Monday, March 03, 2008

இத்தாலிய மொழியில் இந்தியத் தத்துவார்த்தம்.

உங்களை மற்றொருவருடன் ஒப்பீடு செய்வதனால், எழுகின்ற சங்கடங்களில், உங்கள் சுயத்தை இழக்கிறீர்கள். சுயமிழக்காது, நீங்கள் நீங்களாகவே இருக்க முற்படுங்கள்.
- ஜே.கே


இந்த வருட ஆரம்பத்தில் ஒரு நாள் மாலை,

"அப்பா புத்தாண்டுக்கு எனக்குக்கிடைத்த அன்பளிப்புப் பணத்தில், வாசிக்க ஒரு புத்தகம் வேண்டினேன்" என்றாள் என் பெண்.

என்ன புத்தகம்? என்பதற்கு முன்னதாகவே என்ன விலை? என்ற கேள்விதான் என்னிடமிருந்து முந்திக் கொள்கிறது.

"ஐம்பது பிராங்.."

"ஐம்பது பிராங்குக்குப் புத்தகம் வேண்டினாயா..?" மனம் பெருக்கல் வாய்பாடுகளில் கணக்கிடுகிறது.

"ஏன்? நூலகத்தில் எடுத்து வாசிக்க முடியாதா?.." ஆற்றாமையில் கேட்கின்றேன்.

"எடுக்கலாம். ஆனால் இது அப்படியில்லை. இந்தப் புத்தகம் எங்கள் வீட்டில் இருக்க வேண்டும். எல்லோரும் வாசிக்க வேண்டும்."

"அப்படியென்ன அற்புதமான புத்தகம்...?"
"Saggezze"

365 pensieri di maestri dell' india


இந்திய தத்துவார்த்திகளின் 365
"பொன்மொழிகள்" (உயர் சிந்தனைகள்)


எனத் தலைப்பிடப்பட்ட அழகான அட்டையுடன் கூடிய புத்தகத்தைக் கொணர்ந்தாள். இந்தியத் தத்துவார்தங்கள் குறித்து பல்வேறு மொழிபெயர்புக்கள் பல்வேறு மொழிகளிலும் வந்துள்ளன. இதிலென்ன முக்கியத்துவம் என்றெண்ணத் தோன்றும். அப்படி மொழிபெயர்க்கப்பட்ட புத்தகங்களுக்கும் இதற்குமிடையில் மிக முக்கிய வித்தியாசம் உள்ளது என்றே எண்ணத் தோன்றுகிறது.


பொதுவாகவே தத்துவார்த்த மொழிபெயர்ப்புக்களைத் துறைசார் அறிஞர்கள், ஆர்வலர்களே வாசிப்பது அதிகம். ஆனால் இந்தப்புத்தகம் இளையவர்கள் நாள்தோறும் வாசிக்கும் சிறு குறிப்புக்கள் கொண்ட தினக்குறிப்புப் புத்தகமாக இருந்தது. விரித்துப்பார்த்தேன், வியந்துபோனேன்.

ஜே.கிருஷ்ணமூர்த்தி, ரவீந்திரநாத் தாகூர், மகாத்மா காந்தி, கெளதமபுத்தர், விவேகானந்தர், அரவிந்தர், ரமணர், எனப் பல இந்தியதத்துவார்த்திகளின் சிந்தனைகள், சிறுசிறு குறிப்புக்களாக, குறுகத் தறித்த குறள் போன்று, இரண்டு முதல் நான்குவரிகளில் தினத்துக் கொன்றாக் தொகுக்கப்பட்டிருந்தது. அதற்கும் மேலாக இளையவர் முதல் பெரியவர் வரை லயித்தும் போகும் வண்ணம், இந்திய வாழ்க்கைப்பின்னணியிலான அதியற்புதமான புகைப்படங்கள் ஒவ்வொரு பக்கத்திலும். தத்துவார்த்தக்கருத்துக்களை எளிமையாகவும், அழகாகவும், தொகுத்திருந்தார்கள்.
"கண்டிப்பாக இருக்க வேண்டிய புத்தகம் தான்..." என்றேன். பெருமிதமானாள் பெண்.

