Wednesday, March 22, 2006

திருகோணமலை- ஒருபார்வை- பகுதி 1

திருகோணமலை தமிழீழத்தின் தலைநகரா? இந்தக் கூற்று யாரால் முன் மொழியப்படது? இக் கேள்விகள் ஒரு புறமிருக்க, திருகோணமலையின் தொன்மையையும், தமிழர்களின் வரலாற்றில் அதன் முக்கிய பங்கினையும், விரிவாக அல்லாவிடினும், சற்று மேலோட்டமாகவாவது நோக்குவது அதன் முக்கியத்துவத்தை உணர்த்துமென நினைக்கின்றேன்.

திருகோணமலையின் வரலாறு இராமாயணகாலந்தொட்டு நமக்கு அறிமுகமாகிறது. இலங்கை மன்னன் இராவணன் சிவபக்தன், அவனது தாயும் சிறந்த சிவபக்தை. அவள் தினமும், தெட்சன கைலாசம் எனும் பெருமைபெற்ற திருகோணேஸ்வரத்தில் கோவில்கொண்ட கோணேஸ்வரப்பெருமானை வழிபட்டபின் உணவு உண்டுவந்ததாகவும், தள்ளாத வயதிலும் தாயின் வழிபாட்டு உறுதிகண்டு மகிழ்வும் கலக்கமும் கொண்ட இராவணன். கோணேஸ்வரப்பெருமானை, திருக்கோணேஸ்வரச்சிகரத்துடன் வெட்டி பெயர்த்தெடுக்க முனைந்ததாகவும், சிகரத்தின் அசைவு அதிர்ச்சியுற்ற மாதுமை அம்பாளை தைரியப்படுத்திய இறைவன் தன் காற்பெருவிரலால் அழுத்த, அதனுள் இராவணன் நசுங்கி வருந்தி, பின் நாரதரின் ஆலோசனையில், தன் பத்துத் தலைகளில் ஒரு தலையுடன் இனைந்த பாகத்தினை பிய்த்தெடுத்து, அதனையே வீணையாகப் பாவித்து சாமகாணம் பாடியதாகவும், ( இக்காட்சியே கைலாசவாகனத்திருவிழாவாக ஈழத்தில் பரவிநிற்கிறது. இவ்வகைத்திருவிழா தமிழகத்தில் நடப்பதாகத் தெரியவில்லை. தெரிந்தால் அறியத்தரவும் ) அவ்விசையில் மயங்கிய இறைவன், அவனுக்கு வரமளித்து, மீள்வித்ததாகவும், அவ்விதம் மீண்டு வரும் போது, தாய் இறந்த செய்தி கேட்டு, தன் தண்டத்தினால், நிலத்தில் ஏழு இடங்களில் துளையிட்டு, ஏழு புண்ணிய தீர்த்தங்களைத் தியானித்து, தாயின் அந்திமச் சடங்கியற்றியதாக தெட்சணகைலாயமான்மிகம் எனும் நூல் கூறுவதாகவும், இராவணன் உருவாக்கிய ஏழுதீர்த்தங்களே கன்னியா வெந்நீருற்றுக்கள் என்றும், திருக்கோணேஸ்வரர் தலபுராணம் கூறும்.

' கோயிலும் சுனையும் கடலுடன் சூழ்ந்த கோணமாமலை யமர்ந்தாரே' என இராமேஸ்வரக்கரையிருந்து, திருக்கோணேஸ்வரப்பெருமானை அகக் கண்ணால் கண்டு மகிந்து, பாடித்தொழுதெழுதார் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் என்கிறது பெரியபுராணம். அப்படி அவர்பாடிய கோணமாமலைக் கோயில் திருக்கோணேஸ்வரம், தீர்த்தம் பாபநாசச்சுனை. இது திருஞானசம்பந்தர் கால வரலாறு.

