Saturday, March 25, 2006
திருகோணமலை -ஒருபார்வை- பகுதி3
திருகோணமலை மீது ஆக்கிரமிப்பாளர் அனைவரும் அதீதமான அக்கறை கொள்வதற்கு முக்கிய காரணம், திருகோணமலையின் புவியியல் பொருளாதாரச் சிறப்புக்களே.
திருகோணமலை அருமையான ஒரு இயற்கைத்துறைமுகத்தைக் கொண்டது. மிகுந்த கடல்வளம் கொண்டது. அழகான நீள்கடற்கரை, வளமிகு நெல்வயல்கள், இலங்கையின் வற்றாத ஜீவநதியான மகாவலி கங்கை கடலுடன் கலக்கும் களிமுகம், பாரிய கப்பல்கள் கூட கரையை அன்மித்து வரக்கூடிய வெட்டுண்ட கடற்கரை, வனவளம், பல்லின பல்மொழி பேசும் கலக்கலான ஒரு மக்கள் சமூகம், என அதன் சிறப்புக்கள் பலப்பல.
வங்காள விரிகுடா நோக்கி நுழைமுகம் கொண்ட இயற்கைத் துறைமுகமும், அதனை அண்மித்து இருக்கும் பாரிய எண்ணெய் கொள்கலன்களும், சாதரணமான நோக்கர்களுக்கு பெரிதாகத் தோன்றாமலிருக்கலாம், ஆனால் இராணுவச் செயற்பாட்டாளர்களுக்கு அது ஒரு மிகுகொடை. நீள்கடற்கரையும், பல்லினங்கள் வாழும் மக்கள் சமூகம், அதுசார்ந்த சுற்றுலாத்துறை, கடல் வளம், அதிலும் குறிப்பாக மகாவலியின் நன்னீரும், கொட்டியாரக்குடாக் கடலின் உவர் நீரும் கலக்குமிடத்தில் கிடைக்கக் கூடிய சிறப்பான மீன்வளமும், இருபோக விளைச்சல் தரக்கூடிய வயல்நிலங்கள், பாரிய மரங்கள் கொண்ட வனவளம், என்பனவெல்லாம் பொருளியல் நோக்கர்களின் கவனத்தையீர்க்கும் சிறப்பு அம்சங்களாகும்.
இப்படியான முக்கியத்துவம் நிறைந்த திருகோணமலையில் மேலைத் தேயர்கள் எத்துணை அக்கறை கொண்டிருந்தார்களோ? அதற்கும் மேலாக சிங்கள அரசு நாட்டம்கொண்டிருந்தது. அதன் அனைத்து வளங்களையும்,
தமிழ்மக்களிடமிருந் சுரண்டிக்கொள்ளும் நயவஞ்சகத்தனத்தை படிப்படியாக அரங்கேற்றத் தொடங்கியது.
இதன் முதற்படிதான் சிங்களக்குடியேற்றம். திருகோணமலை மாவட்டத்தில் தங்களது ஆதிக்கம் வலுப்பெற, திருகோணமலை மாவட்டத்தின் சனத்தொகை விகிதாசாரத்தில் தமிழ்மக்களின் விகிதத்தைக் குறைக்க வேண்டும். அதற்கு என்ன செய்யவேண்டும்? இருகோடுகள் தத்துவம்தான். பெரிய கோட்டினை சிறிய கோடாக்க வேண்மென்றால், பக்கத்திலே இன்னொருகோட்டினைப் பெரிதாக போட வேண்டியதுதானே என ஆலோசனை பெற்றிருப்பார்கள் போலும், மெல்ல மெல்ல குடியேற்றதிட்டங்களைத் தொடங்கினார்கள். இதை தமிழ் மக்கள் மீதான திட்டமிட்ட ஒரு படைநகர்வைப்போல் செய்யத் தொடங்கினார்கள் என்றால் மிகையாகாது. வாழ்வியல் தொன்மை மிகு திருகோணமலைப்பிரதேச வாழ் தமிழ் மக்களை நோக்கி, தமிழ்ப்பிரதேசங்களை சுற்றிவளைத்து, படிப்படியாக அபகரித்த வண்ணம் அந்த நகர்வு ஆரம்பமாயிற்று.
- நகர்வு தொடரும்.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
நண்பர்களே!
இத் தொடரின் பகுதி 2 ல் இத் தொடருக்கு மதரீதியான பின்னூட்டங்கள் வரும்பட்சத்தில் அது பிரசுரிக்கப் படமாட்டாது என எழுதியிருந்தேன். அதன்பின்னரும், தேவன் என்னும் நண்பர்அதேரீதியில் பின்னூட்டம் இட்டிருக்கின்றார். ஆகையால் அப்பின்னூட்டத்தை பிரசுரிக்கமுடியாதுள்ளது. மன்னிக்கவும் நண்பரே!
Post a Comment