ஆகஸ்ட் மாதம் முதலாந்திகதி. நான்கு மொழிகள், நான்கு மதங்கள், தங்கள் தனித்துவம் இழக்காது, ஒற்றையாட்சியில் இணைந்திருக்கும் சுவிஸ் சமஷ்டிக்குடியரசின் தேசியதினம். . ஜேர்மன், ஓஸ்திரியா, பிரான்ஸ், இத்தாலி, ஆகிய பேரரசுகளின் ஆட்சிச் செல்வாக்கு நிறைந்த பல்வேறு குறுநில அரசுகளில், மூன்று குறுநிலஅரசுகளின் இணைவுடனும் பிரகடணத்துடனும் 1291ம் ஆண்டில் தோற்றம் பெற்ற கெல்வெற்சியா கூட்டமைப்பே, இன்று உலகில், ஐரோப்பிய சொர்க்கம்மென்றும், உலகின் பூந்தோட்டமென்றும், போற்றப்படும் சுவிற்சர்லாந்து.
உலகமக்கள் பலராலும் பல்வேறு காரணங்களுக்காகவும் விரும்பப்படுகின்ற சுவிஸின் உருவாக்கத்திற்கு முன்னரும், பின்னரும், அம்மக்கள் அனுபவித்த துன்பங்கள் மிகக்கடுமையானவை. உருவாக்கத்திற்கு முன்னர், ஆட்சியதிகாரம் செய்த அயல்நாடுகள் காட்டிய கடும்போக்காலும், உருவாக்கத்தின் பின், வளம்குறைந்த மலைப்பிரதேச புவியியலமைப்பாலும் பல்வேறு துன்பங்களை அனுபவித்திருக்கின்றனர். எல்லோரும் மெச்சும் எழிலும், வளமும், கொண்ட நாடாக தங்கள் நாட்டினை மாற்றிட பாடுபட்ட அம் மக்களின் அர்ப்பணிப்பு மகத்தானது.
41,293, 2 சதுர கிலோமீற்றர்களைக் கொண்ட இச்சிறிய நாட்டின் மக்கள் தொகை 7.4 மில்லியன்களாகும்.ஜேர்மன், பிரெஞ், இத்தாலி, றோமன், ஆகிய நான்கு மொழிகளும், புரட்டஸ்தாந்து, றோமன்கத்தோலிக்கர், கத்தோலிக்கர், யூதர், நான்கு மதங்களும், உள்ள இந்நாட்டில், அனைத்து மொழிகளும், அனைத்து மதங்களும், தங்களின் இறைமையைப் பூரணமாக அனுபவிக்கும் வண்ணம் இந்நாட்டின் சமஷ்டி அரசியலமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.
26 மாநிலங்களும், அவற்றுக்கான சுயாட்சித்தன்மையும், இவையணைத்தையும் ஒன்றிணைக்கும் கூட்டரசும், சுவிஸ் நாட்டின் சிறப்பான அரசியலமைப்பாகும். நாட்டின் மொத்த சேவைகளை உள்ளடக்கிய ஏழுபிரிவுகளும், அதற்கான அமைச்சுக்களும், அந்த அமைச்சுப்பிரதிநிதிகளிலிருந்து, வருடமொருமுறை சுழற்சிமுறையில் தெரிவாகும் அரசுத்தலைவரும், சிறப்பின் உச்சமெனக் கொள்ளலாம். இதைவிடவும்; இங்குள்ள மற்றுமொரு சிறப்பம்சம், எந்தவொரு புதிய சட்டவாக்கத்திற்கும் சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் தீர்வு காண்பதாகும்.
சுவிஸ்நாடு தனக்கென பாதுகாப்பு இராணுவசேவையையும் வைத்துள்ளது. இந்நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அணைவருக்கும் கட்டாய இராணுவப்பயிற்சியும், சேவையும், உண்டு. ஆக்கிரமிப்புத் தன்மையற்ற, சுயபாதுகாப்புக்கான இராணுவத்திற்கு சுவிஸ் இராணுவத்தைச் சிறப்பான உதாரணமாகச் சுட்டலாம். இந்நாட்டின் தனிமனிதசுதந்திரமும், பத்திரிகைச்சுதந்திரமும், மதசுதந்திரமும், இவற்றைப் பேணுவதற்கான இறுக்கமான காவற்துறைக்கட்டமைப்பும், கூடச்சிறப்புடையதே.
