Friday, June 30, 2006

நாகம் பூசித்த நயினைஅம்மன். ஒருபண்பாட்டுக் கோலம் 4

மணிபல்லவம் என்றும், நாகதீபம் என்றும், வரலாற்று நூல்களில் விழிக்கப்பட்ட நயினாதீவுக்குப் பெருமை சேர்ப்பது, அத்தீவிலுள்ள நாகபூசணி அம்மன் ஆலயமாகும். பன்னெடுங்காலமாக இத்தீவின் மக்கள், தொழில் நிமித்தம் வௌ;வேறிடங்கள் சென்றபேர்தும், நாகபூசணி அம்மனின் திருவிழாத் தொடங்கிவிட்டதென்றால், நயினாதீவிற்குத் திரும்பி விடுவார்கள். யாழ்ப்பாணத் தீபகற்பகத்தை அண்டியிருக்கும் சப்த தீவுக்கூட்டங்களின் மக்கள் பலரும், வணிகர்களாக நாட்டின் பல்வேறு திசைகளிலும் நிலைகொண்டிருந்தார்கள். அம்மக்ள் சமுகத்தின் பொதுக்குணாம்சமாக இது காணப்பட்டபோதும், நாகபூசணியம்மன் திருவிழா அதற்கப்பாலும், முக்கியத்துவம் பெறும். சென்ற 26ந்திகதி முதல் ஜுலைமாதம் 10ந்திகதிவரை (ஆனிமாத வளர்பிறைப்பிரதமைத்திதி முதல் ஆனிமாதப்பூரணை ஈறாக) நயினாதீவு நாகபூசணியம்மனின் திருவிழா நடைபெறுகிறது. அதை நினைவுபடுத்தி வேறுபல பதிவுகள் எழுதப்பட்டிருந்தபோதும், இவ்வாலயத்தின் தோற்றம் குறித்த மற்றுமொரு பார்வையாக, அத்தீவுறை மக்களின் மனநம்பிக்கையின் மற்றுமொரு நிலையாக, இப்பதிவினை இடுகின்றேன்.

தமிழின் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையில், மணிபல்லவம் எனக் கூறப்படுகின்ற இத்தீவில் கண்ணகைத்தெய்வ வழிபாடு இருந்ததாக பல்வேறு சந்தர்ப்பங்களில் வாசித்திருக்கின்றேன். (ஈழத்தில் கண்ணகை வழிபாட்டுப்பாரம்பரியம் தொன்மைமிக்கதொரு வழிபாட்டுப்பராம்பரியமாக இருந்து வந்துள்ளது. இதுபற்றி பிறிதொரு சந்தர்ப்பத்தில் விரிவாக நோக்க எண்ணமும் விருப்பமும் உண்டு.) ஆனால் நான் இங்கே சொல்லவிருப்பது இத்தீவின் மக்களிடையே செவிவழிக்கதையாகப்பரவி, ஆழமான நம்பிக்கையாக உறைந்துவிட்ட ஒரு பண்பாட்டுக்கோலத்தை.

முன்னொருகால் இத்தீவின் வணிகர் ஒருவர் வர்த்தக நோக்கில், வத்தை என்று சொல்லப்படுகின்ற பொதிகள் ஏற்றும் பாய்மரச்சரக்குப்படகில் இத்தீவிருந்த பயனித்தபோது, கடலின் நடுவில் தெரிந்த பாறையொன்றில், கருடன் ஒன்று இருந்து ஆர்பரிப்பதைக் கண்டிருக்கிறார். அவர் தன் படகினை கருடன் இருந்த பாறையை அண்மித்ததாகச் செலுத்த கருடன் மேலெழுந்து பறந்துவிட்டது. ஆனால் அப்போதுதான் அந்த அதிசயத்தை அவர் கண்டார். கருடன் இருந் பாறைக்கு எதிராக இருந்த மற்றொரு பாறையின் இடுக்கில் ( இன்றும் இக்கடற்பகுதியிலுள்ள இருபாறைகளை, அப்பாறைகள் என்றே அடையாளங்காட்டுகின்றார்கள்.) மறைந்திருந்த ஒருநாகம் வெளிப்பட்டு நயினாதீவை நோக்கி நீந்துகிறது. அதன் வாய்பகுதியில் பூ ஒன்று தென்படுகிறது. ஆச்சரியத்தோடு தன் அன்றாடவேலைகளுக்குள் மூழ்கிவிட்ட வர்த்தகர், அன்றைய பொழுதினை நிறைவு செய்து தூக்கத்திற்குச் சென்று விட்டார். தூக்கத்திலிருந்த வர்த்தகரின் கனவில் தோன்றிய அம்மன், நயினாதீவில், குறிப்பிட்ட இடத்தில், தான் சுயம்புவாகத் தோன்றியிருப்பதாகவும், தனக்கு ஆலயம் அமைக்கும்படிகோரியதாகவும், அதன்பின் வர்த்தகர் ஊர்மக்களிடம் இக்கனவைக் கூறி, ஆலயம் அமைத்ததாகவும், அதன்பின் அவர் தொழில் சிறந்து வாழ்ந்ததாகவும் சொல்வர்.

