Sunday, March 30, 2008

நாகரீகத்தின் உச்சமும், அநாகரீகத்தின் எச்சமும்.

சென்ற வார இறுதி முதல், இவ்வார இறுதிவரை, வெளியூர் வாசம். இந்தக் காலப்பகுதியில் கண்டுணர்ந்த அநாகரீகத்தின் எச்சம் பற்றிப் பேச விருப்பம். ஆனால் இன்றல்ல.. மனங்களைத்த தருணமாகவிருக்கிறது. மறு இடுகையில் அது பற்றிப் பேசலாம். அதற்கு முன், நிறைவான ஒன்றுபற்றி இன்று. ஆக இது அடுத்த இடுகைக்கான ஒரு முன்.... அவ்வளவே. :)





பூப்பெய்தும் காலம்.



இந்தத் தலைப்பு யோசிக்கப்பட்டபோதே, இதன் எதிர்வுகள் பற்றியும் சிந்திக்கப்பட்டது. ஆனாலும் நிறைவில் அதுவே பொருந்தியுள்ளது.

ஆம், சுவிற்சர்லாந்தின் முதலாவது தமிழ் நீள் திரையோவியம், " பூப்பெய்தும் காலம்" திரையிடலுக்குத் தயாராகியுள்ளது.





புகலிட வாழ்வியலில், தடைகள் பல தாண்டி, வெற்றிச்சிகர முகடுகள் தொடும், வாலிபக்கதைகள் பல. அதில் ஒரு கதையிது. சுவிற்சர்லாந்து வாழ் தமிழர்களின் கொதிநிலை வாழ்வின் பிம்பமாக, ராப், ஹிப்ஹொப், இசைவழியிணைந்து திரை வழி விரிகிறது கதை.



சுமார், ஒரு மணித்தியாலம், முப்பது நிமிடங்கள் வரையில், திரையில் காட்சியாகும் இத்திரையோவியத்தில், சுவிற்சர்லாந்தின் இளந்தலைமுறைக் கலைஞர்கள் பலரும், வண்ணம் சேர்த்துள்ளார்கள். இசையும் வாழ்வுமாக வரும் கதையினை ஏ.ஜி. யோகராஜா எழுத, எஸ். இரமணன் நெறியாள்கை செய்ய, ஈழத்துத் தமிழ்திரையுலகப் பெருமைமிகு கலைஞர்களான, மூத்த கலைஞர் திரு.இரகுநாதன் அவர்கள் முக்கிய பாத்திரமொன்றிலும், சிறந்த நெறியாளராக தன் படைப்புக்களினூடு நிறுவிய திரு.கா.ஞானதாஸ் முதன்மை படைப்பு நெறியாளராகவும், பங்குகொண்டு அணிசேர்த்துள்ளார்கள்.



ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, இசையமைப்பு, நடிப்பு, மற்றும் அனைத்துப் பகுப்புக்களிலும், சுவிஸ்வாழ் இளையதலைமுறைக்கலைஞர்கள் பங்குகொள்ள, "பூப்பெய்தும் காலம்" திரையோவியத்தை, சுவிற்சர்லாந்தில் தமிழ்மொழியில் முதலாவது நீள்திரையோவியம் எனும் சிறப்போடு ஏப்ரல் மாதம் 5ந்திகதி, காலை.10.30 மணிக்கு, Bern, KINO ABC, திரையரங்கில், 'தமிழ் சினி சேர்க்கிள்' முதல் திரையிடலை நிகழ்த்துகிறது.



சுவிற்சர்லாந்தின் முதலாவது தமிழ் குறும்படமான " முடிவல்ல.." தயாரிப்பில் சுயம் படைப்பகத்தின் சார்பிலும், சுவிற்சர்லாந்தின் முதலாவது தமிழ் நீள் படமான " பூப்பெய்தும் காலம்" தயாரிப்பில், தமிழ் சினி சேர்க்கிள் சார்பிலும், நண்பர்கள் யோகராஜா, ரமணன், ஆகியோருடன் இணைந்த மகிழ்வில் திரையிடல் காண, வரமுடிந்த நண்பர்கள் அனைவரையும் வருமாறு அழைக்கின்றோம். வாங்கோ..!


