Friday, November 21, 2008

கைதுகளும் மௌனங்களும்


யாருக்குச் சொல்ல... ? சொல்லித்தான் என்ன...? என்கின்ற வலி காரணமாகவே வார்த்தைகள் செத்துவிடுகின்றன. ஆனாலும் இன்னமும் எங்கோ ஓரமாக ஒட்டிக்கொண்டிருக்கும் துடிப்பு உயிர்ப்பித்துக் கொண்டிருக்கிறது.
பதிவர் லோஷன் கைதாகியது குறித்து எழுதுவதா விடுவதா என்பதிலேயே நாட்கள், வாரத்தைத் தொட்டுவிடப்போகிறது. மெளனமாயிருக்க விதிக்கப்பட்டோம் எனச்சொல்லலாமா? .... இல்லை. எதுவாயினும் சொல்லித்தான் ஆகவேண்டும்.

மலேசிய வலைப்பதிவர் ஒருவரின் கைது பற்றி அல்லது மற்றைய மொழிப் பதிவரின் கைது பற்றிப் பேச முடியுமெங்களுக்குச் சக பதிவரின் கைது பற்றி ஏன் பேசமுடிவதில்லை. தமிழக நண்பர்கள் கூடக் கேட்டிருந்தார்கள். இதை உங்களுக்குச் சொல்லிப் புரிய வைக்கமுடியுமென்பதில் சந்தேகமே. ஏனெனில் ஜனநாயகப் பளபளப்புப் பூசப்பட்ட பேரினவாதமது.

அங்கே கைதுகள், விசாரணைகள், தீர்புக்கள், எல்லாமே வித்தியாசமானவை. உள்நோக்கம் கொண்டவை. ஒருவர் கைதாகும் போதே அநேகமாத் தீர்ப்பும் தீர்மானிக்கப்பட்டிருக்கும். அதற்குப் பின்னான விசாரணையென்பது, அவர்கள் விருப்பத்துக்கு தக்கவாறு உருவாக்கப்படும். அரசியற் சட்டமும், நாடாளுமன்றக் கூட்டத்தொடர்களில் நம்மவர் சிலரும் சேர்ந்து உயர்த்தும் கைகளினால் உத்தரவாகும் அவசரகாலச் சட்டமும், அதற்குரிய சகல அதிகாரத்தையும், உரியவர்களுக்கு வழங்கிவிடுகிறது.

கைதுகள் பலவும் சாதரணமாய்தான் நிகழும். சற்றுத் தாமதமாகவே சோடனை அலங்காரங்கள் தொடங்கும். அந்த அலங்கரிப்புக்களுக்கு ஏடா கூடாமாக எதையும் எங்கள் எழுத்துக்களோ சொற்களோ எடுத்துக் கொடுத்துவிடக் கூடாது என்பதற்காகவே , இவ்வாறான தருணங்களில் எங்கள் மெளனங்கள்.

லோஷன் கைதும் சராசரியாகவே நடந்திருக்கிறது. அதனால் அவரைச் சார்ந்தவர்களும் சற்று அமைதியாகவே இருந்துவிட்டனர். ஆனால் அனுபவப்பட்ட ஊடகத்துறை உசாராகிக் கேட்கத் தொடங்க, கைதுக்கான காரணக்கதை வந்து விழுந்திருக்கிறது.

அல்ஹைடாத் தீவிரவாதிகளையறிந்து விவரணச்செய்தி தரும் அல்ஜசீரா ஊடகவியலாளன் அமெரிக்காவிலும் செய்தி சேகரிக்கலாம். மத்திய அரசும், மாநில அரசும், தேடிக்கொண்டிருந்த வீரப்பனை நக்கீரன் கோபல் தேடிச் சந்திக்கலாம். தேவையாயின் தூதனாகலாம். அது ஊடக சுதந்திரம்.
லோசனின் கைதில் இப்போது வந்து விழுந்திருக்கும் கதை, ஒரு ஊடகவியாலனுக்கு ஒட்டிப் பார்க்க முடியாதது. ஆனாலும் இலங்கையில் முடிகிறது காரணம்...? கைது செய்யப்பட்டிருப்பவன் ஒரு தமிழன். கைது செய்திருப்பது பேரினவாதம். இனி கதையைத் தொடரலாம், நிறுத்தலாம், நீட்டலாம்.... வெற்றி எப் எம்மில் வேறொரு தமிழன் முகாமையாளராகலாம்...அவனுக்கும் இது தொடரலாம்......

அவசரக்காலச்சட்டம் அதிக வருடங்கள் சிறிலங்காவில்தான் நீடித்திருந்ததென்னும் உலக சாதனைக்காக உங்கள் கைகளை உயர்த்தியதாக ஒரு பொய் சொல்லிட்டுப் போங்கள்......உங்களுக்கென்ன..?

Monday, September 29, 2008

tamilish, thamilbest, தமிழ்மணம்,மாற்று, ஒரு ஒப்பீடு


உதிரிகளாக எத்தனை வலைப்பதிவுகள் எழுதப்பட்டாலும், அவை பலரது கவனம்பெறுவது என்னவோ திரட்டிகளால்தான் என்பது மறுக்கப்பட முடியாதது. இந்தப்பணியில், தமிழ்மணம், தேன்கூடு, தமிழ்வெளி, தமிழ்பதிவுகள், என்பன இதுவரை காலமும் கூடிய பங்கு வகித்து வந்தன.இவற்றில் தமிழ்மணம் மிக அதிகமான வலைப்பதிவுகளைத் திரட்டுவதென்பதும், அநேக பதிவர்கள், வாசகர்களைக் கொண்டதென்பதும் தெரிந்ததே. இதுவே தமிழ்மணத்திற்கு பலமாகவும், சில நேரங்களில் பலவீனமாகவும் இருந்திருக்கிறது. இதன் அடிப்படையிலே ஏனைய திரட்டிகளைத் தவிர்த்து தமிழ் மணத்தை இவ் ஒப்பீட்டிற்கு எடுத்துக்கொள்கின்றேன்.




புதிய தொழில் நுட்பத்தின் வழி கிடைக்கும் இணையவசதிகள் தமிழிலும் வந்துகொண்டிருக்கின்றன. அந்தவகையில், கிடைத்திருக்கும் மற்றுமொரு புதிய நுட்பத்தினடிப்படையில் தோன்றியிருப்பவைதான், தமிழிஷ், தமிழ்பெஸ்ட், ஆகியன. தற்போதைக்கு அதிக வாசகர்வட்டத்தை தம்பால் இவையிரண்டும் எடுத்துக்கொள்ளத் தொடங்கியிருக்கின்றன என்பது மிகையல்ல. ஆதலினால் அவையிரண்டும் ஒப்பீட்டிற்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

தமிழ்மணம் உட்பட பல திரட்டிகளில் இணைந்துள்ள சில பதிவர்கள், தாம் ஆங்காங்கே வாசித்த நல்ல இடுகைகளை த் தொகுக்கும் திரட்டியாக மாற்று திரட்டி இருக்கிறது. நான் அறிந்த வரையில், இவ்வகைத்திரட்டியாக இது மட்டுமே உள்ளதென்பதால் இவ் ஒப்பீட்டிற்கு மாற்று எடுத்துக்கொள்ளப்படுகிறது.
இனி இவற்றின் பயன்பாட்டில், வலைப்பதிவுகள், பதிவர்கள், பற்றிப் பார்ப்போம்.

தமிழிஷ், தமிழ்பெஸ்ட்டில், இணைத்தேன் நல்ல கிட்ஸ் என நண்பரொருவர் சொன்னார். இணைப்பது சுலபம், கட்டுப்பாடுகள் கிடையாது, நிறைந்த வாசகர் வருகை, என்பன இவற்றின் சிறப்பென்பது உண்மைதான். பதிவர்களே அநேகமாக வாசகர்களாகவும் இருக்கும் வலைப்பதிவுத் திரட்டிகளை விடவும், பதிவர் அல்லாத இணைய வாசகர் அனைவரையும் இவ்வகைத்திரட்டிகள் கவர்கின்றன என்பதும் உன்மைதான். அதனாலேயே அதிக வாசகர் வருகை இங்கே இணைக்கும் போது கிடைக்கின்றது. ஆனால் இந்த அதிகமான வருகையும், குறைவான கட்டுப்பாடுகளும், தரமான எழுத்துக்களை, பதிவுகளைத் தர உதவுமா என்பது சந்தேகத்திற்குரியது. ஏனெனில், அதிக வாசகர் பரம்பலை விரும்பும் போது, அங்கே பரபரப்பான தலைப்புக்கள்,கவர்ச்சிகரமான விடயங்களே அதிகம் முன் வைக்கப்படும். அவற்றின் நடுவே ஒருசில நல்ல விடங்களும் வரலாம். ஆனால் மற்றவைகள் பெறும் முன்னிலையில் இவை பின்னடைந்து போகும். கவனிப்பிழந்து போகும். ஆக இவை ஒரு பரபரப்புத் தரும் திரட்டிகளாக இருக்குமெனக் கருதவே இடமுண்டு.

சில பதிவர்களினால் தெரிவு செய்யப்பட்ட பதிவுகளின் தொகுப்பாக இருக்கும் மாற்று திரட்டி, அதன் பெரைப்போலவே மேற்குறித்த திரட்டிகளுச் சிறப்பான மாற்றே. இது பதிவர் குழுவின் தெரிவுகள் எனும்போது ஒரு குழுநிலை இரசனைப் பதிவுகள் தொகுக்கப்படுகின்ற ஒரு சூழல் வரும். அப்படி வரும் போது அதன் தெரிவுகள் ஒரு வட்தத்துக்குள் அமுங்கிப்போய்விடும் நிலை வரக்கூடும். இது இத்தகைய திரட்டிகளின் பலவீனம். ஆயினும் மாற்று இந்த நிலைக்குள் சிக்கிக்கொள்ளாமல் இதுவரையில் பயனிப்பது ஆறுதலானது. அது அத்திரட்டி உறுப்பினர்கள் கொண்டிருக்கும் கட்ப்பாட்டுப் பொறுப்புணர்வை உணர்த்துகிறது.

இவையெல்லாவற்றுக்கும் பொதுவழங்கிபோல, இன்றுவரை தமிழ்மணமே இருந்து வருகின்றது. அநேகம் வலைப்பதிவுகள் தமிழ்மணத்தாலேயே மற்றவர்களுக்கும், மற்றைய திரட்டிகளுக்கும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. தனக்குப்பின் தோன்றிய திரட்டிகளின் சேவையை தன்னுள்ளும் காட்சிப்படுத்திக்கொண்டு, தொழில்நுட்ப வளர்ச்சி மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டும், தமிழ்மணம் வளர்ந்து கொண்டே செல்கிறது.

