Wednesday, October 14, 2009

நல் உருவாக்கம்

2009ம் ஆண்டுக்கான உலகச் சைக்கிள் ஓட்டப் பந்தயப் போட்டிகள் கடந்த மாதம் 23, 24, 26, 27ந் திகதிகளில் சுவிற்சர்லாந்தின் மென்திரிசியோ எனும் இடத்தில் நடைபெற்றது. இதனைத் தொலைக்காட்சி நேரடி ஒலிபரப்பில் பார்த்துக் கொண்டிருந்த போது ஒரு விடயத்தைக் கவனிக்க முடிந்தது. ஐந்து பள்ளிச் சிறுவர்களை , இளம் பத்திரிகையாளர்களாக அந்தப் போட்டிகளை நேரில் பார்த்துச் செய்தித் தொகுப்பாகக்க அழைத்து வந்திருந்தார்கள். 10 தொடக்கம் 12 வயது வரையிலான அவர்கள், உலக சாம்பியன்களைச் சந்தித்து செவ்வி காண்பதும், நிழற்படமெடுப்பதுமாக பரபரப்பாகச் செயற்பட்டுக்கொண்டிருந்தார்கள்.

அவர்களைத் தொலைக்காடசி செய்தியாளர் ஒருவர் மடக்கிப் பேட்டி கண்டார். இங்கு நீங்கள் என்ன செய்கின்றீர்கள் என்றபோது, தாங்கள் இரு மாதகாலமாக அந்த உலகப்போட்டிகள் தொடர்பான செய்தி இதழ் தயாரிப்பில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிவித்தார்கள். இதற்காக சைக்கிள் ஓட்ட வீரர்களைச் செவ்வி கண்டும் நிழற்படங்கள் எடுத்து வருவதாகவும் சொன்னார்கள். இதுவரையில் எத்தனை படங்கள் எடுத்திருப்பீர்கள் எனச் செய்தியாளர் கேட்க , அந்த இளம் பத்திரிகையாளர் இதுவரையில் 5000 படங்கள் எடுத்திருப்போம் என்கிறார்

தொலைக்காட்சிச் செய்தியாளர் ஆச்சரியத்தில் 5000 படங்களா? என வியக்கின்றார். தொலைக்காட்சியைப் பாரத்துக் கொண்டிருக்கும் நாமும் தான் வியக்கின்றோம். அடுத்த கணம், அந்த ஐவரில் மற்றொருவர், அந்த 5000ம் படங்களில் பத்துப் படம்தான் நல்லா வந்திருக்கு என்று சொல்லிச்சிரிக்கின்றார். நாமும் சிரித்து விடுகின்றோம் அந்தச் சிறு பிள்ளையின் மழலையில். ஆனால் அதற்குப் பின்னால் மற்றுமொரு உண்மையும், தொழில் அக்கறையும் கூட ஒளிந்திருப்பது உண்மை. சுவிற்சர்லாந்தில் தரம் காணல் என்பதில் அத்துனை அக்கறை கொள்வார்கள் என்பது நிச்சயமான உண்ம.
நாட்டிற்கான நாளைய தலைமுறை உருவாக்கம் என்பதில் அவர்கள் காண்பிக்கும் அக்கறையும், ஆர்வமும், இளைய தலைமுறை குறித்த உயர்வான சிந்தனையும் அதற்குள் அடங்கியிருந்தன.