மேலும் வாசிக்க இங்கே மற்றொரு செய்தியுண்டு.

Wednesday, March 19, 2008

பூவைப்போல புன்னகை காட்டு

இரண்டு வருடங்களுக்கு முன் இந்த மாதத்தில்தான வலைப்பதிவுகளில் எழுத வந்தேன். குறிஞ்சிமலர்தான் எழுதத்தொடங்கிய முதல்வலைப்பதிவு. அதன் ஆரம்ப அறிமுக இடுகைகளைத் தவிர்த்துப் பார்த்தால், இது குறிஞ்சிமலரில் நான் எழுதும் நூறாவது இடுகை. சற்றுத்திரும்பி, எழுதியவைகளை வாசித்துப் பார்க்கையில் என்னளவில் எனக்கு நிறைவாக இருக்கிறது. ஏனெனில் எனது இடுகைகளினால் யாரும் காயம் பட்டிருக்க முடியாது. எல்லோர்க்கும் நல்லவனாக இருக்கவேண்டும் என்ற சித்தாந்ததில் என் கருத்துக்களை முடக்கிக் கொண்டேன் என்றும் சொல்ல முடியாது. என்னால் என் கருத்துக்களைக் கொஞ்சமேனும் தெளிவாகச் சொல்ல முடிந்திருக்கிறது என்னும் நிறைவோடு....





" CHRIGU ". 21 வருடங்களில் இவ்வுலகைவிட்டுப் பிரிந்தவனின் கதை. இசையும் கலையுமென வாழ்ந்த ஒரு இளைஞன், தான் சாவைச் சந்தித்த தருணங்கள் வரை பதிவு செய்த வரலாற்றுப்பதிவு. வாழ்வில் சாதிக்க நினைத்ததைச் சாவில் சாதித்துக் காட்டியவனின் சரிதம்.


கிறிஸ்டியன்... அதுதான் அவனது பெயர். சுவிற்சர்லாந்தின் ஜுரா மாநிலத்தைச் சேர்ந்தவன். இளைஞனாக வளர்ந்தபோது இசையில் நாட்டம். இயல்பாக ஒளியைப் பதிவு செய்ய விருப்பம். அதனால் ஒரு ஒளிப்பதிவுக் கலைஞனாக உருவாகிக்கொள்கின்றான். எப்போதும் கூடவே ஒளிப்பதிவுக்கருவி. அது கருவி அல்ல அவனது மூச்சுப்பை என்றும் சொல்லலாம். இந்தியாவிலும், எகிப்திலும், கொட்டிக்கிடக்கும் கலைப்பொக்கிசங்கள் எந்தவொரு கலைஞனுக்கும் பிடித்தமானதுதானே?. இவனுக்கும் பிடித்திருந்தது. அங்கெல்லாம் சென்றான். அத்தனையையும், தன் விழிவழிப் பார்வைகளால் பதிவாக்கினான். நண்பர்களுக்குக் காட்டி மகிழ்ந்தான். காட்சிப்படுத்தலினால் இந்த உலகை, ஒருநாள் கவர்வேன் என்றான்....



இரத்தப்புற்றுநோய் கிறிஸ்டியனுக்கு. எத்தனையோ விருப்பங்கள், எத்தனையோ கனவுகள், என்றிருந்த அந்த இருபதுகளில் நின்றவனுக்கு இப்படியொரு வருத்தம் என்றதும், அதிர்ந்து போனான். ஆட்டம், பாட்டு, என மகிழ்ந்து திரிந்தவனுக்கு, மரணத்தின் சைகை தெரிந்தபோது...நொடிந்து போய்விட்டான். கையிலிருந்து கமெரா நழுவிக்கொண்டது. கூடவே திரிந்த நண்பர்கள் உடைந்துபோனார்கள்...

