Saturday, June 03, 2006

ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தவர்கள் 1

' சொன்னதும் நீதானா? சொல்.. சொல்.. சொல்..என்னுயிரே..' ஒரு குரல் பாடலான அந்தப்பாடல் சிலவேளைகளில் இரு குரலில் ஒலிக்கும். ஆனால் சேர்ந்தே ஒலிக்கும். அத்தகைய ரசனையே, அந்தக்குரல்களுக்குச் சொந்தக்காரர்களை நீண்டநாள் தோழிகளாக ஆக்கி வைத்ததோ என்னவோ? திருகோணமலையின் தமிழ்க்கிராமம் ஒன்றின் பாடசாலையில், நீண்ட காலமாக பாலர் வகுப்பு முதல் பத்தாம் வகுப்புவரையிலுள்ள பிள்ளைகளுக்கு, கல்வி கற்பித்த பயிற்றப்பட்ட ஆசிரியைகள். கண்ணெனத் தகுந்த எண்ணையும், எழுத்தையும், எண்ணற்ற பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுத்தவர்கள். எண்ணையும் எழுத்தையும், எனக்கும் கற்றுத் தந்தவர்கள். இவர்கள் வெறுமனே கற்றுக் கொடுத்த ஆசிரியைகள் மட்டும்தானா? இல்லை, எனக்கு மட்டுமல்ல. என்னைப்போன்ற பலருக்கும், ஆசிரியர் என்பதற்கும் மேலாக அன்னையென அணைத்தெடுத்து வளர்த்தவர்கள். ரீச்சர் என்று விளிப்பதற்கு முன்னொருகால், கிராமத்துப் பாடசாலைகளில், ஆசிரியை அக்காவென விளித்ததுமுண்டு. எக்காலத்திலும் ஆசிரியை என்னும் உறவுக்கப்பால் அக்கைகளாகவும் பந்தம் கொண்டவர்கள். ஊரார்பிள்ளையை ஊட்டி வளர்த்தவர்கள் என்ற தலைப்பில் எழுத இருந்ததும், என் முன்நினைவுக்கு வந்த ஆசிரியைகள். கமலாரீச்சர், கெங்காம்பிகை ரீச்சர்.

பிஞ்சு வயதில் என் நெஞ்சுநிலத்தில் எண்ணையும் எழுத்தையும் வித்தூன்றி, விளையச்செய்தவர்கள். நான் இதுவரை எழுதிய தமிழையும், இனிவருங்கால் எழுதும் தமிழையும் அறிமுகஞ் செய்தவர்கள். என்னுடையதும், என்னைப் போன்று வேறுசிலருக்கும் எழுதும் தமிழ்வடிவம் அழகாயமைந்ததற்கு, கமலாரீச்சரின் அகரபாடம்தான் காரணமென அடித்துச் சொல்லலாம். அத்தனை அழகு அவர் எழுத்து. குண்டு குண்டாய் ஒற்றைக் கொப்பிகளின் பக்க வரிகளில் வந்தமர்ந்து கொள்ளும். அதை அவர் அறிமுகஞ் செய்வதும் அழகுதான். பின்னாட்களில், நகரில் உயர்கல்வி கற்றவேளைகளில், கிராமத்துப் பாடசாலைக்குச் செல்ல வேண்டிய ஏதோ சில சந்தர்பங்களில், அவரது பாலர் வகுப்புக்குச் செல்வதும், அவரது பாடம் நடத்தும் பக்குவம் காண்பதற்காகவே, அந்தப்பாலகர்களுடன் சேர்ந்தமர்ந்து கொண்டதும் உண்டு.


கமலாரீச்சர் அதிகாலை நேர அமைதிக்கடல் என்றால் ஆர்பரிக்கும் அமாவாசைக்கடல் கெங்காம்பிகை ரீச்சர். சின்னப்பிள்ளையில் கணக்குப் பாடம் சொல்லித்தந்தவா. தோற்றத்தில் ஜானகி மாதிரியென்னறால், கோபத்தில் ஜான்சிராணி. அவவின் வகுப்பில் அளவிலாப்பாராட்டுக்களைப் பெற்றதுமுண்டு. அடிவேண்டி அழுததுமுண்டு. எண்ணையும் எழுத்தையும் கடந்து, முதலில் தமிழின் கலைகளைக் கற்றுத் தந்ததும் அவர்கள்தான். முத்தமிழ்விழாப் போட்டிகளின் மூலம், முத்தமிழைக் கொஞசம் கொஞ்சமாக, குழைத்து ஊட்டி வளர்த்து உருமாற்றியவர்கள். வாசிக்கவும், யோசிக்கவும், பழக்கப்படுத்தியவர்கள்.
வாழ்க்ககைக்காலத்தின், என்றும் எப்போதும், மறக்க முடியாத, அவர்களிருவருடனான அறிவாரந்த அனுபவங்களும், அன்பான வழிநடத்தல்களும் ஆயிரமாயிரம். எங்கள் காலத்திற்கும் அப்பால், எங்களினூடு எங்கள்பிள்ளைகள் காலத்திற்கும் அறிவுரைகளாய் வழிநடத்தும் என்பதில் ஐயமில்லை.

வலைப்பதிவு எழுதத் தொடங்கிய நாட்களிலில் அறிமுகத்துக்காக எழுதிய இரு சிறு குறிப்புக்களையும், பதிவுகளின் எண்ணிக்கையிலிருந்து விலக்கிப் பார்த்தால், இது இருபத்தைந்தாவது பதிவு. அதில் ஊரார்பிள்ளையை ஊட்டி வளர்த்தவர்களென, இந்த உத்தமர்களை எண்ணத் தோன்றியதும், எதிர்பாரத ஒரு சிறப்புத்தான்.

