1969ல் முன்னைய செக்கோசிலாவாக்கியாவின் மீது ஐக்கிய சோவியத் படைகள், ஆக்கிரமிப்பு யுத்தம் மேற்கொண்ட போது, ஜான் பால்க் ( Jahn Pallc ) எனும் இருபத்தியொரு வயதுக் கல்லூரி மாணவன் செக்கோசிலாவாக்கியாவின் தலைநகர் பாராக்காவில, தன்னுடலில் தீமூட்டித் தீக்குளித்து மாண்டு போகின்றான். அவனது தீயாகத்தில் ஐரோப்பாவும், உலகமும் அதிர்ந்து போகின்றது.
நாற்பது வருடங்களின் பின், அவனை நினைவு படுத்தும் வகையில் மற்றுமொரு தீக்குளிப்பு. சுவிற்சர்லாந்தின் ஜெனிவா நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் காரியாலயத்திற்கு முன்னால், தன் தாயகத்தின் துயர் சுமந்து தீக்குளித்து மாண்டு போகின்றான் முருகதாசன் எனும் தமிழ் இளைஞன். முருகதாசன் எனும் இளைஞனின் தியாகத்தை, ஒரு வரலாற்று நினைவாகப் பதிவு செய்கிறது ஒரு வெளிநாட்டு ஊடகம். அவன் மரணத்தின் பின்னால் உள்ள செய்தி என்ன ஆராய்ந்து சொல்கிறது பார்வையாளனுக்கு.
முருகதாசனது நினைவில் தொடங்கித் தொடர்கிறது சுவிஸ் அரச இத்தாலிய மொழித் தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்றான ' Falo ' நிகழ்ச்சியில் கடந்த 07ந் திகதி இரவு ஒளிபரப்பான 'Era un giovane Tamil ' எனும் விவரணம். இந்த தியாக மரணத்தின் செய்தியறிந்து துயரமுறும் தமிழ் இளைஞி நிதிலாவின் மன உணர்வுகளின் வழி தொடர்ந்து தொகுக்கப்டும் விவரணத்தில், முருகதாசனின் மறைவுச்செய்தி, அவர்கள் பெற்றோர், நண்பர்களின் , உளக்குறிப்புக்கள், ஒரே குடும்பத்தில் எட்டுப் பேர்களைப் பறிகொடுத்த புலம்பெயர் உறவுகளின் சாட்சியங்கள், புலம்பெயர் தமிழ்மக்களின் போராட்டங்கள், மனித உரிமை அமைப்புக்களின் அறிக்கைகள் எனப் பல குறிப்புக்களுடன் ஈழத்தமிழர் பிரச்சனை ஆராயப்படுகிறது.
ஒரு செய்தியாளனுக்கேகுரிய ஆய்வு, தகவல், உண்மை, என்னும் வகைகளில், நிறைவாகத் தொடர்கிறது விவரணம். செய்தியாளர் Dinorah Cervini யின் நேர்த்தியான தொகுப்பு, சுமார் ஒரு இலட்சத்துக்குமதிகமான இந்நிகழ்ச்சியின் பார்வையாளருக்கு, ஈழத்தமிழர் பிரச்சனை தொடர்பான ஒரு புரிதலை ஏற்படுத்த முனைகிறது என்பதில் சந்தேகமில்லை.
விவரணத்தைக்காண
1 comment:
tanks for info
Post a Comment