திருகோணமலை மீது சிங்கள பேரினவாத அரசுக்கு மட்டுமின்றி வேறு சில அரசுகளுக்கும் அக்கறை இருந்தது. அதற்குக் காரணம், திருகோணமலையின் புவியியல் கேந்திர முக்கியத்துவம். திருகோணமலையின் இயற்கைத்துறைமுகம், வெறுமனே ஒரு துறைமுகம் மட்டுமல்ல, அது ஒரு சிறந்த கடற்படைத்தளமும் கூட. இயற்கை அரணும், ஆழ்கடலும், வெட்டுண்ட கரையும் கொண்ட இத்துறைமுகம் இரண்டாம் உலக மகாயுத்தகாலத்தில் முக்கிய கடற்படைத்தளமகாவும் இருந்திருக்கிறது. இதன் மேலதிக பயன் கருதி பிரிட்டிஷ் ஆட்சியாளர் பிரமாண்டமான நூறு எரிபொருள் குதங்களை அமைத்தார்கள். அவற்றில் ஒன்றிரண்டு சிதிலமடைந்து போக, ஏனையவை இன்னமும் பாவனையில் உள்ளன. இத்தகைய இராணுவ சிறப்பம்சங்கள் , கிழக்காசியப் பிராந்தியத்தில் தங்களின் வல்லாதிக்கத்தை நிலைநிறுத்த முனையும் அனைத்து அரசுகளும் திருகோணமலை மீது அக்கறைகொள்ள வைத்தன.
இப்படி அக்கறைகொண்ட அரசுகள், சிங்கள அரசுடன் நட்புப் பாராட்டி உறவும் உதவியும் புரியத்தொடங்கின. ஸ்ரீலங்காவில் மாறிமாறி ஆட்சிக்கு வந்த பேரினவாத அரசுகளும், இதைத் தங்களின் உள்ளார்ந்த செயற்ப்பாட்டுக்குத் தந்திரமாகப் பாவித்துக் கொண்டன. நாடிவந்த நட்பு அரசுகளும் புன்சிரிப்புடனே புகுந்து கொண்டன. அந்தவகையில் திருகோணமலையில் அக்கறையோடு நுழைந்துகொண்ட அரசுகளில் ஒன்று சீனா. சீனாவின் எண்ணம் திருகோணமலையில் பிரமாண்டமான மா உற்பத்தி ஆலையாக வடிவம்பெற, அதற்கு வேண்டிய தொழிலாளர் வழங்கல் என்ற போர்வையில் திட்டமிட்ட சிங்களக்குடியேற்றத்தைச் செய்தது. இதுபோன்று வேறுபல குடியேற்றங்களும் நடந்தன. அவற்றில் முக்கியமான மற்றொரு திட்டம் மகாவலிகங்கை திசை திருப்புத்திட்டம். வெளிநாட்டு உதவிகளுடன் நடைபெற்ற இத்திட்டத்தின் மூலம் பல்லாயிரக்கணக்கான சிங்கள மக்கள், திருகோணமலை த்மிழ்பிரதேசங்களைச் சுற்றி புதிதாகக் குடியேற்றப்பட்டார்கள். இப்படிச் செய்யப்பட்ட குடியேற்றங்கள், மிக நேர்த்தியாக தமிழ்ப்பிரதேசங்களைத் துண்டாடிய வகையில் நடந்தன. இப்படி குடியேற்றம் செய்யப்படும்போது மிகக்கவனமாக அவ்விடங்களின் தமிழ் பெயர்களும் மாற்றம் செய்யப்பட்டன.
No comments:
Post a Comment