Friday, June 30, 2006

நாகம் பூசித்த நயினைஅம்மன். ஒருபண்பாட்டுக் கோலம் 4

மணிபல்லவம் என்றும், நாகதீபம் என்றும், வரலாற்று நூல்களில் விழிக்கப்பட்ட நயினாதீவுக்குப் பெருமை சேர்ப்பது, அத்தீவிலுள்ள நாகபூசணி அம்மன் ஆலயமாகும். பன்னெடுங்காலமாக இத்தீவின் மக்கள், தொழில் நிமித்தம் வௌ;வேறிடங்கள் சென்றபேர்தும், நாகபூசணி அம்மனின் திருவிழாத் தொடங்கிவிட்டதென்றால், நயினாதீவிற்குத் திரும்பி விடுவார்கள். யாழ்ப்பாணத் தீபகற்பகத்தை அண்டியிருக்கும் சப்த தீவுக்கூட்டங்களின் மக்கள் பலரும், வணிகர்களாக நாட்டின் பல்வேறு திசைகளிலும் நிலைகொண்டிருந்தார்கள். அம்மக்ள் சமுகத்தின் பொதுக்குணாம்சமாக இது காணப்பட்டபோதும், நாகபூசணியம்மன் திருவிழா அதற்கப்பாலும், முக்கியத்துவம் பெறும். சென்ற 26ந்திகதி முதல் ஜுலைமாதம் 10ந்திகதிவரை (ஆனிமாத வளர்பிறைப்பிரதமைத்திதி முதல் ஆனிமாதப்பூரணை ஈறாக) நயினாதீவு நாகபூசணியம்மனின் திருவிழா நடைபெறுகிறது. அதை நினைவுபடுத்தி வேறுபல பதிவுகள் எழுதப்பட்டிருந்தபோதும், இவ்வாலயத்தின் தோற்றம் குறித்த மற்றுமொரு பார்வையாக, அத்தீவுறை மக்களின் மனநம்பிக்கையின் மற்றுமொரு நிலையாக, இப்பதிவினை இடுகின்றேன்.

தமிழின் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையில், மணிபல்லவம் எனக் கூறப்படுகின்ற இத்தீவில் கண்ணகைத்தெய்வ வழிபாடு இருந்ததாக பல்வேறு சந்தர்ப்பங்களில் வாசித்திருக்கின்றேன். (ஈழத்தில் கண்ணகை வழிபாட்டுப்பாரம்பரியம் தொன்மைமிக்கதொரு வழிபாட்டுப்பராம்பரியமாக இருந்து வந்துள்ளது. இதுபற்றி பிறிதொரு சந்தர்ப்பத்தில் விரிவாக நோக்க எண்ணமும் விருப்பமும் உண்டு.) ஆனால் நான் இங்கே சொல்லவிருப்பது இத்தீவின் மக்களிடையே செவிவழிக்கதையாகப்பரவி, ஆழமான நம்பிக்கையாக உறைந்துவிட்ட ஒரு பண்பாட்டுக்கோலத்தை.

