திஸ் விடுதலைப் போராட்டம் தந்த கசப்பான அனுபவங்ளை மனத்திலும், காயங்களை உடம்பிலும் கொண்டிருந்தான். எத்தனையோ பேர் இருந்த அந்த அகதிகளுக்கான முகாமில், ஏறக்குறைய அவனது மனநிலையே , அப்போது எனக்கும் இருந்ததால் ஏதோ ஒரு நெருக்கம் எங்கள் மத்தியில் தோன்றிற்று.

ஒரு ஒதுக்குப்புறமான கிராமத்தில், இரண்டாம் உலகப்போரில் பாவிக்கப்பட்ட, பழைய இராணுவமுகாமிருந்த கட்டடிடத்தில், எந்தவிதமான அறிமுகங்களும் பொழுதுபோக்கு வசதிகளும் அற்ற ஒருநிலையில், உணவு நேரங்களில், உணவு மண்டபத்தில் அவனது குழந்தைகளின் சிரிப்பினூடு ஆரம்பமாகி எங்கள் அறிமுகம், அங்கிருந்த ஒரு வாரகாலத்தில், சற்று நெருக்கமாகவும், பரஸ்பரஆறுதலாகவும், இருந்தது. இருவருக்கும் தெரிந்தளவிலான ஆங்கிலத்தில் எங்கள் உரையாடல்கள் அமைந்தன. அப்படியிருந்தும், உரையாடல்களின் உட்பொருள் இருவருக்கும் ஏற்புடையதாகவோ, பொருந்துவதாகவோ, அல்லது ஒத்ததாகவோ இருந்ததினால், அவனது மனைவி தயாரிக்கும் கறுப்புத் தேநீரைக் குடித்தபடி நள்ளிரவு தாண்டியும் அவை நீண்டன. பெரிய நிலப்பரப்பில் மின்விளக்குகள் தந்த குறைந்த ஒளியில், பருத்த மரங்களின் நிழல்கள் தரும் இருள் அச்சத்தையும், அவன் பிள்ளளைகள் தூங்குவதற்காக சிறிய ரெக்டகோடரில் மெலிதாக ஒலிக்கவிடப்பட்டிருந்த குர்திஸ்விடுதலைப்பாடல்கள், எங்கள் உரையாடல்களுக்கு பின்னணியிசையாக சேர்ந்தன.

நீண்ட காலமாக குர்திஸ்விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அவனது அரசியல் செயற்பாட்டுப் பொறுப்புக்குள்ளிலிருந்த கிராமத்தின் மீதுதான் சதாம் விஷவாயுக் குண்டுகளை வீசி ஓரேநாளில், இரண்டாயிரத்துக்கும் அதிகமான மக்களை, சிறுவர் பெரியவர், பெண்கள் எனும் பேதமில்லாமல், கொண்றொழித்திருந்ததிலிருந்து, அப்போராட்டத்தை அழித்தொழிக்க, ஈராக், ஈரான், துருக்கி, என எல்லா நாட்டு அரசுகளையும், சந்தர்பத்துக்குத் தககவாறு அமெரிக்கா பாவித்துக் கொண்டது பற்றியும், குர்திஸ் போராளிகள் எவ்விதமாக இந்தச்சூழ்சிகளுக்குப் பலியாகினார் என்பதையும் விலாவாரியாகப் பேசினான். சோகமும், கோபமும், நிரம்பிய கதைகள் அவை. இரத்தமும், சதையும் சிதறிய துயரங்கள் அவை.

அண்மையில் சதாம் தூக்கிலிடப்பட, எல்லோரும் சதாமைப்பற்றி எழுதிக்கொண்டிருக்கும் போது, நான் அவனைப்பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன். சதாமின் மரணம் சிலருக்கு மகிழ்ச்சியாகவும சிலருக்குத் துக்கமாகவும் இருந்தது. ஆனால் அவனுக்கு எப்படி இருந்திருக்கும். அது சதாமுக்கு நூற்றிநாப்பது சொச்சம் சுனி முஸ்லீம்களின் கொலைவழக்குககாக வழங்கப்பட்ட மரணதண்டனை. ஆனால் அதற்கு எத்தனையோ காலத்துக்கு முன்னால் நடத்தபட்ட, எண்ணிக்கையில் அதி கூடிய குர்த்திஷ் மக்களைக் கொன்ற விடயங்கள் நீதிமன்றுக்கு ஏன் வரவில்லை. அல்லது அவை குறித்த விசாரணைகளும், வழக்குகளும், விசாரிக்கப்படுதற்கு, முன்னதாகவே, சதாம் தூக்கிலிடப்பட்டதற்கு என்ன காரணம் என்பதைத் தெளிவாகத் தெரிந்திருக்கக் கூடிய அவன் என்ன நினைத்திருப்பான்.

சரி. இதையெல்லாம் இவ்வளவு நாளுக்குப் பிறகு நீ எழுதிக் கொண்டிருக்கிறாய்? என்று என்னைப் பார்த்துக் கேட்கிறீர்களா? இரண்டொரு தினங்களுக்கு முன், ஐரோப்பியத் தொலைக்காட்சியொன்றில், சிறிலங்காவின் அரசில் அங்கம் வகிக்கும் முஸ்லீம் காங்கிரசின் அமைச்சர் ஒருவர், புலிகள், தங்களை, முஸ்லீம்களை அங்கீகரிக்க வில்லையென்பதற்காகத்தான் தாங்கள் அரசுக்கு ஆதரவாகச் செயற்படுகின்றோம். அமைச்சரவையில் அங்கம் வகிக்கின்றோம், என்று சொல்லிக்கொண்டிருந்தார்.
அப்போதும் அவன் நினைவுக்கு வந்தான்.

Tuesday, March 13, 2007

ஆண்டொன்று போனால்..
எப்படித் தொடங்குவது எனத் தெரியவில்லை. ஆனாலும் எழுத வேண்டும் என்பது மட்டும் அவாவுற வைக்கிறது. வலைப்பதிவு எழுத வந்த இந்த ஒரு வருடகாலத்திலும் அனுபவித்திராத அவஸ்தையிது. நினைத்த மாத்திரத்தில் நினைத்தை எழுதிவிடுவது வழக்கம். ஆனால் இன்று, நின்று நிதானிக்கத் தோன்றுகிறது. எதையும் தவறவிட்டுவிடக் கூடாது எனும் எண்ணமே தவற வைத்துவிடும்போல் இருக்கிறது. ஆனாலும் எழுதவேண்டும்..

எழுத்து, வாசிப்பு, எனத்தொடங்கிப் பிரியப்பட்ட கலைகளிலெல்லாம் தொட்டுப்பார்க்கும் சிறுபிள்ளை ரசிப்பு ரகம் என்னது. அதுவே அரசியல், பொருளாதாரம், ஆன்மீகம், எனும் சமுத்திரக்கரைகளிலும் சற்று நடந்துவரத் தூண்டியது. இதனால் பார்பவர்க்குக் குழப்பங்களின் கலவைதான் இந்த மலைநாடான்.

