Sunday, December 31, 2006

புத்தாண்டு வாழ்த்துக்கள்!

அன்பான நண்பர்களே!

உங்கள் அனைவர்க்கும், உங்களது குடும்பத்தினர்க்கும் இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள். 2007ம் ஆண்டு உங்களுக்கு எல்லாவகையிலும், இனிதாக அமையட்டும். அதுபோலவே எங்கள் தேசத்தில் அல்லறும் எமது உறவுகளின் வாழ்வில் இன்பம் சேர வகை செய்வோம்.


Wednesday, December 20, 2006

தேசத்தை நேசித்தவனுக்கு !



தமிழீழ தேசத்தை நேசித்த தேசத்தின் குரலுக்கு!
தேம்பும் குரலில் ஓர் அஞ்சலி.











இசை: வர்ண. இராமேஸ்வரன்

பாடியவர்கள்: வர்ண. இராமேஸ்வரனும் குழுவினரும்

தயாரிப்பு: கலைபண்பாட்டுக்கழகம். கனடா

Sunday, December 17, 2006

நத்தார் பாப்பாவின் கிராமம்.

நத்தார்க் கொண்டாட்டங்களின் மகிழ்ச்சியில், கலந்திருப்பது நத்தார்பாப்பாவின் வருகை. கிறிஸ்துவின் பிறப்புக்கும், நத்தார் தாத்தாவின் கதைக்கும், எதுவித தொடர்பும் இல்லையெனினும், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒரு குதுகலத்தைத் தருவது என்பது மறுப்பதற்கில்லை.

வணிகப்பொருளாதார சமூக அமைப்பு, இயல்பு வாழ்க்கையின் மரபுக்கூறுகள் பலவற்றையும், தூக்கிச் சாப்பிட்டு ஏப்பமிட்டு நிற்கும் இக்காலத்தில்,
வெளிநாகளிலுள்ள மத்தியதர வர்க்கமும், மறுவடிவாக்கம் செய்யப்பட்ட இக் கொண்டாட்டங்களின் கிடுக்கிப்பிடிக்குள் சிக்கி முனகிக் கொள்வது தெளிவாகத் தெரியத் தொடங்கிற்று.

வாடித்துவழும் மக்கள் கூட்டத்தை வணிகசமூகம் அவ்வளவு விரைவாக விட்டுவிடுமா என்ன? விருப்பந் தரும் விடயங்களை, அலங்காரமாகத் தருகிறது, அதனூடு நுகர்வோரை அழைத்துக் கொள்கின்றது. அப்படி ஒரு வணிகவளாகத்தின் மத்தியில் செயற்கையாக உருவாக்கப்பட்டிருக்கும், நத்தார் தாத்தா கிராமத்தை காணலாம் வாருங்கள்.

Wednesday, December 06, 2006

ஒன்றாய் எல்லோரும்...

இது ஓர் இத்தாலியக் கவிஞரின் கவிதை என்பது மட்டுமே தெரியும். கவிஞர் பற்றிக் கூட ஏதும் நான் அறிந்திருக்கவில்லை. தன் பாடசாலையில் பன்மொழிபற்றிய அறிமுகத்துக்காகவும், வெளிநாட்டவர் தொடர்பான கருத்தியலாக்கதிற்குமான, நிகழ்வொன்றில் காட்சிப்படுத்துவதற்காக, தன் தாய்மொழியான தமிழ்மொழியில் இக்கவிதையை மொழிபெயர்க்க என் உதவியை நாடிவந்தாள் எங்கள் சிறுமி ஒருத்தி. கவிதை நன்றாக இருந்ததால் உங்களுடனான பகிர்தலுக்காக இங்கே...



Fossiamo tutti...
di Ignazio Drago


Fossiamo tutti cosi vicino,
uomini e bambini,
da girare spalla a spalla,
rayya bianca,nera e gialla:
tutti insieme sul prato del mondo,
in un grande girotondo,
di tanti colori innocenti
faremmo un colore soltanto,
di tanti diversi accenti
un unico canto;
Piu nessuno sarebbe straniero:
palpiterebbe davvero,
nell’ansia di ogni cuore,
lo stesso messaggio d’amore.

Photobucket - Video and Image Hosting


ஒன்றாய் எல்லோரும்..
எழுதியது: இன்னியாற்சோ ட்ராகோ


வெள்ளை கறுப்பு மஞ்சள் என்றெண்ணாது,
பெரியோர் சிறியோர் அனைவரும் ஒன்றாய்,
தோளொடு தோள் சேர்த்து,
உலகப்பூங்காவின் பெரும் பரப்பில்
பூ வட்டம் விளையாடும் போது,
உணர்வோம்,
அனைவரும் ஓர் நிறமென.
அவ்வேளை,
இதயங்கள் இணைந்து,
அன்பின் மிகுதியால் உண்மை பாடும்,
யாரும் அந்நியர் இல்லையெனும்
செய்தி சொல்லி.

Friday, December 01, 2006

என்னவென்று சொல்வது ?

இது நேற்று (30.11.2006) வெளியாகிய Corriere della sera எனும் இத்தாலியப்பத்திரிகையின் மாலைப்பதிப்பில் முதன் பக்கத்தில் பிரசுரமாயுள்ள கேலிச்சித்திரம்.






பாப்பாண்டவர் சொல்லும் வாசகத்தின் தமிழாக்கம்: '' நீயூம் இறைவனின் ஒரு ஆட்டுக்குட்டிதான் ''

இச்சித்திரம் சொல்லும் கருத்தாக்கத்தை என்னவென்று சொல்வது?

Sunday, November 26, 2006

கார்த்திகைத் தீபங்கள், பூக்கள், வேர்கள்.

முன்பெல்லாம் கார்த்திகை மாதம் வந்தால், பூரணை நாளில் வரும் விளக்கீடு நாள்தான் நினைவுக்கு வரும். இந்தியாவில் தீபாவளிநாட்களில் நடக்கும் தீபஅலங்காரங்களுக்கு இணையாக இவை இருக்கும். வீடுகள் கோவில்கள் வேலையிடங்கள் என எல்லாவிடங்களிலும், தீங்கள் ஜொலிக்கும். வளவுகளின் கோடிகளிலும், தோட்டந்துரவுகளிலும்,கூடச் சிறுதீப்பந்தங்கள் எரிந்து கொண்டிருக்கும். நாட்கள் சிலவற்றுக்கு முன்பே இந்த அலங்காரத்திற்கான ஆயத்தங்கள் ஆரம்பமாகிவிடும். அன்றைய தினத்தில் அரங்கேற்றுவதும், அரங்கேறியவைகளை பார்த்து ரசிப்பதிலும், சிலவேளைகளில் பகைகொள்வதிலும், பொழுதுகள் கழியும். கார்த்திகை மாதத்தீபவிழாவிற்குக் கதைகள் பலவிருந்தாலும், இதற்குமேல் பெரிதாக எதையும் என்னுள் ஏற்படுத்தியதில்லை.


கார்த்திகைப்பூக்களைக் காணும் வேளைகளில், அதன் வர்ணங்களும், வடிவும் மனதுக்கு பிடிந்திருந்ததுதான், ஆனால் அன்றைய பொழுதுகளில் அதன்மீதான் நேசிப்புக்கு, அழகான பூ என்பதற்கு மேலாக எந்தவித அர்த்தப்பாடும் இருந்திருக்கவில்லை.


ஆனால் இன்று, கார்த்திகைத்தீபங்கள் என்றால் நினைவுக்கு வருவதெல்லாம், எம்மோடு கள்ளன் பொலிஸ் விளையாடிய, சினிமாவுக்குச் சேர்ந்து சென்ற, அர்த்த ராத்திரிகள் வரைக்கும் அமர்ந்திருந்து கதைகள் பல பேசிய, பாடசாலைக் காலங்களைப் பங்குகொண்ட, நண்பர்களின் முகங்கள்தான். கண்மூடிக்கொண்ட கடைசிக்கணங்கள் வரைக்கும், சிரித்துப் பேசிய அந்தச் சிங்கார முகங்கள்தான். கனக்கும் நினைவுகளுக்கும், கண்ணீர்த்திரைகளுக்கும் மத்தியில் வந்து கண்சிமிட்டிச் செல்வது எம் மாவீரர் முகங்கள்தான். இதயம் களத்துபோகும் கார்த்திகை இருபத்தியேழு.....



கார்த்திகைப்பூக்களை இப்போது காணும்போதெல்லாம், காதலிக்கத் தோன்றுகிறது. நேசிப்பிற்குரிய நண்பர்களின் முகங்களை நினைக்கத்தோன்றுகிறது. எதுவும் பேசாது எடுத்துணரத்தோன்றுகிறது. தொட்டுத் தழுவிச் சுகம் காணத் தோன்றுகிறது. கார்த்திகைப்பூவுக்கும் அர்த்தம் அதிகம் தெரிகிறது, அதன் அழகைப்போல,...
இந்த மாற்றங்களுக்கெல்லாம் காரணமான வேர்களெல்லாம் மண்ணின் அடியே மறைந்துபோய் படர்ந்திருக்கின்றன. பார்வைக்குப் புலப்படா வேர்களும், வேர்களின் மூலமும், வெளிப்படாது ஆழப்புதைந்து மறைந்துபோயிருப்பினும், ஈழத்தமிழினத்தின் இன்றைய துளிர்ப்பின் மூலம் அதுவே. இனிவரும் காலங்களில் தமிழின் வாழ்வும் அதுவே....

நினைப்போம், நெகிழ்வோம், நெஞ்சாரவாழ்த்துவோம்...









பாடல் இடம்பெற்ற இறுவட்டு: அன்னைதமிழ்
வெளியீடு: சுவிஸ் பணியகம் - நன்றி

Wednesday, November 22, 2006

சகானா நீ இனிமையா சுகமும் கூட

கே.பாலசந்தரின் ''இரயில் சிநேகம்'' தொலைக்காட்சி நாடகத்தில், வந்த சகானா ராகப்பாடலைப்பற்றி, இரன்டு நாட்களுக்கு முன் பிரியமுடன் கே.பி. பதிவில் பார்த்தபோது எனக்கு மீண்டு வந்த ஞாபகங்களில், கீழேயுள்ள கவிதையும் அடங்கும்.

பாலசந்தர் இயக்கிய தொலைக்காட்சி நாடகங்களில், வித்தியாசமான கதை, வித்தியாசமான கமெராக் கோணக்கள், என அன்றைய பொழுதுகளில் என்னைக் கவர்ந்திருந்தது இரயில் சிநேகம். குறிப்பாக இப்போதுள்ளது போன்று பெரியதிரைக் காட்சிப் பெட்டிகள் வந்திராத அந்த நேரத்தில், சின்னத்திரை உண்மையில் சின்னத்திரையாக இருந்தகாலத்தில், இரயில் சிநேகத்தின் கமெராத் தொழில்நுட்பம், தொலைக்காட்சியில் பார்பதற்கு இதமாகவே இருந்தது.

அதைவிடச் சுகமாக இருந்தது சகானா ராகத்தில் அமைந்த இந்தப்பாடல். முறைப்படி சங்கீதம் கற்றிராத எனக்குச் சகானா ராகத்தைச் சொல்லிக் கொடுத்தது. ஆன்மா கரைந்துபோகும் வண்ணம், சோகத்தைத் தரும் அந்த ராகம் என்னுள் ஏற்படுத்திய தாக்கத்தில், அப்போ பிறந்த கவிதையிது.


சகானா
நீ மென்மையான ராகம் மட்டுமல்ல
இனிமையான சுகமும் கூட

நீ அழுதிடும் குழந்தைக்கு - தாய்
பாடும் தாலாட்டு
அலைமோதும் உள்ளங்களுக்கு - சுகமான்
இளந்தென்றல்
ஒரு சோலைக்குயிலின்
சோக கீதம் போல் - சுகமானது
உன் பாடல்கள்.

தெவிட்டாத திராட்சை ரசம் தரும்
போதைக்கிணையாகும் - உன்
ஆரோகண அவரோகண நிரவைகள்
அதியமானுக்கு ஓளவை கொடுத்த
நெல்லிக்ககனிபோல்
எனக்கு நீ

உன் ராக ஆலாபனையால் - என்
உள்ளம் உவக்கிறது
உள்ளம் உயிர்க்கிறது

சகானா
நீ மென்மையான ராகம் மட்டுமல்ல
இனிமையான சுகமும் கூட



நினைவைத்தூண்டிய பதிவாளருக்கு நன்றி.

Saturday, November 18, 2006

திரைக்குப் பின்னாலும், முன்னாலும்.

திரைப்படத்துறைசார்ந்த ஆர்வம் எப்படி வந்ததென்பதை பிறிதொரு சந்தர்ப்த்தில் சொல்கின்றேன். இங்கே சென்ற வாரத்தில் வெளிநாட்டுத்திரைப்படக் குழுவினரோடு சேர்ந்து, ஒரு சில காட்சிகளில் , பணியாற்றிய அனுபவங்கள் சிலவற்றைப் பகிர்ந்து கொள்கின்றேன்

அவர்களோடு பணியாற்றியபோது பெற்றுக் கொண்ட அனுபவத்தில் கண்டுகொண்ட சில உண்மைகள்.

தென்னிந்தியச் சினிமாவுலகம் தொழில்நுட்பத்தில் இவர்களுக்கிணையாக நிரம்பவே முன்னேற்றம் கண்டுள்ளது.


நம்மவர்கள் எங்கே கோட்டைவிட்டு விடுகின்றார்கள் என்றால், திரைக்கதை அமைப்பிலும், படத்தொகுப்பிலும் எனலாம். படத்தொகுப்புக்காக அவர்கள் எடுத்துக்கொள்ளும் தரவுகளும், அக்கறையும் நிரம்பவே எனலாம்.


நடிகர்கள் பந்தா எதுவுமில்லாமல், வெகு இயல்பாக இருக்கின்றார்கள். சமயத்தில் அவர்கள் எங்கிருக்கின்றார்கள் என்பதே தெரிவதில்லை. துணைநடிகர்களுடன், அரட்டை அடித்தபடியோ, அல்லது படப்பிடிப்பைப் பார்வையிடும் மக்களுடனோ கலந்துவிடுகின்றார்கள்.

ஒரு திரைப்படத்தில் இருக்கக்கூடிய அதிக மனிதஉழைப்பை இங்கேயும் காணலாம்.

இங்கும் இயக்குநர், சமயத்தில் படப்பிடிப்புக்காக தன் குளிர்தாங்கு அங்கியைக் கூடத் தாரைவார்த்தது விட்டுப் பரிதாபமாகத்தான் நிற்கின்றார்.

உதவி இயக்குநர்களின் நிலை இங்கு கேவலமாக இல்லாவிடினும், பரபரப்ப மிக்கதாவே இருக்கிறது. எல்லாவகையான தேவைகளையும் ஈடுகொடுக்கின்றார்கள். சமயத்துக்கு துணை நடிகர்களாகவும் தலைகாட்டுகின்றார்கள். அந்தவகையில் அடியேனுக்கும் வெளிநாட்டுத்திரைப் படத்தில் தலைகாட்டும் வாய்ப்புக்கிடைத்தது. (எங்கே படத்தைக்காணவில்லை பிரபா சத்தமிடுவது கேட்கின்றது. சற்றுப் பொறுங்கள். படத்தொகுப்பாளரின் கத்தரிப்புக்குள் காணாமல் போகாது தப்பிப்பிழைத்து திரைக்கு வந்தால், அறிவிக்கின்றேன்)



எவ்வளவுதான் கடுமையான பணியாக இருந்தபோதும், இந்தக் கலைஞர் களிடத்தில் இழையோடியிருந்த ஒருவித நட்புணர்வு உற்சாகம் தருவதாக இருந்தது.


ஏற்ற இறக்கம். உயர்வு தாழ்வு பார்க்காத, அந்த நட்புறவுக்காகவும், மேலும் நல்ல பலவிடயங்களை அறிந்து கொள்வதற்காகவும், எதிர்காலத்தில் ஒருபடத்திலேனும், முற்று முழுவதுமாக இணைந்து பணியாற்றவேண்டுமென எண்ணியுள்ளேன்.

Tuesday, November 14, 2006

துள்ளித்துள்ளி நீ பாடம்மா ( துளசிம்மா)

என் நட்சத்திரவாரத்தில் பதிவிடுவதற்கென எடுத்து வைத்திருந்த இப்பாடலை அப்போது பகிர்ந்து கொள்ள முடியாது போய்விட்டது. அதனாலென்ன, எனக்கும் என்னைப்போன்ற பல வலையுலக நண்பர்களின் பிரியத்துக்குமுரிய அம்மா, அக்கா, ரீச்சர், எனும் முப்பரிமாணங்கள் கொண்ட, மூத்த வலைப்பதிவாளர் துளசிம்மா சார்பாக இப்பாடலை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

துளசிம்மா!

பாடலை உங்களுக்கு அனுப்பி, உங்கள் பதிவிலிடலாமென்றே முதலில் நினைத்தேன். நட்சத்திரவாரத்தில் உங்களைக் குதுகலப்படுத்தலாமே தவிர, குழப்பக்கூடாது என்பதனால் உங்கள் சார்பாக இங்கேயே இட்டு விடுகின்றேன். இதுவும் உங்கள் பதிவுதான். ஓகேயா..?

துள்ளித் துள்ளிப் பாடலாமா..?

பாடல் இடம்பெற்ற படம்: சிப்பிக்குள் முத்து

பாடியவர்கள் உங்களுக்கு நன்கு தெரிந்தவர்கள்தான்.





Monday, November 13, 2006

வடக்கில்.. தெற்கிருத்தல்

நண்பர்களே! அண்மித்த சில நாட்களில் உங்களோடு பகிர்ந்துகொள்ளச் சில விடயங்கள் இருந்தபோதும், எழுதும் மனநிலை இருக்கவில்லை. எழுதவேண்டும் என எண்ணியவாறு அமர்ந்தால், எண்ணங்களை அலைக்கழிக்கும் அவலங்கள் என் மண்ணில். என்றில்லை அது ? எனக்கேட்டாலும், அண்மைக்காலங்கள் அதிக கனந்தருபவையாக, பயங்காட்டுபவையாக அமைந்து வருகிறது.... என்னத்தைச் செர்லவது..?

வேலை, வீடு, தமிழ்மணத்தில் சில வாசிப்புக்கள், சில பின்னூட்டங்கள், என்றளவில் மனம் மட்டுப்படுத்திக் கொண்டது. திரும்பத்திரும்பச் சில நினைவுகள்...சில காட்சிகள்.. வலிக்கிறது.

அந்நாட்களில் அரசர்கள் பலர் தம் அந்திம நாட்களில் “தெற்கிருந்தல் “ எனச்சொல்லி, தென் திசை நோக்கித் தவமிருப்பார்களாம் என வாசித்ததுண்டு. இன்று ஈழத்தின் வடக்கிருக்கும் என் சொந்தங்களின் நிலை கூட ஒரு “தெற்கிருத்தல் “ போலத்தான் எனத் தோன்றுமளவுக்கு, அங்கிருந்து வரும் செய்திகள் பயங்காட்டுகின்றன.

