Monday, May 07, 2007

அல்ப்ஸ் மலையின் சாரல்களில் - 1

வரவேற்பு

"அல்ப்ஸ் மலையின் சிகரத்திலே.." என்று பாடலைப் பாடிக்கொண்டு, ஈழத்தின் தெருக்களில் திரிந்த போது, சிறிதும் எண்ணிப்பார்த்திராத இந்த மண்ணில், சில வருடங்களின் முன் ஓரு மே மாதத்தின் முதல் வாரத்தில்தான் கால் பதிந்திருந்தேன். எத்தனையோ தடவை எழுத வேண்டுமென்று எண்ணிய போதும், ரவிசங்கர் ' நாடு நல்ல நாடு' தொடர்வினைக்கு அழைத்த போதும், எழுதும் சோம்பலில் விடுபட்டுப் போயிருந்த எண்ணம், கால்பதித்த நாட்களின் ஞாபகங்கள், மீள்நினைவாய் வந்து விழும் இன்றைய பொழுதுகளில் எழுந்திட எழுதுகின்றேன். வாருங்கள் இந்தத் தொடர்வழி, அல்ப்ஸ் மலைகளின் சாரல்களில் அலைந்து வருவோம். நான் கண்ட, கேட்ட கதைகளினூடு, ஐரோப்பிய சொர்க்கம், உலகின் பூந்தோட்டம், என்றெல்லாம் நீங்கள் கேள்விப்பட்ட சுவிற்சர்லாந்தில் நடைபயில்வோம்.








Willkommen auf Schweizer சுவிஸ் டொச்.

Bienvenue dans le Suisse சுவிஸ் பிரெஞ்.

Benvenuto in Svizzera சுவிஸ் இத்தாலி.

Allegra de Svizra சுவிஸ் ரொமான்ஸ்


சுவிற்சர்லாந்தின் தேசிய மொழிகள் நான்கிலும் வரவேற்புக் கூறினால் மட்டும் போதுமா? சிறப்பு விருந்தினர்களாக வந்திருக்கும் உங்களுக்குத் தேசிய வாத்திய இசை மூலம் வரவேற்றால்தானே மரியாதையாக இருக்கும்.

தேசிய வாத்தியமான அல்ப்ஹோர்னைப் பற்றி, " சுவிசின் பாரம்பரிய இசைக்கருவிகளில் ஒன்று அல்ப்ஹோர்ன் ( Alphorn) . அன்னளவாக எமது நாதஸ்வரத்தை ஒத்திருக்கும். குழல் வடிவான இக்கருவி வாய்பகுதியிலிருந்து சிறிது சிறிதாக அகன்று சென்று, மேல் நோக்கி வளைந்து , பலத்த சத்தத்தை ஒலிக்கும் வகையில் பருத்து விரியும். நிலத்தில் நின்றவண்ணம் ஊதி இசைக்கும் இக்கருவியின் நீளம் கிட்டத்தட்ட இரண்டு மீற்றரைத் தாண்டும். கோடைகால வருகையுடன், மேச்சலுக்காக கால்நடைகளை அல்ப்ஸ் மலைச்சாரல்களை நோக்கி நகர்த்துகின்ற விவசாயிகள், கூடிக்குதுகலித்து குரலெழுப்பும் விவசாயிகளின் செய்தி கூறுமிசையாகவும் இதைப்பார்க்க முடிகிறது. இயற்கை வனப்புக்களோடு முட்டி மோதி வருகின்ற சுவிசின் சுவாசக்காற்றை, சுருதி பேதமின்றி ஒலிக்கும் அல்ப்ஹோர்ன் " முன்னரே எழுதியுள்ளேன்.
வரவேற்ற உங்களுக்கு வகையாய் சுவையாய் சொக்லேட் தரவிடின், பிறகென்ன சுவிஸ் வரவேற்பு. ஆகவே வந்த உங்களுக்கு வாய்க்கு ருசியாக, சுவிஸ் ப்ரீமியம் சொக்லேட்.