எண்ணியதிலெல்லாம் முயன்று, முட்டி,மோதி,விழுந்து, எழுந்த போதினில், புலப்பெயர்வு. புதிய வாழ்க்கையில் முன்னையதின் எச்சங்கள் எதுவும் தொடராதிருக்க வேண்டும் என்பதில் கவனமாயிருந்தேன். ஆயினும் கலைகள் எதுவும் என்னை கைகட்டிநிற்க விடவில்லை. ஆடியகால்கள் ஆடித்தான் ஆக வேண்டுமென அடம்பிடித்தன. புலத்தின் இறுக்கத்திற்கு, இந்தத் தளர்வும் வேண்டும் போல் தோன்றிற்று. ஆனாலும் அனுபவம் தந்த பட்டறிவின்பால் நின்று நிதானித்துச் செயற்பட முடிந்தது. அப்படியிருந்தும், கலையுலகில் கால்வாரலுக்கென்ன பஞ்சமா? பட்டு,நொந்து விட்டு விலகி நின்றேன். ஆனால் எந்தப் பொழுதிலும், ஏழுவயதில் என் அன்னை எனக்குக் கற்றுத்தந்த வாசிப்பு என்பது மட்டும் ஒட்டிக்கொண்டே வந்தது. அந்த வாசிப்பின் வரிசையிலே வலையுலகும் இருந்தது. சென்ற ஆண்டு மார்ச்மாதம், கானா.பிரபாவின் மடத்துவாசல் பிள்ளையாரடியால் தமிழ்மணத்துக்கு வந்தேன். எழுத்துக்கள் சில எனைக் கவர்ந்தது. சரி நாமும் ஒரு பாராட்டுச் சொல்லிவிடலாமே என முயன்றபோது முடியவில்லை. உதவிப்பக்கங்கள் தந்த அறிவுறுத்தலின் வழிநடத்தலில் வந்து விழுந்த இடம்தான் என் முதலாவது வலைப்பூவான குறிஞ்சிமலர். முடியாததென்று எண்ணியதொன்று, எளிதில் சாத்தியமாயிற்றே எனும் நிறைவோடு அன்று நித்திரைக்குப் போனேன்.

பன்னிரெண்டு ஆண்டுக்கொருமுறை மலரும் பூ. நாமும் குறைந்தது பன்னிரெண்டு வாரத்துக்கு ஒரு பதிவாவது எழுதலாம் என்பதற்கும், மலைநாடான் என்பதற்கும் ஏற்புடையதாக குறிஞ்சிமலர் எனப் பெயரிட்டேன் (வேதாளம் பழையபடி முருங்கை மரத்தில் ஏறியது அப்போது எனக்குத் தெரியவில்லை). என்ன எழுதுவது?. நமக்கு எப்போதும் பிடித்தமான, சாதரண மனிதர்களைப் பற்றிக் கொஞ்சம் பதிவு செய்வோமே என்றுதான் எண்ணினேன். ஆனால் முதலில் எழுதவேண்டுமென எண்ணிய ஒரு சாதாரண மனுசியைப்பற்றி இன்னமும் எழுதவேயில்லை. ஏன்?.. பிறகு சொல்கின்றேன்.

ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொருவிதமான பழக்கம். சிலருக்கு எழுதுவதென்றால் இசைவேண்டும், சிலருக்கு இரைச்சல் வேண்டும். எனக்கு இவையிரண்டையும் விட முக்கியம் எழுதும் தளத்தின் வடிவம். அதுவென்னவோ படிக்கும் காலத்திலேயே அப்பியாசக்கொப்பி வேண்டினால், அதற்கு அழகாகச் சட்டைபோட்டு, பெயரிடுவதுவரைக்கும கணகச்சிதமாய் நடக்கும். படிப்பது..?.. :)))).

இலவமாகத் தந்த அடைப்பலகையை இரவு பகலாகக் கழட்டிப்பொருத்தினத்தில், HTML என்ற அந்த மொழி கூட சற்றுப் புரிந்ததுபோல் தெரிந்தது. சரி வெட்டி ஒட்டி விளையாடிப் பார்த்தில், நானும் நாலுந் தெரிஞ்ச மனுசனாகிப்போனேன். அதனால்தான் இன்று என் அடைப்பலகைகள், இரண்டுங்கெட்டானாய் நிற்கின்றன. சோடிச்சால் மட்டும் போதாது, ஏதாவது எழுதவும் வேணும்தானே. தெரியாத விசயங்களை விட்டு, தெரிந்தவற்றைச் சொல்வோம் என எண்ணிய போதினில் என் தேசம் பற்றிய கதைகளே அதிகம் நினைவுக்கு வந்தன. ஆரம்பத்தில் ஆர்வமாய் வந்த நண்பர்கள் சிலர், அரசியற் பேச்சுக்கள் வந்தபோது, விலகிக் கொண்டார்கள். வேறு சிலர் விரும்பி வந்தார்கள்.

எழுதுவது என்பது விருப்பமாயினும், எழுதுவதற்குச் சற்றுச் சோம்பேறிதான். ஆனால் தீர்மானித்து இருந்துவிட்டால், முடிக்காது எழும்புவதில்லை. குறிப்புக்கள் எதுவும் வைத்துக்கொள்ளாது, எண்ணப்போக்கிலே எழுதிக்கொண்டிருக்கும்போது, இடையில் நிறுத்திவிட்டால், திரும்பவும் அது எழுதுப்படுவதென்பது அநேகமாக இல்லை. அப்படிக் குறையாக நிற்கும் பதிவுகள், சேகரிப்பில் நிறையவே உண்டு. அதற்குள் முன்னர் குறிப்பிட்ட அந்த வயதான மனுசியும் இருக்கிறாள். இந்தத் தொடரெழுத்துப் போக்குக்கு தொடும் விசயங்களும் காரணமாகலாம். ஆனாலும் வலைப்பதிவுலகில், எழுதுவதிலும் பார்க்க வாசிப்பதே எனக்கு எப்போதும் பிடித்தமாயிருந்தது. எழுதத் தொடங்கிய பின்தான், தென்தமிழீழத்து, தமிழ் மக்களின் வாழ்வியல் பதிவு செய்யப்படாதிருப்பதை அறிந்தேன். அதை எழுத முற்பட, தளத்தின் வடிவம் உறுத்தத் தொடங்கியது. உடன் உருவாகியதுதான் எனது இரண்டாவது வலைப்பூவான மருதநிழல். ஒன்றிலேயே ஒழுங்கா எழுதாத பயலுக்கு, இத்தனை வலைப்பூ தேவையா என எண்ணிய நண்பர்களே, என் வலைப்பூக்களின் பின்னால் உள்ள பிறப்பு இரகசியம் இதுவே. அதன் நீட்சி
யே நெய்தற்கரையும், முல்லைவனமும்.

