Thursday, April 26, 2007

மொழி

சென்றவாரத்தில் இளைய மகளின் பாடசாலையில் பெற்றோர்களுடனான கலந்துரையாடலுக்கு அழைத்திருந்தார்கள். சற்று அலுத்துக் கொண்டேதான் போனேன். காரணம் சில சின்ன பிரச்சனைகளையும், தீவிரமாகக் கதைத்துக்கொள்வார்கள். ஐரோப்பியர்கள், வெள்ளையர்கள், எல்லா விவரமும் புரிந்தவர்கள் எனும் எண்ணம், இப்படியான சந்திப்புக்கள் சிலவற்றிலேயே என்னிடமிருந்து அற்றுப்போனது. ஆனால் ஒன்று பிடித்திருந்தது. புரியவில்லை, தெரியவில்லை என்பதை, எப்போதும் மறைத்துக் கொள்வதில்லை. இம்முறை சந்திப்புச் சற்றுச் சுவாரசியமாகவிருந்தது. காரணம் நாங்களும் அடிக்கடி பேசிக் கொள்ளும் ஒருவிடயம், அங்கும் அன்று விவாதத்திற்கு வந்திருந்தது.

சுவிற்சர்லாந்தில் மாநில அரசுகளுக்கான அதிகாரப்பரவலாக்கம் பலவிடங்களிலும், பல துறைகளிலும், அந்தந்த மாநிலங்களின் தனித்துவத்தை அதிகமாகப் பேணும். மொழிசார்ந்த விடயங்களில் இந்தத் தனித்துவத்தை எங்கள் மாநிலம் சற்று இறுக்கமாகவே கடைப்பிடிக்கும். அரச அலுவல்கள் தொடர்பான விடயங்களில் கண்டிப்பாக மாநில மொழியிலேயே எல்லாம் நடைபெறவேண்டுமென இறுக்கமாக இருப்பார்கள். அன்றைய கலந்துரையாடலிலும் இந்த மொழிசார்ந்த விடயமே பிரதானமாகப் பேசப்பட்டது.

அடுத்த ஆண்டுக்கான கல்வித்துறை மாற்றத்தில், ஒன்பதாம் ஆண்டு கல்வியை நிறைவு செய்து, மேற்படிப்புக்குச் செல்லும் மாணவர், கட்டாயம் மாநில மொழியில் கண்டிப்பாகத் திறமைச்சித்தி பெற்றிருக்க வேண்டும் எனத் திருத்தம் கொண்டுவரப்படவுள்ளது. இதுவே அன்றைய கலந்துரையாடலில் விவாதிக்கப்பட்ட விடயம். உயர்கல்வி கற்க விரும்பும் மாணவனுக்கு துறைசார் பாடங்களில் திறமைச்சித்தியிருந்தால் போதும்தானே? மொழியில் திறமைச்சித்தி ஏன் ? நிகழ்கால உலகில் ஆங்கிலம்தான் உலகத் தொடர்புக்கு உகந்தது, என்ற வகையில் விவாதங்கள் நடைபெற்றது. ஆனால் இறுதியில் தாய் மொழி என்ற வகையில் மாநிலமொழி திறமை பெற்றிருப்பது, உயர்கல்விகற்கும் எவருக்கும் கண்டிப்பாக இருக்க வேண்டியதகமை. இல்லையெனில் தாய்மொழிக்கான அவமானம் அது, என்ற வகையிலும் கருத்துக்கள் வந்தன. இம்மாற்றம், வெளிநாட்டவர்களின் பிள்ளைகளுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தலாம் என்ற எண்ணமும் எடுத்தாளப்பட்டது. உயர்கல்விக்குத் தெரிவாகும் மாணவன், தன் துறைசார் பாடங்களிலும், தாய்மொழியிலும்(மாநிலமொழி) கண்டிப்பாக திறமைச்சித்தி பெற்றிருக்க வேண்டும் என்பது, அநேகமாக அடுத்த வருடத்தில் நடைமுறைக்கு வரலாம். சந்திப்பு முடிந்து வரும் போது என் மனதில் மொழிகுறித்த இந்த அக்கறை நம்மிடம் அவ்வளவாக இல்லையோ?... என எண்ணத் தோன்றியது.


சென்றவாரத்தில் ஒரு நண்பரின் குழந்தை, அழகாகத் தமிழில் நன்றி என்று சொல்லியபோது, மனங்குதுகலித்தது. சுஜெய் எனும் பெயர்கொண்ட அக் குழந்தையின் வயது பதின்னான்கு மாதங்கள். குழந்தையின் தாய் சுவிஸ் ஜேர்மன் மொழியிலேயே தன் முழுக்கல்வி நிலையையும் கற்றுத் தேறியவர்.

10 comments:

பாரதி தம்பி said...

'தமிழா...நீ பேசுவது தமிழா..' என்ற காசி ஆனந்தனின் வரிகளும், திருவடியானின் குரலும்தான் நினைவுக்கு வருகிறது.

அந்த குளிர்தேசத்து மக்களின் மொழி உணர்வு மெச்சத்தகுந்தது.

மலைநாடான் said...

ஆழியூரான்!

மொழி மீதான அவர்களது விருப்பினை, புலம் பெயர்ந்த பின்னால்தான் என்னால் முழுமையாக உணர்ந்துகொள்ள முடிந்தது.