Photo Sharing and Video Hosting at Photobucket
சொக்லேட் சாப்பிட்டாயிற்றா? இந்த இடுகையை இன்றைக்கு வாசியுங்கள். சுவிற்சர்லாந்து பற்றிய ஒரு அறிமுகம் கிடைக்கும். அடுத்த பகுதியில் அல்ப்ஸின் சாரல்களில் நடக்கத் தொடங்குவோம்....

6 comments:

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

நீங்களும் கலையும் ஒரு தொடராகவே தத்தம் நாடுகள் குறித்து எழுத முன்வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

--

இவ்வளவு பெரிய குழாயா :)

மலைநாடான் said...

ரவிசங்கர்!
பகிர்வுக்கு நன்றி.

ஒருநாட்டினை, அதன்புள்ளி விபரங்களினடிப்படையில் பார்ப்பதை விடவும், மக்களின் வாழ்வியல் கூறுகளோடு பார்ப்பது எனக்குப் பிடிக்கும். நீங்கள் கேட்க முன்னமே இப்படியொரு தொடர் எழுத வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனாலும் வழமையான எழுத்துச் சோம்பல் காரணமாய் தொடங்கவில்லை. இப்போ தொடங்கியாயிற்று:). சுவிஸ் பற்றி வெளிப்படைத் தோற்றப்பாட்டைத் தவிர்த்து, எனது பார்வையில் இந்நாட்டு மக்களின் வாழ்வியலை பல்வேறு தளங்களிலும் பார்க்கலாமென்றிருக்கின்றேன். அதனால் இது அல்ப்ஹோர்ண் மாதிரி பெரிய்யயயய தொடராகவும் அமையலாம், பார்ப்போம்.

எப்படியாயினும் இந்தத் தொடக்கத்திற்கு நீங்களும் ஒரு காரணம்தான் :)))

கலை said...

மிக அருமையாக தொடரினை ஆரம்பித்துள்ளீர்கள். தொடருங்கள்.

பாரதி தம்பி said...

நாங்களெல்லாம் ஒளிப்படக் காட்சிகளில் அவ்வப்போது பார்க்கும் பிரதேசத்தில் வாழ்பவர் நீங்கள். அந்த மண்ணைப்பற்றியும், அதன் கலாச்சாரம் பண்பாடு பற்றியும், தாங்கள் சிறப்பான தகவல்களை கொணர்வீர்கள் என நம்புகிறேன்.

குறிப்பாக அமெரிக்கா என்றாலே அங்கிருக்கும் அனைவரும் பணக்காரர்கள் என்ற ஒரு மாயை பொதுவில் உள்ளதுபோல சுவிஸ் என்றாலே அது ஒரு செல்வந்தர்களின் தேசம் என்ற எண்ணம் எனக்கும் கூட இருந்தது..இருக்கிறது என்றும் சொல்லலாம். அதுபற்றியும் எழுதினால் மகிழ்வேன்.

மலைநாடான் said...

//சுவிஸ் என்றாலே அது ஒரு செல்வந்தர்களின் தேசம் என்ற எண்ணம் எனக்கும் கூட இருந்தது..இருக்கிறது.அந்த மண்ணைப்பற்றியும், அதன் கலாச்சாரம் பண்பாடு பற்றியும், தாங்கள் சிறப்பான தகவல்களை கொணர்வீர்கள் என நம்புகிறேன்.
//
ஆழியூரான்!

முடிந்தவரையில் சுவிஸின் பல பக்கங்களையும், பாகங்களையும் காட்ட முயற்சிக்கின்றேன். இந்தவூரு மாட்டுக்கார வேலர்களிடமும் அழைத்துச் செல்வதாக உத்தேசம். தொடர்ந்து வாருங்கள்.

நன்றி

மலைநாடான் said...

கலை!
உங்கள் எண்ணப் பகிர்வுக்கு நன்றி.