இலங்கைத்தீவின் கிழக்குப்பகுதியில் பெருநிலப்பரப்பொன்றிற்கு அரசியாகவிருந்த திரிமுலைநாச்சியார் எனும், அரசகுமாரியைக் காதலித்து மணம்செய்து கொண்ட சோழர் வம்ச ராஜகுமாரன், திருக்கோணேஸ்வரப்பெருமானுக்கு கோவிற் திருப்பணி செய்து, நித்திய நைமித்தியங்களை குறைவுற ஆற்றுவதற்கான தொழும்பாளர்களை, இந்தியாலிருந்து அழைத்து வந்திருந்ததாகவும், கோவில் மானியத்திற்கென செந்நெல்விளை கழனிகளை பட்டயம் செய்தானென்றம், அவ்விளைநிலங்களுக்கு நீர் பாச்சவென, கந்தளாய் எனும்பகுதியில், மாபெரும் குளத்தைக் கட்டுவித்தானென்றும், கோயிலும், குளமும், கட்டியதால் அவன் குளக்கோட்டமன்னன் எனப்பெயர்பெற்றானென்றும், திருக்கோணேஸ்வரர் ஆலயம் தொடர்பான கல்வெட்டுக்களும், குறிப்புக்களும் கூறுகின்றன.

இத் தொடர்வரிசையில் திருக்கோணேஸ்வரர் ஆலயம், ஒரு தடவையோ அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட தடவைகளோ கடற்கோளுக்குள் சிக்கி அழிங்திருக்க வேண்டுமெனவும், பின் ஆலயம் இருந்து மறைந்த இடத்தில் வழிபாடுகள் நடந்திருக்கவேண்டுமெனவும், தொடர்ந்து வந்த சோழ மன்னர்களும், உறவுமுறையில் கலந்து வந்த பாண்டியமன்னர்களும், திருக்கோணேஸ்வரப் பெருமானுக்கு, கரு ங்கற்திருப்பாணியாக ஆலயம் அமைத்ததாகவும், அதைப்பின் வந்த ஒல்லாந்தரும், போர்த்துக்கீசரும், இடித்தழித்து, ஆலயக்கற்களைக் கொண்டே தற்போதுள்ள கோட்டை கட்டப்பட்டதாகவும், கோவில் வரலாறு கூறுகின்றது.

இப்பதிவு மிகநீளமாக அமையக்கூடும் எனும் காரணத்தால் இந்தளவில் இப்பதிவினை நிறுத்தி, தொடரினை மறு பகுதியில் தர விளைகின்றேன்.
சிரமத்திற்கு மன்னிக்கவும்..

குறிப்பு:-
இவை குறித்த ஆவனங்கள் தற்சமயம் என் கைவசம் இல்லையெனும் காரணத்தால் சுட்டப்படும் காலங்கள்குறித்து துல்லியமாகப் பதிவு செய்ய முடியவில்லை.

4 comments:

கானா பிரபா said...

வணக்கம் மலைநாடான்

நமது தென் தமிழீழம் பற்றிய வரலாற்றுப் பதிவுகள் நூலுருவில் மிகக் குறைவு.
என்னிடம் வரலாற்ருத் திருகோணமலை என்ற் நூல் உள்ளது, அதில் மன்னராட்சி காலத் திருகோணமலை பற்றிப் பல சுவையான தகவல்கள் உள்ளன.
நல்ல முயற்சி, தொடருங்கள்

அன்புடன்
கானா பிரபா

மலைநாடான் said...

வணக்கம் பிரபா!

நீங்கள் சொல்வது மிகமிக உண்மை. தென் தமிழீழ வாழ்வியல் சற்று வித்தியாசமானது. எனக்கு மிகவும் பிடித்தமான அந்த வாழ்வின் பதிவுகளைத் தொடர்ந்து தரவேண்டும் என விருப்பமுண்டு. முயற்சிப்பேன்.
நன்றி!

வன்னியன் said...

முயற்சிக்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள். வாசிக்கிறோம்.

மலைநாடான் said...

வன்னியன்!
உங்கள் வருகைக்கும் , பதிவுக்கும் நன்றி. உங்களைப் போன்றோரது, ஊக்குவிப்பு மேலும் உற்சாகத்தைத் தருகிறது.