நேற்று என் நண்பனொருவன், பருத்தித்துறையிலிருக்கும் தன் தமக்கையுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளான். இன்றளவும் அம்மண்ணைவிட்டு வெளியேற விரும்பாத அவன் அக்கா, இனிப்பட முடியாது என அழுதிருக்கிறாள். ஆயிரம் அறிக்கைகள், அளவிலா மாநாடுகள், என எல்லாம் நடந்தபோதும், அம்மக்கள் வாழ்வு, மரணத்துள் வாழ்வு என்றாகிற்று.

அதியுயர் சம்பளத்தில், அரச பணியில் வாழ்வு நடத்தும் அந்தப் பெண், வாழ்வாதாரத்தை தொடர்வதென்பது பெருந்துயராகிப் போனதெனப் புலம்புமளவிற்கு நிலமை வந்துள்ளதெனில், அன்றாடக் கூலிவேலையாட்களும், கடற்தொழிலாளர்களும் படக்கூடிய துன்பம் எப்படியிருக்குமென எண்ணிப்பார்க்கப் பயமாயுள்ளது.

இராணுவச்சூழலுக்குள் செல்லும் அரச ஊழியர்களும், பள்ளி மாணவர்களும் படும் அவலங்கள் அதைவிட மோசமானவை. தினம்தினம் செத்துப்பிழைக்கும் நிலைதான். தேசிய அடையாள அட்டையுடன் செல்வோர், காப்பரனில் அவற்றைச் சமர்ப்பித்து, சோதனைக்குட்பட்டு, பின் கிடைக்கும் பிரத்தியேக அட்டையுடன் உள் நுழையவேண்டும். மாலையில் மீண்டும் திரும்பவும், அதே சடங்குகள் அரங்கேறும். அருகில் நிற்பவன் அல்லது நிற்பவள் பற்றித் திரும்பிப் பார்க்க முடியாத பயங்கரம்.

இந்தனை அவஸ்தைகளுடன் சென்று வரவேண்டுமா? சென்றுவரத்தான் வேண்டும். இல்லையேல் சித்திரவதை வீட்டு வாசல்வரை தேடி வரும் திறந்தவெளிச்சிறைக்குள் அல்லவா அவர்கள் வாழ்வாகிப்போயிற்று. காலை செல்லும் ஒருவனோ ஒருத்தியோ திரும்பி வரலாம் வரமாலும் போகலாம்.

இத்தனைக்குள்ளும் அவள் சொன்ன ஆறுதல் வார்த்தைகள் என்ன தெரியுமா? இத்தனை இடர்களுக்கு மத்தியிலும்கூட, இந்தவருட உயர்தரப்பரீட்சையிலும் கூட நல்ல பேறுபேறுகளுடன் எங்கள் இளைய தலைமுறை சித்தி பெற்றுள்ளதாம்...

இறுதியாக அவள் சொல்லி முடித்தது, இருபது வருடங்களின் பின்நோக்கிய நிலையில், இப்போது வாழ்கின்றோம் என்பதே. எண்பதுகளின் தொடக்கத்தில் ஈழத்தமிழர் வாழ்வு எப்படி இருந்தது என்பது எல்லோர்க்கும் தெரிந்ததுதானே..

“இதுவும் கடந்து போகும் “ என்பது ஒரு ஆன்மீகப்பதம். இப்பொழுது அதையே சொல்லி ஆறுதல்படுவதுதைத்தவிர, தற்போதைக்கு எதுவும் சொல்லத் தோன்றவில்லை......

Sunday, November 05, 2006

எங்களுக்கான சினிமா மொழி

AANIVAER, ஆணிவேர்


“ சினிமாவில் அரசியல்பேச அமெரிக்காவால் மட்டுமா முடியும்? இதோ இங்கே எங்களாலும் முடியும்..” சுவிற்சர்லாந்தின் விமான சேவையான “சுவிஸ் எயார்” நிறுவனத்தின் இறுதிக்காலத்தில் நடைபெற்ற ஊழல் விவகாரங்களை உள்ளடக்கி வந்த, “கிறவுண்டிங்” திரைப்படத்திற்கு, சுவிற்சர்லாந்தின் இத்தாலிய மொழிப்பத்திரிகை ஒன்று தந்த விமர்சனம் இது.

சினிமாவில் அரசியல் என்பது தமிழர்களுக்குப் புதிதல்ல. அந்தச் சினிமா அரசியல் கற்பித்த அனுபவம் என்பது கற்கண்டாக இனித்ததில்லை என்பதும் புதிதல்ல. மேலும் அது ஈழத்தமிழ் மக்களின் வாழ்வியலுடன் இணைந்ததாக இருந்ததுமில்லை. இத்தகைய சூழலில், ஈழத்தமிழரின் போரியல் வாழ்வையும், அதுசார் அரசியலையும் சுட்டி, முதலாவது ஈழத்தமிழரின் வெண்திரைக்காவியம் எனும் அடைமொழியுடன் வந்திருக்கும் திரைப்படம் ஆணிவேர்.

எங்களுக்கான சினிமாமொழியின் ஆரம்பம், ஆணிவேர்

தமிழ்த்திரைக்கண் நிறுவனத்தின் தயாரிப்பில், உதிரிப்பூக்கள் மகேந்திரன் அவர்களின் மகன் ஜான் அவர்களின் இயக்கத்தில், நந்தா, மதுமிதா, நிலீமா, ஆகிய தமிழகக்கலைஞர்களும், தமிழீழக்கலைஞர்களும் நடிக்க, சஞ்சயின் ஒளிப்பதிவில், எங்களுக்கான சினிமாமொழி, திரையில் எழுதப்பட்டிருக்கிறது.

கற்பனைகளில்லில்லாத, உண்மைச்சம்பவங்கள். தமிழீழ மண்ணின் போராட்ட களத்தில் நடந்த உண்மைச்சம்பவங்கள், காட்சிகளாகப் பதிவாகியிருக்கின்றன. இரத்தமும் சதையும், துன்பமும் துயரமும், நிறைந்த வாழ்வு திரையில் விரியும்போது, அவை நன்றாகவிருக்கிறது எனச் சொல்ல மனமிசையாவிடினும், காட்சிகளின் கடுமை மனதை நெருடினாலும் கூட, அதுதானே எமது மண்ணின் யதார்த்தம். திரையில் காட்ட முடிந்தவற்றை மட்டுமே காட்டப்பட்டிருக்கிறது என, இப்படத்தின் இயக்குனர் ஜான் செவ்வியொன்றில் கூறியுள்ளார். அதுதான் உண்மை என்பது, மண்ணின் துன்பக்களங்களில் நின்றவர்களால் உணர்ந்துகொள்ள முடியும்.

மொத்தப்படத்திலும் மனதை வருடிவருவது, அழகான ஒளிப்பதிவு. காட்சியின் யதார்த்தத்திற்குப் பொருத்தமான ஒளியளவுடன், பதிவாகியிருக்கும் காட்சிகள் அத்தனையும் அழகான ஒளிஓவியங்கள். அப்பப்பா அவ்வளவு அருமை. பெரும் பொருட்செலவில், வெளிநாடுகள் சென்று குப்பைத் தொட்டிகள் மேலும், தெருக்கோடிகளிலும், குத்தாட்டம் போட்டுப் படமாக்கும் சினிமாக்காறர்கள் கட்டாயம் இப்படத்தைப் பார்க்க வேண்டும். ஏன் தென்னிந்திய வர்த்தக சினிமா ரசிகர் வட்டமும்தான்

தமிழ்ச்சினிமாவின் பேச்சு மொழி எது? தென்னிந்தியத்தமிழா? தமிழீழத்தமிழா? வட்டார வழங்கு மொழியா? என்பதற்கு விடையளித்திருக்கிறது ஆணிவேர். சினிமாவிற்கான மொழி, பார்வையும் பதிவும் என்பதை ஆணித்தரமாகப் பதிவு செய்திருக்கிறது. மொழி என்பது இரண்டாம் பட்சமாகிப்போய், சினிமாவெனும் கட்புல ஊடகப்பெறுமானம் நிருபனமாகிவுள்ளதெனலாம்.

இது ஒரு ஆவணப்படமா? அரசியல்படமா? கலைப்படமா? வர்தகப்படமா? என வரையறுக்க முடியவில்லை என முணுமுணுப்பவர்களுக்கு, இது எங்கள் வாழ்க்கைப்படம். எங்கள் மண்ணையும், மண்ணின் அழகையும், போரியல்வாழ்வின் அனுபவங்களோடு காட்சிப்படுத்திக் கண்டுள்ளோம் எனச்சொல்லலாம்.

போரின் துன்பகரமான அனுபவங்களைக் கோர்த்துச் செல்லும் ஒரு திரைக்கதை. திரைக்கதைக்குத் தேவையான காட்சிக்களம். கதைமாந்தர்களை கச்சிதமாகப் பிரதிபலிக்கும் கலைஞர்கள் என அத்தனையும் பொருத்தமாக அமைந்துவிட ஆணிவேர், ஆழமாகப் பதியனாகிறது.
வர்த்தகக் கவர்ச்சிக்காகவே பல படங்களில் வலிந்து சேர்க்கப்படும் வல்லுறவுக்காட்சிச் சினிமாக்களின் மத்தியில், பெண்களுக்கெதிரான அடக்குமுறை ஆயுதமாக வல்லுறவை இராணுவம் கையாளும் வகைதனை, எந்தவித ஆபாசமான காட்சியமைப்பும் அல்லாமல், உணர்வுளின் அவஸ்தையாகச் சொல்லியிருக்குமிடத்தில், எழுந்துநின்று இயக்குநருக்கு மரியாதை செய்யத் தோன்றுகிறது. துயரங்களையும், துன்பங்களையும், அவற்றின் வலியோடு, உணர்வோடு சொல்லியிருக்கிறார்.

வன்னி நிலப்பரப்பில் எடுக்கப்பட்ட திரைப்படம், விடுதலைப்புலிகளின் பிரச்சாரப்படமாகத்தான் இருக்கும் என நினைத்துச் செல்பவர்களுக்கு நிச்சயம் ஏமாற்றம்தான். அத்தனை கச்சிதமாகச் சினிமாவாக்கப்பட்டிருக்கிறது. அதற்காகச் செய்திகள் சொல்லப்படவில்லை என்று சொல்லவில்லை.

எல்லாமே நன்றாக இருந்தது என்றால், குறைகளே இல்லையா? இல்லையே குறைகள் இல்லாமலில்லையே. குறிப்பாகப் படத்தின் இறுதிக்காட்சி, செய்தியொன்றைச் சொல்வதற்காக வலிந்து சேர்க்கப்பட்டது வடிவாகத் தெரிகிறது. காட்சிகளின் ஒழுங்கமைப்பில் ஒரு பாச்சல் தெரிகிறது. ஆனால் நிறைவுகளோடு ஒப்பிடுகையில், இவைகளெல்லாம் குறைவானவையே..

ஆணிவேர் ஒரு நல்ல ஆரம்பம்.

Friday, November 03, 2006

வாத்தியஇசை

என்ன வீடு கனநாளாப்பூட்டிக்கிடக்கு, விடுமுறையில் போனதோ? அல்லது விட்டெறிச்சிட்டுப் போனதோ? ஒன்டுமா விளங்கேல்ல என்டு விண்ணானம் பேசாம விட்டிருந்த நண்பர்களே! உண்ணானச் சொல்லுறன், உங்களப்போல எனக்கும் கொஞ்சம் வேலைப்பளு கூடினதால விட்டிட்டிருந்திட்டன். வேறொன்றுமில்ல.

சரிசரி, வந்தவழியில கைத்தொலைபேசிக் கருவிக் கண்ணால, சுட்டு வந்தத சுடச்சுடப் பரிமாறுகிறன். சுவைத்துச்சொல்லுங்கள்.

சுவிற்சர்லாந்தின் தேசிய வாத்திக்கருவியான அல்ப்ஹோர்ன் இசைக்கருவியில் எழும் அற்புதமான இசைவடிவமிது.




Wednesday, October 18, 2006

தசையாடிய தமிழகக் கலைஞர்களுக்கு!

இப்போதுதான் "ஆணிவேர்" பார்த்துவிட்டு வந்தேன். வந்ததும் உடன் எழுதுகின்றேன். ஆனால் இது படத்திற்கான விமர்சனம் அன்று. விமர்சனத்துக்கு அப்பால் படம் அவ்வளவு சிறப்பாக இருக்கிறதா எனும் கேள்விகளுக்கும் இப்போது பதில் இல்லை.



ஆணிவேர் எங்கள் போரியல் வாழ்வை பொய்யுரைக்காது சொல்லியிருக்கிறது என்பதை மட்டும் இப்போதைக்குச் சொல்வேன். இன்னுமொன்று சொல்வேன், தமிழக நண்பர்களே! குறிப்பாக வெளிநாடுகளில் வாழும் தமிழக நண்பர்களே! உங்கள் நாடுகளில் ஆணிவேர் திரையிடப்படும் போது, எந்தவித விருப்புவெறுப்புகளுமின்றி, ஒருதடவை சென்று பாருங்கள். தயவு செய்து சென்று பாருங்கள்.

இதைச் சொல்ல மட்டுமல்ல இப்பதிவு. தானாடாவிட்டாலும் தன் தசையாடும் என்று சொல்வார்களே, தமிழீழத்திற்கும், இந்தியாவுக்குமான, தொப்புள்கொடி உறவின் வழிவந்த கலைஞர்கள் நந்தா, மதுமிதா, நீலிமா, ஜான், ஆணிவேரில் எங்கள் உறவுகளாக வாழ்ந்திருக்கிறார்கள். நன்றி என்று சொல்ல நா எழவில்லை. அந்த உறவுகளை உரிமையோடு வாழ்த்திட, உணர்வோடு கரங்குலுக்கவே இப்பதிவு.


நடிப்பும், இயக்கமும், என்பது இக்கலைஞர்களுக்குத் தொழில். தொழிலாகவே எண்ணி இத்திரைப்படத்தில் இணைந்திருந்தாலும், படத்தின் முழுமையும் முடிந்தபின், திரையில் பாரத்திருப்பார்களாயின், அவர்கள் கூட அழுதேயிருப்பார்கள் என்பது நிச்சயம் .

நந்தா, மதுமிதா, நீலிமா, ஜான், மற்றும் தொழில்நுட்பக்கலைஞர்களே! உங்களின் உளமார்ந்த அர்ப்பணிப்புக்கு, எம் நெஞ்சார்ந்த நேசங்கள்.

Tuesday, October 17, 2006

புதுத்தமிழ் - புலத்தமிழ்

Johan-Paris said...
சின்னக் குட்டியர்!உங்களுக்கும் பூக்குதா??? அடுத்த வருடம் கலப்புக் குறைந்து தனி நிறமாகச் சாத்தியமுண்டு.அந்தி மந்தாரையாமே!!! நாலுமணிப்பூ பெயரை மறக்கலாம்.நான் லண்டனில் நிற்கிறேன்.யோகன் பாரிஸ்


சின்னக்குட்டி said...
வணக்கம் யோகன்..... லண்டனிலா நிற்கின்றீர்கள்....... . உங்களுக்கொரு பின்னூட்டம் உங்கள் பதிவில் போட்டிருக்கிறேன் பாருங்கள்


குமரன் (Kumaran) said...
பூக்கள் நன்றாக இருக்கின்றன. 'நான் லண்டனில் நிற்கிறேன்' என்று யோகன் ஐயா சொல்லியிருக்கிறார். பொருள் என்ன?


சின்னக்குட்டி said...
//'நான் லண்டனில் நிற்கிறேன்' என்று யோகன் ஐயா சொல்லியிருக்கிறார். பொருள் என்ன?//வணக்கம் குமரன்... உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்...யோகன் பாரிஸ் இல் வசிப்பவர்...லண்டனுக்கு விடுமுறைக்கு வந்திருக்கிறார் போலை... தற்போது லண்டன் வந்துள்ளேன் என்று கூறுவது தான் லண்டனில் நிற்கிறேன் என்ற கருத்து...என்னங்க இது... ஈழ தமிழை புரிய இப்படி கஸ்டப்படுகிறியள்பழைய நடிகர் லூஸ் மோகன் பேசுற உந்த கஸ்டமான மட்ராஸ் தமிழைக் கூட நாங்கள் இலகுவாக புரிஞ்சிருக்கிறோம்


குமரன் (Kumaran) said...
சின்னகுட்டி (ஐயா/அண்ணா), எனக்கு ஈழத்தமிழ், சென்னைத்தமிழ் இரண்டுமே அவ்வப்போது புரிவதில்லை. நீங்கள் சொன்ன மாதிரி தான் நானும் யோகன் ஐயா சொன்னதற்குப் பொருள் கொண்டேன். ஆனாலும் தெளிவாக அறிந்து கொள்வோம் என்றே கேட்டேன். விளக்கம் சொன்னதற்கு நன்றி. :-)


இது, சின்னக்குட்டியின் பதிவில் நடந்த பின்னூட்ட உரையாடல். இது சராசரியாக ஈழத்தவர்கள் மத்தியில் நடைபெறும் பேச்சு வழக்கு உரையாடல்தான். இதைப்பார்த்த போது, எனக்கு புலம்பெயர்ந்த புதிதில் எம்மவர் மத்தியில் இடம்பெற்ற புரியாத சில தமிழ் உரையாடல்கள் ஞாபகத்திற்கு வந்தன.

ஐரோப்பாவிற்குள் நுழைந்த முதல் நாள் நண்பனொருவனின், நண்பர் வீட்டில் நின்றேன். அங்கே தொலைபேசி எடுத்த நண்பர் என்னுடன் கதைத்துவிட்டு, என்னைக் தன்னிடம் அழைத்து வரும்படி கூறினார். அது தொடர்பாக அவர்களுக்குள் நடந்த உரையாடல் எனக்குப் புதியதாக இருந்தது.

"...சரி நீங்கள் எத்தினை மணிக்கு இறங்கப் போறியள்..?"

"இறங்கேக்க அடிசிட்டு இறங்கிறம்.."

"... வழி தெரியுமே ..? "

" எதுக்கும் இன்னுமொருதரம் சொல்லுமன்.."

".. பச்சையில....காட்டுவான், அத எடுத்திட்டு வர வலது பக்கம் நீலத்தில இறக்குவான்..... அதை எடுத்திட்டு வாங்கோ "

இந்த உரையாடலை அன்று கேட்கும்போது எனக்குப் புரியவில்லை. ஆனால் இன்று நானும் அப்படித்தான் கதைத்துக் கொண்டிருக்கின்றேன். ஐரோப்பா தவிர்ந்த மற்றைய நாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கு இது புரிகிறதா எனச் சொல்லுங்கள் பார்ப்போம்...உங்கள் நாடுகளில் உள்ள புதிய மொழி நடைகளையும் குறிப்பிட்டால் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.

சின்னக்குட்டி குறிப்பிட்டிருக்கும் மற்றுமொரு விடயம் முக்கியமானது. தமிழகத்தின் வட்டார வழக்கு உரையாடல்கள் பலவற்றையும், தமிழீழ மக்கள் இலகுவில் பரிந்து கொள்ளக் கூடியவர்களாகவே இருக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் தென்னிந்தியச் சினிமா என்றே கருதுகின்றேன். ஆனால் தென்தமிழீழ சொல்லாடல் வடதமிழீழத்திலும், வடதமிழீழச் சொல்லாடல் தென் தமிழீழத்திலும் புரிதலில் சிரமங்கண்டுள்ளது. இது குறித்து வசந்தன் ஒரு பதிவு எழுதியிருந்ததாக ஞாபகம். விரைவில் மருதநிழலில் இதுபற்றி விரிவாகப் பேசுவோம்.


