Sunday, September 17, 2006

பாரதி செல்லம்மா

- நண்பர்களே! இப்பதிவினை பாரதியின் நினைவு நாளான, என் நட்சத்திரவாரத்தின் ஆரம்ப நாளன்றே இடுவதாக எண்ணியிருந்தேன். ஆனால் அன்று பிரசுரிக்க முடியவில்லை. ஆதலால் நடசத்திர வாரத்தி ன் இறுதி நாளாகிய இன்று பவிலிடுகின்றேன். -


இன்று பாரதி நினைவு நாள். அப்படியென்றால் பாரதி பற்றிக் கண்டிப்பாக ஏதாவது எழுத வேண்டுமே. ஆனால் எனக்குப் பாரதியின் சிந்தனைகளைவிட, கற்பனையிலும், கனவுகளிலும், வாழ்ந்த கணவனையும் அனுசரித்தவண்ணம், நித்தமும் சமுகநிர்ப்பந்தங்களுக்குள் நெளிந்துகொண்டும், உலக மகாகவியின் வாழ்க்கைத் துணைவியாக வாழ்ந்த அந்தச் சராசரிப் பெண்ணைப்பற்றிய சிந்தனைகளே நிறைய வந்தன.அதற்குக் காரணம் இல்லாமலும் இல்லை.

Photobucket - Video and Image Hosting

ஆம், எனக்குத் தெரிந்த சில செல்லம்மாக்களிடம், பாரதியின் செல்லம்மா பட்ட துன்பத்தைக் கண்டிருக்கின்றேன். அதனால்தான் பாரதியின் செல்லம்மாவும் என் எண்ணத்தில் உயர்வானாள். முதலில் எனைப் பாதித்த செல்லம்மாக்களைப் பார்த்து வருவோம்.


என் பாட்டி செல்லம்மா:

அவவின் உண்மையான பெயரும் அதுவே. தொன்னூற்றிரண்டு வரையில் வாழ்ந்து சில வருடங்களுக்கு முன்னர் இயற்கை எய்தியவர். வாழ்க்கைக் காலத்தில் என்னை ரொம்பவும் பாதித்த பெண்மணி. யாழ்ப்பாணத்தின் சாதியக்கட்டுமானத்தில் உயர்சாதியில் தோன்றியபோதும், உள்ளத்தில் எளிமையாக வாழ்ந்த மனுசி. இளமையில் முதல் திருமண பந்தம் மரணத்தில் முடிவுற, இரு பிள்ளைகளுடன் இரண்டாவது பந்தத் தொடர்வும், இரு உறவுகளிலும் வந்த பிள்ளைகளின் வேறுபட்ட மனப்போக்கு, கணவனின் மாறுபட்ட போக்கு, என்பவற்றுக்கிடையே தன் திடமான மனவுறுதியில் குடும்பத்தைக் குலையாமல் கட்டிவளர்த்த வித்தை வியக்கத்தக்கது. என் தாயின் மரணத்தைத் தவிர, பாட்டி அழுது நான் பார்த்ததேயில்லை. கவிஞர் வைரமுத்து, தன் கருவாச்சிக் காவியத்தில், காவிய நாயகி, தன் பிரசவத்தைத் தானே பார்த்துக் கொள்வதை, அழகாகச் சித்தரித்திருப்பார். வாசிப்பவர் மனது பதறும். அவர் கதையில், கற்பனையில் சொன்னதை, தன் வாழ்வில் ஒரு தடவை உண்மையாகவே செய்து காட்டியவள் என் பாட்டி. அந்தளவு திடங்கொண்டவள்.

எந்தவொரு பிரச்சனையையும் அவரவர் போக்கிலே சென்று, லாவகமாக அவற்றைக் கையாண்டு வெற்றி காணும் அவவினது வாழ்க்கையில் தான் எத்தனை சங்கடங்கள். ஆனால் சளைக்கவில்லையே. எல்லாற்றையும் வெற்றி கொண்ட வீராங்கனை . அதற்காக அவர் ஒரு நாளும் ஆர்ப்பாட்டம் பண்ணியும் அறியேன். உருகி உருகி மற்றைய தலைமுறையை உருவாக்கியவள். தன்னை நோக்கி விழுந்த ஏளனங்களை எடுத்தெறிந்து, எதிர்நீச்சல் போட்டவள். இலகுவாகச் சொல்ல முடிகிற வார்த்தைகளாக இருந்தபோதும், அவவின் வாழ்க்கை, அர்ப்பணிப்பு மிக்க ஒரு போராளியின் வாழ்க்கைகுச் சமனானது. அவ இல்லாது போன இந்த வருடங்களில் அவவின் வெற்றிடம், வெளிப்படையாகத் தெரிகிறது எங்கள் குடும்ப உறவுகளில்.


