அப்பா! நாளைக்கு வீட்டில் நிற்பீர்கள்தானே?
என் இளைய மகள் கேட்டாள். ஏன் கேட்கிறாளென அவள் சொல்லாவிடினும், எனக்குப் புரியும். நாளை தந்தையர் தினம். காலையில் சிறிய பரிசுப்பொதியுடன் என்னைத் துயிலெழுப்புவாள். மார்ச் 19ந் திகதியை கத்தோலிக்கர்கள் புனித சூசையப்பர் தினமெனக்கொள்வார்கள். அன்றைய தினத்தில், தங்கள் தந்தையருக்கு பரிசுப்பொருட்கள் வழங்கி அவர்களை மகிழ்ச்சிபடுத்தும் வழக்கம் ஐரோப்பியக் கத்தோலிக்கர்கள் மத்தியிலுள்ளது. தற்போதுள்ள வணிகப்பெர்ருளாதாரக் கட்டமைப்பில், காதலர்தினம், தந்தையர்தினம், அன்னையர்தினம், என்பன வணிகத் தன்மைகொண்டவையாக மாறிவருகின்றபோதும், இயந்திரத்தனமான இவ்வாழ்நிலைச் சூழலுக்குள் சிறிதளவேனும் ஈரம் கசியவைக்கிறது என்றே சொல்லலாம். பெற்றோர்களை வாழும் காலத்தில் கணம் பண்ணுவதும், அவர்களின் உணர்வுகளை மதிப்பதும், இனிய அனுபவங்களே. ஆனாலும் இது அருகினில் வாழும் காலத்தில், பிள்ளைகளாலும் சரி, பெற்றோர்களாலும் சரி, சரிவரப்புரிந்துகொள்ளபடுவதில்லை என்றே எண்ணுகின்றேன்.புலம் பெயர்ந்த சூழலில் வாழும் ஒவ்வொருவருக்கும்,அவர்கள் பெற்றோருடனான நினைவுகள் சுகமான மீள்நினைவுகள் மட்டு மல்ல, புரிந்துணர்தலின் பரிமாணமும் கூட. புலப்யெர்வின் பின் என் அப்பா பற்றிய மீள்நினைவுகள், அவர் குறித்து ஆச்சரியப்படத்தக்க உண்மைகளை எனக்கு உணர்த்தியது. அத்தகைய இரு நினைவுகளை இங்கே பதிவு செய்கின்றேன்.
முதல்நினைவுக்குரிய சம்பவம் நடைபெற்றபோது, எனக்குப் பத்து அல்லது பதினொரு வயதிருக்குமென நினைக்கின்றேன். ஒரு முற்பகல் அப்பாவும், அவரது நண்பரும் கதைத்துக் கொண்டிருந்தார்கள். நண்பரின் குரல்தழுதழுத்திருந்தது. கண்கள் கசிந்தவண்ணமிருந்தது.
''எனக்கு மட்டும் வளர்ந்த ஆண்பிள்ளை இருந்திருந்தால், நான் எதுக்கும் பயப்படமாட்டன், உன்னை இப்பிடி அழவும் விடமாட்டன்..''
அப்பா சொன்ன மாத்திரத்தில், அப்பாவின் கைகளில் முகம் புதைத்து கதறிவிட்டார் நண்பர். முழுமூச்சான விளையாட்டின் மத்தியிலும், இவ்வளவும் அழியாத காட்சிப்படிமங்களாக மட்டும் அப்போதைக்கு என்னுள் பதிந்துவிட்டது.