இப்படி ஆலயம் அமைந்தபின்னும், அதற்கு முன்னதாகவும், காலைவேளைகளில் சுயம்புவாக எழுந்த அம்மனின் மேற்பகுதியில், அன்றலர்ந்த மலர் ஒன்றிருப்பதைக் கவனித்த பலர் இது எவ்விதம் வருகின்றதென ஆச்சரியமுற்றவேளையில், நயினாதீவிற்கு அண்மித்துள்ள மற்றொரு தீவான அனலைதீவிலிருந்து ஒரு நாகம் பூவோடு கடலில் நீந்தி வந்து ஆலயத்துள் செல்வதைக் கண்டிருக்கின்றார்கள். அனலைதீவின் தென்பகுதிக்கரையை புளியந்தீவு எனச் சொல்வார்கள். இப்புளியந்தீவில் நாகேஸ்வரன்கோவில் எனும் சிவாலயம் ஒன்றுண்டு. அக்கோவிலின் வழிபாட்டு ஆரம்பம், ஆலயபிரகாரத்திலுள்ள அரச மரமும் வேப்பமரமும், இணைந்திருக்குமிடத்திலுள்ள புற்றிலுள்ள நாகத்தினை வழிபாடு செய்வதிலிருந்து ஆரம்பமாகிறது. இப்புற்றிலுள்ள நாகமே தினந்தோறும் நயினாதீவிலுள்ள அம்மனைப் பூக்கொண்டு வழிபாடியற்றி வந்தது என்பது மக்கள் நம்பிக்கை.

இந் நம்பிக்கை தொடர்பாக எனக்கும் ஒரு சுவையான அனுபவமுண்டு. 80களின் நடுப்பகுதிகளில், என் மகன் பிறந்து ஒரு வருடமாகயியிருந்த வேளையில், என் பாட்டனார் காலத்திருந்தே தொடர்புபட்டிருந்த இக்கோயிலுக்கு என்னை மனைவி பிள்ளையை அழைத்துச் சென்று வருமாறு பெற்றோர்கள் கூறினார்கள். இராணுவக் கெடுபிடிகள் குறைந்த ஒரு சமாதான காலமாக அமைந்திருந்ததால், நர்னும் மனைவி பிள்ளையுடன் அக்கோவிலுக்குச் சென்றோம். அங்கே நின்ற ஊர்மக்கள் என்னை யாரென்று அறிந்துகொண்டதின்பின் அக்கோயில்பற்றியும், அங்கே புற்றிலுள்ள நாகம் பற்றியும், கதைகதையாகச் சொன்னார்கள். சொல்லும்போது ஒன்றைக்கவனித்தேன். அவர்கள் நாகத்தை பாம்பு என அஃறினையில் குறிப்பிடவில்லை. '' பெரியவர் இப்ப ஆச்சியிட்ட (நயினை நாகபூசணி கோவிலுக்கு) போயிருப்பார். உமக்குப் பலனிருந்தா காணலாம் '' என உயர்திணையில் நாகத்தை விழித்துக் கதைத்தார்கள். ''சரி எப்பவோ நடந்திருந்தாலும், இப்பவும் அப்பிடி நடக்குமா? அந்தப்பாம்புதான் உயிரோட இருக்குமா? '' எனக்கேட்ட என்னை ஒரு விசமத்தனமான சிரிப்போடு பார்த்தார்கள். சண்முகம் என்ற பெரியர் சொன்னார். '' நீர் நம்பையில்லைப்போலும். ஆனா அன்றைக்கு அம்மனுக்கு பூக்கொண்டுபோன அதேயாள் இன்னமும் இங்கதான் இருக்கிறார். தினசரி அம்மனிட்ட அவர்போய்த்தான் வாறார்..'' அவர் அப்படிக் கதைத்துக் கொண்டிருந்தபோது, நான் அந்தமரத்தடியையும், புற்றினையும் சுற்றிப்பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென என் கால்களை உரசியவாறு, குருவிபோன்ற ஆனால் சற்று நீளமான ஒரு உருவம் புற்றுக்குள் வேகமாகச் சென்று மறைந்தது. நான் சற்றுப் பயந்து தடுமாறினேன். பக்கத்தில் நின்றவர்கள் ''பார்த்தீரே கண்ணுக்கு முன்னால் வந்து தன்ன காட்டியிருக்கிறார். இனியும் நம்பமாட்டீரோ? '' எனக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. இந்த நாகம் பூசனை செய்தபடியால்தான், நயினாதீவு அம்மன் நாகபூசணிஅம்மன் எனப்பெயர் பெற்றதாகச் சொல்வார்கள்.

நயினாதீவிற்குச் செல்வதாயின், யாழ்ப்பபாணத்திலிருந்து தரைப்பாதை வழியாக புங்குடுதீவு, இறுப்பிட்டி(மதி.கந்தசாமியின் ஊரென்று எண்ணுகின்றேன்,) அல்லது ஊர்காவற்றுறை, ஆகிய கரைத்துறைகளில் ஏதாவது ஒன்றுக்குச்சென்று,அங்கிருந்து படகுப் பயனம் மூலம் நயினாதீவு செல்லவேண்டும். இக்கடற்பயணம் பழக்கப்படாதவர்களுக்கு சற்றுப் பீதி தரும் பயண அனுபவமே. அதிலும் குறிப்பாக ஏழாற்றுப்பிரிவெனும் கடல்பகுதியில் படகு தள்ளாடும் போது கலங்கா மனமும் ஓர்கணம் கலங்கும்.