Sunday, October 15, 2006

உங்களுக்குத் தோன்றுவது என்ன..?

இந்தப்படம் சிலநாட்களுக்கு முன், நண்பர் யோகன் மின்னஞ்சலில் அனுப்பி வைத்த ஒருபடத் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்ட படம். இந்தப்படத்தை என்னுடன் வேலைசெய்யும் ஒரு இத்தாலியரிடம் காட்டி, அபிப்பிராயம் கேட்டேன்.

"ஜப்பானியர்களுக்கு அதிக நேரம் இருக்கிறது போலும்.." என்றார். ஆனால் என்னால் அப்படி இதைப்பார்க முடியவில்லை. உருளை வடிவான தர்பூசணிப்பழத்தைச் சதுரமாக மாற்றுவதற்குள் சில பொருளாதார நுட்பங்கள் இருக்கின்றன என எண்ணுகின்றேன்.

நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் ? சொல்லுங்கள். நானும் சொல்லுகின்றேன்.




Saturday, October 14, 2006

உலகமக்கள் அனைவருக்கும்

பதினான்கு வருடங்களின் முன் என்னால் எழுதப்பட்ட மற்றுமொரு கவிதை. படமும் நான வரைந்ததே. பாரிஸ் ஈழநாட்டில் பிரசுரமாகியிருந்தது. படத்தில் சில மாற்றங்களுடன் நிறவெறிக்கெதிரான பிரச்சாரத்திற்காக பொது அமைப்பொன்றுக்கு வழங்கப்பட்டது.



Photobucket - Video and Image Hosting

Wednesday, October 11, 2006

சுபதினம்

நேற்று..
ஒரு சுபதினம்.

எப்படி....?

காலைக் கருக்கலில்
நெற்றியில் வடிந்து
நிலம் சேரும்
குருதி சகதியுடன்
சந்திகளில் கிடக்கும்
"பொடிகள்" பற்றி, மக்கள்
பேசக்காணோம்....

நிலத்திலோ
நீரிலோ
புலிவேட்டை ஆடியதாய்
புழுகு வானொலிகள்
புலம்பக் காணோம்....

ஆதலால்
ஐயமின்றிச் சொல்வேன்
நேற்று ஒரு சுபதினம்.

களனிக் கரையிலும்
களுபோவிலச் சந்தியிலும்
தலையில்லா
முண்டங்கள் பற்றிய
பத்திரிகைத் தலைப்புக்கள் எதுவும்
பரபரப்பாயில்லை.

ஆதலினால் சொல்வேன்....
ஐயமின்றிச் சொல்வேன்...
இலங்கைத் தீவில்
நேற்று ஒரு சுபதினம்.


இந்தக்கவிதை(?) சுமார் இருபது வருடங்களுக்கு முன்னால், அப்போதுள்ள சூழலைக்கருத்தில் கொண்டு என்னால் எழுதப்பட்டு, எனது முதலாவது கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றது. இன்றுள்ள இலங்கைச் சூழலுக்கும் இது பொருந்தி வருகிறது எனும் போது..... என்ன செர்லவது..?

Monday, October 09, 2006

வானுலா

உலாத்தல் என்பது இளமைக்காலத்திற்கேயுரிய ஒரு தனித்துவம். சுற்றல், சுழட்டல், என இதற்கு வேறுவேறு அர்த்தப்பாடுகளுடன் அழைக்கப்படுதலும் உண்டு. உலாத்தல்கள் எப்போதும் உவப்பானவை.

தாயகத்தில், ஊர்கள், வீதிகள், தெருக்கள், ஒழுங்கைகள், எனச் சுழன்ற காலங்கள் மாறி, காடுகள் கரைகள் எனக் கரைந்த காலங்களுமுண்டு. எல்லாப்பொழுதுகளிலும், இன்னல்கள் நிறைந்த வேளைகளிலும், உலாத்தல்கள் என்பது, எனக்கு உவப்பானதாகவே இருந்திருக்கின்றன.

புலத்தில் உலாத்தல்கள் உயர்மலைகளில் நிகழ்ந்தபோது, அதற்கப்பாலும் உயர்ந்து உலாவரவும் ஆசைப்பட்டது மனம். அதற்குத் தேவை மனம் மட்டுமல்ல, என்பதை உணர்ந்தபோது, நெஞ்சுமூலையில் அடக்கமாக அமர்ந்துவிட்டது ஆசை. ஆனாலும் வானில் வண்ணப் பறவைகள்போல் பறக்கும் மனிதர்களைக் காணும்போது, நாமே உயரப்பறப்பது போன்ற உணர்வு வரும்.

நேற்று என்மகன் சொன்னான் " அப்பா இன்று நல்ல காலநிலை. நண்பர்கள் சிலருடன் உயரப்பறந்து உலாவரப்போகின்றேன்" என்று. சென்று வந்தவனின் உலாவிலிருந்து ஒரு சில துளிகள் உங்களுக்காகவும்....


Wednesday, October 04, 2006

இணைத்த தமிழால் இனிய சந்திப்பு

சென்றவாரத்தில் தொழில் நிமித்தம், வேறிடத்தில் நின்றேனெனச் சொன்னேன் அல்லவா? அப்படி நிற்கும் போது. இந்த இளைஞர்களைச் சந்திக்கக் கூடியதாகவிருந்தது. இந்தியாவிலிருந்து, ஒரு வருட ஹோட்டல் முகாமைத்துவப் பயிற்சிநெறிக் கற்கைக்காக வந்திருக்கும், இந்திய மாணவர்களில், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். குறிப்பாக திருச்சி, சென்னை, ஆகிய நகரங்களைச் சேர்ந்தவர்கள். இவர்களின் முதலாறுமாதப் பயிற்சி சுவிற்சர்லாந்தில் உள்ள பெருநகரில், வளாகத்தில் நடைபெறுகிறது. அதன் விடுதியில் தங்கியிருக்கும் அவர்களை ஒரு ஞாயிறுமாலையில், இவர்களைப் பற்றி எனக்கு அறிமுகம் செய்த நண்பரொருவருடன் சென்று சந்திந்தேன். தமிழர்களைச் சந்திப்பதிலும், தமிழ்கதைப்பதிலும், ஆர்வமாக உள்ள அந்த இளைஞர்களின் உணர்வுகளும் எண்ணங்களும், புலம்பெயர்வாழ்வின் ஆரம்பகாலத்தில் எனக்கும், ஏன் எல்லோருக்கும், இருந்ததைப் போன்றதே இருந்தது.



சதீஸ், ராஜேஸ், ஆன்டோ, சஞ்சய், வெங்கட் (மற்றவர்கள் பெயர் மறந்துவிட்டது) என இந்த ஏழு இளைஞர்களும், எங்களை அன்பாகவும் ஆவலுடனும் வரவேற்றுக் கொண்டார்கள். ஏற்கனவே அறிமுகமாகியிருந்ததால் சகஜமாகப் பேசினார்கள். இனி அவர்கள் பேச்சுக்களிலிருந்து....


தாயகத்தையும், உறவுகளையும், பிரிந்த துயரத்தில் இருக்கும் அவர்களின் முதற் கவலை இங்கு வருவதற்குச் செலவழித்த பணத்தை எப்படிச் சம்பாதிப்பது என்பது. அடுத்த பெரும் சிக்கலாக இருப்பது மொழிப்பிரச்சனை. அவர்கள் தற்போது இருக்குமிடத்தில் ஜேர்மன் மொழி பேசப்படுகிறது. இங்குள் சராசரி மக்கள், ஏனைய ஐரோப்பியர்களைப் போன்றே, தாய்மொழி தவிர்ந்த ஏளனய மொழிகளில் பேசுவதில் ஆர்வமில்லாதவர்கள். அதனால் ஆங்கிலம் பேசத் தெரிந்த இவர்களுக்கு சகஜமாக இங்குள்ள மக்களுடன் பழக முடிவதில்லை. ஜேர்மன் மொழி கற்பது பேசுவது என்பதும் அவ்வளவு சுலபமில்லை.

இவர்களின் அடுத்த பெரும் பிரச்சனை உனவு. தமிழ்நாட்டு உணவுவகைகள் எதுவும் இவர்களது விடுதியில் பெற்றுக் கொள்ள முடியாது. சாதத்தைக் கறிபோல் குறைந்தளவில் பரிமாறப்படும் ஐரோப்பிய உணவுமேசைகளின் முன் உட்காரும் நம்மவர்களின் மிகப்பெரிய பிரச்சனையே அதுதானே. அதிலும், மாமிச வகைகளுடனான உணவுவகைகளும் அவர்களுக்குச் சங்கடமாகவே இருக்கிறது. இது விடயத்தில் தற்போதைக்கு அவர்களுக்கு ஆறுதல் தருவது, சற்றுப் பக்கத்தில் ஈழத்தமிழர்கள் நடாத்தும், இந்துக்கோவிலில் வெள்ளிகிழமை மாலைகளில் வழங்கப்படும் அன்னதானம்தான். இந்த இன்னல்கள் எல்லாம் ஏற்கனவே அநுபவித்தவர்கள் என்பதாலும், இவர்கள் தமிழர்கள் என்பதாலும், இங்குள்ள ஈழத்தமிழர்கள், இவர்கள் மேல் மிகவும் பரிவு காட்டுகின்றார்கள்.

இவைகளையடுத்து இவர்களுக்குச் சிக்கலாகவிருப்பது, மேலைத்தேய கலாச்சாரப் பழக்கவழக்கங்கள். இவர்கள் விடுதியின் கீழ்தளத்தில் உள்ள மண்டபத்தில், வெள்ளி சனிக்கிழமை இரவுகளில் நடைபெறும் டிஸ்கோ நடனக்களியாட்டங்களை கைகட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்துவிட்டு வரும் அப்பாவிகளாகச் சிரித்தார்கள்.


அதற்கடுத்த பெரும் சிக்கல், இங்குள்ள நேரக்கட்டுப்பாடு. “ காலைல ஏழுமணிக்குப் பின்னாடி தாமதிச்சா காலை சாப்பாடே கொடுக்கிறாங்க இல்லை. நேரத்தில இவ்வளவு கண்டிப்பாக இருக்கிறாங்களே” என ஆச்சரியப்பட்டார்கள்.

“அதெல்லாம் சரி வந்த நோக்கம் எப்டிப்பா என்னு கேட்டா?”

“ரொம்பக் கஸ்டம்ங்க. வாரத்துக்கு மூணு எக்ஸாம் வைக்கிறாங்க. நம்ம ஊரில் வருஷத்துக்கு மூணு எக்ஸாம்தானுங்க....இப்பிடி பென்டெடுக்கிறாங்களே..”

பேசிமுடித்துத் திரும்பி வரும்போது,? ஹாலில் வெள்ளைப்பெண் ஒருத்தி படித்தபடி இருந்தாள். பார்த்ததும் நான் சொன்னேன் “பாருங்கப்பா எவ்வளவு அக்கறையாப் படிக்கிறாள். நீங்க பாட்டெல்லோ கேட்டுக்கிட்டுருங்கீங்க....”

“ அவங்க அப்பிடி மாஞ்சு மாஞ்சு படிப்பாளுக. ஆனா மாக்ஸ என்னவோ மூணத் தாண்டாது. நாங்க சிம்பிளாத்தான் படிப்போம், சிக்கெண்ணு அஞ்சு எடுத்திருவோமில்ல..” என்றார்கள் அட்டகாசமாக.

அதுதானே பார்த்தேன். தமிழ்ப்பசங்களாச்சே. எப்பிடி....?

அவர்களுடன் கல்வி கற்கும், ஏனைய இந்திய மாணவர்களாகிய ஆந்திர, மலையாள, வட மாநில மாணவர்கள் எல்லோரும் அந்நியமண்ணிலும் அந்நியமாய் நிற்பதை, நேசமுடன் எங்களிடம் நெருங்கி நின்று சொன்னார்கள் சோகமுடன்.... ஏனெனில் எங்களை இணைத்திருப்பது இன்பத்தமிழல்லவா?














Wednesday, September 27, 2006

தமிழீழ வழிபாட்டு மரபும், சக்திவழிபாடும்.

நீண்ட நாட்களாகவே எழுதவேண்டும் என எண்ணியிருந்த ஒரு விடயம்.
என் நட்சத்திரவாரத்தில் எழுத வேண்டுமெனக் குறித்து வைத்திருந்த போதும், முடியவில்லை. இப்போது நவராத்திரிகாலம். சக்திவழிபாட்டில் அநேகர் ஆர்வமுறும் காலமாயிருப்பதால், தற்போது எழுதுவது கூடப் பொருத்தமென எண்ணுகின்றேன்.

தமிழீழத்தின் வழிபாட்டுப் பரம்பலானது, தமிழகத்தின் வழிபாட்டுப்பாரம்பரியத்திலிருந்து, பல இடங்களில், மாறுபட்டுள்ளது. தமிழீழமக்களில் கனிசமானோர், இந்துக்களாக இருப்பினும், அவர்கள் தங்களைச் சைவர்களாகவே அடையாளப்படுத்துவர். இச்சைவப்பாரம்பரியத்தின் தொன்மை தொட்டு நோக்குமிடத்து, அதிசயிக்கத்தக்க வகையில் அவர்கள் வாழ்வோடு, சக்தி வழிபாடும், முருகவழிபாடும், இணைந்திருப்பதைக் காணலாம். இலங்கைத்தீவின் மற்றெப்பகுதியிலும், பெருமளவில் காணப்படாத இவ்வழிபாட்டுத் தலங்களின் அமைவிடங்களும், அங்கே நடைபெற்று வரும் வழிபாட்டு முறைமைகளும், தமிழீழத்தின் நிலப்பரம்பலையும், வழிபாட்டில் தமிழர் முறைமையின் தாக்கத்தினையும் சுட்டுவதாக அமைகிறது.

இவ்வழிபாடுபற்றி விரிவாகநோக்குமுன், இவ்வழிபாட்டுத்தலங்களின் அமைவிடம்பற்றிய தெளிவினைக் காண்பது, இக்கட்டுரையின் சொல் பொருள் குறித்த புரிதலை, மேலும் இலகுவாக்கும் என கருதுகின்றேன். தமிழீழத்தின் மேற்குக் கரையிலிருந்து தொடங்குவோமேயானால், முதலில், சிலாபத்தில் முன்னேஸ்வரம் கோவிலுக்குப்பக்கத்தில் ஒருகாளிகோவில், புத்தளத்திற்குச் சமீபமாக, உடப்பில் திரெளபதி அம்மன், மன்னார் பிரதேசத்தில், திருக்கேதீஸ்வரத்துக்குச் சமீபமாக நானாட்டானில் ஒரு அம்மன், வடபகுதியில், நயினாதீவு நாகபூசணி அம்மன், புங்குடுதீவு கண்ணகை அம்மன், வல்வெட்டித்துறையில் அம்மன், பின் கிழக்குப்புறத்தில், கொக்கிளாயில் அம்மன், வற்றாப்பளையில் கண்ணகை அம்மன், திருகோணமலையில் பத்திரகாளி, சல்லி அம்மன். கீழே, மட்டக்களப்புப் பிரதேசத்தில், பாண்டிருப்பு திரெளபதை அம்மன், என்பவற்றைச் சிறப்பாகக் குறிப்பிடலாம்.

இங்கே குறிப்பிட்ட சக்தி வழிபாட்டுத் தலங்களெல்லாம், தமிழீழத்தின் கரையோரப் பிரதேசத்தில் அமைந்திருப்பதைக் காணலாம். தமிழீழ நிலப்பரப்பின் உட் பிரதேசத்திலும் சில முக்கிய சக்தி வழிபாட்டுத்தலங்கள் அமைந்திருந்தபோதும், கரையோரப்ப பகுதியில் அமைந்திருக்கும் வழிபாட்டுத்தலங்களின் நடைமுறைகளுடன் பெரிதும் மாறுபாடுடையதாக விருப்தையும் காணலாம். மேலும் குறிப்பாக உடப்பு திரெளபதி அம்மன், வற்றாப்பளைக் கண்ணகை அம்மன், சல்லி அம்மன், பாண்டிருப்புத் திரெளபதை அம்மன், ஆகிய தலங்களின் வழிபாட்டு முறைமைகள் கூட, ஏனைய ஆலயங்களைப்போன்று, ஆகம வழிபாட்டுத் தலங்களாக அல்லாமல், சைவமரபிலான வழிபாட்டு முறைமைகளோடு, பிராமணர்கள் அல்லாத மக்கள் பூசகர்களாக இருப்பதைக் காணலாம்.

இக்கோவில்களின் வழிபாட்டு முறைமைகளில் காணப்படும், மற்றுமொரு மாறுபாடான விடயம், உழைக்கும் மக்களின் நம்பிக்கைத் தலங்களாகவும், வாரத்தில் ஒருநாள் மக்கள் கூடும் மன்றங்களாகவும், வருடத்தில் குறித்த சிலதினங்கள் கொண்டாட்டங்கள் மிகுந்த விழா நாட்களாகவும், விழாக்களின் நிறைவுநாட்கள், பொங்கல், குளிர்த்தி, என்பனவற்றில் நிறைவு பெறுவதாகவும் அமைந்திருக்கிறது. பொங்கல் என்பதும், குளிர்த்தி, என்பதும், மனங்களின் நிறைவையும், மகிழ்வையும், உருவகப்படுத்துவதாகக் கூடக் கருதமுடிகிறது.

இவற்றையெல்லாம் உற்று நோக்குமிடத்து, தமிழர்தம் பாரம்பரிய வழிபாட்டு முறைமைகளில் ஒன்றான கொற்றவை வழிபாடு, காவல்தெய்வ வழிபாடு, என்பவற்றின் தொடர்ச்சியாகவும், நீட்சியாகவும், தமிழீழத்தின் கரையோரப்பகுதியில் காணப்படும் சக்திவழிபாடுகளைக்காணலாம். இத்தலங்களில் காணப்படும் வழிபாட்டு முறைமைகளில் இன்றளவும் காணப்படும், இத்தனித்துவங்களோடு, மேலும் சிறப்பாகச்சுட்டுவதற்குரிய சில விடயங்களில் முக்கியமானவைகளைத் தொடர்ந்து கவனிப்போம்.

இத்தலங்களில் பூசைகள் நடைபெறும் போது, வடமொழி மந்திரங்கள் சொல்லப்படுவது இல்லை. அநேகமாக வாய்மூடிய மெளன பூசைகளாகவே நடைபெறுகின்றன. அதற்கப்பால், தமிழிலே அகவல்களும், தாலாட்டுக்களும், பாடப்பெறுகின்றன. வாத்திய இசைக்காக பறையும், உடுக்குக்களுமே, இசைக்கப்படுகின்றன. விழாக்களில் நிகழ்த்தப்படும், கலைநிகழ்ச்சிகளாகவும், கிராமியக்கலைவடிவங்களான காவடி, கோலாட்டம், தீப்பந்த நடனம், கூத்து, என்பனவே முக்கியமானவையாக நடைபெறுகின்றன. ஆலய அமைப்பும் கிராமியத்தொன்மை சார்ந்ததாகவே இருப்பதையும் காணலாம்.