எங்கே விற்பனையாகின்றது எனத் தெரிந்து கொண்டு, விற்பனை நிலையம் சென்றபோது, ஒருபெண்மணி அதே புத்தகத்தில் அதிக பிரதிகளை வாங்கிக் கொண்டிருந்தாள்.
"ஏன்..இவ்வளவு தொகையாக வாங்குகின்றீர்கள் ?" கேட்டேன்.
"இம் முறை என் பிள்ளைகள், உறவினர், நண்பர்கள், பிள்ளைகளுக்கெல்லாம் இந்தப் புத்தகம்தான் என் புத்தாண்டுப் பரிசு" என்றாள் மகிழ்ச்சி பொங்க.
விற்பனையாளரை விசாரித்த போது வந்த பிரதிகள் யாவும் விற்றுத் தீர்ந்துவிட்டதாகச் சொன்னார்.

புத்தகத்தைப் பார்த்த மாத்திரத்திலே இப்பதிவை எழுத எண்ணியிருந்த போதும், இப்போதுதான் முடிந்தது. ஆனால் இந்த இரு மாதங்களிலும், பெருமளவு நாட்கள், இந்தத் தத்துவார்த்திகள் வாழ்ந்து பயணித்த மண்ணில் பயணிக்க முடிந்தது. பலவற்றை பார்க்க, பழக, படிக்க, முடிந்தது. தொப்புள் கொடியுறவு, எந்தையர் தேசம், என நாங்கள் எவ்வளவுதான் சொந்தம் கொண்டாடினாலும், அரசியல் பேரங்களுக்குள் உறவுநிலையும், உண்மைநிலையும், அடிபட்டுப் போகும் வண்ணமாய் சூழலின் நிலையிருந்த போதும், நட்பு, நேசம், நிறைந்திருக்கும் நண்பர்கள் பலருடனும், பொழுதுகள் பலதைப் பகிர்ந்து கொள்ள முடிந்தது. முடியாமலும் போனது. கழிந்த பொழுதுகளில் கண்டுணர்ந்தவொன்று..

பாண்டிச்சேரி அரவிந்தர் ஆச்சிரமம், திருவண்ணாமலை ரமணர் ஆச்சிரமம், ஆழியார் வோதாத்திரி மகரிசி ஆச்சிரமம், என வெளிநாட்டவர் பலர் நிறைந்திருக்க, ஆன்மீக ஆலயங்கள் பலவும் சந்தைகளாக மாறியிருக்க, சந்தைகள் பலவும் வளர்ந்து கொண்டிருக்க, அதன் அடிகளில் அணியணியாக இளையவர் பெரியவர் எனப்பலர்.

'தளபதி அழைக்கிறார்' , 'அம்மா அழைக்கிறார்', 'கேப்டன் அழைக்கிறார்', 'சரத்குமார் அழைக்கிறார்', என்ற டிஜிட்டல் விளம்பர அழைப்புக்களுக்கும் மேலாக, வாழ்க்கையைத் தத்துவார்த்தங்களாகத் தரணிக்கே தந்தவர்கள் வாழ்ந்த மண்ணின் மக்களை நோக்கி யாரோ அழைப்பது கேட்கிறது. அத்திசை நோக்கி மக்கள் மெல்ல மெல்லத் திரும்புவதும் தெரிகிறது.

தன் பிள்ளைகளுக்கு, தன் உறவினர், நண்பர்கள் பிள்ளைகளுக்கு, இந்தியத் தத்துவார்த்தக் குறிப்புக்களைப் பரிசளிக்க விரும்பும் மேலைத்தேயத் தாய், வெள்ளையாக என் முன் சிரிக்கிறாள்...