முன்னொருகால் இத்தீவின் வணிகர் ஒருவர் வர்த்தக நோக்கில், வத்தை என்று சொல்லப்படுகின்ற பொதிகள் ஏற்றும் பாய்மரச்சரக்குப்படகில் இத்தீவிருந்த பயனித்தபோது, கடலின் நடுவில் தெரிந்த பாறையொன்றில், கருடன் ஒன்று இருந்து ஆர்பரிப்பதைக் கண்டிருக்கிறார். அவர் தன் படகினை கருடன் இருந்த பாறையை அண்மித்ததாகச் செலுத்த கருடன் மேலெழுந்து பறந்துவிட்டது. ஆனால் அப்போதுதான் அந்த அதிசயத்தை அவர் கண்டார். கருடன் இருந் பாறைக்கு எதிராக இருந்த மற்றொரு பாறையின் இடுக்கில் ( இன்றும் இக்கடற்பகுதியிலுள்ள இருபாறைகளை, அப்பாறைகள் என்றே அடையாளங்காட்டுகின்றார்கள்.) மறைந்திருந்த ஒருநாகம் வெளிப்பட்டு நயினாதீவை நோக்கி நீந்துகிறது. அதன் வாய்பகுதியில் பூ ஒன்று தென்படுகிறது. ஆச்சரியத்தோடு தன் அன்றாடவேலைகளுக்குள் மூழ்கிவிட்ட வர்த்தகர், அன்றைய பொழுதினை நிறைவு செய்து தூக்கத்திற்குச் சென்று விட்டார். தூக்கத்திலிருந்த வர்த்தகரின் கனவில் தோன்றிய அம்மன், நயினாதீவில், குறிப்பிட்ட இடத்தில், தான் சுயம்புவாகத் தோன்றியிருப்பதாகவும், தனக்கு ஆலயம் அமைக்கும்படிகோரியதாகவும், அதன்பின் வர்த்தகர் ஊர்மக்களிடம் இக்கனவைக் கூறி, ஆலயம் அமைத்ததாகவும், அதன்பின் அவர் தொழில் சிறந்து வாழ்ந்ததாகவும் சொல்வர்.

இப்படி ஆலயம் அமைந்தபின்னும், அதற்கு முன்னதாகவும், காலைவேளைகளில் சுயம்புவாக எழுந்த அம்மனின் மேற்பகுதியில், அன்றலர்ந்த மலர் ஒன்றிருப்பதைக் கவனித்த பலர் இது எவ்விதம் வருகின்றதென ஆச்சரியமுற்றவேளையில், நயினாதீவிற்கு அண்மித்துள்ள மற்றொரு தீவான அனலைதீவிலிருந்து ஒரு நாகம் பூவோடு கடலில் நீந்தி வந்து ஆலயத்துள் செல்வதைக் கண்டிருக்கின்றார்கள். அனலைதீவின் தென்பகுதிக்கரையை புளியந்தீவு எனச் சொல்வார்கள். இப்புளியந்தீவில் நாகேஸ்வரன்கோவில் எனும் சிவாலயம் ஒன்றுண்டு. அக்கோவிலின் வழிபாட்டு ஆரம்பம், ஆலயபிரகாரத்திலுள்ள அரச மரமும் வேப்பமரமும், இணைந்திருக்குமிடத்திலுள்ள புற்றிலுள்ள நாகத்தினை வழிபாடு செய்வதிலிருந்து ஆரம்பமாகிறது. இப்புற்றிலுள்ள நாகமே தினந்தோறும் நயினாதீவிலுள்ள அம்மனைப் பூக்கொண்டு வழிபாடியற்றி வந்தது என்பது மக்கள் நம்பிக்கை.