இவ்விதமாக தமிழீழத்தின் தொன்மைப்பாராம்பரிய வழிபாட்டுமுறைமையில், தமிழீழத்தின் சக்திவழிபாடு தொடர்ந்து செல்வது, தமிழர்தம் தனித்துவ வழிபாட்டுத் தொன்மைக்குச் சான்றாகவும், நிகழ்காலச் சாட்சியமாகவும், வரலாற்றுப் பதிவாகவும் அமைகிறது என்றால் மிகையாகாது.

Monday, September 18, 2006

இணைவில் உதிப்போம் !

நண்பர்களே!

இப்பதிவு நட்சத்திரவாரத்தில் நன்றி சொல்லி விடைபெறும் பதிவு மட்டுமல்ல, குறிஞ்சி மலரில் நான்எழுதும் ஐம்பதாவது பதிவு, என்னுடைய இல்லையில்லை, எங்களுடைய இன்னுமொரு புதிய வலைப்பூவினை
அறிமுகஞ் செய்யும் பதிவு. என வேறு சில முக்கியத்துவங்களும் உண்டு.

நட்சத்திரவாரப் பதிவுகள் உங்களுக்குத் திருப்தியளித்ததா என்பதை இதுவரையில் என்னால் முழுமையாகத் தெரிந்து கொள்ளமுடியவில்லை. என்னைப் பொறுத்தவரையில் எழுத எத்தணித்த விடயங்களையெல்லாம் எழுதிவிட்டதாகச் சொல்லமுடியாது. வாழ்க்கையை அதன் போக்கில் சந்தித்து வந்தவன் நான் அந்தவழியே நட்சத்திர வாரத்திலும் நடந்து கொண்டேன். எழுதியவை எல்லாம் அற்புதம் என்று எண்ணவில்லை. அவைகளை எழுதிப்பதிவு செய்யவேண்டியது என்பது மட்டும் நிச்சயம் என்று எண்ணினேன்.

இவ்வாரத்தில் நான் எழுதிய பதிவுகளை ஒழுங்குபடுத்திப்பார்த்தால் அதில் எங்கள் வாழ்வு தெரியும். வாழ்த்தும், வரவேற்பும், விருந்தோம்பலுமாக,( நட்திர நல் வணக்கம்) பாசப்பிணைப்புக்களாக, (தாயும் சேயும்) வாழ்ந்த எங்கள் வாழ்வில், அந்நியசக்திகள் பின்னிய அரசியல் சதிகளால்,( இந்திய மேலாதிக்க சிந்தனையா) வழிபாடும் பக்தியுமாக( வெருகல்) விழாவும் குதுகலமுமாக ( ஏறுபடிக்கலைஞர்கள்) ஆட்மும் பாட்டுமாக (ஏறுபடியும் எகிப்தியநடனமும்) கலையும் கல்வியுமாக ( என் சொல்லு தமிழின் சோபா) இருந்த எம் வாழ்வில், எங்கள் மண்ணில் போர் மூண்டது(சந்தனத் தெருக்களில் கந்தகம் மணக்கையில்). அதனால் ஏற்பட்ட புலப்பெயர்வின் அவலங்ககளும், இழப்புக்களும்,(எங்கள் தீவிருந்து புறப்பட்ட டைட்டானிக்) சொல்லொனாச்சோகம். புலத்தில் எழும் பல்வேறு சிக்கல்களின் மத்தியில், தற்போது குடும்பங்களுக்குள் விட்டுக்கொடுப்புக்களற்ற சூழலில் எழும் குடும்பப்பிரிவுகள் ( பாரதி செல்லம்மா) தரும் அச்ச மிகுதி, எல்லாத்துன்பங்களையும் இணைவதால் வெல்லமுடியும் எனும்(இணைவில் உதிப்போம்) நம்பிக்கையோடு நிறைவுறுகிது.

முக்கியத்துவம் நிறைந்த இந்நட்சத்திரவாரத்தில், எம்மண்ணின் மறக்கப்பட முடியாத கலைஞர்கள் பற்றி, மனிதர்கள் பற்றி, இடங்கள் பற்றிச் சொல் வேண்டுமெனத் தீர்மானித்த போதே தெரியும், இது குறிப்பிட்ட சில தமிழக நண்பர்களைத்தவிர, ஏனையோருக்கு ஏமாற்றமளிக்கக்கூடியதென்று. ஆனாலும் என் தேசத்தின்மீதான பற்றும் பணியும் முக்கியமெனக்கருதியதைச் செய்தேன்.

தமிழக நண்பர்களே!
உங்கள் மீது நாம் என்றும் நேசிப்புடனேயே இருப்பவர்கள். இந்தியாவின் எழுச்சி என்றும் எமக்கு மகிழ்வு தருவதே. ஏனெனில் என் தந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவியது தமிழீழமாக இருக்கலாம். என் பாட்டனோ, பாட்டனின் பாட்டனோ, பாடித்திரிந்தது பாரதபுமியில்தான். அந்தத் தொப்புள்கொடி உறவுமீதான் பற்றும் பாசமும என்றும் எமக்குண்டு. நான் அடிக்கடி என் நண்பர்களுக்குச் சொல்வதுண்டு, அரசியல் தன்மைகள் பிடிக்காதிருப்பினும், உண்மை மிகு ஆண்மீகத்திற்காகவும், உயர்கலைகளுக்காகவும், ஆயிரம் தடவைகள் அம் மண்ணை வணங்கித் தொழுவேன் என்று. எங்கள் உள்ளப்பாங்கைப் புரிந்துகொள்ளுங்கள். புறந்தள்ளாதீர்கள்.

அன்று, யுத்தம் வேண்டாம் புத்தம் சிறந்ததென, யுத்தம் புரிந்த அசோகன் சத்தம் போட்டுச் சொன்னான் கலிங்கத்தில். இன்று புத்தம் காப்பாற்ற யுத்தமே சிறந்ததென சட்டம் போட்டு யுத்தம் புரிகிறது புத்தம் பேணும் அரசு சிறிலங்காவில். எண்ணவும், எழுதவும் இன்னம் உண்டு. இது விடைபெறும் முடிவல்ல இணைதலின் தொடக்கமே என எண்ணுகின்றேன். ஆதலால் சொல்ல நினைத்தவற்றைத் தொடர்ந்தும் சொல்வேன். வந்து சொல்லுங்கள் வளமா என்று.

இந்த வாய்பினை நல்கிய தமிழ் மணநிர்வாகத்தினர்க்கும், வந்து கருத்துக்கள் சொன் நண்பர்கள் அனைவர்க்கும், நன்றிகள் பல.

ஈற்றில் என் எண்ணங்களை காட்சியாக்கி, இவ்வார நிறைவுக்கென்றே வடித்த ஒரு குறும்படத்துடன், உங்களிடமிருந்து, நட்சத்திரமாய் விடைபெறுகின்றேன். நாளை நண்பனாய் மீண்டும் சந்திப்பேன்.

Sunday, September 17, 2006

பாரதி செல்லம்மா

- நண்பர்களே! இப்பதிவினை பாரதியின் நினைவு நாளான, என் நட்சத்திரவாரத்தின் ஆரம்ப நாளன்றே இடுவதாக எண்ணியிருந்தேன். ஆனால் அன்று பிரசுரிக்க முடியவில்லை. ஆதலால் நடசத்திர வாரத்தி ன் இறுதி நாளாகிய இன்று பவிலிடுகின்றேன். -


இன்று பாரதி நினைவு நாள். அப்படியென்றால் பாரதி பற்றிக் கண்டிப்பாக ஏதாவது எழுத வேண்டுமே. ஆனால் எனக்குப் பாரதியின் சிந்தனைகளைவிட, கற்பனையிலும், கனவுகளிலும், வாழ்ந்த கணவனையும் அனுசரித்தவண்ணம், நித்தமும் சமுகநிர்ப்பந்தங்களுக்குள் நெளிந்துகொண்டும், உலக மகாகவியின் வாழ்க்கைத் துணைவியாக வாழ்ந்த அந்தச் சராசரிப் பெண்ணைப்பற்றிய சிந்தனைகளே நிறைய வந்தன.அதற்குக் காரணம் இல்லாமலும் இல்லை.

Photobucket - Video and Image Hosting

ஆம், எனக்குத் தெரிந்த சில செல்லம்மாக்களிடம், பாரதியின் செல்லம்மா பட்ட துன்பத்தைக் கண்டிருக்கின்றேன். அதனால்தான் பாரதியின் செல்லம்மாவும் என் எண்ணத்தில் உயர்வானாள். முதலில் எனைப் பாதித்த செல்லம்மாக்களைப் பார்த்து வருவோம்.


என் பாட்டி செல்லம்மா:

அவவின் உண்மையான பெயரும் அதுவே. தொன்னூற்றிரண்டு வரையில் வாழ்ந்து சில வருடங்களுக்கு முன்னர் இயற்கை எய்தியவர். வாழ்க்கைக் காலத்தில் என்னை ரொம்பவும் பாதித்த பெண்மணி. யாழ்ப்பாணத்தின் சாதியக்கட்டுமானத்தில் உயர்சாதியில் தோன்றியபோதும், உள்ளத்தில் எளிமையாக வாழ்ந்த மனுசி. இளமையில் முதல் திருமண பந்தம் மரணத்தில் முடிவுற, இரு பிள்ளைகளுடன் இரண்டாவது பந்தத் தொடர்வும், இரு உறவுகளிலும் வந்த பிள்ளைகளின் வேறுபட்ட மனப்போக்கு, கணவனின் மாறுபட்ட போக்கு, என்பவற்றுக்கிடையே தன் திடமான மனவுறுதியில் குடும்பத்தைக் குலையாமல் கட்டிவளர்த்த வித்தை வியக்கத்தக்கது. என் தாயின் மரணத்தைத் தவிர, பாட்டி அழுது நான் பார்த்ததேயில்லை. கவிஞர் வைரமுத்து, தன் கருவாச்சிக் காவியத்தில், காவிய நாயகி, தன் பிரசவத்தைத் தானே பார்த்துக் கொள்வதை, அழகாகச் சித்தரித்திருப்பார். வாசிப்பவர் மனது பதறும். அவர் கதையில், கற்பனையில் சொன்னதை, தன் வாழ்வில் ஒரு தடவை உண்மையாகவே செய்து காட்டியவள் என் பாட்டி. அந்தளவு திடங்கொண்டவள்.

எந்தவொரு பிரச்சனையையும் அவரவர் போக்கிலே சென்று, லாவகமாக அவற்றைக் கையாண்டு வெற்றி காணும் அவவினது வாழ்க்கையில் தான் எத்தனை சங்கடங்கள். ஆனால் சளைக்கவில்லையே. எல்லாற்றையும் வெற்றி கொண்ட வீராங்கனை . அதற்காக அவர் ஒரு நாளும் ஆர்ப்பாட்டம் பண்ணியும் அறியேன். உருகி உருகி மற்றைய தலைமுறையை உருவாக்கியவள். தன்னை நோக்கி விழுந்த ஏளனங்களை எடுத்தெறிந்து, எதிர்நீச்சல் போட்டவள். இலகுவாகச் சொல்ல முடிகிற வார்த்தைகளாக இருந்தபோதும், அவவின் வாழ்க்கை, அர்ப்பணிப்பு மிக்க ஒரு போராளியின் வாழ்க்கைகுச் சமனானது. அவ இல்லாது போன இந்த வருடங்களில் அவவின் வெற்றிடம், வெளிப்படையாகத் தெரிகிறது எங்கள் குடும்ப உறவுகளில்.


என் பாதி செல்லம்மா:

இவள் என் வாழ்க்கைத்துணைவி. என் பலங்களாலும், பலவீனங்களாலும் பல முறை துன்பப்பட்டவள். இருந்தபோதும் அதே பலங்களையும், பலவீனங்களையும், இயல்பாக ஏற்றவண்ணம் இன்றுவரை என் வாழ்வில் இணைந்து வருபவள். உயர்சாதீயத்தின் சமூகமுறைமையெனும் எதிர்காற்றின் வேகத்தாக்கத்திலும், ஈடுகொடுத்தெழுந்து நடப்பவள். விழுவதும், எழுவதும், நம்விதியெனச் சில கணம் எண்ணியபோதிலும், எழுவதில் மட்டும் சோர்ந்து போகாதவள். என் ஆர்வங்கள் பலவும், சமுதாய விழித்திரையில் கேலிச்சித்திரங்களாகப் வரையப்பட்டபோதுகளிலெல்லாம், சமூகமாற்றமென சிந்தித்த என் சிந்தனைகள் சந்திச்சிரிப்பாகிப்போயிடினும், சிரிப்புக்களினாலே சேர்ந்தே அவளும், சிறுமைப்பட்டுப் போனாலும், குடும்பம் சிதறுண்டுபோகாவண்ணம் செயலாற்றியவள். ஐயோ பாவம் எனும் பரிகசிப்புக்களுக்கு மத்தியில், அழுதவண்ணமே அரணாய் நின்று காத்தவள். நிச்சயமற்ற நீண்ட பயனங்கள் தொடங்கிய போதுகளில், நில்லுங்கள் நானும் கூடவே நடந்து வருகின்றேன் எனத் தொடர்ந்து வந்த வனவாசச் சீதையவள். இன்றளவும் தன்னிலை தளராமலும், நான் தளர்ந்துபோகாமலும், தாய்க்குப்பின் தாரமென்றில்லாமல், தாய்க்குப்பின்னும் தாயாகவே நின்று என்னைத் தாங்கி வருவபவள்.


நான் அருகிருந்து பார்த்த இச் செல்லம்மாக்களின் சிலுவைப்பாடுகளில், பாரதி செல்லம்மா பட்ட துயர் உணர்ந்தேன். உடையோனின் உயர்ந்த அன்பின் அரவணைப்பை, அயலவரின் பரிகசிப்பால், ரசிக்க முடியாப் பரிதவிப்பும், தன் குடும்ப வறுமையெண்ணாது, தொலைதூரத் துயர்களைய சிந்திக்கும், குடும்பத்தலைவனது தகமையினால் வரும் தத்தளிப்பும், வாட்டியெடுத்து வதைத்துவிட்ட போதிலும், கூட்டிநின்ற குடும்பத்தைக் குலைக்காது நின்ற மான்புக்கென, பாரதியை விட ஒருபடி மேலாய், என் மனதினில் நின்றாள் செல்லம்மா.

கண்முன்னே தன் குழந்தைகளின் பசிநோக்காது, கண்காணா தொலைதூரத்து கரும்புத் தோட்ட கூலிகளுக்காக கண்ணீர் விட்ட கணவனைப் பாரத்துக் கோபப்படும்போதும் கூட அவரையறியாமல் காட்டும் பச்சாதாபத்தில், பாரதியோடு இணைகின்றாள். காலங்காலமாக சிந்தனையூட்டம் தந்த சாதீயத்திலிருந்தும், சமூகக் கட்டுமானங்களிலும் இருந்து வெளிவராத செல்லம்மாள், பாரதியின் செய்காரியமும், சிந்தையும் அறியாத போதும், இறுதிவரை சேர்ந்தேயிருந்தாள், அதனால் பாரதியின் செய்காரியம் யாவிலும், சிந்தனை யாவிலும், பங்கு கொண்டிருந்தாள்.

தான் கொண்ட கணவனின் நியாயங்களுக்காக, தன் குடும்ப உறவுகளோடு சமரிடுவதும், சமரசம் கொள்வதும், கூட கடினமானதுதான். இன்னும் சொல்லப்போனால், உறவுகளிடத்தில், உடன்படாதிருத்தல் என்பது, மட்டில்லா மனக்கசப்புக்களையும், உளைச்சல்களையும், தாங்கொணா வலிகளாகத் தரக்கூடியது. இந்த வலியின் கொடுமை தெரியுமாயின், செல்லம்மாவின் மனவெளியின் விசாலம் புரியும். விட்டுக்கொடுப்புக்கள் அற்றுப்போன இக்காலச் சூழலில், சிறு முரண்பாடுகளே முற்றிப் பெருத்து, மனமுறிவாகவும், குடும்பங்களின் சிதைவுகளாகவும் மாறிவரும் நிலமையினைப் பார்க்கும்போதுதான் செல்லம்மா சத்தமின்றிச் சாதித்ததன் பெரு வடிவம் புரிகிறது..


தான் குறித்த வேளையில், தலைமை தாங்க முன்வராத காந்தியுடன் சமரசம் செய்து கொள்ளா மகாகவி, கண்ணம்மாளின் திருமணத்திற்குச் செல்லம்மா அழைத்தபோது வருவது, பிள்ளைப்பாசம் என்று மட்டும் கொள்ளமுடியாது, குடும்பம் என்ற கோப்பினை கட்டிவைத்திருந்த செல்லம்மாளின் காதல்மிகு கட்டளை அல்லது கசிந்துருகிய கதறல், என்றால் மிகையாகாது.

எதுவெப்படியாயினும், எள்ளி நகையாடுதலும், ஏளனப்பார்வைகளும், ஈட்டிமுனைக்கூராய், இதயத்தைக் குத்தியபோதிலும், ஊடலும் கூடலுமாய் உறவாடி, குடும்பம் என்ற பந்தத்தை குழப்பமின்றி, விட்டுக் கொடுப்புக்களினாலும், விரும்பா இடங்களில் விலகிக் கொண்டதினாலும், இறுதிவரை பாரதியுடன் கூடிவந்ததினால், கூட வாழ்ந்ததினால், வையகத்தில் பாரதி புகழ் வாழும்வரை, செல்லம்மாவும் சேர்ந்தேயிருப்பாள்.


அணை உடைத்ததென்பது, இடிந்துவிழும் இறுதிகணத்தில் தீர்மாணம்மாகினும், எங்கோ ஓர் நிலையில், சிறிதாய் அரிக்கத்தொடங்கிய கணங்களிலே, அது ஆரம்பமாகிவிடுகிறது. சமூகமாற்றம் என்பது வெடித்தெழும் வேளைகளில் மட்டுமல்ல, அந்தரங்க அசைவுகளிலும், அது நிகழ்ந்து கொண்டுதானிருக்கிறது.



வெற்றியை விரும்பும் இதயங்களுக்கு முதலில்
இது வேண்டும்

என் தீவிருந்து புறப்பட்ட டைட்டானிக்.

இழப்புக்கள் என்பது எம்மினத்தின் தலைவிதியாகிப்போனதோ என்னவோ, தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. புலப்பெயர்வும், அகதிவாழ்வும்,கூட அப்படியே. யுத்தத்தில் மட்டு மல்ல, இடப்பெயர்விலும் கூட இழப்புக்கள் வந்தன. தரையில், கடலில், என பல இடங்களில், பல நிலைகளில், ஏற்பட்டன.

தமிழீழத்திற்கும் அப்பால், ஐரோப்பிய எல்லைகளில், அரபிக்கடல்களில், பாக்குநீரிணையில், என பல இடங்களில் மடிந்துபோனார்கள் எம் மக்கள். மறுவாழ்வின் நம்பிக்கையோடு புறப்பட்டவர்களை மறுபடியும் காணமுடியாமலே போனது. என் உறவுகளிலும் இத்தகைய இழப்புக்கள் ஏற்பட்டிருக்கின்றன. அதில் என்னைப் பாதித்த ஒன்று...

இரண்டாம் ஈழப்போர் காலகட்டம். யாழ்ப்பாணத்திற்கு மேலேயுள்ள தீவுக்கூட்டங்களில் ஒன்றின் கரையிலிருந்து, இருளில் இந்தியக்கரை நோக்கி, அலையைக் கிழித்து, அந்தச் சிறிய படகு புறப்பட்டது. பெரியவர்கள் சிறியவர்கள் குழந்தைகள் என அறுபத்தைந்து பேர்கள் அப்படகில் பயணமானார்கள்.

