Friday, September 15, 2006

எங்கள் மண்ணின் ஏறுபடிக் கலைஞர்கள்.

“ஏறுபடி என்டிட்டு எகிப்துக்காறரைக் கூட்டியாறியள் ? .எங்கடை ஆக்களில ஒருத்தரும் உங்களுக்கு அகப்படல்லேல்லையோ ? “ என்று யாராவது சொல்வதற்கு முன்னர், முந்திக்கொண்டு எங்கள் கலைஞர்கள் இருவரை அழைத்து வருகின்றேன். அவர்கள்தான் வி.கே. காணமூர்த்தி, வி.கே. பஞ்சமூர்த்தி சகோதரர்கள். இந்த இசை இரட்டையர்கள், ஈழத்தின் ஏறுபடிபடி நாதஸ்வரக்கலைஞர்கள்.

Photobucket - Video and Image Hosting


இணுவில், அளவெட்டி, கோண்டாவில், ஆகிய ஊர்களில் வாழ்ந்துவரும் அதிகளவிலான இத்தகைய இசைக்கலைஞர்களால், அவ்வூர்களுக்குப் பெருமை. கோண்டாவில் கிராமத்துக்குப் பெருமைசேர்த்த கலைஞர்களில் காணமூர்த்தி பஞ்சமமூர்த்தி சகோதரர்களும் முக்கியமானவர்கள்.

எனக்கு மிகவும் பரிச்சமான இச்சகோதரர்கள், பண்பிலும் பழகுவதிலும் கூட மிக நல்ல மனிதர்கள். அன்னையை மதிக்கும் பண்பு பெற்ற இக்கலைஞர்கள், தாய்க்குக் கொடுத்த மரியாதையை கண்ணாரக் கண்டவன் நான். இசை வாசிப்பிலும் இருவரும், ஒருவருக்கொருவர் மெருகு சேர்த்துச் செல்வார்கள். வடபகுதி ஆலயங்கள் யாவிலும் இனிய இசையால், கலைப்பணி புரிந்தவர்கள். எல்லா கலைஞர்களும் அப்பணி புரிந்தவர்கள் தாம். அப்படியிருக்க இவர்களை மட்டும் சிறப்பிக்கக் காரணம் என்னவென்று கேட்பீர்கள். சொல்கிறேன்...

யாழ்ப்பாணத்தின் அநேக ஆலயங்களின் உட்பிரகாரத்தில் கர்நாடக இசை மட்டுமே வாசிக்கும் நாதஸ்வரக்கலைஞர்கள், அதற்கென ஒரு முறைமையையும் வகைப்படுத்தி இருந்தார்கள். உதாரணமாக, சுவாமி புறப்பாடு என்றால் மல்லாரி. அர்ச்சனை என்றால் ராக ஆலாபனை. வழிபாடு நிறைவு என்றால் திருப்புகழ். இப்படி ஒவ்வொரு தருணத்திற்கும் ஏற்புடைய இசைவடிவங்களை வகைப்படுத்தி வாசிப்பார்கள். வெளிப்பிரகார வீதியுலாக்களில் மட்டும் கர்னாடக இசைதவிர்ந்த பாடல்கள், சினிமாப்பாடல்கள், ஆகியவற்றை இசைப்பார்கள்.

83 களின் பின் தமிழீழமெங்கினும், விடுதலையுணர்வு மிகுந்திட பலவித மாற்றங்கள் நடந்தன. இராணுவம் மெல்ல மெல்ல முகாம்களுக்குள் முடங்கத் தொடங்கிய காலமாயினும், உளவாளிகள் சுதந்திரமாகத்திரிந்த நேரம். இப்படியான ஒரு இக்கட்டான காலப்பகுதியில், முதன்முதலில் நாதஸ்வரஇசையில் சினிமாப்பாடல்களுக்குப் பதிலாக, விடுதலைப்பாடல்களை இசைத்தார்க காணமூர்த்தி சகோதரர்கள்.

இணுவில் கந்தசுவாமி கோவில் தீர்த்தத்திருவிழாவின் போது முதன்முறையாக அவர்கள் இந்த இசையரங்கை செய்தார்கள். கேட்டு நின்ற மக்களெல்லாம் அதிசயித்துப் போனார்கள். இளைஞர்களுக்கெல்லாம் மனதில் உற்சாகம். ஆனால் இதற்காக அக்கலைஞர்கள் எடுத்துக் கொண்ட சிரமம் நானறிவேன்.