இதன் வளர்சிப்போக்கும், கடைப்பிடிக்கும் சில வரையறைகளும், அவ்வப்போது வலைப்பதிவுலகில் காரசாரமான விமர்சனங்கள் விவாதங்களுக்கு உள்ளாகினாலும், ஒரு சராசரி வாசகனை, ஒரு எழுத்தானாக உருவாக்குவதற்கு , தமிழ்மணமும், அதையொத்த வலைத்திரட்டிகளாலுமே முடியும். அந்தவகையில் தன்னுள் திரட்டப்படும் வலைப்பதிவின் உள்ளடக்கங்களை தமிழ்மணத்தால் ஒழுங்கமைப்பது என்பது வலைப்பதிவரின் உரிமையைப் பறிக்கும் செயலெனக் கொள்ளப்பட்டாலும், அப்பதிவு தமிழ்மணத்தில் பெறும் முக்கியத்துவத்தை ஒழுங்கமைக்க முடியும். அந்த வகையில் தமிழ்மணத்தில் மாற்றங்களைக் காலத்திற்குக் காலம் காண்பதும் வளர்வதும் வலைப்பதிவுலகத்திற்கு நல்லதே.

இந்த வகையில் தமிழ்மணத்தின் அவ்வப்போது பலராலும் தேவையற்றது அல்லது மாற்று வடிவம் காணப்பட வேண்டுமெனச் சொல்லப்பட்டது, சூடான இடுகைகள் பகுதி. அன்மையில் இதன் பயன் குறித்து செந்தழல் ரவியும் எழுதியிருந்தார். இந்தப்பகுதியை மாற்றம் செய்வதால் தமிழ்மணம் அதிக வாசகர் பரம்பலை இழந்துவிடுமென்றோ, பதிவர்களை இழந்து விடுமென்றோ எண்ணத் தேவையில்லை. மாறாக புதிதாக வரும் வரும்வலைப்பதிவுகளுக் சிறப்பான வழிகாட்டலாகவும், நல்ல எழுத்தாளர்களை உருவாக்கும் பட்டறையாகவும் அமைய முடியும்.

Thursday, September 11, 2008

எங்கள் மண்ணின் இன்னுமொரு இசைக்கலைஞன் மறைந்தான்

எங்கள் மண்ணின் இன்னுமொரு இசைக்கலைஞன் இயற்கை எய்தினான். இரட்டையர்களாகப் பெருமை சேர்க்கும் கலைஞர்கள் நீண்டகாலம் இணைந்திருப்பதில்லை என்பது கலையுலகில் எழுதாவிதி. அதை நீண்டகாலம் பொய்திருக்கச் செய்த ஈழத்து இசைச்சகோதரர்கள், வி.கே. கானமூர்த்தி பஞ்சமூர்த்தி சகோதரர்கள்.

அவர்களில் மூத்தவரான வி.கே. கானமூர்த்தியே தற்போது காலமாகி நிற்கும் கலைஞர். இவர் காலமாகிவிட்டார் என முன்பொரு தடவையும் வதந்தியொன்று பரவியிருந்தது. இந்த இசைச் சகோதரர்கள் குறித்து எனது நட்சத்திரவாரத்தில் எழுதிய விரிவான இடுகையினை இங்கே காணலாம்.


மறைந்த கலைஞனுக்கு மரியாதை அஞ்சலிகள்!. இணை பிரிந்த உறவுகளுக்கு கரம்பற்றித் துயர் பகிர்வுகள்.

படம்: ரமணீதரன்

Friday, July 11, 2008

சஞ்சிகை வெளியீடும், அறிவியல் கருத்தரங்கும்

பத்திரிகை வெளியீடு, சஞ்சிகை வெளியீடு, புத்தக வெளியீடு, என்பன புலம் பெயர்ந்த மண்ணிலும் நிறையவே நடந்திருக்கிறது. செய்தவற்றையே மீளவும் செய்வதை, " சுத்திச் சுத்தி சுப்பற்ற கொல்லைக்க" எனும் ஒரு சொல்லாடல் மூலம் விமர்சிப்பது ஈழத்தில், அதிலும் யாழ்ப்பாணத்தில் வழக்கம். இங்க நடந்த, நடக்கும், பல வெளியீடுகளையும் அதே சொல்லாடக்குள் வைத்துவிடலாம். அத்திபூத்தாற்போல் எப்போதாவது இந்த எல்லை மீறப்படுவதும்முண்டு. அப்படியானதொரு மகிழ்ச்சியான மீறல்தான் "கணினிக்களம்" தொழில் நுட்பச் சஞ்சிகை.

"கணினிக்களம்" சென்ற ஏப்ரல் மாதத்தில் தனது முதலாவது இதழை வெளியிட்டிருந்தது. புதிய தொழில்நுட்பம் விரிந்து கொண்டு செல்லும் இக்காலத்தில், தமிழ்மொழி மட்டும் தெரிந்தவர்களுக்கு இது சற்று எட்டாக் கனியே. ஆனால் இந்த எட்டாக்கனியைத், தட்டிக் கனிய வைத்திருக்கிறார்கள் " கணினிக்களம்" தொழில் நுட்பச் சஞ்சிகை வெளியீட்டார்கள். புதிய தொழில்நுட்ப வெளியீடுகளை, படங்களுடன் விபரமாகவும். இலகுவாகவும்அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்கள்.

அந்தச் சஞ்சிகையின் இரண்டாவது இதழ் தற்போது வெளியிடலுக்குத் தயாராகிவிட்டது. அந்த வெளியீட்டை ஒரு விழாவாக முன்னெடுத்திருக்கிறார்கள். 19.07.08 சனிக்கிழமை, சுவிற்சர்லாந்து சூரிச் நகரில் நடைபெறவுள்ளது .அந்த விழாவில், ஒரு அறிவியற் கருத்தரங்கையும், ஒழுங்கு செய்துள்ளார்கள். இந்த முயற்சிகள் எம் சமூகத்திற்கு மிக அவசியமான முன்னெடுப்புக்களாகும். இவைகுறித்த மேலும் விபரங்களை இங்கே காணலாம்.

Wednesday, June 25, 2008

அப்பா எனும் ஆன்மபலம்.

அப்பா!மனிதர்களை நேசிக்க, மாற்றங்களைக் காண, எனக்குக் கற்றுக்கொடுத்தவர். இளைஞர்கள் மீதான நம்பிக்கையையும், நட்பின் சுகத்தையும், மதிக்கத் தெரிந்த மனிதர். இருப்பதைவிட்டுப் பறப்பதற்கு முயலாத இயல்பினர். மற்றவர்களுக்குச் சராசரியான ஆன்மீகவாதி. எனக்கு ஆன்மீக வழி நின்று பொதுவுடமை கண்ட மனிதநேயர். புரட்சிபற்றியும், மாற்றங்கள் பற்றியும், யோசிக்கத்தெரிந்த தருணங்களில், சொற்பமாய் தெரிந்த அவர் செயல்கள், நாம் முயன்று முடியாது போனபோது மாபெரும் செயல்களாய் மனதில் பதிந்தன. நானறிந்து கொண்ட முதலாவது சமூகப் போராளி என் அப்பாதான்.

என் செயல்கள் குறித்த சந்தேகங்கள் எப்போதும் அவருக்கிருந்ததில்லை. சந்தேகங்கள் தோன்றுமளவுக்கு நம்பிக்கையற்றுப் போனதுமில்லை. இத்தனைக்கும் என் பல செயற்பாடுகள் அவருக்கு மிக இக்கட்டான நிலைகளைத் தோற்றுவித்திருந்தன. ஆனாலும் அவற்றின் பின்னிருந்த நியாயங்களை அவர் உணர்ந்திருந்தார். அவரது அமைதியான அந்த அங்கீகரிப்பே என் செயல்களைப் புடம்போட்டவண்ணமிருந்தன என்றால் மிகையில்லை. அது மட்டுமல்லாது, என் சமுகம் சார்ந்த பணிகளுக்கான அடித்தளமும் அதுவாகத்தானிருந்தது.அப்பாவும் நானும் அருகிருந்த காலம் என்னவோ சற்றுக்குறைவானதுதான். ஆனாலும் என்செயல்களில், நினைவுகளில் அருகிருந்ததனால் அது தெரிந்ததில்லை. எதையும் மாற்றாக எண்ணவோ, செய்யவோ, முயலும் போதெல்லாம், அந்த ஆன்மார்த்தம் பெரும் பலமாக நின்றென்னை நெறிப்படுத்தியிருக்கிறது. அதை இப்போது நன்குணர முடிகிறதென்னால்.தினமும் சிவனை நினைத்த அவர், என்றும் அவர் விரும்பிய வண்ணமே, ஈழமண்ணின் வன்னிநிலத்தில், சிவபுரத்தில் சிவனைக் கதியடைந்து நாட்கள் ஐந்தாகின்றன. நாட்டின் சூழலால், இறுதிக்கணங்களில் அருகிருக்க முடியாது போன துயருற்றிருப்பினும், ஊர்கூடிக் குளக்கரையில், உளங்களை நேசித்தவனை, வழியனுப்பிவைத்த செய்தி சற்று ஆறுதலாகவிருக்கிறது. அப்பா!ஆன்மாவின் பலமாய் என்னுள் கலந்திருங்கள்.

Saturday, June 07, 2008

அகதியாய் வந்த வீரன்




Euro 2008 உதைபந்தாட்டப் போட்டிகள், சுவிற்சர்லாந்தின் பாசல் நகரில் அமைந்துள்ள St.Jackop மைதானத்தில் இன்று ஐரோப்பிய நேரம் மாலை 5.00 மணிக்கு, மிகவும் குதுகலமாக ஆரம்பமாகியது. உலகக் கோப்பை போட்டிகளைப்போலவே மிகவும் எதிர்பார்ப்புக்களும், ஆர்வங்களும் மிகுந்ததாக அமையும் இந்த ஐரோப்பியக்கிண்ணத்திற்கான இன்றைய ஆரம்பப் போட்டிகளில், சென்ற உலகக்கோப்பைப் போட்டிகளின் தகமையடிப்படையில், உலகத்தரத்தில் 6வது இடத்தில் இருக்கக் கூடிய செக் குடியரசு அணியுடன் சுவிற்சர்லாந்து அணி மோதியது. மிக இறுக்கமாகவும் விறுவிறுவிறுப்பாகவும் இருந்த விளையாட்டில் இடைவேளைக்கு முன்னதாக சுவிஸ் அணியின் தலைமைவீரர் அலெக்ஸ் ப்ரெய் காலில் பட்ட அடி காரணமாக, போட்டியில் இருந்து விலகிக்கொள்ள நேர்ந்தது. போட்டி ஆரம்பமாகி முதல் ஆட்டத்தின் அரையிறுதிக்குள்ளாகவே இதன் காரணமாக கண்ணீர் சிந்தியவாறே மைதானத்தைவிட்டு வெளியேறினார். போட்டியின் இரண்டாம் பகுதியில் செக். அணி ஒரு கோல் அடித்தது. சுவிஸ் அணி சிறப்பாக விளையாடியபோதும், இரு முறை கோல் விழும் சந்தர்பங்கள் தவறிப்போனது. போட்டியின் முடிவில் 1 கோலால் செக் குடியரசு அணி வெற்றிபெற்றது.

இனி அகதியாய் வந்த, அந்த வீரன் பற்றி.

