மகிழ்ச்சி! மெத்த மகிழ்ச்சி !!
90 களின் இறுதியில், ஐரோப்பாவிற்கு கசப்புக்களுடனும், கனவுகளுடனும், புலம்பெயர்ந்த ஒர் ஈழத்தமிழன். காலடி எடுத்து வைத்த முதல்நாளில், கணனியில் தமிழ் கண்டு, காதலாய் தடவி ரசித்தவன். அன்று முதல் கணித்தமிழைப் படிப்படியாகக் கற்று வருபவன். வரும் வழியில் இன்று வலைப்பதிவில் தடம்பதித்துள்ளேன். மகிழ்ச்சி! மெத்த மகிழ்ச்சி!!
இதற்கு இவ்வளவு ஆர்ப்பாட்டமா? கேட்கலாம்..ஆங்கிலஅறிவோ, ஐரோப்பிய மொழிப் புலமையோ இல்லாது, தனித்தமிழில் முயற்சித்து, முயற்சித்து, முன்வந்திருக்கின்றேன். இந்த முனைப்புக்கு முதுகெலும்பாயிருந்த முகம் தெரியா நணபர்கள் காசி, புதியவார்ப்புக்கள், ஏகலப்பை குழுமத்தினர். இவர்களுக்கு என் சார்பாகவும், என்னைப்போன்றே முட்டி மோதி வந்து கொண்டிருக்கும் அறிமுகமற்றவர் சார்பாகவும், நன்றிகள் பலப்பல..
புலத்தில் ஊடகங்களின் உண்மைநிலை அல்லது தகைநிலை, ஐயத்துக்கிடமாகிவிட்ட நிலையில், வலைப்பதிவுகள் ஆற்றலை, ஆறுதலைத் தரும் விடயம் என்றே எண்ணி யிருந்தேன்: ஆனால் இங்கு வந்ததின் பின்தான், இங்கும் நிலமை சுமுகமாகவில்லை என்ற உண்மை உறைக்கிறது. ஆனாலும், சுதந்திரமான தொடர்பாடல்களம் என்றநிலையில் மனதில் நிறைந்தே இருக்கிறது. அதுமட்டுமல்ல ஆயிரமாயிரம் கருத்தாளர்கள் கரம்சேர்க்கும் தளம் அல்லவா தமிழ்மணம். கற்றுக்கொள்ளலாம் என்று நம்பி வந்திருக்கின்றேன். என் எண்ணச்சிதறல்களையும் இங்கு வைப்பேன்.
இனிவரும் நாட்களில் இன்னும் பேசுவோம்
2 comments:
வாருங்கள், எழுதுங்கள்
சிவனடியார், ராம்!
நன்றி.
Post a Comment