Monday, September 11, 2006

தாயும், சேயும்.


நட்சத்திர வாசல் தேடி வந்திருக்கும் உங்களை, இனிதாய் வரவேற்க, முதலில் ஒரு இன்சுவை வரவேற்புஅம்மா!


எல்லோர்க்கும் பிடித்தமான, நேசிப்புக்குரிய, ஒரு உறவுமுறை அம்மா. நாம் விரும்பித் தேர்வு செய்யமுடியாத உறவும் கூட. இவ்வுலகினை, உலகின் சிறப்புக்களை, வாழ்வின் பெருமிதங்களை, நாம் காண, களிப்புற வழிசமைத்தவள். பெருமைக்குரிய தாய்க்குப் பிள்ளையாகப் பிறந்ததினால், எனக்கும் அந்தப்பாக்கியம் கிடைத்தது. ஆனால் அந்தத்தாயுடன் வாழ்ந்த காலத்தின் நீட்சிதான் சொற்பமானது.

என் பத்தாவது வயதில் காலமாகிய என் தாயுடனா வாழ்க்கைக்ககாலத்தில், முதல் ஐந்து வருடங்கள் பால்யப் பருவத்தில் கழிந்துவிட, இறுதி வருடமும் அவரது நோயின் காரணமாகக் குழப்பமாய் அமைந்து விட, நான்கு வருட காலப்பகுதியே அவளைக் கற்கவும், அவளிடமிருந்து கற்கவும் முடிந்தது. ஆனாலும், அவளிடமிருந்து கற்றுக்கொண்ட பலவும் இன்றுவரை, அவள் பிரிந்து, பலவாண்டுகள் ஆனபோதும், என்னுடன் வாழ்கின்றது, என்னை வாழ்விக்கின்றது.

Photobucket - Video and Image Hosting


அம்மாவைப்பற்றிய அடையாளங்கள் சின்ன வயதில் என்னுள் பதிந்தபோது, சாதாரணமான சம்பவங்களாகத்தான் எனக்குத் தெரிந்தன. ஆனால் இப்போது பார்க்கையில்தான் தெரிகிறது அவளின் மாசிலா மாற்றுக்களின் மகத்துவம். அவளின் மறைவின் போது, நாம் அழுததிலும் பார்க்க, எங்கள் ஊர் அழுதது என்று சொல்லலாம். அந்தளவுக்கு எல்லோர் மனங்களிலும் நிறைந்திருந்தாள். அதற்குக் காரணம், அவளின் மகத்தான மனித நேசிப்பு. நல்லவன், கெட்டவன், குடிகாறன், கோள் சொல்பவன், சின்னவன், பெரியவன், உயர்ந்தவன், தாழ்ந்தவன், என எந்தப்பாகுபாடுமில்லமால், பேதங்கள் கொள்ளாமல், அனைவரையும் சமமாக மதிக்கத் தெரிந்த மாதரசி.


அன்பு அன்பு அன்பு, அவளுடைய தாரக மந்திரமே அதுதான். அதன் நித்திய ஜெபிப்பால் அவள் பெற்றிருந்த பலம் மிகப்பெரியது. குறுமுனி போன்று உயரத்தில் குறைவான அந்தக் குட்டைப்பெண்மணியின் கேள்விகளுக்குப் பயமும் மரியாதையுமாகப் பதில் சொல்லும் மனிதர்கள் பலர், கடைத்தெருவீதியில் வாய்சொல்வீரர்களாக நிற்பதைப் பாடசாலை செல்லும் வேளைகளில் கண்டடு அதிசயித்திருக்கின்றேன். குடிபோதையில் வீட்டுக்குத் திரும்பும் குடிமன்னர்கள், எங்கள் வீட்டு வாசலில் அம்மா நிற்பதைக் கண்டதும், மரியாதை மன்னர்களாகச் செல்லும் பவ்வியம் கண்டிருக்கின்றேன். அப்போது சில வேளைகளில் யோசித்ததுண்டு, ஏன் இப்படி எல்லோரும் அம்மாவிடம் பயந்தவர்களாக இருக்கிறார்கள். அட மற்றவர்கள் பார்த்துப் பயங்கொள்ளும் முற்கோபியான என் அப்பா கூட அமைதியாகிவிடுவது புரிவதில்லை. ஆனால் இப்போதுதான் புரிகிறது, அது அவள் மேலான பயமில்லை, பணிவு என்று. மற்றவர்களைப் பணிய வைக்க அவள் பாவித்த ஒரே ஆயுதம், எல்லோரையும் மிகுதியாக நேசித்ததுதான். நேசிப்பின் வழி நின்ற அவள், அதே நேசிப்பின் வழியாக எட்டிய பரிமானங்கள் மிக மிக உயரமானவை.


