Tuesday, May 15, 2007

Made in Switzerland.

அல்ப்ஸ் மலையின் சாரல்களில் - 2

இந்தத் தொடரில் , பல்வேறு தலைப்புக்களலிலும் இங்குள்ள வாழ்வியல் தொடர்பான பல்வேறு கூறுகளையும் பார்க்கலாம் என எண்ணிருப்பதால், அத்தியாயங்களுக்கான தலைப்பை பிரதான தலைப்பாகவும், தொடரின் பகுதிவரிசையை உபதலைப்பாகவும், சுவிற்சர்லாந்து எனும் வகைப்பிரிவுக்குள்ளாகவும், இத்தொடரினை எழுதுகின்றேன். வாசிப்பவர்கள் குழப்பமற்று வாசிப்பதற்கான சிறு வழிகாட்டுதலிது.


ஐரோப்பாவிலும் சரி, அனைத்துலகிலும் சரி, சந்தைப்படுத்தலில், Made in Switzerland, Swiss Quality, என்பவற்றுக்கான தரமும், விலையும், தனித்துவமானது. அவை குறித்து விபரமாக, பின்னர் பார்ப்போம். இந்தப் பகுதியில், தனது நாட்டுக்கான பிரசைகளை எவ்விதம் திட்டமிட்டு உருவாக்கிறது என்பதை பார்க்கவிருக்கிறோம். இவைகளில் பல நடைமுறைகள், ஐரோப்பிய, ஸ்கன்டிநேவிய நாடுகளில் நடைமுறையில் இருப்பவைதான். இந்நாடுகளில் வாழ்பவர்களுக்கு இவை புதிதாகவோ, அன்றிப் புதினமாகவோ இல்லாதிருக்கலாம். ஆனால் ஏனைய பலபகுதிகளில் வாழ்பவர்கள் தெரிந்து கொள்வதற்காகவும், சுவாரசியத்துக்காகவும் சற்று விரிவாகக் குறிப்பிடுகின்றேன்....

காரில் வெளியே சென்றுகொண்டிருந்தோம். ஒரு பெரிய சைகைவிளக்குச் சந்தி வந்தது. எங்கள் சாலையில் சிகப்பு வண்ணச் சைகைவிளக்கு. அதனால் வாகனங்கள் வரிசையாக நின்றன. பின் ஆசனத்திலிருந்த என் மகள், காரின் இயந்திரத்தை நிறுத்துமாறு அடம்பிடித்தழுதாள். மனைவிக்கு என்ன காரணம் எனப் புரியவில்லை. நான் புரிந்து , உடனடியாக இயந்திரத்தை நிறுத்திவிட்டேன். அதன்பிறகு காரணத்தை மனைவிக்குச் சொன்னேன். அவரும் அதுவரை அதனைக் கவனினக்கவில்லை. அது ஒரு பெரிய சைகைவிளக்குச் சந்தி என்பதால், சைகைவிளக்கு அணைந்து எரிய, கூடிய நேரம் தேவை. அந்த நேரத்தில் அங்கே நிற்கும் வாகனங்களின் இயந்திரங்கள் இயங்கிக் கொண்டிருக்குமாயின், அவற்றிலிருந்து வரும் புகையினால், சுற்றுச்சூழல் மாசுபடும் என்பதற்காக, அப்படியான பெருஞ்சந்திகளில், இயந்திரத்தை நிறுத்தி வைக்கும்படி அறிவுறுத்தல் பலகை வைக்கப்பட்டிருக்கும். அந்த அறிவிப்புப் பலகை கண்டுகொண்டதனால்தான் அவள், இயந்திரத்தை நிறுத்துமாறு அடம்பிடித்தாள். இத்தனைக்கும் அப்போது அவளுக்கு வயது ஆறு. பாலர் வகுப்புக்குச் செல்லத் தொடங்கியிருந்தாள்.பாலர்வகுப்புக்களிலேயே, சிறிது சிறிதாக நடைமுறை வாழ்வியலைச் சொல்லிக் கொடுக்கத் தொடங்கி விடுகின்றார்கள். பல்துலக்குவதிலிருந்து, உணவு உட்கொள்ளும் முறைமை, அதற்கான ஆயத்தம் செய்தல்,(மேசைஒழுங்கு செய்தல். கரண்டி எந்தப்பக்கம், கத்தி எந்தப்பக்கம், சாப்பாட்டுத்தட்டு எங்கே என்பனபோன்றவை) வீதியால் நடப்பது, வீதியை கடப்பது, என்றுபல விடயங்கள். இதைநேரில் பார்க்காதவர்களுக்கு சற்றுமிகுதியாகச் சொல்வது போல் கூடத்தெரியலாம். ஆனால் இதுதான் உண்மை.