நாதஸ்வரத்தில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று பாரி மற்றது திமிரி. இதில் (எதுவென்று சரியாக ஞாபகம் இல்லை) ஒன்று வாசிப்பது சற்றுக்கடினம், ஆனால் நல்ல கனதியான இசைதரும். அதற்கான மூச்சழுத்தம் அதிகம் தேவை. மற்றையது வாசிப்பது இலகுவானது ஆனால் முன்னையது போல் இசை துல்லியமாயிராது. இதில் இச்சகோதர்கள் வாசிப்பது நன்னிசை தரும் நாதஸ்வரம். இப்பாடல்களை வாசிப்பதற்கான பயிற்சி நடைபெற்ற வேளைகளில், சத்தம் வெளியே பெரிதாகக் கேட்காதவாறு, குழலின் வாசலைக் காகிதங்களால் அடைத்துக்கொண்டு மூச்செடுத்து வாசித்துப் பயிற்சி பெற்றார்கள். சீரான காற்று வெளியேற்றமும், தெளிவான செவிமடுப்பும், இல்லாதிருந்த போதும், சிரமத்துடன் பளின்றார். சிறப்பாகச் செய்தார்கள். இவர்கள் முதன்முதலில் வாசித்தபோது, சக கலைஞர்கள் பலரும், ஆச்சரியத்திலும் , பயத்திலும் உறைந்துபோனார்கள்..பின்னாட்களில் பலரும் விடுதலைப்பாடல்களை நாதஸ்வரத்தில் இசைத்தபோதும், அந்நாட்களில் அதைச் செய்ய, துணிவும், விடுதலைமீதான பற்றும் இருக்க வேண்டும். அவர்களிடத்தில் அது இருந்தது. பயிற்சிகளின்போது அவர்கள் காட்டிய ஈடுபாடும், துணிந்து செயற்பட்டதும், இன்றும் என்னால் மறக்கமுடியாதுள்ளது.

எங்கள் போராட்ட களத்தில் கலைஞர்கள் பலர் திரண்டுள்ள போதிலும், ஆரம்பத்தில் அடியெடுத்து வைத்த காணமூர்த்தி, பஞ்சமூர்த்தி, சகோதரர்கள், எங்கள் மண்ணை நேசித்த கலைஞர்கள், எங்கள் மண்ணின் ஏறுபடிக் கலைஞர்கள்.

வி.கே. சகோதரர்களின் இசைக்கு:



13 comments:

கானா பிரபா said...

எங்களூர் கலைஞர்கள், அருகே இருந்து இவர்களின் இசைவளத்தைக் காதில் பருகியவன் நான் . இன்னொரு உபரித்தகவல் பஞ்சமூர்த்தி முறையாகப் புல்லாங்குழல் கூடக் கற்று 90 களில் எங்கள் பரராஜ சேகரப்பிள்ளையார் ஆலயத்தில் அரங்கேற்றியவர்.

Sri Rangan said...

மலை நாடன்,எனக்கு நாதஸ்வரக் கச்சேரியில் பாலகிருஷ்ணனின் கச்சேரிதாம் பிடிக்கும்.

எங்கள் ஊர் புளியங்கூடல் மாரியம்மன் கோவிலில் அவரது கச்சேரி பல முறைகள் நடந்தேறின.நாதஸ்வரக் கச்சேரிக்கு புளியங்கூடல் அம்மன் கோவில்தாம் அதிக முதலிடம் வழங்கியிருந்தது.

பாலகிருஷ்ணன் மிகப் பெரிய வித்துவான்.கண்விழித்துக் கச்சேரிக்குச் செல்வேன்.அது ஒரு காலம்!மனம் நிறைந்த வாழ்வின் பக்கங்கள் அவை!

அவரைக் காரினால் மோதிக் கொலை செய்தார்களாம்.

அவ்வளவுக்குத் தொழில் போட்டி.

தவில் வித்துவான் தட்ஷணாமூர்த்திக்கு இருந்தமாதிரி.