91ல் முதல் முதலாக சுவிற்சர்லாந்தில் வேலைக்குச் சென்ற தொழிற்சாலையில் என்னுடன் வேலைக்கு அவனும் வந்திருந்தான். இருவருக்கும் எந்தவிதமான உறவோ, கலாச்சாரத் தொடர்புகளோ, நிற ஒற்றுமையோ இல்லை. ஆயினும் இருவருக்குமிடையில் ஒரு நெருக்கம் இருந்தது. காரணம் அவனும் என்னைப் போன்றே சுவிற்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரியிருந்த அகதி. அந்தக் காலப்பகுதியில் சுவிற்சர்லாந்திலிருந்து பெரும்பாலான அகதிகளின், அரசியல் தஞ்சம் கோரல் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுத் திருப்பியனுப்பப் பட்டுக்கொண்டிருந்தனர். புலம் பெயர்ந்த மண்ணிலும், நிச்சயமற்ற ஒரு வாழ்வு . இது குறித்த கவலையும் பகிர்தலுமே பெரும்பாலும் அவனும் நானும் சந்திக்கும் வேளைகளில் நிறைந்திருக்கும்.
சிலவருடங்களின் பின் மற்றொரு தொழிலிடத்தில் வேறு பணியிலிருந்தபோது, அவனது மனைவி அங்கே பணிக்கு வந்திருந்தாள். அவளிடமும் அதே துயரமும், பயமும், எப்போதுமிருந்தது. அவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரு பிள்ளைகள் . அவர்களது எதிர்காலம் குறித்த அச்சம், எல்லாப் பெற்றோர்கள் போலவும் பெரிதாகவிருந்தது. அந்தக்காலப்பகுதியில், அவர்களது நாடான கோசோவோ நாட்டில் பிரச்சனைகள் சற்று அமைதியுற, அந்நாட்டிலிருந்து வந்த அகதிகளைத் திருப்பியனுப்பத் தொடங்கியது சுவிஸ். இவர்களும் திரும்பிச் செல்ல வேண்டும் எனும் நிலை தோன்றிற்று. கலங்கியவண்ணம் நின்ற பெற்றோர்களின் கையைப் பிடித்த வண்ணம் ஏதுமறியாது சிரித்த வண்ணம் நின்றான் அவர்களது மகன். அவன்தான் சுவிற்சர்லாந்து அணியின் நம்பிக்கை நட்சத்திர வீரர்களில் ஒருவனான Valon Behrami. சிறுவயது முதலே கால்பந்தாட்டத்தில் அதீத ஆர்வம் கொண்டிருந்தவன்.பாடசாலைக் காலத்திலேயே பல போட்டிகளில் பங்குகொண்டு வெற்றியீட்டியவன். வலோனின் சகோதரியும் நல்லதொரு தடக்கள வீராங்கனை.

அந்தப் பணியிலிருந்து விலகிய சில காலங்களின் பின், ஒரு சந்தர்ப்பத்தில் வலோனின் பெற்றோரைச் சந்தித்த போது, தங்களது அரசியல் தஞ்ச மனு,
மேன்முறையீட்டின்போது, பிள்ளைகளின் கல்வி சார்ந்த மனிதாபிமான அடிப்படையில் தங்களுக்கு வதிவிட அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகச் சொன்னார்கள். பிள்ளைகள் பற்றி விசாரித்த போது, வலோன் இத்தாலியில் ஒரு கழகத்துக்காக விளையாடுவதாவும், மகள் தொடர்ந்து படிப்பதாவும் சொன்னார்கள். பிள்ளைகளின் உயர்வின் மகிழ்வ அந்தப் பெற்றோர் முகத்தில் தெரிந்தது.

சென்ற உலகக்கிண்ணப் போட்டிகளின் போது சுவிஸ் அணிக்காக வலோன் விளையாடத் தொடங்கியபோது, அவனது புகழும், நிலையும் முற்றாக மாறியது. அவனது குடும்பத்தின் நிலையும் வாழ்வும் அப்படியே. தங்களுக்கு மறுவாழ்வளித்த இந்த நாட்டுக்கு, தன் மகனின் விளையாட்டு மூலம் நன்றி செலுத்த முடிந்ததையிட்டு பெருமையடைகின்றோம் என அப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் நா தழதழக்கக் கூறினார். இன்று அந்தக் குடும்பத்தின் வாழ்வு மலர்ச்சிபெற்றுள்ளது. அதற்குக் காரணம், வலோனின் விளையாட்டுத் திறமை மட்டுமல்ல, அதுவும் ஒரு தகுதியான அடிப்படைதான் என்றவகையிலும், தங்கள் விருப்தினடிப்படையில் அல்லாது, பிள்ளையின் ஆர்வம் அறிந்து அதன்வழியில், அவனை ஊக்குவித்து வளர்த்த பெற்றோரது நம்பிக்கையும்தான். அது இருக்கும்வரை வளர்வது வலோன் மட்டுமல்ல.....


Thursday, June 05, 2008

பாலபாரதி ,வலைப்பதிவு, இன்னும் சில

"நீண்டநாட்கள் வலைப்பதிவுகள் பக்கம் காணேல்ல..!" எனத் தெலைபேசியில் சயந்தன் கேட்டது உண்மையெனினும், புதிதாக எழுதவில்லையே தவிர, நேரங்கிடைக்கும் போதெல்லாம் வாசிக்கின்றேன்.சில வேளைகளில் எழுதுவதிலும் பார்க்க அதுவே நிறைவு தருவதாகவிருக்கிறது என்பதும் உண்மை. அன்மைக்காலங்களில் சில செய்திகள், பதிவுகள், பார்த்தபோது இதுகுறித்து நாமும் எழுதவேண்டும் என நினைத்ததுண்டு. அவை பற்றிய முழுமையாக இல்லாவிடினும் சிறுகுறிப்பாகவேனும் இன்று பதிவு செய்யலாம் என நினைக்கின்றேன். ஏற்கனவே இப்படிச் சில இடுகைகள் எழுதியிருப்பினும், இன்று எழுதத் தூண்டுதலாயிருந்த பாலபாரதிக்கும், சயந்தனுக்கும் நன்றி. சயந்தனுக்கு கூடவே இனிய 49வது பிறந்தநாள் வாழ்த்துக்கள். :)

வலைப்பதிவுகள் குறித்து, பதிவர் சிந்தாநதியிடம் நான் செவ்வி கண்டபோது, சிந்தா நதி அழகாக் குறிப்பிட்டிருந்தார் வலைப்பதிவுகள் என்பது திறந்து வைக்கும் நமது தினக்குறிப்பு என்று. இது சுவையான அனுபவம், புதிய இலக்கிய வடிவம் என்றும் கூட சொல்லலாம். பிறமொழிகளில் வரும் பெரும்பாலான வலைப்பதிவுகள் இப்படித்தான் உள்ளன. அத்தகைய போக்கில் தமிழில் அவ்வப்போது சிலர் எழுதியிருந்தாலும், பாலபாரதி தனது விடுபட்டவை வலைப்பதிவில் தற்போது திகதிவாரியாக எழுதிவரும் தினக்குறிப்புக்கள் பலருக்கும் பிடித்திருக்கிறது. சுரதாவோடு பேசும்போது, பாலபாரதியின் இந்தத் தொடக்கம் மேலும் பலரை இவ்விதம் எழுதத் தூண்டும், அதுவே வலைப்பதிவுகள் என்பதற்கான முழுமை நோக்கி நமை அழைத்துச் செல்லும் என்றார். உண்மைதான், பாலபாரதியின் தினக்குறிப்புக்கள் மீதான இந்தப்பிடிப்பிற்கு பாலபாரதியின் எழுத்தழகும், அவர் தொடும் சமூகக்கூறுகளும் முக்கியமானவையென்று நினைக்கின்றேன். அவ்விதம் எழுதவிரும்புபவர்களுக்கு பாலபாரதியின் விடுபட்டவை குறிப்புக்கள் நல் உதாரணமாய் அமையட்டும்.

சென்ற சிலவாரங்களுக்கு முன் இலண்டனிலிருந்து ஒளிபரப்பாகும், தீபம் தொலைக்காட்சியில், மலேசியத் தமிழர்கள் சார்பில் அறவழிப்போராட்டங்களை முன்னெடுத்த அமைப்பின், முக்கிய உறுப்பினர் திரு. வேதமூர்த்தி அவர்களின் செவ்வி காணக்கிடைத்தது. செவ்வி கண்ட செய்தியாளர் அனஸ் அவர்களினால் முறையாகத் தொடுக்கப்பட்ட கேள்விகளுக்கு, மிக நேர்த்தியாகப் பதிலளித்திருந்தார் திரு. வேதமூர்த்தி. மலேசியத்தமிழர்களுக்குக் கிட்டாத பல உரிமைகள் பற்றித் தெளிவாக அறிந்து கொள்ள முடிந்தது. நிகழ்ச்சியின் இறுதிப்பகுதியில் நேயர்கள் தொலைபேசிவாயிலாக வேதமூர்த்தியோடு உரையாடினார்கள். உரையாடலில் கலந்து கொண்ட பலர், ஈழத்தமிழர்கள். அவர்களில் பலரும் வேதமூர்த்தியிடம் முன் வைத்த வேண்டுகோள், தயவு செய்து உங்கள் பிர்ச்சனைகளை பேசித்தீர்க்க முயற்சியுங்கள். அதற்கு மேலான ஒருபோராட்டத்திற்கு, குறிப்பாக ஆயுதப்போராட்டத்திற்கு சென்றுவிடாதீர்கள். பட்டவனுக்குத்தானே தெரியும் வலியின் கொடுமை. பேச்சுக்களின் மூலம் தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதுதான் எல்லோர் விருப்பமும், ஆனால் வட்டமிடும், கழுகுகளின் அலகிடுக்கில் ஆயுதமும், கண்களின் தேடலில் பிணங்களும் தானே இருக்கின்றன...இவை கடந்து மலேசியத் தமிழர்கள் வாழ்வு, நன்றென மலரட்டும்.

ஏதோ சில காரணங்களைக்காட்டி நாம் விலக்கிடும் சிலவிடயங்கள் மேலைத்தேயத்தவர்களினால் புதியதாக அறிமுகப்படுத்தப்படும் போது, அட இது நம்மிடம் இருந்ததுதானே எனவியக்கத் தோன்றும். 2006ல் என் மருதநிழல் வலைப்பதிவில் கும்பத்துமால் என்னும் இடுகையில், தென்தமிழீழத்தில் பழக்கதில் இருந்த ஒரு மாந்திரீக விளையாட்டைக் குறிப்பிட்டிருந்தேன். அது பற்றிய பின்னூட்டங்களில் மு.மயூரன், அது தற்போது ஆய்வில் உள்ள ஒரு தொழில்நுட்பம் என்ற வகையில் பின்னூட்டமிட்டிருந்தார். பின்னர் இத்துறைசார்ந்து கல்விபயிலும் என்மகனுடன் உரையாடும்போது, அவரும் அதை உறுதிசெய்தார். இருவரும் இதுபற்றி விரிவாக எழுதும்படியும் கேட்டிருந்தார்கள். எழுதவில்லை. சென்றவாரத்தில் பார்க்கக் கிடைத்தொழில்நுட்பச் செய்தியொன்றில், குரங்கொன்றின் மூளையின் சிந்திக்கும் ஆற்றலில், ரோபோ வின் கை அசைவுறச் செய்யப்படிருக்கின்றது எனத் தெரிவிக்கப்பட்டது. இதுநுட்பத்தின் வெற்றிப்பரிணாமம், விபத்துக்களில் உறுப்புக்களை இழந்தவர்களது செற்கை உறுப்புக்களை, அவர்களது சிந்தனைக்கட்டளைப்பிரகாரம் இயங்கவைக்கமுடியும் என்பதாகும். இந்த நுட்பத்தை அடியொற்றியதாக இருக்கக் கூடிய தென்தமிழீழ மாந்திரீக விளையாட்டில் நேரடியாக இந்தச் செயலைக்கண்ணுற்று வியந்திருக்கின்றேன். இத் தொழில்நுட்பம் தென் தமிழீழத்தில் மட்டும் இருந்ததாகச் சொல்ல மூடியாது. இதன் நீட்சி கேரளாவிலும், ஆபிரிக்காவிலும், கூட இருப்பதாக நண்பரொருவர் சொன்னார். இதுகுறித்து இன்னும் அறியவேண்டும்..