வலைப்பதிவுலகம் விசித்திரமானது. இங்கே எல்லோரும் எழுதுபவர்கள், எல்லோரும் வாசிப்பவர்கள். ஆகையால் ஆரோக்கியமான ஒரு கருத்துக்களம் என்ற எதிர்பார்புடனேயே வந்திருந்தேன். வந்த ஒரு சில பொழுதுகளிலே தெரிந்துவிட்டது இதன் சீத்துவம். நமக்கென்ன நமது பாட்டுக்கு ஒரு ஓரமாய் செல்வோம் என நடந்த போதினில் பல நல்ல நண்பர்களைச் சந்திக்க முடிந்து. நான் பார்க்க வளர்ந்த கானா.பிரபா, எல்லோருடனும் பின்னூட்டத்தால் உறவாடும் யோகன் பாரிஸ், நகைச்சுவையும் நல்லிதயமும் கொண்ட வசந்தன், சயந்தன்,( இவர்களிருவரும் ஒருவரென்றே இன்னும் பலர் எண்ணுகின்றார்கள்.) அசமாத்தமில்லாமல் அட்டகாசம் பண்ணும் சின்னக்குட்டி,( வசந்தனின் பின்னவீனத்துவப்பதிவில், அத்துவித ஒப்பீட்டை கமுக்கமாகப் போட்டிட்டு கம்மென்று இருப்பதைப்பாருங்கள்), பெயரற்றவன் எனச்சொன்னாலும் பல பெயர்களுக்குச் சொந்தக்காறனான பெயரிலி, ( இவர் வலையில் என்னிடம் சிக்கியதே ஒரு சுவாரசியமான அனுபவம்தான்.) எல்லோரிடத்திலும் இலகுவில் பழகிடும் மதி,பதிவர் வட்டத்தில் அமைதிப்பூங்காவாக இருக்ககூடிய சந்திரவதனா, தனித்துவமான எழுத்து நடையால் எல்லோருக்கும் தெரிந்த தமிழ்நதி, சிநேகிதமான சிநேகிதி, இப்போ வந்த வி.ஜெ. சந்திரன், என ஈழத்து நண்பர்கள் வரிசை நீள்கையில், தமிழக நண்பர்கள் பட்டியல் இன்னும் நீண்டது. திரு, பொன்ஸ், செல்வநாயகி, குமரன், ஆழியூரான், ஜி.ராகவன், ஞானவெட்டியான், ஜெகத், சிந்தாநதி, பாலபாரதி, கீதா.சாம்பசிவம், எனத் தொடர்கிறது....
இதற்கப்பால், அவ்வப்போது பல நண்பர்கள் வந்து உறவாடி, உற்சாகமூட்டுகின்றார்கள். எல்லோர்க்கும் நன்றிகள்!

வலைப்பதிவில் எழுதும் எல்லோரும், தமது திருப்த்திக்காகத்தான் எழுதுகின்றார்கள். அதே போல்தான் நானும். ஆனால் நமது எழுத்துக்களை வாசிப்பவர்கள் என்ன நினைக்கின்றார்கள்? என அறிய எல்லோர்க்கும் விருப்பம் இருப்பது இயல்பே. அதே எண்ணம் எனக்குமுண்டு. ஏனெனில் எம் எழுத்துக்களை வாசிப்பவர்களது நேரத்தை நாம் எடுத்துக்கொள்கின்றோமே, அது அவர்களுக்குப் பயனுடையதாகவிருக்கிறதா எனத் தெரிந்து கொள்ள வேண்டாமா? தெரிந்து கொள்வதாயின் எப்படி என்று எண்ணிய போது எண்ணத்தில் வந்தவர்கள் சிலர்.

தெளிந்த நீரோடைபோன்ற எழுத்துக்குச் சொந்தக்காறர்களாக இருக்கக்கூடிய சிலரில், வலைப்பதிவுகளின் மூலம் அறிமுகமான செல்வநாயகி. தமிழகத்தைச்சார்ந்த இவரது பார்வைக்கும், ஈழம்சார்ந்தவர் பார்வைக்கும் வேறுபாடிருக்கலாமே எண்ணியபோது, ஈழம் சார்ந்த ஒருவருடைய கருத்தையும் இணைத்துக் கொள்ளலாம் எனத்தோன்றியது. அந்த எண்ணம் வந்தபோது கூடவே இன்னுமொரு யோசனையும் வந்தது. வலைப்பதிவுகளுக்கப்பாலிருந்து வாசிக்கும் ஒரு நண்பரைத் தெரிவு செய்யலாமே என்று. அப்பொழுது ஞாபகத்திற்கு வந்தார் நண்பர் ஏ.ஜே.யோகராஜா. சரி இவர்களிருவரும் வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர்களாயுள்ளார்கள், வலைப்பதிவு வட்டத்திற்கப்பால்இளையவர்கள் சிலர் என எழுத்துக்களைத் தொடர்ந்து வாசித்து வருகின்றார்கள். ஆகவே இளையவர்கள் என்ன நினைக்கின்றார்கள் என்பது தெரியாது போய்விடுமே என்று சிந்திக்கத் தோன்றியது. அதை நினைத்த போது, நினைவுக்கு வந்தவர் வலைப்பதிவு நண்பர் ஜெகத். மூவரிடமும் மின்மடல் மூலம் எண்ணத்தைச் சொல்லியபோது, எந்தவித மறுப்பும் சொல்லாது, எழுதித்தரும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்கள் சொன்ன போலவே எழுதிக்கொடுத்துள்ளார்கள். இந்த மூவருக்கும் எனக்குமுள்ள பரிச்சயமும், பழகுதளங்களும், வெவ்வேறானவை. ஆனால் மூவருடைய பதிவுகளும் ஏறக்குறைய ஒரே கருத்தியலில் வந்து நிற்பது எனக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது. என் எழுத்துக்களைவிடப் பன்மடங்கு சுவாரசியமான அவர்களது கருததுக்கோர்வைகள் அனைத்தும் , நான் முக்கியமென எண்ணி எழுதிய பதிவுகளைத் தொட்டுக்காட்டியபோது, நம்மாலும் ஏதோ எழுத முடிந்திருக்கிறது எனும் திருப்தி ஏற்படுகிறது. இதுவே இப்போதைக்கு எனக்கு மேலதிகமான பொறுப்புணர்வையும் தந்து நிற்கிறது..

