Thursday, September 14, 2006

வெருகல் - ஒரு பண்பாட்டுக் கோலம். 5

வேலவனுக்கு வேடுவர் சீர் கொணரும் வெருகல்.
இது ஒரு பண்பாட்டுக்கோலப் பதிவு. நான் பார்த்த சில முக்கிய சமய, கலாச்சார விழுமியங்களை அவ்வப்போது, பண்பாட்டுக்கோலம் எனும் தலைப்பிட்டு பதிவு செய்து வருகின்றேன். அந்த வகைக்குள் இந்நட்சத்திர வாரத்தில் இன்று நான் தரும் இப்பதிவு வெருகல் சித்திர வேலாயுத சுவாமிகோவில் பற்றியது.


Photobucket - Video and Image Hosting

அண்மையில் ஈழத்தில் மிகக் கடுமையான யுத்தம் நடைபெற்ற மூதூர் பகுதியில் மாவிலாற்றுக்கு, மிக அண்மையிலமைந்துள்ள, அழகிய முல்லைக்கிராமம் வெருகல். மகாவலிகங்கையின் வற்றாத நீர் வளத்தால், எங்கும் பச்சை வண்ணம் போர்த்தியிருக்கும் பசுமைப்பூமி. இயற்கை வளம் மிகுந்திருந்ததால் மட்டும் வெருகல் சிறப்புப் பெற்றிருக்கவில்லை. மகாவலியின் தீரத்தில், வேலாயுதப்பெருமானாக வீற்றிருக்கும், சித்திரவேலாயுதசுவாமி கோவிலாலும், அதன் அருட்பெருமையாலும் கூடப் பெருமைபெற்றது வெருகல்.

தமிழீழத்தின் வடபுலத்திலோ, அல்லது பிறபாகங்களிலோ, கடல்கடந்து தமிழகத்திலோ, கதிர்காம் பெற்றிருந்த முக்கியத்துவம் வெருகல் முருகனுக்குக் கிடைக்கவில்லை. ஆனால் கதிர்காமத்தைவிட பன்மடங்கு சக்தி வாய்ந்த ஒரு தமிழர் திருத்தலம் வெருகல். அந்தத்தலத்தில் சுமார் இருபத்தைந்து வருடங்களின் முன் நான் கண்ட ஒரு சமய விழுமியத்தைத்தான் இங்கு பண்பாட்டுக்கோலமாக வரையவுள்ளேன்.

மிகுந்த அமைதியாக இருக்கும் வெருகல் கிராமம், ஆவணி மாதம் வந்தாலே குதுகலம் கொள்ளத் தொடங்கிவிடும். சனங்களின் நடமாட்டத்தில் அதிகரிப்பு, தற்காலிக கொட்டில்கடைகள், தற்காலிக கழிவறைகள், என மெல்ல மெல்ல மெருகு சேரும்.

ஆம், இம்மாதத்தில்தான் வெருகல் பதியுறை சித்திரவேலாயுதசுவாமி கோவில் திருவிழா பதினெட்டு நாட்கள் நடைபெறும். பத்தொன்பதா நாள் காலையில், மகாவலி கங்கையில் தீர்த்தம். இந்த இருநாட்களும் திருகோணமலையின் கொட்டியாரப்பற்றே வெருகலில் திரண்டு வந்திருக்கும். இருநாட்களும் விசேடமானவையே. அதில் என்னைக் கவர்ந்தது, பதினெட்டாம் நாள் நள்ளிரவில் நடைபெறும் அந்த வைபவமே.

வேடுவர் குலப் பெண்ணான வள்ளியை மணம்புரிந்ததனால், வேடுவர் குலத்துக்கு மாப்பிள்ளையாகிய முருகனுக்கு, காட்டிலுறை வேடுவர்கள் சீர் கொண்டுவரும் சிறப்பான நிகழ்வு அது. உண்மையில் அப்போது வெருகல் காட்டுப்பகுதியில் வேடுவ சமூகம் சொற்ப அளவில் வாழ்ந்து கொண்டிருந்தனர். அதுபோல் பிபிலை காடுகளிலும் வாழ்ந்தனர். இவ்விதம் வேடுவர்கள் சீர் கொண்டு வருவார்கள் என்பதைக் கேள்விப்பட்டதுமே, எனக்கு ஆவல் அதிகரித்து விட்டது. காரணம் வேடுவரை நேரில் பார்க்கும் ஆவல்தான்.