பாரி.அரசு அவர்களின் பதிவில் ஈழத்துச் சாதீயம் குறித்து எழுந்த உரையாடலுக்கு ஈழத்துச் சாதீயப்புரிதல் குறித்து சயந்தன் விரிவான ஒருபின்னூட்டத்தைக் கொடுத்திருந்தார். அதில் ஒருபகுதியில் "இயல்பாகவே யாழ்ப்பாணம் சைவச் சூழலுக்குட்பட்டது. பார்ப்பணர்கள் என்பது தனியே பிராமணர்கள்தான் (பார்ப்பனியம் என்பதை நான் சகல உயர்சாதி மேலாதிக்கங்களினதும் அடையாளம் என்ற நான் விளங்கி கொண்டிருக்கிறேன் )என உணரும் ஒரு யாழ்ப்பாணத்தவர் - பிராமணியத்துக்கெதிரான கருத்துடன் ஒன்றிப் போக அவருக்கு எந்த முகாந்திரமும் இல்லை." எனக் குறிப்பிடுகின்றார். உண்மை. ஈழத்துச் சாதீயப் போராட்டங்களில் பங்கொண்டிருந்தவர்கள் பலரிடமும் இது குறித்த புரிதல் இருந்தது. (கே.டானியல், தெனியான் போன்ற எழுத்தாளர்களின் படைப்புக்களில் கூட அவற்றைக் காணலாம்) ஆனால் அங்குள்ள பிராமணர்களுக்கு இது குறித்த புரிதல் இருந்ததா என்பது சந்தேகம்தான்..

யாழ்ப்பாண நூலக எரிப்புத் தொடர்பான ஆவணப்படம் "எரியும் நினைவுகள்" வெளிவந்துள்ளது. பார்த்த சில நண்பர்கள் சிலரின் கருத்தில், படம் முழுமை பெறவில்லையோ அல்லது அது தொடர்பாக முன்னமே நிறையத் தெரிந்திருந்தமையால், தமக்கு அவ்விதமாகத் தெரிகிறதோ என்பதாகச் சொன்னார்கள். இரண்டும் உண்மைதான். ஏனெனில் என்னிடம் சொன்னவர்கள் ஏலவே இது குறித்து நன்றாகத் தெரிந்திருப்பவர்கள். அவர்கள் அறிந்து கொள்ளப் புதிதாக எதையும் தருவதற்கில்லை.படத்தின் தொகுப்பு வேலைகள் நடைபெற்றபோது பார்த்த எனக்கும் அப்பிடித்தான் இருந்தது. இதற்கும் மேலாக அதன் பாதிப்பை வெளிக்கொணர வேண்டுமாயின், இது குறித்து இன்னமும் உணர்வு பூர்வமாகப் பேசப்பட்டிருக்க வேண்டும். அது சாத்தியமாயிருக்குமெனத் தோன்றவில்லை.( இதுதொடர்பான கருத்துக்களைச் சொல்லலக் கூடிய முக்கியமான பலர் தாயகத்தில் இல்லை) அப்படித்தான் அதன் நெறியாளர் சோமிதரனும் சொல்கின்றார். எப்படியாயினும், முக்கியமான அடக்குமுறைக் குறியீட்டு அழிவினை, பதிவு செய்தவகையில் எரியும் நினைவுகள் முக்கியம் பெறுகிறது. தான் பிறந்த 19 தினங்களில் எரிக்கப்பட்ட ஒரு நூலகத்தின் வரலாற்றை, ஒரு அடக்குமுறை அரசின் கேவலமான முகத்தை, முடிந்தளவில் பதிவுசெய்தமைக்காக சோமிதரனைப் பாராட்டலாம்.

எரியும் நினைவுகள் குறித்து இயக்குனர் சோமிதரனின் செவ்வி.




செவ்விக்கு நன்றி: பெரியார் வலைக்காட்சி

Tuesday, May 06, 2008

ஆமாம்! எங்களால் முடியும்.

" வெளிநாட்டிலிருந்து வாற நம்மட ஆட்கள், சென்னையில் சினிமாப்படப்பிடிப்பு பார்த்து, யாராவது நடிகர்களைப் பார்த்து, கூட நின்றுபடமெடுக்கிறவர்கள், நீங்கள் இன்னும் அப்படி யாரையும் பார்க்கவில்லையா? " சந்தித்த ஈழத்து நண்பன் ஒருவன் கேட்டான். அவனுக்குச் சிரித்துப் பதிலிறுத்தேன்.

அவரது செயல்கள் குறித்து அறிந்தளவில், அவரைச் சந்திக்கும் ஆர்வமிருந்தது. ஆனாலும் எனக்கிருந்த நேரப்பற்றாக்குறையில் நினைத்தபடி செயற்பட முடியவில்லை. அப்படி நான் சந்திக்க விரும்பியவர், தென்னிந்திய சினிமாவில் சண்டைக்காட்சிகளில் வரும் ஓரு ஸ்டண்ட் நடிகனாகத் தொடங்கி, நடனக்கலைஞராக, நடனஇயக்குனராக, நடிகனாகப் பரிணமித்த போதும், நல்ல மனிதனாகத் தன்னை நிலைப்படுத்திக் கொள்ளும், ராகவேந்திரா லாரன்ஸ்.


Larancce Charitable Trust எனும் அறக்கடளையை நிறுவி, அதனூடாக வலுக்குறைந்தோருக்கு வாழ்வளிக்கும் பெரும்பணியாற்றும் லாரான்ஸ், மற்றைய நடிகர்களிலிருந்து எனக்கு வேறுபட்டுத்தெரிந்ததார். சந்திக்க முயன்றபோது, "பாண்டி" படப்பிடிப்புக்காக திண்டுக்கல்லுக்கு அப்பால் நிற்பதாக அறியமுடிந்தது. அவர் திரும்பவும் சென்னை வர மேலும் இருபது நாட்கள் செல்லலாமெனச் சொன்னார்கள். எனக்கு அவ்வளவு நாட்கள் அங்கிருக்க முடியாது. யோசித்துக் கொண்டிருக்கையில், வேறொரு பணிக்காக திருச்சிக்கு உடன் பணிக்க வேண்டியிருந்தது. திருச்சிக்குப் போன பின் முயற்சிக்கலாமெனத் தொடர்பு கொண்டபோது, தொடர்பாளர் நேரே படப்பிடிப்புத் தளத்துக்கு வரும்படி சொன்னார். திண்டுக்கலுக்கப்பால் மலையடிவாரத்தில் படப்பிடிப்பு.

மலையடிவாரத்தில் படப்பிடிப்புக்காக உருவாகியிருந்த கிராமத்துக் கோயிலில் திருவிழா. ஊர் கூடியிருந்தது.துறைசார்ந்தவர்களின் வாகனங்கள் சுற்றி நின்றன. கூட்டத்துக்குள் தொடர்பாளரைக் கண்டுபிடிக்கச் சிரமமாயிருந்தது. மலையடிவாரமென்பதால் செல்லிடத்தொலைபேசி சீராக இயங்கவில்லை. விசாரித்தபோது, லாரண்ஸ்சின் வாகனத்தைக் காட்டி அதற்குப் பக்கதில் இருக்கலாமென்றார்கள். அங்கு சென்ற போது அவரில்லை. ஆனால் இயலாத பிள்ளையொன்றுடன், இயலாமைமிக்கக்குடும்பமொன்றிருந்தது. சற்று நேரத்தில் தொடர்பாளர் வந்தார். கூடவே இன்னுமொரு நாடி வந்த நலிவுற்ற குடும்பமொன்று. அறிமுகப்படுத்திக்கொண்டோம்.

படப்பிடிப்பு மதிய உணவு இடைவேளையில் உங்களை நிச்சயம் சந்திப்பார் எனத்தேடிவந்த அக் குடும்பத்தவர்களுக்கு ஆறுதலாகச் சொன்னார் உகந்த, அந்த உதவியாளர்.. அதற்குப் பின் என்னிடம் மதியஇடைவேளையில் இவங்களப் பார்க்க வேண்டியிருப்பதால், நாங்க இப்பவே சந்திப்போம் வாங்க என என்னை அழைத்துக்கொண்டு படப்பிடிப்புத் தளத்துக்குள் சென்றார். ராஜ்கபூருடன் சண்டை போட்டுக்கொண்டிருந்த லாரன்ஸ், இயக்குனர் 'கட்' சொல்ல, பந்தாவெதும் இல்லாமல் இருக்கையிலமர்ந்தார். தொடர்பாளர் சொன்னதும், மெல்லிதாய் புன்னகைத்து வரவேற்றுக்கொண்டார். அழைக்கும்போது நடிப்பதுவும், பின் நம்முடனுமாகத் தொடர்ந்து, வேண்டியவைகளைப் பேசிக்கொண்டோம். அப்போது தெரிந்தது அவர் ஆற்றுகின்ற, ஆற்றவிருக்கின்ற பணிகளின் விசாலம்.

பிரபலம் பெற்றபின், பிரபலத்துக்காயன்றி, பிரபலத்தினால் பேரம் பேசி, பிரபலமற்ற பலரின் பெரும் பிரச்சனைகளைத் தீர்க்கச் தீர்மானமாகச் செயற்படுமவரின் செயற்திட்டங்கள், பெறுபவர், தருபவர், நம்பிக்கையை வென்றெடுத்து நின்றன. " மஸ்தானா மஸ்தானா " நிகழ்ச்சியில், யாருக்கும் கிடைக்காத ஒரு சந்தர்பத்தை தான் பேசிப்பெற்றுக் கொண்டதன் தொடர்ச்சியாக, மேலும் பலருடன் பேசவும், பலருக்கு உதவவும் முடிந்துள்ளது. முடிந்தவரை முயல்வேன், முயற்சியால் உதவுவேன் என உறுதிபடச் சொல்லும் லாரன்சை நாடித் தினமும், உதவிக்கோரிக்கைள் வந்த வண்ணமேயிருக்கின்றன என உதவியாளர் சொன்னார். விரும்பின் இங்கே சென்று விபரம் அறியலாம், விரும்பின் உதவலாம். விடைபெறும் போது நிறைவாயிருந்தது. நடிகனுக்குள் நல்லிதயம் மிக்கதொரு மனிதன் மறைந்திருந்து சொன்னான், உதவ முடியுமென்று. நானும் சொல்வேன் " yes! We can "

பதம் பார்க்க ஒரு சோறு :-


Sunday, April 27, 2008

சிறைக்குள்ளிருந்து...நெருப்புப் பூக்கள்.



