Thursday, March 30, 2006

திருகோணமலை -ஒருபார்வை- பகுதி4

திருகோணமலை மீது சிங்கள பேரினவாத அரசுக்கு மட்டுமின்றி வேறு சில அரசுகளுக்கும் அக்கறை இருந்தது. அதற்குக் காரணம், திருகோணமலையின் புவியியல் கேந்திர முக்கியத்துவம். திருகோணமலையின் இயற்கைத்துறைமுகம், வெறுமனே ஒரு துறைமுகம் மட்டுமல்ல, அது ஒரு சிறந்த கடற்படைத்தளமும் கூட. இயற்கை அரணும், ஆழ்கடலும், வெட்டுண்ட கரையும் கொண்ட இத்துறைமுகம் இரண்டாம் உலக மகாயுத்தகாலத்தில் முக்கிய கடற்படைத்தளமகாவும் இருந்திருக்கிறது. இதன் மேலதிக பயன் கருதி பிரிட்டிஷ் ஆட்சியாளர் பிரமாண்டமான நூறு எரிபொருள் குதங்களை அமைத்தார்கள். அவற்றில் ஒன்றிரண்டு சிதிலமடைந்து போக, ஏனையவை இன்னமும் பாவனையில் உள்ளன. இத்தகைய இராணுவ சிறப்பம்சங்கள் , கிழக்காசியப் பிராந்தியத்தில் தங்களின் வல்லாதிக்கத்தை நிலைநிறுத்த முனையும் அனைத்து அரசுகளும் திருகோணமலை மீது அக்கறைகொள்ள வைத்தன.
இப்படி அக்கறைகொண்ட அரசுகள், சிங்கள அரசுடன் நட்புப் பாராட்டி உறவும் உதவியும் புரியத்தொடங்கின. ஸ்ரீலங்காவில் மாறிமாறி ஆட்சிக்கு வந்த பேரினவாத அரசுகளும், இதைத் தங்களின் உள்ளார்ந்த செயற்ப்பாட்டுக்குத் தந்திரமாகப் பாவித்துக் கொண்டன. நாடிவந்த நட்பு அரசுகளும் புன்சிரிப்புடனே புகுந்து கொண்டன. அந்தவகையில் திருகோணமலையில் அக்கறையோடு நுழைந்துகொண்ட அரசுகளில் ஒன்று சீனா. சீனாவின் எண்ணம் திருகோணமலையில் பிரமாண்டமான மா உற்பத்தி ஆலையாக வடிவம்பெற, அதற்கு வேண்டிய தொழிலாளர் வழங்கல் என்ற போர்வையில் திட்டமிட்ட சிங்களக்குடியேற்றத்தைச் செய்தது. இதுபோன்று வேறுபல குடியேற்றங்களும் நடந்தன. அவற்றில் முக்கியமான மற்றொரு திட்டம் மகாவலிகங்கை திசை திருப்புத்திட்டம். வெளிநாட்டு உதவிகளுடன் நடைபெற்ற இத்திட்டத்தின் மூலம் பல்லாயிரக்கணக்கான சிங்கள மக்கள், திருகோணமலை த்மிழ்பிரதேசங்களைச் சுற்றி புதிதாகக் குடியேற்றப்பட்டார்கள். இப்படிச் செய்யப்பட்ட குடியேற்றங்கள், மிக நேர்த்தியாக தமிழ்ப்பிரதேசங்களைத் துண்டாடிய வகையில் நடந்தன. இப்படி குடியேற்றம் செய்யப்படும்போது மிகக்கவனமாக அவ்விடங்களின் தமிழ் பெயர்களும் மாற்றம் செய்யப்பட்டன.

