Friday, September 15, 2006

என் சொல்லு தமிழின் சோபா

சோ.ப
இந்த எழுத்துக்களுக்குள் மறைந்திருப்பது, சோ.பத்மநாதன் எனும் ஒரு நல் இதயத்துக்குச் சொந்தக்காரன். ஆங்கில இலக்கியம் படித்து, ஆங்கிலப் பேராசிரியராக இருந்து கொண்டு, தமிழ்வளர்க்கும், தமிழ்பழக்கும் , தமிழ்க்காதலர். நல்ல மரபுக் கவிஞர், சிறந்த பேச்சாளர். என் ஆசான். அதற்கும் மேலே என் நேசன். என் தாயின் மறைவின் பின், என் கலை ஆர்வத்துக்குச் செவிலித்தாயாக வாய்த்தவர். பிஞ்சு வயதில் என் நெஞ்சுநிலத்தில், தமிழ் வித்திட்டு கலைவளர்த்த கவியாளர். சின்ன சின்னதாய், என்னைச் செதுக்கிச் செப்பனிட்ட சிற்பி.

கோண்டாவிலில், மிக எளிமையான குடும்பத்தில் பிறந்தவர். இளவயதுகளில் மாமனாரின் சுருட்டுக்கொட்டில்களில், சுந்தரத்தமிழ் கேட்டு வளர்ந்தவர். வானொலிகளும், தொலைக்காட்சிகளும், சாமான்யர்களின் வாசல் தேடிவந்திராத காலமதில், சுருட்டுக் கொட்டில்களில் சுருட்டுச் சுத்தும் தொழிலாளர்களுக்கு செவிக்கின்பம் தருவதற்காய், செய்திப் பத்திரிகைகளும், கதைப்புத்தகங்களும் வாசிக்கப்படும். இதற்கென்றே குரல்வளமும், தமிழ்த் தகமையும் பெற்ற நபரொருவர் நியமிக்கபடுவாராம். அப்படி வாசித்த தமிழ்கேட்டு வளர்ந்து, வாசிக்கும் தகமையாளராயும் மாறி, தமிழறிந்து, தானுணர்ந்து, தகமைசால் ஆசிரியனாக உருப்பெற்ற வரலாறு அவருரைத்துக் கேட்டிருக்கின்றேன்.

பத்தாவது வயதில் எனக்குப் பாடம் கற்பிக்க வந்தவர், பள்ளிப்பருவம் தாண்டியும், அன்பில் நண்பனாயும், அறிவுறுத்தலில் ஆசானாயும் தொடர்ந்திருக்கிறார். பத்து வயதுகளிலே “ பாட்டி மடியமர்ந்து பலகதைகள் கேட்டு... “ எனக்கவியெழுதி அரங்காற்ற வைத்தவர், அதற்கடுத்து பல் துறைகளுக்கும் படிவடித்துத் தந்தார். சில பொழுதுகளில் கோபித்தும், பல பொழுதுகளில் நேசித்தும், அன்னைக்கு நிகரான அக்கறை கொண்டிருந்தார். கல்வி கற்பித்தல் மட்டுமே தன் கடமையெனக் கருதாத பேராசான்.

முதன் முதலில், ஆங்கில தினவிழா வொன்றிற்கான நாடகத்திலேயே, நடிகனாக அரங்கேற்றினார். பின் பாடகனாக, பேச்சாளனாக, கவிஞனாக, என்னையுமறியமால், என்னுள்ளே அவர் பதியம் போட்ட வித்தையை, இப்போ நினைத்துப்பார்க்கையில், ஆச்சரியமும் அழுகையும் சேர்ந்தேவருகிறது.

பாட்டுப் போட்டிகளுக்கான பயிற்சிகள் தந்து, போட்டி நாட்களில் கூட இருந்து, இறுதிக்கணங்களில், நம்பிக்கை தந்து, அரங்கில் நான் ஆற்றும்போது, அவையின் அந்தத்தில், கைகளிரண்டையும் பின்னே கட்டி, சிந்தனை பாதி, கடைவாய் சிரிப்புப் பாதியென மெல்ல நடந்து, வெற்றி உனக்குத்தான் என தட்டி மகிழும் தன்மைதனை எத்துணை சொன்னாலும்,
எத்துணை புகழ்ந்தாலும் தகும்.

