Sunday, April 27, 2008

சிறைக்குள்ளிருந்து...நெருப்புப் பூக்கள்.



சின்ன வயதில், தென்னம் பொந்திலிருக்கும் பச்சைக்கிளியை கூட்டிலடைத்து வளர்க்கும்போது அப்பா ஏசுவார். கூட்டிலடைத்து வதைக்கவில்லை வளர்க்கின்றேன் எனச் சொல்வேன். பின் அடைபட்ட பொழுதுதொன்றில், அப்பாவின் ஏச்சும், அடைபட்டகிளியின் சோகமும், சுதந்திரமும் புரிந்தது. ஏக்கமும், வலியும், மிக்கதான சிறைவாழ்வு, சிறிலங்கா போன்ற அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்படும் நாடுகளில் மேலும் துயர் தருவதாகும். ஏனெனில் அவை வெறுமனே சிறைச்சாலைகளாக மட்டும் அமைந்து விடுவதில்லை.

சிறைக்கைதிகளின் பகுப்பில் கிடைக்கக் கூடிய உரிமைகளெதுவும், தடுப்புக்காவல் சிறைக்கைதிகளுக்குக் கிடைப்பதில்லை. அப்படியான அவலம் நிறைந்த ஒரு தடுப்புக்காவல் சிறைச்சாலைதான் சிறிலங்காவின் "பூசா" சிறை.
இதன் இறுகிய இரும்புக்கம்பிகளின் பின்னால் இருந்து, தேச உணர்வில் எழுந்த ஒரு கவிக்குரலை, அழகாக அச்சிலேற்றித் தந்திருக்கிறது சுவிஸ் "நிலவரம்" பத்திரிகைக் குழுமம்.


"நான் ஒரு இளையவன். வாழ்பனுபவமற்றவன். கவிதைபற்றிய ஆழ்ந்தறிவு அற்றவன். விடுதலைக்கு ஏகி நிற்கின்ற தேசத்தை உணர்வுகளினால் நேசிக்கின்ற உறவுகளுடன் வாழ்ந்து வருகின்ற நான், அந்த உணர்வுகளின் ஓசைகளையே கவி வரியென்ற நினைவுடன் கோர்த்துள்ளேன். உணர்வுகளின் துடிப்புக்களுக்கு வரிவடிவம் கொடுத்த நான் நிறையத் தவறுகள் விட்டிருப்பேன்..."
இப்படிச் சொல்வது, 2000 மாவது ஆண்டின் தொடக்கத்தில் கைது செய்யப்பட்டு, வழக்கு விசாரணகளின்றி தொடர்ந்தும் தடுப்புக்காவல் கைதியாகப் பூசா சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர் கல்லடி றொபேட். 2005 ல் 'சிறையில் பூத்த உணர்வின் ஒளி' எனும், கவிதைத் தொகுதியைத் தொடர்ந்து, இப்போது வெளிவந்திருப்பது, அவரது இரண்டாவது தொகுதி "நெருப்புப் பூக்கள்".

நீண்டகாலமாகச் சிறைப்பட்டிருப்பினும், சிறைவாழ்வின் துயர்பேசிக் கழிவிரக்கம் வேண்டாது, மண்மீதான காதல், விடுதலைமீதான ஏக்கம், இழந்துபோன வாழ்வின் சோகம், போராட்டத்தின் மீதான தீரம், என்னும் உணர்வுகளே றொபேட்டின் குரலாக சிறைக்குள்ளிருந்தம் வெளிப்படுகிறது.

என் பாட்டனின்
படம்
என்வீட்டு
சாமியறைக்குள்
சிலந்திவலை
பின்னப்பட்ட
நிலையில்
பத்திரமாய்
தொங்குகிறதாம்!.... எனத்தொடங்கி

என் வளவினுள்
இப்போதுதானாம்
ஒரு சிறியதூரம்
மிதிவெடிகள்
அகற்றியுள்ளார்கள்
மிகுதியும்
அகற்றி முடியும்போது...

என் பிள்ளைகள்
என் படத்தை
புலும்பெயர்நாடுகளிலுள்ள
தங்கள் வீட்டு
சாமியறைக்குள் மாட்டி
தங்கள்
குழந்தைகளுக்கு
காண்பிப்பார்கள்
இவர்தான்
உங்கள் பாட்டனென... எனும் கவிதைக்குள் வரும்,
தமிழீழத்தின் சோகக் கதைகள் ஏராளம்.
ஈழத்தின் சோகம் மட்டுமில்லாது,
மனிதநேயம் பற்றியும் றொபேட்டின் குரல் எழுகிறது.
மனிதம் எனும் கவிதையில் அதைக் காணலாம்.