Saturday, March 25, 2006

திருகோணமலை -ஒருபார்வை- பகுதி3


திருகோணமலை மீது ஆக்கிரமிப்பாளர் அனைவரும் அதீதமான அக்கறை கொள்வதற்கு முக்கிய காரணம், திருகோணமலையின் புவியியல் பொருளாதாரச் சிறப்புக்களே.
திருகோணமலை அருமையான ஒரு இயற்கைத்துறைமுகத்தைக் கொண்டது. மிகுந்த கடல்வளம் கொண்டது. அழகான நீள்கடற்கரை, வளமிகு நெல்வயல்கள், இலங்கையின் வற்றாத ஜீவநதியான மகாவலி கங்கை கடலுடன் கலக்கும் களிமுகம், பாரிய கப்பல்கள் கூட கரையை அன்மித்து வரக்கூடிய வெட்டுண்ட கடற்கரை, வனவளம், பல்லின பல்மொழி பேசும் கலக்கலான ஒரு மக்கள் சமூகம், என அதன் சிறப்புக்கள் பலப்பல.
வங்காள விரிகுடா நோக்கி நுழைமுகம் கொண்ட இயற்கைத் துறைமுகமும், அதனை அண்மித்து இருக்கும் பாரிய எண்ணெய் கொள்கலன்களும், சாதரணமான நோக்கர்களுக்கு பெரிதாகத் தோன்றாமலிருக்கலாம், ஆனால் இராணுவச் செயற்பாட்டாளர்களுக்கு அது ஒரு மிகுகொடை. நீள்கடற்கரையும், பல்லினங்கள் வாழும் மக்கள் சமூகம், அதுசார்ந்த சுற்றுலாத்துறை, கடல் வளம், அதிலும் குறிப்பாக மகாவலியின் நன்னீரும், கொட்டியாரக்குடாக் கடலின் உவர் நீரும் கலக்குமிடத்தில் கிடைக்கக் கூடிய சிறப்பான மீன்வளமும், இருபோக விளைச்சல் தரக்கூடிய வயல்நிலங்கள், பாரிய மரங்கள் கொண்ட வனவளம், என்பனவெல்லாம் பொருளியல் நோக்கர்களின் கவனத்தையீர்க்கும் சிறப்பு அம்சங்களாகும்.
இப்படியான முக்கியத்துவம் நிறைந்த திருகோணமலையில் மேலைத் தேயர்கள் எத்துணை அக்கறை கொண்டிருந்தார்களோ? அதற்கும் மேலாக சிங்கள அரசு நாட்டம்கொண்டிருந்தது. அதன் அனைத்து வளங்களையும்,
தமிழ்மக்களிடமிருந் சுரண்டிக்கொள்ளும் நயவஞ்சகத்தனத்தை படிப்படியாக அரங்கேற்றத் தொடங்கியது.
இதன் முதற்படிதான் சிங்களக்குடியேற்றம். திருகோணமலை மாவட்டத்தில் தங்களது ஆதிக்கம் வலுப்பெற, திருகோணமலை மாவட்டத்தின் சனத்தொகை விகிதாசாரத்தில் தமிழ்மக்களின் விகிதத்தைக் குறைக்க வேண்டும். அதற்கு என்ன செய்யவேண்டும்? இருகோடுகள் தத்துவம்தான். பெரிய கோட்டினை சிறிய கோடாக்க வேண்மென்றால், பக்கத்திலே இன்னொருகோட்டினைப் பெரிதாக போட வேண்டியதுதானே என ஆலோசனை பெற்றிருப்பார்கள் போலும், மெல்ல மெல்ல குடியேற்றதிட்டங்களைத் தொடங்கினார்கள். இதை தமிழ் மக்கள் மீதான திட்டமிட்ட ஒரு படைநகர்வைப்போல் செய்யத் தொடங்கினார்கள் என்றால் மிகையாகாது. வாழ்வியல் தொன்மை மிகு திருகோணமலைப்பிரதேச வாழ் தமிழ் மக்களை நோக்கி, தமிழ்ப்பிரதேசங்களை சுற்றிவளைத்து, படிப்படியாக அபகரித்த வண்ணம் அந்த நகர்வு ஆரம்பமாயிற்று.
- நகர்வு தொடரும்.