சின்ன வயதில், தென்னம் பொந்திலிருக்கும் பச்சைக்கிளியை கூட்டிலடைத்து வளர்க்கும்போது அப்பா ஏசுவார். கூட்டிலடைத்து வதைக்கவில்லை வளர்க்கின்றேன் எனச் சொல்வேன். பின் அடைபட்ட பொழுதுதொன்றில், அப்பாவின் ஏச்சும், அடைபட்டகிளியின் சோகமும், சுதந்திரமும் புரிந்தது. ஏக்கமும், வலியும், மிக்கதான சிறைவாழ்வு, சிறிலங்கா போன்ற அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்படும் நாடுகளில் மேலும் துயர் தருவதாகும். ஏனெனில் அவை வெறுமனே சிறைச்சாலைகளாக மட்டும் அமைந்து விடுவதில்லை.

சிறைக்கைதிகளின் பகுப்பில் கிடைக்கக் கூடிய உரிமைகளெதுவும், தடுப்புக்காவல் சிறைக்கைதிகளுக்குக் கிடைப்பதில்லை. அப்படியான அவலம் நிறைந்த ஒரு தடுப்புக்காவல் சிறைச்சாலைதான் சிறிலங்காவின் "பூசா" சிறை.
இதன் இறுகிய இரும்புக்கம்பிகளின் பின்னால் இருந்து, தேச உணர்வில் எழுந்த ஒரு கவிக்குரலை, அழகாக அச்சிலேற்றித் தந்திருக்கிறது சுவிஸ் "நிலவரம்" பத்திரிகைக் குழுமம்.


"நான் ஒரு இளையவன். வாழ்பனுபவமற்றவன். கவிதைபற்றிய ஆழ்ந்தறிவு அற்றவன். விடுதலைக்கு ஏகி நிற்கின்ற தேசத்தை உணர்வுகளினால் நேசிக்கின்ற உறவுகளுடன் வாழ்ந்து வருகின்ற நான், அந்த உணர்வுகளின் ஓசைகளையே கவி வரியென்ற நினைவுடன் கோர்த்துள்ளேன். உணர்வுகளின் துடிப்புக்களுக்கு வரிவடிவம் கொடுத்த நான் நிறையத் தவறுகள் விட்டிருப்பேன்..."
இப்படிச் சொல்வது, 2000 மாவது ஆண்டின் தொடக்கத்தில் கைது செய்யப்பட்டு, வழக்கு விசாரணகளின்றி தொடர்ந்தும் தடுப்புக்காவல் கைதியாகப் பூசா சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர் கல்லடி றொபேட். 2005 ல் 'சிறையில் பூத்த உணர்வின் ஒளி' எனும், கவிதைத் தொகுதியைத் தொடர்ந்து, இப்போது வெளிவந்திருப்பது, அவரது இரண்டாவது தொகுதி "நெருப்புப் பூக்கள்".

நீண்டகாலமாகச் சிறைப்பட்டிருப்பினும், சிறைவாழ்வின் துயர்பேசிக் கழிவிரக்கம் வேண்டாது, மண்மீதான காதல், விடுதலைமீதான ஏக்கம், இழந்துபோன வாழ்வின் சோகம், போராட்டத்தின் மீதான தீரம், என்னும் உணர்வுகளே றொபேட்டின் குரலாக சிறைக்குள்ளிருந்தம் வெளிப்படுகிறது.

என் பாட்டனின்
படம்
என்வீட்டு
சாமியறைக்குள்
சிலந்திவலை
பின்னப்பட்ட
நிலையில்
பத்திரமாய்
தொங்குகிறதாம்!.... எனத்தொடங்கி

என் வளவினுள்
இப்போதுதானாம்
ஒரு சிறியதூரம்
மிதிவெடிகள்
அகற்றியுள்ளார்கள்
மிகுதியும்
அகற்றி முடியும்போது...

என் பிள்ளைகள்
என் படத்தை
புலும்பெயர்நாடுகளிலுள்ள
தங்கள் வீட்டு
சாமியறைக்குள் மாட்டி
தங்கள்
குழந்தைகளுக்கு
காண்பிப்பார்கள்
இவர்தான்
உங்கள் பாட்டனென... எனும் கவிதைக்குள் வரும்,
தமிழீழத்தின் சோகக் கதைகள் ஏராளம்.
ஈழத்தின் சோகம் மட்டுமில்லாது,
மனிதநேயம் பற்றியும் றொபேட்டின் குரல் எழுகிறது.
மனிதம் எனும் கவிதையில் அதைக் காணலாம்.

14.08.2006 சிறிலங்கா விமானப்படையின் விமானத்தாக்குதலில் அவயங்களையிழந்த பிள்ளைகளுக்கு, இத்தொகுதியின் விற்பனையில் கிடைக்கும் பணம் , உதவித்தொகையாக அமைய வேண்டும் எனும் றொபேட்டின் பெரு விருப்போடு, அவரது உணர்வின் வரிகளை, சிறையிருந்து வெளிக்கொணர்ந்து வெளியீடு செய்யும் வரையில், கி.பி அரவிந்தன், பத்மநாபஐயர் உள்ளிட்ட பலரது உழைப்பு உடனிருந்திருக்கிறது. ஒடுக்கப்பட்டு, அடைக்கப்பட்டிருக்கும், ஒரு தடுப்புக்காவல் கைதியின் இத்தகைய செயற்பாடு, அவனுக்கு எத்தகைய பாதமான நிலையைத் தருமென்பதைத் தெரிந்திருந்தும், தன் குரலை உயர்த்தி ஒலித்திருக்கும் றொபேட்டின் 'போய்விடுங்கள்' கவிதைக்குள், அமெரிக்கச் சிப்பாய்களை எதிர்ப் பாடிய பொப்மார்லி யும் ஓரத்தில் ஒளிந்திருப்பதைக் காணமுடிகிறது.

பிரபலங்களின் எழுத்துக்களினால் பணம் பண்ணவும், பணத்தினால் பிரபலம் பண்ணவும் விழையும் சூழலில், சிங்களப்பேரினவாதத்தின் சித்திரைவதைச் சிறையுள்ளிருந்து, ஈழக்குயிலொன்றின் விடுதலைக்குரலை வெளிக்கொணர்ந்த அனைவரையும் பாராட்டலாம்.

Thursday, April 17, 2008

நா.உச்சம், அ.நா.எச்சம்.

இது என்ன தலைப்பு என்று எண்ணத் தோன்றுகிறது. அதுதான் சென்ற இடுகையிலேயே இந்தத் தலைப்புக் கொடுத்தாயிற்றே. .. எதற்கும் விரிவாக இன்னுமொருமுறை இங்கே இட்டுக்கொள்வோம்.

நாகரீகத்தின் உச்சமும், அநாகரீகத்தின் எச்சமும்.



சரித்திரப்புத்தகங்களைப் பாடமாகப் படித்திருந்த போதும், வெள்ளைக்காறனெல்லாம் படித்தவன், விவரம் தெரிந்தவனென்ற நினைப்பு, புலம்பெயர்ந்து வரும் வரைக்கும், மனதில் எங்கோ ஓர் மூலையில் கொஞ்சம் ஒட்டிக்கொண்டுதானிருந்தது. வந்தபின் நேரில் பெற்ற அனுபவங்கள் நிறைய அறியத் தந்தன. எங்கள் நிலங்களுக்கு வந்து கோலோச்சியவர்கள் ஒன்றும் கோமகன்கள் இல்லை, கடற்கொள்ளையர்களாகவும், அடியாட்களாகவும், வாழ்ந்தவர்களின் வாரிசுகள்தான் என உறைத்தது.

ஏறக்குறைய இறப்பு நிலைக்கு வந்துவிட்ட ஒரு நோயாளி, யாரோ ஒருத்தர் வருகைக்கான கனங்களைக் கழிக்கும் நிலையிலிருந்த போதும், தன வாழ்வின் எழுச்சிமிகு நிலைகளை எண்ணிப்பார்த்து மகிழ்ந்து, ஏங்குவது போலிருந்ததது அந்தப் பெரும் அரங்கைப் பார்க்க. Coliseum என்பதற்கு அகாராதியில் பேரரங்கம் எனப் பொருள் வந்தது. அகண்ட பெரும் ரோமானிய சாம்ராஜ்யத்தின் ஆடம்பர களியரங்கு அது. ஆனால் ரோம சாம்ராஜ்யத்தின் எதிரிகளுக்கு உண்மையில் அது கிலியரங்கு.



வாகனத்தைவிட்டு இறங்கியதுமே, வான்முட்ட உயர்ந்து நிற்கும் அந்த கலையரங்கின் பிரமாண்டம் உசுப்பியது. உள்ளே நுழைவதற்கு வரிசையில் காத்திருந்த போது, இந்த பிரமாண்டத்தை எந்தக் கோணத்தில் படப்பெட்டிக்குள் பதிவு செய்யலாம் என எண்ணத்தோன்றியது. சோழ சாம்ராஜ்ய உச்சத்தின் எச்சமாக இருக்கக் கூடிய தஞ்சைப்பெருங்கோயிலுக்கு முன்னால் நின்றபோதும், இந்த அவா என்னுள் வந்திருந்தது.


அழிந்து போன நிலையில் இருக்கின்றபோதிலும் கூட, ஒவ்வொரு பக்கத்திலும் ஏதோ ஒருவித அழகைக் கொட்டிவைத்த வண்ணமேயிருக்கிறது.
சும்மா சுற்றிப்பார்த்து வருகையிலேயே அரைநாட்பொழுதினை அப்படியே பறித்தெடுத்து விடுகிறது அந்தப் பிரமாண்டம். சந்தேகமில்லை, கலையின் நயம் தெரிந்தவர்களும், நயக்கத்தெரிந்தவர்களும் இணைந்த இணைவில் பிறந்திருக்கிறது அந்தக் கலையரங்கு. கலைகளின் வரைபுயர்வில், நாகரீக உச்சம் தொட்ட இனத்தவர்களாக வாழ்ந்தவர்கள் பட்டியலில் அடங்குபவர்கள் ரோமானியர்கள். இருந்தென்ன, மனித மான்பு மறந்து, சகமனிதனின் வலியை, சாவை, குரலெழுப்பி ரசித்து, கொண்டாடியிருப்பதை அறியும்போது, 'அடப்பாவிகளா' என அரற்றிவிடுகிறோம்.

எதிரிகள், கைதிகள், குற்றவாளிகள் என வகைபிரித்து வைத்து, மனிதனை மனிதன் தாக்கிக் கொல்வது, மனிதனை மிருகத்துடன் சண்டையிட வைத்துக் கொல்வது, என வகைவகையாய் வதைகள் செய்வதை, ஊர்கூடி ஒய்யாரமாக ரசித்திருந்த நாகரீகத்தை என்னவென்று சொல்வது. ' ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளையொக்கும் ' எனத் தமிழில் ஒரு முதுமொழியுண்டு. இது உண்மையென்றே சொல்லத் தோன்றுகின்றது இடிந்து போய்கிடக்கும் ரோமானியச் சிதிலங்களைப் பார்க்கும்போது.