இந்த ஓராண்டு காலத்தில் எனக்கு எல்லாவிதத்திலும் உதவிய, உற்சாகப்படுத்திய நண்பர்களுக்கும், சென்ற செப்டெம்பர் மாத்தின் ஒருவாராத்தில் நட்சத்திரமாக அறிமுகம் செய்து பெருமைப்படுத்திய தமிழ்மண நிர்வாகத்தினருக்கும், எனது பல ஆக்கங்களையும் பூங்கா இதழில் இணைத்துச் சிறப்பித்த பூங்கா இதழ் குழுவினருக்கும், மிக்க நன்றிகள்.

செல்வநாயகி, யோகராஜா, ஜெகத், நீங்கள் மூவரும், என்னை எனக்கே மீளவும் அடையாளங் காண்பித்துள்ளீர்கள். நான் பயணிக்கும் பாதை சரியெனச் சுட்டியுள்ளீர்கள். நீங்கள் ஒவ்வொருத்தரும், பல்வேறுபணிச்சுமைகள் மிக்கவர்கள் என்பது, நன்கறிவேன் நான். அத்தகைய நெருக்குதல்களுக்கும் நெஞ்சார்ந்த நேயமுடன் கருத்துரைத்துள்ளீர்கள். நண்பர்களுக்கு நன்றிசொல்வது நாகரீகமாகாது எனினும்,இப்போதைக்கு நன்றியைத் தவிர வேறோன்றும் பகிர முடியவில்லை. நன்றி நண்பர்களே!

நண்பர்களின் கருத்துக்களையும், இந்த ஒருவருட காலத்தில் சுயமாகக் கற்றுக்கொண்ட இணையத்தொழில் நுட்ப அறிவினைக் கொண்டு நான் வடிவமைத்துக்கொண்ட இணையத்தளத்தினையும் காண, இவ்வழியால் வாருங்கள்.

Friday, February 23, 2007

இந்திய மயிரும், ஏற்றுமதி வர்த்தகமும்.


பாரிஸின் மத்திய நகர் பகுதியிலிருக்கும் அந்தப் பிரபலமான சிகையரிப்பு நிலையத்திலிருந்து வெளியே வரும் கிறிஸ்டினாவின் முகத்தில் அளவிலா ஆனந்தம். தன் தோள்களில் புரளும் அந்தப்பளுப்பு நிற முடிக்கற்றைகளை, ஆசையாய் வருடி, அழகாகக் கோதுகிறாள்.
அங்கே வரும் ஸ்டெல்லா, கிறிஸ்டினாவைக் கண்டதும் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் அளவளாவி, முத்தம் சொரிந்து, குசலம் விசாரிக்கின்றாள். கிறிஸ்டினாவின் தோள்களில் புரளும் முடியின் அழகு அவளையும் வசீகரித்திருக்க வேண்டும், அவளும் ரசித்து மகிழ்கிறாள்.
“ இப்போதுதான் செய்து கொண்டு வருகிறேன். நூற்றியம்பது முடிச்சுக்கள் நடுவதற்கு ஆயிரம் யூரோக்கள்.. “ என்றவள் ‘ இது செயற்கை முடியல்ல, இயற்கையானது ’ என மேலும் பெருமிதமாய், தொட்டுத் தடவி ரசிக்கின்றாள்...

0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 00 0 0 0 0 0 0 0 0 0


ஏழு குண்டல வாடா, வெங்கட ரமணா, கோவிந்தா கோவிந்தா. எனும் பக்தி கோஷம் கேட்கிறது, ஆட்களின் உடை அலங்காரம், முகங்களின் பரிச்சயம், யானையின் அலங்கரிப்பு, உயர்ந்தெழுந்த கோபுரங்கள், என ஒவ்வொன்றாகத் தொலைக்காட்சியில் கமெரா காட்சிப்படுத்தும் போதே உணர்ந்து கொள்ள முடிகிறது அது ஓர் இந்திய நகரம் என்று. எண்ணிக் கொண்டிருக்கும் போதே, ‘ நான்கு மாடிகள் கொண்ட உலகின் மிகப்பெரிய சிகைதிருத்து நிலையம் என அறிமுகம் செய்கிறது விவரணக்குரல். அட ஒரு தடவை சென்று வந்தால் வாழ்வில் திருப்பம் நேரும் என நம்மக்களின் மனதில் நம்பிக்கையைத் தோற்றுவித்திருக்கும் திருப்பதியில், ஆழ்வார்களும், அடியவர்களும் போற்றித் துதித்த திவ்வியதிருத்தலத்தில் உள்ள வேண்டுதல் மையத்திற்கு, அல்லது நேர்த்திக்கடனென நிறைவேற்றப்படும் நம்பிக்கை மையத்திற்கு, இப்படியொரு அடைமொழி வர்ணனனையா? சுவிற்சர்லாந்து தொலைக்காட்சிச் சேவை ஒன்றில் ஒளிபரப்பாகியது அவ்விவரணம்.

இந்தியாவில் தமிழ்நாட்டில் கோவில்களில் நேர்த்திக்காக மழிக்கப்படும், நீண்ட மயிர்கள் சேகரிக்கப்பட்டு, உள்ளுர் தரகரூடாக சேகரிக்கபட்டும், திருப்பதி தேவஸ்தானத்தில் வேண்டுதலுக்காக மழிக்கப்படும் மயிர்கள் திருப்பதி தேவஸ்தானத்திடம் இருந்து பெறப்பட்டும், மொத்த ஏற்றுமதியாளரரூடாக இத்தாலிய நாட்டிற்கு ஏற்றுமதியாகிறது. இப்படி ஏற்றுமதி செய்யப்படும், ஒவ்வொரு கிலோ மயிருக்கும், சுமார் இருநூறு யூரோக்கள் வழங்கப்படுகிறது.

இத்தாலிக்கு இறக்குமதியாகும் இந்திய மயிர்கள், இரசாயணச்சுத்திகரிப்புக்கு உட்படுத்தப்பட்டு, அதன் கருமைநிறம் அகற்றப்படுகிறது. கருமைநிறம் இழந்த வெண்முடிகளுக்குத் தேவையான வண்ணம் ஏற்றப்பட்டுகின்றன. இதன்பின் நடைபெறும் தரப்பிரிப்பிப்பில், வண்ணமூட்டப்பட்ட மயிர்களுக்கிடையில், கறுப்பு நிறத்தில் காணப்படின், அம்மயிர்கற்றைகள் மீளவும், இந்தியாவுக்குப் பயனப்படுகின்றன. அங்கு வைத்து அவை குறைந்த கூலிக்குக் கிடைக்கும் தொழிலாளர்களின் மூலம் துல்லியமாகத் தெரிவு செய்யப்பட்டு, மீளவும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இறுதியாக வந்து சேரும் தெரிவு செய்யப்பட்ட மயிர்க்கற்றைகள், தரவாரியாக, கவர்ச்சிகரமாகப் பொதி செய்யப்பட்டு, உலகின் பல பாகங்களிலுமுள்ள, மிகப்பெரிய சிகைபராமரிப்பு நிலையங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த வர்த்தகத்தில் புழங்கும் பணப்பெறுமதிகளைக் கேள்விப்படும் போது, ஆச்சரியமாகவிருந்தது. மிகக்குறுகிய காலத்துக்குள் இவ்வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் சம்பாதிருப்பது லட்சங்களில் அல்ல கோடிகளில். விவரணத்தின் இறுதியில் வெளிப்பட்ட வார்த்தைகள்தான் முக்கியமானவை.