உறவுமுறையில் என் சிறிய தந்தையர்களாக அமைந்த இருவர் குடும்பமும் அதில் அடங்கியிருந்தது. இலங்கைக்கடற்படையின் கண்களில் அகப்படாமல், அக்கரையில் தஞ்சம் தரும் தமிழகக் கரைக்குத் தப்பித்துவிட வேண்டும் என்பதே அவர்களின் பிரார்த்தனையும், நம்பிக்கையுமாக இருந்தது.

படகோட்டி, ஏற்கனவே சொல்லிய அறிவுறுத்தல்களின் படி அனைவரையும், மறுபடியும் ஒழுங்கு படுத்தி அமர்த்திக் கொண்டான். பாக்கு நீரினை அன்று என்னவோ பக்குவமாக இல்லை. அலையடித்து ஆர்பரித்தது. படகின் உள்ளே நீரலைகள் துளியாகத் தெளித்த போதெல்லாம் சிறுவர்கள் சிரித்து மகிழ்ந்தார்கள். பயணத்தின் பயங்கரத்திலுறைந்திருந்த பெண்கள் அவர்களின் சிரிப்பை அடக்க முயன்றார்கள். ஆண்களின் கண்களில் இருளைக்கிழித்த தேடல். அவ்விதமே படகோட்டியின் உதவியாளர்களும், கரியன் எனக் குறியீட்டுச் சொல்லில் கடலோடிகள் விழிக்கும், சிறிலங்காவின் கடற்படைக்கப்பல்கள் தெரிகின்றனவா என்பதே அவர்களின் தேடு பொருள்.

இருளும் பயமும் கலந்த அந்தப்பயணக்கணங்கள் மரணவலி தருபவை. எந்தநேரமும், எதுவும் நடக்கலாம், எனும் நிச்சயமற்ற சூழலில் நடக்கும் பணங்கள். நல்லதே நடக்கும். நமக்கும் வாழ்வு இருக்கும் என்ற நம்பிக்கையில் நடந்து கொண்டிருக்கும் இரவுப்பயணங்கள். எத்தனையோ பிரார்த்தனைகள், எத்தனையோ நேர்த்திகள், என்பவற்றுடனும், எங்கள் மண்ணைப் பிரிகின்றோமே எனும் ஏக்கத்துடனும், கடல்களில் மிதக்கும் கண்ணீர் பயணம்.

படகிலிருந்து பாரத்துக்கொண்டிருந்த ஆண்களின் கண்களில் எதிரே தெரிந்த கரிய தோற்றம் அச்சம் தர, அது கச்சதீவு பயப்பட வேண்டாம் என படகோட்டி உரைத்தான். எல்லோர் மனதிலும் நிம்மதிப் பெருமூச்சு. கச்சதீவு தாண்டிவிட்டால், எளிதாக இந்தியக்கடற்பரப்புக்குள் நுழைந்துவிடலாம் என்பதில் வந்த ஆசுவாசம் அது.

சிவப்பி!
என் சித்தப்பாவின் செல்லப்பெண். அவள் மூன்றாவது குழந்தை. முதலும் ஒரு பெண் உண்டாயினும், இளையவளில் அதீதப் பிரியம். யாழ்ப்பாணக்குணாம்சத்தில் சிகப்புப் ( வெள்ளை) பிள்ளைகளுக்குக் கிடைக்கும் சிறப்பான மரியாதையும் ஒருகாரணம். அதனால்
எல்லோருக்கும் பிடிக்கும். அவள் சிரிப்பு கொள்ளை அழகு. அதனால் எனக்கும் பிடிக்கும். சிவப்பி இப்போதும் சிரித்துக்கொண்டிருந்தாள்.

படகு கச்சதீவைத்தாண்டிற்று என்பதையும் இந்திக்கடல் எல்லைக்குள் வந்துவிட்டதை உறுதிப்படுத்தி உரைத்ததான் படகோட்டி. சாட்சியத்திற்காய் சற்றுத் தொலைவில் தெரிந்த தமிழக மீன்பிடிப்படகுகளின் சிறு வெளிச்சத்தையும், தமிழகக் கரையில் மின்னிய ஒளியையும் காட்டி நின்றான். அனைவரிடத்திலும் நிம்மதிச் சந்தோசம்.

அதுவரையில் இருந்த பயம் கலைய ஒவ்வொருத்தரும், தாம் கொணர்ந்த, தேநீர், கோப்பி வகையறாக்களைப் பகிர்ந்து கொண்டிருந்தனர். இனியென்ன இன்னும் கொஞ்ச நேரத்தில் போயிடலாம் என்ற வார்த்தைப்பிரயோகங்களும் வந்து விழுந்தன. அந்த நேரத்தில் படகின் அடிப்பகுதியில் அமர்ந்திருந்தவர்கள் மத்தியில் சலனம்.

படகின் அடிப்பகுதியிலிருந்து உட்புகுந்த நீர் மெல்ல மெல்ல அதிகரிக்கத் தொடங்க, ஏற்பட்டிருந்த நிம்மதியும்,நம்பிக்கையும், இல்லாமல் போனது. படகோட்டியின் பணிப்பின் பேரில், ஆண்கள் சிலர், கிடைத்த பாத்திரங்களால், உடபுகுந்த நீரை வெளியே வாரி இறைத்தார்கள். கரைசேர்ந்து விடவேண்டும் எனும் வேட்கை, வேகத்தை அதிகரிக்க, நீரை வேகமா வாரியிறைத்தார்கள். களைத்தவர்கள் பின்வாங்க மற்றவர்கள் செயற்பட்டார்கள்.

அந்த நம்பிக்கைக் கணங்களில் படகின் அடிப்பகுதி உடைந்தது. தீடிரென ஒருபகுதியால் பெருமளவில் உட்புகுந்த நீர், படகை கவிழ்த்து விட்டது. படகிலிருந்த அனைவரும் பாக்கு நீரிணைக்குள். யார் யார் எங்கெங்கு என் தெரியவில்லை. யாரும் கதறக்கூடவில்லை. இருளோடு இருளாக, ஒருபயங்கரம் நடந்தது. ஒரு சித்தப்பாவும், சித்தியும், நன்றாக நீந்துவார்கள். ஆனால் அவர்களால் யாரையும் காப்பாற்ற முடியவில்லை. அவர்களையும் காப்பாற்ற முடியவில்லை.

நீந்தத் தெரிந்தவர்களெல்லோரும் ஏதோ ஒரு பக்கத்திற்கு நீந்த, பெற்றோர்கள் பிள்ளைகளைத் தேடி நீந்த, அவலம் ஒன்று அர்தசாமத்தில் அடங்கிப்போனது. மறுநாள் காலைவரை இடைவிடாது நீந்திய ஐந்து பேர்களை மட்டும், தமிழக மீனவர்கள் காப்பாற்றினர். காப்பாற்றப்பட்ட ஐவரில் என் இளைய சித்தப்பாவும் ஒருத்தர். பத்துப்பேர் கொண்ட இரண்டு குடும்பத்தில் எஞ்சியவர் அவர் ஒருவர் மட்டுமே.

பாக்கு நீரினை நடந்த பயங்கரம் எதையும் வெளிப்படுத்தாது, அமைதியாக இருந்தது. இறந்துபோனவர்களின் உடலங்கள், தமிழகக்கரையில் ஒதுங்கின. பிரிந்துபோன உறவுகளை உடலங்களாகத் தேடிக்கொண்டிருந்தனர், உயிரோடிருந்தவர்கள். தேடிக்கிடைத்த உடலங்களுக்குள் சிகப்பியும் சிரித்தபடியே செத்துக்கிடந்தாள்.

Saturday, September 16, 2006

சந்தனத் தெருக்களில் கந்தகம் மணக்கையில்

போராளிகள்!

ஒடுக்கப்படும் மக்களின், விடுதலைக்குரலாய் ஒலிப்பவர்கள் போராளிகள். இவர்கள் வெறுக்கத்தக்கவர்களல்ல.மாறாய் விரும்பத்தக்கவர்கள். அவ்விதமே பலராலும் நேசிக்கப்பட்டவர்கள். ஓமர்முத்தா, லெனின், சேகுவேரா, நெல்சன் மண்டேலா, மாவோ.... என இவர்கள் பட்டியல் நீண்டு கொண்டு செல்லும்.

அடிப்படையில் மெல்லிதயம் கொண்ட இம்மனிதர்கள், தங்கள் முன்னே நடைபெறும் அநீதிகள் கண்டு, கொதித்தெழும்போது, போர்க்குணம் மிக்கவர்களாக ஆகின்றார்கள். அநீதி செய்யும் மாந்தர்கள் சமூகத்தின் நன் மனிதர்களாக வேடம்கட்டபடுகின்ற வேளைகளில், போராளிகள் புறந்தள்ளப்படுகின்றார்கள். உண்மையில் வெறுக்கபட வேண்டியவர்கள் போற்றப்படுகின்றார்கள். இந்த அவலம் உலகில் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.

கலைஞர்கள்!
மெல்லிதயமும், மென் உணர்வுகளும் கொண்ட மனிதர்கள். தங்கள் செய்களில் ஒரு அழகியலை, வரைமுறையை, காண்பார்கள். காணும் காட்சிகள் யாவையும், ஒருவித ரசிப்போடு, நோக்குவார்கள். உற்று நோக்கும் பண்பெ, அவர்களை ஒரு கட்டத்தில் போராளிகளாகவும் மாற்றி விடுகிறது. இந்த வகைக் கலைஞர்கள் வரிசையில், பாரதி முதல், பொப் மார்லி வரை, பலரை நாம் காணலாம்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இணைந்து கொண்ட போராளிகள் பலருக்கும் இவ்விரண்டு தன்மைகளும் நிறைய ஒத்துப் போகின்றன. நான் சந்திந்த பல போராளிகள் மிக நல்ல கலைஞர்களாக இருந்திருக்கின்றார்கள். இருக்கின்றார்கள். இவர்களுடனான அனுபவங்கள் மட்டுமே, பல பதிவுகளில் பகிர்ந்து கொள்ளக் கூடியவை.

இங்கே, கலைஞனாக இருந்து போராளிக் கலைஞனாக மாற்றம் பெற்ற ஒரு மனிதனைப் பார்க்கவிருக்கின்றோம். நாச்சிமார்கோவிலடி கண்ணன். ஆம் ஒரு காலத்தில் அப்படிச் சொன்னால்தான் தெரியும். இன்று இசைவாணர் கண்ணனாக, போராளிக் கலைஞனாக உருவாகியுள்ளான்.

ஒருகாலத்தில் யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல, முழு இலங்கையிலும் பிரபலமாகியிருந்த பெயர் நாச்சிமார் கோவிலடி கண்ணன் கோஷ்டி. மெல்லிசைப்பாடல்களையும், சினிமாப்பாடல்களையும், விழாக்களிலும், கலைநிகழ்ச்சிக்களிலும் இசைப்பதில், மக்கள் மத்தியில் பிரபலம் பெற்ற ஒரு இசைக்குழு. இதன் இயக்குனர்தான் கண்ணன். பல கீழைத்தேய வாத்தியங்களையும், மேலைத்தேய இசைக்கருவிகளையும், வாசிக்கத் தெரிந்தவன். கண்ணனுடன் நான் அறிமுகமானது ஒரு வித்தியாசமான தருணத்தில். மேடைகளில் மெல்லிசைப்பாடல்களுக்கு இசையமைப்பவனாகத் தெரிந்த அவனை, அப்படிக் கண்ட தருணத்தில் ஆச்சரியமாகவிருந்தது.

கொக்குவிலில் உள்ள என் நண்பர் ஒருவர் மிகுந்த சாயிபக்தர். குறிப்பிட்ட காலப்பகுதியில், மிகுந்த மனஉளைச்சலுக்குள்ளாகி இருந்த என்னை ஆற்றுப்படுத்தியவர். என்னிடம் உள்ள சிலைவடிக்கும் தகமையைக் கண்டு கொண்ட அவர், தனக்கு ஒரு சாயிபாப சிலை செய்து தரவேண்டுமென அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தார். எனக்கோ சாயிபாபாவைக் கண்ணில் காட்ட முடியாது. நண்பரோ வெறுத்தொதுக்க முடியாதவர். நிலமையைத் தந்திரமாகத் தட்டிக்கழிக்க எண்ணி, எனக்கு சாயிபாபாவின் உருவ அமைப்பு முழுமையாகத் தெரியாது எனச்சொன்னேன். அதற்கு அவர் மறுநாள் சிவராத்திரி தினமென்றும், நாச்சிமார் கோவிலடி கண்ணன் வீட்க்குச் செல்லுமாயும், அன்றிரவு முழுக்க அவர் வீட்டில், பஜனையும், பாபாபற்றிய வீடியோ படங்களும் காண்பிக்கப்படும் என்றும் சொன்னார்.

விருப்பமின்றிப் போனேன். விடியும்வரை இருந்தேன். காரணம் கண்ணனின் அழுகையும், இசையும் கலந்த பஜனைப்பாடல்கள். கண்ணன் மிகத்தீவிரமான சாயிபக்தன் என்பது அன்றுதான் எனக்குத் தெரியும். அவர் வீட்டின் பெயரே, பிரசாந்தி நிலையம். வீட்டின் வரவேற்பறையே ஒரு கோவிலாக வடிவமைக்கப்பட்டிருந்தது. அந்த மண்டபத்தில், ஆர்மோனியம், மிருதங்கம், தபேலா போன்ற இசைக்கருவிகள், எந்நேரமும் வைக்கப்பட்டிருக்குமாம். யார் வேண்டுமானாலும், எந்நேரமும் போய் பஜனை செய்யலாமாம், எனச் சொன்னார்கள். அன்று சிவராத்திரி என்பதால் விடிய விடிய பஜனை நடந்து கொண்டிருந்தது. ஆர்மோனியத்தை வாசித்துக் கொண்டு கண்ணன் பாடினார். மற்றவர்களும் பாடினார்கள். “ பிறேம முதித மனசே ககோ ராம ராம ராம் சிறி ராம ராம ராம்... “ கண்ணன் பாடினார் என்றா சொன்னேன். இல்லை இல்லையில்லை, இசையோடு இசைந்து, இசைந்து அழுது கொண்டிருந்தார். அப்படியே இருந்தவன் அதிகாலை வரை அங்கேயே இருந்தேன். பஜனை நடைபெறா வேளைகளில் பாபா பற்றிய பதிவுகள் காட்டினார்கள். அதையும் பார்த்தேன். அடுத்த வாரமே சிலை வடித்தும் விட்டேன். நண்பருக்கோ மிக்க மகிழ்ச்சி. எனக்கும் தான், இருக்காத பின்னே. அப்படியொரு இசையமுதம் பருகிய பின் மகிழ்ச்சி இல்லையென்றால்..நான் மனிதனே இல்லை.

தேசத்தில் மாற்றங்கள் பல வந்தன. தேசத்தில் மட்டுமா? மனங்களிலும்தான். அழுதழுதே பஜனை பாடிய கண்ணன், அழுதழுதே பரணி பாடுகின்றான். அவன் இசை பலரைப்பாட வைக்கிறது. சாம்பிராணியும், சந்தனமும், மணத்த தெருக்களில், கந்தகம் மணக்கையில், கற்பூரப்புகை விலக்கிக் கண்ணீர்புகை எழுகையில்....பிரசாந்தி நிலையத்தில் பக்தியைப் பிரசவித்த இசை விடுதலைக்கான பாடல்களைப் பிரசவிக்கிறது. போர்... போர் ...... போர்..... போரம்மா



Friday, September 15, 2006

என் சொல்லு தமிழின் சோபா

சோ.ப
இந்த எழுத்துக்களுக்குள் மறைந்திருப்பது, சோ.பத்மநாதன் எனும் ஒரு நல் இதயத்துக்குச் சொந்தக்காரன். ஆங்கில இலக்கியம் படித்து, ஆங்கிலப் பேராசிரியராக இருந்து கொண்டு, தமிழ்வளர்க்கும், தமிழ்பழக்கும் , தமிழ்க்காதலர். நல்ல மரபுக் கவிஞர், சிறந்த பேச்சாளர். என் ஆசான். அதற்கும் மேலே என் நேசன். என் தாயின் மறைவின் பின், என் கலை ஆர்வத்துக்குச் செவிலித்தாயாக வாய்த்தவர். பிஞ்சு வயதில் என் நெஞ்சுநிலத்தில், தமிழ் வித்திட்டு கலைவளர்த்த கவியாளர். சின்ன சின்னதாய், என்னைச் செதுக்கிச் செப்பனிட்ட சிற்பி.

கோண்டாவிலில், மிக எளிமையான குடும்பத்தில் பிறந்தவர். இளவயதுகளில் மாமனாரின் சுருட்டுக்கொட்டில்களில், சுந்தரத்தமிழ் கேட்டு வளர்ந்தவர். வானொலிகளும், தொலைக்காட்சிகளும், சாமான்யர்களின் வாசல் தேடிவந்திராத காலமதில், சுருட்டுக் கொட்டில்களில் சுருட்டுச் சுத்தும் தொழிலாளர்களுக்கு செவிக்கின்பம் தருவதற்காய், செய்திப் பத்திரிகைகளும், கதைப்புத்தகங்களும் வாசிக்கப்படும். இதற்கென்றே குரல்வளமும், தமிழ்த் தகமையும் பெற்ற நபரொருவர் நியமிக்கபடுவாராம். அப்படி வாசித்த தமிழ்கேட்டு வளர்ந்து, வாசிக்கும் தகமையாளராயும் மாறி, தமிழறிந்து, தானுணர்ந்து, தகமைசால் ஆசிரியனாக உருப்பெற்ற வரலாறு அவருரைத்துக் கேட்டிருக்கின்றேன்.

பத்தாவது வயதில் எனக்குப் பாடம் கற்பிக்க வந்தவர், பள்ளிப்பருவம் தாண்டியும், அன்பில் நண்பனாயும், அறிவுறுத்தலில் ஆசானாயும் தொடர்ந்திருக்கிறார். பத்து வயதுகளிலே “ பாட்டி மடியமர்ந்து பலகதைகள் கேட்டு... “ எனக்கவியெழுதி அரங்காற்ற வைத்தவர், அதற்கடுத்து பல் துறைகளுக்கும் படிவடித்துத் தந்தார். சில பொழுதுகளில் கோபித்தும், பல பொழுதுகளில் நேசித்தும், அன்னைக்கு நிகரான அக்கறை கொண்டிருந்தார். கல்வி கற்பித்தல் மட்டுமே தன் கடமையெனக் கருதாத பேராசான்.

முதன் முதலில், ஆங்கில தினவிழா வொன்றிற்கான நாடகத்திலேயே, நடிகனாக அரங்கேற்றினார். பின் பாடகனாக, பேச்சாளனாக, கவிஞனாக, என்னையுமறியமால், என்னுள்ளே அவர் பதியம் போட்ட வித்தையை, இப்போ நினைத்துப்பார்க்கையில், ஆச்சரியமும் அழுகையும் சேர்ந்தேவருகிறது.