என் பாதி செல்லம்மா:

இவள் என் வாழ்க்கைத்துணைவி. என் பலங்களாலும், பலவீனங்களாலும் பல முறை துன்பப்பட்டவள். இருந்தபோதும் அதே பலங்களையும், பலவீனங்களையும், இயல்பாக ஏற்றவண்ணம் இன்றுவரை என் வாழ்வில் இணைந்து வருபவள். உயர்சாதீயத்தின் சமூகமுறைமையெனும் எதிர்காற்றின் வேகத்தாக்கத்திலும், ஈடுகொடுத்தெழுந்து நடப்பவள். விழுவதும், எழுவதும், நம்விதியெனச் சில கணம் எண்ணியபோதிலும், எழுவதில் மட்டும் சோர்ந்து போகாதவள். என் ஆர்வங்கள் பலவும், சமுதாய விழித்திரையில் கேலிச்சித்திரங்களாகப் வரையப்பட்டபோதுகளிலெல்லாம், சமூகமாற்றமென சிந்தித்த என் சிந்தனைகள் சந்திச்சிரிப்பாகிப்போயிடினும், சிரிப்புக்களினாலே சேர்ந்தே அவளும், சிறுமைப்பட்டுப் போனாலும், குடும்பம் சிதறுண்டுபோகாவண்ணம் செயலாற்றியவள். ஐயோ பாவம் எனும் பரிகசிப்புக்களுக்கு மத்தியில், அழுதவண்ணமே அரணாய் நின்று காத்தவள். நிச்சயமற்ற நீண்ட பயனங்கள் தொடங்கிய போதுகளில், நில்லுங்கள் நானும் கூடவே நடந்து வருகின்றேன் எனத் தொடர்ந்து வந்த வனவாசச் சீதையவள். இன்றளவும் தன்னிலை தளராமலும், நான் தளர்ந்துபோகாமலும், தாய்க்குப்பின் தாரமென்றில்லாமல், தாய்க்குப்பின்னும் தாயாகவே நின்று என்னைத் தாங்கி வருவபவள்.


நான் அருகிருந்து பார்த்த இச் செல்லம்மாக்களின் சிலுவைப்பாடுகளில், பாரதி செல்லம்மா பட்ட துயர் உணர்ந்தேன். உடையோனின் உயர்ந்த அன்பின் அரவணைப்பை, அயலவரின் பரிகசிப்பால், ரசிக்க முடியாப் பரிதவிப்பும், தன் குடும்ப வறுமையெண்ணாது, தொலைதூரத் துயர்களைய சிந்திக்கும், குடும்பத்தலைவனது தகமையினால் வரும் தத்தளிப்பும், வாட்டியெடுத்து வதைத்துவிட்ட போதிலும், கூட்டிநின்ற குடும்பத்தைக் குலைக்காது நின்ற மான்புக்கென, பாரதியை விட ஒருபடி மேலாய், என் மனதினில் நின்றாள் செல்லம்மா.

கண்முன்னே தன் குழந்தைகளின் பசிநோக்காது, கண்காணா தொலைதூரத்து கரும்புத் தோட்ட கூலிகளுக்காக கண்ணீர் விட்ட கணவனைப் பாரத்துக் கோபப்படும்போதும் கூட அவரையறியாமல் காட்டும் பச்சாதாபத்தில், பாரதியோடு இணைகின்றாள். காலங்காலமாக சிந்தனையூட்டம் தந்த சாதீயத்திலிருந்தும், சமூகக் கட்டுமானங்களிலும் இருந்து வெளிவராத செல்லம்மாள், பாரதியின் செய்காரியமும், சிந்தையும் அறியாத போதும், இறுதிவரை சேர்ந்தேயிருந்தாள், அதனால் பாரதியின் செய்காரியம் யாவிலும், சிந்தனை யாவிலும், பங்கு கொண்டிருந்தாள்.