-இன்னமும் சொல்லலாம்.தொப்புள் கொடியுறவு, எந்தையர் தேசம், என நாங்கள் எவ்வளவுதான் சொந்தம் கொண்டாடினாலும், அரசியல் பேரங்களுக்குள் உறவுநிலையும், உண்மைநிலையும், அடிபட்டுப் போகும் வண்ணமாய் சூழலின் நிலையிருந்த போதும், நட்பும், நேசமும், மிகக் கொண்டரவணைத்த அத்தனை அன்புறவுகளுக்கும் நன்றி எனச் சொல்வதைத் தவிர இப்போதைக்கு வேறென்ன செய்ய
6 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

மலைநாடர்!
என்ன?? ஆச்சிரமங்களாக சென்று வந்துள்ளீர்கள். நெடுநாள் காணவில்லையெனப் பார்த்தேன்.
இந்தியத் தத்துவங்களில் மேலைநாட்டார் காட்டும் ஆர்வம் அளவுக்கு ;நாம் காட்டுகிறோமா??
என்ற சந்தேகம் எனக்குண்டு.
வெளிநாட்டில் வாழும் இந்தியப் பாரம்பரிய மக்களுக்கு , இந்திய தத்துவங்களில் ஆர்வம் ஓங்குவது போல் உள்ளது.
சமீபத்தில் ஒரு விபரணச்சித்திரத்தில் இந்தியா பற்றிக் கூறியவர்; இன்று காந்தி இருந்தால் இந்தியாவின்
போக்கு அவருக்கு அதிர்ச்சியைத் தரும் என முடித்தார்.எனக்கும் ஒரு மணிநேர அந்தத் தொகுப்பைப் பார்த்ததும் அப்படியான எண்ணமே வந்தது.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ம்.. நல்லதொரு பயணமாக இருந்திருக்கும் போல..

மற்றவற்றை பற்றி தெரியாது ஆனால் வேதாத்திரி மகரிஷியின் இடத்தை பொறுத்தவரை நன்றாக நம் மக்கள் பயனடைந்து வருகிறார்கள்.. என் குடும்பத்தில் பெரியவர்களிலிருந்து என் கணவர் வரை இன்னமும் அதனுடன் தொடர்பும் வகுப்புகளுக்கு செல்வதும் அதன் புத்தகங்கள் வாசிப்பதும் என்று பயனடைந்து வருகிறோம்.. என் தாயும் இப்படிப்பட்ட புத்தகங்களையே எங்களுக்கு பரிசளிப்பது வழக்கம்.. அன்னையின் அருளுரை என்ற ஒரு புத்தகம் அதில் இருந்து சில கருத்துக்கள் தான் என் பதிவு தலைப்பின் கீழ் இருப்பது.. "இருண்மையை ஒளியாக "

இதே போல் வேதாத்திரி அவர்களின்வாழ்க்கை மலர் என்னும் புத்தத்தில் நாள் ஒரு நற்சிந்தனை என்ற தொகுப்பும் எங்களிடம் இருக்கிறது ..

எனக்கென்னவோ உலகில் நல்லதும் தீயதும் எப்போதும் சரி அளவில் அதாவது பேலன்ஸ்டாக தொடர்கின்றது என்று படுகிறது..

மலைநாடான் said...

யோகன்!

வருகைக்கும், பகிர்வுக்கும், நன்றி. இன்னும் சொல்லவுண்டு. பார்க்கலாம். ஆச்சிரமங்களுக்கு மட்டும் செல்லவில்லை..:)

மலைநாடான் said...

முத்துலெட்சுமி!

வேதாத்திரி மகரிசியின் அருளுரைகள் யாவும் மிக எளிய தமிழில் வழங்கப்பட்டவை.பாமரனுக்கும் புரியுமானவை. அவரது நெறி நடத்தல் எனக்கும் பிடிக்கும்.

உருவ வழிபாடற்ற, ஆழியாறு அறிவுத்திருக்கோவிலில் கிடைப்பது அற்புதமான ஒரு அனுபவம்.

மற்றும்படி , மேலான தத்துவஞானிகள் வாழ்ந்த மண்ணின் மக்களை, வெளிநாட்டு வணிக முதலாளிகள் ஏலம போட்டுக் கூவி அழைகின்றார்கள் என்பதைச் சொல்ல வந்தேன்.

நன்றி.

Anonymous said...

Nanrakas Solliyullirkal

மலைநாடான் said...

அனானி!

இப்போதூன் பார்த்தேன். அனானியானாலும் யாரெனத் தெரிகிறது.

நன்றி.