மரணம். அனைவர்க்கும் சர்வ நிச்சயமானது. அதை வெற்றிகொள்ளவேண்டும். கிறிஸ்டியன் அதை வெற்றிகொள்ள வேண்மென விரும்பினான். நண்பர்கள் கமெராவைக் கைகளில் எடுத்துக் கொடுத்தார்கள். எப்போதும் போல் உன் இறுதிக்கணங்கள்வரை, உன் எண்ணங்களைப்பதிவு செய். உன் உணர்வுகளை, வலிகளைப் பதிவு செய். உன் உள்ளத்தின் குரலைப் பதிவு செய் என உற்சாகமூட்டலை உள்ளிருந்தும், உடனிருந்தும் பெற்றான். சோர்ந்து போனவன் நிமிர்ந்தெழுந்தான். தன் கமெராக்காதலியை இறுகப்பிடித்தான். இறுதிக்கணங்கள்வரை.. தன் எண்ணங்களை, வண்ணங்களை, வலிகளைப்பதிவு செய்தான். பதிவுசெய்தவாறே படுத்துறங்கிப்போனான்....

மீளாத்துயிலில் ஆழ்ந்துபோனவனின் சாம்பலோடு, அவன் நேசித்த இந்தியநதிகளின் கரைகளுக்கு அவன் நண்பர்கள் வந்தனர். குளிர்ச்சி மிக்கதென வியந்து அவன் இரசித்த நதிகளின் நீரோட்டத்தில் சாம்பலாய் அவனைச் சங்கமிக்க வைத்தனர். கிறிஸ்டியன்! உன் ஆசையை, நேசிப்பை நாமறிவோம். ..கொண்ட நட்பின் பேரால் நாமதைத் தொடர்வோம் என சபதமெடுத்தனர். நதிகளின் வெள்ளத்து நுரைப்பில் கிறிஸ்டியன் சிரித்து விடைபெற்றான்....

ஜான் காஸ்மான். கிறிஸ்டியனுடைய நண்பன். கிறிஸ்டியனின் கனவுக்கு வடிவு கொடுத்தவன். மரணத்தின் பின்னும் அவனுக்கு வாழ்வு கொடுத்தவன். கிறிஸ்டியன் பதிவு செய்த எண்ணங்களை, வண்ணங்களை, வலிகளை, எடுத்துப்பார்த்தான். குடும்பம், நண்பர்கள், குதுகலம், நோய், வலி, தெளிவு, என பலபரிமாணங்கள் 120 மணித்தியாலங்களுக்கும் மேலாக ஒளிச்சுவடிகளில் பதிவாகியிருந்தன. அத்தனையையும் உற்று நோக்கி, ஒற்றியெடுத்து வடித்தபோது, 21 வயதுவரை வாழ்ந்த இளைஞனின் தனித்துவமான கதை, காவியமாக திரைகளில் தெறித்தது. அதுதான் " CHRIGU "......

உலகத்திரைப்படவிழாவில் தன் ஒளிப்படைப்பால் உலகைக்க கவரவிரும்பிய கிறிஸ்டியனின் விருப்பம், வாழ்வின் பின்னால் நிறைவேறியது. நண்பன் ஜான் காஸ்மானின் படத்தொகுப்பில், Mundartisten - இசைக்குழு நண்பர்களின் இசையில், இறப்பின் பின்னும் எழுந்து நடந்தான் கிறிஸ்டியன். உலக அரங்கின் சுவர்களில் உயர நின்று, சாதித்துவிட்டான். ஆம், " CHRIGU " 57 பேர்லின் சர்வதேச திரைப்படவிழாவில் கலந்து கொண்டு விருதுபெற்றது. தொடர்ந்து மேலும் பலவிருதுகளைப்பெற்றுக்கொண்டிருக்கிறது. அதன் விளம்பரஅறிவுப்புக்களில் நின்று கிறிஸ்டியன் சிரித்தபடி கேட்கின்றான், "மரணத்தை வென்றுவிட்டேனா..?"