வெளிநாடுகளில் தற்போது அதிகரித்து வரும் இயற்கைப்பொருட் பாவனை ஈர்ப்பும், பெண்களிடையே அடர்த்தியான நீண்ட முடிமீது ஏற்பட்டுள்ள பெருவிருப்பும், இத்தகைய தலை மயிர் வர்த்தகத்திற்கான சந்தை வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதை நிவர்த்தி செய்ய இந்திய்ர்களின் தலைமயிர்கள் நீளமாகவும், அடர்த்தியாகவும், இருப்பதனால் , இந்தியா இவ்வர்த்தகத்தில் முக்கிய கவனிப்புப் பெறுகிறது. நாளொன்றுக்கு சுமார் இருபதினாயிரம் இந்தியர்கள், தங்கள் மயிர்களை மத ரீதியான நம்பிக்கையின் அடிப்படையில் வழிப்பார்களாம். அவர்களுக்கு இலகுவில் நன்றாக மயிர் வளர்ந்துவிடும். ஒருவர் மற்றுமொரு தடவை மயிர் வழிக்காவிடினும் கூடக் கலையில்லை. இந்தியாவில் அதியுயர் சனத்தொகையிருப்பதனால், அதற்கும் மேலாக மதரீதியான நம்பிக்கை வலுத்திருப்பதனால், இந்த மயிர்க் கொள்வனவில் தடங்கல் கிடையாது. இவ்வாறு அதீதமான நம்பிக்கையோடு கூறுகின்றார்கள் மூன்று ஹெலிகாப்டர்கள், ஆடம்பர பங்களா, என அட்காசமாகப்பொருள் சேர்த்திருக்கும், இவ்வர்த்தகத் தொழிலதிபர்கள்.

00000000000000000000000000000000000000000000000000000000000000

கிறிஸ்டினாவின் முடியழகில் மயங்கிய ஸ்டெல்லா, அது இயற்கை முடிதான் என்பதை, கிறிஸ்டினாவிடம் கேட்டு, மீளவும் உறுதி செய்கின்றாள்.

கிறிஸ்டினா விடைபெற்றுச் செல்ல, ஸ்டெல்லா சிகை பராமரிப்பு நிலையத்திற்குள் நுழைகின்றாள். வேறெதற்கு, தனது முடியையும் நீளமாக அடர்த்தியாக மாற்றிக்கொள்ளத்தான். ஏனென்றால் ஐரோப்பிய ஆண்களுக்கு நீள் முடி மங்கையரைத்தான் நிரம்பப் பிடிக்கிறதாம்...

தலைமயிரை மழித்து, மொட்டையிட்டிருப்பவர்களைப் பார்த்து, "திருப்பதியா, பழனியா? " எனக்கேட்பதுண்டு. இனி, பாரிஸா இத்தாலியா? எனக் கேட்கலாமோ?.

Saturday, February 17, 2007

சாகர சங்கமம் - எண்ணங்கள்

சாகரனை எனக்குத் தெரியாது. சாகரனின் மறைவின் பின்னரே சாகரனைப் பற்றி அறியத் தொடங்கினேன். தமிழ்மணத்தில் வந்த அஞ்சலிப்பதிவகளைப் பார்த்துக் கொண்டிருந்த வேளையில் மதிகந்தசாமி தொடர்பு கொண்டு, எனது வானொலி நிகழ்ச்சியில் சிறு நினைவுக்குறிப்புச் செய்ய முடியுமா எனக் கேட்டிருந்தார். அவர் கேட்கும் போது சென்றவார வானொலி நிகழ்ச்சி, ஒலிபரப்புக்காக இணையத்தொடர்பில் ஏற்றப்பட்டுவிட்டதென்பதைச் சொல்லிவிட்டு, இத்தகைய முக்கியத்துவம் நிறைந்த இளைஞருக்கு தனியாக ஒரு அஞ்சலி நிகழ்ச்சியை செய்வது கூடப் பொருத்தமாக இருக்குமெனத் தெரிவித்தேன். தேனீ உமர் அவர்களுக்குச் செய்யத் தவறிவிட்டதையும் நினைவில் கொண்டேன். தெரிவித்த மாத்திரத்தில், சாகரனைப் பற்றித் தெரிந்து கொள்ள அவரது பதிவுகளின் சுட்டிகளையும், பலரது தொலைபேசி இலக்கங்களையும், மின்மடல் முகவரிகளையும் தந்தார்கள். சாகரன்பற்றிய பதிவுகளைஇட்டிருந்த நண்பர்கள் சிலரை நானும் தெரிவுசெய்தேன்.

உலகளாவிய ரீதியில் தமிழ்மொழிக்கெனச் செயற்பட்டவனின், மறைவுக்கு உலகப் பரம்பலில் இருந்து அஞ்சலிகள் வரக்கூடியதாக இருக்கும் வகையில், நண்பர்களுக்கு அழைப்பு விடுத்தேன். விடுத்தமாத்திரத்தில் பலரும் விரைந்து வந்து பங்களித்தார்கள். சிலர் விருப்பம் தெரிவித்த போதிலும், உரையாட முடியாமல் தவித்தார்கள். சிலநண்பர்கள் ஒலிப்பதிவின் போது அழுதேவிட்டார்கள். நண்பர் கே.வி.ராஜா பேசமுடியாது விக்கித் நின்றுகொண்டார். சக வலைப்பதிவாளனின் இழப்பில் நேசமுடன் இவர்கள் கலந்து கொண்டது நெஞ்சுக்கு நிறைவாக இருந்தது. அவர்களுடைய உணர்வுகளைக் கலைக்காது, ஒலிப்பதிவுகளைத் தொகுக்க மிகுந்த சிரத்தையெடுக்க வேண்டியிருந்தது. பதிவுக்குத் தேவையான எழுத்துப்பிரதியை உருவாக்குவதிலும், இசைக்கோப்புக்குத் தேவையான இசைகோப்புக்களைத் தேடியெடுத்துத்தருவதிலும், ஈழத்து நண்பர்கள், நேரடி இணையத்தொடர்பில் நின்று, நேரகாலம் பாராது உதவினார்கள்.
நண்பர் சிந்தாநதி தேவையான படங்கள் அனைத்தையும் மின்மடலில் தந்துவினார். இப்படியாக நண்பர்கள் பலரும், தந்த சிறப்பான பங்களிப்புக்களுடன் முடிந்தவரையில் ஒலிப்பதிவாக, நாம் முன்னால் வாழ்ந்து மறைந்த சாகரனுக்கு, அனைத்து வலைப்பதிவர் சார்பிலும், அஞ்சலி செய்துள்ளோம்.