மிருகங்கள் வளர்க்கப்பட்ட கூடுகள், மிருகங்களாய் அடைக்கப்பட்ட மனிதர்களின் குறுங்கூடங்கள், அடித்தளத்தில். அதன் மேலாக ஆடுதளம், அல்லது கொலைக்களம். அதற்காப்பால் விரிந்துயரும், விருந்தினர், பார்வையாளர், அமர்தளங்கள். அனைத்தையும் அழகியகலை நயத்துடனும், அதிநுட்பத் தொழிற்திறனுடனும், இவையெல்லாவற்றுக்கும் மேலாக , எண்ணிட முடியா இடாம்பீகத்துடனும், கட்டிமுடித்து, கலை ரசிக்காது கொலை ரசித்த சக்கரவர்த்திகள், அங்கே கதறியழுத ஒவ்வொருத்தன் கண்ணீரும், தங்கள் இராச்சியங்களின் காரைகளை பெயர்த்தெடுக்குமென்று கனவிலும் நினைத்திருக்கமாட்டார்கள்.

பாதாளச்சிறைகளின் நிலங்களில் இப்போ பசும்புல் முளைத்திருந்தாலும், பார்வையாளர் பலர் தினமும் பாரத்துருகிப் போனாலும், உள்ளிருந்து வெளிவருகையில், எங்கோ ஓர் மூலையில் யாரோ அழும் ஓலம் சன்னமாய், அவலமாய், கேட்கிறது. சாடையாக நமது சரீரம் நடுங்குகிறது. ஜெபமும் சபிப்பும் ஒன்றையொன்று துரத்திப்பிடித்து விளையாடுகிறது. எதுவானாலும், எங்கள் முன்னோர் இப்படித்தான் இருந்தார்கள் என, ஒழிவு மறைவின்றி, ஒப்புக்கொடுக்கின்றார்களே, அவர்கள் மனிதர்கள்.

Sunday, March 30, 2008

நாகரீகத்தின் உச்சமும், அநாகரீகத்தின் எச்சமும்.

சென்ற வார இறுதி முதல், இவ்வார இறுதிவரை, வெளியூர் வாசம். இந்தக் காலப்பகுதியில் கண்டுணர்ந்த அநாகரீகத்தின் எச்சம் பற்றிப் பேச விருப்பம். ஆனால் இன்றல்ல.. மனங்களைத்த தருணமாகவிருக்கிறது. மறு இடுகையில் அது பற்றிப் பேசலாம். அதற்கு முன், நிறைவான ஒன்றுபற்றி இன்று. ஆக இது அடுத்த இடுகைக்கான ஒரு முன்.... அவ்வளவே. :)





பூப்பெய்தும் காலம்.



இந்தத் தலைப்பு யோசிக்கப்பட்டபோதே, இதன் எதிர்வுகள் பற்றியும் சிந்திக்கப்பட்டது. ஆனாலும் நிறைவில் அதுவே பொருந்தியுள்ளது.

ஆம், சுவிற்சர்லாந்தின் முதலாவது தமிழ் நீள் திரையோவியம், " பூப்பெய்தும் காலம்" திரையிடலுக்குத் தயாராகியுள்ளது.





புகலிட வாழ்வியலில், தடைகள் பல தாண்டி, வெற்றிச்சிகர முகடுகள் தொடும், வாலிபக்கதைகள் பல. அதில் ஒரு கதையிது. சுவிற்சர்லாந்து வாழ் தமிழர்களின் கொதிநிலை வாழ்வின் பிம்பமாக, ராப், ஹிப்ஹொப், இசைவழியிணைந்து திரை வழி விரிகிறது கதை.



சுமார், ஒரு மணித்தியாலம், முப்பது நிமிடங்கள் வரையில், திரையில் காட்சியாகும் இத்திரையோவியத்தில், சுவிற்சர்லாந்தின் இளந்தலைமுறைக் கலைஞர்கள் பலரும், வண்ணம் சேர்த்துள்ளார்கள். இசையும் வாழ்வுமாக வரும் கதையினை ஏ.ஜி. யோகராஜா எழுத, எஸ். இரமணன் நெறியாள்கை செய்ய, ஈழத்துத் தமிழ்திரையுலகப் பெருமைமிகு கலைஞர்களான, மூத்த கலைஞர் திரு.இரகுநாதன் அவர்கள் முக்கிய பாத்திரமொன்றிலும், சிறந்த நெறியாளராக தன் படைப்புக்களினூடு நிறுவிய திரு.கா.ஞானதாஸ் முதன்மை படைப்பு நெறியாளராகவும், பங்குகொண்டு அணிசேர்த்துள்ளார்கள்.



ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, இசையமைப்பு, நடிப்பு, மற்றும் அனைத்துப் பகுப்புக்களிலும், சுவிஸ்வாழ் இளையதலைமுறைக்கலைஞர்கள் பங்குகொள்ள, "பூப்பெய்தும் காலம்" திரையோவியத்தை, சுவிற்சர்லாந்தில் தமிழ்மொழியில் முதலாவது நீள்திரையோவியம் எனும் சிறப்போடு ஏப்ரல் மாதம் 5ந்திகதி, காலை.10.30 மணிக்கு, Bern, KINO ABC, திரையரங்கில், 'தமிழ் சினி சேர்க்கிள்' முதல் திரையிடலை நிகழ்த்துகிறது.



சுவிற்சர்லாந்தின் முதலாவது தமிழ் குறும்படமான " முடிவல்ல.." தயாரிப்பில் சுயம் படைப்பகத்தின் சார்பிலும், சுவிற்சர்லாந்தின் முதலாவது தமிழ் நீள் படமான " பூப்பெய்தும் காலம்" தயாரிப்பில், தமிழ் சினி சேர்க்கிள் சார்பிலும், நண்பர்கள் யோகராஜா, ரமணன், ஆகியோருடன் இணைந்த மகிழ்வில் திரையிடல் காண, வரமுடிந்த நண்பர்கள் அனைவரையும் வருமாறு அழைக்கின்றோம். வாங்கோ..!


மேலும் வாசிக்க இங்கே மற்றொரு செய்தியுண்டு.

Wednesday, March 19, 2008

பூவைப்போல புன்னகை காட்டு

இரண்டு வருடங்களுக்கு முன் இந்த மாதத்தில்தான வலைப்பதிவுகளில் எழுத வந்தேன். குறிஞ்சிமலர்தான் எழுதத்தொடங்கிய முதல்வலைப்பதிவு. அதன் ஆரம்ப அறிமுக இடுகைகளைத் தவிர்த்துப் பார்த்தால், இது குறிஞ்சிமலரில் நான் எழுதும் நூறாவது இடுகை. சற்றுத்திரும்பி, எழுதியவைகளை வாசித்துப் பார்க்கையில் என்னளவில் எனக்கு நிறைவாக இருக்கிறது. ஏனெனில் எனது இடுகைகளினால் யாரும் காயம் பட்டிருக்க முடியாது. எல்லோர்க்கும் நல்லவனாக இருக்கவேண்டும் என்ற சித்தாந்ததில் என் கருத்துக்களை முடக்கிக் கொண்டேன் என்றும் சொல்ல முடியாது. என்னால் என் கருத்துக்களைக் கொஞ்சமேனும் தெளிவாகச் சொல்ல முடிந்திருக்கிறது என்னும் நிறைவோடு....





" CHRIGU ". 21 வருடங்களில் இவ்வுலகைவிட்டுப் பிரிந்தவனின் கதை. இசையும் கலையுமென வாழ்ந்த ஒரு இளைஞன், தான் சாவைச் சந்தித்த தருணங்கள் வரை பதிவு செய்த வரலாற்றுப்பதிவு. வாழ்வில் சாதிக்க நினைத்ததைச் சாவில் சாதித்துக் காட்டியவனின் சரிதம்.


கிறிஸ்டியன்... அதுதான் அவனது பெயர். சுவிற்சர்லாந்தின் ஜுரா மாநிலத்தைச் சேர்ந்தவன். இளைஞனாக வளர்ந்தபோது இசையில் நாட்டம். இயல்பாக ஒளியைப் பதிவு செய்ய விருப்பம். அதனால் ஒரு ஒளிப்பதிவுக் கலைஞனாக உருவாகிக்கொள்கின்றான். எப்போதும் கூடவே ஒளிப்பதிவுக்கருவி. அது கருவி அல்ல அவனது மூச்சுப்பை என்றும் சொல்லலாம். இந்தியாவிலும், எகிப்திலும், கொட்டிக்கிடக்கும் கலைப்பொக்கிசங்கள் எந்தவொரு கலைஞனுக்கும் பிடித்தமானதுதானே?. இவனுக்கும் பிடித்திருந்தது. அங்கெல்லாம் சென்றான். அத்தனையையும், தன் விழிவழிப் பார்வைகளால் பதிவாக்கினான். நண்பர்களுக்குக் காட்டி மகிழ்ந்தான். காட்சிப்படுத்தலினால் இந்த உலகை, ஒருநாள் கவர்வேன் என்றான்....



இரத்தப்புற்றுநோய் கிறிஸ்டியனுக்கு. எத்தனையோ விருப்பங்கள், எத்தனையோ கனவுகள், என்றிருந்த அந்த இருபதுகளில் நின்றவனுக்கு இப்படியொரு வருத்தம் என்றதும், அதிர்ந்து போனான். ஆட்டம், பாட்டு, என மகிழ்ந்து திரிந்தவனுக்கு, மரணத்தின் சைகை தெரிந்தபோது...நொடிந்து போய்விட்டான். கையிலிருந்து கமெரா நழுவிக்கொண்டது. கூடவே திரிந்த நண்பர்கள் உடைந்துபோனார்கள்...

மரணம். அனைவர்க்கும் சர்வ நிச்சயமானது. அதை வெற்றிகொள்ளவேண்டும். கிறிஸ்டியன் அதை வெற்றிகொள்ள வேண்மென விரும்பினான். நண்பர்கள் கமெராவைக் கைகளில் எடுத்துக் கொடுத்தார்கள். எப்போதும் போல் உன் இறுதிக்கணங்கள்வரை, உன் எண்ணங்களைப்பதிவு செய். உன் உணர்வுகளை, வலிகளைப் பதிவு செய். உன் உள்ளத்தின் குரலைப் பதிவு செய் என உற்சாகமூட்டலை உள்ளிருந்தும், உடனிருந்தும் பெற்றான். சோர்ந்து போனவன் நிமிர்ந்தெழுந்தான். தன் கமெராக்காதலியை இறுகப்பிடித்தான். இறுதிக்கணங்கள்வரை.. தன் எண்ணங்களை, வண்ணங்களை, வலிகளைப்பதிவு செய்தான். பதிவுசெய்தவாறே படுத்துறங்கிப்போனான்....