திரைகளிலும், திரைப்படவிழாக்களிலும், கலந்துகொண்டபின், மார்ச் மாதம் 27ந் திகதி முதல் ஒளித்தகடுகளில் வருகின்றான் கிறிஸ்டியன். இந்த வெற்றிக் காவியத்தில் வரும் இந்தியக் காட்சிகளுக்கு, இசையணி சேர்த்திருப்பவன் ஒரு ஈழத்துநண்பன்.

----------------------------------------------------------------------------







வலைப்பதிவுலகில் தன் வலிகளைப் பதிவு செய்பவர்களில், இதே தன்மையில் தன்வலிகளை கேன்சருடன் ஒரு யுத்தம் எனப் பதிவுசெய்யும் தோழி அனுராதாவின் பதிவினைப் பாராட்டாமல் இருக்க முடியாது. அனுராதாவின் பதிவைச் சங்கமம் விருதுக் குழுமம் சென்ற ஆண்டின்சிறந்த அனுபவப் பதிவாக தெரிவுசெய்து கெளரவப்படுத்தியிருக்கிறது. மிகச்சிறந்த இத்தெரிவினை மேற்கொண்ட சங்கம் குழுமத்தினர்க்கும், நடுவர்களுக்கும், பாராட்டுக்கள். உடல்உபாதையால், உளச்சோர்வால், தளர்ந்துபோயிருந்த அனுராதா, இத்தெரிவினால் மீண்டும் உற்சாகம் பெற்றுள்ளார். வலைப்பதிவர் தோழி அனுராதா அவர்களுக்கு, அவரது முயற்சிக்கு, அவரது வெற்றிக்கு, அவரது உயிர்ப்புக்கு, அர்பணிப்பாக, இவ் இடுகையும், இப்பாடலும். தோழி! பூவைப் போல புன்னகை காட்டு.






பாடலுக்கான நன்றிகள்: தமிழீழ தேசிய தொலைக்காட்சி, மற்றும் போராளிக் கலைஞர்கள்.

கிறிஸ்டியன் படங்களுக்கான நன்றிகள்: CHRIGU தளம்.

Sunday, March 16, 2008

பாரதியாரின் ஞானகுருவான யாழ்ப்பாணத்துச் சுவாமிகள்.

"பாரதியாருக்கு குருவாக இருந்த யாழ்ப்பாணத்துச் சுவாமிகளின் சமாதி, இங்க பக்கத்திலதான் இருக்கு. பாக்கப்போறீங்களா சார்? " சிறி வில்லிப்புத்தூரிலிருந்து புறப்படுமுன் வாகனச்சாரதி கேட்டார். ஆச்சரியமாகவும், அறியப்படாததுமாக இருந்தது அவர் சொன்ன விடயம். இந்தியப் பயணங்களில் நமக்கு முதலில் வந்து வாய்க்கவேண்டும் நல்ல வாகனச்சாரதி். என்னதான் வெளிநாட்டுவேகவீதியில் கடுகதி ஓட்டிகளாக நாம் இருந்தாலும், இந்தியாவிலோ இலங்கையிலோ வாகனம் ஓட்டுவதென்பது கதிகலங்கிப்போகும் விடயம். நல்ல சாரதி, கூடவே கொஞ்சம் விசயம் தெரிஞ்சவராகவும் அமைந்துவிட்டால், அதுவே பார்த்தசாரதி வந்ததுபோலாகிவிடும். இம்முறையும் வழமை போலவே நல்லதொரு சாரதி வந்தமைந்தார். அவர்தான் மேற்சொன்ன கேள்வியைக்கேட்டார்.



"போகலாமே.."

வில்லிப்புத்தூர் பிரதான சாலையிலிருந்து வாகனம் திரும்பி சிறு பாதைகளினூடு சென்றது. பாரதி எல்லோர்க்கும் ஈர்ப்புடைய சொல். அவரை ஈர்ந்த நம்மூர்க்காறர் யாராக இருக்குமெனும் சராசரியான ஆர்வத்துடனிருந்தேன்.