இந்தியாவில் ஒருமுறை காரில் பயனம் செய்துகொண்டிருந்த போது, வெற்றுபிஸ்கட்பெட்டி, முடிந்த தண்ணீர்போத்தல் என்பவற்றை ஒரு பிளாஸ்டிக் பையில் நான் சேகரிப்பதைப்பார்த்த வாகனச்சாரதி, சிரித்தபடி " தூக்கி வெளியில போடுங்க சார்.." என்று சொன்னது மட்டுமல்லாமல், ஓடிக்கொண்டிருந்த வாகனத்திற்கு வெளியே சாலையில், அக்கழிவுப்பொருட்களை எறிந்துவிட்டுத் திருப்தியானார். ஆனால் இதுவென்னவோ, இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் மட்டும் என்று சொல்லமாட்டேன். ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் கூட இன்றும் காணக்கூடிய காட்சிதான். ஆனால் சுவிற்சர்லாந்தில் தெருக்களும் நகரங்களும் துடைத்த வைத்ததுபோல் காணப்படுவதற்கு, தன்நாட்டுப்பிரசைகளை இளவயதிலேயே பழக்கப்படுத்திக் கொள்கிறது.

பாலர் வகுப்புப் பிள்ளைகளாகவிருக்கும் போதே, சிலநாட்களில் வீட்டிலிருந்து வெற்றுப்பெட்டி, வெற்றுப்பிளாஷ்டிக் போத்தல், வெற்றுத்தகர டப்பா, என்பவற்றைப் பிள்ளைகளைக் கொண்டுவரச்சொல்லும் ஆசிரியர், அன்றையதினங்களில், பிள்ளைகளை அப்பொருட்களுடன் வெளியே அழைத்துச்சென்று, எங்கே எந்தக் கழிவுப்பொருளைப் போடவேண்டுமென்பதைக் காட்டிக் கொடுக்கின்றார். சிறுவயதில் பழகும் பழக்கம் தொடர்ந்து அவர்களிடம் வருகிறது. நாடும் துப்பரவாக இருக்கிறது. ஏதாவது ஒரு பெரிய கொண்டாட்டம் நடந்த மைதானங்கள், தெருக்கள், மண்டபங்கள், என்பவற்றில் சேரும் கழிவப்பொருட்கள், மறுநாள் அப்படியொரு நிகழ்வு நடந்த சுவடேதெரியாதவாறு துப்பரவு செய்யப்பட்டுவிடும்.

வீட்டினுள் சேரும் கழிவுப்பொருட்களைத் தனித்தனியாக, அதற்குரிய இடங்களில் சேர்க்கவேண்டும். தவறும்பட்சத்தில் அதை தண்டனைக்குரிய குற்றமாக ஆக்கும் வகையினைக்கூட சில மாநிலஅரசுகள் வைத்துள்ளன. வெளிநாட்டவர்கள் சுவிஸ் பிரசாஉரிமைகோரி விண்ணப்பிக்கும் போது, சில இடங்களில் அவர்கள் வீசும் கழிவுப்பைகளின் ஒழுங்கு, கண்ணகாணிக்கப்படுவதாகக் கூட ஒரு கதையுண்டு.பிள்ளைகள் பாடசாலை செல்லத் தொடங்கியதும், வீதியில் சைக்கிள்ஓட்டும் முறை, போதைவஸ்துக் கெடுதல், சுற்றாடல்பாதுகாப்பு, உனது கிராமம், உனது நகரம், உனது மாநிலம், உனது நாடு, எனப்படிப்டியாக அறிமுகம் செய்து வைக்கப்படுகிறது. சகமனிதனைப்புரிந்துகொள்ளலுக்கான ஆரம்ப நிலைவரை இந்தத் தொடர் உருவாக்கம், முதல்நிலைபள்ளிக்காலங்களில் நடந்தேறும்.
இந்த உருவாக்கத்தின் முதுநிலையை முதலில் கண்டபோது மேலும் வியப்புற்றேன்.