ஊருக்குள் ஒரு துயரம் என்றாலோ, மகிழ்ச்சி என்றாலோ, அம்மாவின் பங்களிப்பு கட்டாயம் இருக்கும். யார் யாருக்கு என்ன உதவிகள்தேவை, யார் யாரிடமிருந்து அந்த உதவிகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதெல்லாம் அவளுக்கு மட்டுமே தெரியும். அவளால் மட்டுமே முடியும். எங்கள் வீட்டில் எல்லா நாட்களிலும், எந்நேரங்களிலும், குறைந்த பட்சம் ஒருவராவது விருந்தாளியாக இருப்பார். சாதியக்கட்டுமானங்களின் வழிவந்தவளாயினும், சாதியத்தின் வழியில் எவரையும் பார்த்தறியாதவள். அந்த ஜீவநேசிப்பே அவளை அனைவர்பாலும் கவர்ந்திற்று. அதற்காக அவள் பகுத்தறிவுவாதியல்ல. நிறைந்த கடவுள் பக்தியுடையவள்தான். முப்பத்தைந்து வருடங்களின் முன்னமே, பெண்களை அணியாகவும், அமைப்பாகவும், திரட்டி ஆக்கவழியில் வழிநடாத்தினாள். ஆனால் அரசியல்வாதியல்ல.


இசையில் வயலினும், இலக்கியத்தில் புத்தகங்களும், வாசிக்கத் தெரிந்தவள். ஏன் நன்றாகப் பாடவும் செய்வாள். ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை நாயகனாய் மதிக்கப்படும் சேகுவேராவின் தாய் ஸெலியாவுக்கும், என் தாய்க்கும் ஒற்றுமைகள் இருந்தததை, பின்னாட்களில் சேயின் வரலாற்றை வாசித்தபோதுதான் உணர்ந்தேன். ஸெலியா போன்று வசதிமிக்க நடுத்தரக்குடும்பத்தின் வாரிசு, பரோபகாரி, பெண்களின் துன்பங்களுக்கான மாற்றுச்சிந்தனைகள், ஆஸ்த்மா நோய்யுள்ள மூத்த மகன், எனச்சில ஒற்றுமைகள் தெரிந்தன. ஆனால் அவள் சேயைப் பற்றியோ, ஸெலியாவைப் பற்றியோ, அறிந்திருந்தாளில்லை.

Photobucket - Video and Image Hosting

சிறு வயதில் ஆஸ்த்மா நோயால் மிகவும் துன்பப்பட்ட என்னை, நோயின் கடுமையிலிருந்து ஆற்றுப்படுத்துவதற்காக ஸெலியா போன்றே, என் தாயும், எனக்குக்கற்றுத்தந்தவைகள் ஏராளம். என் ஏழாவது வயதிலேயே வாசிப்பை யாசிக்கக் கற்றுத்தந்தாள். எட்டாவது வயதில் எழுதும் வகை சொல்லித்தந்தாள். ஒன்பதாவது வயதில் வானொலி கேட்கப்பழக்கினாள். அந்தப்பழக்கத்தில் அறிமுகமான நிகழ்ச்சிதான் வானொலி மாமா நடாத்தும் '' சிறுவர் மலர் '' சனியோ, ஞாயிறோ மதியம் பன்னிரெண்டு மணிக்கு இலங்கை வானொலியில் ஒலிபரப்பான நிகழ்ச்சி. அப்போது வானொலி மாமாவாக இருந்தவர், நா.மகேசன். மிக அருமையான குழந்தைகளுக்கான கலைஞர்.