பிரதான தொழிற்துறையாக கடிகாரத்தொழில், சொக்கலேட், பாற்பொருட்கள், என்பன இருக்கின்றன. கடந்த ஐம்பது ஆண்டுகளாக தொழிற்துறையில் கடுமையான போராட்டங்களினூடாக முன்னேறியுள்ள சுவிஸ், தற்போது நவீன தொழில்நுட்பத்திலும், தகவல் தொழில்நுடபத்திலும், சுற்றுலாப்பயணத்துறையிலும், மிகுந்த ஈடுபாடுகொண்டுள்ளது. தகவல்தொழில்துறையிலும், கணனித்துறையிலும், இந்தியர்களும் தொழில்புரிகிறார்கள்.
1983ம் ஆண்டின்பின், இனக்கலவரங்கள் காரணமாக, சுவிற்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் பெற்ற இலங்கைத்தமிழர்கள் பலர், தற்போது சுவிஸ் பிரஜா உரிமை பெற்றவர்களாகவும், பல்வேறு தொழிற்துறைப் பணியாளர்களாகவும், முதலீட்டாளார்களாகவும் திகழ்கின்றார்கள். ஈழத்தமிழர்களின் இளைய தலைமுறையினர் பலர் தற்போது, சுவிஸின் அரசபணித்துறைகளுக்குள்ளும், வங்கித்தொழிற்துறைகளுக்கும் பணியாற்றத் தொடங்கியுள்ளார்கள்.
இனம், மொழி, மதம், என்பவற்றின் அடிப்படையில் சிதறிப்போகும் நாடுகள் பலவற்றைக்காணும், இன்றைய நிலையில் சிறுபாண்மையினங்களின் இறையாண்மையைப் பேணியவண்ணம் சமஷ்டி அரசாக விளங்கும் சுவிற்சர்லாந்து அரசுக்கும், அதன் மக்களுக்கும், தேசியதினவாழ்த்துக்கள் கூறுவோம் வாருங்கள்!
8 comments:
//ஜேர்மன், பிரெஞ், இத்தாலி, றோமன், ஆகிய நான்கு மொழிகளும்//
றோமன் என்ற மொழியா... இருக்கிறதா...றோமன் எழுத்து கேள்விபட்டுருக்கிறன்..... இத்தாலி மொழியிலுள்ள உப பிரிவு மொழியா...நன்றிகள் மலை நாடன்
வணக்கம் மலைநாடான்
தகவல்களுக்கு என் நன்றிகள், சுவிற்சர்லாந்து நாடு பற்றி மேலதிக விபரங்களையும், புகைப்படங்களையும் எதிர்பார்க்கின்றேன்.
//றோமன் என்ற மொழியா... இருக்கிறதா...றோமன் எழுத்து கேள்விபட்டுருக்கிறன்..... இத்தாலி மொழியிலுள்ள உப பிரிவு மொழியா.//
சின்னக்குட்டி!
ரோமானிஸ் என்றுதான் அந்த மொழியை இங்கே குறிப்பிடுகின்றார்கள். அதைத் தமிழில் சிலர் ரூமேனிய மொழி எனக்குறிப்பிடுகின்றார்கள். எனக்கு அது சரியாகப்படவில்லை.
ஜேர்மன், டச்சு மொழிகளின் கலப்பாக இருக்கலாம். இங்கே ஒருபிரதேசத்தில் மலைவாழ் மக்கள் மட்டுமே அம்மொழியைப் பேசுகின்றார்கள். அவர்கள் 1 வீதமானவர்களே. இருந்தபோதும் பூர்விக குடிகள் என்பதனால் அவர்கள் மொழி இறையாண்மை பாதுகாக்கப்படுகிறது.
நன்றி
வணக்கம் பிரபா!
நல்ல படங்கள் சில எடுத்து வைத்துள்ளேன். ஆனால் புளோக்கர் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.மீண்டும் முயற்சிக்கின்றேன். முக்கிய தகவல்களைச் சுருக்கித் தந்துள்ளேன். மேலதிக தகல்கள் என எதை எதிர்பார்க்கின்றீர்கள் என்பதை குறிப்பிட்டால் தரமுடியும்.
தகவல்களுக்கு நன்றி
எனது அப்பா கூட சுவிட்சாலாந்தில் அகதியாக சுமார் 5 வருங்கள் இருந்தார். பின்னர் அங்கத்தேய குளிர் மற்றும் உணவுவகை ஒத்துக்கொள்ளாமல் அங்கிருந்து வந்து விட்டார். அவர் தற்போது அங்கத்தேய மக்களின் மனிதநேயத்தன்மை பற்றி அடிக்கடி கூறுவார்.....
சந்திரவதனா!
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.
மயூரேசன்!
அப்படியா? அப்பா எங்கே இருந்தார் என்று தெரியுமா?.
வருகைக்கு நன்றி!
பேர்ண் எனும் இடத்தில் இருந்தாராம்....
Post a Comment