இப்பதிவு நட்சத்திரவாரத்தில் நன்றி சொல்லி விடைபெறும் பதிவு மட்டுமல்ல, குறிஞ்சி மலரில் நான்எழுதும் ஐம்பதாவது பதிவு, என்னுடைய இல்லையில்லை, எங்களுடைய இன்னுமொரு புதிய வலைப்பூவினை
அறிமுகஞ் செய்யும் பதிவு. என வேறு சில முக்கியத்துவங்களும் உண்டு.
நட்சத்திரவாரப் பதிவுகள் உங்களுக்குத் திருப்தியளித்ததா என்பதை இதுவரையில் என்னால் முழுமையாகத் தெரிந்து கொள்ளமுடியவில்லை. என்னைப் பொறுத்தவரையில் எழுத எத்தணித்த விடயங்களையெல்லாம் எழுதிவிட்டதாகச் சொல்லமுடியாது. வாழ்க்கையை அதன் போக்கில் சந்தித்து வந்தவன் நான் அந்தவழியே நட்சத்திர வாரத்திலும் நடந்து கொண்டேன். எழுதியவை எல்லாம் அற்புதம் என்று எண்ணவில்லை. அவைகளை எழுதிப்பதிவு செய்யவேண்டியது என்பது மட்டும் நிச்சயம் என்று எண்ணினேன்.
இவ்வாரத்தில் நான் எழுதிய பதிவுகளை ஒழுங்குபடுத்திப்பார்த்தால் அதில் எங்கள் வாழ்வு தெரியும். வாழ்த்தும், வரவேற்பும், விருந்தோம்பலுமாக,( நட்திர நல் வணக்கம்) பாசப்பிணைப்புக்களாக, (தாயும் சேயும்) வாழ்ந்த எங்கள் வாழ்வில், அந்நியசக்திகள் பின்னிய அரசியல் சதிகளால்,( இந்திய மேலாதிக்க சிந்தனையா) வழிபாடும் பக்தியுமாக( வெருகல்) விழாவும் குதுகலமுமாக ( ஏறுபடிக்கலைஞர்கள்) ஆட்மும் பாட்டுமாக (ஏறுபடியும் எகிப்தியநடனமும்) கலையும் கல்வியுமாக ( என் சொல்லு தமிழின் சோபா) இருந்த எம் வாழ்வில், எங்கள் மண்ணில் போர் மூண்டது(சந்தனத் தெருக்களில் கந்தகம் மணக்கையில்). அதனால் ஏற்பட்ட புலப்பெயர்வின் அவலங்ககளும், இழப்புக்களும்,(எங்கள் தீவிருந்து புறப்பட்ட டைட்டானிக்) சொல்லொனாச்சோகம். புலத்தில் எழும் பல்வேறு சிக்கல்களின் மத்தியில், தற்போது குடும்பங்களுக்குள் விட்டுக்கொடுப்புக்களற்ற சூழலில் எழும் குடும்பப்பிரிவுகள் ( பாரதி செல்லம்மா) தரும் அச்ச மிகுதி, எல்லாத்துன்பங்களையும் இணைவதால் வெல்லமுடியும் எனும்(இணைவில் உதிப்போம்) நம்பிக்கையோடு நிறைவுறுகிது.
முக்கியத்துவம் நிறைந்த இந்நட்சத்திரவாரத்தில், எம்மண்ணின் மறக்கப்பட முடியாத கலைஞர்கள் பற்றி, மனிதர்கள் பற்றி, இடங்கள் பற்றிச் சொல் வேண்டுமெனத் தீர்மானித்த போதே தெரியும், இது குறிப்பிட்ட சில தமிழக நண்பர்களைத்தவிர, ஏனையோருக்கு ஏமாற்றமளிக்கக்கூடியதென்று. ஆனாலும் என் தேசத்தின்மீதான பற்றும் பணியும் முக்கியமெனக்கருதியதைச் செய்தேன்.
தமிழக நண்பர்களே!