குழந்தையற்றவர்களின் நேர்த்திப்பிரார்த்தனையும், என்நாளும் இங்கு நடைபெறும் அன்னதானமும், பிரசித்தி மிக்கவை. இன்னுமொரு விடயத்தையும் குறிப்பிட வேண்டும். இந்த இரண்டு தீவுகளிலும், பாம்புகள் சாதரணமாகத்தென்படும். யாரும் அவற்றைத் துன்புறுத்த மாட்டார்கள். இதுவரையில்பாம்பினால் யாரும் தீன்டப்பட்டதுமில்லை. இக்கோவிலின் தீர்த்தம் நடைபெறும் ஆனிமாதப் பூரணைஇரவில், மேலைத்தேயர் இவ்வாலயத்தை அழித்த போது, தானாகவே உருண்டு சென்று கடலில் அமிழ்ந்த செப்புத்தேரின் கலசம் தெரியுமெனச் சொல்கின்றார்கள்.


வாழ்வின் சோபை குன்றிப்போன அத்தீவில், மக்கள் கொண்ட நம்பிக்கைப் பண்பாட்டுக் கோலங்களாவது வாழட்டும்.


தேரேறி வரும் தேவியை வேண்டி கவிஞர் புதுவை. இரத்தினத்துரை கோர்த்த கவிமாலையை, எங்கள் கலைஞன் வர்ண. ராமேஸ்வரன் பாமாலையாகச் சூட்டியிருக்கின்றான். கேட்டு இன்புற அருகேயுள்ள ஒலிப்பொறியில் ( Stickam Player) 1 வது பாடலைத் தெரிவு செய்யுங்கள்.

Tuesday, June 27, 2006

இத்தாலியின் அதிர்ஷ்டமும் கேள்விக்குரியதே

உலகின் கவனத்தைப் பெற்றிருக்கும், உலகக்கோப்பைக்கான உதைபந்தாட்டப்போட்டிகள் தொடர்பாக, நண்பர் இளங்கோ அருமையான பதிவுகளை எழுதி வருகின்றார். போட்டிகள் குறித்த அவரது பார்வைகள் மிகத்துல்லியமானவையாக இருக்கிறது. 26ந் திகதி நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் விளையாடிய இத்தாலி - அவுஸ்த்திரேலியா போட்டி குறித்தும் அருமையான விமர்சனப்பதிவினைத் தந்திருந்தார். அதிர்ஷ்டம் இத்தாலியின் பக்கம் எனத் தலைப்பிட்டிருந்த அந்தப் பதிவினை நிறைவு செய்யும்போது,
' ஸ்பெயின் நடுவர், இந்தப்போட்டியில் வழங்கிய இரண்டு முடிவுகளும் (இத்தாலிக்குச் சிகப்பு அட்டை வழங்கியது, அவுஸ்திரேலியாவுக்கு எதிரான பெனால்டி) கேள்விக்குரியதே' என நிறைவுசெய்கிறார். அவரது நியாயமான அந்தக் கேள்வி நேரிலும், தொலைக்காட்சியிலும், போட்டியைப் பார்த்த பலர் மனதிலும் எழுந்தே இருக்கும். ஏன் இப்படி என்பதற்கான அனுமானங்கள் அல்லது ஊகங்களைக் கொண்டதுதான் இப்பதிவு. இது இப்படித்தான் எனும் தீர்மானமானது அல்ல. இப்படியும் இருக்கலாம் என்பது மட்டுமே.


ஆரம்பம் முதலே எதிர்காப்பு விளையாட்டில் மிகக் கவனமாக இருந்த அவுஸ்திரேலிய அணியுடன், நீட்சிநேரத்தில் விளையாடுவதையோ, பெனால்டி அதிஷ்டத்தின் மூலம் வெற்றி வாய்பைத் தீர்மானிக்கடுவதையோ தவிர்த்து, ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில் கிடைத்த ஒரு சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, இத்தாலிய அணிக்கு வெற்றிவாய்ப்புச் சேர்க்கப்பட்டதோ என்ற ஒரு எண்ணப்பாடு இயல்பாக எழுந்துள்ளது. இந்தகைய எண்ணப்பாடு அல்லது ஐயப்பாடு எழக்காரணம் என்னவென்று நோக்குமிடத்து, அந்நோக்குகள் உதைபந்தாட்டப்போட்டி, விளையாட்டு, என்பதையும் தாண்டி வேறு சில திசைகளிலும் பயனிக்கிறது.


இத்தாலி கலைவளம், இலக்கியவளம், கடல்வளம், தொழில்வளம், எனப்பல்வகைவளங்ககள் நிறைந்தவொரு நாடு.இதன்பல்வகைச்சிறப்புக்களுடன் மேலும் ஒரு அங்கமாக உதைபந்தாட்டத்தினைக் கொள்ளலாம். இத்தாலிய மக்களோடு நெருங்கிப் பழகக்கிடைத்த அனுபவத்தில் கூறுகின்றேன், அவர்கள் வாழ்வின் இன்றியமையா விடயங்களில் உதைபந்தாட்டமும் ஒன்று. இத்தாலிய மக்களின் மேல் தட்டு மக்கள் முதல், அனைத்துத்தரப்பினரும், உதைபந்தாட்ட ரசிகர்கள் அல்ல தீவிர வெறியர்கள் என்று சொன்னால், அது மிகையல்ல. இந்த அதீத ஆர்வம், பல பெருத்த சந்தைவாய்யுக்களை ஏற்படுத்தியுள்ளது என்பது மறைக்கமுடியாத உண்மை.