14.08.2006 சிறிலங்கா விமானப்படையின் விமானத்தாக்குதலில் அவயங்களையிழந்த பிள்ளைகளுக்கு, இத்தொகுதியின் விற்பனையில் கிடைக்கும் பணம் , உதவித்தொகையாக அமைய வேண்டும் எனும் றொபேட்டின் பெரு விருப்போடு, அவரது உணர்வின் வரிகளை, சிறையிருந்து வெளிக்கொணர்ந்து வெளியீடு செய்யும் வரையில், கி.பி அரவிந்தன், பத்மநாபஐயர் உள்ளிட்ட பலரது உழைப்பு உடனிருந்திருக்கிறது. ஒடுக்கப்பட்டு, அடைக்கப்பட்டிருக்கும், ஒரு தடுப்புக்காவல் கைதியின் இத்தகைய செயற்பாடு, அவனுக்கு எத்தகைய பாதமான நிலையைத் தருமென்பதைத் தெரிந்திருந்தும், தன் குரலை உயர்த்தி ஒலித்திருக்கும் றொபேட்டின் 'போய்விடுங்கள்' கவிதைக்குள், அமெரிக்கச் சிப்பாய்களை எதிர்ப் பாடிய பொப்மார்லி யும் ஓரத்தில் ஒளிந்திருப்பதைக் காணமுடிகிறது.

பிரபலங்களின் எழுத்துக்களினால் பணம் பண்ணவும், பணத்தினால் பிரபலம் பண்ணவும் விழையும் சூழலில், சிங்களப்பேரினவாதத்தின் சித்திரைவதைச் சிறையுள்ளிருந்து, ஈழக்குயிலொன்றின் விடுதலைக்குரலை வெளிக்கொணர்ந்த அனைவரையும் பாராட்டலாம்.

Thursday, April 17, 2008

நா.உச்சம், அ.நா.எச்சம்.

இது என்ன தலைப்பு என்று எண்ணத் தோன்றுகிறது. அதுதான் சென்ற இடுகையிலேயே இந்தத் தலைப்புக் கொடுத்தாயிற்றே. .. எதற்கும் விரிவாக இன்னுமொருமுறை இங்கே இட்டுக்கொள்வோம்.

நாகரீகத்தின் உச்சமும், அநாகரீகத்தின் எச்சமும்.



சரித்திரப்புத்தகங்களைப் பாடமாகப் படித்திருந்த போதும், வெள்ளைக்காறனெல்லாம் படித்தவன், விவரம் தெரிந்தவனென்ற நினைப்பு, புலம்பெயர்ந்து வரும் வரைக்கும், மனதில் எங்கோ ஓர் மூலையில் கொஞ்சம் ஒட்டிக்கொண்டுதானிருந்தது. வந்தபின் நேரில் பெற்ற அனுபவங்கள் நிறைய அறியத் தந்தன. எங்கள் நிலங்களுக்கு வந்து கோலோச்சியவர்கள் ஒன்றும் கோமகன்கள் இல்லை, கடற்கொள்ளையர்களாகவும், அடியாட்களாகவும், வாழ்ந்தவர்களின் வாரிசுகள்தான் என உறைத்தது.

ஏறக்குறைய இறப்பு நிலைக்கு வந்துவிட்ட ஒரு நோயாளி, யாரோ ஒருத்தர் வருகைக்கான கனங்களைக் கழிக்கும் நிலையிலிருந்த போதும், தன வாழ்வின் எழுச்சிமிகு நிலைகளை எண்ணிப்பார்த்து மகிழ்ந்து, ஏங்குவது போலிருந்ததது அந்தப் பெரும் அரங்கைப் பார்க்க. Coliseum என்பதற்கு அகாராதியில் பேரரங்கம் எனப் பொருள் வந்தது. அகண்ட பெரும் ரோமானிய சாம்ராஜ்யத்தின் ஆடம்பர களியரங்கு அது. ஆனால் ரோம சாம்ராஜ்யத்தின் எதிரிகளுக்கு உண்மையில் அது கிலியரங்கு.