உங்கள் மீது நாம் என்றும் நேசிப்புடனேயே இருப்பவர்கள். இந்தியாவின் எழுச்சி என்றும் எமக்கு மகிழ்வு தருவதே. ஏனெனில் என் தந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவியது தமிழீழமாக இருக்கலாம். என் பாட்டனோ, பாட்டனின் பாட்டனோ, பாடித்திரிந்தது பாரதபுமியில்தான். அந்தத் தொப்புள்கொடி உறவுமீதான் பற்றும் பாசமும என்றும் எமக்குண்டு. நான் அடிக்கடி என் நண்பர்களுக்குச் சொல்வதுண்டு, அரசியல் தன்மைகள் பிடிக்காதிருப்பினும், உண்மை மிகு ஆண்மீகத்திற்காகவும், உயர்கலைகளுக்காகவும், ஆயிரம் தடவைகள் அம் மண்ணை வணங்கித் தொழுவேன் என்று. எங்கள் உள்ளப்பாங்கைப் புரிந்துகொள்ளுங்கள். புறந்தள்ளாதீர்கள்.
அன்று, யுத்தம் வேண்டாம் புத்தம் சிறந்ததென, யுத்தம் புரிந்த அசோகன் சத்தம் போட்டுச் சொன்னான் கலிங்கத்தில். இன்று புத்தம் காப்பாற்ற யுத்தமே சிறந்ததென சட்டம் போட்டு யுத்தம் புரிகிறது புத்தம் பேணும் அரசு சிறிலங்காவில். எண்ணவும், எழுதவும் இன்னம் உண்டு. இது விடைபெறும் முடிவல்ல இணைதலின் தொடக்கமே என எண்ணுகின்றேன். ஆதலால் சொல்ல நினைத்தவற்றைத் தொடர்ந்தும் சொல்வேன். வந்து சொல்லுங்கள் வளமா என்று.
இந்த வாய்பினை நல்கிய தமிழ் மணநிர்வாகத்தினர்க்கும், வந்து கருத்துக்கள் சொன் நண்பர்கள் அனைவர்க்கும், நன்றிகள் பல.
ஈற்றில் என் எண்ணங்களை காட்சியாக்கி, இவ்வார நிறைவுக்கென்றே வடித்த ஒரு குறும்படத்துடன், உங்களிடமிருந்து, நட்சத்திரமாய் விடைபெறுகின்றேன். நாளை நண்பனாய் மீண்டும் சந்திப்பேன்.
33 comments:
மலைநாடான்,
உங்களின் நட்சத்திர வார பதிவுகள் மூலம் நான் அறிந்து கொண்ட சங்கதிகள் ஏராளம் ஏராளம். ஈழத்தில் பிறந்திருந்தும் நான் அறிந்திராத பல ஈழக் கலைஞர்களைப் பற்றி அறிந்து கொண்டேன்.
உங்களின் 50 பதிவுக்கு என் வாழ்த்துக்கள்!!!!
/அன்று, யுத்தம் வேண்டாம் புத்தம் சிறந்ததென, யுத்தம் புரிந்த அசோகன் சத்தம் போட்டுச் சொன்னான் கலிங்கத்தில். இன்று புத்தம் காப்பாற்ற யுத்தமே சிறந்ததென சட்டம் போட்டு யுத்தம் புரிகிறது புத்தம் பேணும் அரசு சிறிலங்காவில்/
சிறப்பாக சொன்னீர்கள்.
மிகவும் அருமையான வாரம் மலைநாடான். நிறைய விசயங்களைத் தெரிந்துகொண்டேன். மிக்க நன்றி!
தொடர்ந்து இவ்வாறான விசயங்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
-மதி
மலைநாடான்
உங்கள் பதிவுகள் பயனுள்ள பல தகவல்களைக் கொண்டிருந்தன.
நட்சத்திர வாரம் நன்றாக அமைந்திருந்தது.
நன்றி.
50வது பதிவுக்கு என் வாழ்த்துக்கள்
அற்புதமான வாரம் மலை நாடன். ஏறுபடிக் கலைஞர்கள் பற்றிய பதிவையும், "சந்தனத் தெருக்களில் கந்தகம் மணக்கையில்" பதிவும் இன்னும் படிக்க வில்லை.. மற்ற தெல்லாம் அருமை..
சீக்கிரத்தில் படித்துவிட எடுத்துவைத்திருக்கிறேன்..
டைட்டானிக் பதிவைப் படித்த போது சிகப்பி போல் எத்தனை பிஞ்சுகளை நாம் இழந்திருப்போம் என்னும் சோகம் வந்து தாக்குகிறது...