தொழிற்சாலையொன்றில் வேலை பார்த்தபோது, ஒரு திங்கட்கிழமை காலை வேலைக்குச் சென்றிருந்தேன். திங்கட்கிழமை காலைகள் எப்போதும் பரபரப்பானவை. வேலைகள் நிரம்பிக்கிடக்கும். பரபரப்பாகத் திரியும், என் பணிப்பகுதி மேலாளர் மிகுந்த அமைதியோடு செயற்பட்டுக்கொண்டிருந்தார். உதவி மேலாளர் என்னருகே வந்தபோது மெதுவாகச் சொன்னார், மேலாளரின் தாயார் சனிக்கிழமை மாலை இறந்துவிட்டார். இன்று மதியம் நல்லடக்கம் என்றார். அப்படியாயின் அவர் செல்லவில்லையா? பிற்பகல் இரண்டு மணிக்குத்தான் நல்லடக்கம். அவர் பன்னிரண்டு மணிக்குச் சென்றுவிடுவார் என்று. கட்சித்தலைவன் இறந்ததற்காக, கணக்கற்றவர்களை இறக்கப்பண்ணும் கலாச்சாரத்தில் பழக்கப்பட்ட எங்களுக்கு இது அதிகப்பிரசங்கித் தனமாகத் தோன்றலாம். ஆனால் ஒருநாளின் முக்கியத்துவம், பெறுமதி, உண்மையாக உணரப்பட்டதால் இது சாதாரணமாக இங்கு சாத்தியமாகிறது. இந்த உருவாக்கத்துக்கு கல்விபயில்காலக் கற்கைகள் மட்டும் காரணம் என்று சொல்லிட முடியாதாயினும், தொடக்கம் அதுவே.

இது ஒருவகை மூளைச்சலவை என்று சொல்லி வாதிடலாம். இதுகுறித்து வேறுபல விமர்சனங்களும் வைக்கலாம். ஆனால் சுவிஸ் என்ற வளம்குறைந்த ஒருபிரதேசம், வளம்பொருந்திய நாடாக நிமிர்திருப்பதற்கு, இத்தகைய உற்பத்தியும் ஒரு காரணம்.

11 comments:

வி. ஜெ. சந்திரன் said...

சித்திரமும் கைப்பழக்கம் தான். பல நல்ல விடயங்களை கற்பிக்கிறார்கள் தான். ஆனால் எனக்கு புலம்பெயர்ந்த முதல் சில நாட்களில் ஏற்பட்ட அதிர்ச்சி / அலர்ஜி பற்றி விரிவாய் எழுத வேண்டும். ஐரோப்பா/ அமெரிக்கா எங்கென்றாலும் சுட்டுபோட்டாலும் திருத்தமுடியாத ஒருகூட்டம் இருக்க தான் செய்யும். மற்றும் படி ஐரோப்பியர்/ அமெரிக்கர் எல்லாரும் ஒழுங்குவிதியை கடைபிடிப்பார் எண்டு பொதுவா சொல்ல முடியா.

சுவையான தகவல்கள், சுவாரசியமாக தொகுக்கிறீர்கள்.

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

சுவாரசியமான தகவல்களை அளிக்கிறீர்கள் மலைநாடான். சில நாள்ப் பயணமாக ஒருமுறை ஸ்விஸ் வந்திருக்கிறேன். மிகவும் பிடித்திருந்த பயணம். இரயில்வண்டிகளின் நேரந்தவறாமையும், நீர்நிலைகளின் தூய்மையும் என்னைக் கவர்ந்த இரு விடயங்கள். அங்கேயே வாழ்ந்து வருபவரின் கண்ணோட்டத்தில் நீங்கள் எழுதுவதைப் படிக்க நன்றாக இருக்கிறது.

வடுவூர் குமார் said...

வெளிநாட்டவர்கள் சுவிஸ் பிரசாஉரிமைகோரி விண்ணப்பிக்கும் போது, சில இடங்களில் அவர்கள் வீசும் கழிவுப்பைகளின் ஒழுங்கு, கண்ணகாணிக்கப்படுவதாகக் கூட ஒரு கதையுண்டு.
இருக்கும் போல.
நல்ல பண்புகளை பள்ளியில் இருந்தே தொடங்குவது நல்லது அதே மாதிரி சுற்றும் புறமும் பேணப்பட்டால் மற்றவைகள் தன்னால் வந்துவிடும்.

Anonymous said...

மலை நாடர்!
நான் சுவிஸ் வந்த படியால்; தங்கள் எழுத்திலுள்ள உண்மையை உணர்ந்தேன். நான் தங்கி நின்ற நண்பர்
;அத்தனை நாளும் எங்களைக் குப்பை போட அனுமதிக்கவில்லை. காரணம் நாம் சரியான பொதிகளில்
இடத் தவறலாம். அதனால் வீண் தண்டம் வரும் எனப் பயந்தார்.
அத்துடன் களவு இல்லை. நகரகாவலருடன் தர்க்கம் செய்தாலே தண்டம்...எனப் பல கேள்விப்பட்டேன்.
நமது நாடுகளுடன் ஒப்பிடும் போது; விதிகளை மதித்து வாழுவோம். என நினைப்போர் இங்கே அதிகமாக உள்ளார்கள். அதுவே..இவர்கள் வளர்ச்சிக்கு ஊன்று கோலாக உள்ளது.

