Tuesday, April 18, 2006

திருகோணமலை-ஒருபார்வை- பகுதி 10



திருகோணமலையில் சிங்களப் பேரினவாதம் தன் ஆக்கிரமிப்பை வியாபிக்க, பௌத்த பாரம்பரியத்தை கவசமாக்கின்றது என்பதும், அதன் அண்மைய வெளிப்பாடு திருமலை மத்திய பேருந்து நிலைய புத்தர்சிலை நிர்மாணம் எனப் பகுதி 8ல் குறிப்பிட்டிருந்தோம். இதற்கு முன்னர் நடந்த அத்தகைய
சம்பவங்களையும் குறிப்பிடும்படி நண்பரொருவர் தனிமடலில் கேட்டிருந்தார். ஆதலால் நானறிந்த அல்லது எனக்கு ஞாபகமுள்ள சில புதிய பௌத்த நிர்மாணங்களை மட்டும் இங்கே குறிப்பிடுகின்றேன். இவைகள் கடந்த 25-30 வருட காலப்பகுதிக்குள் புதிதாக நிர்மானிக்கப்பட்டவை என்பன குறிப்பிடத்தக்கது.


திருகோணமலை கோணேஸ்வரர் ஆலயத்திற்குச் செல்லும் வழியிலமைக்கப்பட்டுள்ள பௌத்தவிகாரை, வெண்டரசன் குளத்துக்கு அண்மையிலுள்ள சாமிமலையில் (இந்த மலையும், அதன் சூழலும், புராதன தமிழப்பிரதேசங்கள் என்பதற்கு பல்வேறு ஆதாரங்கள் இருந்தன அவைபற்றி பிறிதொரு பதிவில் பார்ப்பபோம்.) அமைக்கப்பட்ட பௌத்த விகாரை, கண்டிவீதி ஆறாம்கட்டை அல்லது ஆண்டாங்குளம் பகுதியில் அமைக்கப்பட்ட பௌத்த பீடம், கண்டிவீதி நான்காம் கட்டையில் ஒரு பௌத்தவிகாரை, தம்பலகாமம் சந்தியில் ஒரு பௌத்த பீடம், நிலாவெளி செல்லும் பாதையில் ஒரு பௌதத விகாரை, கன்னியா வெந்நீருற்றுப் பகுதி அண்மித்ததாக ஒரு பௌத்த வழிபாட்டுத் தலம், என்பனவற்றைக் குறிப்பிடலாம்.(இவை எனக்குத் தெரிந்த அல்லது அறியப்பட்டவை மட்டுமே. இவைதவிர வேறுபலவும் இருக்கலாம், அவைபற்றி அறிநத வாசகர்கள் தெரியப்படுத்தினால், ஆவனப்படுத்தலுக்காக அவை சேர்த்துக்கொள்ளப்படும்)



இவ்விதம் பௌத்த பாரம்பரியத்தை நிலைநாட்ட எடுத்த முயற்சிகளின்போது, சிலபகுதிகளில் ஏற்கனவே இருந்த பிறமத அடையாளங்கள் அழிக்கபட்டு அல்லது அவமதிக்கப்பட்டு இருந்தன. இதன் உச்சக் கட்ட கொடூரமாக பின்னாட்களில் நடந்த கலவரங்களின்போது, பிறவணக்கத்தலங்களுக்குள் தமிழ் மக்கள் கொலைசெய்யப்பட்ட சம்பவங்கள் கூட நடந்தன. இந்த இடத்தில் என் மனதைக்காயப்படுத்திய ஒருசம்பவத்தையும் சொல்லவேண்டும்.
பாலையூற்று என்றொரு அழகிய சிறிய தமிழ்க்கிராமம் ஒன்றிருந்தது. அக்கிராமத்தில் அழகிய ஒரு கத்தோலிக்கத் தேவாலயம். அந்த ஆலயத்தின் சுற்றுப்பிரகாரத்தில் கிறிஸ்துவின் சிலுவைப்பாடுகளும், கல்வாரி மலையும், சிறிய வடிவில் அழகாக அமைக்கபட்டிருந்தது. அழகிய சோலையாக இருந்த அந்தபிரகாரத்தில் சிறிய நீருற்று ஒன்றும் இருந்ததாக ஞாபகம். என் மனங் களைக்கும் வேளையிலெல்லாம் அந்தச் சூழலில் சுற்றிவந்து மாற்றம் பெற்றிருக்கின்றேன். பின்னாளில் நடந்த ஒரு கலவரத்தின் போது, அந்த அற்புதச் சோலையில் வைத்துத் சிங்களக்காடையர்கள், தமிழ்ப்பெண்களை மானபங்கம் செய்து கொலைசெய்தார்கள், எனுங் கொடுமையை என் நண்பன் சொன்னபோது உடைந்துபோனேன்.