மாலை மங்கிய பொழுதில் அந்த சமாதிக்கோவிலின் முன்பாகச் சென்றடைந்தோம். சிலர் முன்னாலிருந்த கிணற்றில் குளித்துக்கொண்டிருந்தார்கள். சமாதிக்கோவில்களுக்குரிய அமைவோடிருந்த சிறிய ஆலயத்துள் சிவலிங்க வழிபாடு நடைபெற்றுக் கொண்டிருந்தது. சூழலை ஆர்வமாய் பார்த்த போது தென்பட்ட விடயங்களைப் படமாக்கினேன்.

பாரதியாரின் உளங்கவர்ந்த யாழ்ப்பாணத்துச் சுவாமிகள்.


யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் குறித்து சுவரிலே எழுதப்பட்டிருந்த புகழ்மாலை.



அவரது இந்நினைவாலயத்தை புதுப்பித்தமை குறித்து சுவரில் காணப்பட்ட பதிவெழுத்து.

பொதுவாகத் தமிழகத்தில் ஏலவே, நல்லை. ஆறுமுகநாவலர், நல்லை ஆதீனம் சுவாமிநாத தம்பிரான் சுவாமிகள் ஆகியோர், யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் என்றே விழிக்கபட்டிருப்பதை அறிந்திருக்கின்றேன். ஆனால் இங்கே படத்திலிருக்கும் யாழ்ப்பாணத்துச் சுவாமிகளின் தோற்றம் அவர்களைச்சுட்டுவதாக அல்ல. அப்படியாயின் இவர் யார்? இவர்குறித்த விபரங்கள் ஏதாவது யாருக்காயினும் தெரியுமா என்பதை அறிய விரும்புகின்றேன்.

இங்கு பதிவெழுத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் கலாநிதி: க. குணராசா குடும்பத்துடன் தொடர்புபட்டவரென்பதன் காரணமாக, யாழ்ப்பாணம் கடையிற்சுவாமிகளுக்கும் இவருக்கும் ஏதாவது தொடர்பிருக்குமா எனவும் எண்ணத் தோன்றுகின்றது.

சென்றநூற்றாண்டில் தமிழ் கூறு நல்லுலகின் பெருமைக்குரு கவிஞனாகவிருந்த பாராதியாரின் சிந்தைகவர்ந்த குருவாக விளங்கினார் என்பதுவே முதன்மைக்காரணமாக, மேலும் இவர் பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வம் எழுகிறது. தெரிந்தவர் மேலும் சொல்க...

Thursday, March 13, 2008

கிருஷ்ணா கிருஷ்ணா, அமீர்கான்

தமிழகத்தில் நண்பர்களைச் சந்தித்த போதுகளில், பல விடயங்கள் பேசினோம், பார்த்தோம், படித்தோம். புத்தகங்கள் வாங்கவில்லையா? என்ற போது, பயணப்பொதிப்பாரத்தைக் கணக்கில் வைத்து சுருக்கமாகச் சிறந்ததாக சிலவற்றை வேண்டலாம் என்றேன். ஒலிப்புத்தகம் பற்றிய என் விருப்பத்தைச் சொன்ன போது, நண்பரொருவர் இந்திரா பார்த்தசாரதியின் "கிருஷ்ணா கிருஷ்ணா" நாவலைக் குறிப்பிட்டார். இந்திரா பார்த்தசாரதியின் எழுத்துக்களில் காணப்படும் மறுபக்கத்தன்மை என்றும் என் விருப்பத்துக்குரியது. கிழக்குப் பதிப்பகத்தின் வெளியீடாக MP3 ஒலிக்கோப்பாக வந்துள்ள பதிப்பில், இந்திரா பார்த்தசாரதியின் எழுத்துக்களுக்கு குரல்வடிவம் தருபவர் ரேவதி சங்கரன். ரேவதி சங்கரன் நல்லவொரு கதை சொல்லி. இயல், இசை, நடிப்பு கலந்து கதைசொல்வதன் மூலம், கிருஷ்ணனனை சமுதாயக்கனவாக இந்திரா பார்த்தசாரதி எழுத்தில் வடித்ததை நன்றாகவே பதிவுசெய்கிறார். நீண்டதூர வேகவீதிப்பயணியாக அதிகம் பிரயாணம் செய்யும் என்னைப் போன்றவர்களுக்கு இந்த ஒலிப்புத்தக வடிவு, நல்ல வழித்துணை. இவை எல்லாவற்றுக்கும் மேலாக 'கிருஷ்ணா கிருஷ்ணா' வில் இந்திரா பார்த்தசாரதி காட்டும் கண்ணன் எனக்கு மிக நெருக்கமாக வந்து போனான்.

