Monday, September 29, 2008

tamilish, thamilbest, தமிழ்மணம்,மாற்று, ஒரு ஒப்பீடு


உதிரிகளாக எத்தனை வலைப்பதிவுகள் எழுதப்பட்டாலும், அவை பலரது கவனம்பெறுவது என்னவோ திரட்டிகளால்தான் என்பது மறுக்கப்பட முடியாதது. இந்தப்பணியில், தமிழ்மணம், தேன்கூடு, தமிழ்வெளி, தமிழ்பதிவுகள், என்பன இதுவரை காலமும் கூடிய பங்கு வகித்து வந்தன.இவற்றில் தமிழ்மணம் மிக அதிகமான வலைப்பதிவுகளைத் திரட்டுவதென்பதும், அநேக பதிவர்கள், வாசகர்களைக் கொண்டதென்பதும் தெரிந்ததே. இதுவே தமிழ்மணத்திற்கு பலமாகவும், சில நேரங்களில் பலவீனமாகவும் இருந்திருக்கிறது. இதன் அடிப்படையிலே ஏனைய திரட்டிகளைத் தவிர்த்து தமிழ் மணத்தை இவ் ஒப்பீட்டிற்கு எடுத்துக்கொள்கின்றேன்.




புதிய தொழில் நுட்பத்தின் வழி கிடைக்கும் இணையவசதிகள் தமிழிலும் வந்துகொண்டிருக்கின்றன. அந்தவகையில், கிடைத்திருக்கும் மற்றுமொரு புதிய நுட்பத்தினடிப்படையில் தோன்றியிருப்பவைதான், தமிழிஷ், தமிழ்பெஸ்ட், ஆகியன. தற்போதைக்கு அதிக வாசகர்வட்டத்தை தம்பால் இவையிரண்டும் எடுத்துக்கொள்ளத் தொடங்கியிருக்கின்றன என்பது மிகையல்ல. ஆதலினால் அவையிரண்டும் ஒப்பீட்டிற்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

தமிழ்மணம் உட்பட பல திரட்டிகளில் இணைந்துள்ள சில பதிவர்கள், தாம் ஆங்காங்கே வாசித்த நல்ல இடுகைகளை த் தொகுக்கும் திரட்டியாக மாற்று திரட்டி இருக்கிறது. நான் அறிந்த வரையில், இவ்வகைத்திரட்டியாக இது மட்டுமே உள்ளதென்பதால் இவ் ஒப்பீட்டிற்கு மாற்று எடுத்துக்கொள்ளப்படுகிறது.
இனி இவற்றின் பயன்பாட்டில், வலைப்பதிவுகள், பதிவர்கள், பற்றிப் பார்ப்போம்.

தமிழிஷ், தமிழ்பெஸ்ட்டில், இணைத்தேன் நல்ல கிட்ஸ் என நண்பரொருவர் சொன்னார். இணைப்பது சுலபம், கட்டுப்பாடுகள் கிடையாது, நிறைந்த வாசகர் வருகை, என்பன இவற்றின் சிறப்பென்பது உண்மைதான். பதிவர்களே அநேகமாக வாசகர்களாகவும் இருக்கும் வலைப்பதிவுத் திரட்டிகளை விடவும், பதிவர் அல்லாத இணைய வாசகர் அனைவரையும் இவ்வகைத்திரட்டிகள் கவர்கின்றன என்பதும் உன்மைதான். அதனாலேயே அதிக வாசகர் வருகை இங்கே இணைக்கும் போது கிடைக்கின்றது. ஆனால் இந்த அதிகமான வருகையும், குறைவான கட்டுப்பாடுகளும், தரமான எழுத்துக்களை, பதிவுகளைத் தர உதவுமா என்பது சந்தேகத்திற்குரியது. ஏனெனில், அதிக வாசகர் பரம்பலை விரும்பும் போது, அங்கே பரபரப்பான தலைப்புக்கள்,கவர்ச்சிகரமான விடயங்களே அதிகம் முன் வைக்கப்படும். அவற்றின் நடுவே ஒருசில நல்ல விடங்களும் வரலாம். ஆனால் மற்றவைகள் பெறும் முன்னிலையில் இவை பின்னடைந்து போகும். கவனிப்பிழந்து போகும். ஆக இவை ஒரு பரபரப்புத் தரும் திரட்டிகளாக இருக்குமெனக் கருதவே இடமுண்டு.

