கோட்டோவியங்கள் எப்பொழுதும் புதுவித ரசானுபவம் தருபவை. என் விருப்பத்துக்குரியவை.
சில்பி, பத்மவாசன், மணியம் செல்வன், யாழ்.ரமணி, என ஒவ்வொருத்தருடைய
கோடுகளும் தனித்துவமான பாணியுடையவை. மணிக்கணக்கில் பார்த்து
இரசித்திருக்கிறேன். குறைந்தளவிலான கோடுகளில் முகபாவங்கள் வெளிப்படுத்தும்
ஓவியங்கள் ஏற்படுத்தும் ஆச்சரியம் அளவிடமுடியாதவை. ஓவியர் ஆதி மூலம்,
ஈழத்தில் மாற்கு மாஸ்டர், ஆகியோரது கோடுகள் அவ்வாறான ஜாலம் புரிபவை.
85களின் பின்னதாக யாழ்ப்பாணத்தில், ஓவியர் மாற்கு அவர்களின் ஓவியக்
கண்காட்சி ஒன்று நடந்தது. காட்சியிலிருந்த ஓவியங்களைப் பார்த்தவாறு
வருகையில், இரு கோடுகள் மட்டும் கொண்ட ஒரு ஓவியம் என்னுள் ஆச்சரியத்தையும்
கேள்விகளையும், எழுப்பியது.
நீலம், சிவப்பு, நிறத்திலான வளைந்து
நெளிந்திருந்த அந்தக் கோடுகளுக்கு ராதையும் கண்ணனும் எனத்
தலைப்பிட்டிருந்தார் ஓவியர் மாற்கு. கண்கவர் வண்ணப்படங்களாக கண்ணன்
ராதையைப் பார்த்துப் பழகியிருந்த எம் பட்டறிவுக்கு, கோடுகளில் கண்ணன் ராதை
தெரியவில்லை. இது தொடர்பாக மாற்கு அவர்களிடம் பின் பேச வாய்ப்பும்
அமையவில்லை.
தங்கத் தாமரை விருது பெற்ற படமான இயக்குனர் சேது மாதவனின், 'மறுபக்கம்'
படம் பார்த்துக் கொண்டிருந்தேன். வசந்குமாரின் ஒளிப்பதிவில் நடிகை ராதா
ஒரு காட்சிச் சட்டகத்தில், சிறு கோடுகளாய் தெரிய, ஆச்சரியமானேன். உச்சி
மீதிருந்து, ஒரு கோணத்தில் ஒளியுமிழ, இருள் மறைப்பிலும்,
ஒளித்தெறிப்பிலும், ராதா கோடுகளில் தெரிந்த போது, மாற்கு மாஸ்டரின் கண்ணன்
ராதை ஓவியக் கோடுகள் நினைவுக்கு வந்தது மட்டுமன்றிப் புரியவும்
தொடங்கியது. ஓவியனின் கற்பனையும், அவை பிரசவிக்கின்ற கோடுகளும்
அர்த்தமுடையவை. அழகியலின் கதை பேசுபவை.