பகல்பொழுதொன்றில் படம் பார்க்கக் கிடைத்த சந்தர்ப்பத்தைச் சொல்ல, 'தாரே சமீன் பார் ' பாருங்கள் எனத் தொலைபேசியில் கண்டிப்பாகச் சொல்லிவிட்டார் மற்றொரு நண்பர். ஹிந்தித் திரைப்படங்களில் அவ்வளவு ஆர்வமில்லாவிடினும், குறிப்பிட்டுச் சொன்ன நண்பர் குறைத்து மதிப்பிட முடியாதவர். சத்யம் தியேட்டர் வாசலில் தொற்றிக் கொண்ட தெரிந்தவர் ஒருவரின் சிறையெடுப்பில் சிக்கி உள்ளே போய், இரண்டு மணிநேரமாக வடிவேலுவின் சித்திரவதையில் நொந்து நூலாகிப்போனேன். பார்த்தது 'இந்திரலோகத்தில் நா. அழகப்பன்' என்று வேறு சொல்லவும் வேண்டுமா?. பாதிவழியில் சேர்ந்து சிறைபிடித்த நண்பர் சிரித்தவண்ணமாய் படம்பார்திருக்க, இதற்காக போனீர்களெனத் திட்டப்போகும் சீரியஸ் நண்பரின் சீற்றம் குறித்து சிந்தித்த வண்ணமே பார்த்திருந்தேன்.



முதல் முயற்சி தோல்வியில் முடிந்தாலும், மற்றொருமுறை முயற்சித்ததில் ' தாரே சமீன் பார்" பார்க்கக் கிடைத்தது. பார்க்கச் சொன்ன நண்பா, நன்றி. இது பற்றி இணையத்தில் நண்பர்கள் நிறையவே சொல்லி விட்டார்கள். ஆரம்பம் முதல் இறுதிவரையில் பல பல விடயங்கள் அசரவைத்தன. இன்னும் சில தடவைகள் பார்க்க வேண்டும். அந்தச் சிறுவன் இன்னும் கண்ணுள் நிற்கின்றான். அமீர்கான் பற்றி எனக்கு முன்னர் பெரிதாக அபிப்பிராயம் இல்லாதபோதும், இந்தப்படத்தின் மூலம் சில எண்ணங்கள் எழுந்தன.
சத்யம் திரையரங்கு தரமான திரையரங்காக இருக்கிறது. ' இந்திரலோகத்தில் நா. அழகப்பன் ' பார்த்தபோது, உடனடியாகவே படம் ஆரம்பித்தது. ஆனால் ஹிந்திப்படத்தின் முன் தேசியக்கொடியும், தேசிய கீதமும் திரையிலும் ஒலியிலும் வந்தன. திரையரங்கே எழுந்து நின்று மரியாதை செய்தது. இதமாயும், ஏக்கமாயும் இருந்தது. ....
நாமும் ஒரு நாள் எழுந்து நிற்போம்




- இன்னமும் சொல்லலாம்








































Monday, March 03, 2008

இத்தாலிய மொழியில் இந்தியத் தத்துவார்த்தம்.