மலைநாடான் said...

//ஐரோப்பா/ அமெரிக்கா எங்கென்றாலும் சுட்டுபோட்டாலும் திருத்தமுடியாத ஒருகூட்டம் இருக்க தான் செய்யும். மற்றும் படி ஐரோப்பியர்/ அமெரிக்கர் எல்லாரும் ஒழுங்குவிதியை கடைபிடிப்பார் எண்டு பொதுவா சொல்ல முடியா.//

வி.ஜெ!

உங்கள் கருத்தோடு உடன்பாடே. ஆயினும் இங்கு அத்தகையவர்கள் மீது சட்டம் கடுமையாக செயற்படுவதால் குறைவாகவேயுள்ளது எனலாம்.

பகிர்வுக்கு நன்றி

மலைநாடான் said...

செல்வராஜ்!
உங்கள் பகிர்வுக்கு நன்றி!

ஒரு நாடு என்பது, சிறந்தோங்குவதற்கு பல்வேறு பகுதிகள் சிறப்பாக இருக்க வேண்டும். சுவிஸ என்ற நாட்டின், அழகுக்கும், சிறப்புக்கும் பின்னால், அப்படியான பல அம்சங்கள் இருக்கின்றன. அவற்றை சற்றுப் பாரப்பது எல்லோரக்கும் பயனாயிருக்கும் என்ற எண்ணத்த தொடர்கின்றேன்.
நன்றி.

மலைநாடான் said...

வடுவூர் குமார்!

உங்கள் கூற்று உண்மைதான். ஆனால் அந்த நல்ல தொடக்கத்தை, தொடரும்படி மற்றைய கூறுகளும் அமையவேண்டும். தொடர்ந்து படியுங்கள். உங்களுக்கே புரியும்.

கருத்துக்கு நன்றி.

Anonymous said...

மலைநாடான்,
உங்கள் ஸ்விஸ் பதிவுகளைப் படித்தேன். வெகு நன்றாக இருக்கின்றது நுட்பமாக விஷயங்களைத் தருகிறீர்கள்.

மலைநாடான் said...

வல்லிம்மா!

உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. சுவிற்சர்லாந்தில் உங்கள் அனுபவங்களை, நீங்களும் மிக அருமையாகவே பதிவு செய்து வருகின்றீர்கள். நன்றி.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

made in switzerland என்பதை மனிதர்களுக்குப் பொருத்திச் சொன்னது ரசிக்க வைத்தது. பொதுவாகவே வளர்ந்த ஐரோப்பிய நாடுகளில் ethicsக்கு (அறம்) கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து குழந்தைகளை வளர்க்கிறார்கள் என்று அறிகிறேன். இங்கு என் நண்பரின் பேராசிரியர், தன் குழந்தை இன்னொரு குழந்தையை அடித்து விட்டது என்று அலுவலகத்தில் வந்து வருந்திக் கொண்டிருந்தாராம் !!!

குப்பையைப் பிரித்துப் போடும் பழக்கத்தை ஜெர்மனி, நெதர்லாந்து இரண்டு நாடுகளிலும் பார்த்து இருக்கிறேன். சில சமயம் எப்படிப் பிரிப்பது என்று நமக்குத் தெரியாது. தெரிந்தாலும் சோம்பலாக இருக்கும். சிங்கப்பூரில் குப்பைகள் பிரித்தல், சுழற்சி முறையை அறிமுகப்படுத்தியபோது அதைக் குழந்தைகளுக்கு முதலில் சொல்லித் தந்ததாகவும் அவர்கள் தங்கள் பெற்றோர்களுக்குச் சொல்லித் தந்ததாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன்.

மலைநாடான் said...

//சிங்கப்பூரில் குப்பைகள் பிரித்தல், சுழற்சி முறையை அறிமுகப்படுத்தியபோது அதைக் குழந்தைகளுக்கு முதலில் சொல்லித் தந்ததாகவும் அவர்கள் தங்கள் பெற்றோர்களுக்குச் சொல்லித் தந்ததாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன்.//

ரவிசங்கர்!

இங்கும் ஏறக்குறைய அதே மாதிரியென்றுதான்றுதான் எண்ணுகின்றேன்.

பகிர்வுக்கு நன்றி.