இந்தியாவில் திரைப்படத்துறை எவ்விதம் மக்கள்மீது செல்வாக்குச் செலுத்துகிறதோ? கிரிக்கெட் எவ்வாறு செல்வாக்குச் செலுத்துகிறதோ? அதற்கு இணையாக, ஏன் அதற்கும் அதிகமாகவே உதைபந்தாட்டம் இத்தாலியில் மக்கள் மீது செல்வாக்குச் செலுத்துகிறது. இதன் காரணமாக ஏற்பட்டிருக்கும் சந்தை வாய்ப்பும் அளவீடு செய்யமுடியாதது. பத்திரிகை முதல் தொலைக்காட்சி வரை ஊடகங்களிலும், ஆடைகளில் இருந்து பாதணிகள் வரையிலும், எனப் பல்வகையிலும் பொருளாதரத்துடன் பின்னிப்பிணைந்து கிடக்கிறது. இத்தகைய பொருளாதார முக்கியத்துவம் நிறைந்த, சந்தைவாய்ப்பு மிக்க ஒரு நாட்டின் அணி, உலகக்கவனம்பெறுகின்ற ஒரு முக்கிய போட்டியின் ஆரம்ப கட்டத்தில் வெளியேறுதல் என்பது எத்தகைய பொருளாதார இழப்புக்கு வழிசமைக்கும் என எண்ணத் தோன்றுகிறதல்லவா?

ஐரோப்பிய வர்த்தகப்பரப்பில் இத்தாலி ஒரு குறுநில அரசல்ல. அது ஒரு மிகப்பெரிய பேரரசு பேரரசுகளின் சரிவு என்பது எப்போதும் நடப்பதல்ல. எப்போதோதான் நடக்கும். இப்போதும் பேரரசு காப்பாற்ப்பட்டதாக ஏன் கொள்ளமுடியாது?. இப்போதெல்லாம் விளையாட்டுப் போட்டிகள், வெறுமனே விளையாட்டுப்போட்டிகளாக மட்டுமல்ல, அதையும் தாண்டி........

இந்தவகையில் நோக்குமிடத்து இளங்கோ குறிப்பிட்டது போன்று, 'ஸ்பெயின் நடுவர், இந்தப்போட்டியில் வழங்கிய இரண்டு முடிவுகளும் (இத்தாலிக்குச் சிகப்பு அட்டை வழங்கியது, அவுஸ்திரேலியாவுக்கு எதிரான பெனால்டி) கேள்விக்குரியதே.' எது எப்படியாயினும் வழங்கப்பட்ட சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்தி, விளையாடிய இத்தாலியவீரர் பாரட்டுக்குரியவரே.

நேற்றைய போட்டிகளில் தோல்விகளைச்சந்தித்த இரு அணிகளும் ( சுவிஸ், அவுஸ்திரேலியா) பந்தைக்கடத்துவதில் காட்டிய வேகமின்மையே அவர்களின் தோல்விக்கான முக்கிய காரணமாக எனக்குப்படுகிறது.

இளங்கோவின் பதிவுகளை வாசிக்காதவர்கள் தயவு செய்து கீழேயுள்ள சுட்டிக்குச்சென்று அவசியம் பாருங்கள்.

http://kaalpanthu2006.wordpress.com/2006/06/27

Saturday, June 24, 2006

ஆறு அல்லது 6

தொழில் நிமித்தம் வெளியே நின்ற காரணத்தினால், இரு வாரங்களாக தமிழ்மணத்துள் இயல்பாக வந்து செல்ல முடியவில்லை. இந்தக் காலப்பகுதிக்குள், மணியன், மயூரன், சின்னக்குட்டி, ஆகியோர் என்னை ஆறு விளையாட்டிற்கு அழைத்திருந்தார்கள். அவர்கள் அழைப்பை ஏற்றுச் சற்றுத் தாமதமாகவே வந்திருக்கின்றேன். முதலில் என்னை அழைத்த நண்பர்களுக்கு நன்றி.

இனி என் விருப்புக்கள். இக்குறிப்புக்கள், எழுதும் இக்கணத்தில் நினைவுக்குப்பட்டவைகளே.

எனக்குப்பிடித்த மலைகள்

திருகோணமலை
எனக்கு என்றும் எல்லாவகையிலும், பிடித்தது

கீரிமலை
பெயரில் மட்டும்மே மலையிருந்தாலும், கேணியிலும், கடலிலும், குளிக்கும் அனுபவசுகத்திற்காக

சபரிமலை
ஆன்மீக அனுபவத்திற்கும் ஆயுர்வேத சுகத்திற்கும்.

அல்ப்ஸ்மலை
இதன் சாரல்களிலுள்ள பல முகடுகளிலும் பயனித்த போது, கிடைத்த அனுபவச்சுவைகள் அற்புதமானவை.

இமயமலை
இயற்கையின் அற்புதம் காணவிரும்பிச் செல்ல எண்ணியுள்ளேன்.

சிவனொளிபாதமலை
இம் மலைமீதிருந்து காணும் பிரசித்திபெற்ற சூரியோதயக்காட்சி காண்பதற்காகச் செல்லவேண்டும்.

பிடித்த கவிஞர்கள் ( தமிழீழக்கவிஞர்கள்)

சோ.ப
மரபுக்கவியிலும், இலகு தமிழில் பாடலாம் என்பதை எழுதிக்காட்டியவர். ஆங்கிலப்பேராசிரியர், ஆனால் அற்புதமான தமிழறிஞர். எனக்குத் தமிழைச் சுவைக்கச் சொல்லிக்கொடுத்தவர்.