இப்படி நீண்டகாலமாக நடந்து வந்த குடியேற்ற ஆக்கிரமிப்புக்களுக்கும், பௌத்தபாராம்பரிய பரவலாக்கலுக்கும், அண்மைக்காலத்தில் தமிழ்மக்கள் காட்டிய எதிர்ப்புக்கள் குறிப்பிடத்தக்கவை. திருகோணமலையில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் சம்பவங்கள், கிளர்தெழும் மக்களின் உணர்வுகளை மழுக்கடிப்பதற்காக பேரினவாதம் மேற்கொள்ளும் அடக்குமுறைகளேயாகும்.

இனிவருங்காலங்களில், இலங்கையில் ஓர் அமைதியான சூழ்நிலை ஏற்பட வேண்டுமாயின், அதற்கான ஆரம்பம் திருகோணமலை யிலிருந்தே தொடங்கப்பட வேண்டிய அவசியம் இருக்கிறது.

அந்த ஆரம்பத்தினூடாக எட்டப்பட வேண்டிய எல்லைகள் மிகவும் தொலைவானவை. பேரினவாதம் மேற்கொண்ட குடியேற்றங்கள், பரப்புதலுக்காக நிர்மானிக்கப்பட்ட பௌத்தநிலைகள், குறித்தெல்லாம் ஆராயப்பட வேண்டிய அவசியம் இருக்கிறது.

இவற்றுக்கெல்லாம் சிங்களப் பேரினவாதத்திடம் ஏற்புடைய தீர்வுகளோ அல்லது வேலைத்திட்டங்களோ இருக்கின்றனவா? இல்லை அவ்வகை எண்ணப்பாட்டினைத்தான் கொண்டிருக்கின்றார்களா? காலங்காலமாய் ஏமாற்றப்பட்டுவரும் ஈழத்தமிழர்கள் இவற்றை இனிமேலும், சிங்களப்பேரினவாதத்திடம் எதிர்பார்க்கமுடியுமா?
இப்படிப் பல கேள்விகள் முடிவிலியாய்.....

திருகோணமலை தமிழர்களின் தலைநகராக வரவேண்டும். அவ்விதமாய் வரும்போது, இலங்கைதீவில் மட்டுமல்லாது, தென்கிழக்காசியப்பிராந்தியத்தில் மட்டுமல்லாது, சர்வதேசத்திலும், தமிழர் எனும் தொன்மைக்குடி துலங்கி நிற்கும் பொற்காலமாக அமையும். நாம் சொந்த மண்ணின் சுகமான தென்றலை சுவாசிக்க முடியும்.

பத்துப்பகுதிகளாக எழுதப்பெற்ற இத்தொடரில், திருகோணமலையுடனான எனது சிலஅனுபவங்களையும், சில எண்ணங்களையும், உங்களுடன் பகிர்ந்து கொள்ளமுடிந்தது. இந்தத் தொடர்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொள்வீர்கள் என்று நம்புகின்றேன். ( தனி மெயிலில் தொடர்பு கொள்ள விரும்பின் malainaadaan@hotmail.com)
வலைப்பதிவிற்கு வருகை தந்தவர்களுக்கும், வாசித்தபின் ஊட்டமாகக் கருத்துப்பகிர்ந்தவர்களுக்கும், படங்களுக்கான www.eelavision.com நிர்வாகிகளுக்கும், மனமார்ந்த நன்றிகள். சந்திப்போம்.