இந் நம்பிக்கை தொடர்பாக எனக்கும் ஒரு சுவையான அனுபவமுண்டு. 80களின் நடுப்பகுதிகளில், என் மகன் பிறந்து ஒரு வருடமாகயியிருந்த வேளையில், என் பாட்டனார் காலத்திருந்தே தொடர்புபட்டிருந்த இக்கோயிலுக்கு என்னை மனைவி பிள்ளையை அழைத்துச் சென்று வருமாறு பெற்றோர்கள் கூறினார்கள். இராணுவக் கெடுபிடிகள் குறைந்த ஒரு சமாதான காலமாக அமைந்திருந்ததால், நர்னும் மனைவி பிள்ளையுடன் அக்கோவிலுக்குச் சென்றோம். அங்கே நின்ற ஊர்மக்கள் என்னை யாரென்று அறிந்துகொண்டதின்பின் அக்கோயில்பற்றியும், அங்கே புற்றிலுள்ள நாகம் பற்றியும், கதைகதையாகச் சொன்னார்கள். சொல்லும்போது ஒன்றைக்கவனித்தேன். அவர்கள் நாகத்தை பாம்பு என அஃறினையில் குறிப்பிடவில்லை. '' பெரியவர் இப்ப ஆச்சியிட்ட (நயினை நாகபூசணி கோவிலுக்கு) போயிருப்பார். உமக்குப் பலனிருந்தா காணலாம் '' என உயர்திணையில் நாகத்தை விழித்துக் கதைத்தார்கள். ''சரி எப்பவோ நடந்திருந்தாலும், இப்பவும் அப்பிடி நடக்குமா? அந்தப்பாம்புதான் உயிரோட இருக்குமா? '' எனக்கேட்ட என்னை ஒரு விசமத்தனமான சிரிப்போடு பார்த்தார்கள். சண்முகம் என்ற பெரியர் சொன்னார். '' நீர் நம்பையில்லைப்போலும். ஆனா அன்றைக்கு அம்மனுக்கு பூக்கொண்டுபோன அதேயாள் இன்னமும் இங்கதான் இருக்கிறார். தினசரி அம்மனிட்ட அவர்போய்த்தான் வாறார்..'' அவர் அப்படிக் கதைத்துக் கொண்டிருந்தபோது, நான் அந்தமரத்தடியையும், புற்றினையும் சுற்றிப்பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென என் கால்களை உரசியவாறு, குருவிபோன்ற ஆனால் சற்று நீளமான ஒரு உருவம் புற்றுக்குள் வேகமாகச் சென்று மறைந்தது. நான் சற்றுப் பயந்து தடுமாறினேன். பக்கத்தில் நின்றவர்கள் ''பார்த்தீரே கண்ணுக்கு முன்னால் வந்து தன்ன காட்டியிருக்கிறார். இனியும் நம்பமாட்டீரோ? '' எனக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. இந்த நாகம் பூசனை செய்தபடியால்தான், நயினாதீவு அம்மன் நாகபூசணிஅம்மன் எனப்பெயர் பெற்றதாகச் சொல்வார்கள்.

நயினாதீவிற்குச் செல்வதாயின், யாழ்ப்பபாணத்திலிருந்து தரைப்பாதை வழியாக புங்குடுதீவு, இறுப்பிட்டி(மதி.கந்தசாமியின் ஊரென்று எண்ணுகின்றேன்,) அல்லது ஊர்காவற்றுறை, ஆகிய கரைத்துறைகளில் ஏதாவது ஒன்றுக்குச்சென்று,அங்கிருந்து படகுப் பயனம் மூலம் நயினாதீவு செல்லவேண்டும். இக்கடற்பயணம் பழக்கப்படாதவர்களுக்கு சற்றுப் பீதி தரும் பயண அனுபவமே. அதிலும் குறிப்பாக ஏழாற்றுப்பிரிவெனும் கடல்பகுதியில் படகு தள்ளாடும் போது கலங்கா மனமும் ஓர்கணம் கலங்கும்.

குழந்தையற்றவர்களின் நேர்த்திப்பிரார்த்தனையும், என்நாளும் இங்கு நடைபெறும் அன்னதானமும், பிரசித்தி மிக்கவை. இன்னுமொரு விடயத்தையும் குறிப்பிட வேண்டும். இந்த இரண்டு தீவுகளிலும், பாம்புகள் சாதரணமாகத்தென்படும். யாரும் அவற்றைத் துன்புறுத்த மாட்டார்கள். இதுவரையில்பாம்பினால் யாரும் தீன்டப்பட்டதுமில்லை. இக்கோவிலின் தீர்த்தம் நடைபெறும் ஆனிமாதப் பூரணைஇரவில், மேலைத்தேயர் இவ்வாலயத்தை அழித்த போது, தானாகவே உருண்டு சென்று கடலில் அமிழ்ந்த செப்புத்தேரின் கலசம் தெரியுமெனச் சொல்கின்றார்கள்.


வாழ்வின் சோபை குன்றிப்போன அத்தீவில், மக்கள் கொண்ட நம்பிக்கைப் பண்பாட்டுக் கோலங்களாவது வாழட்டும்.


தேரேறி வரும் தேவியை வேண்டி கவிஞர் புதுவை. இரத்தினத்துரை கோர்த்த கவிமாலையை, எங்கள் கலைஞன் வர்ண. ராமேஸ்வரன் பாமாலையாகச் சூட்டியிருக்கின்றான். கேட்டு இன்புற அருகேயுள்ள ஒலிப்பொறியில் ( Stickam Player) 1 வது பாடலைத் தெரிவு செய்யுங்கள்.