அம்மாவின் வழிகாட்டலில் என் முதலாவது எழுத்து சிறுவர் மலருக்காக எழுதப்பட்டது. அம்புலி மாமா சிறுவர் புத்தகத்தில் வந்த ஒரு கதையைத் தழுவலாகக் கொண்டு, 'எலிப்படை' என்ற வானொலி நாடகம்தான் எனது முதலாவது ஆக்கம். அதை மேலும் மெருபடுத்தி அழகியதொரு வானொலி நாடகமாக வானலைகளில் வானொலி மாமா ஒலிக்கவிட்டிருந்தபோது, எனக்கு வயது பத்து. என்பக்கதிருந்து அந்நாடகத்தைக் கேட்டுமகிழ அப்போது என் தாய் உயிரோடில்லை.

என் படைப்புக்கள் எதையும் அவள் பார்க்கவில்லை. ஆனாலும் வாழ்க்கையில் எனைப்பாதித்த என் தாயும், அவள் தந்த வாசிப்பினால் பதிந்த சேயும், என் எண்ணங்களில், செயல்களில், இன்னமும் இணைந்தே வருகின்றார்கள்.....


என்தாய்க்கு இப்பாடல் மிகவும் பிடிக்கும். அதனால் எனக்கும் பிடிக்கும். உங்களுக்கும் பிடிக்குமா? கேட்டுச் சொல்லுங்கள்24 comments:

சின்னக்குட்டி said...

வணக்கம் மலைநாடன்.... எல்லா மனித உறவுகளிலும் மேன்மையானது அம்மா என்ற உறவு... அவை பற்றிய பதிவுக்கு நன்றிகள்.... என்னை பொறுத்துவரை தாய் என்ற உறவு தான் எந்த பிரதிபலனை எதிர்பார்க்காமால் தூய்மையாக இருக்கும் உறவென்று நினைக்கிறன்.

Anonymous said...

வாழ்த்துக்கள் மலைநாடான்.
....
உஙகளின் நட்சத்திரப்பதிவில் பின்னூட்டம் எழுதமுடியாது இருப்பதால் இங்கே வாழ்த்திவிடுகின்றேன். (டிசே தமிழன்) 9:35 PM

Sri Rangan said...

வாழ்த்துக்கள் மலைநாடான்.

Chandravathanaa said...

மலைநாடான்
நல்ல பதிவு. ஒரு தாயின் தன்மையை அழகாக விளக்கிய பதிவு.
படிக்கும் போது பல சின்ன வயது நினைவுகள் வந்து போயின.
சாந்தமான முகம் உங்கள் அம்மாவுக்கு.

உங்களுக்குப் பத்து வயதாக இருக்கும் போதே அம்மாவை இழந்து விட்டீர்கள் என்ற செய்தி எனக்குத் தெரியாது.

றியால் பிளேயர் என்னிடம் ஏனோ இன்று வேலை செய்யவில்லை. அதனால் பாடல்களைக் கேட்க முடியவில்லை.

மலைநாடான் said...

சின்னக்குட்டி!

நிச்சயமாக தாயென்பதற்கும் மேலாக எந்த உறவையும் பார்க்க முடியாதுதான். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

வெற்றி said...

மலைநாடான்,
நல்லதொரு பதிவு.

Anonymous said...

மலைநாடானுக்கு மலைநாட்டிலிருந்து வாழ்த்துகிறேன்.

அம்மாவின் நினைவலைகளை நேர்த்தியாகப் படைத்துள்ளீர்!

அன்புடன்,
எல்.ஏ.வி,
மலேசியா

கைப்புள்ள said...

இந்த வார நட்சத்திரமான தங்களுக்கு முதலில் எனது வாழ்த்துகள். அன்னையின் மேன்மையையும் அவர்களது பாசத்தையும் உணர்த்தும் நல்லதொரு பதிவு.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

மலைநாடர்!
"ஆண்டவன் தானிருக்க வேண்டிய இடத்தில்;உலக உயிர்களுக்கு உருவாக்கியவள்" - தாய் என்றான் ஓர் சிந்தனையாளன். தாயைப் போற்றாதோர் உலகில் அரிது.என் தாயையும்; இந்த அரைச்சதமடித்த பின்பும்;நினைக்கக் கண்கலங்குகிறது.தங்கள் தாய் ஓர் பரோபகாரி என்பது உங்கள் விபரிப்பில் புரியமுடிகிறது. நான் அவரைச் சந்திக்காவிடிலும்; மிக நம்புகிறேன். காரணம் அதை உங்களிடம் அனுபவரீதியாக கண்டவன்.தமிழ்மணத்தூடு சிலமாத அறிமுகமிருந்தது;என்குரல் மாத்திரம் கேட்டு;எனக்குச் "சொந்த பக்கமமைக்க" உதவ வந்தது; உங்கள் அந்தப் பரோபகாரத் தாயார் பாதிப்பே!
அன்னையைச் சகலரும் போற்றுவோம்.
தாயாருடன் வாழும் பாக்கியம் பெற்றோர்; தினம் அவர் பாதம் குனியுங்கள்;நிமிர்ந்து விடுவீர்கள்!
இல்லாதோர் அவரைத் தினம் நினையுங்கள்.
"அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை"
யோகன் பாரிஸ்

கானா பிரபா said...