அன்றைய உரையாடலில் கூட, சிலர் உயர்கல்லி கற்கும் மாணவனுக்கு ஏன் தாய்மொழி அவசியம் என்ற கேள்வி வந்தபோது, ஒரு தாய் எழுந்து சொன்னார்கள், அம்மாணவன் உயர்கல்வி முடித்து, பெரும்பதவியில் வரும்போது, தாய்மொழித் தெளிவின்றி இருப்பது அவமானம் என்று.

பகிர்வுக்கு நன்றி

பொன்ஸ்~~Poorna said...

பகிர்வுக்கு நன்றி மலைநாடன், போன வாரத்தில் ஒரு நாள் எனக்கும் என் தந்தைக்கும் இந்த மாநில மொழி, தேசிய மொழி, ஆங்கிலம் குறித்து காரசார விவாதம் ஒன்று நடந்தது. மாநிலங்களுக்குத் தனி மொழி உள்ள வேற்று தேசங்கள் ஏதும் அறியாத காரணத்தால், நானும் ஈழம், மலேசியா என்று இருமொழிக் கொள்கை உள்ள நாடுகளாக உதாரணம் காட்டிப் பேசிக் கொண்டிருந்தேன்.. [அவர் ஒருங்கிணைந்த இந்திய தேசத்தின் மொழி இந்தி மட்டுமே என்னும் கட்சி ;)]

சுவிஸ் குறித்து தெரிந்திருந்தால் இன்னும் நிறைய சண்டை போட்டிருக்கலாம் :)) இன்னும் நிறைய எழுதுங்களேன் சுவிஸ்ஸின் மொழிக் கொள்கை பற்றி..

ஒருவேளை உங்கள் கவனத்திலிருந்து விட்டுப் போயிருந்தால், இந்தத் தொடர்வினை விளையாட்டிலும் உங்கள் பதிவு வரும் தானே?

✪சிந்தாநதி said...

அங்கேயும் வேறுவேறான மாநில மொழிகள் இருக்கிறனவா?

நீங்கள் இருக்கும் மாநிலத்தின் மொழி என்ன?

மலைநாடான் said...

பொன்ஸ்!

என்னைப் பொறுத்த வரையில், மாநிலங்களுக்கான அதிகாரங்களுடன், ஒன்றினைந் தேசம் என்ற கட்டமைப்பிற்கு, சுவிஸ் ஒரளவுக்கேனும் நல்லவொரு உதாரணம் என்றே சொல்லலாம்.

மொழிக்கொள்கை பற்றிச் சுருக்கமாகச் சொல்வதானால், தேசிய மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நான்கு மொழிகளுக்குமெ சமஅதிகாரமிருந்தபோதும், மாநிலங்களைப் பொறுத்தவரை, மாநிலமொழியே அரசகருமமொழி. அதற்கே அதிக அதிகாரம்.

சுவிஸ்பற்றி ஏற்கனவே சில பதிவுகள் எழுதியுள்ளேன். ரவிசங்கரின் தொடர்வினை அழைப்பும் உண்டு. எழுதத்தான் வேண்டும்..:))

வி. ஜெ. சந்திரன் said...

//சுவிஸ் குறித்து தெரிந்திருந்தால் இன்னும் நிறைய சண்டை போட்டிருக்கலாம்//

//அங்கேயும் வேறுவேறான மாநில மொழிகள் இருக்கிறனவா?//

சுவிஸ் மட்டுமில்லை இன்னும் நாடுகள் இருக்கிறன.

பெல்ஜியம்
அங்கு நெதர்லண்ஸ் (டச்சு), பிரெஞ்ச், டொச் (ஜேர்மன்) மூன்று மொழிகழும் உத்தியோக பூர்வ மொழிகள். அந்த அந்த பிரதேசங்களில் அவர்களது தாய் மொழிக்கு தான் முக்கியத்துவம்.

அடுத்து கனடா

Anonymous said...

அண்ணோய்.. அவுஸ்ரேலியா தனது நாட்டில் அவுஸ்ரேலியராக குடியேறுவோருக்கு ஆங்கில அறிவு கண்டிப்பாக இருக்க வேண்டும் எனவும் அது பரீட்சையில் பரீட்சிக்கப் படுமெனவும் சொன்னது சரியோ.. ஏனென்டால் அவுஸ்ரேலியாடை மொழி ஆங்கிலம். அப்ப அவுஸ்ரேலியரா வாற ஒருவருக்கு கட்டாயம் அந்த மொழி தெரிந்திருக்கத் தானே வேணும்.

மலைநாடான் said...

சிந்தாநதி!

ஏற்கனவே சுவிஸ் பற்றிய நான் எழுதிய இப்பதிவு உங்களுக்கு வேண்டிய விளக்கங்களைத் தரும்மென நம்புகின்றேன்.

மலைநாடான் said...

வி.ஜே!

கனடா பற்றி எல்லோரும் அறிந்ததுதானே. ஆனால் பெல்ஜியத்தை மறந்துதான் போனேன். ஞாபகப்படுத்தியமைக்கு நன்றி.

மலைநாடான் said...

அனானி!

அவுஸ்திரேலியா முழுவதும் ஆங்கிலம்தானே. வேறுமொழிகள் இல்லைத்தானே?

ஐரோப்பிய நாடுகளில் பிரஜாவுரிமை கேட்பதெனிலும், அந்நாட்டு மொழியறிவு தேவை என்பது கண்டிப்பார்க்கப்படுகிறது.