Thursday, March 23, 2006

திருகோணமலை -ஒருபார்வை- பகுதி2




கோணேஸ்வரர் ஆலயத்தையும், பாபநாசச்சுனையையும், உள்ளடக்கி நிற்கும் தற்போதுள்ள கோட்டையை, அந்நியர்கள் புராதனமான கோணேஸ்வரர் ஆலயத்தை இடித்தே கட்டினார்கள் என்பதற்குச் சாட்சியாக இருப்பது, கோட்டைவாயிலில் காணப்படும் கற்களில் உள்ள, கோணேஸ்வரர் ஆலயக் கல்வெட்டு வாசகங்களும்,
படம் :- கன்னியா வெந்நீருற்று பாண்டிய அரசாட்சி இலட்சனையான இரட்டைக்கயல் மீன் இலட்சனையுமாகும். இந்தக்கோட்டையைக் கட்டியவர்களும், கைப்பற்றிக் கொண்டவர்களும், தங்கள் பாதுகாப்புத் தளமாகவும், திருகோணமலைக்கு அப்பால் கிழக்கு நோக்கி விரியும் பரந்த கடற்பரப்பைக் கண்கானிப்பதற்கும், பயன்படுத்தி வந்தார்கள். ஆங்கிலேயர் ஆட்சிவிட்டு நீங்கியபோது, இலங்கை அரசுக்குச் சொந்தமானது.
இலங்கை சுதந்திரம் பெற்ற காலங்களில், திருகோணமலை பல்லின மக்கள் வாழுமிடமாக விளங்கியபோதும், பெரும்பாண்மையாகத் தமிழர்கள் வாழும் தமிழ்பிரதேசமாகவே இருந்தது. இந்து, முஸ்லீம், பெளத்தம்,கிறிஸ்தவம், எனும் நான்கு மதங்களைச்சார்ந்த மக்கள் தமிழ, சிங்களம், எனும் இருமொழி பேசியிருந்தார்கள். சிவராத்திரி காலத்தில், நகர்வலம் வுருகின்ற கோணேஸ்வரப்பெருமானைக் கும்பிடாத சிங்களவர் இருக்கமாட்டார்கள், வெசாக் பண்டிகை கொண்டாட்டதில் கலக்காத தமிழர்கள் இல்லை, என்ற அளவிற்கு அவர்கள் வாழ்வு இணைந்திருந்தது.
என்று சிங்களபேரினவாத் தலைதூக்கத் தொடங்கியடதோ, அன்றிலிருந்து இனங்களுக்கிடையில் பகைமை தொடங்கிற்று. இந்தப்பகைமையுணர்வை ஊக்கி வளர்ப்பதில் பேரினவாதம் மெதுமெதுவாக, ஆனால் பல்மாகவும், பவ்யமாகவும், செயற்பட்டத. தென் இலங்கையின் கரையோரங்களிலிருந்து, மீன்பிடித்தொழிலுக்காக வந்து வாடி அமைத்தும், சந்தைவைத்துக் கொண்டுமிருந்த சிங்களவர்கள், திருக்கோணேஸ்வரத்தின் வாசலிலே தங்கள் வழிபாட்டிற்கென ஒரு புத்தகோயிலை நிறுவியபோது, வழிபாட்டுத்தலம்தானே என தமிழ்மக்கள் வாளாதிருந்தததனால், பின்னர் கோட்டை வாயிலில் இருந்த பிள்ளையார் "கண தெய்யோ நாண்ட கியா" என ( பிள்ளையார் குளிக்கப் போயிற்றார் எனும் தமிழ் அர்த்தம்) சிங்களத்தில் எழுதப்பட்டு, பலதடவை கடலுக்குள் வீசப்பட்டார். பிள்ளையார் மட்டுமா வீசப்படார்? பின்னாளில் பல தமிழ்பிள்ளைகளுமல்லவா கடலில் வீசப்பட்டார்கள்.
புராதன தமிழ்நகரம ஒன்று, படிப்படியாகத் திட்டமிட்டு அழிக்கபடும் சோகம் ஆரம்பமாகியது. மகாபாரதக்கதையில், குருஷேத்திரக்களத்தில் அபிமன்யு பத்மவியுகத்தில் சிக்க வைத்துக் கொன்றார்கள் அல்லவா? அதுபோல், தமிழ் மக்களைக் கொன்றழிக்க சிங்கள்ப் பேரினவாதம் ஒரு பயங்கரமான பத்ம வியுகம் வடித்தது. அதுதான் சிங்களக்குடியேற்றங்கள்.
சிங்களக் குடியேற்றங்கள்ஆரம்பத்தில், நல்லெண்ண முயற்சி போலவே நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால் அது ஒரு நச்சு மரம் என்பதை தமிழ் மக்கள் உணரத் தலைப்பட்ட போது, வெள்ளம் கழுத்துக்கு மேல் வந்து விட்டது.
திருகோணமலையை தங்கள் ஆளுமைக்குள் கொண்டுவர, சிங்களப் பேரினவாதம், ஏன் இவ்வளவு அக்கறை கொள்கிறது. அதன் பின்புலச் சூட்சுமம் என்ன ?... மறுபகுதியில் பார்ப்போம்

Wednesday, March 22, 2006

திருகோணமலை- ஒருபார்வை- பகுதி 1

திருகோணமலை தமிழீழத்தின் தலைநகரா? இந்தக் கூற்று யாரால் முன் மொழியப்படது? இக் கேள்விகள் ஒரு புறமிருக்க, திருகோணமலையின் தொன்மையையும், தமிழர்களின் வரலாற்றில் அதன் முக்கிய பங்கினையும், விரிவாக அல்லாவிடினும், சற்று மேலோட்டமாகவாவது நோக்குவது அதன் முக்கியத்துவத்தை உணர்த்துமென நினைக்கின்றேன்.