பத்மநாதன்போன்ற மேதைகளைப் பிடிப்பதில்லை.
பத்மநாதனின் குழலில் ஒருமுறைகூடச் சினிமாப்பாட்டு
வந்தது கிடையாது.


சின்ன வயசு.


பாலகிருஷ்ணன் ரொம்பக் கெட்டிக்காரராகவே இருந்திருக்கிறார்.

அவர்மீது பத்மநாதன்கூட பொறாமையாக இருந்தவர்.

சின்னக்குட்டி said...

நாதஸ்வர கலைஞர்களை நினைவு கூர்ந்து பதிவு தந்தமைக்கு மிக்க நன்றி

வெற்றி said...

மலைநாடான்,
நல்ல பதிவு. சின்னப் பெடியனாக இருந்த போது என் ஊரில் உள்ள முருகன் ஆலயத்தில் இவர்களின் நாத வெள்ளத்தில் மூழ்கியிருக்கிறேன்.

வசந்தன்(Vasanthan) said...

இவர்களின் ஒருவர் மரணமடைந்துவிட்டார் அல்லவா?
யாரவர்?
பதிவுக்கு நன்றி.

மலைநாடான் said...

பிரபா!

சுவிற்சர்லாந்தில் அவர்களின் புல்லாங்குழலிசை கேட்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அப்போது மடத்துவாசல் பிள்ளையார் கோலில் அரங்கேற்றிய கதையும் சொன்னார்கள்.

மலைநாடான் said...

சிறி ரங்கன்!

பாலகிருஷணனன்கள் இருவர். ஒருவர் அளவெட்டி, மற்றவர் கோண்டாவில், நீங்கள் சொல்வதைப்பார்த்தால், கோண்டாவில் பாலகிருஷணனைத்தான் குறிப்பிடுகின்றீர்கள் என நினைக்கின்றேன். சந்தேகமியில்லை பாலகிருஷணன் நல்ல வித்துவான்தான் . கலைஞர்களுக்குள் வித்துவப் போட்டி என்பது சகஜம்தான். ஆனால் நீங்கள் சொல்வதுபோல் கொலை என்னும் அளவுக்குச் சென்றிருக்குமா என்பது கேள்விக்குரியதுதான்.

மலைநாடான் said...

வெற்றி, சின்னக்குட்டி!

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

மலைநாடான் said...

வசந்தன்!
அவர்களில் முத்தவர் கானமூர்த்தி. அவர்தான் தவறிவிட்டார்.

Chandravathanaa said...

நல்ல பதிவு.
நன்றி

மலைநாடான் said...

சந்திரவதனா!

வருகைக்கும் பதிவுக்கும் நன்றி!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