வாகனத்தைவிட்டு இறங்கியதுமே, வான்முட்ட உயர்ந்து நிற்கும் அந்த கலையரங்கின் பிரமாண்டம் உசுப்பியது. உள்ளே நுழைவதற்கு வரிசையில் காத்திருந்த போது, இந்த பிரமாண்டத்தை எந்தக் கோணத்தில் படப்பெட்டிக்குள் பதிவு செய்யலாம் என எண்ணத்தோன்றியது. சோழ சாம்ராஜ்ய உச்சத்தின் எச்சமாக இருக்கக் கூடிய தஞ்சைப்பெருங்கோயிலுக்கு முன்னால் நின்றபோதும், இந்த அவா என்னுள் வந்திருந்தது.


அழிந்து போன நிலையில் இருக்கின்றபோதிலும் கூட, ஒவ்வொரு பக்கத்திலும் ஏதோ ஒருவித அழகைக் கொட்டிவைத்த வண்ணமேயிருக்கிறது.
சும்மா சுற்றிப்பார்த்து வருகையிலேயே அரைநாட்பொழுதினை அப்படியே பறித்தெடுத்து விடுகிறது அந்தப் பிரமாண்டம். சந்தேகமில்லை, கலையின் நயம் தெரிந்தவர்களும், நயக்கத்தெரிந்தவர்களும் இணைந்த இணைவில் பிறந்திருக்கிறது அந்தக் கலையரங்கு. கலைகளின் வரைபுயர்வில், நாகரீக உச்சம் தொட்ட இனத்தவர்களாக வாழ்ந்தவர்கள் பட்டியலில் அடங்குபவர்கள் ரோமானியர்கள். இருந்தென்ன, மனித மான்பு மறந்து, சகமனிதனின் வலியை, சாவை, குரலெழுப்பி ரசித்து, கொண்டாடியிருப்பதை அறியும்போது, 'அடப்பாவிகளா' என அரற்றிவிடுகிறோம்.

எதிரிகள், கைதிகள், குற்றவாளிகள் என வகைபிரித்து வைத்து, மனிதனை மனிதன் தாக்கிக் கொல்வது, மனிதனை மிருகத்துடன் சண்டையிட வைத்துக் கொல்வது, என வகைவகையாய் வதைகள் செய்வதை, ஊர்கூடி ஒய்யாரமாக ரசித்திருந்த நாகரீகத்தை என்னவென்று சொல்வது. ' ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளையொக்கும் ' எனத் தமிழில் ஒரு முதுமொழியுண்டு. இது உண்மையென்றே சொல்லத் தோன்றுகின்றது இடிந்து போய்கிடக்கும் ரோமானியச் சிதிலங்களைப் பார்க்கும்போது.

மிருகங்கள் வளர்க்கப்பட்ட கூடுகள், மிருகங்களாய் அடைக்கப்பட்ட மனிதர்களின் குறுங்கூடங்கள், அடித்தளத்தில். அதன் மேலாக ஆடுதளம், அல்லது கொலைக்களம். அதற்காப்பால் விரிந்துயரும், விருந்தினர், பார்வையாளர், அமர்தளங்கள். அனைத்தையும் அழகியகலை நயத்துடனும், அதிநுட்பத் தொழிற்திறனுடனும், இவையெல்லாவற்றுக்கும் மேலாக , எண்ணிட முடியா இடாம்பீகத்துடனும், கட்டிமுடித்து, கலை ரசிக்காது கொலை ரசித்த சக்கரவர்த்திகள், அங்கே கதறியழுத ஒவ்வொருத்தன் கண்ணீரும், தங்கள் இராச்சியங்களின் காரைகளை பெயர்த்தெடுக்குமென்று கனவிலும் நினைத்திருக்கமாட்டார்கள்.

பாதாளச்சிறைகளின் நிலங்களில் இப்போ பசும்புல் முளைத்திருந்தாலும், பார்வையாளர் பலர் தினமும் பாரத்துருகிப் போனாலும், உள்ளிருந்து வெளிவருகையில், எங்கோ ஓர் மூலையில் யாரோ அழும் ஓலம் சன்னமாய், அவலமாய், கேட்கிறது. சாடையாக நமது சரீரம் நடுங்குகிறது. ஜெபமும் சபிப்பும் ஒன்றையொன்று துரத்திப்பிடித்து விளையாடுகிறது. எதுவானாலும், எங்கள் முன்னோர் இப்படித்தான் இருந்தார்கள் என, ஒழிவு மறைவின்றி, ஒப்புக்கொடுக்கின்றார்களே, அவர்கள் மனிதர்கள்.