திருகோணமலையின் வரலாறு இராமாயணகாலந்தொட்டு நமக்கு அறிமுகமாகிறது. இலங்கை மன்னன் இராவணன் சிவபக்தன், அவனது தாயும் சிறந்த சிவபக்தை. அவள் தினமும், தெட்சன கைலாசம் எனும் பெருமைபெற்ற திருகோணேஸ்வரத்தில் கோவில்கொண்ட கோணேஸ்வரப்பெருமானை வழிபட்டபின் உணவு உண்டுவந்ததாகவும், தள்ளாத வயதிலும் தாயின் வழிபாட்டு உறுதிகண்டு மகிழ்வும் கலக்கமும் கொண்ட இராவணன். கோணேஸ்வரப்பெருமானை, திருக்கோணேஸ்வரச்சிகரத்துடன் வெட்டி பெயர்த்தெடுக்க முனைந்ததாகவும், சிகரத்தின் அசைவு அதிர்ச்சியுற்ற மாதுமை அம்பாளை தைரியப்படுத்திய இறைவன் தன் காற்பெருவிரலால் அழுத்த, அதனுள் இராவணன் நசுங்கி வருந்தி, பின் நாரதரின் ஆலோசனையில், தன் பத்துத் தலைகளில் ஒரு தலையுடன் இனைந்த பாகத்தினை பிய்த்தெடுத்து, அதனையே வீணையாகப் பாவித்து சாமகாணம் பாடியதாகவும், ( இக்காட்சியே கைலாசவாகனத்திருவிழாவாக ஈழத்தில் பரவிநிற்கிறது. இவ்வகைத்திருவிழா தமிழகத்தில் நடப்பதாகத் தெரியவில்லை. தெரிந்தால் அறியத்தரவும் ) அவ்விசையில் மயங்கிய இறைவன், அவனுக்கு வரமளித்து, மீள்வித்ததாகவும், அவ்விதம் மீண்டு வரும் போது, தாய் இறந்த செய்தி கேட்டு, தன் தண்டத்தினால், நிலத்தில் ஏழு இடங்களில் துளையிட்டு, ஏழு புண்ணிய தீர்த்தங்களைத் தியானித்து, தாயின் அந்திமச் சடங்கியற்றியதாக தெட்சணகைலாயமான்மிகம் எனும் நூல் கூறுவதாகவும், இராவணன் உருவாக்கிய ஏழுதீர்த்தங்களே கன்னியா வெந்நீருற்றுக்கள் என்றும், திருக்கோணேஸ்வரர் தலபுராணம் கூறும்.

' கோயிலும் சுனையும் கடலுடன் சூழ்ந்த கோணமாமலை யமர்ந்தாரே' என இராமேஸ்வரக்கரையிருந்து, திருக்கோணேஸ்வரப்பெருமானை அகக் கண்ணால் கண்டு மகிந்து, பாடித்தொழுதெழுதார் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் என்கிறது பெரியபுராணம். அப்படி அவர்பாடிய கோணமாமலைக் கோயில் திருக்கோணேஸ்வரம், தீர்த்தம் பாபநாசச்சுனை. இது திருஞானசம்பந்தர் கால வரலாறு.

இலங்கைத்தீவின் கிழக்குப்பகுதியில் பெருநிலப்பரப்பொன்றிற்கு அரசியாகவிருந்த திரிமுலைநாச்சியார் எனும், அரசகுமாரியைக் காதலித்து மணம்செய்து கொண்ட சோழர் வம்ச ராஜகுமாரன், திருக்கோணேஸ்வரப்பெருமானுக்கு கோவிற் திருப்பணி செய்து, நித்திய நைமித்தியங்களை குறைவுற ஆற்றுவதற்கான தொழும்பாளர்களை, இந்தியாலிருந்து அழைத்து வந்திருந்ததாகவும், கோவில் மானியத்திற்கென செந்நெல்விளை கழனிகளை பட்டயம் செய்தானென்றம், அவ்விளைநிலங்களுக்கு நீர் பாச்சவென, கந்தளாய் எனும்பகுதியில், மாபெரும் குளத்தைக் கட்டுவித்தானென்றும், கோயிலும், குளமும், கட்டியதால் அவன் குளக்கோட்டமன்னன் எனப்பெயர்பெற்றானென்றும், திருக்கோணேஸ்வரர் ஆலயம் தொடர்பான கல்வெட்டுக்களும், குறிப்புக்களும் கூறுகின்றன.