வணக்கம் மலைநாடான்

தாய்க்கு நிகர் ஏது இத்தரணியில். ஒவ்வொரு அம்மாக்களின் பின்னும் உயர்ந்த தியாகம் இருக்கும்.

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

///
நட்சத்திர வாசல் தேடி வந்திருக்கும் உங்களை, இனிதாய் வரவேற்க, முதலில் ஒரு இன்சுவை வரவேற்பு
///

கண்டிப்பா ஒரு இன்சுவை வரவேற்புதான். நல்ல தொடக்கம் நட்சத்திர வாரத்திற்கு

மலைநாடான் said...

டி.சே!
உங்கள் வருகைக்கு நன்றி. தற்போது பின்னூட்டமிட முடிகிறது. சிலவேளைகளில் சிக்கல் தோன்றுகிறது போல்தான் தெரிகிறது. அப்படியான நேரங்களில் பக்கத்தை மூடி மறுபடியும் திறந்தால் சரியாகிவிடும். இதற்கான தொழில்நுட்பச் சிக்கல் என்னவென்று புரியவில்லை.

மலைநாடான் said...

சிறி ரங்கன்!

தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

மலைநாடான் said...

சந்திரவதனா!

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

\\சாந்தமான முகம் உங்கள் அம்மாவுக்கு\\

உண்மையில் என் தாய் எப்போதும் சாந்தமான பெண்தான். அவ அதிர்ந்து பேசி அறியேன். ஆனால் அப்பா அதற்கு நேர்மாறு. நானும் அப்படித்தான். ஆனால் அம்மா சாதித்தது அதிகம் என்பேன்.

ஜடாயு said...

மலைநாடான்,

நல்ல பதிவு. உணர்ச்சிகரமான பதிவு. தாய்மையின் நிழலில் இருக்கும்போது மட்டுமல்ல, அதைப் பற்றி படிக்கும்போதும் கேட்கும்போதும் கூட தானாகவே மனது அன்பு அலைகளில் அமிழ்ந்து விடுகிறது.

எப்போதோ படித்த புதுக்கவிதை நினைவு வருகிறது -

அம்மா
உலக வங்கிக் கடன் தீர்க்க ஒப்பந்தத்தால் முடியும்
உன்
அன்பு வங்கிக் கடன் தீர்க்க
எப்பந்தத்தால் முடியும்?

மலைநாடான் said...

வெற்றி!

வருகைக்கு நன்றி.

எல்.ஏ.வி!

மலேசியாவிலிருந்து மனமுவந்து வாழ்த்தியிருக்கின்றீர்கள். மிக்க நன்றி

மலைநாடான் said...

கைப்புள்ள!

நீங்க கலாய்பதில்தான் கைப்பு, கருத்துச் சொல்வதில் பெரும் அப்பு, என்பதை மறுபடியும் அழகாகப் பின்னூட்மிட்டு நிரூபித்திருக்கின்றீர்கள்.
நன்றி!

மலைநாடான் said...

யோகன்!

வாழ்க்கையில் தாயும், வாசித்ததில் சேகுவேராவும், என்னை நிரம்பவும் பாதித்தார்கள். இவர்கள் இருவரது தன்மைகளே என் வாழ்க்கையில் நிறைய வருவதுண்டு. அதனால்தான் இப்பதிவுக்கு தாயும் சேயும் எனத் தலைப்பிட்டேன். இத்தகைய தன்மையினாலேயே என் நண்பர்கள் பலருக்கு , என்னையிட்டுச் சில குழப்பங்களும் உண்டு.

மலைநாடான் said...

தாய்க்கு நிகர் ஏது இத்தரணியில். ஒவ்வொரு அம்மாக்களின் பின்னும் உயர்ந்த தியாகம் இருக்கும்

உண்மை பிரபா!
உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி

மலைநாடான் said...

