Showing posts with label பாடல்கள். Show all posts
Showing posts with label பாடல்கள். Show all posts

Sunday, November 29, 2009

அம்மா - ஒரு கவிதா அனுபவம்



நமது பிள்ளைகளின் மகிழத் தக்க செயல், மனதுக்குள் திரும்பத் திரும்ப மலர்ந்து மகிழ்ச்சி தரும். அது போலவே எமக்குப் பிடித்தமான படைப்பாக்கமும். அன்மையில் அப்படி ஒரு நிறைவைத் தந்தது இந்த ஒலிப்பதிவு.

அம்மாவைப் பற்றி ஒரு பத்து வயதுச் சிறுமியின் இயல்பான கவிதை. கிராமிய வார்த்தைகளில் தாய் குறித்த ஒரு பாடல். அன்னையின் புகழ் பாடும் ஒரு நவீன இசைப் பாடல். இவை ஒவ்வொன்றும் ஒவ்வாரு சந்தர்ப்பங்களில் கேட்டவை. இந்த ஒலிப் பத்தியை உருவாக்க யோசித்த போது ஒன்றோடொன்று இசைந்து வந்தது.

கவிதை ஒரு ஈழத்துச் சிறுமி, கிராமியப்பாடல் தமிழகத்துப் பாடகன், நவீன இசைப்பாடல் மலேசியக் கலைஞன். இந்த மூன்று தமிழையும், இசையோடு கோர்வையாக்கிய போது, இந்த ஒலிப்பத்தி ஒரு முப்பரிமானத் தோற்றத்தில் ஒலித்தது. கேட்பதற்கு மனதுக்கு இதமாகவும், திருப்தியாகவும் இருந்தது.

ஒரு தடவை நீங்களும் கேட்டுப் பாருங்களேன். உங்களுக்கும் பிடிக்கும் என்றே நினைக்கின்றேன்.

Monday, May 18, 2009

மெளனித்திருத்தல்


மெளனம்
சம்மதமல்ல
எதிர்ப்பும் கூட

Wednesday, November 21, 2007

எனக்கு மூன்று காதலிகள்.


இளமை எனக்கு மிகவும் பிடித்தமானது. அது புதிதானது. சிந்தனை, செயல், என எல்லாவற்றிலும், ஒரு புதுவேகம் இருக்கக் கூடிய பருவம். தன்னைச் சார்ந்திருப்போரையும் கூட சற்றுத் தொற்றிக் கொள்ளும் சுறுசுறு பருவம். அதனால் எனக்கு இளமை பிடிக்கும். கருப்பு வெள்ளைச் சினிமாக்காலத்தவன் இல்லையென்றாலும், இளையவன் எனச்சொல்லும் வயதுக்குப் பிள்ளைகள் வளர்ந்துவிட்டதால், பெருசாகிப்போனவன். இளமையாய் எண்ணங்களை வைத்துக்கொள்ள விரும்பும் எனக்கு எப்போதும் இளைய நண்பர்கள் மீது சற்று விருப்பம் அதிகம். அப்படியான இளையவர்கள் மூவருடன் ஒரு மாலைப்பொழுது...



புலம்பெயர் தேசத்தில் நான் பழகிய நம் இளைஞர் பலரிடத்திலும் காணப்பட்ட ஒரு கவலை, பெரியவர்கள் எப்போதும் தகமைபெற்று தலைநிமிரும் இளையவர்கள் பற்றிக் கருத்திற் கொள்ளாது, தவறிப்போகும் இளையவர்களையே முன்னுதாரணம் காட்டிப் பேசுகின்றார்களென்று. இதில் உண்மையில்லாமலும் இல்லை. இப்படியான சிந்தனைப்போக்கினால், சாதிக்க முனையும் எம்மிளைஞர்கள் பலரும் சந்திக்கும் சோதனைகளும், வேதனைகளும் நிறையவே. இவர்களுக்கும் அவைகளுண்டு....