வீரமணிஐயர்
செய்யுள் வடிவில் இவர் எழுதும் வேகம் பிரமிக்கத்தக்கது. அழகு தமிழுக்கும் , குழந்தை மனசுக்கும் சொந்தக்காறர்.

புதுவை இரத்தினத்துரை
மரபு, புதுமை, உணர்வு, என்பவற்றின் கூட்டுக்கலவையாக அமைந்த படைப்புக்களுக்குச் சொந்தக்காறர்.

சேரன்
புதுக்கவிதைக்கும் ஒரு தகைமைப்பாட்டினைத் தந்தவர்.

வ.ச.ஐ. ஜெயபாலன்
அழகான கவிக்காக

சிவரமணி
எவ்வளோ தந்திருக்க வேண்டியவள். இடையிலே முடித்துக்கொண்டாள்.

பிடித்த திரைப்படங்கள்

தென்றலும் புயலும்
ஈழத்துத் தமிழ்த்திரைப்படவரலாற்றில் குறிப்பிடத்தக்கதொரு படம். திருகோணமலையின் பல பகுதிகளிலும் படப்பிடிப்புச் செய்யபட்டிருந்த திரைப்படம்.

மறுபக்கம்
தமிழில் தங்கத்தாமரை விருது பெற்ற ஓரேயொருபடம். பல்துறைச்சிறப்புக்களாலும் பிடித்தது.

ஹேராம்
சினிமா தொடர்பான பல தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ளக்கூடிய தேடல்மிக்க படைப்பு

ஏழாவது மனிதன், கண்சிவந்தால் மன் சிவக்கும்.
வித்தியாசமான தமிழ்ப்படங்கள் பார்க்க வேண்டுமென விரும்புவோர் பார்க்க வேண்டிய படங்கள்.

கனவு மெய்பட வேண்டும்.
ஜானகி விஸ்வநாதனின் ஆய்வுரீதியான படைப்பு. ஒரு சமுகத்தின் குறைபாடுகளையும், உணர்வுகளையும், ஆவனப்படுத்திய படம்

எனக்குப் பிடித்த பாடல்கள்
இந்தத் தலைப்பில் உங்களைப் போலவே எனக்கும் நிறைய உண்டு. ஆனாலும் பதிவிற்காக உடன் நினைவுக்கு வந்தவை.

கடலலையே கொஞ்சம் நில்லு
தமிழீழக்குயில் பார்வதி சிவபாதம் பாடிய பாடல்கள் எல்லாமே பிடிக்கும்.

போரம்மா
பாடலில் வரும் வாத்தியங்களின் தரும் உணர்வலைகளுக்காக. குறிப்பாக பறையும், உடுக்கும் பிரமாதமாக இருக்கிறது

சின்னஞ் சிறு பெண்போலே
சீர்காழி கோவிந்தராஜனின் குரல் ரொம்பப் பிடிக்கும். அந்தவகையில் இந்தப் பாடலும் பிடிக்கும்.

நிற்பதுவே நடப்பதுவே
பாரதி பாடல்கள் எல்லாமே பிடிக்கும். திரைப்படத்தில் இளையராஜாவின் இசையில் மிகவும் பிடித்தது.

ஆடாது அசையாது வா வா கண்ணா
பித்துக்குளி முருகதாஸ் பாடல்களில் காட்டும் நளினங்கள் ரசிக்கத்தக்கவை. கூடவே மனதுக்குச் சுகம் தருபவை.

ஆடுகின்றான் கண்ணன்
தொலைக்காட்சித் தொடர் நாடகங்களில் ஆர்வமில்லை. ஆயினும் முகப்புப்பாடல்களைக் கவனிப்பேன். அப்படிக் கவனித்துக் கேட்கத் தொடங்கியது. ஆடுகின்றான் கண்ணன் தொலைக்கட்சி நாடகத்தின் முகப்புப்பாடலிது.

வாசித்ததில், பிடித்த நாவல்களும் எழுதியவர்களும்.

அடிமைகள், பஞ்சமர். - கே.டானியல்
யாழ்ப்பாணச் சமுகக்கட்டமைப்பை விமர்சித்த எழுத்துக்களின் தந்தையெனச் சொல்லப்பட்டவர்

பொற்சிறையில் வாடும் புனிதர்கள் - தெனியான்
கே.டானியலால், தன் எழுத்துலக வாரிசு என விதந்துரைக்கப்பட்டவர்.

நிலக்கிளி - பாலமனோகரன்
தமிழீழத்தின் தலைசிறந்த மண்வாசனை எழுத்தாளர்

வாடைக்காற்று - செங்கை. ஆழியான்
வரலாற்றுக்குறிப்புக்களை வைத்து எழுதும், இவரது எழுத்துக்கள் வசீகரமானவை.

ஒருகாவியம் நிறைவேறுகிறது. - வ.அ.இராசரத்தினம்
திருகேணமலை மாவட்டத்தில் மூதூரைச் சேர்ந்தவர். எளிமையான எழுத்துக்கும் பேச்சுக்கும் சொந்தக்காறர்.

ஆத்மாவின் ராகங்கள் - தீபம் நா.பார்த்தசாரதி
என் பள்ளித்தோழி படிக்கத் தந்த நாவல். வாசிக்கும் போது உண்மைக்கதைபோல் தோன்றும் கற்பனைக் கதைகொண்ட நாவல்.

அழைக்கவிரும்புகின்ற வலைப்பதிவு நண்பர்கள்.