இத் தொடர்வரிசையில் திருக்கோணேஸ்வரர் ஆலயம், ஒரு தடவையோ அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட தடவைகளோ கடற்கோளுக்குள் சிக்கி அழிங்திருக்க வேண்டுமெனவும், பின் ஆலயம் இருந்து மறைந்த இடத்தில் வழிபாடுகள் நடந்திருக்கவேண்டுமெனவும், தொடர்ந்து வந்த சோழ மன்னர்களும், உறவுமுறையில் கலந்து வந்த பாண்டியமன்னர்களும், திருக்கோணேஸ்வரப் பெருமானுக்கு, கரு ங்கற்திருப்பாணியாக ஆலயம் அமைத்ததாகவும், அதைப்பின் வந்த ஒல்லாந்தரும், போர்த்துக்கீசரும், இடித்தழித்து, ஆலயக்கற்களைக் கொண்டே தற்போதுள்ள கோட்டை கட்டப்பட்டதாகவும், கோவில் வரலாறு கூறுகின்றது.

இப்பதிவு மிகநீளமாக அமையக்கூடும் எனும் காரணத்தால் இந்தளவில் இப்பதிவினை நிறுத்தி, தொடரினை மறு பகுதியில் தர விளைகின்றேன்.
சிரமத்திற்கு மன்னிக்கவும்..

குறிப்பு:-
இவை குறித்த ஆவனங்கள் தற்சமயம் என் கைவசம் இல்லையெனும் காரணத்தால் சுட்டப்படும் காலங்கள்குறித்து துல்லியமாகப் பதிவு செய்ய முடியவில்லை.