இணைந்து பணியாற்றிய அனைவர்க்கும் நன்றிகள்.

அஞ்சலிப் பதிவுக்கு இங்கேSunday, January 21, 2007

புதிய முயற்சி !

நண்பர்களே!

புத்தாண்டில் ஒரு புதிய முயற்சி. புதிய முயற்சி என்று சொல்லலாமோ எனத் தெரியவில்லை. ஆனாலும் எடுத்துக்கொண்ட விடயத்தினடிப்படையில் புதிய முயற்சி எனச் சொல்கின்றேன். புதிர் போதும்...


..விடயம் இதுதான். ஐரோப்பாவிலிருந்து 24 மணிநேர தமிழ்ஒலிபரப்புச் சேவையினை வழங்கிவரும், ஐரோப்பியத் தமிழ் வானொலி யில், கானம் கலைக்கூடத்தின் தயாரிப்பில், '' இணையத்தில் இன்பத்தமிழ் '' எனும் வாரந்தர நிகழ்ச்சியொன்றைத் தயாரித்து வழங்கத் தொடங்கியுள்ளேன்.


பிரதி ஞாயிறு தோறும் ஐரோப்பிய நேரம் மாலை 19.30 மணிக்கு, இந்நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது. இவ்வொலிபரப்பினை செய்மதியூடாக ஐரோப்பிய நாடுகளிலும், மத்திய கிழக்கு நாடுகளிலும், பண்பலை வரிசைகளில், கனடாவில் ரொறன்ரொவிலும், மொன்றியலிலும், இணையவழியாக உலகம் முழுவதிலும் இவ்வொலிபரப்பினைக் கேட்கலாம்.


இந்நிகழ்ச்சியில், இணையப்பரப்பில் தமிழ்கூறு நல்லுலகம் சார்ந்த படைப்பாளர்கள், பதிவாளர்கள் பலரதும் , நல்ல படைப்புக்களை, எழுத்துக்களை, ஒலிவடிவமாக்கி வான்பரப்பில் தவழவிட முனைகின்றேன்.
அந்த வகையில் தமிழ்மணத்தில் வலைப்பதியும், சகநண்பர்கள் சிலரது படைப்புக்களை நிகழ்ச்சியில் சேர்த்துக்கொள்ள அனுமதி கேட்டபோது, மகிழ்ச்சியோடு சம்மதித்துள்ளார்கள். மேலும் சிலரிடம் கேட்கவுள்ளேன். அவ்வப்போது நல்ல கருத்துக்கள், சிந்தனைகள் தாங்கி வரும் படைப்புக்களை இனைத்துக்கொள்ள எண்ணியுள்ளேன். அத்தருணங்களில் நிச்சயம் படைப்புக்களைப் பதிவு செய்த நண்பர்களிடத்தில் தொடர்புகொண்டு அனுமதி பெற்றுக் கொள்வேன்.


இந்நிகழ்ச்சி மூலம், வலைப்பதிவுலகுக்கும் அப்பால் உள்ள தமிழ்மக்களிடத்தில், இணையப்பதிவுகளில் உலாவரும் சிறப்பான கருத்துக்களை கொண்டு செல்லலாம். நிகழ்சிகளின்போது வலைப்பதிவுகள் பற்றித் தெரியப்படுத்துவதன் மூலம், மேலும் பல புதியவர்கள் வலைப்பதிவுகள் பற்றி அறியவும், பதியவும், கூடும் என்றும் எண்ணுகின்றேன்.

முதலாவது நிகழ்ச்சி இன்று 21.01.07 ஞாயிறு மாலை ஒலிபரப்பானது. சென்ற வருடத்தில் இங்கே நான் பதிவு செய்த ஒரு பாடல்பதிவுடனும், நண்பர் வசந்தனின் ஒரு குரற்பதிவுடனும், இந்த முதலாவது நிகழ்ச்சி அமைந்தது. முதலாவது நிகழ்ச்சியில் இருக்கக்கூடிய குறைகள் சிலவற்றுடன், ஒலிபரப் பான அந்நிகழ்ச்சியின் ஒலிப்பதிவினை கீழேயுள்ள செயலியில், கேட்கலாம்.


நண்பர்களே! ஒலிப்பதிவினைக் கேட்டு, உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள். உங்கள் கருத்துக்கள் நிகழ்ச்சியை மேலும் செழுமைப்படுத்துமென்று நம்புகின்றேன்... செய்வீர்களா?

Inpaththamil 1.wma

Sunday, January 14, 2007

எங்கள் பொங்கல்

பொங்கலோ பொங்கல்....

தமிழரின் தனித்துவமான பண்டிகை. தரணியெங்கும் பரந்து வாழும் தமிழர்களெல்லாம் மனமகிழ்ந்து கொண்டாடும் ஒரு திருநாள். உழவர்கள் தங்கள் தொழிலுக்கு உறுதுணையாய் நின்ற பகலவனுக்கு நன்றிச்சொல்லி, தங்கள் விழை பயன்பொருட்களைப் படைத்து மகிழ்வுறும் நாள் இந்த இனிய நாள், பொங்குதிருநாளாக எங்களுக்கும் இருந்தது. ஒரு காலத்தில்...ஈழத்தின் தமிழர்பகுதிகளிலெல்லாம் பெரு மகிழ்வாகக் கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு பகுதிகளிலும், அவ்வப் பகுதிகளுக்கான தனித்துவங்களுடன் கொண்டாடப்பட்டது. பொதுமையில் ஒரேவிதமாகக் காணப்பட்ட போதும், அந்தத்தப் பகுதிகளுக்கான சிறப்புக்களும் சேர்ந்தே மிளிர்ந்தன. ஆனால் எல்லா இடங்களிலும் நகர்புறங்களைவிட, கிராமங்களில் இந்தப் பண்டிகையின் சோபிதமே அலாதியானது. இது உழவர் திருநாளல்லவா?. அந்த உன்னதமானவர்களின் உறைவிடம் கிராமங்கள்தானே?