சில பதிவர்களினால் தெரிவு செய்யப்பட்ட பதிவுகளின் தொகுப்பாக இருக்கும் மாற்று திரட்டி, அதன் பெரைப்போலவே மேற்குறித்த திரட்டிகளுச் சிறப்பான மாற்றே. இது பதிவர் குழுவின் தெரிவுகள் எனும்போது ஒரு குழுநிலை இரசனைப் பதிவுகள் தொகுக்கப்படுகின்ற ஒரு சூழல் வரும். அப்படி வரும் போது அதன் தெரிவுகள் ஒரு வட்தத்துக்குள் அமுங்கிப்போய்விடும் நிலை வரக்கூடும். இது இத்தகைய திரட்டிகளின் பலவீனம். ஆயினும் மாற்று இந்த நிலைக்குள் சிக்கிக்கொள்ளாமல் இதுவரையில் பயனிப்பது ஆறுதலானது. அது அத்திரட்டி உறுப்பினர்கள் கொண்டிருக்கும் கட்ப்பாட்டுப் பொறுப்புணர்வை உணர்த்துகிறது.

இவையெல்லாவற்றுக்கும் பொதுவழங்கிபோல, இன்றுவரை தமிழ்மணமே இருந்து வருகின்றது. அநேகம் வலைப்பதிவுகள் தமிழ்மணத்தாலேயே மற்றவர்களுக்கும், மற்றைய திரட்டிகளுக்கும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. தனக்குப்பின் தோன்றிய திரட்டிகளின் சேவையை தன்னுள்ளும் காட்சிப்படுத்திக்கொண்டு, தொழில்நுட்ப வளர்ச்சி மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டும், தமிழ்மணம் வளர்ந்து கொண்டே செல்கிறது.

இதன் வளர்சிப்போக்கும், கடைப்பிடிக்கும் சில வரையறைகளும், அவ்வப்போது வலைப்பதிவுலகில் காரசாரமான விமர்சனங்கள் விவாதங்களுக்கு உள்ளாகினாலும், ஒரு சராசரி வாசகனை, ஒரு எழுத்தானாக உருவாக்குவதற்கு , தமிழ்மணமும், அதையொத்த வலைத்திரட்டிகளாலுமே முடியும். அந்தவகையில் தன்னுள் திரட்டப்படும் வலைப்பதிவின் உள்ளடக்கங்களை தமிழ்மணத்தால் ஒழுங்கமைப்பது என்பது வலைப்பதிவரின் உரிமையைப் பறிக்கும் செயலெனக் கொள்ளப்பட்டாலும், அப்பதிவு தமிழ்மணத்தில் பெறும் முக்கியத்துவத்தை ஒழுங்கமைக்க முடியும். அந்த வகையில் தமிழ்மணத்தில் மாற்றங்களைக் காலத்திற்குக் காலம் காண்பதும் வளர்வதும் வலைப்பதிவுலகத்திற்கு நல்லதே.

இந்த வகையில் தமிழ்மணத்தின் அவ்வப்போது பலராலும் தேவையற்றது அல்லது மாற்று வடிவம் காணப்பட வேண்டுமெனச் சொல்லப்பட்டது, சூடான இடுகைகள் பகுதி. அன்மையில் இதன் பயன் குறித்து செந்தழல் ரவியும் எழுதியிருந்தார். இந்தப்பகுதியை மாற்றம் செய்வதால் தமிழ்மணம் அதிக வாசகர் பரம்பலை இழந்துவிடுமென்றோ, பதிவர்களை இழந்து விடுமென்றோ எண்ணத் தேவையில்லை. மாறாக புதிதாக வரும் வரும்வலைப்பதிவுகளுக் சிறப்பான வழிகாட்டலாகவும், நல்ல எழுத்தாளர்களை உருவாக்கும் பட்டறையாகவும் அமைய முடியும்.

