Sunday, April 27, 2008
சிறைக்குள்ளிருந்து...நெருப்புப் பூக்கள்.
சின்ன வயதில், தென்னம் பொந்திலிருக்கும் பச்சைக்கிளியை கூட்டிலடைத்து வளர்க்கும்போது அப்பா ஏசுவார். கூட்டிலடைத்து வதைக்கவில்லை வளர்க்கின்றேன் எனச் சொல்வேன். பின் அடைபட்ட பொழுதுதொன்றில், அப்பாவின் ஏச்சும், அடைபட்டகிளியின் சோகமும், சுதந்திரமும் புரிந்தது. ஏக்கமும், வலியும், மிக்கதான சிறைவாழ்வு, சிறிலங்கா போன்ற அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்படும் நாடுகளில் மேலும் துயர் தருவதாகும். ஏனெனில் அவை வெறுமனே சிறைச்சாலைகளாக மட்டும் அமைந்து விடுவதில்லை.
சிறைக்கைதிகளின் பகுப்பில் கிடைக்கக் கூடிய உரிமைகளெதுவும், தடுப்புக்காவல் சிறைக்கைதிகளுக்குக் கிடைப்பதில்லை. அப்படியான அவலம் நிறைந்த ஒரு தடுப்புக்காவல் சிறைச்சாலைதான் சிறிலங்காவின் "பூசா" சிறை.
இதன் இறுகிய இரும்புக்கம்பிகளின் பின்னால் இருந்து, தேச உணர்வில் எழுந்த ஒரு கவிக்குரலை, அழகாக அச்சிலேற்றித் தந்திருக்கிறது சுவிஸ் "நிலவரம்" பத்திரிகைக் குழுமம்.
"நான் ஒரு இளையவன். வாழ்பனுபவமற்றவன். கவிதைபற்றிய ஆழ்ந்தறிவு அற்றவன். விடுதலைக்கு ஏகி நிற்கின்ற தேசத்தை உணர்வுகளினால் நேசிக்கின்ற உறவுகளுடன் வாழ்ந்து வருகின்ற நான், அந்த உணர்வுகளின் ஓசைகளையே கவி வரியென்ற நினைவுடன் கோர்த்துள்ளேன். உணர்வுகளின் துடிப்புக்களுக்கு வரிவடிவம் கொடுத்த நான் நிறையத் தவறுகள் விட்டிருப்பேன்..."
இப்படிச் சொல்வது, 2000 மாவது ஆண்டின் தொடக்கத்தில் கைது செய்யப்பட்டு, வழக்கு விசாரணகளின்றி தொடர்ந்தும் தடுப்புக்காவல் கைதியாகப் பூசா சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர் கல்லடி றொபேட். 2005 ல் 'சிறையில் பூத்த உணர்வின் ஒளி' எனும், கவிதைத் தொகுதியைத் தொடர்ந்து, இப்போது வெளிவந்திருப்பது, அவரது இரண்டாவது தொகுதி "நெருப்புப் பூக்கள்".
நீண்டகாலமாகச் சிறைப்பட்டிருப்பினும், சிறைவாழ்வின் துயர்பேசிக் கழிவிரக்கம் வேண்டாது, மண்மீதான காதல், விடுதலைமீதான ஏக்கம், இழந்துபோன வாழ்வின் சோகம், போராட்டத்தின் மீதான தீரம், என்னும் உணர்வுகளே றொபேட்டின் குரலாக சிறைக்குள்ளிருந்தம் வெளிப்படுகிறது.
என் பாட்டனின்
படம்
என்வீட்டு
சாமியறைக்குள்
சிலந்திவலை
பின்னப்பட்ட
நிலையில்
பத்திரமாய்
தொங்குகிறதாம்!.... எனத்தொடங்கி
என் வளவினுள்
இப்போதுதானாம்
ஒரு சிறியதூரம்
மிதிவெடிகள்
அகற்றியுள்ளார்கள்
மிகுதியும்
அகற்றி முடியும்போது...
என் பிள்ளைகள்
என் படத்தை
புலும்பெயர்நாடுகளிலுள்ள
தங்கள் வீட்டு
சாமியறைக்குள் மாட்டி
தங்கள்
குழந்தைகளுக்கு
காண்பிப்பார்கள்
இவர்தான்
உங்கள் பாட்டனென... எனும் கவிதைக்குள் வரும்,
தமிழீழத்தின் சோகக் கதைகள் ஏராளம்.