ஈழத்தின் வடக்கே, பொங்கல் சற்று இந்து மதபாரம்பரியம் சார்ந்ததாக இருக்கும். ஆனாலும் தமிழர் திருநாளின் தனித்துவங்கள் தவறிப்போவதில்லை. காலையில் எழுந்து அனைவரும் குளித்து, புத்தாடைகள் அணிந்து, வீட்டின் முற்றங்கள் சாணகத்தால் மெழுகப்பட்டுக் கோலங்கள் வரையப்பட்டு, குத்துவிளக்கு, நிறைகுடம் வைத்து, நிறைகுடத்திற்குப் பக்கத்தில் முகம்பார்க்கும் கண்ணாடி ஒன்றும் அலங்கரித்து வைத்து, அடுப்பு மூட்டுவார்கள். அடுப்பு மூட்டுவதற்காகப் பெரும்பாலும், காய்ந்த தென்னம் பாளைகள் விறகாகப் பாவிப்பார்கள். பொங்கல் பானைகளின்( பிற்காலத்தில் அவை அலுமினியப்பானைகளாகின) கழுத்துப்பகுதிகளில், மாவிலை கட்டி, விபூதிப்பூச்சுகளும், சந்தனம் குங்குமம் ஆகியவற்றால் பொட்டிட்டும் , அலங்கரிப்பார்கள். தண்ணீரும் பாலும் சேர்ந்துப் பொங்கல் பானையை நிரப்பி, அடுப்பிலேற்றி சூடாக்குவார்கள். பானையிலுள்ள பாலும்நீரும் சூடாகி நுரைத்துப்பொங்கும்போது சிலர் ‘பொங்கலோ பொங்கல் ‘ என்பார்கள், சிலர் சூரியனைப்பார்த்துக் கும்பிட்டுக் கொள்வார்கள். பொங்தித்தள்ளும் அந்த நுரைத்தபால் எந்தத்திசையில் வழிகிறது என்று பார்த்துக் கொள்வார்கள். கிழக்கு, வடக்கு, நோக்கி பால்வழிந்தால் நல்லதென மகிழ்வார்கள். சிலர் பொங்கற்தண்ணீரைச் சேமித்து வைத்து, பின் தங்கள் விளைநிலங்களுக்குத் தெளிப்பார்கள்.சிறுவர்கள் சேர்த்துக்கட்டி வைத்திருக்கும், வெடிக்கட்டுக்களைக் கொழுத்தி வெடிவெடிப்பார்கள். வெடிகளின் அதிர்வை வைத்தே அயல்வீடுகளில் பொங்கல் பொங்கிற்றா என்பதை அறிந்து கொள்ளலாம்.

பொங்கி முடித்ததும் படையல் செய்வார்கள். தலைவாழையிலை விரித்து, சர்க்கரைப்பொங்கலிட்டு, அதன்மேல் சற்றுத் தயிர்விட்டு, அதன்மேல் வாழைப்பழத்தை உரித்து வைத்து, சுற்றிவர பண்டிகைக்காகத் தயாரிக்கப்பட்ட பொங்கல் பட்சணங்களும் சேர்த்துப் படைப்பார்கள். குடும்ப மொத்தமும் ஒன்று கூடிநின்று, சூரியனைப்பார்த்து தேவாம்பாடித் துதிப்பார்கள். பின் அனைவரும் பொங்கல் பகிர்ந்துண்டு மகிழ்வார்கள். சிலர் ஆலயம் சென்று வழிபாடியற்றிபின் வீடு வந்து உண்பார்கள். எப்போதும், பானையிலிருக்கும் பொங்கலை விடவும், வாழையிலையில் படையல் செய்த பொங்கலை, தயிருடன் சேர்த்துச் சுவைப்பது, மிகுந்த சுவையாக இருக்கும்.

பொங்கலன்று மாலைகளில், சில இடங்களில் மாட்டுச்சவாரியும் இடம்பெறும். பொங்கலுக்கு மறுநாள், மாட்டுப்பொங்கல் நடைபெறும். இது யாழ்ப்பாணத்தில் அநேகமாக மாலைவேளைகளிலேயே நடைபெறுவதைக் கண்டிருக்கின்றேன். மாடுகளைக் குளிப்பாட்டி அலங்கரித்து, மாடுகட்டும் இடங்களிலேயே பானை வைத்துப்பொங்கிப் படைத்து, பின் பொங்கலை மாடுகளுக்கு தீனியாக்கி மகிழ்வார்கள்.

தங்கள் தொழிலுக்குத் துணையாகவிருந்த மாடுகளை மகிழ்ச்சிப்படுத்துவதாக அமையும், இம் மாட்டுப்பொங்கலும், சூரியனுக்கு நன்றி சொல்வதாக அமையும் தைப்பொங்கலும், தமிழர்களின் நன்றியுணர்வுக்குச் சான்றான ஒரு பண்டிகை எனவும் சொல்லலாம். தென் தமிழீழத்தின் பொங்கல் சற்று வித்தியாசமாக இருக்கும். எப்படியென்று அறிய ஆவலா? இங்கே வாருங்கள்.

Monday, January 08, 2007

நன்றி சொல்வதென்பது நாகரீகமாகாது.

இந்த வருடத்தின் முதல் நாளிலேயே இந்தப்பதிவை எழுத வேண்டுமென்ற எண்ணமிருந்திருந்தாலும், எப்படியோ தள்ளிப் போயிற்று. ஆனாலும் அது கூட நல்லதற்குத்தான் போலும்.//பசியால் துடிப்பவனுக்கு முதலில் ஒரு துண்டு மீனைக் கொடுத்து அந்த வேளை பசியாற்றுங்கள்.அப்போதுதான் நீங்கள் மீன் பிடிக்கும் டெக்னிக்கை கற்றுத்தரும்போது அதைக் கற்றுக்கொள்வதற்கான சக்தியாவது அவனுக்குக் கிடைக்கும்//

கருத்தாளர்களும், களமாடுபவர்களும், புரிதலில் வேறுபடும் புள்ளியிது. அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்.

இது ஆழியூரானின் பதிவில் நான் இட்ட பின்னூட்டக்கருத்து. இது ஏதோ இந்தப் பதிவைப்படித்ததாலோ அல்லது இதனூடு தொடர்புபட்ட பிற பதிவுகளைப்படித்ததினலோ மட்டும் வந்ததில்லை. இதுவரையிலான என் வாழ்க்கைக்காலத்தில் பலதடவைகள் எனக்குக் கிடைத்த அனுபவத்தில் வந்த வார்த்தைகள் அவை. கண்ட உண்மையும் அதுதான்.