" எனக்குத் தமிழ் நல்லாப் பேச வராது. ஆனாலும் நான் ஒரு தமிழன்தான். எம்மவர்களிடையே எனது "ரேப் " பாடல்களை பாடுவது, இலக்கியத்தரமற்றது எனும் நகைப்புப்குரியதாகிவிடும். அதனால்தான் பிறமொழிக்காறர்கள் மத்தியில் பாடுகின்றேன். " ரேப் " இசை வெறும் இசையல்ல. அது ஒருவாழ்வு. ரேப்பராக அனுபவித்து வாழாத ஒருவனால் சிறப்பான ரேப்பிசையைப் பிரசவிக்க முடியாது. என் உணர்வுகளை, அனுபவித்து இசையாகத் தருவதற்கு "ரேப்" இசைவாக இருக்கிறது. அதை நான் அனுபவித்து, சிறப்பாக இசைப்பதற்கு ஒரு ரேப்பராக வாழவிரும்புகின்றேன். இந்த விருப்பம் என் தோற்றத்தில் தரும் மாற்றங்கள், நம்மவர்கள் மத்தியில் என்னை பிழையாக அடையாளப்படுத்தலாம். அதனாலென்ன? நான் நானாகவாகவே இருக்கிறேன். ஒரு தமிழனால் ரேப்பிசையிலும் சிறந்திருக்க முடியும் என்பதை மாற்று இனங்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் எனும் வேட்கையோடே பாடுகின்றேன்..."

" சின்ன வயது முதலே நடனமும், காட்சிப்படுத்தலும், நானாகக் கற்றுக் கொண்டது. அந்நியச் சூழலில் நிறம், பொருளாதாரமுட்பட்ட பலவும் எம் முன்னேற்றத்துக்குத் தடையாக இருக்கின்றன. இவற்றோடு போட்டியிடுகின்ற எமக்குப் பெரியவர்களிடமிருந்து உதவிகள் வேண்டாம், உற்சாகமான சில வார்த்தைகள் வந்தாலே போதும். எங்களுக்குத் தெரியும், உயரங்களைத் தொடுவதற்கு வேண்டிய உழைப்பு என்னவென்று. எங்களுக்கான சுயகட்டுப்பாடுகளுடனேயே நாம் இருக்கிறோம்..."

" எல்லோரும் இசையை ரசிப்பதற்குத்தான் காதைப்பாவிப்பார்கள். ஆனால் எனது இசையைப் பிரசவிப்பது என்காதுகள்தான் என்பேன். எந்நேரமும் என்னைச் சுற்றிக் கேட்கும் சப்தங்களின் மீதான என் அவதானிப்பும், அது என்னுள் ஏற்படுத்தும் அனுபவமும், எந்தவொரு வாத்தியமும் இசைக்கத்தெரியாத என்னிடமிருந்தும் இசையைப்பிரசவிக்கிறது. இந்த அவதானிப்புக்கும், அனுபவத்திற்கும் நிறையத் தனிமை எனக்குத் தேவைப்படுகிறது. அது என்னைச் சுற்றிலுமுள்ளவர்களுக்கும் எனக்குமிடையில் ஒரு முரணைத் தோற்றுவிக்கிறதென்றும் சொல்லலாம். இவற்றையெல்லாம் மீறி, எனது ஆர்வம் என்னை வெளிப்படுத்தும்...."


ரேப்பிசை, நடனம் ஒளிப்பதிவு, இசையமைப்பு, எனும் துறைகளில், தங்கள் தடங்களை தமிழனாகவே பதிக்கும் இந்த இளம்கலைஞர்களின் எண்ணங்களுக்கும், ஆசைகளுக்கும் வானமே எல்லை. புலம்பெயர் சூழலின் நெருக்குதல்களோடு போட்டியிட்டு முன்னேறும் இவர்களும், இவர்களைப் போன்றவர்களும், எங்கள் சமூகத்தின் நாளைய நம்பிக்கைகள். அந்த நம்பிக்கைகளைச் செதுக்காவிடினும், சிதைக்காதிருப்போமா?

பி்.கு: இசை, வேலை, காதலி, ஆக எனக்கு மூன்று காதலிகள் என்னும் இந்த இசைஞனின் வாழ்வில், முதலாம் விருப்பம் விரைவில் மூன்றாமிடத்துக்குப் போகவிருக்கிறதாம். வாழ்த்துச் சொல்வோமா? வேண்டாமா? தன்னுள் எழுந்த இசையைப் புணர்ந்து, கணனிகளில் கருக்கட்டிக் அவன் காதுகளால் பிரசவித்திருக்கும் இந்த பிறந்தநாள் வாழ்த்துப் பாடலைக் கேட்டுச் சொல்லுங்கள்.

Sunday, May 28, 2006

வெறுப்பேத்தியிருக்கக் கூடிய பாடல்

பாடல்: ஆடுகின்றான் கண்ணன்..