மலைநாடர்!
இக் கலைஞர்கள் ஆரம்பக்காலங்களில்;தனியார் கல்லூரி சரஸ்வதிபூசைக்கு;அழைப்பதற்கு மிக ஏதுவாக அமைந்தவர்கள். காரணம் இளைஞர்கள்; திரையிசைப் பாடல்களை அலாதியாக வாசிப்பார்கள். கட்டணம் மாணவர்களுக்கேற்றது.அதனால் இவர்கள் கச்சேரிகள் அதிகம் கேட்டுள்ளேன்.
என்" ஈழத்தின் இசைவளர்ச்சியில் நாதஸ்வர;தவில் கலைஞர்கள் பங்கு " எனும் கட்டுரை ,94ல் பாரிசில் நடைபெற்ற கானமூர்த்தி அவர்களின் கச்சேரியில் நான் ஆற்றிய வரவேற்புரையின் சாரம்.விசாப் பிரச்சனையால் பஞ்சமூர்த்தி கலந்து கொள்ளவில்லை.
மேலும் இவ்விரு சகோதரர்களும் இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.95 இடம் பெயரலில் ஒருவர்; வண்டி கவிழ்ந்து காலமானதாக ஓர்;வதந்தி உலாவியுள்ளது.இச் செய்தி தவறு என்பதனை;பாரிசில் வாழும் அவர்கள்;உறவினரான என் நண்பரிடம் தெளிவாக்கினேன்.
மேலும் சிறிரங்கன் குறிப்பட்டது போல்;கோண்டாவில் பாலகிருண்ணன் இவர்களின் மாமன். அவர் மரணம் ஓர் விபத்தே! கம்பியேற்றிச் சென்ற லொறி;தகுந்த பாதுகாப்புச் செய்யாததால்; பின்னால் மோட்டார் சைக்கிளின் வந்த இவரை நோக்கிப் பாய்ந்ததால் ,அவ்விபத்தேற்பட்டது என்பது; உண்மை!
கலைஞர்களிடம் போட்டி இருந்தது; ஆனால் கொலை செய்விக்குமளவுக்கு பொறாமை இருந்த தல்ல!
அத்துடன் அவர்கள் யாவரும் உறவினர்களே! அந்தக் காலக்கட்டத்தில் கொலை மலியவில்லை.
தெட்சணாமூர்த்திக்குக் கூட ;அவர் மது;அபின் போன்றவற்றை அதிகமாகப் பாவித்தே! நோயாளியானார். என்பதே! உண்மை!
சிறீரங்கன் குறிப்பிடுவது போல்; பத்மநாதன் குழலில்;நல்லூர்க் கந்தசுவாமி கோவில் கச்சேரி; வானொலிக் கச்சேரிகளில் மாத்திரமே! திரையிசைப்பாடல்கள் இருக்கமாட்டாது. ஏனைய எல்லா இடங்களிலும் அதில்லாமல் கச்சேரி சோபிக்காது.முதல் பாகம் கீர்த்தனைகள்; பெரியோருக்கு;இறுதிப்பாகம் திரையிசை இளையர்களுக்கு!; ஒரே ஒரு தடவை நல்லூரில் திரையிசைப்பாடல் ஒலித்தது; 70 களில் மஞ்சத்திருவிழாவுக்கு முதல் முதல் தங்கரதத்தில் சுவாமியூர்வலம்; வந்து இருப்புக்கு வந்த போது; "தங்கரதம் வந்தது நேரினிலே"-என்ற பாலமுரளிக் கிருஸ்ணா- கலைக்கோவில் படத்தில் பாடிய பாடலை இசைத்தார். எல்லோருக்குமாச்சரியம்; கோவில் முதலாளியை எல்லோரும் பார்த்தார்கள். அவர் புன்னகையால் அங்கீகரித்தார். அந்தச் சந்தர்ப்பத்தில் அன்று அந்தப் பாடல் வாசித்ததில் தவறே! இல்லை.இதுதான் நல்லூரில் திரையிசைப்பாடலுக்கு முதலும் கடைசியுமென நினைக்கிறேன்.
பத்மநாதன் பாரிஸ் - 98ல் வந்த போது; ஜீன்ஸ்- கண்ணோடு காண்பதெல்லாம்- கேட்டபின்பே இப்படி ஒரு "நித்யசிரி" பாடல் இருக்கென எனக்குத் தெரியும். அப்படி ஒரு அழகாக வாசித்தார்.
எனக்கு பத்மநாதனைப் பிடிப்பதே! அவர் மேதமைக்காகத்தான்.
எனினும் கானமூர்த்தி;பஞ்சமூர்த்தி போன்ற வாழும் வித்துவான்களை; என்றும் மறவேன்.
பாரிசில் நிறைய எழுச்சிப் பாடல்கள் வாசித்து;அப்ளாஸ் வாங்கினாங்க!
யோகன் பாரிஸ்

Anonymous said...

நாகசுர இரட்டையர்கள் காணமூர்த்தி, பஞ்சமூர்த்தி இசையை மிகச்சிறுவயதிலேயே பார்த்தும் கேட்டும் இருந்தேன். எல்லோருக்கும் தெரியும் அவர்களின் சுருதிப்பெட்டியில் கோண்டாவில் V.K.கானமூர்த்தி,V.K.பஞ்சமூர்த்தி என இருக்கும். இப்பொழுதும் அது நினைவில் உள்ளது. எனது காரைநகருக்கு அடிக்கடி வந்து போனவர்கள். சபையை தம்பக்கம் ஈர்க்கும் மந்திரக்கலை கைவரப்பெற்றவர்கள். கணேசன் அண்ணையுடன் இவர்களைப் பார்த்த அந்த அற்புதமான காட்சி இனி எப்போ?