பள்ளிப்பருவத்திற்கப்பால், நல்லதோர் நண்பனாய் வந்தபொழுதுகளிலும், ஆசான் எனும் மரியாதை என்னிடமும், மாணவன் எனும் மதிப்பு அவரிடமும் குறையவேயில்ளை. இளவயதுப் பொழுதுகளின் மாலைகளில் அவர் அறிமுகஞ் செய்த கவிகளில் பாரதியும், பாரதிதாசனும், கூடவே, ஷெல்லியும், பாப்லோ நெருடாவும், இருந்தார்கள். அவரின் ஆங்கிலப்புலமையும், அழகு தமிழும், அவர்களை எனக்கு நன்கு காட்டின.

சோ.ப. வின் ஆங்கிலப்புலமை, ஆபிரிக்கக் கவிதைகளை தமிழில் மொழிபெயர்க்க முனைந்தது. ஒரு சில முயற்சிகள் பின்னாளில் நடந்தன என்றும் அறிந்தேன். ஆயினும் புலத்திற்கொருமுறை அவரை அழைத்து மகிழவேண்டும் எனும் எண்ணம் மட்டும் இன்னும் கூடவில்லை. இனிவரும் காலங்களிலாயினும், இனிதாய் என் எண்ணம், செயலாய் முடிய வேண்டும்.

இங்கிவனை நல்ஆசானாய் நான் பெறவே, என்ன தவம் செய்தேனோ....?

அண்மையில் யோகன் கடகம் என்ற பதிவெழுதக் காரணமாயிருந்தது, சோ.ப வின் கவிதைதான். அக்கவிதையை கற்றதும் பெற்றதும் பகுதியில் சுஜாதா அவர்கள் பாராட்டி இருந்தார்கள். முடிந்தால் அக் கவிதையை இங்கே இணைக்க முயல்கின்றேன்.

8 comments:

கானா பிரபா said...

சோ ப வை ஆசானாகப் பெற்றது உங்களுக்குக் கிடைத்த நல்லதிஷ்டம்,
சுற்றிச் சுற்றி எங்கள் அயலூர்க்காரர்களைப் பற்றியே பதிவுகள், தொடருங்கள் ஐயா:-)

Anonymous said...

இரவி,நீங்கள் பட்ட அனுபவம் உண்மையில் சோ.பா.வை இன்னும் உயரிய இடத்தில் வைக்கிறது.

மலைநாடான் said...

பிரபா!

சோ.பா உங்கள் அயலூர்காறராக இருக்கலாம். ஆனால் அவரை நான் சந்தித்தது தம்பலகாமத்தில். அது சரி அவரை உங்களுக்குத் தெரியுமா?

மலைநாடான் said...

அனானி!

இரவி என்று யாரை அழைத்திருக்கிறீர்கள்? ஐயா! நான் அவனில்லை :))

வெற்றி said...

பதிவைப் படித்தேன் ஐயா.

கானா பிரபா said...

வணக்கம் மலைநாடான்

சே.ப வை நேரடியாகச் சந்தித்த அனுபவம் இல்லை.

மலைநாடான் said...

வெற்றி!

என்ன? வாத்தியார் பற்றி வாசித்ததும், வகுப்பில் இருக்கும் எண்ணமோ? உள்ளேன் ஐயா பாணியில் கருத்து. :)))

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

மலைநாடர்!
நீங்கள் நல்லாசானைத் தான் பெற்றுள்ளீர்கள்! அன்புடன் நினைவு கூர்ந்துள்ளீர்கள். என் தேடுதல் வட்டத்தின் விட்டம் குறைவானதால்; இவரைப் பற்றி இப்போதே! அறிகிறேன்;
யோகன் பாரிஸ்