பாட்டுப் போட்டிகளுக்கான பயிற்சிகள் தந்து, போட்டி நாட்களில் கூட இருந்து, இறுதிக்கணங்களில், நம்பிக்கை தந்து, அரங்கில் நான் ஆற்றும்போது, அவையின் அந்தத்தில், கைகளிரண்டையும் பின்னே கட்டி, சிந்தனை பாதி, கடைவாய் சிரிப்புப் பாதியென மெல்ல நடந்து, வெற்றி உனக்குத்தான் என தட்டி மகிழும் தன்மைதனை எத்துணை சொன்னாலும்,
எத்துணை புகழ்ந்தாலும் தகும்.

பள்ளிப்பருவத்திற்கப்பால், நல்லதோர் நண்பனாய் வந்தபொழுதுகளிலும், ஆசான் எனும் மரியாதை என்னிடமும், மாணவன் எனும் மதிப்பு அவரிடமும் குறையவேயில்ளை. இளவயதுப் பொழுதுகளின் மாலைகளில் அவர் அறிமுகஞ் செய்த கவிகளில் பாரதியும், பாரதிதாசனும், கூடவே, ஷெல்லியும், பாப்லோ நெருடாவும், இருந்தார்கள். அவரின் ஆங்கிலப்புலமையும், அழகு தமிழும், அவர்களை எனக்கு நன்கு காட்டின.

சோ.ப. வின் ஆங்கிலப்புலமை, ஆபிரிக்கக் கவிதைகளை தமிழில் மொழிபெயர்க்க முனைந்தது. ஒரு சில முயற்சிகள் பின்னாளில் நடந்தன என்றும் அறிந்தேன். ஆயினும் புலத்திற்கொருமுறை அவரை அழைத்து மகிழவேண்டும் எனும் எண்ணம் மட்டும் இன்னும் கூடவில்லை. இனிவரும் காலங்களிலாயினும், இனிதாய் என் எண்ணம், செயலாய் முடிய வேண்டும்.

இங்கிவனை நல்ஆசானாய் நான் பெறவே, என்ன தவம் செய்தேனோ....?

அண்மையில் யோகன் கடகம் என்ற பதிவெழுதக் காரணமாயிருந்தது, சோ.ப வின் கவிதைதான். அக்கவிதையை கற்றதும் பெற்றதும் பகுதியில் சுஜாதா அவர்கள் பாராட்டி இருந்தார்கள். முடிந்தால் அக் கவிதையை இங்கே இணைக்க முயல்கின்றேன்.

எங்கள் மண்ணின் ஏறுபடிக் கலைஞர்கள்.

“ஏறுபடி என்டிட்டு எகிப்துக்காறரைக் கூட்டியாறியள் ? .எங்கடை ஆக்களில ஒருத்தரும் உங்களுக்கு அகப்படல்லேல்லையோ ? “ என்று யாராவது சொல்வதற்கு முன்னர், முந்திக்கொண்டு எங்கள் கலைஞர்கள் இருவரை அழைத்து வருகின்றேன். அவர்கள்தான் வி.கே. காணமூர்த்தி, வி.கே. பஞ்சமூர்த்தி சகோதரர்கள். இந்த இசை இரட்டையர்கள், ஈழத்தின் ஏறுபடிபடி நாதஸ்வரக்கலைஞர்கள்.

Photobucket - Video and Image Hosting


இணுவில், அளவெட்டி, கோண்டாவில், ஆகிய ஊர்களில் வாழ்ந்துவரும் அதிகளவிலான இத்தகைய இசைக்கலைஞர்களால், அவ்வூர்களுக்குப் பெருமை. கோண்டாவில் கிராமத்துக்குப் பெருமைசேர்த்த கலைஞர்களில் காணமூர்த்தி பஞ்சமமூர்த்தி சகோதரர்களும் முக்கியமானவர்கள்.

எனக்கு மிகவும் பரிச்சமான இச்சகோதரர்கள், பண்பிலும் பழகுவதிலும் கூட மிக நல்ல மனிதர்கள். அன்னையை மதிக்கும் பண்பு பெற்ற இக்கலைஞர்கள், தாய்க்குக் கொடுத்த மரியாதையை கண்ணாரக் கண்டவன் நான். இசை வாசிப்பிலும் இருவரும், ஒருவருக்கொருவர் மெருகு சேர்த்துச் செல்வார்கள். வடபகுதி ஆலயங்கள் யாவிலும் இனிய இசையால், கலைப்பணி புரிந்தவர்கள். எல்லா கலைஞர்களும் அப்பணி புரிந்தவர்கள் தாம். அப்படியிருக்க இவர்களை மட்டும் சிறப்பிக்கக் காரணம் என்னவென்று கேட்பீர்கள். சொல்கிறேன்...

யாழ்ப்பாணத்தின் அநேக ஆலயங்களின் உட்பிரகாரத்தில் கர்நாடக இசை மட்டுமே வாசிக்கும் நாதஸ்வரக்கலைஞர்கள், அதற்கென ஒரு முறைமையையும் வகைப்படுத்தி இருந்தார்கள். உதாரணமாக, சுவாமி புறப்பாடு என்றால் மல்லாரி. அர்ச்சனை என்றால் ராக ஆலாபனை. வழிபாடு நிறைவு என்றால் திருப்புகழ். இப்படி ஒவ்வொரு தருணத்திற்கும் ஏற்புடைய இசைவடிவங்களை வகைப்படுத்தி வாசிப்பார்கள். வெளிப்பிரகார வீதியுலாக்களில் மட்டும் கர்னாடக இசைதவிர்ந்த பாடல்கள், சினிமாப்பாடல்கள், ஆகியவற்றை இசைப்பார்கள்.

83 களின் பின் தமிழீழமெங்கினும், விடுதலையுணர்வு மிகுந்திட பலவித மாற்றங்கள் நடந்தன. இராணுவம் மெல்ல மெல்ல முகாம்களுக்குள் முடங்கத் தொடங்கிய காலமாயினும், உளவாளிகள் சுதந்திரமாகத்திரிந்த நேரம். இப்படியான ஒரு இக்கட்டான காலப்பகுதியில், முதன்முதலில் நாதஸ்வரஇசையில் சினிமாப்பாடல்களுக்குப் பதிலாக, விடுதலைப்பாடல்களை இசைத்தார்க காணமூர்த்தி சகோதரர்கள்.

இணுவில் கந்தசுவாமி கோவில் தீர்த்தத்திருவிழாவின் போது முதன்முறையாக அவர்கள் இந்த இசையரங்கை செய்தார்கள். கேட்டு நின்ற மக்களெல்லாம் அதிசயித்துப் போனார்கள். இளைஞர்களுக்கெல்லாம் மனதில் உற்சாகம். ஆனால் இதற்காக அக்கலைஞர்கள் எடுத்துக் கொண்ட சிரமம் நானறிவேன்.

நாதஸ்வரத்தில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று பாரி மற்றது திமிரி. இதில் (எதுவென்று சரியாக ஞாபகம் இல்லை) ஒன்று வாசிப்பது சற்றுக்கடினம், ஆனால் நல்ல கனதியான இசைதரும். அதற்கான மூச்சழுத்தம் அதிகம் தேவை. மற்றையது வாசிப்பது இலகுவானது ஆனால் முன்னையது போல் இசை துல்லியமாயிராது. இதில் இச்சகோதர்கள் வாசிப்பது நன்னிசை தரும் நாதஸ்வரம். இப்பாடல்களை வாசிப்பதற்கான பயிற்சி நடைபெற்ற வேளைகளில், சத்தம் வெளியே பெரிதாகக் கேட்காதவாறு, குழலின் வாசலைக் காகிதங்களால் அடைத்துக்கொண்டு மூச்செடுத்து வாசித்துப் பயிற்சி பெற்றார்கள். சீரான காற்று வெளியேற்றமும், தெளிவான செவிமடுப்பும், இல்லாதிருந்த போதும், சிரமத்துடன் பளின்றார். சிறப்பாகச் செய்தார்கள். இவர்கள் முதன்முதலில் வாசித்தபோது, சக கலைஞர்கள் பலரும், ஆச்சரியத்திலும் , பயத்திலும் உறைந்துபோனார்கள்..பின்னாட்களில் பலரும் விடுதலைப்பாடல்களை நாதஸ்வரத்தில் இசைத்தபோதும், அந்நாட்களில் அதைச் செய்ய, துணிவும், விடுதலைமீதான பற்றும் இருக்க வேண்டும். அவர்களிடத்தில் அது இருந்தது. பயிற்சிகளின்போது அவர்கள் காட்டிய ஈடுபாடும், துணிந்து செயற்பட்டதும், இன்றும் என்னால் மறக்கமுடியாதுள்ளது.

எங்கள் போராட்ட களத்தில் கலைஞர்கள் பலர் திரண்டுள்ள போதிலும், ஆரம்பத்தில் அடியெடுத்து வைத்த காணமூர்த்தி, பஞ்சமூர்த்தி, சகோதரர்கள், எங்கள் மண்ணை நேசித்த கலைஞர்கள், எங்கள் மண்ணின் ஏறுபடிக் கலைஞர்கள்.

வி.கே. சகோதரர்களின் இசைக்கு:



ஏறுபடியும், எகிப்திய நடனமும்

ஏறுபடி. இந்தச்சொற்பதத்துக்கு, யாழ்ப்பாணப் பேச்சு வழக்கில் ஒரு தனிப்பொருள் உண்டு. என் நட்சத்திர வணக்கப்பதிவுக்கு வாழ்த்துத்தெரிவித்த நண்பர், பாரிஸ் - யோகன் “ உங்கள் திரு விழாவில் ஏறுபடிகள் எதிர்பார்க்கிறேன். “ என எழுதியிருந்தார். இதற்க்குப் பொருள் தெரிந்தவர்கள் சொல்லவும் எனக்கேட்டுமிருந்தேன். யாரும் சொல்லவில்லை. அதனால் நானே சொல்லி விடுகின்றேன்.

யாழ்ப்பாணத்தில் திருவிழா நடக்கும் கோவில்களில், கோவிலில் வாசிக்கும் மங்களவாத்தியக்கலைஞர்களைத் தவிர்த்து, விஷேடமாக அழைக்கப்படும் வாத்தியக்குழுவினரை, ‘ஏறுபடி மேளம் ‘ என அழைப்பதுண்டு. அதுவே காலப்போக்கில், ஏறுபடி மேளம் என்பதில், மேளம் தவிர்ந்துபோக, ஏறுபடி என்பது மட்டும், சிறப்பான அல்லது விசேடமான நிகழ்வுகளுக்கான பொதுக்குறியீட்டுச் சொல்லாக பயன் படுத்தப்பட்டது.

வாழை, தோரண அலங்காரங்களுடன் நட்சத்திர வணக்கம் சொன்னதைப் பார்த்து, குதுகலத்தில் யோகன் ஐயா, ஏறுபடிகள் கேட்டுள்ளார். அவரையும், ஏனைய தமிழ்மண நண்பர்களையும், சற்று வித்தியாசமான கலை அனுபவத்துக்கு அழைத்துச் செல்லலாமென எண்ணி, இங்கே எகிப்திய பாரம்பரிய நடனக்குழுவினரை அழைத்து வந்திருக்கின்றேன்.

மனித நாகரீகங்கள் தோன்றிய காலத்தில், பல்வேறு தளங்களிலும், பல்வேறு கலை வடிவங்களும், தோன்றின. அவற்றின் தளங்கள், இக்காலத் தகவல் தொடர்பு வசதிகளைப் பெற்றிருக்காத போதும், பல இடங்களில் ஒத்திருப்பது மனித மனங்களின் சிந்தனை வளர்ச்சியை ஒருமைப்படுத்திக் காட்டுவதாக அமைகிறது. அந்த வகையில் எகிப்திய நடனங்களின் அசைவுகள் தன்மைகள் எங்கள் நடனக்கலை வடிவங்களுடன் ஒத்துப் போவதை உணரக் கூடியதாகவுள்ளது.

இந்த நடனக்குழுவின் இயக்குனர் என் நல்ல தோழி. பல் வகை நடனங்களில் குறிப்பாக எங்களுடன் ஒத்து வரும் மூன்று நடனங்களின் சிறு பகுதிகளை மட்டும் இங்கே இணைத்துள்ளேன். பாவனை, அசைவு, ஆடை வண்ணங்கள், உபபொருட்கள், என பலவும் ஒத்து போகும் எகிப்திய நடனங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அந்த இசையும் அற்புதம்தான். நடனத்தைப் பாரத்து உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள். குறிப்பாக ஆண், ஆடும் நடனத்தில் முக்கிய ஒரு பாவனை அல்லது செயல் உண்டு. கண்டு பிடியுங்கள்.

Thursday, September 14, 2006

வெருகல் - ஒரு பண்பாட்டுக் கோலம். 5

வேலவனுக்கு வேடுவர் சீர் கொணரும் வெருகல்.
இது ஒரு பண்பாட்டுக்கோலப் பதிவு. நான் பார்த்த சில முக்கிய சமய, கலாச்சார விழுமியங்களை அவ்வப்போது, பண்பாட்டுக்கோலம் எனும் தலைப்பிட்டு பதிவு செய்து வருகின்றேன். அந்த வகைக்குள் இந்நட்சத்திர வாரத்தில் இன்று நான் தரும் இப்பதிவு வெருகல் சித்திர வேலாயுத சுவாமிகோவில் பற்றியது.


Photobucket - Video and Image Hosting

அண்மையில் ஈழத்தில் மிகக் கடுமையான யுத்தம் நடைபெற்ற மூதூர் பகுதியில் மாவிலாற்றுக்கு, மிக அண்மையிலமைந்துள்ள, அழகிய முல்லைக்கிராமம் வெருகல். மகாவலிகங்கையின் வற்றாத நீர் வளத்தால், எங்கும் பச்சை வண்ணம் போர்த்தியிருக்கும் பசுமைப்பூமி. இயற்கை வளம் மிகுந்திருந்ததால் மட்டும் வெருகல் சிறப்புப் பெற்றிருக்கவில்லை. மகாவலியின் தீரத்தில், வேலாயுதப்பெருமானாக வீற்றிருக்கும், சித்திரவேலாயுதசுவாமி கோவிலாலும், அதன் அருட்பெருமையாலும் கூடப் பெருமைபெற்றது வெருகல்.

தமிழீழத்தின் வடபுலத்திலோ, அல்லது பிறபாகங்களிலோ, கடல்கடந்து தமிழகத்திலோ, கதிர்காம் பெற்றிருந்த முக்கியத்துவம் வெருகல் முருகனுக்குக் கிடைக்கவில்லை. ஆனால் கதிர்காமத்தைவிட பன்மடங்கு சக்தி வாய்ந்த ஒரு தமிழர் திருத்தலம் வெருகல். அந்தத்தலத்தில் சுமார் இருபத்தைந்து வருடங்களின் முன் நான் கண்ட ஒரு சமய விழுமியத்தைத்தான் இங்கு பண்பாட்டுக்கோலமாக வரையவுள்ளேன்.

மிகுந்த அமைதியாக இருக்கும் வெருகல் கிராமம், ஆவணி மாதம் வந்தாலே குதுகலம் கொள்ளத் தொடங்கிவிடும். சனங்களின் நடமாட்டத்தில் அதிகரிப்பு, தற்காலிக கொட்டில்கடைகள், தற்காலிக கழிவறைகள், என மெல்ல மெல்ல மெருகு சேரும்.

ஆம், இம்மாதத்தில்தான் வெருகல் பதியுறை சித்திரவேலாயுதசுவாமி கோவில் திருவிழா பதினெட்டு நாட்கள் நடைபெறும். பத்தொன்பதா நாள் காலையில், மகாவலி கங்கையில் தீர்த்தம். இந்த இருநாட்களும் திருகோணமலையின் கொட்டியாரப்பற்றே வெருகலில் திரண்டு வந்திருக்கும். இருநாட்களும் விசேடமானவையே. அதில் என்னைக் கவர்ந்தது, பதினெட்டாம் நாள் நள்ளிரவில் நடைபெறும் அந்த வைபவமே.

வேடுவர் குலப் பெண்ணான வள்ளியை மணம்புரிந்ததனால், வேடுவர் குலத்துக்கு மாப்பிள்ளையாகிய முருகனுக்கு, காட்டிலுறை வேடுவர்கள் சீர் கொண்டுவரும் சிறப்பான நிகழ்வு அது. உண்மையில் அப்போது வெருகல் காட்டுப்பகுதியில் வேடுவ சமூகம் சொற்ப அளவில் வாழ்ந்து கொண்டிருந்தனர். அதுபோல் பிபிலை காடுகளிலும் வாழ்ந்தனர். இவ்விதம் வேடுவர்கள் சீர் கொண்டு வருவார்கள் என்பதைக் கேள்விப்பட்டதுமே, எனக்கு ஆவல் அதிகரித்து விட்டது. காரணம் வேடுவரை நேரில் பார்க்கும் ஆவல்தான்.

நள்ளிரவு ஆகிற்று. ஆலயத்தில் பூசைகள் எதுவும் தொடங்கவில்லை. ஏனெனில் வேடுவர்கள் கொண்டுவரும் சீர்ப் பொருட்களிலிருந்துதான் அன்றைய பூசைக்குத் தேவையான முக்கிய பொருட்கள் எடுக்கப்பெறும் என்றார்கள். ஆலயவாசலில் கோவில் பணியாளர்கள் அவர்களை எதிர்கொண்டழைக்க, வேண்டிய உபசாரங்களுடன் காத்திருந்தார்கள். மக்கள் கூட்டம் காட்டுப்பகுதியை, நோக்கிய வண்ணமேயிருந்தார்கள்.
பறைகளின் அதிர்வொலி கேட்கத்தொடங்கின. காரிருளில் கறுத்திருந்த வனத்திடையே சின்னச் சின்ன ஒளிச்சிதறல்கள் தெரிந்தன. தீப்பந்தங்களின் ஒளி தெளிவாகத்தெரியத் தொடங்க மக்கள் கூட்டம் காட்டுப் பகுதியை நோக்கி நகர்ந்தது. காட்டிலிருந்து பிரகாசமான தீப்பந்தக்களுடனும், அதிரும் கொட்டுப் பறைகளுடனும், வேடுவர்கள் வெளிபட்டனர்.

மேலங்கி அற்ற, முழங்காலுக்கு சமீபமா உயர்த்திக்கட்டிய உடுதுணி, கையில் கம்பு, என்பவற்றுடன் எட்டு அல்லது பத்துப்பேர்கள் வந்தார்கள். ஒருவருடைய தலையில் ஒரு துணியால் மூடிக்கட்டிய பெட்டி இருந்தது. அதுதான் சீர்ப்பெட்டி என்பது சொல்லாமலே புரிந்தது. மிக வேகமாக நடந்து வந்தவர்களை, ஆலய பணியாளர்களும், எதிர்கொண்டழைத்துச் சென்றார்கள். ஆலய வாசலில் வைத்து, வந்தவர்களின் கால்கள் கழுவப்பட்டு, ஆலயத்துள் அழைத்துச் சென்றனர். ஆலயத்தின் உட்பகுதிக்கு அவர்கள் சென்றதும், இடைக்கதவு மூடப்பட்டது. அதன்பின் உள்ளே நடப்பது எதுவும் நாங்கள் பார்க்க முடியாது. அந்த ஆலயத்தின் வழக்கமே அதுதான். அபிஷேகமோ, பூசையோ, எதுவும் வெளியாட்கள் பார்க்க முடியாது. அந்த ஆலயப்பணியாளர்கள் மட்டுமே உள்ளே செல்ல முடியும்.
பூசைகள் எல்லாம் முடிந்து, சுவாமி வீதிவலம் வரும்போது மட்டும் பார்க்க முடியும். அதுவும் கதிரகாமம் போன்று ஒரு பெட்டியை, வெள்ளைத் துணியால் யானை போன்ற பாவனையில் மூடி எடுத்துவருவார்கள். ஒரு சொற்ப நேரத்துக்குள் வீதிவலம் முடிந்துவிடும். ஆனால் அந்தச் சொற்ப நேரத்துக்குள் எத்துனை மகிமை நிறைந்திருக்கும்.