பாடியவர்: சிறிநிவாஸ்

இசை: சத்யா

பாடல் இடம்பெற்ற திரைப்படம் எது என்று கேட்கின்றீர்களா? அதை நீங்கள் தான் கண்டுபிடிக்க வேண்டும். ஒரு உதவித்தகவல். சிலகாலங்களுக்கு முன், தமிழ்நாட்டில் கணவன்மார்களுக்கு வெறுப்பினைத் தந்திருக்கக் கூடிய பாடல். உண்மையில் நல்ல இசைக் கோப்புடனான பாடல். என் குடும்பத்தில் அனைவர்க்குமே பிடித்தபாடல். பாடலைக் அருகேயுள்ள Stickam player ல்
3 வது பாடலைக் கேளுங்கள்.

Saturday, May 06, 2006

தமிழீழக்குயில் - பார்வதி சிவபாதம்

வலைப்பதிவு செய்யத் தொடங்கிய போதே இதை எழுதவேண்டுமென எண்ணியிருந்தேன். எழுதத் தொடங்கிய சில நாட்களில் திருகோணமலை பற்றிய பதிவை எழுதத் தொடங்கி, அது தொடராக நீண்டதால் இந்தப்பதிவு தாமதமாயிற்று. ஆயினும் இதைப்போல் வேறு சில பதிவுகளும் எழுதுகின்ற எண்ணம் உண்டு. அதற்கான காரணம், எங்கள் கலைஞர்கள் குறித்த ஒர் அக்கறை அல்லது பெருமிதம் எனக் கொள்ளலாம்.

சில வருடங்களுக்கு முன்னர் தமிழகத்தின் பிரபலமான இளம் கர்நாடக இசைவித்தகி ஒருவரை, வானொலி நிகழ்சிக்காகச் செவ்விகண்டு கொண்டிருந்தேன். அப்போது, இலங்கைக்கலைஞர்கள் பற்றிய கருத்தாடல் வந்தபோது, இலங்கையின் பிரபலமான இசைக்கலைஞர்கள் சிலர் பற்றி நான் குறிப்பிட்டேன். அந்தச் சந்தர்பத்தில் அவர் தனக்கு அவர்களைப்பற்றி எதுவும் தெரியாது எனக் குறிப்பிட்டார். ஆனால் நான் குறிப்பிட்ட இசைக்கலைஞர்கள், தமிழகக் கலைஞர்களுக்கு இணையான தகமை மிக்கவர்கள். இலங்கை வானொலியுட்பட, வேறுபல தொடர்பூடக முன்னிலைக்கலைஞர்கள். அத்தகைய கலைஞர்கள் பற்றி அறிந்திராத அவர், மேலைத்தேய இசைக்கலைஞர்கள் பற்றியெல்லாம் வெகு ஆர்வமாகப் பேசினார். ஏன் அப்படி? எனக்குப் புரியவில்லை. தான் சார்ந்த துறையில், அதுவும் அண்டை நாட்டுக்கலைஞர்கள் பற்றி அறியாமைக்குக் காரணம் என்ன? ( ஆனால் பாகிஸ்தான் கலைஞர்கள் பற்றிக் கதைத்தார்.) இதேகேள்வியை எங்கள் ஈழத்துக் கலைஞர்களிடம் கேட்டிருந்தால், தமிழகக் கலைஞர்கள் பற்றிய நிறையச் சொல்வார்கள்.

எங்கள் ஈழத்துக்கலைஞர்கள் பற்றி, தமிழகக் கலைஞர்களும், தமிழக மக்களும், அறியாது போனதற்கான காரணங்கள் பலவாக இருக்கலாம். அவை பற்றி ஆராய்ந்து கொண்டிருப்பதிலும் பார்க்க, உலகை ஒன்றிணைக்கும் இணையத்தில், எங்கள் கலைஞர்கள் பற்றிய சிறிய அறிமுகங்களையும், அவர்களது இசை வடிவங்களையும், அவ்வப்போது பதிவாகத் தருவது நல்லதென்றெண்ணினேன். எழுதுகின்றேன்.

திருமதி பார்வதிசிவபாதம்.
இவர் யாழ்ப்பாணத்து இசைக்குடும்பம் ஒன்றில் பிறந்தவர். நீண்டகாலமாக மெல்லிசைப்பாடல்கள் பாடிவருபவர். பல்வேறு இசைக்குழுக்களிலும் பாடியவர். 80 களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திலும் , ஏனைய பிரதேசங்களிலும் நடைபெற்ற பல்வேறு கோவில் திருவிழாக்களிலும், கலைவிழாக்களிலும், நடைபெற்ற இசைக்கச்சேரிகளில் பங்கேற்றுக் கொண்டவர். இவரது தனித்துவமானகுரல்வளம், இவரது பாடல்களின் சிறப்பு. ஒரு காலத்தில் பார்வதி சிவபாதத்தின் இசைக்கச்சேரி இருப்பது, விழாவிற்கு பெருமையாகப் பேசப்பட்டதும் உண்டு.

