Wednesday, May 09, 2007

தமிழ்மணத்தின் தார்மீகம் என்ன?


தமிழ்மணத்தின் தார்மீகம் என்ன? . தமிழ் மணத்திற்கு இது நியாயமா? இதற்குத் தமிழ்மணம் என்ன செய்யப் போகிறது? தமிழ்மணத்திலிருந்து சரியான பதில் கிடைக்குமா? தலைப்பினாலோ அல்லது என்மீதான அன்பினாலோ வந்திருக்கும் உங்களிடமும், தமிழ்மண நிர்வாகத்தினரிடமும், முதலில் இப்படியொரு தலைப்பிட்டமைக்கு, இவ்விடுகையின் தார்மீக காரணத்திற்காக மன்னிக்க வேண்டுகின்றேன்.


அன்மைக்காலங்களில் தமிழ்மணம் என்னும் பெயர் , இடுகைகளில் அல்லது பதிவுகளில், தமிழ்சினிமாக்களில் கூட்டம் சேர்க்க கவர்ச்சி நடிகை என்பதற்கிணையாக, பதிவுகளுக்கு ஆட்களை அழைத்துவரும் உத்தியாக, இடுகைத்தலைப்புக்களில் பாவிக்கப்படுவது போல் ஒரு தோற்றம் தென்பட்டதாலும், தமிழ்மணம் என நான் இவ்விடுகையில் சுட்ட விழைவது, தமிழ்மணத்தின் பதிவர்களையும், வாசகர்களையும் என்பதாலும், இந்த இடுகைக்கு இப்படியொரு தலைப்பு. மற்றும்படி இந்த இடுகைக்கும் தலைப்புக்கு எந்தவொரு தொடர்புமில்லை. ஆனால் இடுகையின் நோக்கம் உன்னதமானது. ஆதலால் தயவு செய்து சற்றுப் பொறுமையுடன் வாசித்துச் செல்லுமாறு பணிவுடன் வேண்டுகின்றேன்.

சென்றவாரத்தில் ஒரு நாள் பதிவர் ஒருவரிடம், இணையவழி பேசிக்கொண்டிருந்தபோது, பலவிடயங்களையும் இணையவழி அறிந்துகொள்கின்றோம். உலகின் எல்லா நன்மை தீமைகளும் தெரிகிறது. ஆனாலும் வாசித்து விட்டு அப்படியே அயர்ந்துவிடுகின்றோம், வேறில்லை எனக் கவலைப்பட்டார். இதே கவலையை பல பதிவுகளிலும், இடுகைகளிலும் கூட அவ்வப்போது கண்டிருக்கின்றேன். ஆனால் என்ன? பின்னூட்ட ஒப்பாரியோடு, அவை முடிந்துவிடும். பின் பிறிதொரு நாளில் ஆரம்பிக்கும்.


சென்ற சில மாங்களுக்கு முன் ரவிசங்கர் இட்ட இப்பதிவினை இரு தினங்களின் முன் பார்க்கக் கிடைத்தது. அதிலும் ஆதங்கங்கள் பல எழுந்திருந்தன. இப்பதிவில் சொல்லப்பட்ட விடயத்துக்கு முழுமையான தீர்வென்பது, அரசுகளால் அன்றி, சாதரண மக்களால் ஏதும் ஆவதிற்கில்லை என்றபோதும், எங்களால் முடிந்தவரையில் முயற்சிக்கலாம்.


சுவிஸ் ஒரு முதலாளித்துவக் கொள்கைசார் நாடு என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால் இங்கிருந்து கூட இடதுசாரி நண்பர்கள் சிலர் கியூபாவில் உணவும், கல்வியும் பெறச் சிரமப்படும் குழந்தைகளுக்கான உதவிகளைச் செய்துகொண்டிருக்கின்றார்கள். இங்கிருந்து வந்து, இந்தியாவின் பின் தங்கிய கிராமங்களில், தங்கியிருந்து உதவிகள்புரியும் தன்னார்வத் தொண்டர்கள் இருக்கிறார்கள். இவர்கள் சிலருடன் எனக்கு அறிமுகமும் உண்டு. சில பணிகளில் இணைந்த அனுபவமும் உண்டு. நானறிந்தவரையில், அவர்களது அர்ப்பணிப்பு மிக்க அப்பணியின் பின்னால் இருப்பது வரையறையற்ற மனிதநேயமே.