ஒரு இக்கட்டான சூழலை, கருத்தாளர்கள், சிந்தனையாளர்கள் கையாளும் தன்மையிலும், செயலாற்றுவோர் , அனுகும் தன்மையிலும், இந்த வேறுபாடு தெரியும். உடனடித் தேவையை அல்லது உடனடி உதவியை வழங்குவதில் , எப்போதும் சிந்தனையாளர்களை விடச் செயலாளார்கள் ஒரு படி முன்னேயே நிற்பார்கள். அதேசமயம் ஒரு ஒரு செயற்திட்டத்தைச் ஒழுங்குறச் செயற்படுத்துவதில், செயற்பாட்டாளர்கள் தவறிவிடுவதும் உண்டு. இதற்கு முக்கியமான காரணம், உதவிசெய்வதில் அவர்களை உந்தித்தள்ளும் உணர்வுதான். அதீத உணர்ச்சி வசப்படுதல் காரணமாக புறச்சூழ்நிலை பற்றிய சிந்தனையை இழந்துவிடுவது. இந்த உணர்ச்சி வசப்படுதலைக் கட்டமைத்துச் செலாற்ற எல்லோராலும் முடிவதில்லை. உதவி என அபயம் எழுப்புவோர் உள்ளங்களில் எப்போதும் இடம்பிடித்துக் கொள்பவர்கள் செயலாற்றுபவர்களே.

சென்ற ஆண்டிலேயே வலைப்பதிவு செய்ய வந்த என்னை, தங்கள் உதவும் பண்பால் உளம்கவர்ந்து கொண்ட சில பதிவர்களைப் பாராட்டத் தோன்றுகிறது. தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடிப்பது, படைப்பது, என்பதற்கும் அப்பால், செயல்முனைபவர்களாத் தென்பட்ட அவர்களை சிறப்பிக்க வேண்டுமென்பதே என் நோக்கம். இத்தகைய உதவிச் செயற்பாடுகள் ஏலவே முன்னரும், சுனாமி அனர்த்தத்தின் போதும், பிற சந்தர்பங்களிலும், நடந்துள்ளதாக மூத்த வலைப்பதிவாள நண்பர் குறிப்பிட்டிருந்தார். அத்தகைய செயற்பாட்டாளர்களையும், அவர்களது செயற்திறனையும் விதந்து கொண்டே, சென்ற ஆண்டின் செயற்பாட்டாளர்களைக் கண்டு கொள்வோம்.

என்றென்றும் அன்புடன் பாலா , திரு , செந்தழல் ரவி ஆகிய இந்த மூன்று நண்பர்களும் ஆற்றியுள்ள, ஆற்றிவருகின்ற பணி எப்போதும் பாராட்டத்தக்கது.


என்றென்றும் அன்புடன் பாலா:-

செப்ரெம்பர் மாதத்தில், மாணவி கெளசல்யாவுக்கு உதவி , நவம்பர் மாதத்தில், ஸ்வேதா உயிர்வாழ உதவி , டிசம்பர் மாதத்தில், லோகப்பிரியாவுக்கு உதவி , என தன்னாலான உதவிப்பணிகளை முன்வைத்து, வலைப்பதிவு நண்பர்கள் பலரையும் ஒன்றினைத்து, தொடர்ந்து முன்முனைகிறார். பணிகளை முன்னெடுப்பது மட்டுமல்ல, தொடர்ந்து அவற்றின் செயற்திறனையும், அவதானித்து அவ்வப்போது அறியத்தந்து கொண்டுமிருப்பது அவரது பணிகளின் மேல் நம்பிக்கையையும், ஆர்வத்தினையும் ஏற்படுத்துகிறது. தொடருங்கள் பாலா!


திரு:-

கண்ணீருடன்... பதிவில் தொடங்கி, அடுத்தடுத்து பதிவுகள் மூலம் நண்பர்கள் பலரின் ஆலோசனைகள் பெற்று , ஈழத்தமிழர்களுக்கு உதவக் கையெழுத்து இயக்கம் எனத் தொடங்கிப் பல்லாயிரக்கணக்கான மக்களின் கையெழுத்தினைப் பெற்று, ஐ.நா சபைக்கு அனுப்பும் பெரும்பணியை நிறைவேற்றியுள்ளார். அதற்கும் மேலாக, தன் தமிழகப் பயணத்தின் போது, ஈழத்தமிழ் அகதிகள் தங்கியுள்ள அகதிமுகாம்களுக்குச் சென்று, அகதிகள் நிலைகுறித்தும், அவர்களுக்கு மேலதிக உதவிகளை எப்படிச் செய்வது என்பதும் பற்றியும் ஆராய்ந்துள்ளார். அரசியலுக்கப்பால், துன்பப்படுகின்ற மக்களுக்கான மனிதாபிமான உதவிப்பணியாக, அதை முன்னெடுத்து முனைவது பாராட்டுதலுக்குரியது. இதை ஈழத்தமிழர்களுக்காக ஆற்றிய காரணத்தால், ஈழத்தமிழன் எனும் வகையில் ஈரலிக்கும் இதயமுடன் பார்த்தபோதும், இங்கே நான் பாராட்டுவது, அவரது மனிதாபிமானம் எனும் மானுடநேசிப்பிற்காகவே.


செந்தழல் ரவி:-

ஆண்டின் இறுதிப்பகுதியில் அதிரடியாக, ஏழைப்பெண் மகாலட்சுமிக்கு ... உதவிகோரிப் பதிவிட்டுக் , காரசாரமான கருத்துப்பகிர்வுகளுடன் தளர்ந்துபோகாமல், மகாலட்சுமி கல்விக்கு உதவி , பின்னர் என்றென்றும் அன்புடன் பாலாவின் பணிகளுடன் இணைந்துள்ளார்.

இது என்னவோ பார்ப்பதற்கு இலகுவான பணிகளெனத் தோன்றிடினும், செயலாக்கும் போது பல சிரமங்களையுந் தரக்கூடியவை. அத்தகைய தடைகளனைத்துயும் தாண்டி, வெற்றிகரமாக இப்பணிகளை நிறைவேற்றியுள்ள இந்த நண்பர்களுக்கு (நண்பர்களுக்குள்) நன்றி சொல்வதென்பது நாகரீகமாகாது என்பதால் அவர்களைப் பாராட்டி வாழ்த்தத் தோன்றியது.
இவர்களை மட்டுமல்ல, இவர்களோடு இப்பணியில் பங்கு கொண்ட பலரும் இருக்கின்றார்கள். அத்தனை உள்ளங்களையும் உவகையுடன் பாராட்டுவோம்.

நண்பர்களே! உங்கள் உந்துதிறன், புத்தாண்டில் மேலும் பல புதிய பணிகளுக்கு வித்திடட்டும். பல்லுயிரும் பலன் பெறட்டும். வலைப்பதிவுலகு வளமான பணிகள் பலவற்றை வளர்த்தெடுக்கட்டும்

பாலா!
என்றென்றும் இது போன்றே அன்பாயிருங்கள்.

திரு!
உங்கள் பெயரில் போலவே செயலிலும் திரு நிறையட்டும்.

செந்தழல் ரவி!
உங்கள் சிந்தனைகள் மேலும் சிறப்படையட்டும். அதனால் பசித்திருக்கும் பலரும் பயன் பெறட்டும்.

- இனிய அன்புடன்
மலைநாடான்