உங்களை மற்றொருவருடன் ஒப்பீடு செய்வதனால், எழுகின்ற சங்கடங்களில், உங்கள் சுயத்தை இழக்கிறீர்கள். சுயமிழக்காது, நீங்கள் நீங்களாகவே இருக்க முற்படுங்கள்.
- ஜே.கே


இந்த வருட ஆரம்பத்தில் ஒரு நாள் மாலை,

"அப்பா புத்தாண்டுக்கு எனக்குக்கிடைத்த அன்பளிப்புப் பணத்தில், வாசிக்க ஒரு புத்தகம் வேண்டினேன்" என்றாள் என் பெண்.

என்ன புத்தகம்? என்பதற்கு முன்னதாகவே என்ன விலை? என்ற கேள்விதான் என்னிடமிருந்து முந்திக் கொள்கிறது.

"ஐம்பது பிராங்.."

"ஐம்பது பிராங்குக்குப் புத்தகம் வேண்டினாயா..?" மனம் பெருக்கல் வாய்பாடுகளில் கணக்கிடுகிறது.

"ஏன்? நூலகத்தில் எடுத்து வாசிக்க முடியாதா?.." ஆற்றாமையில் கேட்கின்றேன்.

"எடுக்கலாம். ஆனால் இது அப்படியில்லை. இந்தப் புத்தகம் எங்கள் வீட்டில் இருக்க வேண்டும். எல்லோரும் வாசிக்க வேண்டும்."

"அப்படியென்ன அற்புதமான புத்தகம்...?"




"Saggezze"

365 pensieri di maestri dell' india


இந்திய தத்துவார்த்திகளின் 365
"பொன்மொழிகள்" (உயர் சிந்தனைகள்)


எனத் தலைப்பிடப்பட்ட அழகான அட்டையுடன் கூடிய புத்தகத்தைக் கொணர்ந்தாள். இந்தியத் தத்துவார்தங்கள் குறித்து பல்வேறு மொழிபெயர்புக்கள் பல்வேறு மொழிகளிலும் வந்துள்ளன. இதிலென்ன முக்கியத்துவம் என்றெண்ணத் தோன்றும். அப்படி மொழிபெயர்க்கப்பட்ட புத்தகங்களுக்கும் இதற்குமிடையில் மிக முக்கிய வித்தியாசம் உள்ளது என்றே எண்ணத் தோன்றுகிறது.


பொதுவாகவே தத்துவார்த்த மொழிபெயர்ப்புக்களைத் துறைசார் அறிஞர்கள், ஆர்வலர்களே வாசிப்பது அதிகம். ஆனால் இந்தப்புத்தகம் இளையவர்கள் நாள்தோறும் வாசிக்கும் சிறு குறிப்புக்கள் கொண்ட தினக்குறிப்புப் புத்தகமாக இருந்தது. விரித்துப்பார்த்தேன், வியந்துபோனேன்.

ஜே.கிருஷ்ணமூர்த்தி, ரவீந்திரநாத் தாகூர், மகாத்மா காந்தி, கெளதமபுத்தர், விவேகானந்தர், அரவிந்தர், ரமணர், எனப் பல இந்தியதத்துவார்த்திகளின் சிந்தனைகள், சிறுசிறு குறிப்புக்களாக, குறுகத் தறித்த குறள் போன்று, இரண்டு முதல் நான்குவரிகளில் தினத்துக் கொன்றாக் தொகுக்கப்பட்டிருந்தது. அதற்கும் மேலாக இளையவர் முதல் பெரியவர் வரை லயித்தும் போகும் வண்ணம், இந்திய வாழ்க்கைப்பின்னணியிலான அதியற்புதமான புகைப்படங்கள் ஒவ்வொரு பக்கத்திலும். தத்துவார்த்தக்கருத்துக்களை எளிமையாகவும், அழகாகவும், தொகுத்திருந்தார்கள்.
"கண்டிப்பாக இருக்க வேண்டிய புத்தகம் தான்..." என்றேன். பெருமிதமானாள் பெண்.

