Sunday, April 02, 2006

திருகோணமலை -ஒருபார்வை- பகுதி5


பெயர் என்பது அழைப்பதற்கு மட்டும்தான் என்பதையும் கடந்து, மனிதர்களின், சமுகத்தின், வரலாற்று ஆவணமாகவும் பயன் தரக்கூடியது. ஆதலால்தான் வரலாற்றுத் திரிபாளர்கள் இது குறித்த விடயத்தில் மிக அவதானமாகச் செயற்படுகிறார்கள் போலும். சிங்களப் பேரினவாத அரசுகளும் தனது திட்டமிட்ட குடியேற்றங்களின் போது, பெயர்குறித்த விடயங்களில் அவதானமாகவே செயற்பட்டது. அதனால்தான் பன்னெடுங்காலம் அழகிய தமிழ்பெயர்களைத்தாங்கி நின்ற எங்கள் தமிழ்கிராமங்கள் சிங்களக் குடியேற்றங்களின் பின் தம் பெயரிழந்து, பொலிவிழந்து, போயின. அப்படித் திருகோணமலை மாவட்டத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்ட சில தமிழ்கிராமங்களின் பெயர்களையும், அவை தற்போது அழைக்கப்படும் சிங்களப் பெயர்களையும் தருவது இந் நோக்கினைச் செம்மைப்படுத்துமெனக் கருதி இங்கே தருகின்றேன்.

கந்தளாய் - கந்தல
குமரேசன் கடவை - கோமரங்கடவெல
புடவைக்கட்டு - பொடவக்கட்டுவ
பன்குளம் - மொரவெவா
தம்பலகாமம் - தம்பலகமுவ
வெண்டரசன் குளம் - கல்மெட்டியாவ
கும்புறுபிட்டி - கும்புறு பிட்டிய

இவை தவிர இன்னும் பெயர் மாற்றம் செய்யப்பட்ட இடங்கள் பலவும் உண்டு. மேலேயுள்ள படத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்ட இடங்கள் சில சிகப்பு நிறத்திலும், புராதன தமிழப்பெயர்களுடைய கிராமங்கள் நீல நிறத்திலும் காட்டப்படிருக்கிறது. இதை நீங்கள் கவனித்துப் பார்ப்பீர்கள் என்றால் தமிழ்க்கிராமங்களுக்கிடையில் திட்டமிட்ட வகையில் குடியேற்றம் செய்யப்பட்ட சிங்களக்கிராமங்களைக் காண்பீர்கள். இவ்விதம் காணும் குடியேற்றங்களை மேலும் ஊன்றிக் கவனித்தால், திருமலை நகரைச் சுற்றிவளைப்பதுபோல் அமைந்திருக்கும்.
இப்படியான குடியேற்றங்களுக்கு சிங்கள அரசுகள், வெளிநாட்டு உதவிகளைத் தந்திரமாகப் பயன்படுத்தியதுபோன்று, வேறு சில விடயங்களையும் பயன்படுத்திக் கொண்டன. அதில் முக்கியமானது தமிழ், முஸ்லீம், மிதவாத அரசியல் தலைவர்களின் பதவி மோகம் என்பது மிகையாகாது. இக்கட்சிகளின் பிரமுகர்கள் தஙகள் பாராளுமன்ற இருப்புக்களை உறுதிப்படுத்துவதற்காக, தக்க வைத்துக் கொள்வதற்காக, இக்குடியேற்றங்கள் குறித்து அக்கறை கொள்ளாது அல்லது கண்டுகொள்ளாது இருந்தனர். தமிழ்மக்களைப் பாராளுமன்றத்தில் பிரதிநிதிதுத்துவப்படுத்திய இத் தலைவர்களின் அசமந்தப்போக்கு பின்னாளில் தமிழ்மக்களை சொல்லொனாத் துயருக்கு இட்டுச் சென்றது. இக்குடியேற்றங்களின் பயங்கரத்தை முதலில் சரிவரப்புரிந்து கொண்டவர்கள் தமிழ்இளைஞர்களே! . இளைஞர்கள் இதைப்புரிந்து கொண்டதன் பிரதிபலிப்பு என்னவாக இருந்தது? . பார்ப்போம்....

4 comments:

Anonymous said...

கோமரசன்கடவெல:
இது 'கோமரங்கடவெல' என்பதாக இருந்திருக்கவேண்டும்.

Kanags said...

மலைநாடான், இப்படி நிறைய வரலாற்று ஆவணங்களைப் பதியுங்கள். இது காலத்தின் தேவை. நன்றி!

மலைநாடான் said...

பெயர்சொல்லா நண்பரே!
நீங்கள் குறிப்பிட்டபடி 'கோமரங்கடவெல' என்பதே சரியான சிங்களப் பெயர். மற்றுமொரு நண்பரும் தொலைபேசியில் அறியத் தந்திருந்தார். திருத்தம் செய்து விட்டேன்.தவறை உடன் சுட்டிக்காட்டியமைக்கும், வருகைக்கும் நன்றி!

மலைநாடான் said...

kanags!
பொதுவாகவே வரலாற்றுப்பதிவுகளை வாசிப்பவர்கள் குறைவு. ஆனால் வாசித்த பின் ஊட்டம் தருகின்ற உங்களது உற்சாகமூட்டல் இன்னும் எழுதவேண்மெனும் எண்ணத்தைத் தோற்றுவிக்கிறது.
நன்றி!