12 comments:

Anonymous said...

"இவர்கள் பிள்ளைகள் தானே!! வளர்ந்தாங்களா,,,?!!!!
என்ன! குருதட்சணையா??? என் வாத்தியார்கள்;அக்காக்கள்;மாஸ்டர்கள்;ரீச்சர்கள்,சேர்கள் ..;
இந்த பிரான்சில் மடம்;மிஸ்சுக்கள் ..;;ஞாபகம் வருதே!!!ஞாபகம் வருதே!!!!!!!
சொல்லுங்க!!!!!
யோகன் பாரிஸ்

லதா said...

தங்களின் பதிவு, என் ஆசிரியர்கள் அன்னபூரனி, வனஜாட்சி, ஆதிகேசவன், இராமலிங்கம், தென்றலிங்கம் எல்லோரையும் நினைவூட்டிவிட்டது. உயர்நிலைப் பள்ளிகளில் மணிக்கொருமுறை வெவ்வேறு ஆசிரியர்கள் வகுப்பு நடத்துவர். ஆனால் தொடக்கப்பள்ளியில் நாள் முழுதும் ஏன் வருடம் முழுவதும் ஒரே ஆசிரியர்தான். அந்த அனுபவங்கள்தாம் எவ்வளவு இனிமையானவை ? ஒவ்வொருவரையும் தன் சொந்தப்பிள்ளைகளாகவே மிகுந்த அக்கறையுடனும் ஆசையுடனும் வகுப்பு எடுப்பர். அதே போல் ஆசிரியப் பெருமக்கள் இப்போதைய தலைமுறையினருக்குக் கிடைப்பார்களா என்று ஐயம் எழுகிறது.

வெற்றி said...

அன்பின் மலைநாடான்,
நன்றி மறவாமை என்பது தமிழர்களின் பண்புகளில் ஒன்று. அதனால்தான் அய்யன் வள்ளுவன்
"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகர்க்கு"

என அன்றே அழகாகச் சொல்லி வைத்தார். வள்ளுவன் வழியில் நின்று நன்றி மறவாமல் தங்களின் இளமைக்கால ஆசிரியர்களை நினைவுகூர்ந்து தமிழ்பண்பை மறவாது வாழும் தன்னடக்கம் கொண்ட உங்களைப் போன்றவர்களை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

நன்றிகள்.

அன்புடன்
வெற்றி

Chandravathanaa said...

மலைநாடான்
எனக்கும் எனது பாடசாலை ஆசிரியர்கள், ஆசிரியைகளுடன் பல இனிய நினைவுகள் உண்டு. அவை பற்றி எழுத வேண்டுமென்ற எண்ணமும் உண்டு. உங்கள் பதிவை வாசிக்கும் போதும் அந்த எண்ண அலைகள் என்னுள்ளே மீண்டும் எழுந்தன.

மலைநாடான் said...

வாங்க யோகன்!

குரு தட்சனை என்றில்லை. குருநிலைக்கும் அப்பால் நல்ல தோழிகள் என்று கூடச் சொல்லாம். அவ்ரகள் பிள்ளைகள் கூட அருமையானவர்கள். தற்போது தொடர்புகள். இல்லை. ஆனால்நல்லாக இருப்பார்கள் என்றே நம்புகின்றேன்.
நன்றி!

மலைநாடான் said...

ஐரோப்பாவிலும், அத்தகைய பாலர் வகுப்பு ஆசிரியர்களைக் கண்டு உள்ளேன். உலகில் எல்லாப் பகுதிகளிலும் சில மனிதர்கள் ஓரேவிதமகத் தெரிவார்கள். அவர்களில் ஆசிரியர்களும் ஒரு ரகம்

லதா!
உங்கள் வருகைக்கும் மீட்டல்களுக்கும் நன்றி.

மலைநாடான் said...

வெற்றி!
தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.

இத்தகைய சாதாரணமான மாந்தர் கூட ஒருவிதத்தில் சரித்திர மாந்தர்களே. அவர்களை, அவர்களின் பண்புகளை, பதிவு செய்ய வேண்டியது அவசியம்எனக் கருதுபவன்.

நன்றி!

கானா பிரபா said...

வணக்கம் மலைநாடான்

ஒவ்வொரு மனிதனும் பண்பட்டவனாக மாறுவதிலோ/சீரளிவதிலோ கூட ஆசிரியருக்குப் பொறுப்பு இருக்கின்றது என நினைக்கின்றேன்.

-/பெயரிலி. said...

அப்ப மலைநாடான், அப்பிடி எண்டுறியள் ;-))

மலைநாடான் said...

சந்திரவதனா!
கண்டிப்பாக நீங்கள் அவர்களுடனனான அனுபவங்களை அவசியம் பதிவு செய்யுங்கள். உங்கள் எழுத்தில் அதுவும் வித்தியாசமான அனுபவத்தைத் தரும் என்று நம்புகின்றேன்.

நன்றி!

மலைநாடான் said...

வணக்கம் பிரபா!

நீங்கள் சொல்வது உண்மைதான். நல்லாசிரியர்கள், நல்ல நண்பர்கள், ஆகியோர் ஒரு மனிதனின் வாழ்க்கையில் முக்கியமானவர்கள்.

மலைநாடான் said...

பெயரிலி!

அப்படியேதான். கொஞ்சம் பொறுங்கோ இன்னமும்...வரும்:-)))))