16 comments:

மலைநாடான் said...

நயினாதீவை நினைக்கும் போதெல்லாம், நயினாதீவு, நெடுந்தீவு, படகுச்சேவையிலீடுபட்டிருந்த குமுதினி படகில் வைத்து சிறிலங்காப்படையினர் மேற்கொண்ட படுகொலையின் கோரநினைவுகள் ஞாபகத்துக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

கானா பிரபா said...

நல்ல பதிவு, மீள் நினைவு

நான் கடந்த ஆண்டு ஊருக்குப் போனபோது நயனையம்பதியில் மீள்புனருத்தானவேலைகள் நடந்துகொண்டிருந்தன.

மலைநாடான் said...

பிரபா!
நயினை அம்மன் கோவில் இப்போது புதுப்பொலிவோடு இருப்பதாகக் கேள்வி. இருந்தென்ன..ம்..?

Anonymous said...

மலைநாடர்!
நயிலை நாகபூசணியின் திருவிழாப் பெருவிழாக்காலத்தில் ,ஈழத்தின் வடபகுதி மக்களுடன் ஒட்டிய ஒரு பதிவு.நீங்கள் கூறிய வாய்வழிக்கதை பெரியவர்கள் கூறக் கேட்டுள்ளேன்.இளமையில் இவ்வாலயங்கள் சென்றுள்ளேன். மணிபல்லபக் காலத் தொடர்புக்கு அத்தாட்சியாக விகாரையும் உண்டு. அத்துடன் அதை நினைவு கூரும்வண்ணம் "அமுத சுரபி" எனும் அன்னதானமடம்; தினமும் அடியார்களுக்கு பசியாற்றும் அர்ப்புத சேவை- அது மகேஸ்வர பூசைதான்! சென்ற 2004 ல் சென்றபோது;அனுபவ ரீதியாக உணர்ந்தேன். அபிசேக ஆராதனைகளில் அடியவர்கள் வழங்கவுள்ள பணத்தை; அன்னதானத்துக்குக் கொடுப்பவர்கள் விரும்பும்தேதியில்; (பிறந்தநாள்,திருமணநாள்,பிதிர் கடன்) அடியவர்கள் பசியாற ஏற்பாடாகியுள்ளது. ஓர் உன்னத சேவை!அம்மக்களின் பரந்த நல்மனம் பாராட்டப் படவேண்டும். அனைத்துலக இந்து ஆலயங்களும்; கைக் கொள்ளவேண்டு மென்பதென் அவா!
ஏதோ நாகம்மாளை உச்சரிக்க எழுத வைத்து விட்டீர்கள்!அம்மாள் அமைதியைத் தரவேண்டும்.
நாகேஸ்வரி நீயே நம்பிடும் எமைக்காப்பாய்"- இணுவில் வீரமணி ஐயர்
யோகன் பாரிஸ்

VSK said...

நல்ல தகவல்!
உங்கள் ப்ளாக் முகப்பில் இருப்பது அவ்விரு பாறைகளா?

நம்பிக்கைதான் வாழ்க்கை.
நம்புவதுதான் பலம்.
நாகம்மாள் நல்லது செய்யட்டும்!

வெற்றி said...

மலைநாடான்,
//நயினை அம்மன் கோவில் இப்போது புதுப்பொலிவோடு இருப்பதாகக் கேள்வி.//

நான் சென்ற வருடம் ஈழத்திற்குச் சென்றிருந்த போது இவ் ஆலயத்திற்கும் சென்றிருந்தேன். வீடியோவில் படமாக்கினேன். நேரம் கிடைக்கும் போது அவ் ஒளிப்படத்தை பதிவிடுகிறேன்.