எங்கே விற்பனையாகின்றது எனத் தெரிந்து கொண்டு, விற்பனை நிலையம் சென்றபோது, ஒருபெண்மணி அதே புத்தகத்தில் அதிக பிரதிகளை வாங்கிக் கொண்டிருந்தாள்.
"ஏன்..இவ்வளவு தொகையாக வாங்குகின்றீர்கள் ?" கேட்டேன்.
"இம் முறை என் பிள்ளைகள், உறவினர், நண்பர்கள், பிள்ளைகளுக்கெல்லாம் இந்தப் புத்தகம்தான் என் புத்தாண்டுப் பரிசு" என்றாள் மகிழ்ச்சி பொங்க.
விற்பனையாளரை விசாரித்த போது வந்த பிரதிகள் யாவும் விற்றுத் தீர்ந்துவிட்டதாகச் சொன்னார்.

புத்தகத்தைப் பார்த்த மாத்திரத்திலே இப்பதிவை எழுத எண்ணியிருந்த போதும், இப்போதுதான் முடிந்தது. ஆனால் இந்த இரு மாதங்களிலும், பெருமளவு நாட்கள், இந்தத் தத்துவார்த்திகள் வாழ்ந்து பயணித்த மண்ணில் பயணிக்க முடிந்தது. பலவற்றை பார்க்க, பழக, படிக்க, முடிந்தது. தொப்புள் கொடியுறவு, எந்தையர் தேசம், என நாங்கள் எவ்வளவுதான் சொந்தம் கொண்டாடினாலும், அரசியல் பேரங்களுக்குள் உறவுநிலையும், உண்மைநிலையும், அடிபட்டுப் போகும் வண்ணமாய் சூழலின் நிலையிருந்த போதும், நட்பு, நேசம், நிறைந்திருக்கும் நண்பர்கள் பலருடனும், பொழுதுகள் பலதைப் பகிர்ந்து கொள்ள முடிந்தது. முடியாமலும் போனது. கழிந்த பொழுதுகளில் கண்டுணர்ந்தவொன்று..

பாண்டிச்சேரி அரவிந்தர் ஆச்சிரமம், திருவண்ணாமலை ரமணர் ஆச்சிரமம், ஆழியார் வோதாத்திரி மகரிசி ஆச்சிரமம், என வெளிநாட்டவர் பலர் நிறைந்திருக்க, ஆன்மீக ஆலயங்கள் பலவும் சந்தைகளாக மாறியிருக்க, சந்தைகள் பலவும் வளர்ந்து கொண்டிருக்க, அதன் அடிகளில் அணியணியாக இளையவர் பெரியவர் எனப்பலர்.

'தளபதி அழைக்கிறார்' , 'அம்மா அழைக்கிறார்', 'கேப்டன் அழைக்கிறார்', 'சரத்குமார் அழைக்கிறார்', என்ற டிஜிட்டல் விளம்பர அழைப்புக்களுக்கும் மேலாக, வாழ்க்கையைத் தத்துவார்த்தங்களாகத் தரணிக்கே தந்தவர்கள் வாழ்ந்த மண்ணின் மக்களை நோக்கி யாரோ அழைப்பது கேட்கிறது. அத்திசை நோக்கி மக்கள் மெல்ல மெல்லத் திரும்புவதும் தெரிகிறது.

தன் பிள்ளைகளுக்கு, தன் உறவினர், நண்பர்கள் பிள்ளைகளுக்கு, இந்தியத் தத்துவார்த்தக் குறிப்புக்களைப் பரிசளிக்க விரும்பும் மேலைத்தேயத் தாய், வெள்ளையாக என் முன் சிரிக்கிறாள்...

-இன்னமும் சொல்லலாம்.



தொப்புள் கொடியுறவு, எந்தையர் தேசம், என நாங்கள் எவ்வளவுதான் சொந்தம் கொண்டாடினாலும், அரசியல் பேரங்களுக்குள் உறவுநிலையும், உண்மைநிலையும், அடிபட்டுப் போகும் வண்ணமாய் சூழலின் நிலையிருந்த போதும், நட்பும், நேசமும், மிகக் கொண்டரவணைத்த அத்தனை அன்புறவுகளுக்கும் நன்றி எனச் சொல்வதைத் தவிர இப்போதைக்கு வேறென்ன செய்ய