Wednesday, December 25, 2013

வரமெனக்கு வாய்த்திட வேண்டும் !



கால நகர்வின் வேகத்தில் மறைந்து வரும் பழக்கங்களும் அதிகரிக்க, வாழ்வியலின் வழக்கங்கள் அருகி, இயல்பு வேகமாக மாறிவருகிறது.
 ஒரு காலத்தில் அவசியமாகக் கருதப்பட்ட விடயங்கள், அல்லது விருப்பத்திற்குரிய விடயங்கள் இப்போ வேண்டத்தகாதன ஆகிவிட்டன. அடுத்த தலைமுறை அநேக விடயங்களைக் குறிப்புக்களின் பதிவுகளிலேயே வாசித்தறிய வேண்டியிருக்கும். இது இயல்புதானென ஏற்றுக் கொண்டாலும், இம் மாற்றத்தில் சில வாழ்வாதாரத் தொழில் முனைவுகள் முடங்கிப் போவதும், அதனை நம்பி இருக்கும் மக்களின் வாழ்நிலை கேள்விக்குறியாகிப் போவதும் வருத்ததிற்குரியது.
 "ஆனந்தி" சஞ்சிகையை ஐரோப்பிய அச்சுத்தரத்தில் வெளியிடத் தொழில் சார் முறையில் உதவிய அச்சக நண்பர்களை, கிறிஸ்மஸ் தினத்துக்கு முன்னதாகச் சந்தித்து வாழ்த்துச் சொல்லிவரச் சென்றிருந்தேன். வருட இறுதியில் பரபரப்பாக இருக்கும் அந்தப் பாரிய அச்சகம், ஆளரவமற்றுக் கிடந்தது. அங்குமிங்கம் வேகமாகச் சுழன்று திரியும், தொழிலாளர்கள் தொகை சரிபாதிக்கும் மேலாகக் குறைந்திருந்தது.
புதிய வடிவங்களிலும், வண்ணங்களிலும், நாட்குறிப்புக்களும், நாட்காட்டிகளுமாக நிறைந்திருக்கும் அந்தக் கூடம் வெறிச்சோடிப்போயிருந்தது. முதலாளியாகவும், தொழிலாளியாகவும், குடும்ப உறுப்பினர்களுடன் அந்தப் பதிப்பகத்தை நடத்திவரும் நண்பன், வேதனையின் ரேகைகளை அகத்தினுள் மறைத்து, முகம் சிரித்து வரவேற்றான்.
 கைகுலுக்கிக் கட்டியணைத்தவனிடம் "என்னாச்சு...?" என்றேன்.
 "காலம் மாறிப் போச்சு... " என்றான்.
ஐரோப்பியப் பொருளாதார மந்த நிலைத் தொழில் முடக்கமாக இருக்குமெனும் என் எண்ணத்தினை மாற்றி, யோசிக்க வைத்தது அவன் பதில். யோசித்துப் பார்க்கின்றேன்.. தொடர்ந்து வாசிக்க..இங்கு அழுத்துங்கள்

Thursday, March 08, 2012

விட்டுவிடுங்கள்..!



இன்னும் எத்தனை முறை
வன் புணர்வீர்கள்
அவள் உடல் மீது...?

Sunday, November 29, 2009

அம்மா - ஒரு கவிதா அனுபவம்



நமது பிள்ளைகளின் மகிழத் தக்க செயல், மனதுக்குள் திரும்பத் திரும்ப மலர்ந்து மகிழ்ச்சி தரும். அது போலவே எமக்குப் பிடித்தமான படைப்பாக்கமும். அன்மையில் அப்படி ஒரு நிறைவைத் தந்தது இந்த ஒலிப்பதிவு.

அம்மாவைப் பற்றி ஒரு பத்து வயதுச் சிறுமியின் இயல்பான கவிதை. கிராமிய வார்த்தைகளில் தாய் குறித்த ஒரு பாடல். அன்னையின் புகழ் பாடும் ஒரு நவீன இசைப் பாடல். இவை ஒவ்வொன்றும் ஒவ்வாரு சந்தர்ப்பங்களில் கேட்டவை. இந்த ஒலிப் பத்தியை உருவாக்க யோசித்த போது ஒன்றோடொன்று இசைந்து வந்தது.