இப்போ வேடுவர் கொண்டு வந்த சீர்ப் பெட்டிக்குள் என்ன இருந்திருக்கும் என்பதை அறிய உங்களுக்கு ஆவலாக இருக்கிறதல்லவா? எனக்கும் அப்படித்தான் இருந்தது. கோவில் பெரியவர் ஒருவரிடம் விசாரிக்க, அவர் சொன்ன பதில், தேன், தினைமா, வள்ளிக்கிழங்கு, ஈச்சம்குருத்து, நாவல்பழம், அல்லிப்பூ, என்ற ஆறு பொருட்களே வேடுவர் தங்கள் மாப்பிள்ளை முருகனுக்கு கொண்டு வரும் சீர்ப்பொருட்கள் என்றார். அறுமுகனுக்குப் பிடித்த அத்தனையும் இருக்கிறதே. இதுவல்லவோ இணையற்ற சீர்வரிசை என எண்ணத் தோன்றியது.

பிற்காலத்தில், வேடுவர்கள் அருகி விட்டபோதிலும், ஊரவர்களைக்கொண்டே இந்நடைமுறை பின்பற்றப்பட்டதாக பின்னாட்களில் அறிந்தேன். அந்த நிகழ்வும், விழாவும், இவ்வருடத்தில் நடைபெறவேண்டிய நன்னாள் இன்று. ஆனால் வெருகல் மக்களும், கொட்டியாபுரப்பற்று மக்களும், ஏதுமற்ற ஏதலிகளாக எங்கோ ஒரு தொலைவில்.......



முருகனை நினைந்துருக ஒரு பாடல்




Tuesday, September 12, 2006

இந்திய மேலாதிக்க சிந்தனையா ?

இந்தியாவின் பிரபலமான தமிழ்பத்திரிகையாளர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர் எழுத்தாளர் வாஸந்தி. இவரது எழுத்துக்கள் சிலவற்றை நானும் விரும்பிப் படித்திருக்கின்றேன். இவ்வார ஆனந்தவிகடனில் அவர் புலிகளின் தலைவர் பிரபாகரனை பாரதிராஜா சந்தித்ததையிட்டு விசனம் தெரிவித்து ஒரு கட்டுரை வரைந்துள்ளார். வாஸந்தி அவர்களுக்கிருக்கும் கருத்துச் சுதந்திரத்தினடிப்படையில் கட்டுரை வரைந்துள்ளமையிட்டு எனக்கு எதுவித ஆட்சேபனையும் இல்லை. ஆனால் அவர் கட்டுரையில் தெரிவித்துள்ள கருத்துக்களில் சில, பரந்த நோக்கின்றி ஏதோ ஒரு குறித்த நோக்கில் சொல்லப்பட்டிருப்தாக உணர்கின்றேன். அது குறித்த கேள்விகளுடனேயே இப்பதிவு. (வாஸந்தியின் கட்டுரைக் கருத்துக்கள் நீலநிறத்தில் எழுதப்பட்டுள்ளன)

சென்ற விகடன் இதழில், பிரபல இயக்குநர் பாரதி ராஜாவின் பேட்டிக் கட்டுரை எனக்குக் கவலை அளிக்கிறது. பாரதிராஜாவிடம் எனக்கு மிகுந்த மதிப்பு உண்டு. புலிகள் தலைவர் பிரபாகரனைக் கண்டு அவர் பிரமித்ததை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், அவர் முன்வைக்கும் சில வாதங்கள் ஏற்கும்படியாக இல்லை.

ராஜீவ் காந்தியின் மரணத்துக்காக இந்தப் பூமி உள்ளவரை ஒரு இனத்தையே மொத்தமாகப் புறக்கணிக்க முடியுமா என்கிறார். தமிழ் மக்களை யார் புறக்கணித்தார்கள்? இலங்கைத் தமிழர்கள் சாரி சாரியாக, அகதிகளாக நமது நாட்டுக்கு வருவதைத் தடுக்கிறோமா?

இந்த வரிகளின் பின்னாலுள்ள சிந்தனை என்ன? இலங்கைத்தமிழர்களுக்குச் சொல்லப்படும் செய்தி என்ன? இலங்கையில் புலிகளும் அரசும் யுத்தம் செய்யட்டும், தமிழ்மக்களெல்லோரும் இந்தியாவுக்கு வாருங்கள் என்கிறாரா? அல்லது வாழ்வுரிமை கேட்கும் மக்களுக்கு அதுதான் தீர்வாகுமா?

உலகம் முழுவதும் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி அவர்களைப் புறக்கணித்துவிட்டதால், இப்போது புலிகளுக்கு நமது ஆதரவு தேவைப்படுகிறது. தமிழ்நாட்டுப் பத்திரிகைகள், திரைப்படங்கள் எல்லாம் ஆபாசமானவை என்று தடை விதித்திருக்கும் புலிகள், இப்போது நமது பத்திரிகைகளில் விளம்பரம் தேடுகிறார்கள். பட இயக்குநர்களை அழைத்துத் தங்களைப் பற்றிப் படம் பண்ணச் சொல்கிறார்கள்!

தமிழ்நாட்டுத்திரைப்படங்கள், பத்திரிகைகள், குறித்து விமர்சனங்கள் தமிழ்நாட்டில் இல்லையா? தமிழ்த்திரைப்படங்கள் குறித்த காட்டமான விமர்சனக்கருத்துக்கள் வாஸந்தியிடம் இல்லையா? அப்படியிருக்கும்போது, புலிகள் அதைத் தடைசெய்தது எப்படிப்பிழையாகியது?
புலிகள் பட இயக்குநர்களை அழைத்தார்கள் என்றால், எத்தகைய இயக்குநர்களை அழைத்தார்கள். தரமிக்க, தனித்துவமிக்க, மகேந்திரன், பாரதிராஜா ஆகியோரை அழைத்து, தங்கள் பகுதியிலுள்ள கலைஞர்களுக்கு பயிற்சி கொடுத்து, தரமான கலைவளத்தை உருவாக்க முயற்சிக்கின்றார்கள். இதில் எரிச்சல்பட என்ன இருக்கிறது?

நமது அரசியல்வாதிகள் உணர்ச்சிவசப்பட்டுப் பேசுவதற்கு ஆயிரம் காரணங்கள் உண்டு. பத்திரி-கையாளர்கள், கலைஞர்களின் பார்வை அதற்கு அப்பால் சென்று ஊடுருவ வேண்டும். மனித நேயம், மனித உரிமைக்கான உண்மைக் குரல் எப்போதும் சார்பற்றதாகவே இருக்கும். இருக்க வேண்டும்!

இறுதியில் இவ்வளவு தீர்மானமான கருத்துக்களுடன் கட்டுரையை நிறைவு செய்யும் வாஸந்தியின் பார்வை, ஏதோ ஒருபக்கம் நோக்கி எழுதப்பட்டிருப்பதாகவே கட்டுரையை வாசிக்கும்போது உணர முடிகிறது. இதை இந்திய மேலாதிக்க சிந்தனையின் தாக்கம், எனக் கொள்ளலாமா?

மனதிற்கினிய கீதம் ஒன்று கேட்க

காவிய எழுத்தாளன் இராசரத்தினம்

தமிழீழத்தின் பழைய தலைமுறை மறந்துவிட்ட, புதிய தலைமுறைக்குத் தெரியாத, ஒரு ஈழத்து எழுத்தாளன் வ.அ.இராசரத்தினம். அவர் பிறந்து வளர்ந்த, வாழ்ந்த மூதூர் மண் உலகளாவிய ரீதியில் பேசப்பட்டிருக்கிறது. காரணம், யுத்தமும் மரணமும். ஆனால், காலங்கள் பல கடந்தும் பேசப்பட வேண்டிய ஒரு கலைஞன் காணமற்போய்விட்டான்.
Photobucket - Video and Image Hosting

ஆர்பாட்டங்கள் எதுவுமற்ற, மிகமிகச் சதாரணமான மனிதன்.அற்புதமான கலைஞன். அவரை எழுத்துக்களால் ஏலவே அறிந்திருந்தபோதும், நேரிடையாகச் சந்தித்தது 1977ல் நடைபெற்ற தேர்தல்பிரச்சாரக் கூட்டமொன்றில். தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு ஆதரவு தேடி நடத்தப்பட்ட பிரச்சாரமேடைகளில், அரசியல் பேச்சாளனாக நான் அவதாரம் எடுத்திருந்த வேளையது. ஒரு கூட்டத்திற்கு அவரும் பேச்சாளனாக வந்திருந்தார். மதுப்பழக்கம் உடையவர் என்பதால் சற்றுப் போதையில் இருந்தார் என்றே நினைக்கின்றேன். ஆனாலும் பேச்சினை மிகத்தெளிவாக ஆற்றினார். ஆலாபனைகள் அலங்காரங்கள் அற்ற மிக இலகு தமிழில், சராசரி மக்களுக்கும் புரியக் கூடிய எளிமையான பேச்சு. எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நிகழ்ச்சி முடிந்ததும் அறிமுகஞ்செய்துகொண்டு, அவர் பேச்சுக்குறித்த என்அபிப்பிராயத்தைச் சொன்னேன். சிரித்துவிட்டு, இந்த மக்களுக்குக் கருத்துச்சொல்ல வந்த நாங்கள் ஏன் தேவையில்லாமல் அலட்டிக் கொள்ள வேண்டும். அவர்களுக்குப் புரியும்படி எளிமையாகச் சொல்வதுதானே முறை என்று சொன்னார். நாங்கள் கதைத்துக் கொண்டிருக்கும் போது, மேடையில் ஒரு கூட்டணிப்பிரமுகர், 'ஓடையிலே என் சாம்பல் ஓடும் போதும் ஒன் தமிழே சலசலத்து ஓடவேண்டும்.. ' என அடுக்குமொழியில் அமர்க்களப்படுத்திக் கொண்டிருந்தார். ஆனால் அவர்களின் பேச்சுக்குத்தானே மக்கள் கைதட்டுகின்றார்கள் என நான்கேட்டதற்கு 'கைதட்டல்களையெல்லாம் கணக்கெடுத்தால், கருத்துச்சொல்லமுடியாது. கடைசியா கைதட்டல்களுக்காகவே கதை சொல்ல வேண்டி வரும்.. 'என்றார். எவ்வளவு உண்மையான வார்த்ததைகள்.

வாழ்வாதாரத்துக்கென ஒரு ஆசிரியனாகவும், வாழ்வின் உன்னததுக்காய் எழுத்தாளனாகவும், வாழ்ந்த ஒரு கலைஞன் வ.அ.இராசரத்தினம். எழுத்தாளனின் படைப்புக்களை, அச்சில் வடிக்கும் அவஸ்த்தையின் தன்மைபுரிந்ததினால் அவரும் மனைவியும் இனைந்து, ஒரு பதிப்பகத்தையும் நடத்தினார்கள். இராசத்தினம் அவர்கள் எழுதிய நாவல்கள், சிறுகதைகள் பலவாக இருந்தபோதும், எனக்குத் தற்போது ஞாபகத்தில் இருப்பது, ஒருகாவியம் நிறைவேறுகிறது எனும் குறுநாவலும், தீர்த்தக்கரை எனும் சிறுகதைத் தொகுப்பில் உள்ள தீர்த்தக்கரை என்ற சிறுகதை ஆகியன மட்டுமே. ஏனெனில் அவை இரண்டும் அற்புதமான வாழ்வியல் சித்திரங்கள்.

தீர்தக்கரை:-
ஆடிஅமாவாசைக்கு முந்தையதினம், மகாவலி நதி, திருமலைக்கடலில் கலக்கும் கங்கைத்துறையில், (இது உப்பாறுக்கும், மூதூருக்கும் இடையில் உள்ள கழிமுகம்) கொட்டியாரக்குடாவின் பல பகுதிகளிலும், இருந்து மக்கள் மாட்டுவண்டில்களில், குடும்பம் குடும்பமாக வந்து கூடுவார்கள். அன்று மாலை தம்பலகாமம் கோணேஸ்வரர் கோவிலில் இருந்து வரும் பூஜை விக்கிரகமும், கோவில் பணியாளர்களும் வந்து, வழிபாடுகளை ஆரம்பிப்பார்கள். வழிபாட்டின் தொடர்ச்சியாக திருக்கரைசேர் புராணம் விடிய விடியப் படிக்கப்படும். காலையில் விக்கிரகத்துடன் சென்று கடலும், கங்கையும், கலக்குமிடத்தில் ஆடிஅமாவாசைத்தீர்த்தம் ஆடுவார்கள். இதனால் அந்தக்கழிமுகத்துக்கு தீர்த்தகரை என்ற பெயரும் உண்டு.
தீர்த்தக்கரையின் மற்றொருபுறத்தில், கலைநிகழ்ச்சிகள் பலவும் விடிய விடிய நடைபெறும். இந்தத் தீர்த்தக் கரையில், தன் எழுத்துக்களை அச்சாக வெளியீடு செய்யும் ஒரு எழுத்தாளனின் அவஸ்த்தையை அற்புதமாகச் சொல்லும் கதைதான் தீர்த்தக்கரை. எழுத்தாளன், தன்மனைவியின் கைவளையல்களை அடகுவைத்து, எழுத்துக்களை அச்சாக்குவது முதல், அதை வெளியிடுவது, வெளியீட்டின் பின் கைவளையல்களை மீட்டுவிடலாம் என்ற நம்பிக்கை, நடைமுறையில் அது பொய்துவிடுவது, ஏனையோரின் ஏளனம், என்பவற்றை சராசரிக் கதாபாத்pரங்களைக்கொண்டு, சாதாரண மனிதர்களின் உரையாடலில அற்புதமாக வடித்திருந்தார். இது அவரது வாழ்க்கையின் உண்மைநிகழ்வாகக் கூட இருக்கலாம். ஏனெனில் எழுத்தாளர்கள் பலரின் வாழ்க்கை யதார்த்தம் அதுதானே. இச்சிறுகதைத் தொகுதி கூட அவர்களது பதிப்பகவெளியீடு என்றே ஞாபகம்.

ஒரு காவியம் நிறைவேறுகிறது :-
இது ஒரு நெடுங்கதை அல்லது குறுநாவல். முதலில் வீரகேசரி பத்திரிகையிலும், பின்னர் வீரகேசரிப்பிரசுரமாகவும் வந்தது. இராசரத்தினத்தின் மனைவி ராணி மரணமடைந்தபோது நடைபெறும் நிகழ்வுகழும், அவரகளிருவரின் வாழ்வியல் சம்பவங்களும், மாறிமாறி கவிதைப்படிமங்கள் போல இயல்பாகத் தொகுக்கப்பட்ட அருமையான கதை. இல்லையில்லை உண்மையில் அது ஒரு காவியம்தான். கருத்தொருமித்த ஒரு கணவன் மனைவியின் வாழ்க்கையின் ரசனை மிக்கப் பதிவு அது. இதுவரையில், கணவன் மனையருக்கிடையிலான அப்படியொரு காதலின் வெளிப்பாட்டை எழுத்தில் காணவில்லை என்றே சொல்ல வேண்டும். அவ்வளவு உணர்ச்சிபூர்வமானது. காதல் நினைவான தாஜ்மஹாலைப் போன்ற மற்றுமொரு காதல் நினைவுதான் ஒரு காவியம் நிறைவேறுகிறது.

இத்தகைய உணர்வு பூர்வமான எழுத்துக்குச் சொந்தக்காறனான அந்தக் கலைஞனை மறந்திடலாமோ? மூதூர் மன் தந்த, அந்த முத்தான அந்தக் கலைஞனின் படைப்புக்கள் எந்த வடிவில் இருந்தாலும், அதைப் பதிவு செய்ய உதவுங்கள். அவர் வாழ்வு சராசரியானதா இருந்திருக்கலாம். ஆனால் அவர் எழுத்துச் சாதாரணமானது அல்ல, அது சாதனையானது.


படம் தந்துவிய ரமணீதரனுக்கு நன்றி

என் நட்சத்திர நல் வணக்கம் பதிவுவுக்குப் பின்னூட்மிட்டபோது, நண்பர் யோகன்,
உங்கள் திரு விழாவில் ஏறுபடிகள் எதிர்பார்க்கிறேன் எனக்குறிப்பிட்டிருக்கிறார்.இதிலே வரும் ஏறுபடி என்ற சொல்லுக்கு ஈழத்தின் வடபகுதியில் குறிப்பான ஒரு பொருண்டு. தெரிந்தவர்கள் சொல்லுங்கள். இச்சொற் பயன்பாடு தமிழகத்திலும் உண்டா எனச் சொல்லுங்களேன். இச் சொல்லுக்கான பொருளை நாளை சொல்கின்றேன்.

Monday, September 11, 2006

தாயும், சேயும்.


நட்சத்திர வாசல் தேடி வந்திருக்கும் உங்களை, இனிதாய் வரவேற்க, முதலில் ஒரு இன்சுவை வரவேற்பு



அம்மா!


எல்லோர்க்கும் பிடித்தமான, நேசிப்புக்குரிய, ஒரு உறவுமுறை அம்மா. நாம் விரும்பித் தேர்வு செய்யமுடியாத உறவும் கூட. இவ்வுலகினை, உலகின் சிறப்புக்களை, வாழ்வின் பெருமிதங்களை, நாம் காண, களிப்புற வழிசமைத்தவள். பெருமைக்குரிய தாய்க்குப் பிள்ளையாகப் பிறந்ததினால், எனக்கும் அந்தப்பாக்கியம் கிடைத்தது. ஆனால் அந்தத்தாயுடன் வாழ்ந்த காலத்தின் நீட்சிதான் சொற்பமானது.

என் பத்தாவது வயதில் காலமாகிய என் தாயுடனா வாழ்க்கைக்ககாலத்தில், முதல் ஐந்து வருடங்கள் பால்யப் பருவத்தில் கழிந்துவிட, இறுதி வருடமும் அவரது நோயின் காரணமாகக் குழப்பமாய் அமைந்து விட, நான்கு வருட காலப்பகுதியே அவளைக் கற்கவும், அவளிடமிருந்து கற்கவும் முடிந்தது. ஆனாலும், அவளிடமிருந்து கற்றுக்கொண்ட பலவும் இன்றுவரை, அவள் பிரிந்து, பலவாண்டுகள் ஆனபோதும், என்னுடன் வாழ்கின்றது, என்னை வாழ்விக்கின்றது.