6 comments:

Anonymous said...

படங்கள் சரியாகத் தொடுக்கப்படவில்லை

ஈழவிஷன் பக்கத்துக்குப் பதிலாக http://www.eelavision.com/gallery/5007-8649.jpg எனப் படங்களை மட்டும் இணையுங்கள்

தட்டான் ஒன்று விழுந்திருக்கிறது. பாலையூற்று என்றிருந்திருக்கவேண்டும்.

மலைநாடான் said...

நண்பரே!
தாங்கள் சுட்டிய திருத்தங்கள் சரி செய்து விட்டேன்
இவ்வளவு விரைவாக சுட்டியமைக்கு ரொம்ப நன்றிகள்

Anonymous said...

அன்பு மலைநாட்டானுக்கு!
முழுவதும் படித்தபின் ,கருத்துக்கூறக் காத்திருந்தேன்.வாழ்வில் இரு தடவை (1982; 2004) திருகோணமலை சென்றுள்ளேன். இம்மண்ணின் இயற்கைவளம் அளப்பரியது. இம்மண்ணும் எம்மண்ணே! என்பது பெருமிதம் தந்தது.மிகக் குறுகிய கால 2004 சுற்றுலாவில், கென்னியா;தம்பலகாமம்; நகரமும் பார்த்த பொழுது,இம் மண்ணை சிங்கள அரசு அபகரிக்க முற்படுவதன் ,காரணம் தெளிவானது.ஆரம்ப குடியேற்றங்களில் நமது பா-உ கள்,அசட்டையாக இருந்து.கதிரையைக் காப்பாற்றி,மண்ணைக் கோட்டை விட்டார்கள்.நன்கு புரிகிறது.தொடரும் ;இராணுவக் கூட்டுடனான இனவொழிப்பு; சாதாரண நிராயுதபாணி மக்களால் ஈடுகொடுக்க முடியாத நிலை தொடர்கிறதென்பது, கண்கூடு.அச்சத்தால் இடம்பெயர்வதால் ;மண் பிடிப்பு இலகுவாகிறது.ஈழத்தின் தலைநகராக அத்தனை தகுதியும் உள்ள ஒரேமண். சிறுகச் சிறுகப்
பறி போவது. வேதனையைத் தருகிறது. சமீபத்திய கலவரங்கள்; தீ வைப்புகள்; படுகொலைகள்; காடையருக்கு குளிர் விட்டுவிட்டென்பதென்பதைக் காட்டுகிறது.பழைமையான எங்கள் மண் பறி போவது வேதனையே! நல்ல தொரு ஆய்வு. தொடரவும்.
யோகன்
பாரிஸ்

மலைநாடான் said...

வணக்கம் யோகன்!
திருகோணமலை பற்றிய உங்கள் எண்ணப்பாடு மிகமிகச் சரியானதே. நீங்கள் கென்னியா என்று குறிப்பிட்டிருப்பது, கன்னியாவென்று நினைக்கின்றேன். அதைவிட கிண்ணியா என்றொரு இடமும் உண்டு. பார்க், ரசிக்க, ஏன் பழகக்கூட, அருமையான இடம் திருகோணமலை. ஆனால் இன்று ..?
தங்கள் வருகைக்கும், பதிவுக்கும், நன்றி!. நீங்கள் என்னுடன் தனி மடலில் தொடர்பு கொள்ளலாம்.
நன்றி!

Anonymous said...

http://transcurrents.com/tamiliana/archives/135

மலைநாடான் said...

நண்பர்களே!
இத்தொடர் குறித்து நண்பர்கள் சிலர் தனிமடலில் சில வினாக்களைத் தொடுத்து ள்ளனர். விரைவில் அவைகுறித்த பதிவொன்றினைத்தருவதற்கு விரைவில் முனைகின்றேன். தொடர்புகொண்ட அனைவர்க்கும் நன்றி!