புதிய வலைப்பூவுக்கு வாழ்த்துக்கள்..
தொடர்ந்து மருத நிலத்திலும் உங்கள் பதிவுகளை எதிர்பார்க்கிறேன் :)
வாழ்த்துக்கள் ஐயா, 50 என்ன 500 ஏ போடலாம்:-)
மலைநாடான், உங்கள் நட்சத்திரப் பதிவுகள் அனைத்தையும் வாசித்தேன். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமானவை. (வ. அ. பற்றிய பதிவும் நட்சத்திர வாரத்தையது தானே!! - பட்டியலில் காணவில்லை).
உங்கள் புதிய வலைப்பூவுக்கு வாழ்த்துக்கள். உங்கள் குழந்தைகளையும் வலைப்பதிவாளராகச் சேர்ப்பது ஓர் ஆரோக்கியமான விடயம். அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.
வெற்றி!
உங்கள் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி. உங்களிலும் விட வயது குறைந்த , எங்கள் இளையவர்கள் சிலரும், என் பதிவுகளை வாசித்துவருகின்றார்கள். குறிப்பாக அவர்களுக்காகவே இவ்விடயங்களை எழுதிவருகின்றேன்.
குறும்பன்!
உங்கள் பாராட்டுக்கு நன்றி!
மதி!
மிக்க நன்றி. நிச்சயம் இதுபோன்ற விடயங்கள் பலவையும் பகிர்ந்துகொள்வேன்.
நன்றி!
மதி!
கேட்க மறந்துவிட்டேன். நீங்களும் திரைப்பட ஆர்வலர்தானே. இப்பதிவில் இணைக்கப்ட்டுள்ள குறும்படம்பற்றி ஒன்றும் சொல்லக்காணோமே. அவ்வளவு மோசமாகவா உள்ளது? :))
நட்சத்திர வாரத்தில் நல்ல ஏறுபடி பதிவுகளை தந்த மலைநாடனுக்கு வாழ்த்துக்கள்
ஆகா...குறும்படம் அருமை இயற்கையும் செயற்க்கையும் செய்யும் நர்த்தனங்களை நல்ல இசை பின்னனியுடன் படம் ஆக்கி உள்ளீர்கள் பாராட்டுக்கள்
சந்திரவதனா!
உங்கள் பாராட்டுக்களும் ஊக்கமுமே, என்னைப் போன்றவர்களை எழுதத் தூண்டுகிறது.
மிக்க நன்றி!
மீண்டும் ஒருமுறை உங்களின் நட்சத்திரவாரப் பதிவுகள் அனைத்தையும் வரிசையாகவும், ஒட்டுமொத்தமாகவும் படிக்கவேண்டுமென நினைத்துக்கொண்டிருக்கிறேன். தொடர்ந்த பதிவுகளுக்கு நன்றி. பல பதிவுகள் எனக்குப் பயனுள்ளவையாக இருந்தன.
இந்தப் பதிவின் குறும்படம் பிடித்தது, குறிப்பாக அந்த நீரும், மலைகளும். அதுவும் ஈழத்துக் காட்சிகளா? ஈழத்தின் வாழ்வையும், வரலாறையும் அறிய உங்களைப் போன்ற நண்பர்களின் பதிவுகள் உதவுகின்றன.
பொன்ஸ்!
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. உங்கள் விருப்பப்படி, நட்சத்திரவாரத்தில் ஒரு பதிவாவது மருதநிழலில் எழுதவேண்டுமென்று எண்ணினேன். தமிழ்மண நிர்வாகம் குறிஞ்சி மலரிலே எல்லாப் படைப்புக்களும் வரவேண்டுமெ பணித்திருந்தனர். அதனால் அதில் எழுதவில்லை. அதைச்சரி செய்யவே வெருகல் பற்றி எழுதினேன்.
அதுசரி மருதநிழலில் அவ்வளவு பறறுதலா?
பிரபா!
நானும் பாத்துக்கொண்டுதான் வாறன். அதென்ன ஐயா? ...:))
கருத்துக்கு நன்றி .
குறும்படம் பற்றி ஒன்டும் சொல்லேல்ல ? திடீரென யோசித்து ஒருமணிநேரத்தில் உருவாக்கியது. இன்னும் செழுமைப்படுத்தவில்லை.