Photobucket - Video and Image Hosting


அம்மாவைப்பற்றிய அடையாளங்கள் சின்ன வயதில் என்னுள் பதிந்தபோது, சாதாரணமான சம்பவங்களாகத்தான் எனக்குத் தெரிந்தன. ஆனால் இப்போது பார்க்கையில்தான் தெரிகிறது அவளின் மாசிலா மாற்றுக்களின் மகத்துவம். அவளின் மறைவின் போது, நாம் அழுததிலும் பார்க்க, எங்கள் ஊர் அழுதது என்று சொல்லலாம். அந்தளவுக்கு எல்லோர் மனங்களிலும் நிறைந்திருந்தாள். அதற்குக் காரணம், அவளின் மகத்தான மனித நேசிப்பு. நல்லவன், கெட்டவன், குடிகாறன், கோள் சொல்பவன், சின்னவன், பெரியவன், உயர்ந்தவன், தாழ்ந்தவன், என எந்தப்பாகுபாடுமில்லமால், பேதங்கள் கொள்ளாமல், அனைவரையும் சமமாக மதிக்கத் தெரிந்த மாதரசி.


அன்பு அன்பு அன்பு, அவளுடைய தாரக மந்திரமே அதுதான். அதன் நித்திய ஜெபிப்பால் அவள் பெற்றிருந்த பலம் மிகப்பெரியது. குறுமுனி போன்று உயரத்தில் குறைவான அந்தக் குட்டைப்பெண்மணியின் கேள்விகளுக்குப் பயமும் மரியாதையுமாகப் பதில் சொல்லும் மனிதர்கள் பலர், கடைத்தெருவீதியில் வாய்சொல்வீரர்களாக நிற்பதைப் பாடசாலை செல்லும் வேளைகளில் கண்டடு அதிசயித்திருக்கின்றேன். குடிபோதையில் வீட்டுக்குத் திரும்பும் குடிமன்னர்கள், எங்கள் வீட்டு வாசலில் அம்மா நிற்பதைக் கண்டதும், மரியாதை மன்னர்களாகச் செல்லும் பவ்வியம் கண்டிருக்கின்றேன். அப்போது சில வேளைகளில் யோசித்ததுண்டு, ஏன் இப்படி எல்லோரும் அம்மாவிடம் பயந்தவர்களாக இருக்கிறார்கள். அட மற்றவர்கள் பார்த்துப் பயங்கொள்ளும் முற்கோபியான என் அப்பா கூட அமைதியாகிவிடுவது புரிவதில்லை. ஆனால் இப்போதுதான் புரிகிறது, அது அவள் மேலான பயமில்லை, பணிவு என்று. மற்றவர்களைப் பணிய வைக்க அவள் பாவித்த ஒரே ஆயுதம், எல்லோரையும் மிகுதியாக நேசித்ததுதான். நேசிப்பின் வழி நின்ற அவள், அதே நேசிப்பின் வழியாக எட்டிய பரிமானங்கள் மிக மிக உயரமானவை.


ஊருக்குள் ஒரு துயரம் என்றாலோ, மகிழ்ச்சி என்றாலோ, அம்மாவின் பங்களிப்பு கட்டாயம் இருக்கும். யார் யாருக்கு என்ன உதவிகள்தேவை, யார் யாரிடமிருந்து அந்த உதவிகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதெல்லாம் அவளுக்கு மட்டுமே தெரியும். அவளால் மட்டுமே முடியும். எங்கள் வீட்டில் எல்லா நாட்களிலும், எந்நேரங்களிலும், குறைந்த பட்சம் ஒருவராவது விருந்தாளியாக இருப்பார். சாதியக்கட்டுமானங்களின் வழிவந்தவளாயினும், சாதியத்தின் வழியில் எவரையும் பார்த்தறியாதவள். அந்த ஜீவநேசிப்பே அவளை அனைவர்பாலும் கவர்ந்திற்று. அதற்காக அவள் பகுத்தறிவுவாதியல்ல. நிறைந்த கடவுள் பக்தியுடையவள்தான். முப்பத்தைந்து வருடங்களின் முன்னமே, பெண்களை அணியாகவும், அமைப்பாகவும், திரட்டி ஆக்கவழியில் வழிநடாத்தினாள். ஆனால் அரசியல்வாதியல்ல.


இசையில் வயலினும், இலக்கியத்தில் புத்தகங்களும், வாசிக்கத் தெரிந்தவள். ஏன் நன்றாகப் பாடவும் செய்வாள். ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை நாயகனாய் மதிக்கப்படும் சேகுவேராவின் தாய் ஸெலியாவுக்கும், என் தாய்க்கும் ஒற்றுமைகள் இருந்தததை, பின்னாட்களில் சேயின் வரலாற்றை வாசித்தபோதுதான் உணர்ந்தேன். ஸெலியா போன்று வசதிமிக்க நடுத்தரக்குடும்பத்தின் வாரிசு, பரோபகாரி, பெண்களின் துன்பங்களுக்கான மாற்றுச்சிந்தனைகள், ஆஸ்த்மா நோய்யுள்ள மூத்த மகன், எனச்சில ஒற்றுமைகள் தெரிந்தன. ஆனால் அவள் சேயைப் பற்றியோ, ஸெலியாவைப் பற்றியோ, அறிந்திருந்தாளில்லை.

Photobucket - Video and Image Hosting

சிறு வயதில் ஆஸ்த்மா நோயால் மிகவும் துன்பப்பட்ட என்னை, நோயின் கடுமையிலிருந்து ஆற்றுப்படுத்துவதற்காக ஸெலியா போன்றே, என் தாயும், எனக்குக்கற்றுத்தந்தவைகள் ஏராளம். என் ஏழாவது வயதிலேயே வாசிப்பை யாசிக்கக் கற்றுத்தந்தாள். எட்டாவது வயதில் எழுதும் வகை சொல்லித்தந்தாள். ஒன்பதாவது வயதில் வானொலி கேட்கப்பழக்கினாள். அந்தப்பழக்கத்தில் அறிமுகமான நிகழ்ச்சிதான் வானொலி மாமா நடாத்தும் '' சிறுவர் மலர் '' சனியோ, ஞாயிறோ மதியம் பன்னிரெண்டு மணிக்கு இலங்கை வானொலியில் ஒலிபரப்பான நிகழ்ச்சி. அப்போது வானொலி மாமாவாக இருந்தவர், நா.மகேசன். மிக அருமையான குழந்தைகளுக்கான கலைஞர்.


அம்மாவின் வழிகாட்டலில் என் முதலாவது எழுத்து சிறுவர் மலருக்காக எழுதப்பட்டது. அம்புலி மாமா சிறுவர் புத்தகத்தில் வந்த ஒரு கதையைத் தழுவலாகக் கொண்டு, 'எலிப்படை' என்ற வானொலி நாடகம்தான் எனது முதலாவது ஆக்கம். அதை மேலும் மெருபடுத்தி அழகியதொரு வானொலி நாடகமாக வானலைகளில் வானொலி மாமா ஒலிக்கவிட்டிருந்தபோது, எனக்கு வயது பத்து. என்பக்கதிருந்து அந்நாடகத்தைக் கேட்டுமகிழ அப்போது என் தாய் உயிரோடில்லை.

என் படைப்புக்கள் எதையும் அவள் பார்க்கவில்லை. ஆனாலும் வாழ்க்கையில் எனைப்பாதித்த என் தாயும், அவள் தந்த வாசிப்பினால் பதிந்த சேயும், என் எண்ணங்களில், செயல்களில், இன்னமும் இணைந்தே வருகின்றார்கள்.....


என்தாய்க்கு இப்பாடல் மிகவும் பிடிக்கும். அதனால் எனக்கும் பிடிக்கும். உங்களுக்கும் பிடிக்குமா? கேட்டுச் சொல்லுங்கள்



நட்சத்திர நல்வணக்கம்!


வணக்கமுன்னா வணக்கம்! இது வாசமுள்ள வணக்கம்!!
வணக்கமுன்னா வணக்கம்! இது வண்ணத்தமிழ் வணக்கம் !!


ரு நட்சத்திரத்தின் எழுத்தில் ஈர்க்கப்பட்டு, தமிழ்மணத்துள் காலடி பதித்தவன், இவ்வார நட்சத்திரமாகியுள்ளேன். மகிழ்வாயு(சற்றுப் பயமாகவும்)ள்ளது.

காலடி எடுத்து வைத்த கணங்களில், பின்னூட்டத்தைத் தமிழில் எழுதும் தகமை கூட இல்லாதிருந்தேன். முயற்சித்ததில், ஒருதினத்தில் வலைப்பதிவாளனாக அடியெடுக்க முடிந்தது. அதற்குப்பின் படிப்படியான உருவாக்கம். அதற்கான அத்திவாரம், என் ஆர்வம். ஒருநாளில் வந்ததல்ல இந்த ஆர்வம்.

ஏழு வயதில் வாசிப்பு ஆர்வம், ஒன்பது வயதில், எழுத்தார்வம், பன்னிரண்டு வயதில் நடிப்பார்வம், எனத்தொடர்ந்த ஆர்வங்கள் பலவாகி............... ஐரோப்பா வந்த பொழுதில் கணனியில் தமிழ் கண்டு, கண்கள் விரிந்து, விரும்பி அறிந்து, சுயமாகத் தெரிந்து கொண்டதின் தொடர்ச்சியெனக் கொள்ளலாம்.

எண்ணங்களில், எழுத்துக்களில், உயர்வுகள் காணாத சாதாரணமானவன். மிகமிகச் சாதாரணமானவன். என்னிடம் இருந்து உங்களுக்கிடைக்கக் கூடியவைகள் பற்றிப் பெரிதாக ஏதும் சொல்லவோ, எதிர்பார்ப்புண்டாக்கி, ஏமாற்றவோ எண்ணவில்லை நான்.

என் எழுத்துக்களில் அதிகமானவை, என் அனுபவ வெளிப்பாடுகளாவே இருக்கும். ஏனெனில் வாழ்க்கையை அங்கிருந்தே, அதிலிருந்தே, அறிந்து கொள்ள விரும்புகின்றேன். அதுபோன்றே என் எண்ணங்களில் சாதனையாளர்களாகத் தோன்றும், சராசரி மனிதர்கள் சிலரையும், இந்நாட்களில் உங்களோடு உறவாட எழுத்தால் அழைத்து வர எண்ணியுள்ளேன்.

எழுத்தில் எனக்கு ஆர்வமிருந்த போதும், எழுதுவதில் நான் படு சோம்பேறி.(பக்கம் பக்கமாக எழுதுபவர்ளைப் பார்த்து எப்போதும் ஆச்சரியப்படுவதுண்டு) ஆயினும் முடிந்தளவு முயற்சிக்கின்றேன் இவ்வாரத்தில். என் எழுத்துக்களைப் படித்துச் சொல்லுங்கள். என் எழுத்தால் மட்டுமல்லாது, உங்கள் கருத்துக்களாலும், பொலிவுற அமையட்டும் இவ்வாரம்.

தமிழ்மணத்தில் வலம் வருவதும் (ஒரு சில வேளைகள் தவிர்த்து) ஒரு நல்ல அனுபவமே. புதிய நண்பர்கள் பலர் அறிமுகமானார்கள். பல புதிய விடயங்களையும் கற்றுக் கொள்ள முடிந்தது. இங்கு வந்து பார்த்தபோதுதான் தெரிந்தது. எத்தனை அறிஞர்கள், எத்தனை வல்லுணர்கள், எத்தனை நுட்பவியலாளர்கள். ஏன்டா இவ்வளவு காலமும் இந்த களத்தைத் தவறவிட்டோம் எனக் கவலையுற்றதுமுண்டு.

நண்பர்களே!முண்டாசுக் கவிஞனின் நினைவுநாளில் தொடங்கும் இந்த வாரம், மேலும் சில முக்கிய நிகழ்வுகளைக் கொண்ட வாரமாக கருதுகின்றேன். முடிந்தவரைக்கும் சுவைபடத்தருவதற்கு முனைகின்றேன். முகஞ்சுழியாது, குறைகளைந்து, குணங்கொள்ள வேண்டுகின்றேன்.

இந்த அரியவாய்ப்பைத் தந்த தமிழ்மண நிர்வாகத்தினரையும், என்னைத் தொடர்ந்து ஊக்குவித்து வரும் அத்தனை உள்ளங்களையும் இக்கணத்தில் நன்றியுடன் நினைத்துக் கொள்கின்றேன்.

தினமும் ஒரு பதிவு எழுத வேண்டுமென்பது நட்சத்திரவாரத்தின் பிரதான விதி. பார்ப்போம்....

தமிழ்மணநிர்வாகம் தெரிவுசெய்தவகையில் நட்சத்திரமாக நான் அறியப்பட்டபோதும், என்னைப் பொறுத்தவரையில் இவ்வாரத்தில் என்னுடன், என் எழுத்துக்களுடன் உறவாட வரும் நீங்கள் ஒவ்வொருவருமே, நட்சத்திரம்தான். வாழைகட்டி, மாலையிட்டு, மரியாதைகளுடன் வரவேற்றுக்கொள்கின்றேன். வாருங்கள்! கரங்கொடுங்கள்! சேர்ந்து சிறப்பித்து, மனம் மகிழ்வோம்.!

மகிழ்வோடு உங்களை வரவேற்க மற்றுமோர் இசை வணக்கம்

Wednesday, August 23, 2006

பெருந்துயரின் உணர்வாகிய பிஸ்மில்லாகான்

85ம் ஆண்டென்று நினைக்கின்றேன் நெடுந்தீவுக் கடலில் பயனித்த குமுதினிப்படகில் வைத்து, இலங்கைக்கடற்படையினரால் கொல்லப்பட்ட தமிழ்மக்கள் பற்றிய ஆவணப்படம் ஒன்றைத் தயாரிக்க முனைந்த வேளையில், அந்தக் காட்சிப்படிமங்கள் தந்த அவலத்தை, தொகுத்து முடிந்தபோது, மனது வலித்தது. பச்சிளம் பாலகனின் செஞ்சில் பதிந்திருந்த பைனட் கத்திக்குத்தல் அந்தப்பயங்கரத்தை அதிகப்படுத்தியது. இந்தக் கோரத்தை அப்படியே மக்கள் முன் வைத்தால், பார்பவர்களின் மனநிலைகள் பாதிக்கப்படலாம். ஆகவே உணர்ச்சிகளின் வடிகாலாக, கரைதலாக, பின்னனி இசையொன்றினை இணைப்பது நல்லது என எண்ணினேன்.

அதுவரையில் பொது மக்களின் பார்வைக்கு வெளிவராத அவ்வீடீயோப்பதிவுகளுடன், அன்றிரவு முழுவதும், கழித்ததினால் ஏதோ ஒருசுமை அழுத்துவதுபோல் ஒரு எண்ணம். அழுத்தத்தின் அயர்ச்சியாலும், காட்சிகளின் கோரத்தாலும், சோர்ந்துபோய் இருந்த என்னை , சூடான தேநீருடன் சந்தித்தார் 'நியூ விக்ரேஸ்' உரிமையாளரான குணம் அண்ணர்.
இராணுவக் கெடுபிடி நிறைந்திருந்த அன்றைய பொழுதுகளிலும், இப்படியான படத்தயாரிப்புக்களுக்கு தன் ஒளிப்பதிவுக் கூடத்தினை, இரகசியமாக இரவுகளில் தந்துதவும் நல்ல மனிதர் குணம் அண்ணா.

தேநீரைக்குடித்தபடி, தொகுத்திருந்த காட்சிகளைப் போட்டுக்காட்டினேன். அதிர்ந்துபோன குணமண்ணர், இந்தப்படங்களை இப்படியே வெளியிடுவதன், கடுமை குறித்துக் கருத்துச் சொன்னார். எனக்கும் அதே எண்ணம்தான் உள்ளது. அத்துயரினைக் கரைக்கும் ஓர் இசையைப் பின்னணியில் சேர்க்கலாம் என எண்ணிய என் எண்ணத்தினைச் சொல்லியபோது, நல்ல யோசனை என்றவர், என்ன இசையைச் சேர்க்கப் போகின்றீர் எனக்கேட்டார். அதுபற்றித்தான் யோசிக்கின்றேன் என்றபோது, அவரே சொன்னார் 'ஷெனாய்' சேர்த்தால் நல்லது என்றார்.

'ஷெனாய்' அதுவரையில் நான், கேள்விப்பட்டிராத வாத்தியம். என் அறியாமையைச் சொன்னதும், அவர் தன்னுடைய சேகரிப்பிலிருந்த ஒலிப்பதிவுகளிலிருந்து, பிஸ்மில்லாகானின் ஷெனாய் இசைப்பதிவை எடுத்து ஒலிக்க விட்டார். அப்போதிருந்த மனநிலையில், அந்த இசைகேட்ட மாத்திரத்தில் அழுதே விட்டேன். அப்படியொரு உருக்கமான வாத்திய இசையை அதுவரை நான் கேட்டதே இல்லை. Photobucket - Video and Image Hostingஅன்றைய காலையில் அறிமுகமான பிஸ்மில்லாகானை பின்னர் பலதடவை அனுபவித்து ரசித்திருக்கின்றேன். அதுமட்டுமல்ல தமிழீழத்தின் தெருக்களிலே, குறிப்பாக யாழ்ப்பாணத்து வீதிகளிலே, பல தடவைகள் பிஸ்மில்லாகானின் அற்புமதமான இசை ஒலித்திருப்பதும், அப்போதூன் புரிந்தது.

முன்னாள் பாரதப்பிரதமர் அன்னை இந்திராகாந்தி மறைந்தபோது யாழ்ப்பாணம் அழுதது. அந்த அழுகையோடு இணைந்திருந்தது பிஸ்மில்லாகானின் ஷெனாய்தான். என் மனங்கனத்த பொழுதுகள் பலவிலும், அவருடைய இசைப்பதிவுகளைக்கேட்டு அமைதியாகிப்போனபோதும், ஐரோப்பா வந்தபின்தான் அவருடைய கச்சேரி ஒன்றினை ஒளிப்பதிவில் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. இந்திய சுதந்திர பொன்விழாக் கொண்டாட்ட நிகழ்ச்சியொன்றில் கங்கைக் கரையிருந்து அவர் இசைத்த அற்புதமான கச்சேரியை, ஐரோப்பித் தொலைக்காட்சியொன்றில் கேட்க, பார்க்கக்கூடிய வாய்புக் கிடைத்தது.

சோக உணர்வினை மிதமாகத் தருவதாலோ என்னவோ, ஷெனாய், தில்ரூபா, போன்ற வாத்தியங்களும், அவற்றின் இசையும், தமிழ் மக்கள் மத்தியில் பெரிதும் பிரபலம் பெற்றிருக்கவில்லை. ஆயினும், சோகமே வாழ்வாகிப்போன தமிழீழ மக்களின் பெருந்துயரில், ஏதென்றறியாமலே, எவரென்று புரியாமலே, பிஸ்மில்லாக்கானும், அவரது ஷெனாய் வாத்திய இசையும் உணர்வாகி இசைந்தது என்றால் மிகையாகாது.

இந்திய அரசின் மிகப்பெரிய விருதான பாரதரத்னா விருது பெற்ற அந்தக்கலைஞனின், ஆண்மீகப்பணி காசிவிஸ்வநாதர் ஆலயம்வரை விசாலித்திருந்ததென்பதை அறிந்தபோது, மதங்களுக்கப்பால் விரிந்திருந்த அந்தக்கலைஞனின் மனம் புரிந்தது. 91 வயதில் மறைந்திருக்கும் அம்மேதையை ஏற்றுதல் செய்வோம்.

பிஸ்மில்லாகானின் மறைவு குறித்து நண்பர் சிவபாலனின் மற்றுமொரு பதிவு