விடுதலைப்போராட்டம் ஆரம்பித்த பின்னர், இவரது குரலில் , விடுதலைப்பாடல்கள் பல ஒலித்தன. கம்பீரமான அவரது குரலில், அவ்விடுதலைக் கீதங்கள் ஒருவித மிடுக்கோடொலித்தன என்றால் மிகையாகாது. தொடர்ந்து தமிழத்தேசியத்தின் இசைக்குரலாகப் பாடிடும் அவர், தேசிய விடுதலைப்போருக்காய் தன் குரலை மட்டுமல்ல, குழந்தைகளையும் கொடுத்து நிற்கும், தாய்.
அவரது குரலில் பல பாடல்கள் வந்திருந்த போதும் என்குப் பிடித்தது இந்தப் பாடல்தான். கடற்புலிகளின் ''நெய்தல்'' இசைத் தொகுப்பில் வந்த இப்பாடலுக்கு இசை அமைந்திருப்பவர், இசைவாணர் கண்ணன்.
இனி, எங்கள் ஈழத்து இசைக்குயிலின் குரலில் கடலலையே கொஞ்சம் நில்லு.....

அருகே பார்க்க கேட்க ரசிக்க பகுதியில் உள்ள Stickam player ல் 5 வது பாடல் கடலலையே கொஞ்சம் நில்லு.

கடற்புலிகளின் நெய்தல் இறுவட்டுக்குழுவினர்க்கு நன்றி!


Friday, March 17, 2006

ஒன்பது நிமிடத்தில் புத்துணர்ச்சி

அன்மையில் ஓர் சந்திப்பில் ஒரு இளைஞன் தான் வடித்த இசைவடிவங்களை தன் நண்பர்கள் வட்டத்தில், அறிமுகஞ்செய்து கொண்டிருந்தான். தரமான புதிய இசைக்கோர்வைகள். கேட்டு மகிழ்ந்த நண்பர்கள் கேட்டகிறார்கள்,
ஏன் நீ முறைப்படி இசையைக் கற்றுக்கொள்ளக் கூடாது?
என்னிடம் தற்போதுள்ள இசை மறந்து போய்விடுமெனப் பயமாகவிருக்கிறது.
அவன் பதில் அனைவர்க்கும் ஆச்சரியம் தருகிறது.
குறித்த வரைமுறைகளுக்குள் இசையின் விரிவை சுருக்கிப்பார்க்க விரும்பவில்லை என்கிறான்.எத்தனை உண்மை.
இசைக்கு எல்லைகள் உண்டா? உலகப்பொதுமைக்கு உரிமம் எடுக்கும் முயற்சியோ சாஸ்த்ரீய சங்கீதம்? மனங்களை இசையவைப்பதுதானேஇசை. அதை எப்படி வரைமுறைக்குள்ளாக்கலாம்?
அவனது ஒற்றைவரிப்பதில் என்னுள் பல கேள்விகளை எழுப்பியது.
கட்டுக்கோப்பில்லாத இசைஞர் என விமர்ச்சிகப்பட்டவராக பித்துக்குளி முருகதாசை நான் அறிந்திருக்கின்றேன். நீங்களும் அறிந்திருப்பீர்கள். ' அலைபாயுதே கண்ணா என் மனம் அலைபாதே ' பாடலை மற்றவர்கள் பாடும் அதே அடானா ராகத்தில்தான் பாடுவார். ஆனால் மற்றவர்களின் வரைமுறைக்கட்டுப்பாட்டுகளை மீறிய இசையாக அது வெளிப்படும். அவரது குரலும், அவரது ஆர்மோனியமும், குழைந்து, தவழ்ந்து,நின்று, நிமிர்ந்து, பலவாறு ஜாலம்புரியும்.
உள்ளத்தின்னுள்ளே ஊடுருவிச்சென்று உட்கார்ந்துவிடும் அவரது பாடல்களில் எனக்குப்பிடித்தமான மற்றொரு கண்ணன் பாட்டு.
ஒரு ஒன்பது நிமிடம் எல்லாற்றையும் தூக்கிப் போட்டுவிட்டு, அமைதியாக இருந்து, கண்களைமூடிக் கேட்டுப்பாருங்கள். பாடல் முடிந்து, கண்களைத்திறக்கும்போது உங்கள் மனமும் உடலும், புத்துணர்ச்சி பெற்றிருக்கும். தயாரா?...
தயாரெனில், அருகிருக்கும் Stickam player ல் 1 வது பாடல் 'கண்ணா கண்ணாவைக் கேட்டுமகிழுங்கள்.