\\கண்டிப்பா ஒரு இன்சுவை வரவேற்புதான். நல்ல தொடக்கம் நட்சத்திர வாரத்திற்கு \\

குமரன் எண்ணம்!

சுவிஸ் பிறீமியம் சொக்லேட் அல்லவா? இனிக்காத பின்ன?
:))
வருகைக்கு நன்றி!

G.Ragavan said...

படிக்கப் படிக்க நெஞ்சம் நெகிழ்ந்து கண்கள் முகிழ்ந்தன என்றால் மிகையாகாது. ஈன்று புறந்தருதல் எந்தலைக் கடனே என்கிறது புறம். இதைப் பலர் பெற்றுப் போடுதல் என்று தவறாகப் புரிந்து கொண்டு புறநாநூறு தாய்மைக்கு பெருமை செய்யவில்லை என்கிறார்கள். பெற்றெடுத்தலே என்ற பொருள் என்றால் ஈன்றெடுத்தல் எந்தலைக் கடனே என்று எழுதியிருக்கலாமே! புறம் தருதல் என்றால் என்ன? புறம் என்றால் நாம் தவிர மற்றயவை. அந்த மற்றயவைகளோடு கூடி ஒழுகும் விதத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டியவள் தாய். அந்த ஒழுகல் எவ்வளவு ஒழுங்காகக் கற்றுக் கொடுக்கப் பட்டிருக்கிறதோ...அந்த அளவே ஒருவன் வாழ்க்கையும் பண்பும்.

இந்தச் சிறப்பை உங்கள் தாயார் அறிந்திருந்திருக்கிறார் என்பது பெருமைக்கும் போற்றுதலுக்குமுரியது.

தன்னைத் தேய்த்துக் குழம்பாக்கி அந்தக் குழம்பைக் கொண்டு பிள்ளைகளின் வாழ்வில் மணம் சேர்க்கிறாளே தாய்! அவளே முதலில் காணும் தெய்வம். அதனால்தான் ஈன்று புறந்தருதலை முதலில் வைத்தார்கள். அப்புறந்தான் சான்றோனாக்குதல், நன்னெறி நல்குதல், வேல் வடித்துக் கொடுத்தல் எல்லாம்.

இன்னொரு கன்னடப் பாட்டு நினைவிற்கு வருகிறது.

தாயி தந்தே இப்புரு
நாவு கண்ணலி காணுவ தேவுரு

தமிழாக்கம்

தாய் தந்தை இருவரும்
நாம் கண்ணிலே காணும் தெய்வமே

மலைநாடான் said...

//அம்மா
உலக வங்கிக் கடன் தீர்க்க ஒப்பந்தத்தால் முடியும்
உன்
அன்பு வங்கிக் கடன் தீர்க்க
எப்பந்தத்தால் முடியும்? //

ஜடாயு!

உங்கள் கவிதையும், கருத்தும் அழகானவை. அருமையானவை. மிக்க நன்றி!

மலைநாடான் said...

ராகவன்!

பதிவுகளில் மட்டுமல்ல, பின்னூட்டல்களிலும் கூட, தமிழால்அழகுசேர்க்க முடியும் எனச் செய்து காட்டியுள்ளீர்கள்.
உங்கள் கருத்துக்கள் உண்மையானவை, உணர்ச்சி பூர்வமானவை.
மிக்க நன்றி!

தேவகுமாரன் சென்னை said...

எங்கோ தூரதேசத்தில் இருக்கிறீர்கள். உங்கள் முகம் காணும் முன்பு உங்கள் தாயின் முகம் காணக்கிடைத்ததில் மகிழ்சி. உள்ளத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். தயாரின் புகைப்படம் கருப்பு வெள்ளையாயினும் அந்த முகத்தில் இருக்கும் கருனை என் கண்களை ஒரு கணம் கலக்கி விட்டது. இன்று இதுபோன்ற மனுஷிகளை காண்பது அரிது. பத்து வயதில் இப்படியொரு அபூர்வ அன்னையை இழந்ததில் உங்களின் வலியை உணரமுடிகிறது. இப்போதும் அந்தத் தாய் இறைவனிடம் உங்களுக்காக பிராத்தனை செய்துக்கொண்டிருப்பாள் சொர்கத்தில் இருந்தபடி.