நள்ளிரவு ஆகிற்று. ஆலயத்தில் பூசைகள் எதுவும் தொடங்கவில்லை. ஏனெனில் வேடுவர்கள் கொண்டுவரும் சீர்ப் பொருட்களிலிருந்துதான் அன்றைய பூசைக்குத் தேவையான முக்கிய பொருட்கள் எடுக்கப்பெறும் என்றார்கள். ஆலயவாசலில் கோவில் பணியாளர்கள் அவர்களை எதிர்கொண்டழைக்க, வேண்டிய உபசாரங்களுடன் காத்திருந்தார்கள். மக்கள் கூட்டம் காட்டுப்பகுதியை, நோக்கிய வண்ணமேயிருந்தார்கள்.
பறைகளின் அதிர்வொலி கேட்கத்தொடங்கின. காரிருளில் கறுத்திருந்த வனத்திடையே சின்னச் சின்ன ஒளிச்சிதறல்கள் தெரிந்தன. தீப்பந்தங்களின் ஒளி தெளிவாகத்தெரியத் தொடங்க மக்கள் கூட்டம் காட்டுப் பகுதியை நோக்கி நகர்ந்தது. காட்டிலிருந்து பிரகாசமான தீப்பந்தக்களுடனும், அதிரும் கொட்டுப் பறைகளுடனும், வேடுவர்கள் வெளிபட்டனர்.

மேலங்கி அற்ற, முழங்காலுக்கு சமீபமா உயர்த்திக்கட்டிய உடுதுணி, கையில் கம்பு, என்பவற்றுடன் எட்டு அல்லது பத்துப்பேர்கள் வந்தார்கள். ஒருவருடைய தலையில் ஒரு துணியால் மூடிக்கட்டிய பெட்டி இருந்தது. அதுதான் சீர்ப்பெட்டி என்பது சொல்லாமலே புரிந்தது. மிக வேகமாக நடந்து வந்தவர்களை, ஆலய பணியாளர்களும், எதிர்கொண்டழைத்துச் சென்றார்கள். ஆலய வாசலில் வைத்து, வந்தவர்களின் கால்கள் கழுவப்பட்டு, ஆலயத்துள் அழைத்துச் சென்றனர். ஆலயத்தின் உட்பகுதிக்கு அவர்கள் சென்றதும், இடைக்கதவு மூடப்பட்டது. அதன்பின் உள்ளே நடப்பது எதுவும் நாங்கள் பார்க்க முடியாது. அந்த ஆலயத்தின் வழக்கமே அதுதான். அபிஷேகமோ, பூசையோ, எதுவும் வெளியாட்கள் பார்க்க முடியாது. அந்த ஆலயப்பணியாளர்கள் மட்டுமே உள்ளே செல்ல முடியும்.
பூசைகள் எல்லாம் முடிந்து, சுவாமி வீதிவலம் வரும்போது மட்டும் பார்க்க முடியும். அதுவும் கதிரகாமம் போன்று ஒரு பெட்டியை, வெள்ளைத் துணியால் யானை போன்ற பாவனையில் மூடி எடுத்துவருவார்கள். ஒரு சொற்ப நேரத்துக்குள் வீதிவலம் முடிந்துவிடும். ஆனால் அந்தச் சொற்ப நேரத்துக்குள் எத்துனை மகிமை நிறைந்திருக்கும்.

இப்போ வேடுவர் கொண்டு வந்த சீர்ப் பெட்டிக்குள் என்ன இருந்திருக்கும் என்பதை அறிய உங்களுக்கு ஆவலாக இருக்கிறதல்லவா? எனக்கும் அப்படித்தான் இருந்தது. கோவில் பெரியவர் ஒருவரிடம் விசாரிக்க, அவர் சொன்ன பதில், தேன், தினைமா, வள்ளிக்கிழங்கு, ஈச்சம்குருத்து, நாவல்பழம், அல்லிப்பூ, என்ற ஆறு பொருட்களே வேடுவர் தங்கள் மாப்பிள்ளை முருகனுக்கு கொண்டு வரும் சீர்ப்பொருட்கள் என்றார். அறுமுகனுக்குப் பிடித்த அத்தனையும் இருக்கிறதே. இதுவல்லவோ இணையற்ற சீர்வரிசை என எண்ணத் தோன்றியது.