கவிதை ஒரு ஈழத்துச் சிறுமி, கிராமியப்பாடல் தமிழகத்துப் பாடகன், நவீன இசைப்பாடல் மலேசியக் கலைஞன். இந்த மூன்று தமிழையும், இசையோடு கோர்வையாக்கிய போது, இந்த ஒலிப்பத்தி ஒரு முப்பரிமானத் தோற்றத்தில் ஒலித்தது. கேட்பதற்கு மனதுக்கு இதமாகவும், திருப்தியாகவும் இருந்தது.

ஒரு தடவை நீங்களும் கேட்டுப் பாருங்களேன். உங்களுக்கும் பிடிக்கும் என்றே நினைக்கின்றேன்.

Wednesday, October 14, 2009

நல் உருவாக்கம்

2009ம் ஆண்டுக்கான உலகச் சைக்கிள் ஓட்டப் பந்தயப் போட்டிகள் கடந்த மாதம் 23, 24, 26, 27ந் திகதிகளில் சுவிற்சர்லாந்தின் மென்திரிசியோ எனும் இடத்தில் நடைபெற்றது. இதனைத் தொலைக்காட்சி நேரடி ஒலிபரப்பில் பார்த்துக் கொண்டிருந்த போது ஒரு விடயத்தைக் கவனிக்க முடிந்தது. ஐந்து பள்ளிச் சிறுவர்களை , இளம் பத்திரிகையாளர்களாக அந்தப் போட்டிகளை நேரில் பார்த்துச் செய்தித் தொகுப்பாகக்க அழைத்து வந்திருந்தார்கள். 10 தொடக்கம் 12 வயது வரையிலான அவர்கள், உலக சாம்பியன்களைச் சந்தித்து செவ்வி காண்பதும், நிழற்படமெடுப்பதுமாக பரபரப்பாகச் செயற்பட்டுக்கொண்டிருந்தார்கள்.

அவர்களைத் தொலைக்காடசி செய்தியாளர் ஒருவர் மடக்கிப் பேட்டி கண்டார். இங்கு நீங்கள் என்ன செய்கின்றீர்கள் என்றபோது, தாங்கள் இரு மாதகாலமாக அந்த உலகப்போட்டிகள் தொடர்பான செய்தி இதழ் தயாரிப்பில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிவித்தார்கள். இதற்காக சைக்கிள் ஓட்ட வீரர்களைச் செவ்வி கண்டும் நிழற்படங்கள் எடுத்து வருவதாகவும் சொன்னார்கள். இதுவரையில் எத்தனை படங்கள் எடுத்திருப்பீர்கள் எனச் செய்தியாளர் கேட்க , அந்த இளம் பத்திரிகையாளர் இதுவரையில் 5000 படங்கள் எடுத்திருப்போம் என்கிறார்

தொலைக்காட்சிச் செய்தியாளர் ஆச்சரியத்தில் 5000 படங்களா? என வியக்கின்றார். தொலைக்காட்சியைப் பாரத்துக் கொண்டிருக்கும் நாமும் தான் வியக்கின்றோம். அடுத்த கணம், அந்த ஐவரில் மற்றொருவர், அந்த 5000ம் படங்களில் பத்துப் படம்தான் நல்லா வந்திருக்கு என்று சொல்லிச்சிரிக்கின்றார். நாமும் சிரித்து விடுகின்றோம் அந்தச் சிறு பிள்ளையின் மழலையில். ஆனால் அதற்குப் பின்னால் மற்றுமொரு உண்மையும், தொழில் அக்கறையும் கூட ஒளிந்திருப்பது உண்மை. சுவிற்சர்லாந்தில் தரம் காணல் என்பதில் அத்துனை அக்கறை கொள்வார்கள் என்பது நிச்சயமான உண்ம.
நாட்டிற்கான நாளைய தலைமுறை உருவாக்கம் என்பதில் அவர்கள் காண்பிக்கும் அக்கறையும், ஆர்வமும், இளைய தலைமுறை குறித்த உயர்வான சிந்தனையும் அதற்குள் அடங்கியிருந்தன.