Saturday, March 18, 2006

என்னுடைய அப்பா

அப்பா! நாளைக்கு வீட்டில் நிற்பீர்கள்தானே?
என் இளைய மகள் கேட்டாள். ஏன் கேட்கிறாளென அவள் சொல்லாவிடினும், எனக்குப் புரியும். நாளை தந்தையர் தினம். காலையில் சிறிய பரிசுப்பொதியுடன் என்னைத் துயிலெழுப்புவாள். மார்ச் 19ந் திகதியை கத்தோலிக்கர்கள் புனித சூசையப்பர் தினமெனக்கொள்வார்கள். அன்றைய தினத்தில், தங்கள் தந்தையருக்கு பரிசுப்பொருட்கள் வழங்கி அவர்களை மகிழ்ச்சிபடுத்தும் வழக்கம் ஐரோப்பியக் கத்தோலிக்கர்கள் மத்தியிலுள்ளது. தற்போதுள்ள வணிகப்பெர்ருளாதாரக் கட்டமைப்பில், காதலர்தினம், தந்தையர்தினம், அன்னையர்தினம், என்பன வணிகத் தன்மைகொண்டவையாக மாறிவருகின்றபோதும், இயந்திரத்தனமான இவ்வாழ்நிலைச் சூழலுக்குள் சிறிதளவேனும் ஈரம் கசியவைக்கிறது என்றே சொல்லலாம். பெற்றோர்களை வாழும் காலத்தில் கணம் பண்ணுவதும், அவர்களின் உணர்வுகளை மதிப்பதும், இனிய அனுபவங்களே. ஆனாலும் இது அருகினில் வாழும் காலத்தில், பிள்ளைகளாலும் சரி, பெற்றோர்களாலும் சரி, சரிவரப்புரிந்துகொள்ளபடுவதில்லை என்றே எண்ணுகின்றேன்.புலம் பெயர்ந்த சூழலில் வாழும் ஒவ்வொருவருக்கும்,அவர்கள் பெற்றோருடனான நினைவுகள் சுகமான மீள்நினைவுகள் மட்டு மல்ல, புரிந்துணர்தலின் பரிமாணமும் கூட. புலப்யெர்வின் பின் என் அப்பா பற்றிய மீள்நினைவுகள், அவர் குறித்து ஆச்சரியப்படத்தக்க உண்மைகளை எனக்கு உணர்த்தியது. அத்தகைய இரு நினைவுகளை இங்கே பதிவு செய்கின்றேன்.
முதல்நினைவுக்குரிய சம்பவம் நடைபெற்றபோது, எனக்குப் பத்து அல்லது பதினொரு வயதிருக்குமென நினைக்கின்றேன். ஒரு முற்பகல் அப்பாவும், அவரது நண்பரும் கதைத்துக் கொண்டிருந்தார்கள். நண்பரின் குரல்தழுதழுத்திருந்தது. கண்கள் கசிந்தவண்ணமிருந்தது.
''எனக்கு மட்டும் வளர்ந்த ஆண்பிள்ளை இருந்திருந்தால், நான் எதுக்கும் பயப்படமாட்டன், உன்னை இப்பிடி அழவும் விடமாட்டன்..''
அப்பா சொன்ன மாத்திரத்தில், அப்பாவின் கைகளில் முகம் புதைத்து கதறிவிட்டார் நண்பர். முழுமூச்சான விளையாட்டின் மத்தியிலும், இவ்வளவும் அழியாத காட்சிப்படிமங்களாக மட்டும் அப்போதைக்கு என்னுள் பதிந்துவிட்டது.
இரண்டாவது நினைவு நிகழ்ந்தபோது, வாலிபத்தின் வாசலில் நின்ற பருவம் எனக்கு. தமிழர் விடுதலைக்ககூட்டணி தமிழீழத்திற்கான அறைகூவல் எனக்குறி, தேர்தலில் குதித்திருந்த காலம். தமிழ்உணர்வாளர்கள் ஒரு அணியில் திரட்டப்பட்டுக் கொண்டிருந்த நேரம். பேரினவாதக் கட்சிகளும் தங்கள் பங்குக்கு தமிழ் மக்கள் மத்தியில் பிரதிநிதிகளை அமைத்துச் செயற்பட்டுக் கொண்டிருந்தார்கள். அரசியல் ஆர்வமிக்க மாணவர்களாகவிருந்த நானும் எனது நண்பர்களும், தமிழர்விடுதலைக்கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காகத் தீவிரமாகச் செயற்பட்டோம். (வெற்றியின் பின் கூட்டணி நிலைமாறியது வேறவிடயம்) அப்பா வேலை செய்த இடத்தின் பொறுப்பாளரின் உறவினர் ஒருவர், பெரினவாதக் கட்சியொன்றின் வேட்பாளராக போட்டி யிட்டார். அவரின் வெற்றிக்காகப் பொறுப்பாளர் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்தார். வீடுவீடாகச் சென்று வாக்குவேட்டையாடினார்கள். ஊருக்குள் அவர் முக்கிய பிரமுகர் என்பதால், எல்லோரும் அவர் முகத்தைக் முறிக்கக் கூடாதென சரியென்றே பதில் கூறினார்கள். ஆனால் எங்கள் வீட்டிற்கு அவர்கள் வந்தபோது, அப்பா நேரடியாகவே மறுத்துரைத்துவிட்டார். எல்லோர்க்கும் ஆச்சரியமும், கூடவே பயமும். மிகநீண்டநாட்களாக அந்த இடத்தில்தான் அப்பா வேலைசெய்துவந்தார். அதுமட்டுமல்லாது, அப்பாவிற்கு வேறுவேலை எதுவம் தெரியாது. இந்த நிலையில் எதிர்காலம் பற்றிய எந்தவிதபயமும் இன்றி அப்பா நேரிடையாகச் சொல்லி விட்டார். அப்போது, மற்றவர்கள் அதுபற்றி எண்ணிப் பயந்தளவிற்கு அப்பா பயங்கொள்ளவில்லை. ஆனால் எல்லோரும் பயந்தளவிற்கு ஒன்றும் நடக்கவில்லை. கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்றது. அப்பாவின் வேலைக்கும் ஒன்றுமாகவில்லை. மற்றவர்கள் வாக்களிப்பதாகக் கூறி ஏமாற்றிவிட்டதை, தேர்தல் முடிவுகள் பொறுப்பாளருக்கு உணர்த்தியது. அப்பாவின் நேர்மையும் அவருக்கப் புரிந்ததது. அதனால் அப்பாவின் வேலையும் தொடர்ந்தது. அப்பாவின் துணிவும், கருத்து நேர்மையும், அன்று எனக்கு அவ்வளவு புரியவில்லை. இப்போது யோசிக்கும் போது உயர்ந்து தெரிகிறார் அப்பா.
சரி! முதல் நினைவில் நடந்தது என்னவென்று குழப்பமாகவிருக்கிறதா?
சொல்கிறேன்...
அப்பாவின் நண்பருக்கு ஐந்து பெண்பிள்ளைகள். அவர்களில் ஒருபெண் தவறான உறவில் தன்னிலை இழந்துவிட்டாள். வெளிப்படையாகச் சொல்வதாயின் கர்பமாகிவிட்டாள். இந்த நிலை வெளியே தெரிந்தால் அவரின் முழுக்குடும்பமுமே தற்கொலைசெய்துவிடும் நிலை. அந்தக்கணத்தில் நடந்த உரையாடல்கள்தான் அவை. (பின்னர் அப்பிரச்சினையை சுமுகமாகத் தீர்க்கப்பட்டவிட்டது)அன்று அப்பா சொன்ன வார்த்தைகள் , ஒப்புக்குச் சொன்னவார்த்தைகள் அல்ல. நண்பனின் துயரில் பங்குகொள்ள வேணு்மெனும், உயர்வான எண்ணத்தில் சொல்லப்பட்ட வார்த்தைகள் என்பதை உணர்வதற்கு எனக்கு வெகுகாலம் தேவைப்பட்டது.