கான.பிரபா

பெயரிலி

வன்னியன்

வெற்றி

சந்திரவதனா

எஸ்.கே



Saturday, June 17, 2006

அந்தச் சிரிப்பு !

எங்கே போயிற்று அந்தச் சிரிப்பு ?
பல்வகைக்கலைகளாலும், சிறந்த ஈழத்தமிழ்மண்ணில் நகைச்சுவையுணர்வும் நயமாக இருந்த ஒருகாலத்தில், பல நகைச்சுவைக் கலைஞர்கள் எம் மண்ணை வலம் வந்தார்கள். அப்படி மிளிர்ந்த சில கலைஞர்களை நினைவுக்குட்படுத்தும் போது, அந்தக்காலத்தின் இனிமை எம் மனங்களில் எழுந்து மறைகின்றது. .


பெருத்த வயிறும் குலுக்கல் சிரிப்பும், கக்கத்தில் குடையுமாக சக்கடத்தார் மேடையில் தோன்றினால் ஒரே சிரிப்பலைகள்தான். காலத்துக்கேற் சம்பவ நகைச்சுவைகளுடனும், துணை நடிகனுடனும் இணைந்த சக்கடத்தாரின் நகைச்சுவை அக்காலத்தில் மிகப்பிரபலம். நிகழ்ச்சி நடந்த சிலதினங்கள் பின்னும், மக்களால் சொல்லிப் பேசப்படுகின்ற நிகழ்ச்சி அது. இக்கலைஞனை இயற்கை மறைத்தது. பதிவுகள் இல்லாத காலத்தில் வாழ்ந்த இக்கலைஞனின் கலைவடிவங்களும் பதிவற்றுப் போயிற்று


இதற்குப்பின் வந்த காலத்தில் டிங்கிரி சிவகுரு இரட்டையர்களின் நிகழ்ச்சியும் மிக ஜனரஞ்சகமானது. இவர்களது நிகழ்ச்சி இசையும் நகைச்சுவையும் இணைந்தவொரு நிகழ்ச்சியாக இருக்கும். ஆம்! கணீரென்ற குரலில் நகைச்சுவையான பாடல்களையும் பாடிச்சிரிக்க வைத்த கலைஞர்கள் டிங்கிரி சிவகுரு இரட்டையர்கள். இலங்கையின் பலபாகங்களிலும், மேடைநிகழ்ச்சிகள் மூலமும், வானொலி மூலமும், பின் ஒலி நாடாவினாலும், மக்களைச்சிரிக்கவைத்தவர்கள். காலவோட்டத்தில் இக்கலைஞர்கள் மறைந்தாலும், ஒலிப்பதிவுகளில் அவர்கள் குரல் ஆங்காங்கே இன்றும் வாழ்கின்றது. அவர்களின் நகைச்சுவையை, அன்றையபொழுதுகளில் ஒலிநாடாவில் பதிந்து தந்தவர்கள், யாழ்ப்பாணம் நியூவிக்ரேஸ் நிறுவனத்தினர்.


“சங்கானை, மாதகல், பண்டதரிப்பு, சில்லாலை, ஏறு.... அண்ணை றைற்..” என்றவாறு கே.எஸ். பாலச்சந்திரன் மேடையில் ஏறவும், பார்வையாளராக குழுமியிருக்கும் மக்கள் கூட்டத்தின் முகங்கள் சிரிப்பால் மலரும். அடுத்து வரும் மணித்துளிகள் இன்பமாய் கழியும். பண்பான நகைச்சுவை, துல்லியமான யாழ்ப்பாணத் தமிழ் உச்சரிப்பு, நடைமுறைவாழ்வின் சம்பவங்கள் குறித்த விமர்சனப்பார்வைக் கருத்துக்கள், என்பன பார்வையாளர்களைக் கட்டிப்போடும். நிகழ்ச்சி நிறைவுபெறும் போது, சிரித்துச் சிரித்து, மனம் இளகிப் போயிருக்கும். வானொலிநிகழ்ச்சியாலும், மேடைநிகழ்ச்சியாலும், பல்லாயிரக்கணக்கான இதயங்களைக் கொள்ளைகொண்ட கே.எஸ். பாலச்சந்திரன் யாழ்ப்பாணத்தின் முக்கியமான நகைச்சுவைக் கலைஞன். தாயகச் சூழலினால் தடைப்பட்ட இக்கலைஞனின் சிரிப்பு, தற்போது கனடா நாட்டிலிருந்து ஒளிபரப்பாகும், ரீ.வீ.ஐ தொலைக்காட்சில், ‘வை. ரீ. வைத்திலிங்கம் ஸோ என்ற நிகழ்ச்சியின் மூலம் புலம்பெயர் மக்களிடையே மலர்கிறது.

சிரிக்கவும், சிரிப்பினூடு சிந்திக்கவும், வைத்த இக்கலைஞர்கள்களின் நினைவும், நிகழ்வுகள் தந்த மனமகிழ்வும் இன்னும் இனிமையான அனுபவச்சுவைகள்.