தான் கொண்ட கணவனின் நியாயங்களுக்காக, தன் குடும்ப உறவுகளோடு சமரிடுவதும், சமரசம் கொள்வதும், கூட கடினமானதுதான். இன்னும் சொல்லப்போனால், உறவுகளிடத்தில், உடன்படாதிருத்தல் என்பது, மட்டில்லா மனக்கசப்புக்களையும், உளைச்சல்களையும், தாங்கொணா வலிகளாகத் தரக்கூடியது. இந்த வலியின் கொடுமை தெரியுமாயின், செல்லம்மாவின் மனவெளியின் விசாலம் புரியும். விட்டுக்கொடுப்புக்கள் அற்றுப்போன இக்காலச் சூழலில், சிறு முரண்பாடுகளே முற்றிப் பெருத்து, மனமுறிவாகவும், குடும்பங்களின் சிதைவுகளாகவும் மாறிவரும் நிலமையினைப் பார்க்கும்போதுதான் செல்லம்மா சத்தமின்றிச் சாதித்ததன் பெரு வடிவம் புரிகிறது..


தான் குறித்த வேளையில், தலைமை தாங்க முன்வராத காந்தியுடன் சமரசம் செய்து கொள்ளா மகாகவி, கண்ணம்மாளின் திருமணத்திற்குச் செல்லம்மா அழைத்தபோது வருவது, பிள்ளைப்பாசம் என்று மட்டும் கொள்ளமுடியாது, குடும்பம் என்ற கோப்பினை கட்டிவைத்திருந்த செல்லம்மாளின் காதல்மிகு கட்டளை அல்லது கசிந்துருகிய கதறல், என்றால் மிகையாகாது.

எதுவெப்படியாயினும், எள்ளி நகையாடுதலும், ஏளனப்பார்வைகளும், ஈட்டிமுனைக்கூராய், இதயத்தைக் குத்தியபோதிலும், ஊடலும் கூடலுமாய் உறவாடி, குடும்பம் என்ற பந்தத்தை குழப்பமின்றி, விட்டுக் கொடுப்புக்களினாலும், விரும்பா இடங்களில் விலகிக் கொண்டதினாலும், இறுதிவரை பாரதியுடன் கூடிவந்ததினால், கூட வாழ்ந்ததினால், வையகத்தில் பாரதி புகழ் வாழும்வரை, செல்லம்மாவும் சேர்ந்தேயிருப்பாள்.


அணை உடைத்ததென்பது, இடிந்துவிழும் இறுதிகணத்தில் தீர்மாணம்மாகினும், எங்கோ ஓர் நிலையில், சிறிதாய் அரிக்கத்தொடங்கிய கணங்களிலே, அது ஆரம்பமாகிவிடுகிறது. சமூகமாற்றம் என்பது வெடித்தெழும் வேளைகளில் மட்டுமல்ல, அந்தரங்க அசைவுகளிலும், அது நிகழ்ந்து கொண்டுதானிருக்கிறது.



வெற்றியை விரும்பும் இதயங்களுக்கு முதலில்
இது வேண்டும்

7 comments:

ஜடாயு said...

// கண்முன்னே தன் குழந்தைகளின் பசிநோக்காது, கண்காணா தொலைதூரத்து கரும்புத் தோட்ட கூலிகளுக்காக கண்ணீர் விட்ட கணவனைப் பாரத்துக் கோபப்படும்போதும் கூட அவரையறியாமல் காட்டும் பச்சாதாபத்தில், பாரதியோடு இணைகின்றாள் //

ஐயா, "பாரதி" திரைப்படத்தைப் பார்த்து இந்தச் சித்திரத்தை கற்பனை செய்கிறீர்கள் என்று நினைக்கிறேன். திரையில் வந்த சித்திரம் தவறு.