பிற்காலத்தில், வேடுவர்கள் அருகி விட்டபோதிலும், ஊரவர்களைக்கொண்டே இந்நடைமுறை பின்பற்றப்பட்டதாக பின்னாட்களில் அறிந்தேன். அந்த நிகழ்வும், விழாவும், இவ்வருடத்தில் நடைபெறவேண்டிய நன்னாள் இன்று. ஆனால் வெருகல் மக்களும், கொட்டியாபுரப்பற்று மக்களும், ஏதுமற்ற ஏதலிகளாக எங்கோ ஒரு தொலைவில்.......முருகனை நினைந்துருக ஒரு பாடல்
18 comments:

G.Ragavan said...

பொன்னில்லை பொருளில்லை...அன்போடு கொண்டு வரும் எளிய பொருட்களையே சீராகக் கொள்கிறான் கந்தன். கூதாள கிராத குலிக்கிறைவா என்கிறது அநுபூதி. கூதாள மலர் மனமற்றது. அழகற்றது. அந்த மலரையும் சூட்டிக் கொண்டு அன்பு செய்கிறவனாம் கந்தன்.

நீங்கள் விவரணை செய்கையிலேயே அங்கு சென்று வந்த மகிழ்ச்சி பொங்குகிறது. ஆனால் இன்றைய நிலையானது பொங்கிய மகிழ்ச்சியை அமிழ்த்தி விடுகிறது.

கானா பிரபா said...

வணக்கம் மலைநாடன்

நட்சத்திரவாரத்தில் நம்மூரின் பக்திவளம் காட்டும் பதிவிற்கு என் நன்றிகள். வாசித்"தேன்".

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

மலைநாடர்!
இக் கோவிலுக்குப் போகக் கிடைக்கவில்லை. ஆனால் இவ்விழா பற்றி சென்ற வருடம் "வீரகேசரியில்" ஓர் மட்டக்களப்பு ஆய்வாளர், எழுதிய கட்டுரைபடித்தேன். கதிர்காமத்துக்கு கொடுத்த முக்கியத்தை இவ்வாலயத்துக்குக் கொடுக்க தவறி விட்டார்கள். வேடுவகுலத்தோர் முருகனுக்குக் கொடுத்தவையை வாசித்த போது; கதிர்காம அர்ச்சனைத் தட்டில் உள்ள; வத்தகப்பழத் துண்டும்,அன்னாசியும் ஞாபகம் வந்தது.வேறு எங்கும் இவ்வளவு எளிமை இருக்குமென நினைக்கவில்லை.
நல்ல விடயம். மீண்டும் இவ்வாலயங்கள் போக முடியுமா????
யோகன் பாரிஸ்

மலைநாடான் said...

ஜி.ரா!

வெருகல் உண்மையிலே பார்க்க வேண்டி இடம். அதிலும் உங்களைப்போன்ற முருக பக்தர்கள் கண்டிப்பாக தரிசிக்க வேண்டிய தலம். அங்குள்ள பல விடயங்கள் எங்கள் சக்திக்குப் புரியாதவை.

VSK said...

"சுனையோடு, அருவித் துறையோடு பசுந்தினையோடு, இதனோடு திரிந்த" சித்திர வேலாயுதனைக் காட்டியதற்கு மிகவும் பணிகிறேன், திரு. மலைநாடன்.

"உருவன்று அருவன்று உளதன்று இலதன்று இருளன்று ஒளியன்று என" நின்றவனை எப்படிக் கண்டாலும் மனது ஆறவில்லையே!

ஒரு ஐயம்!
சித்திர வேலாயுத ஸ்வாமி என்றால் உள்ளே சித்திரத்தால் எழுதிய முருகனோ?

அதனாற்றான் மூடி எடுத்து வருன்றார்களோ?

விடை அறிய ஆவலாயிருக்கிறேன்.

நன்றி

மலைநாடான் said...

//சித்திர வேலாயுத ஸ்வாமி என்றால் உள்ளே சித்திரத்தால் எழுதிய முருகனோ?
அதனாற்றான் மூடி எடுத்து வருன்றார்களோ? //

எஸ்.கே அய்யா!

உங்கள் ஊகம் சரியானதே. அக் கோவிலில் உருவ வழிபாடில்லை. வெறும் யந்திர வழிபாடே.