Tuesday, June 06, 2006

நாகூர் தர்க்கா - பண்பாட்டுக்கோலம். 3

திருகோணமலையிலிருந்த போது, இஸ்லாமிய நண்பர்கள் நிறையவே இருந்தார்கள். அவர்களோடு ஒரு சந்தர்ப்பத்தில் மசூதிக்குச் செல்லும் சந்தர்ப்பம் கிடைத்திருந்தது. பின் ஒரு தடவை கொழும்பில் உள்ள பள்ளிவாசல் ஒன்றுக்கு உறவுக்காரப் பையன் ஒருவன் அழைத்ததின் பேரில், சென்றிருந்தேன். இவற்றைத் தவிர இஸ்லாம் மதத் தலங்கள் பற்றிப் பெரிதாக அறிந்ததில்லை.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டுப் பயனத்தில், அன்னைவேளாங்கன்னி ஆலயத்திற்குச் சென்று திரும்பும் போது, எங்கள் வாகனச்சாரதி கேட்டார் நாகூர் தர்க்காவிற்குச் செல்ல விரும்புகின்றீர்களா ?என்று. கேட்ட மாத்திரத்தில் நான் உசாரானேன். தமிழ்நாட்டில் மூன்று மதப்பிரிவினரும் ஒற்றுமையாக வாழும் மாவட்டம் எனக் கேள்விப்பட்டிருந்ததாலும், இலங்கை வானொலியில் இஸ்லாமிய கீதங்கள் முலம் நாகூர் ஹனிபாவின் பாடல்களில் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டிருந்ததாலும், நாகூர் தர்க்கா செல்லும் ஆர்வம் என்னுள் எழுந்தது.

எங்கள் வாகனம் தர்க்கா முன்நின்றது. இலங்கையில் ஒரு முஸ்லீம் பகுதியைக் காணும் போது தென்படும் காட்சிகளோடு, ஏனைய மதப்பிரிவினர்கள் சகஜமாக கலந்துறவாடும் காட்சியும் தென்பட்டது.
தர்க்காவிற்குள் இறையருட்கலைஞன் ஹனிபாவின் பாடலோடு செல்வோமே.

ஒரு தர்க்காவிற்குள் செல்ல முன்னதான உடற்சுத்திகளை நிறைவு செய்துகொண்டு உள் நுழைந்தோம். பிரமாண்டமான தூண்களுடன் கூடிய மண்டபம். எங்கும் விரவி நின்ற சுகந்தம். பழைமை சான்ற பெரும் வாசல் நிலைகள். நிலைகளின் வேலைப்பாடுகளில் யாழித்தலைகூட இருந்ததாக ஞாபகம். ஒரு வாசலில் வந்ததும், வாகனச்சாரதி சொன்னார். சற்றுப் பொறுங்கள் நான் தொழுகை செய்துவிட்டு வருகின்றேன் என்று. ஆம் அவரொரு இஸ்லாமியர். நாங்களும் சம்மதித்துவிட்டு சூழலை நோக்க, சாரதி உள்ளே தொழுகைக்காகச் சென்றார். மண்டபத்தில் மயிற்பீலி சோதிடம், மருத்துவம், மாந்திரீக நூற்கயிறு, என்பன செய்வதாக பலர் அமர்ந்திருந்தார்கள். ஆனால் அமைதியும் இருந்தது.

சாரதி தொழுகை முடிந்து வந்ததும், நாங்கள் தர்காவிற்கு வெளியே வரத் தொடங்கினோம். தர்க்காவின் வெளிப்புறத்தில், சிலர் தர்மம் செய்யும் வண்ணம் கேட்டுக் கொண்டிருந்தார்கள். தமிழ்நாட்டில் அநேக ஆலயங்களின் முன்னால் இவ்விதம் தர்மம் கேட்பவர்களைக் காணக்கூடியதாக இருப்பதால் நாம் அதைப் பெரிதாகக் கவனிக்கவில்லை.

வாகனத்தில் புறப்பட்டபின்தான் சாரதி சொன்னார், தர்க்காவின் வெளியே தர்மம் கேட்டுக் கொண்டிருந்தவர்கள், உண்மையில் வறியவர்கள் அல்ல, வசதிபடைத்தவர்களே. ஆனாலும் நபிகளின் கட்டளையொன்றை மேற்கொண்டு, தினமும் ஒருவேளையாவது யாசித்து , உணவருந்தும் வழக்கத்தை அவர்கள் கொண்டுள்ளார்களென. இதற்கு மேல் அவரால் அது பற்றிய விபரங்களைத் தரமுடியவில்லை. அங்கிருந்து புறப்பட்டுவிட்டதால், அதுபற்றி மேலதிகமாக யாரிடமும் கேட்டுத் தெரிய முடியவில்லை.

இஸ்லாமிய மார்க்கத்தின் ஏதோவொரு பண்பாட்டுக்கோலத்தை உள்ளடக்கிய அச்செயல் குறித்து இன்னமும் அறிந்துகொள்ள முடியவில்லை. இங்கே தமிழ்மணத்தில் வலம் வரும் நண்பர்கள் யாராவது உண்மையில் அப்படி ஒரு நடைமுறை அங்குளதா? அப்படி இருப்பின் அதன் காரணம் அல்லது பொருள் யாதெனத் தெரிந்திருப்பின் சொன்னால் நாமும், நம்மோடிணைந்தவர்களும், அறிந்துகொள்ளக் கூடியதாகவிருக்கும். ஒரு மார்க்கத்தின் உட்பொருளுணரமுடியும். சொல்வீர்களா நண்பர்களே?