இது பற்றி ஸ்ரீமதி செல்லம்மாவே ஆற்றிய உரை கட்டுரை வடிவமாக வந்துள்ளது, இந்த இணைப்பில் உள்ளது -
http://tamil.sify.com/general/
mahakavi/fullstory.php?id=13331651

"...என் கணவர் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடிக் கொண்டிருந்தது... செல்லம்மா இங்கே வா என்றார், சென்றேன். கீழேயிருந்த எங்கள் குழந்தைகளையும் அழைத்தார். 'நமது இந்திய மாதர்கள் அந்நிய நாட்டில் படும் பாட்டைக் கேளுங்கள்' என்றார். கரும்புத் தோட்டத்திலே என்ற பாட்டை அவர் பாடியதைக்கேட்ட நாங்களும் விம்மிவிம்மி அழுதோம்".

எனவே செல்லம்மா கோபப்படவில்லை. எங்கோ கடல் கடந்து வாழும் நம் நாட்டு மக்களின் துயரத்தைக் கேள்விப்பட்டு அதைத் தன் குடும்பத்துயரம் போன்று பாவித்து மனம் வருந்திய அந்த உணர்ச்சிகரமான தருணம் திரையில் கேலிக் கூத்தாகிவிட்டது.

மலைநாடான் said...

ஜடாயு!

நீங்கள் குறிப்பிட்டுள்ளது ஒரளவுக்குச் சரியே. தமிழ் சிபியில் செல்லம்மாவின் பேச்சினையும் கேட்டிருந்தேன். ஆயினும் பாரதிபற்றி முன்னர் வெளிவந்த ஆவனப்படத்திலும் , ஏறக்குறைய இதேமாதிரித் தகவல்தான் சொல்லப்பட்டிருந்தது. அதனடிப்படையிலேயே இவ்விதம் எழுதினேன். இந்த எண்ணப்பாடு தவறாயின் திருத்தம் செய்துவிடுகின்றேன். கருத்துக்கு நன்றி!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

மலைநாடர்!
பாட்டிகளின் வழிநடத்தல் இல்லாத அன்றைய தமிழ்க்குடும்ப அமைப்பில்லை.அது பாரம்பரியம். குடும்பவாழ்வில் ஒருவரை ஒருவர் புரிதல் ஒருகலை;அக்கலை தெரிந்தால் குடும்பம் கோவிலே! , அக்கலை கற்க்க முதல் தெரியவேண்டியது." விட்டுக் கொடுத்தல்".
பாரதியார் இவ்வளவு சமீபத்தில் வாழ்ந்தும்; இன்னும் சரியான தகவல்கள்;சேகரிக்கப் படாமை;கவலையே!
கடைசித் 20-09௨006 துக்ளக்கில் கூட"பாரதியின் வாழ்க்கை வரலாற்றை தனக்கேற்ற வகையில் ஞான.ராஜசேகரன் இயக்கினார்" என உள்ளது.படம் வெளிவந்த போதே! இச்சர்ச்சை வந்தது. எனினும் பாரதியாரின் மனைவியை அவர்கள் சார்ந்த சமூகம் அன்றைய காலக்கட்டத்தில்; கல்லாலடிக்காவிடிலும் சொல்லால் கொன்றிருக்கும்; இன்றும் இவ்வளவு முன்னேற்றம் ;விரிந்த பார்வை; உலகம் வீட்டுத் திண்ணைக்குள் வந்தும்;மாறிவிட்டதா! அந்த வகையில் ;பட்டனத்தாருக்கு; நஞ்சு வைக்க முற்பட்டதுபோல்; ஏதும் செய்ய முற்படாதது. அவரின் தன் கணவன் பற்றிய புரிந்துணர்வையே காட்டுகிறது. செல்லம்மாள் அம்மையார் போற்றுதலுக்குரியவரே!!அவர் அசாத்திய மனத்துணிவு பாராட்டுக்கு உரியதே!!! அதுவும் அன்றைய காலக்கட்டத்தில்......
யோகன் பாரிஸ்

மலைநாடான் said...