விக்கிரக வழிபாட்டிற்கென பக்கத்தில் பிறிதொரு ஆலயமுண்டு.

சூழலும், கோவிலும், மனதுக்கு இதம்தரும். இன்று.. ?

குமரன் (Kumaran) said...

மலைநாடர் ஐயா. இந்தப்பண்பாட்டுக் கோலத்தை எழுதிப் பதித்ததற்கு மிக்க நன்றி. இப்படியே நம் ஒவ்வொரு கோவிலின் (பெருங்கோயில், சிறுகோயில் எல்லாவற்றின்) பண்பாட்டுக் கோலங்களைப் பதித்து வைக்க வேண்டும்.

Anonymous said...

மலைநாடான்
வடிவேல் மாஸ்ரர் திருகோணமலைமாவட்டத்துச்சிவாலயங்கள் என்றொரு புத்தகம் எழுதி, இந்துவிவகார அமைச்சு எண்பதுகளின் கடைசியிலோ தொண்ணூறிலோ வெளியிட்டது. சமயம் கிடக்கட்டும். வரலாற்றுக்கும் பண்பாட்டுமுறைக்காச்சும் இவை ஆவணமாய்க் கிடக்கும்

மலைநாடான் said...

பிரபா!

ஆர்ப்பாட்டமில்லா ஆண்மீகம், எம் ஆண்மாவை நிறைவுகொள்ளும் அதுவே எனக்குப்பிடிக்கும். எம் மண்ணில் அதற்கும் குறைவில்லையே
தேனான கருத்துக்கு நன்றி.

மலைநாடான் said...

யோகன்!

அவசியம் பார்க்க வேண்டிய தலம். ஆலயத்தை விடுங்கள், சூழலின் அழகே தனி.

//நல்ல விடயம். மீண்டும் இவ்வாலயங்கள் போக முடியுமா????//

காலத்தான் பதில் சொல்ல வேண்டும்.

மலைநாடான் said...

குமரன்!

நீங்கள் சொல்வது மிகவும் சரியானதே. இத்தகைய பதிவுகள் காலத்தின் தேவையாகிவிட்டன

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

வெற்றி said...

மலைநாடான்,
மிகவும் அருமையான பதிவு.

ஜெயஸ்ரீ said...

நல்ல பதிவு மலைநாடன் அவர்களே. அறியத் தந்ததற்கு நன்றி.

படித்தபின் ஏக்கம்தான் மிஞ்சுகிறது. இப்படி எத்தனையோ, அர்த்தமுள்ள பண்பட்டுக்கோலங்களை இழந்துவருகிறோமே என எண்ணும்போது.


//அந்த நிகழ்வும், விழாவும், இவ்வருடத்தில் நடைபெறவேண்டிய நன்னாள் இன்று. ஆனால் வெருகல் மக்களும், கொட்டியாபுரப்பற்று மக்களும், ஏதுமற்ற ஏதலிகளாக எங்கோ ஒரு தொலைவில்.......//

(((

மலைநாடான் said...

வெற்றி!

வருகைக்கு நன்றி!

மலைநாடான் said...

\\சமயம் கிடக்கட்டும். வரலாற்றுக்கும் பண்பாட்டுமுறைக்காச்சும் இவை ஆவணமாய்க் கிடக்கும் \\

அனானி!

நீங்கள் சொல்வது நிகழ்காலத்தில் நாம் அனுபவரீதியில் புரிந்து கொண்ட உண்மை.

மலைநாடான் said...

வெறòறி!

தொடரந்து என் பதிவுகளைப் படித்து, பதிந்து ஊக்கம் தரும் உங்களை பாராட்டியே ஆக வேண்டும்

மலைநாடான் said...

ஜெயசிறி!

நீங்கள் சொல்வது மிகச்சரி. இத்தகைய இழப்புக்களின் ஊடு ஒரு சமுகம் தன் அடையாளத்தை இழந்து விடுகிறது எனலாம்
வருகைக்கு நன்றி

மலைநாடான் said...

சென்றவாரம் இலங்கை இராணுவம் இந்தத் திருத்தலத்தின் மேல், எறிகணைத்தாக்குதல் மேற்கொண்டுள்ளது. எப்படியெல்லாம் தமிழர்களின் விழுமியங்கள் அழிக்கப்படுகின்றன என்பதைப் பார்த்தீர்களா?