மீளாத்துயிலில் ஆழ்ந்துபோனவனின் சாம்பலோடு, அவன் நேசித்த இந்தியநதிகளின் கரைகளுக்கு அவன் நண்பர்கள் வந்தனர். குளிர்ச்சி மிக்கதென வியந்து அவன் இரசித்த நதிகளின் நீரோட்டத்தில் சாம்பலாய் அவனைச் சங்கமிக்க வைத்தனர். கிறிஸ்டியன்! உன் ஆசையை, நேசிப்பை நாமறிவோம். ..கொண்ட நட்பின் பேரால் நாமதைத் தொடர்வோம் என சபதமெடுத்தனர். நதிகளின் வெள்ளத்து நுரைப்பில் கிறிஸ்டியன் சிரித்து விடைபெற்றான்....

ஜான் காஸ்மான். கிறிஸ்டியனுடைய நண்பன். கிறிஸ்டியனின் கனவுக்கு வடிவு கொடுத்தவன். மரணத்தின் பின்னும் அவனுக்கு வாழ்வு கொடுத்தவன். கிறிஸ்டியன் பதிவு செய்த எண்ணங்களை, வண்ணங்களை, வலிகளை, எடுத்துப்பார்த்தான். குடும்பம், நண்பர்கள், குதுகலம், நோய், வலி, தெளிவு, என பலபரிமாணங்கள் 120 மணித்தியாலங்களுக்கும் மேலாக ஒளிச்சுவடிகளில் பதிவாகியிருந்தன. அத்தனையையும் உற்று நோக்கி, ஒற்றியெடுத்து வடித்தபோது, 21 வயதுவரை வாழ்ந்த இளைஞனின் தனித்துவமான கதை, காவியமாக திரைகளில் தெறித்தது. அதுதான் " CHRIGU "......

உலகத்திரைப்படவிழாவில் தன் ஒளிப்படைப்பால் உலகைக்க கவரவிரும்பிய கிறிஸ்டியனின் விருப்பம், வாழ்வின் பின்னால் நிறைவேறியது. நண்பன் ஜான் காஸ்மானின் படத்தொகுப்பில், Mundartisten - இசைக்குழு நண்பர்களின் இசையில், இறப்பின் பின்னும் எழுந்து நடந்தான் கிறிஸ்டியன். உலக அரங்கின் சுவர்களில் உயர நின்று, சாதித்துவிட்டான். ஆம், " CHRIGU " 57 பேர்லின் சர்வதேச திரைப்படவிழாவில் கலந்து கொண்டு விருதுபெற்றது. தொடர்ந்து மேலும் பலவிருதுகளைப்பெற்றுக்கொண்டிருக்கிறது. அதன் விளம்பரஅறிவுப்புக்களில் நின்று கிறிஸ்டியன் சிரித்தபடி கேட்கின்றான், "மரணத்தை வென்றுவிட்டேனா..?"



திரைகளிலும், திரைப்படவிழாக்களிலும், கலந்துகொண்டபின், மார்ச் மாதம் 27ந் திகதி முதல் ஒளித்தகடுகளில் வருகின்றான் கிறிஸ்டியன். இந்த வெற்றிக் காவியத்தில் வரும் இந்தியக் காட்சிகளுக்கு, இசையணி சேர்த்திருப்பவன் ஒரு ஈழத்துநண்பன்.

----------------------------------------------------------------------------







வலைப்பதிவுலகில் தன் வலிகளைப் பதிவு செய்பவர்களில், இதே தன்மையில் தன்வலிகளை கேன்சருடன் ஒரு யுத்தம் எனப் பதிவுசெய்யும் தோழி அனுராதாவின் பதிவினைப் பாராட்டாமல் இருக்க முடியாது. அனுராதாவின் பதிவைச் சங்கமம் விருதுக் குழுமம் சென்ற ஆண்டின்சிறந்த அனுபவப் பதிவாக தெரிவுசெய்து கெளரவப்படுத்தியிருக்கிறது. மிகச்சிறந்த இத்தெரிவினை மேற்கொண்ட சங்கம் குழுமத்தினர்க்கும், நடுவர்களுக்கும், பாராட்டுக்கள். உடல்உபாதையால், உளச்சோர்வால், தளர்ந்துபோயிருந்த அனுராதா, இத்தெரிவினால் மீண்டும் உற்சாகம் பெற்றுள்ளார். வலைப்பதிவர் தோழி அனுராதா அவர்களுக்கு, அவரது முயற்சிக்கு, அவரது வெற்றிக்கு, அவரது உயிர்ப்புக்கு, அர்பணிப்பாக, இவ் இடுகையும், இப்பாடலும். தோழி! பூவைப் போல புன்னகை காட்டு.






பாடலுக்கான நன்றிகள்: தமிழீழ தேசிய தொலைக்காட்சி, மற்றும் போராளிக் கலைஞர்கள்.

கிறிஸ்டியன் படங்களுக்கான நன்றிகள்: CHRIGU தளம்.

Sunday, March 16, 2008

பாரதியாரின் ஞானகுருவான யாழ்ப்பாணத்துச் சுவாமிகள்.

"பாரதியாருக்கு குருவாக இருந்த யாழ்ப்பாணத்துச் சுவாமிகளின் சமாதி, இங்க பக்கத்திலதான் இருக்கு. பாக்கப்போறீங்களா சார்? " சிறி வில்லிப்புத்தூரிலிருந்து புறப்படுமுன் வாகனச்சாரதி கேட்டார். ஆச்சரியமாகவும், அறியப்படாததுமாக இருந்தது அவர் சொன்ன விடயம். இந்தியப் பயணங்களில் நமக்கு முதலில் வந்து வாய்க்கவேண்டும் நல்ல வாகனச்சாரதி். என்னதான் வெளிநாட்டுவேகவீதியில் கடுகதி ஓட்டிகளாக நாம் இருந்தாலும், இந்தியாவிலோ இலங்கையிலோ வாகனம் ஓட்டுவதென்பது கதிகலங்கிப்போகும் விடயம். நல்ல சாரதி, கூடவே கொஞ்சம் விசயம் தெரிஞ்சவராகவும் அமைந்துவிட்டால், அதுவே பார்த்தசாரதி வந்ததுபோலாகிவிடும். இம்முறையும் வழமை போலவே நல்லதொரு சாரதி வந்தமைந்தார். அவர்தான் மேற்சொன்ன கேள்வியைக்கேட்டார்.



"போகலாமே.."

வில்லிப்புத்தூர் பிரதான சாலையிலிருந்து வாகனம் திரும்பி சிறு பாதைகளினூடு சென்றது. பாரதி எல்லோர்க்கும் ஈர்ப்புடைய சொல். அவரை ஈர்ந்த நம்மூர்க்காறர் யாராக இருக்குமெனும் சராசரியான ஆர்வத்துடனிருந்தேன்.







மாலை மங்கிய பொழுதில் அந்த சமாதிக்கோவிலின் முன்பாகச் சென்றடைந்தோம். சிலர் முன்னாலிருந்த கிணற்றில் குளித்துக்கொண்டிருந்தார்கள். சமாதிக்கோவில்களுக்குரிய அமைவோடிருந்த சிறிய ஆலயத்துள் சிவலிங்க வழிபாடு நடைபெற்றுக் கொண்டிருந்தது. சூழலை ஆர்வமாய் பார்த்த போது தென்பட்ட விடயங்களைப் படமாக்கினேன்.

பாரதியாரின் உளங்கவர்ந்த யாழ்ப்பாணத்துச் சுவாமிகள்.


யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் குறித்து சுவரிலே எழுதப்பட்டிருந்த புகழ்மாலை.



அவரது இந்நினைவாலயத்தை புதுப்பித்தமை குறித்து சுவரில் காணப்பட்ட பதிவெழுத்து.

பொதுவாகத் தமிழகத்தில் ஏலவே, நல்லை. ஆறுமுகநாவலர், நல்லை ஆதீனம் சுவாமிநாத தம்பிரான் சுவாமிகள் ஆகியோர், யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் என்றே விழிக்கபட்டிருப்பதை அறிந்திருக்கின்றேன். ஆனால் இங்கே படத்திலிருக்கும் யாழ்ப்பாணத்துச் சுவாமிகளின் தோற்றம் அவர்களைச்சுட்டுவதாக அல்ல. அப்படியாயின் இவர் யார்? இவர்குறித்த விபரங்கள் ஏதாவது யாருக்காயினும் தெரியுமா என்பதை அறிய விரும்புகின்றேன்.

இங்கு பதிவெழுத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் கலாநிதி: க. குணராசா குடும்பத்துடன் தொடர்புபட்டவரென்பதன் காரணமாக, யாழ்ப்பாணம் கடையிற்சுவாமிகளுக்கும் இவருக்கும் ஏதாவது தொடர்பிருக்குமா எனவும் எண்ணத் தோன்றுகின்றது.

சென்றநூற்றாண்டில் தமிழ் கூறு நல்லுலகின் பெருமைக்குரு கவிஞனாகவிருந்த பாராதியாரின் சிந்தைகவர்ந்த குருவாக விளங்கினார் என்பதுவே முதன்மைக்காரணமாக, மேலும் இவர் பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வம் எழுகிறது. தெரிந்தவர் மேலும் சொல்க...

Thursday, March 13, 2008

கிருஷ்ணா கிருஷ்ணா, அமீர்கான்

தமிழகத்தில் நண்பர்களைச் சந்தித்த போதுகளில், பல விடயங்கள் பேசினோம், பார்த்தோம், படித்தோம். புத்தகங்கள் வாங்கவில்லையா? என்ற போது, பயணப்பொதிப்பாரத்தைக் கணக்கில் வைத்து சுருக்கமாகச் சிறந்ததாக சிலவற்றை வேண்டலாம் என்றேன். ஒலிப்புத்தகம் பற்றிய என் விருப்பத்தைச் சொன்ன போது, நண்பரொருவர் இந்திரா பார்த்தசாரதியின் "கிருஷ்ணா கிருஷ்ணா" நாவலைக் குறிப்பிட்டார். இந்திரா பார்த்தசாரதியின் எழுத்துக்களில் காணப்படும் மறுபக்கத்தன்மை என்றும் என் விருப்பத்துக்குரியது. கிழக்குப் பதிப்பகத்தின் வெளியீடாக MP3 ஒலிக்கோப்பாக வந்துள்ள பதிப்பில், இந்திரா பார்த்தசாரதியின் எழுத்துக்களுக்கு குரல்வடிவம் தருபவர் ரேவதி சங்கரன். ரேவதி சங்கரன் நல்லவொரு கதை சொல்லி. இயல், இசை, நடிப்பு கலந்து கதைசொல்வதன் மூலம், கிருஷ்ணனனை சமுதாயக்கனவாக இந்திரா பார்த்தசாரதி எழுத்தில் வடித்ததை நன்றாகவே பதிவுசெய்கிறார். நீண்டதூர வேகவீதிப்பயணியாக அதிகம் பிரயாணம் செய்யும் என்னைப் போன்றவர்களுக்கு இந்த ஒலிப்புத்தக வடிவு, நல்ல வழித்துணை. இவை எல்லாவற்றுக்கும் மேலாக 'கிருஷ்ணா கிருஷ்ணா' வில் இந்திரா பார்த்தசாரதி காட்டும் கண்ணன் எனக்கு மிக நெருக்கமாக வந்து போனான்.