Friday, March 17, 2006

ஒன்பது நிமிடத்தில் புத்துணர்ச்சி

அன்மையில் ஓர் சந்திப்பில் ஒரு இளைஞன் தான் வடித்த இசைவடிவங்களை தன் நண்பர்கள் வட்டத்தில், அறிமுகஞ்செய்து கொண்டிருந்தான். தரமான புதிய இசைக்கோர்வைகள். கேட்டு மகிழ்ந்த நண்பர்கள் கேட்டகிறார்கள்,
ஏன் நீ முறைப்படி இசையைக் கற்றுக்கொள்ளக் கூடாது?
என்னிடம் தற்போதுள்ள இசை மறந்து போய்விடுமெனப் பயமாகவிருக்கிறது.
அவன் பதில் அனைவர்க்கும் ஆச்சரியம் தருகிறது.
குறித்த வரைமுறைகளுக்குள் இசையின் விரிவை சுருக்கிப்பார்க்க விரும்பவில்லை என்கிறான்.எத்தனை உண்மை.
இசைக்கு எல்லைகள் உண்டா? உலகப்பொதுமைக்கு உரிமம் எடுக்கும் முயற்சியோ சாஸ்த்ரீய சங்கீதம்? மனங்களை இசையவைப்பதுதானேஇசை. அதை எப்படி வரைமுறைக்குள்ளாக்கலாம்?
அவனது ஒற்றைவரிப்பதில் என்னுள் பல கேள்விகளை எழுப்பியது.
கட்டுக்கோப்பில்லாத இசைஞர் என விமர்ச்சிகப்பட்டவராக பித்துக்குளி முருகதாசை நான் அறிந்திருக்கின்றேன். நீங்களும் அறிந்திருப்பீர்கள். ' அலைபாயுதே கண்ணா என் மனம் அலைபாதே ' பாடலை மற்றவர்கள் பாடும் அதே அடானா ராகத்தில்தான் பாடுவார். ஆனால் மற்றவர்களின் வரைமுறைக்கட்டுப்பாட்டுகளை மீறிய இசையாக அது வெளிப்படும். அவரது குரலும், அவரது ஆர்மோனியமும், குழைந்து, தவழ்ந்து,நின்று, நிமிர்ந்து, பலவாறு ஜாலம்புரியும்.
உள்ளத்தின்னுள்ளே ஊடுருவிச்சென்று உட்கார்ந்துவிடும் அவரது பாடல்களில் எனக்குப்பிடித்தமான மற்றொரு கண்ணன் பாட்டு.
ஒரு ஒன்பது நிமிடம் எல்லாற்றையும் தூக்கிப் போட்டுவிட்டு, அமைதியாக இருந்து, கண்களைமூடிக் கேட்டுப்பாருங்கள். பாடல் முடிந்து, கண்களைத்திறக்கும்போது உங்கள் மனமும் உடலும், புத்துணர்ச்சி பெற்றிருக்கும். தயாரா?...
தயாரெனில், அருகிருக்கும் Stickam player ல் 1 வது பாடல் 'கண்ணா கண்ணாவைக் கேட்டுமகிழுங்கள்.

