Friday, August 18, 2006

இரட்டைக்கலாச்சார முரணும், இரக்கமற்ற கொலையும்.

இன்று காலை வேலையிடத்தில், என்னைச் சூழ்ந்துகொண்ட இத்தாலிய நண்பர்கள் சிலர், இந்தச் செய்தியைச் சொன்னார்கள். சென்ற வெள்ளிக்கிழமை இத்தாலியின் ப்றெசியா எனும் இடத்தில் இச்சம்பவம் நடந்திருக்கிறது. நேற்றைய மாலைப்பத்திரிகையில் அச் செய்தி விபரமாக வந்திருக்கிறது.
சலீம் எனும் ஒரு பாகிஸ்தானியத் தந்தை, ஹினா எனும் தனது இருபது வயது மகளைக் கழுத்தை வெட்டிக் கொலை செய்துவிட்டு, பொலிசில் சரணடைந்துள்ளார்.

கொலைக்கான காரணம், கொலை செய்யப்பட்ட மகள் ஹினா, ஒரு இதத்hலிய இளைஞனைக் காதலித்து, அவனுடன் இணைந்து வாழ்ந்ததும், ஐரோப்பிய நாகரீக மங்கையாகத் தன்னை அழகுபடுத்திக் கொண்டதும். ஹினாவின் இச்செய்கையால், தன் குடும்ப கௌரவம், தனது சமூகத்தின் மத்தியில் கேலிக்குரியதாக்கப்பட்டதனால் ஆத்திரமுற்ற தந்தை, வெளியே தங்கியிருந்த மகளைத் தந்திரமாக அழைத்து, தன் மைத்துணர்களுடன் இணைந்து, இதுபற்றிக் கதைத்துக் கொண்டிருக்கும் போது ஆத்திரமுற்று இக் கொலையைச் செய்திருக்கின்றார்.


புலம் பெயர்ந்த வாழ்வில், இரட்டைக்கலாச்சார முரண்பாடு என்பது முன்னெழுந்து நிற்கும் பெரும்பிரச்சனையாகும். இதை எதிர்கொள்ளப் போகும் வழிமுறைகள் பற்றி இன்னமும் சரிவரப் பேசப்படவில்லை அல்லது முற்றாக அறிந்துணரப்படவில்லையென்பதே உண்மையாகும்.
இப்பிரச்சயைபப்பற்றி என்னுடன் கதைத்த இத்தாலிய நண்பர்களில் ஒருவன் “கலாச்சாரத்தைப் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுக்கக் கூடிய வயதில், வகையில் சொல்லிக்கொடுப்பதுதான் பெற்றோர்களின் கடமை. அதைவிட்டு, வயது மேற்பட்ட பிள்ளைகளின் சுயவிருப்பின் மேல், தங்களுடைய கலாச்சாரப்பிடிமானங்களை வன்முறையாகத் திணிப்பது என்ன நியாயம் ? ” எனக் கேட்டான்.


இதை என்னுடன் கதைத்த இத்தாலிய நண்பர்கள், நான் ஒரு ஆசியன் என்பதனாலேயே என்னுடன் இதுபற்றிக் கதைத்தார்கள். இச்சம்பவத்தில் உள்ளடங்கபட்டது பாகிஸ்தானியக்குடும்பம் எனினும், இது பொதுவாக ஆசியர்களுக்கான பிரச்சனையாயினும், குறிப்பாக இலங்கையர், இந்தியர், பாகிஸ்தானியர்கள், எல்லோருக்கும் பொதுவான ஒரு பிரச்சினையே. கலாச்சார வெறியும் கருணையற்ற கொலையும் எனத்தலைப்பிட உத்தேசித்த போதும், அத்தலைப்பின் கடுமைகருதியும், புலச்சூழலின் அவசியம் கருதியுமே இத்தலைப்பு இடப்பட்டுள்ளது.

இந்தப்பொதுத் தன்மையினையும், பிரச்சனையின் தாக்கத்தினையும் புரிந்துகொண்டு ஆக்கபூர்வமான கருத்துக்களைப் பரிமாற விரும்புவர்கள் மட்டும் உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள். அதைத் தவிர்ந்த மனப்போக்கில் எழுதப்படும் எந்தக்கருத்தும் வெளியிடப்படமாட்டாது. தயவு செய்து மன்னித்து விடுங்கள் நண்பர்களே!

8 comments:

மணியன் said...

உழைப்பாளிகளுக்கு விடுதலை கிடைத்தது. பெண்களின் விடுதலைவேட்கை அறியப் பட்டுள்ளது. அடுத்து பெற்றோரிடமிருந்து மக்களின் விடுதலை உணரப் பட வேண்டும். சிறுவயதுமுதல் தங்களின் கலாசார மேன்மையை அவர்கள் மனதில் நிலைநிறுத்த முடியாதவர்கள் இவ்வகை கொலைகளால் எங்ஙனம் கலாசாரத்தைக் காப்பாற்றப் போகிறார்கள் ?

கானா பிரபா said...

போனகிழமை ஒரு ஆங்கிலப்படத்தை தொலைக்காட்சியில் பார்த்தேன். பாகிஸ்தானிய இளைஞனுக்கும் இங்கிலாந்து பெண்ணும் ஏற்படும் காதல் மூலம் இரட்டைக்கலாச்சார இன்னல்களை அது தெளிவாகக்காட்டியது. பெற்றோரும், பிள்ளைகலும் தான் இளமையில் கழித்த வாழ்வோடு ஒப்பிட்டுப் பார்க்கவிரும்புவதுதான் பிரச்சனையின் அடிப்படை

சின்னக்குட்டி said...