இங்கே September 18, 2006 6:40 PM ல், Kamesh இப்படிச் சொன்னார்
//மலைநாடான்..
தொடர்ந்து படித்து வருகிறேன் இன்று தான் கருத்து சொல்கிறேன்..50 வது பதிவுக்கு என் வாழ்த்துக்கள்..
அம்மாவும் படித்தார் 50 பதிவுகளும் உடனே வேண்டுமாம்..
நடமாடும் நூல் நிலையம் பற்றி எல்லாம் நினைவு கூர்ந்தார்..
பெருமை கலந்த வியப்பாக இருந்தது//
காமேஸ்!
50 பதிவுகளையும் வாசித்துவிட்டு, முதலாவது பதிவில் வாழ்த்துச் சொல்லி, நடந்து வந்த பாதையைத் திரும்பிப்பார்க்கவைத்திருக்கின்றீர்கள். நன்றி!
உங்கள் அம்மா என் நடமாடும் நூல்நிலையத்தின் அங்கத்துவ வாசகி. நடமாடும் நூல்நிலையத்தை, ஞாபகப்படுத்தியிருக்கின்றீர்கள். அதைப்பற்றியும் ஒரு பதிவு எழுதவேண்டும்.
தொடர்ந்து வாசியுங்கள். வாருங்கள். நன்றி
//கேட்க மறந்துவிட்டேன். நீங்களும் திரைப்பட ஆர்வலர்தானே. இப்பதிவில் இணைக்கப்ட்டுள்ள குறும்படம்பற்றி ஒன்றும் சொல்லக்காணோமே. அவ்வளவு மோசமாகவா உள்ளது? :))
//
அதுக்கென்ன, சொன்னாப் போச்சு.
அண்ண, நல்ல வடிவான மோதிரம் போட்டிருக்கிறியள்.
கடசியா நாலஞ்சு கையள் சேருற காட்சி சும்மா புல்லரிக்குது.
சினிமாப் படங்களில ஏதோ வெட்டி விழுத்தப் போகமுதல் நாலஞ்சுபேர் சேந்து சத்தியம் எடுக்கிற மாதிரி ஒரு சீன்.
கலக்கீட்டியள் போங்கோ...
மலை நாடர்!
வெட்டல் ஒட்டல் இன்றிச் சுய தர்சனமான ஆக்கங்களால்; தங்கள் வாரத்தை சிறப்பித்துள்ளீர்கள். பதிவுகளில் ஒலிச் சேர்க்கை செய்து; மெருகேற்றியது. தங்கள் ஆக்கங்களுக்கு சுவை சேர்த்தது. தொழில் நுட்பத்தை முழுமையாகக் கையாண்டு; ஒரு கதம்பமாகப் படைத்துள்ளீர்கள். தங்கள் குறும்பட படப்பிடிப்பு; கருவியின் கோணங்கள்;இசை சிறப்பாக இருந்தது. பாராட்டுக்கள்.
மொத்தத்தில் தங்கள் திட்டமிடல் நேர்த்தியாகக் கைகூடியுள்ளது.
யோகன் பாரிஸ்
//மதி!
கேட்க மறந்துவிட்டேன். நீங்களும் திரைப்பட ஆர்வலர்தானே. இப்பதிவில் இணைக்கப்ட்டுள்ள குறும்படம்பற்றி ஒன்றும் சொல்லக்காணோமே. அவ்வளவு மோசமாகவா உள்ளது? :))
//
அய்யயோ! அப்பிடியெல்லாம் ஒண்டுமில்ல. உங்களின் இந்த இடுகையை வாசித்துக்கொண்டிருக்கும்போது நண்பர்கள் தொலைபேசியில் அழைத்தார்கள். அவர்களிடம் உங்களின் இடுகையைப் பற்றிச் சொல்லிக்கொண்டே எழுதிய பின்னூட்டந்தான் அது. அவர்களிடம் உங்களுக்குத் தனிமடல் எழுதவேண்டும் என்றும் சொல்லிக்கொண்டிருந்தேன். இன்னமும் எழுதினபாடில்லை. :(
குறும்படம் - அசந்துபோய்விட்டேன். குறுகிய காலத்துக்குள் வந்திருக்கிறது என்றால் இன்னமும் ஆச்சரியம். சில யோசனைகள் வந்தன. தனிமடலில் விரிவாக....