இரண்டாவது நினைவு நிகழ்ந்தபோது, வாலிபத்தின் வாசலில் நின்ற பருவம் எனக்கு. தமிழர் விடுதலைக்ககூட்டணி தமிழீழத்திற்கான அறைகூவல் எனக்குறி, தேர்தலில் குதித்திருந்த காலம். தமிழ்உணர்வாளர்கள் ஒரு அணியில் திரட்டப்பட்டுக் கொண்டிருந்த நேரம். பேரினவாதக் கட்சிகளும் தங்கள் பங்குக்கு தமிழ் மக்கள் மத்தியில் பிரதிநிதிகளை அமைத்துச் செயற்பட்டுக் கொண்டிருந்தார்கள். அரசியல் ஆர்வமிக்க மாணவர்களாகவிருந்த நானும் எனது நண்பர்களும், தமிழர்விடுதலைக்கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காகத் தீவிரமாகச் செயற்பட்டோம். (வெற்றியின் பின் கூட்டணி நிலைமாறியது வேறவிடயம்) அப்பா வேலை செய்த இடத்தின் பொறுப்பாளரின் உறவினர் ஒருவர், பெரினவாதக் கட்சியொன்றின் வேட்பாளராக போட்டி யிட்டார். அவரின் வெற்றிக்காகப் பொறுப்பாளர் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்தார். வீடுவீடாகச் சென்று வாக்குவேட்டையாடினார்கள். ஊருக்குள் அவர் முக்கிய பிரமுகர் என்பதால், எல்லோரும் அவர் முகத்தைக் முறிக்கக் கூடாதென சரியென்றே பதில் கூறினார்கள். ஆனால் எங்கள் வீட்டிற்கு அவர்கள் வந்தபோது, அப்பா நேரடியாகவே மறுத்துரைத்துவிட்டார். எல்லோர்க்கும் ஆச்சரியமும், கூடவே பயமும். மிகநீண்டநாட்களாக அந்த இடத்தில்தான் அப்பா வேலைசெய்துவந்தார். அதுமட்டுமல்லாது, அப்பாவிற்கு வேறுவேலை எதுவம் தெரியாது. இந்த நிலையில் எதிர்காலம் பற்றிய எந்தவிதபயமும் இன்றி அப்பா நேரிடையாகச் சொல்லி விட்டார். அப்போது, மற்றவர்கள் அதுபற்றி எண்ணிப் பயந்தளவிற்கு அப்பா பயங்கொள்ளவில்லை. ஆனால் எல்லோரும் பயந்தளவிற்கு ஒன்றும் நடக்கவில்லை. கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்றது. அப்பாவின் வேலைக்கும் ஒன்றுமாகவில்லை. மற்றவர்கள் வாக்களிப்பதாகக் கூறி ஏமாற்றிவிட்டதை, தேர்தல் முடிவுகள் பொறுப்பாளருக்கு உணர்த்தியது. அப்பாவின் நேர்மையும் அவருக்கப் புரிந்ததது. அதனால் அப்பாவின் வேலையும் தொடர்ந்தது. அப்பாவின் துணிவும், கருத்து நேர்மையும், அன்று எனக்கு அவ்வளவு புரியவில்லை. இப்போது யோசிக்கும் போது உயர்ந்து தெரிகிறார் அப்பா.
சரி! முதல் நினைவில் நடந்தது என்னவென்று குழப்பமாகவிருக்கிறதா?
சொல்கிறேன்...
அப்பாவின் நண்பருக்கு ஐந்து பெண்பிள்ளைகள். அவர்களில் ஒருபெண் தவறான உறவில் தன்னிலை இழந்துவிட்டாள். வெளிப்படையாகச் சொல்வதாயின் கர்பமாகிவிட்டாள். இந்த நிலை வெளியே தெரிந்தால் அவரின் முழுக்குடும்பமுமே தற்கொலைசெய்துவிடும் நிலை. அந்தக்கணத்தில் நடந்த உரையாடல்கள்தான் அவை. (பின்னர் அப்பிரச்சினையை சுமுகமாகத் தீர்க்கப்பட்டவிட்டது)அன்று அப்பா சொன்ன வார்த்தைகள் , ஒப்புக்குச் சொன்னவார்த்தைகள் அல்ல. நண்பனின் துயரில் பங்குகொள்ள வேணு்மெனும், உயர்வான எண்ணத்தில் சொல்லப்பட்ட வார்த்தைகள் என்பதை உணர்வதற்கு எனக்கு வெகுகாலம் தேவைப்பட்டது.
6 comments:
அருமையான பதிவு. தங்கள் நினைவுகளைப் பகிர்ந்தமைக்கு நன்றி.
உங்கள் பதிவுகள் firefoxஇல் படிக்க முடியவில்லை. align=justify இல்லாமல் பதியுங்கள்.
இயந்திரத்தனமான இவ்வாழ்நிலைச் சூழலுக்குள் சிறிதளவேனும் ஈரம் கசியவைக்கிறது என்றே சொல்லலாம். பெற்றோர்களை வாழும் காலத்தில் கணம் பண்ணுவதும், அவர்களின் உணர்வுகளை மதிப்பதும், இனிய அனுபவங்களே. ஆனாலும் இது அருகினில் வாழும் காலத்தில், பிள்ளைகளாலும் சரி, பெற்றோர்களாலும் சரி, சரிவரப்புரிந்துகொள்ளபடுவதில்லை என்றே எண்ணுகின்றேன்
NALLA PATHIVU. NANRIGAL.
வணக்கம் மலைநாடன்,
அப்பாவின் நேர்மையான நட்பைக்காட்டியிருந்தீர்கள். அப்பாவைப் பற்றிய எழுத்துக்கள் இலக்கியத்தில் மிகக்குறைவு. சுவையான சம்பவங்களோடு காட்டியிருந்தீர்கள்.
வாழ்த்துக்கள்.
veri nice
கனாக்ஸ், தம்பி,கானா பிரபா, அனைவர்க்கும் நன்றி.
அப்பா எனும் உறவு எமதுசமூகத்தில் வில்லன் பாத்திரம் போல ஆக்கிவிட்டார்கள்
மனதைத் தொட்ட ஒரு பதிவு
Post a Comment