8 comments:

Anonymous said...

ஆனால் இந்த அதிகமான வருகையும், குறைவான கட்டுப்பாடுகளும், தரமான எழுத்துக்களை, பதிவுகளைத் தர உதவுமா என்பது சந்தேகத்திற்குரியது. ஏனெனில், அதிக வாசகர் பரம்பலை விரும்பும் போது, அங்கே பரபரப்பான தலைப்புக்கள்,கவர்ச்சிகரமான விடயங்களே அதிகம் முன் வைக்கப்படும்.//

இங்கை மட்டும் என்ன வாழுதாம்ணேன்..? :)

பதிவர்களே வாசகர்களாயும் வாசகர்களே பதிவகளாயும் இருந்த நிலை இனி மாறக் கூடும். இதுநாள் வரை பின்னூட்டமிடுபவர்கள் இன்னொரு பதிவர்களாய் இருந்த நிலையும் மாறி வாசகர்களும் தமது கருத்த தந்து செல்லக் கூடும். (அதனால இனி முகமிலிகளின் பின்னூட்டம் அனுமதிக்கப் படாது. புளொக்கர் கணக்கில பின்னூட்டம் போடுங்க என்றதெல்லாம் சரிவராது.)

என்னுடைய கேள்வி என்னவெனில்.. இவ்வாறு பதிவரல்லாத வாசகர் வட்டத்தை தமிழ்மணமும் நெருங்கியிருக்க முடியும் தானே..? ஏன் அவ்வாறில்லாது தனித்தே பதிவர்களின் தனிச் சுற்றுக்குள் அது நின்று விட்டது ?

Nimal said...

//புதிய தொழில் நுட்பத்தின் வழி கிடைக்கும் இணையவசதிகள் தமிழிலும் வந்துகொண்டிருக்கின்றன. அந்தவகையில், கிடைத்திருக்கும் மற்றுமொரு புதிய நுட்பத்தினடிப்படையில் தோன்றியிருப்பவைதான், தமிழிஷ், தமிழ்பெஸ்ட், ஆகியன. //

இவை இரண்டும் Pligg Content Management System என்ற ஒரே மென்பொருளில் இயங்குவதுடன் ஒத்த பயன்பாடுகளை உடையனவாக உள்ளன.

அத்தோடு இவை மாற்று தளத்துடன் அடிப்படையில் ஒத்திருந்தாலும் இங்கு யாரும் விருப்ப பதிவுகளை இணைக்கலாம் என்பது தான் வேறுபாடு.

ஆகவே இவை இரண்டும் தமக்குள் தகுந்த வேற்பாட்டையோ சிறப்புத்தன்மையையோ ஏற்றடுத்தாதவரை இரண்டில் ஒன்றுதான் நிலைத்திருக்கும். (உண்மையான பயனுடன்)

//தனக்குப்பின் தோன்றிய திரட்டிகளின் சேவையை தன்னுள்ளும் காட்சிப்படுத்திக்கொண்டு, தொழில்நுட்ப வளர்ச்சி மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டும், தமிழ்மணம் வளர்ந்து கொண்டே செல்கிறது.//

இது தான் தமிழ்மணத்தின் வெற்றி என நான் நினைக்கிறேன். மாற்றங்களை உள்வாங்கும் தன்மையே நிலைத்திருத்தலுக்கு அடிப்படை. அதை தமிழ் மணம் உணர்ந்திருப்பதாகவே படுகிறது.

Anonymous said...

//என்னுடைய கேள்வி என்னவெனில்.. இவ்வாறு பதிவரல்லாத வாசகர் வட்டத்தை தமிழ்மணமும் நெருங்கியிருக்க முடியும் தானே..? ஏன் அவ்வாறில்லாது தனித்தே பதிவர்களின் தனிச் சுற்றுக்குள் அது நின்று விட்டது ?//

Who said so?
I've been reading blogs for almost 5 years. I just remain a reader and would be so even in future. I use Thamizhmanam as central location to read the posts of these bloggers. There are hundreds (if not thousands) of others like me.