இந்த நேயம், இணையத்தில் எழுதும் எங்களிடமில்லையா? இல்லாமலா மகாலட்சுமிக்கும், கெளசல்யாவுக்கும், வேறுசில உதவிகளுக்கும், எங்கள் கைகள் இணைந்தன. இத்தகைய பணிகளுக்கு முதலில் தேவையானது புரிந்துணர்வுமிக்க ஒரு கூட்டுழைப்பு. அந்தக் கூட்டுழைப்பு எங்களிடம் இருந்துவிட்டால், இத்தகைய செய்திகள் சுட்டும் இழப்புக்களில் ஒரு சிலவற்றையாவது இல்லாது செய்ய முடியும்.


உலகெங்கும் பரந்து வாழும் நண்பர்களே! உன் பின்னால் யார், என் பின்னால் நீ, என்றெல்லாம் எண்ணாது, மனிதநேயம் என்னும் மகத்தான சிந்தனையோடு மட்டும் செயலாற்ற விரும்புபவர்களே! வாருங்கள் ஒன்றாய் கூடி, ஒருமனதாய் திட்டமிட்டு, ஒருசில உயிர்களையாயினும் காத்திடுவோம். இதற்கான எண்ணம் மட்டுமே எம்மிடத்தில் இப்போதுண்டு. இணையும் கரங்களின் பலத்திலும், மனத்திலும், உருவாக வேண்டும் ஒரு பொதுவேலைத்திட்டம். ஆதலால் ஆர்வமுள்ளவர்கள் உங்கள் ஆலோசனைகளை இங்கே தாருங்கள், இணைந்து செயற்பட இங்கு uthavi@gmail.com மடலிடுங்கள். இணையும் பணி எல்லோர்க்குமாயினும், இணைக்கும் தமிழிலேயே முடிந்தவரை உறவாடுவோம், தொடர்பாடுவோம். இணையம் எனும் பெருந்துணையால், இயன்றவரை வழிநடப்போம்.....உங்கள் உறவாடல் கண்டபின் மறுபடியும் இது குறித்து உரையாடுவேன்.


- நட்புடன்

மலைநாடான்.

2 comments:

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

நீங்கள் என்ன தான் விளக்கம் சொன்னாலும் இப்படி எல்லாம் தலைப்பு வைத்து ஏமாற்றுவது தப்பு. உங்களிடம் இருந்து இதை எதிர்ப்பார்க்கவில்லை. பலரின் வலைப்பதிவுப் போக்குகளையும் விமர்சிக்கும் நீங்களே இப்படி செய்யலாமா?

ஓரிவர் ஒன்று கூடி காசு, நேரம் போட்டு ஓரிருவருக்கு உதவுவதைத் தாண்டி சிந்திக்க வேண்டும். ஆனால், உடனடியாக முடிந்தது இது தான் என்பதை ஒப்புக் கொள்கிறேன்.

Anonymous said...

மனிதம் என்றால் என்ன என்று மனிதர்க்கு
உள்ளத்தில் உணரப்பண்ணனும்.
அது சமயத்தினால் தான் முடியும். தர்மம், ஞாயம்
பற்றி மனதில் பதியவைக்க வேண்டும்.
இப்போதான் மனிசரெல்லாம் பகுத்தறிவென்று பீத்திக்கொண்டு
அடுத்தவய தூற்றுவதும் திட்டுவதுமாக
சமயத்துக்கு சமாதி கட்ட வெளிக்கிட்டிருக்கினம்.
பிறகு எப்படி வளரும் மனிதம். பிறகு எப்படி ஊரை உய்விப்பது.
முதலில் ஒவ்வொருவரையும் திரிகரண சுத்தி செய்யச் சொல்லுங்கோ.
பிறகு எல்லாம் தானே நல்லதாகும்.