Wednesday, November 22, 2006

சகானா நீ இனிமையா சுகமும் கூட

கே.பாலசந்தரின் ''இரயில் சிநேகம்'' தொலைக்காட்சி நாடகத்தில், வந்த சகானா ராகப்பாடலைப்பற்றி, இரன்டு நாட்களுக்கு முன் பிரியமுடன் கே.பி. பதிவில் பார்த்தபோது எனக்கு மீண்டு வந்த ஞாபகங்களில், கீழேயுள்ள கவிதையும் அடங்கும்.

பாலசந்தர் இயக்கிய தொலைக்காட்சி நாடகங்களில், வித்தியாசமான கதை, வித்தியாசமான கமெராக் கோணக்கள், என அன்றைய பொழுதுகளில் என்னைக் கவர்ந்திருந்தது இரயில் சிநேகம். குறிப்பாக இப்போதுள்ளது போன்று பெரியதிரைக் காட்சிப் பெட்டிகள் வந்திராத அந்த நேரத்தில், சின்னத்திரை உண்மையில் சின்னத்திரையாக இருந்தகாலத்தில், இரயில் சிநேகத்தின் கமெராத் தொழில்நுட்பம், தொலைக்காட்சியில் பார்பதற்கு இதமாகவே இருந்தது.

அதைவிடச் சுகமாக இருந்தது சகானா ராகத்தில் அமைந்த இந்தப்பாடல். முறைப்படி சங்கீதம் கற்றிராத எனக்குச் சகானா ராகத்தைச் சொல்லிக் கொடுத்தது. ஆன்மா கரைந்துபோகும் வண்ணம், சோகத்தைத் தரும் அந்த ராகம் என்னுள் ஏற்படுத்திய தாக்கத்தில், அப்போ பிறந்த கவிதையிது.


சகானா
நீ மென்மையான ராகம் மட்டுமல்ல
இனிமையான சுகமும் கூட

நீ அழுதிடும் குழந்தைக்கு - தாய்
பாடும் தாலாட்டு
அலைமோதும் உள்ளங்களுக்கு - சுகமான்
இளந்தென்றல்
ஒரு சோலைக்குயிலின்
சோக கீதம் போல் - சுகமானது
உன் பாடல்கள்.

தெவிட்டாத திராட்சை ரசம் தரும்
போதைக்கிணையாகும் - உன்
ஆரோகண அவரோகண நிரவைகள்
அதியமானுக்கு ஓளவை கொடுத்த
நெல்லிக்ககனிபோல்
எனக்கு நீ

உன் ராக ஆலாபனையால் - என்
உள்ளம் உவக்கிறது
உள்ளம் உயிர்க்கிறது

சகானா
நீ மென்மையான ராகம் மட்டுமல்ல
இனிமையான சுகமும் கூட



நினைவைத்தூண்டிய பதிவாளருக்கு நன்றி.

2 comments:

கானா பிரபா said...

நினைவில் முக்குளித்துத்தந்த நல்லதொரு கவிதை, நன்றிகள்

nagoreismail said...

அருமையான "இரயில் சிநேக" த்தின் கதை 'வாஸந்தி' அவர்களுடையது என்று எண்ணுகிறேன், இந்த அருமையான தொலைபடத்தை விசிடியிலோ டிவிடியிலோ கிடைத்தால் வாங்க ஆவலாக உள்ளது. நாகூர் இஸ்மாயில்