பகல்பொழுதொன்றில் படம் பார்க்கக் கிடைத்த சந்தர்ப்பத்தைச் சொல்ல, 'தாரே சமீன் பார் ' பாருங்கள் எனத் தொலைபேசியில் கண்டிப்பாகச் சொல்லிவிட்டார் மற்றொரு நண்பர். ஹிந்தித் திரைப்படங்களில் அவ்வளவு ஆர்வமில்லாவிடினும், குறிப்பிட்டுச் சொன்ன நண்பர் குறைத்து மதிப்பிட முடியாதவர். சத்யம் தியேட்டர் வாசலில் தொற்றிக் கொண்ட தெரிந்தவர் ஒருவரின் சிறையெடுப்பில் சிக்கி உள்ளே போய், இரண்டு மணிநேரமாக வடிவேலுவின் சித்திரவதையில் நொந்து நூலாகிப்போனேன். பார்த்தது 'இந்திரலோகத்தில் நா. அழகப்பன்' என்று வேறு சொல்லவும் வேண்டுமா?. பாதிவழியில் சேர்ந்து சிறைபிடித்த நண்பர் சிரித்தவண்ணமாய் படம்பார்திருக்க, இதற்காக போனீர்களெனத் திட்டப்போகும் சீரியஸ் நண்பரின் சீற்றம் குறித்து சிந்தித்த வண்ணமே பார்த்திருந்தேன்.



முதல் முயற்சி தோல்வியில் முடிந்தாலும், மற்றொருமுறை முயற்சித்ததில் ' தாரே சமீன் பார்" பார்க்கக் கிடைத்தது. பார்க்கச் சொன்ன நண்பா, நன்றி. இது பற்றி இணையத்தில் நண்பர்கள் நிறையவே சொல்லி விட்டார்கள். ஆரம்பம் முதல் இறுதிவரையில் பல பல விடயங்கள் அசரவைத்தன. இன்னும் சில தடவைகள் பார்க்க வேண்டும். அந்தச் சிறுவன் இன்னும் கண்ணுள் நிற்கின்றான். அமீர்கான் பற்றி எனக்கு முன்னர் பெரிதாக அபிப்பிராயம் இல்லாதபோதும், இந்தப்படத்தின் மூலம் சில எண்ணங்கள் எழுந்தன.
சத்யம் திரையரங்கு தரமான திரையரங்காக இருக்கிறது. ' இந்திரலோகத்தில் நா. அழகப்பன் ' பார்த்தபோது, உடனடியாகவே படம் ஆரம்பித்தது. ஆனால் ஹிந்திப்படத்தின் முன் தேசியக்கொடியும், தேசிய கீதமும் திரையிலும் ஒலியிலும் வந்தன. திரையரங்கே எழுந்து நின்று மரியாதை செய்தது. இதமாயும், ஏக்கமாயும் இருந்தது. ....
நாமும் ஒரு நாள் எழுந்து நிற்போம்




- இன்னமும் சொல்லலாம்








































Monday, March 03, 2008

இத்தாலிய மொழியில் இந்தியத் தத்துவார்த்தம்.

உங்களை மற்றொருவருடன் ஒப்பீடு செய்வதனால், எழுகின்ற சங்கடங்களில், உங்கள் சுயத்தை இழக்கிறீர்கள். சுயமிழக்காது, நீங்கள் நீங்களாகவே இருக்க முற்படுங்கள்.
- ஜே.கே


இந்த வருட ஆரம்பத்தில் ஒரு நாள் மாலை,

"அப்பா புத்தாண்டுக்கு எனக்குக்கிடைத்த அன்பளிப்புப் பணத்தில், வாசிக்க ஒரு புத்தகம் வேண்டினேன்" என்றாள் என் பெண்.

என்ன புத்தகம்? என்பதற்கு முன்னதாகவே என்ன விலை? என்ற கேள்விதான் என்னிடமிருந்து முந்திக் கொள்கிறது.

"ஐம்பது பிராங்.."

"ஐம்பது பிராங்குக்குப் புத்தகம் வேண்டினாயா..?" மனம் பெருக்கல் வாய்பாடுகளில் கணக்கிடுகிறது.

"ஏன்? நூலகத்தில் எடுத்து வாசிக்க முடியாதா?.." ஆற்றாமையில் கேட்கின்றேன்.

"எடுக்கலாம். ஆனால் இது அப்படியில்லை. இந்தப் புத்தகம் எங்கள் வீட்டில் இருக்க வேண்டும். எல்லோரும் வாசிக்க வேண்டும்."

"அப்படியென்ன அற்புதமான புத்தகம்...?"




"Saggezze"

365 pensieri di maestri dell' india


இந்திய தத்துவார்த்திகளின் 365
"பொன்மொழிகள்" (உயர் சிந்தனைகள்)


எனத் தலைப்பிடப்பட்ட அழகான அட்டையுடன் கூடிய புத்தகத்தைக் கொணர்ந்தாள். இந்தியத் தத்துவார்தங்கள் குறித்து பல்வேறு மொழிபெயர்புக்கள் பல்வேறு மொழிகளிலும் வந்துள்ளன. இதிலென்ன முக்கியத்துவம் என்றெண்ணத் தோன்றும். அப்படி மொழிபெயர்க்கப்பட்ட புத்தகங்களுக்கும் இதற்குமிடையில் மிக முக்கிய வித்தியாசம் உள்ளது என்றே எண்ணத் தோன்றுகிறது.


பொதுவாகவே தத்துவார்த்த மொழிபெயர்ப்புக்களைத் துறைசார் அறிஞர்கள், ஆர்வலர்களே வாசிப்பது அதிகம். ஆனால் இந்தப்புத்தகம் இளையவர்கள் நாள்தோறும் வாசிக்கும் சிறு குறிப்புக்கள் கொண்ட தினக்குறிப்புப் புத்தகமாக இருந்தது. விரித்துப்பார்த்தேன், வியந்துபோனேன்.

ஜே.கிருஷ்ணமூர்த்தி, ரவீந்திரநாத் தாகூர், மகாத்மா காந்தி, கெளதமபுத்தர், விவேகானந்தர், அரவிந்தர், ரமணர், எனப் பல இந்தியதத்துவார்த்திகளின் சிந்தனைகள், சிறுசிறு குறிப்புக்களாக, குறுகத் தறித்த குறள் போன்று, இரண்டு முதல் நான்குவரிகளில் தினத்துக் கொன்றாக் தொகுக்கப்பட்டிருந்தது. அதற்கும் மேலாக இளையவர் முதல் பெரியவர் வரை லயித்தும் போகும் வண்ணம், இந்திய வாழ்க்கைப்பின்னணியிலான அதியற்புதமான புகைப்படங்கள் ஒவ்வொரு பக்கத்திலும். தத்துவார்த்தக்கருத்துக்களை எளிமையாகவும், அழகாகவும், தொகுத்திருந்தார்கள்.
"கண்டிப்பாக இருக்க வேண்டிய புத்தகம் தான்..." என்றேன். பெருமிதமானாள் பெண்.

எங்கே விற்பனையாகின்றது எனத் தெரிந்து கொண்டு, விற்பனை நிலையம் சென்றபோது, ஒருபெண்மணி அதே புத்தகத்தில் அதிக பிரதிகளை வாங்கிக் கொண்டிருந்தாள்.
"ஏன்..இவ்வளவு தொகையாக வாங்குகின்றீர்கள் ?" கேட்டேன்.
"இம் முறை என் பிள்ளைகள், உறவினர், நண்பர்கள், பிள்ளைகளுக்கெல்லாம் இந்தப் புத்தகம்தான் என் புத்தாண்டுப் பரிசு" என்றாள் மகிழ்ச்சி பொங்க.
விற்பனையாளரை விசாரித்த போது வந்த பிரதிகள் யாவும் விற்றுத் தீர்ந்துவிட்டதாகச் சொன்னார்.

புத்தகத்தைப் பார்த்த மாத்திரத்திலே இப்பதிவை எழுத எண்ணியிருந்த போதும், இப்போதுதான் முடிந்தது. ஆனால் இந்த இரு மாதங்களிலும், பெருமளவு நாட்கள், இந்தத் தத்துவார்த்திகள் வாழ்ந்து பயணித்த மண்ணில் பயணிக்க முடிந்தது. பலவற்றை பார்க்க, பழக, படிக்க, முடிந்தது. தொப்புள் கொடியுறவு, எந்தையர் தேசம், என நாங்கள் எவ்வளவுதான் சொந்தம் கொண்டாடினாலும், அரசியல் பேரங்களுக்குள் உறவுநிலையும், உண்மைநிலையும், அடிபட்டுப் போகும் வண்ணமாய் சூழலின் நிலையிருந்த போதும், நட்பு, நேசம், நிறைந்திருக்கும் நண்பர்கள் பலருடனும், பொழுதுகள் பலதைப் பகிர்ந்து கொள்ள முடிந்தது. முடியாமலும் போனது. கழிந்த பொழுதுகளில் கண்டுணர்ந்தவொன்று..

பாண்டிச்சேரி அரவிந்தர் ஆச்சிரமம், திருவண்ணாமலை ரமணர் ஆச்சிரமம், ஆழியார் வோதாத்திரி மகரிசி ஆச்சிரமம், என வெளிநாட்டவர் பலர் நிறைந்திருக்க, ஆன்மீக ஆலயங்கள் பலவும் சந்தைகளாக மாறியிருக்க, சந்தைகள் பலவும் வளர்ந்து கொண்டிருக்க, அதன் அடிகளில் அணியணியாக இளையவர் பெரியவர் எனப்பலர்.

'தளபதி அழைக்கிறார்' , 'அம்மா அழைக்கிறார்', 'கேப்டன் அழைக்கிறார்', 'சரத்குமார் அழைக்கிறார்', என்ற டிஜிட்டல் விளம்பர அழைப்புக்களுக்கும் மேலாக, வாழ்க்கையைத் தத்துவார்த்தங்களாகத் தரணிக்கே தந்தவர்கள் வாழ்ந்த மண்ணின் மக்களை நோக்கி யாரோ அழைப்பது கேட்கிறது. அத்திசை நோக்கி மக்கள் மெல்ல மெல்லத் திரும்புவதும் தெரிகிறது.

தன் பிள்ளைகளுக்கு, தன் உறவினர், நண்பர்கள் பிள்ளைகளுக்கு, இந்தியத் தத்துவார்த்தக் குறிப்புக்களைப் பரிசளிக்க விரும்பும் மேலைத்தேயத் தாய், வெள்ளையாக என் முன் சிரிக்கிறாள்...

-இன்னமும் சொல்லலாம்.



தொப்புள் கொடியுறவு, எந்தையர் தேசம், என நாங்கள் எவ்வளவுதான் சொந்தம் கொண்டாடினாலும், அரசியல் பேரங்களுக்குள் உறவுநிலையும், உண்மைநிலையும், அடிபட்டுப் போகும் வண்ணமாய் சூழலின் நிலையிருந்த போதும், நட்பும், நேசமும், மிகக் கொண்டரவணைத்த அத்தனை அன்புறவுகளுக்கும் நன்றி எனச் சொல்வதைத் தவிர இப்போதைக்கு வேறென்ன செய்ய