
பௌத்தத்தின் பெயரால் திருகோணமலையில் சிங்களப் பேரினவாதம் செய்து வரும் அதீத செயற்பாடுகளின் எதிர்வினைகள் சிலவேளைகளில், சிங்களத்தேசியத்திற்கும், ஏன் ஸ்ரீலங்காவின் அனைத்து இனங்களின் இறையாண்மைக்கும் சாவு மணி அடிப்பதாகக் கூட அமைந்துவிடக்கூடும். தமிழ்த் தேசியத்தை ஒடுக்குவதற்காக, சிங்களப் பேரினவாதம், ஸ்ரீலங்காவிற்கு மாலையிட்டு, வெற்றிலை கொடுத்து, அழைத்துவருகின்ற அந்நிய சக்திகளின் வல்லாதிக்க மனபாவத்தைப் பொறுத்து, இது நடைபெறலாம். ( அப்படி நடைபெறாது என வாதிடுவோர், இந்திய அமைதிப்படை வருகைக்கு, ஈழத்தமிழர்கள் கொடுத்த குதுகல வரவேற்புக் கொண்டாட்டங்களையும், பின்விளைவுகளையும் ஒரு கணம் யோசித்துப்பாருங்கள். இதில் மற்றொரு வேடிக்கை என்னவென்றால், வங்கம் தந்த பாடம் என, வங்காளப்போரை மாய்ந்து மாய்ந்து படித்தவர்கள பலர், பரீட்சை நேரத்தில் படித்ததை மறந்து போன மாணவர்கள் போல் ஆனதுதான். )
திருகோணமலையில், இந்தியா, சீனா, ஜப்பான், அமெரிக்கா, ஆகிய அரசுகளுக்கு அதிக கவனம் இருப்பதையும், இவை அனைத்தும் தென்கிழக்காசியப்பிராந்தியத்தில், தமது ஆளுமையை நிலைநிறுத்திக்கொள்ளவும், எத்தணிக்கின்றன என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இவைகளில் அண்டைநாடு எனும் வகையில், இந்தியா இது விடயத்தில் தொடர்புபடக் கூடிய சில விடயங்களைப் பார்ப்போம்.
திருகோணமலையில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் குதங்களை, ஸ்ரீலங்கா அரசு குத்தகைக்கு விடுவதற்கு முனைந்த போது, சீனாவுடன் போட்டிபோட்டுப் பெற்றுக் கொண்டது இந்திய அரசு. இந்தியாவின் பிராந்திய ஆளுமைக்குத் தேவையானதாக அது அமைந்தது என்று கூடச் சொல்லலாம். தமிழ்மணத்தில் முன்பு ஒரு பதிவில், இந்தியாவின் ஆதரவுதான், ஈழத்திற்குத் தேவை. ஆகையால் தமிழீழம் இந்தியாவை நாடி நிற்க வேண்டும் என்ற பொருள்பட எழுதப்பட்டிருந்ததை வாசித்தபோது, மனம் வலித்தது. உண்மையில் இலங்கைத்தீவில் இந்தியாவிற்கான நேசசக்தியொன்று வலுப்பெறும் தேவை, இந்திய நலனுக்கே அவசியமாகிறது. தமிழீழப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக முகிழ்ந்த வேளையி;ல், அப்போதைய இந்தியப்பிரதமராக இருந்த இந்திராகாந்தி அம்மையாரால், ஈழவிடுவிலைப் போராட்ட அமைப்புக்களுக்கு வழங்கப்பட்ட பல்வகைஉதவிகளும், இந்த நோக்கிலேஅமைந்தன.
இலங்கைத்தீவில், இந்தியநலனுக்கான நேசசக்தியாக அமையக்கூடியவர்கள் எனப்பார்க்குமிடத்து, சிங்களப்பேரினவாதத்திலும் பார்க்க தமிழ்த்தேசியம் என்பதே பொருத்தமுடையதாகும். இதற்குத் தமிழீழ, தமிழகப் பாராம்பரிய உறவுகள் தொட்டு பல்வேறுவிடயங்களைச் சுட்டலாம். இந்நெருக்கத்தில் சிங்களப் பேரினவாதத்தின் உறவு என்பது, என்றும் ஐயுறவுக்குள்ளானதே. இந்தியா ஈழத்தமிழர்கள் குறித்து அக்கறைகொள்ளும் போதெல்லாம், சிங்கள அரசு, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கு நேரெதிர் போக்குடையவர்களுடன் கைகுலுக்கிக்கொள்வதன் மூலம் இது நிரூபனமாகிறது. காலத்திற்குக்காலம் மாறிவரும் இந்த அரசியல் நகர்வுகளில், அண்மைய அசைவு, பாகிஸ்தானுடனான இலங்கை அரசின் நெருக்கம். இலங்கைமீதான இந்தியாவின் இத்தகைய ஆர்வத்தினை வைத்துக் கொண்டே சிங்கள அரசு ஆடுபுலியாட்டம் ஆடிக்கொண்டே இருக்கிறது. இத்தகைய சூழலில், திருகோணமலையில் தமிழர்கள் வலுப்பெறுவது, இந்தியாவின் பிராந்திய நலன்களுக்கும் சாதகமானதே.
No comments:
Post a Comment