Sunday, March 12, 2006

அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி




அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி பற்றி அறிந்திருக்கின்றீர்களா?
" கடவுள் யார் ? வாழ்க்கை என்பது என்ன ?ஏழ்மை எவ்வாறு உண்டாகிறது ? "என்பது போன்ற கேள்விகளுக்கு விடை உணர்ந்து உலகுக்கும் உணர்த்தி வரும் அனுபவஞானி வேதாத்திரி மகரிஷி அவர்கள், இன, மொழி, மதம், கடந்த அவரது ஆண்மீக அனுபவக் கூற்றுக்கள் புதியவை.
அறிந்து கொள்ள விரும்பின் அவர்களது இணையத்தளத்துக்கு ஒரு தடவை சென்று பாருங்கள்.
நான் கடவுளைக்காட்டுகின்றேன். கடவுளின் அவதாரம் நான் என்று கோஷமிடும் கூட்டத்தின் மத்தியில் அருட்தந்தையின் கருத்துக்களும், வழிகாட்டுதல்களும் உண்மையாகவே மாறுபட்டவை. வித்தியாசங்களை விரும்பும் நண்பர்கள் ஒரு தரம் சொடக்கி பார்க்கவும்

Friday, March 10, 2006

சாதனை மாந்தர்

இப் பிரபஞ்சம் ஒரு கூட்டுழைப்பு. இதில் தனிமனித முயற்சிகள், பங்குகள் அல்லது பகிர்வுகள். ஒவ்வொரு பங்கும் சிறப்புற அமைய தரணிசிறக்கும், தனிமனிதனும் சிறப்புறுவான்.
சற்றே உற்று நோக்கினால், சாதாரணமாகத் தெரிந்தவர்கள் கூட சாதனைவீரர்களாக, சரித்திர மாந்தர்களாகத் தெரிவார்கள். அப்படி எனக்குத் தெரிந்தவர்கள் சிலரை இங்கே அழைத்துவர எண்ணியுள்ளேன்...
தமிழ்மணத்தின் இடுகைப் பதிவு கிடைத்தபின், என் எண்ணச்சிதறல்களோடு மீண்டும் சந்திப்பேன்.. சற்றே பொறுத்திருங்கள்.

Thursday, March 09, 2006

மகிழ்ச்சி! மெத்த மகிழ்ச்சி!

கிழ்ச்சி! மெத் மகிழ்ச்சி !!
90 களின் இறுதியில், ஐரோப்பாவிற்கு கசப்புக்களுடனும், கனவுகளுடனும், புலம்பெயர்ந்த ஒர் ஈழத்தமிழன். காலடி எடுத்து வைத்த முதல்நாளில், கணனியில் தமிழ் கண்டு, காதலாய் தடவி ரசித்தவன். அன்று முதல் கணித்தமிழைப் படிப்படியாகக் கற்று வருபவன். வரும் வழியில் இன்று வலைப்பதிவில் தடம்பதித்துள்ளேன். மகிழ்ச்சி! மெத்த மகிழ்ச்சி!!
இதற்கு இவ்வளவு ஆர்ப்பாட்டமா? கேட்கலாம்..ஆங்கிலஅறிவோ, ஐரோப்பிய மொழிப் புலமையோ இல்லாது, தனித்தமிழில் முயற்சித்து, முயற்சித்து, முன்வந்திருக்கின்றேன். இந்த முனைப்புக்கு முதுகெலும்பாயிருந்த முகம் தெரியா நணபர்கள் காசி, புதியவார்ப்புக்கள், ஏகலப்பை குழுமத்தினர். இவர்களுக்கு என் சார்பாகவும், என்னைப்போன்றே முட்டி மோதி வந்து கொண்டிருக்கும் அறிமுகமற்றவர் சார்பாகவும், நன்றிகள் பலப்பல..
புலத்தில் ஊடகங்களின் உண்மைநிலை அல்லது தகைநிலை, ஐயத்துக்கிடமாகிவிட்ட நிலையில், வலைப்பதிவுகள் ஆற்றலை, ஆறுதலைத் தரும் விடயம் என்றே எண்ணி யிருந்தேன்: ஆனால் இங்கு வந்ததின் பின்தான், இங்கும் நிலமை சுமுகமாகவில்லை என்ற உண்மை உறைக்கிறது. ஆனாலும், சுதந்திரமான தொடர்பாடல்களம் என்றநிலையில் மனதில் நிறைந்தே இருக்கிறது. அதுமட்டுமல்ல ஆயிரமாயிரம் கருத்தாளர்கள் கரம்சேர்க்கும் தளம் அல்லவா தமிழ்மணம். கற்றுக்கொள்ளலாம் என்று நம்பி வந்திருக்கின்றேன். என் எண்ணச்சிதறல்களையும் இங்கு வைப்பேன்.
இனிவரும் நாட்களில் இன்னும் பேசுவோம்

Wednesday, March 08, 2006

அன்பான நண்பர்களே!

அன்பான நன்பர்களே!
நீண்டநாள் கனவு இன்று நனவாகிறது.
இனிவரும் நாட்களில நாம் பலதும் பேசுவோம்.
நன்றி!

அன்புடன்
மலைநாடான்