ஈழத்தின் சோகம் மட்டுமில்லாது,
மனிதநேயம் பற்றியும் றொபேட்டின் குரல் எழுகிறது.
மனிதம் எனும் கவிதையில் அதைக் காணலாம்.
14.08.2006 சிறிலங்கா விமானப்படையின் விமானத்தாக்குதலில் அவயங்களையிழந்த பிள்ளைகளுக்கு, இத்தொகுதியின் விற்பனையில் கிடைக்கும் பணம் , உதவித்தொகையாக அமைய வேண்டும் எனும் றொபேட்டின் பெரு விருப்போடு, அவரது உணர்வின் வரிகளை, சிறையிருந்து வெளிக்கொணர்ந்து வெளியீடு செய்யும் வரையில், கி.பி அரவிந்தன், பத்மநாபஐயர் உள்ளிட்ட பலரது உழைப்பு உடனிருந்திருக்கிறது. ஒடுக்கப்பட்டு, அடைக்கப்பட்டிருக்கும், ஒரு தடுப்புக்காவல் கைதியின் இத்தகைய செயற்பாடு, அவனுக்கு எத்தகைய பாதமான நிலையைத் தருமென்பதைத் தெரிந்திருந்தும், தன் குரலை உயர்த்தி ஒலித்திருக்கும் றொபேட்டின் 'போய்விடுங்கள்' கவிதைக்குள், அமெரிக்கச் சிப்பாய்களை எதிர்ப் பாடிய பொப்மார்லி யும் ஓரத்தில் ஒளிந்திருப்பதைக் காணமுடிகிறது.
பிரபலங்களின் எழுத்துக்களினால் பணம் பண்ணவும், பணத்தினால் பிரபலம் பண்ணவும் விழையும் சூழலில், சிங்களப்பேரினவாதத்தின் சித்திரைவதைச் சிறையுள்ளிருந்து, ஈழக்குயிலொன்றின் விடுதலைக்குரலை வெளிக்கொணர்ந்த அனைவரையும் பாராட்டலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
அறிமுகத்துக்கு நன்றி.
தகவலுக்கு நன்றி குறிஞ்சி மலர்..
இந்தப் புத்தகத்தை எங்கே பெற்றுக்கொள்ளலாம் நண்பரே ?
நல்லதொரு அறிமுகத்துக்கு நன்றி.
இன்னொரு விசயம்...
உவர் சயந்தன் சிறையிருந்த ஒருவரின் அனுபவங்களைத் தொகுத்து ஏதோ தொடர் எழுதப்போறன் எண்டு துவக்க விழாவெல்லாம் செய்தார்... பிந்திய நிலைவரம் ஏதாவது தெரியுமோ?
இந்த இடுகையிலயே இதைக்கேக்கிறது பொருத்தமெண்டுதான் நினைக்கிறன்.
உவர் சயந்தன் சிறையிருந்த ஒருவரின் அனுபவங்களைத் தொகுத்து ஏதோ தொடர் எழுதப்போறன் எண்டு துவக்க விழாவெல்லாம் செய்தார்... பிந்திய நிலைவரம் ஏதாவது தெரியுமோ?
//
அது புத்தகமாக வரேக்கை பாரும் -
எம்.ரிஷான் ஷெரீப் !
இநதப்புத்தகம், சுவிஸில் அநேக தமிழவிற்பனை நிலையங்களில் பெற்றுக் கொள்ள முடிகிறது. வெளிநாடுகளில் இருப்பவர்கள்,
Media House, Post fach 7413, Laupen strasse 37, 3001 Bern, SWITZERLAND. எனும் முகவரிக்குத் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியுமென நம்புகின்றேன்.
வசந்தன்!
உங்கள் கேள்விக்கு உரியவர் பதில் தந்தாயிற்று. :) ஆனால் எழுத ஆள் ரொம்பப் பயப்பிடிறார் போல. பொறுத்திருந்து பார்ப்போம்.
நன்றி.
அறிமுகத்துக்கு நன்றி மலைநாடான்.
படிக்க ஆவலாயுள்ளது. பெற்றுக்கொள்ள முயற்சிக்கிறேன்.
சயந்தன்!
பகிர்வுக்கு நன்றி.
Post a Comment