கலாச்சாரம் என்றது மாறக்கூடியது. செல்வாக்குட்படுத்தக்கூடியது ஒரு பக்கச்சார்பானது.. நெகிழும் தன்மையானது என்றது தான் என்ரை எண்ணம்... தலைமுறை இடைவெளி ஒரு பக்கத்தில் இருக்க... முதலாளித்துவ சமூகத்தில் பிறந்து வளர்ந்த பிள்ளைகளின் மீது... தான் வளர்ந்த சூழ்நிலையின் பண்புகளை வலிந்து திணிக்க மு னைந்தால். நிச்சயம் தோல்வியே காண்பர்...

மலைநாடான் said...

வணக்கம் மணியன், பிரபா, சின்னக்குட்டி!

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள். இது விடயம் குறித்து நாம் எட்ட வேண்டிய எல்லைக்ள், வெகுதூரத்திலேயே உள்ளன.
எண்ணங்களைத் தொடர்வோம்... எல்லைகளை எட்டுவோம்.

ஈழபாரதி said...

வலுகட்டாயமான திணிப்பு என்பது எப்போதும் தோல்வியையே தந்திருக்கிறது.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

மலை நாடர்!
நீங்கள் குறிப்பிடும் இவ்விடயம்; ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் குறைபாடு போல் சித்தரிக்கப் படுகிறது. இப் பிரச்சனை போல் உள்ளவற்றை இந்த இணையத்திலும் மனந்திறந்து பேச முடியாது. "ஏறச் சொன்னால் எருதுக்குக் கோவம் ;இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோவம்" எனும் நிலை. நான் மிக நம்பிக்கையானவர் மூலம் கேள்விப்பட்ட விடயம் ஈழத்தில் ;தன் ஒரே மகள் ;தாழ்த்தப்பட்ட பையனை விரும்பியதால்; தந்தை நஞ்சைக்(பொலிடோல்) கொடுத்துக் குடிக்கவைத்துக் ;தற்கொலை எனச் சோடித்தது.பொலிஸ் எங்கே?? போனது என நீங்கள் யோசிக்கலாம்.உயர் அதிகாரியான அந்தத் தந்தைக்கு; இந்தத் துப்புக் கெட்ட பொலிஸ் வாலாட்டியது. காரணம் அன்றும் இன்றும் பொலிஸ் யார்??? ;நான் சொல்வதைப் புரிவீர்கள்.ஊரில் பெரும் பகுதி இக்கொலையை எற்றுக் கொண்டது. அத் தந்தையைத் தன்மானம் மிக்கவனாகப் போற்றியது.
அடுத்து இளவரசி டயனாவின் மரணத்தை;பிரித்தானிய அரச வம்சத்தின் திட்டமிட்ட கொலை யென நினைப்பவர்களும்; இருக்கிறார்கள்; காரணம் அவர் விவாகரத்தின் பின் எகிப்தியருடன் ,காதலுற்றது.
சிந்திக்க வேண்டிய சந்தேகம்.
எனவே இவ்விவகாரத்தில் உலகில் எவருமே சளைத்தவர்களில்லை.ஒரு விரலால் அவர்களைச் சுட்டுகிறோம்;நான்கு விரல்கள் ;நம்மையும் நோக்குது.
யோகன் பாரிஸ்

Chandravathanaa said...

மலைநாடான்
இது பற்றிய ஒரு விபரமான பதிவை எனது மனஓசையில் பதிக்க எண்ணினேன். இன்னும் கை கூடவில்லை.

யோகன் குறிப்பிட்டது போன்ற சாதிப் பிரச்சனை சம்பந்தமான ஒரு உண்மை நிகழ்வின் பதிவு இது
அமிழ்ந்த காதல்

இந்தப் பிரச்சனைகளோடு சம்பந்தமான இன்னொரு பதிவு

சில மாதங்களின் முன் இங்கும் ஒரு குழந்தைக்குத் தாயாக இருந்த ஒரு துருக்கியப் பெண் அண்ணன்மாரால் சுட்டுக் கொல்லப் பட்டிருக்கிறாள். கலாச்சாரத்தை அவள் காக்கவில்லை என்பதால்.

இவை பற்றி எனது பதிவில் எழுத முனைகிறேன்.

மலைநாடான் said...

ஈழபாரதி, யோகன், சந்திரவதனா!

முதலில் தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

யோகன்!
உங்கள் கருத்துடன் எனக்கும் உடன்பாடே. ஆனாலும், இப்பதிவு குறித்த ஒரு சமுகத்தை சுட்டி இடப்பவில்லை. இது புலத்தில் ஆசியர்களுக்கு ஒரு பொதுப்பிரச்சனை என்பதாலேயே பதிவிட்டேன்.

சந்திரவதனா!
உங்கள் பதிவுகளை நேரமின்மையால் வாசிக்கவில்லை. வாசித்தபின் கருத்துச் சொல்கின்றேன். அதுபோல் தங்கள் பதிவையும் ஆவலோடு எதிர்பார்த்திருக்கின்றேன்.