//மணிபல்லபக் காலத் தொடர்புக்கு அத்தாட்சியாக விகாரையும் உண்டு.//

யோகன் அண்ணை, மன்னிக்கவும். மணிபல்லபக் காலத்திற்கும் அங்கு இருக்கும் விகாரைக்கும் எதுவித தொடர்பும் இல்லை என்பதை மிகவும் தாழ்மையுடன் கூறிக் கொள்ள விரும்புகிறேன். அங்குள்ள விகாரை 1950 களின் பிற்பகுதியில் தான் கட்டப்பட்டது. பல தமிழ்ப்பகுதிகள் சிங்கள அரசுகளால் ஆக்கிரமிக்கப்பட்டு சிங்களக் குடியேற்றங்களையும் , புத்தவிகாரைகளையும் அப் பகுதிகளில் சிங்கள அரசுகள் உருவாக்கி வந்தன. வருகின்றன. அதேபோலத்தான் நயினாதீவில் உள்ள விகாரையும். 1950 களின் பிற்பகுதியில் கட்டப்பட்ட விகாரைக்கும் அக்காலப் புராணக் கதைகளுக்கும் எதுவித தொடர்பும் இல்லை. நான் இவ் விகாரைக்கும் கடந்த வருடம் சென்றிருந்தேன். அங்குள்ள புத்தபிக்குவுடனும் உரையாடினேன். அப்பிக்கு நன்றாகத் தமிழ் பேசுவார். இப்போது எங்கள் ஊரிலும் பிரமாண்டமான புத்தவிகாரை கட்டியெழுப்பியுள்ளார்கள். அதற்கும் இப் பிக்குதான் பூசை. கொஞ்சக் காலம் போனால் எம்மூர் விகாரையும் சங்கமித்தை கால விகாரை என்ற தோற்றத்தை உருவாக்கிவிடுவார்கள் போல் உள்ளது.

குமரன் (Kumaran) said...

ஈழத்தின் ஒரு பண்பாட்டுக் கோலத்தை அறிந்து கொண்டேன். நன்றி மலைநாடான்.

மலைநாடான் said...

/உங்கள் ப்ளாக் முகப்பில் இருப்பது அவ்விரு பாறைகளா?
/

SK,
முகப்புப் படத்தில் உள்ள பாறைகள் அவையல்ல. படமும் அக் களமல்ல. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

மலைநாடான் said...

வெற்றி, குமரன்!

உங்கள் வருகைக்கு நன்றி.

மலைநாடான் said...

வணக்கம் துளசியம்மா!

நீங்கள் என்பதிவை வாசிக்கின்றீர்கள் என்பதை அறியும் போதே மகிழ்ச்சி. அத்துடன் இணைப்புக் கொடுத்து, பரஸ்பர அறிமுகம் செய்த உங்கள் பரோபகாரம் போற்றுதலுக்குரியது.

rnatesan said...

நல்லதொரு பதிவினயூம்,நானெல்லாம் அறியாத விபரத்தை தந்தமைக்கு நன்றி.
மீண்டும் வருவேன்.

மலைநாடான் said...

நன்றி, நடேசன்!
அடிக்கடி வாங்க. கருத்துக்கள் சொல்லுங்க

Chandravathanaa said...

நல்ல பதிவு.
அந்தக் கதை நான் அறியாதது.
தந்தமைக்கு நன்றி.

Unknown said...

உங்க பக்கமும் மேலே உள்ள அந்த படமும் ரொம்ப நல்லாயிருக்கு. Archive browser பயனுள்ளதா இருக்கா?

மலைநாடான் said...

சந்திரவதனா!

நீங்கள் கேட்காத கதையா? ஆச்சரியமாகவிருக்கிறதே.
வருகைக்கு நன்றி.

மலைநாடான் said...

ரமணி!

உண்மையாகவா ? விஸ்வாமித்திரர் வாயால் பிரம்மரிஷிப் பட்டம் என்பார்களே. அதுபோலிருந்தது. ஆனால் உண்மையில் வேறொரு மொழியில் இருந்த தளத்தினை தமிழ் மொழிக்கு மாற்றியமைத்தது மட்டுமே என் வேலை. மற்றும்படி இன்னமும் கற்றுக்குட்டியே.