Tuesday, July 17, 2007

தலைமுறை மறக்கும் தமிழ் விளையாட்டுக்கள்.


உங்களுக்கு, கிட்டிப்புள்ளு (கிட்டிப்பொல்லு, கில்லி) விளையாட்டு, விளையாடும் முறை ஞாபகமிருக்கிறதா? என சென்றவாரம் இணையத்தூதில் உரையாடியபோது நண்பரொருவர்,கேட்டார். என்ன திடீரென கிட்டிப்புள் விளையாட்டைப் பற்றி அக்கறையாக் கேட்கிறியள் என்ற கேள்வியோடு, உரையாடல் தொடர்ந்த போது, விளையாட்டு முறைகள் சற்று ஞாபகமற்றுப் போயிருந்தது எனக்கும் உறைத்தது.

ஒருகாலத்தில், நாளும் பொழுதும் இந்த விளையாட்டுக்களோடு திரிந்த நமக்கே, வாழ்நிலைச்சூழலின் சறுக்கலில் அவை நினைவற்றுப்போயுள்ளன. அப்படியாயின், போரும் வாழ்வுமாகிப்போன, எங்கள் புலத்திலோ, அந்நியச்சூழலே நம் வாழ்தளம் என்றாகிப்போன புலம்பெயர்சூழலிலோ, வாழுகின்ற நம் இளைய தலைமுறைக்கு, இந்த விளையாட்டுக்கள் பற்றி ஏதேனும் தெரிய முடியுமா?

இப்படியொரு கேள்வி இப்புலம்பெயர் சூழலில் எழுந்தபோதுதான், தொடக்கக் கேள்வி என்னையும் நோக்கி வந்தது. எதுவுமற்ற ஏதிலிகளாக, வேதனைகளைச்சுமந்த வண்ணம், இருப்பினை எண்ணிக் கொண்டு, புலம்பெயர்ந்த வேளையிலோ, பின் வந்த வெறுமை மிகு வாழ்க்கைக் காலங்களிலோ விளையாட்டுக்கள் எங்கள் மனதை நிறைத்திருக்கவில்லை. அதனால் அவை மறக்கப்படுமாறுமாயிற்று. வறண்டுபோன எங்கள் வாழ்வியலில், புது வசந்தங்களென் எங்கள் பிள்ளைகள் வளர்ந்தபோது, அவர்கள் ஓடியாடி விளையாடும் தருணங்கள் வந்தபோது, எங்கள் மனங்களிலும், இளமைக்கால ஞாபகங்கள் எழுந்து உட்கார்ந்தன. வீதிகளிலும், விளையாட்டுத்திடல்களிலும், நாங்கள் ஆடிய விளையாட்டுக்கள் ஞாபகத்திற்கு வந்தன. கூடவே, இவைபற்றியும் எங்கள் செல்வங்களுக்கு சொல்லிக்கொடுக்கவோ அல்லது சொல்லி வைக்கவோ வேண்டுமல்லோ என்ற எண்ணங்கள் இப்போ எல்லாத் திக்குகளிலும், எழும்பத் தொடங்கியுள்ளன.

இப்படியான இன்றைய காலச் சூழலில், சுவிற்சர்லாந்து தமிழ்மன்றத்தின் விளையாட்டுத்துறை, தனது பத்தாம் ஆண்டு நிறைவை மலர்வெளியிட்டு நினைவுப்படுத்த விரும்பியபோது, மேற்சொன்ன எண்ணங்கள் வீச்சாக எழ,வாழ்த்துச் செய்திகளோடல்லாது, வளமான தமிழர் நம் விளையாட்டுக்கள் குறித்த சங்கதிகள் பலவற்றுடன், வீச்சு என்ற விளையாட்டுச்சிறப்பிதழ் மலர்ந்துள்ளது. அருமையான வடிவமைப்பில், அழகான படங்களுடன், அருமையான கட்டுரைகளும் அடங்கிய வீச்சு, உண்மையில் நம் விளையாட்டுத்துறைசார் வெளியீடுகளில் பெருவீச்சாகவே உள்ளது.

விளையாட்டிலிருந்து வினைதீர்க்கும் மருத்துவம்வரை ஒரு அஞ்சலோட்டம் எனும், ஏ.ஜி. யோகராஜாவின் நீளமான கட்டுரை, வெறுமனே ஒரு கட்டுரை எனச் சொல்லிவிட முடியாது. எங்கள் சமூகத்தின் வாழ்வியல் கூறொன்றினை விரிவாகப் பார்க்கக் கூடிய புத்தகமொன்றின் முதல்வாசிப்பு எனச் சொல்லத்தக்கது. புலம்பெயர் சூழலில் தொடங்கி, ஆன்மீகம்வரை அஞ்சலோட்மெனச் செல்லும் கட்டுரையில், எத்தனை எத்தனை எண்ணங்கள், சான்றுகள், நோக்குகள்.

யாழ்ப்பாணத்திலிருந்து, பொன். சுந்தரராஜன் எழுதியுள்ள, தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்கள் ஒரு ஆய்வுக்கான அறிமுகம் எனும் கட்டுரை, எங்கள் பாரம்பரிய விளையாட்டுக் பலவற்றையும், சுருக்கக் குறிப்பில் அறிமுகம் செய்து வைக்கிறது. கிளித்தட்டு,கிட்டிப் புள் அடித்தல், பட்டம் விடுதல், படகோட்டல், மாட்டுவண்டில் சவாரி,போர்த்தேங்காய் அடித்தல், காளை அடக்குதல், பேய்பந்து அடித்தல், காயா, பழமா, சடுகுடு விளையாட்டு, புலியும் ஆடும், நொண்டி அடித்தல் அல்லது கெந்துதல், பகலாட்ட தாகம், என்உலக்கை குத்து, பச்சைக்குதிரை, அம்மானை, கீச்சுமாச்சுத் தம்பலம், தட்டாங்கல் என கட்டுரையில் பல விளையாட்டுகள் வந்து போகின்றன. இவை மட்டுமல்லாது, சுவிற்சர்லாந்தில் விளையாடப்படும் கோடைகால, குளிர்கால வினளயாட்டுக்கள் என்பன பற்றிய மதுரா குணசிங்கத்தின், சுவிஸ் சாரல்களில் எனும் கட்டுரையும், வேறுசில கட்டுரைகளும், கவிதைகளும், உள்ளடக்கி வீச்சு வந்திருக்கிறது.

புலம்பெயர் சூழலில் இத்தகைய முயற்சிகள், அவசியமானது ஆரோக்கியமானது. ஆனால் இத்தகைய முயற்சிகளின் வெற்றியும், உந்துதலும் பெற வேண்டுமாயின், நாமும், நமது இளைய தலைமுறையும், இவற்றை வாசிக்கவும், சுவாசிக்கவும் வேண்டும். அதுவே இத்தகைய பணிகளில் ஈடுபடுவோரை உற்சாகப்படுத்தும், உயர்வுக்கும் கொண்டு செல்லும். பயன்பெறவும் தரவும் விரும்புவோர், சுவிஸ், லுசேர்ண் தமிழமன்றத்துடன் தொடர்பு கொள்ளலாம் .






படங்களுக்கான நன்றிகள்: சுவிஸ் முரசம், சந்திரவதனா செல்வக்குமாரன்.