-மதி
\\மலைநாடான், உங்கள் நட்சத்திரப் பதிவுகள் அனைத்தையும் வாசித்தேன். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமானவை. (வ. அ. பற்றிய பதிவும் நட்சத்திர வாரத்தையது தானே!! - பட்டியலில் காணவில்லை).\\
கனக்ஸ்!
உங்கள் பாராட்டுக்கு நன்றி.
'காவிய எழுத்தாளன் இராசரத்தினம் ' எனும் தலைப்பில் அக்கட்டுரை வருகிறது.
நன்றி!
சின்னக்குட்டி!
உங்கள் பாராட்டுதல்களுக்கு நன்றி. குறும்படம் ஒரு திடீர் யோசனை. இன்னும் மெருகுபடுத்தலாம். பார்ப்போம்.
நன்றி!
செல்வநாயகி!
நிச்சயம் எல்லாப் பதிவுகளையும் படித்துக் கருத்துச் சொல்லுங்கள்.
குறும்படக்காட்சிகள் முழுவதும் சுவிற்சர்லாந்தில், என்னால் படமாக்கப்பட்டவை.
தங்கள் பாராட்டுதல்களுக்கு நன்றி!
//மொத்தத்தில் தங்கள் திட்டமிடல் நேர்த்தியாகக் கைகூடியுள்ளது//
யோகன்!
அப்படிச் சொல்ல முடியாது, என் எண்ணத்தில் 70 வீதம் வரையிலே நிறைவேற்ற முடிந்தது.
உங்கள் அன்புக்கு நன்றி!
\\சில யோசனைகள் வந்தன. தனிமடலில் விரிவாக....\
'நடக்குமென்பார் நடக்காது . நடக்காதென்பார் நடந்துவிடும்....' நல்ல பாடல். நல்ல பாடல். இல்லையா மதி! :-))))
கொழுவி!
உங்கள் விமர்சனத்துக்கு நன்றி.
என்ன ஒன்டு. உங்க விமர்சனத்தைப் பாத்தாப்பிறகுதான் கைச்சங்கிலியையும் போட்டிருக்கலாம் என்டு நினைச்சன்.
//கொழுவி!
உங்கள் விமர்சனத்துக்கு நன்றி.
என்ன ஒன்டு. உங்க விமர்சனத்தைப் பாத்தாப்பிறகுதான் கைச்சங்கிலியையும் போட்டிருக்கலாம் என்டு நினைச்சன்.//
அதுக்கென்ன? எல்லாம் போட்டு இன்னொரு குறும்(புப்)படம் செய்தாப் போச்சு.
மலைநாடான்
குறும்பட விளையாட்டு நன்றாகவுள்ளது.
திருகோணமலைக்காளிகோவிலை இன்னும் நீங்கள் ஈழமரபுக்கோவிலென்று எண்ணிக்கொள்வது சரிதானோ என்று தெரியவில்லை.
பெயரிலி!
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. திருகோணமலைப் பததிர காளி கோவிலை ஈழப் பாரம்பரியக் கோவில் வரை முறைக்குள் நான் சுட்டவில்லையே. இக்கட்டுரை ஒரு சுருக்கமே. உண்மையில் இதைமேலும் விரிவாக ஆராய வேண்டும். அப்போதுதான் இன்னும் தெளிவுகள் காணலாம். குறும்படம் பற்றிய தங்கள் கருத்துக்கு நன்றி.
கொழுவி!
\\அதுக்கென்ன? எல்லாம் போட்டு இன்னொரு குறும்(புப்)படம் செய்தாப் போச்சு.\\
உண்மையிலேயே எனக்கு ஒரு குறும்புப்டம் செய்ய வேணுமென்ட ஆசையும் உன்டு. உம்மட வாய்முகூர்த்தப்படி அது நடந்தால் மகிழ்ச்சியே.
:))
நன்றி!
உங்கள் காட்சிப் படமாக்கல் மிக நன்றாக உள்ளது. தொடரட்டும் உங்கள் வளர்ச்சி.
______
CAPital
http://1paarvai.wordpress.com/
http://1kavithai.wordpress.com/
குறும்ப்டத்தின் காட்சி அமைப்பு வெகு அருமை.கைகள் இணைகிற காட்சியில் மெய்சிலிர்த்தது. நலம் உண்டாகட்டும்.
Post a Comment