Nimal said...

//இவ்வாறு பதிவரல்லாத வாசகர் வட்டத்தை தமிழ்மணமும் நெருங்கியிருக்க முடியும் தானே..? ஏன் அவ்வாறில்லாது தனித்தே பதிவர்களின் தனிச் சுற்றுக்குள் அது நின்று விட்டது ?//

இது தொடர்பில் தமிழ்மணத்தின் பக்கத்தில் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. பதிவர் சந்திப்புக்கள், பட்டறைகளில் தமிழ்மணம் பற்றி கதைப்பதாக அறிந்திருக்கிறோம். ஆனாலும் அவையும் புதிய பதிவர்களை உருவாக்கியுள்ளவே தவிர, பதிய வாசகரகளை எவ்வளவு தூரம் அடைந்தன என்பது சந்தேகத்துக்குரியதே.

சிக்கிமுக்கி said...

//இந்த வகையில் தமிழ்மணத்தின் அவ்வப்போது பலராலும் தேவையற்றது அல்லது மாற்று வடிவம் காணப்பட வேண்டுமெனச் சொல்லப்பட்டது, சூடான இடுகைகள் பகுதி. அன்மையில் இதன் பயன் குறித்து செந்தழல் ரவியும் எழுதியிருந்தார். இந்தப்பகுதியை மாற்றம் செய்வதால் தமிழ்மணம் அதிக வாசகர் பரம்பலை இழந்துவிடுமென்றோ, பதிவர்களை இழந்து விடுமென்றோ எண்ணத் தேவையில்லை. மாறாக புதிதாக வரும் வரும்வலைப்பதிவுகளுக் சிறப்பான வழிகாட்டலாகவும், நல்ல எழுத்தாளர்களை உருவாக்கும் பட்டறையாகவும் அமைய முடியும்.//

ஒப்புக் கொள்ளக் கூடிய கருத்து.

மலைநாடான் said...

//பதிவரல்லாத வாசகர் வட்டத்தை தமிழ்மணமும் நெருங்கியிருக்க முடியும் தானே..? ஏன் அவ்வாறில்லாது தனித்தே பதிவர்களின் தனிச் சுற்றுக்குள் அது நின்று விட்டது ?//

சயந்தன்!
இது ஏதோ இன்றெழுந்த பிரச்சனையல்ல. சிற்றிதழ் - ஜனரஞ்சக இதழ், இலக்கிய எழுத்தாளர் - ஜனரஞ்சக எழுத்தாளர், கலைச்சினிமா - வர்த்தகசினிமா, எனத் தொடர்ந்து வருகிறது.
வலைப்பதிவுகளை முதலில் எழுதத் தொடங்கியவர்கள் அதை சீரியசாகவே எடுத்து எழுதியிருக்க வேண்டும். ஆனால் பின்னா் பதிவர்கள் தொகை அதிகரித்த பொழுது, நிலைமை மாறியது. மேலும் வலைப்பதிவுகள், திரட்டிகள், பற்றிய பரிச்சயம் இன்னும் சரியாகத் தமிழ்பரப்புக்குள் வரவில்லை என்றே கருதுகின்றேன்.

மலைநாடான் said...

//இவை இரண்டும் தமக்குள் தகுந்த வேற்பாட்டையோ சிறப்புத்தன்மையையோ ஏற்றடுத்தாதவரை இரண்டில் ஒன்றுதான் நிலைத்திருக்கும்//

இந்த நுட்பத்தில் இரண்டல்ல இன்னும் பல வரும் அவைகளில் ஒன்றல்ல பலவும் நிலைத்திருக்க முடியும். நீங்கள் குறிப்பிடதைப்போல ஏதாவது சிறப்பினால். ஆனால் காலமும் நுட்பமும் இதையும், மாற்றும்.

சுப.நற்குணன்,மலேசியா. said...

திருமன்றில் திரட்டியைக் கொஞ்சம் பார்வையிடவும்.