// பாரதியாரின் மனைவியை அவர்கள் சார்ந்த சமூகம் அன்றைய காலக்கட்டத்தில்; கல்லாலடிக்காவிடிலும் சொல்லால் கொன்றிருக்கும்; இன்றும் இவ்வளவு முன்னேற்றம் ;விரிந்த பார்வை; உலகம் வீட்டுத் திண்ணைக்குள் வந்தும்;மாறிவிட்டதா! //

யோகன்!
உங்கள் கேள்வி நியாயமானதே. எனக்கும் அத்தகைய கேள்வி எழுந்ததாலேதான் எழுதினேன். ஆனால் இப்பதிவுக்கு வரும் பின்னூட்டங்களின் அளவைக் கொண்டு பார்த்தால், இப்பதிவு பலருக்கு ஏற்புடையதல்லப்போல் தெரிகிறது. பார்ப்போம்.

தமிழ்நதி said...

"சமூகமாற்றம் என்பது வெடித்தெழும் வேளைகளில் மட்டுமல்ல, அந்தரங்க அசைவுகளிலும், அது நிகழ்ந்து கொண்டுதானிருக்கிறது."
உண்மைதான்... குடும்பத்திற்குள் எத்தனை தியாகிகள்,போராளிகள்,கலைஞர்கள்... ஆனால் அவர்கள் குடும்பம் என்ற வட்டத்திற்குள்ளேயே வாழ்ந்து மடிந்துபோய்விடுவார்கள். காலம் அவர்களை மறக்கடித்துவிடும்.
பாரதியைப் போல உங்களுக்கும் ஒரு செல்லம்மா வாய்த்திருப்பதையிட்டு, அதை எங்களோடு பகிர்ந்துகொள்ளுமளவிற்குப் பெருந்தன்மையுடையவராயிருப்பதையிட்டு மகிழ்கிறேன். அண்மையில் நேர்காணல் ஒன்றினை முன்னிட்டு ஒரு பெண் கவிஞரைச் சந்தித்தேன். அவர் சொன்னார்... தங்கள் மனைவியொரு சிறந்த படைப்பாளி என்று இந்த ஆணாதிக்க சமூகத்தில் எந்த ஆணுமே அறிமுகப்படுத்துவதில்லை என்று. 'நிகழவே நிகழவே நிகழவே நிகழாது'என்று சொன்னா. நான் எனக்குள் நினைத்துக்கொண்டேன் 'எனக்கு நிகழ்ந்துகொண்டிருக்கிறது தோழி'என்று. அவவிடம் சொல்லவில்லை. காரணம், அது 'படம்'காட்டுவது போல அமைந்து விடுமோ என்பதனால். நான் நன்றாக எழுதுகிறேனோ இல்லையோ... எனது துணைக்கு எனது எழுத்துக்கள் பிடித்திருக்கின்றன என்பதில் எனக்குத் திருப்தி. உங்களுக்கும் அப்படியொரு துணை வாய்த்திருப்பதில் மகிழ்ச்சி.

மலைநாடான் said...

தமிழ்நதி!

முதற்தடவையாக என் வீட்டுப்பக்கம் வந்து கதைத்திருக்கிறீர்கள்.:) நன்றி.

என்னைப் பொறுத்தவரை குடும்பத்தலைமைத் தகமை என்பது உண்மையில் பெண்ணிடத்தில்தான் இருக்கிறது. ஆனால் அது ஆணாதிக்க சமூகஅமைப்பில் பெண்ணிடமிருந்து பறித்தெடுக்கப்பட்டிருகிறது. ஆனாலும் குடும்பங்களின் தளம்பல் நிலைகளின்போதெல்லாம், பெண்ணின் தலைமைப் பண்பு, பின்புலத்தில் நின்று நெறிசெய்கின்றது என்றே சொல்வேன். இது நான் பல குடும்பங்களின் வாழ்வியலில் நேரடியாகக் கண்டு கொண்ட அனுபவம். இதற்குரிய காரணகாரியங்கள் பற்றி இன்னமும் பேசலாம், பிறிதொரு தருணத்தில். உங்களுக்கும், உங்கள் துணைநல ரசிகருக்கும் , இனிதான வாழ்த்துக்கள்.

நன்றி

ஜோதிஜி said...

உருகி உருகி மற்றைய தலைமுறையை உருவாக்கியவள்.

இப்படித்தானே வர வேண்டும்

உருகி தன்னை உருக்கி தலைமுறையை உருவாக்கியவர்