Saturday, June 03, 2006

ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தவர்கள் 1

' சொன்னதும் நீதானா? சொல்.. சொல்.. சொல்..என்னுயிரே..' ஒரு குரல் பாடலான அந்தப்பாடல் சிலவேளைகளில் இரு குரலில் ஒலிக்கும். ஆனால் சேர்ந்தே ஒலிக்கும். அத்தகைய ரசனையே, அந்தக்குரல்களுக்குச் சொந்தக்காரர்களை நீண்டநாள் தோழிகளாக ஆக்கி வைத்ததோ என்னவோ? திருகோணமலையின் தமிழ்க்கிராமம் ஒன்றின் பாடசாலையில், நீண்ட காலமாக பாலர் வகுப்பு முதல் பத்தாம் வகுப்புவரையிலுள்ள பிள்ளைகளுக்கு, கல்வி கற்பித்த பயிற்றப்பட்ட ஆசிரியைகள். கண்ணெனத் தகுந்த எண்ணையும், எழுத்தையும், எண்ணற்ற பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுத்தவர்கள். எண்ணையும் எழுத்தையும், எனக்கும் கற்றுத் தந்தவர்கள். இவர்கள் வெறுமனே கற்றுக் கொடுத்த ஆசிரியைகள் மட்டும்தானா? இல்லை, எனக்கு மட்டுமல்ல. என்னைப்போன்ற பலருக்கும், ஆசிரியர் என்பதற்கும் மேலாக அன்னையென அணைத்தெடுத்து வளர்த்தவர்கள். ரீச்சர் என்று விளிப்பதற்கு முன்னொருகால், கிராமத்துப் பாடசாலைகளில், ஆசிரியை அக்காவென விளித்ததுமுண்டு. எக்காலத்திலும் ஆசிரியை என்னும் உறவுக்கப்பால் அக்கைகளாகவும் பந்தம் கொண்டவர்கள். ஊரார்பிள்ளையை ஊட்டி வளர்த்தவர்கள் என்ற தலைப்பில் எழுத இருந்ததும், என் முன்நினைவுக்கு வந்த ஆசிரியைகள். கமலாரீச்சர், கெங்காம்பிகை ரீச்சர்.

பிஞ்சு வயதில் என் நெஞ்சுநிலத்தில் எண்ணையும் எழுத்தையும் வித்தூன்றி, விளையச்செய்தவர்கள். நான் இதுவரை எழுதிய தமிழையும், இனிவருங்கால் எழுதும் தமிழையும் அறிமுகஞ் செய்தவர்கள். என்னுடையதும், என்னைப் போன்று வேறுசிலருக்கும் எழுதும் தமிழ்வடிவம் அழகாயமைந்ததற்கு, கமலாரீச்சரின் அகரபாடம்தான் காரணமென அடித்துச் சொல்லலாம். அத்தனை அழகு அவர் எழுத்து. குண்டு குண்டாய் ஒற்றைக் கொப்பிகளின் பக்க வரிகளில் வந்தமர்ந்து கொள்ளும். அதை அவர் அறிமுகஞ் செய்வதும் அழகுதான். பின்னாட்களில், நகரில் உயர்கல்வி கற்றவேளைகளில், கிராமத்துப் பாடசாலைக்குச் செல்ல வேண்டிய ஏதோ சில சந்தர்பங்களில், அவரது பாலர் வகுப்புக்குச் செல்வதும், அவரது பாடம் நடத்தும் பக்குவம் காண்பதற்காகவே, அந்தப்பாலகர்களுடன் சேர்ந்தமர்ந்து கொண்டதும் உண்டு.


கமலாரீச்சர் அதிகாலை நேர அமைதிக்கடல் என்றால் ஆர்பரிக்கும் அமாவாசைக்கடல் கெங்காம்பிகை ரீச்சர். சின்னப்பிள்ளையில் கணக்குப் பாடம் சொல்லித்தந்தவா. தோற்றத்தில் ஜானகி மாதிரியென்னறால், கோபத்தில் ஜான்சிராணி. அவவின் வகுப்பில் அளவிலாப்பாராட்டுக்களைப் பெற்றதுமுண்டு. அடிவேண்டி அழுததுமுண்டு. எண்ணையும் எழுத்தையும் கடந்து, முதலில் தமிழின் கலைகளைக் கற்றுத் தந்ததும் அவர்கள்தான். முத்தமிழ்விழாப் போட்டிகளின் மூலம், முத்தமிழைக் கொஞசம் கொஞ்சமாக, குழைத்து ஊட்டி வளர்த்து உருமாற்றியவர்கள். வாசிக்கவும், யோசிக்கவும், பழக்கப்படுத்தியவர்கள்.
வாழ்க்ககைக்காலத்தின், என்றும் எப்போதும், மறக்க முடியாத, அவர்களிருவருடனான அறிவாரந்த அனுபவங்களும், அன்பான வழிநடத்தல்களும் ஆயிரமாயிரம். எங்கள் காலத்திற்கும் அப்பால், எங்களினூடு எங்கள்பிள்ளைகள் காலத்திற்கும் அறிவுரைகளாய் வழிநடத்தும் என்பதில் ஐயமில்லை.

வலைப்பதிவு எழுதத் தொடங்கிய நாட்களிலில் அறிமுகத்துக்காக எழுதிய இரு சிறு குறிப்புக்களையும், பதிவுகளின் எண்ணிக்கையிலிருந்து விலக்கிப் பார்த்தால், இது இருபத்தைந்தாவது பதிவு. அதில் ஊரார்பிள்ளையை ஊட்டி வளர்த்தவர்களென, இந்த உத்தமர்களை எண்ணத் தோன்றியதும், எதிர்பாரத ஒரு சிறப்புத்தான்.