Thursday, March 13, 2008

கிருஷ்ணா கிருஷ்ணா, அமீர்கான்

தமிழகத்தில் நண்பர்களைச் சந்தித்த போதுகளில், பல விடயங்கள் பேசினோம், பார்த்தோம், படித்தோம். புத்தகங்கள் வாங்கவில்லையா? என்ற போது, பயணப்பொதிப்பாரத்தைக் கணக்கில் வைத்து சுருக்கமாகச் சிறந்ததாக சிலவற்றை வேண்டலாம் என்றேன். ஒலிப்புத்தகம் பற்றிய என் விருப்பத்தைச் சொன்ன போது, நண்பரொருவர் இந்திரா பார்த்தசாரதியின் "கிருஷ்ணா கிருஷ்ணா" நாவலைக் குறிப்பிட்டார். இந்திரா பார்த்தசாரதியின் எழுத்துக்களில் காணப்படும் மறுபக்கத்தன்மை என்றும் என் விருப்பத்துக்குரியது. கிழக்குப் பதிப்பகத்தின் வெளியீடாக MP3 ஒலிக்கோப்பாக வந்துள்ள பதிப்பில், இந்திரா பார்த்தசாரதியின் எழுத்துக்களுக்கு குரல்வடிவம் தருபவர் ரேவதி சங்கரன். ரேவதி சங்கரன் நல்லவொரு கதை சொல்லி. இயல், இசை, நடிப்பு கலந்து கதைசொல்வதன் மூலம், கிருஷ்ணனனை சமுதாயக்கனவாக இந்திரா பார்த்தசாரதி எழுத்தில் வடித்ததை நன்றாகவே பதிவுசெய்கிறார். நீண்டதூர வேகவீதிப்பயணியாக அதிகம் பிரயாணம் செய்யும் என்னைப் போன்றவர்களுக்கு இந்த ஒலிப்புத்தக வடிவு, நல்ல வழித்துணை. இவை எல்லாவற்றுக்கும் மேலாக 'கிருஷ்ணா கிருஷ்ணா' வில் இந்திரா பார்த்தசாரதி காட்டும் கண்ணன் எனக்கு மிக நெருக்கமாக வந்து போனான்.

பகல்பொழுதொன்றில் படம் பார்க்கக் கிடைத்த சந்தர்ப்பத்தைச் சொல்ல, 'தாரே சமீன் பார் ' பாருங்கள் எனத் தொலைபேசியில் கண்டிப்பாகச் சொல்லிவிட்டார் மற்றொரு நண்பர். ஹிந்தித் திரைப்படங்களில் அவ்வளவு ஆர்வமில்லாவிடினும், குறிப்பிட்டுச் சொன்ன நண்பர் குறைத்து மதிப்பிட முடியாதவர். சத்யம் தியேட்டர் வாசலில் தொற்றிக் கொண்ட தெரிந்தவர் ஒருவரின் சிறையெடுப்பில் சிக்கி உள்ளே போய், இரண்டு மணிநேரமாக வடிவேலுவின் சித்திரவதையில் நொந்து நூலாகிப்போனேன். பார்த்தது 'இந்திரலோகத்தில் நா. அழகப்பன்' என்று வேறு சொல்லவும் வேண்டுமா?. பாதிவழியில் சேர்ந்து சிறைபிடித்த நண்பர் சிரித்தவண்ணமாய் படம்பார்திருக்க, இதற்காக போனீர்களெனத் திட்டப்போகும் சீரியஸ் நண்பரின் சீற்றம் குறித்து சிந்தித்த வண்ணமே பார்த்திருந்தேன்.



முதல் முயற்சி தோல்வியில் முடிந்தாலும், மற்றொருமுறை முயற்சித்ததில் ' தாரே சமீன் பார்" பார்க்கக் கிடைத்தது. பார்க்கச் சொன்ன நண்பா, நன்றி. இது பற்றி இணையத்தில் நண்பர்கள் நிறையவே சொல்லி விட்டார்கள். ஆரம்பம் முதல் இறுதிவரையில் பல பல விடயங்கள் அசரவைத்தன. இன்னும் சில தடவைகள் பார்க்க வேண்டும். அந்தச் சிறுவன் இன்னும் கண்ணுள் நிற்கின்றான். அமீர்கான் பற்றி எனக்கு முன்னர் பெரிதாக அபிப்பிராயம் இல்லாதபோதும், இந்தப்படத்தின் மூலம் சில எண்ணங்கள் எழுந்தன.
சத்யம் திரையரங்கு தரமான திரையரங்காக இருக்கிறது. ' இந்திரலோகத்தில் நா. அழகப்பன் ' பார்த்தபோது, உடனடியாகவே படம் ஆரம்பித்தது. ஆனால் ஹிந்திப்படத்தின் முன் தேசியக்கொடியும், தேசிய கீதமும் திரையிலும் ஒலியிலும் வந்தன. திரையரங்கே எழுந்து நின்று மரியாதை செய்தது. இதமாயும், ஏக்கமாயும் இருந்தது. ....
நாமும் ஒரு நாள் எழுந்து நிற்போம்




- இன்னமும் சொல்லலாம்








































5 comments:

Anonymous said...

\\நாமும் ஒரு நாள் எழுந்து நிற்போம்\\

நிச்சயமாக.

மலைநாடான் said...

அனானி! நன்றி :)

Anonymous said...

சதயம் திரை அரங்கு மட்டும் இல்லாமல் சென்னையில் திரைஅரங்குகள் பல வற்றிலும் இந்திய தேசிய கீதம் பின் படம் தொடங்குகிறது. நானும் என் சென்னை விஜயங்களில் கண்டு இருக்கிறேன்.

என்னதான் சண்டை இட்டாலும் தமிழ்நாட்டின் தமிழர்களின் இந்திய தேசிய உணர்வு மெய் சிலிரிக்க வைக்கிறது. இதை பல முறை நானே தமிழகத்தில் வசித்த போது கண்டுள்ளேன். குறிப்பாக தென் தமிழகத்தில் பல முறை இந்த ஒழுங்கை கண்டுள்ளேன்.


தமிழ் ஈழம் ஒரு நாள் எழும் போது நம் தேசிய முழக்கத்தை வானேங்கும் எடுத்து செல்வோம்.

thiru said...

மலைநாடான்,

நல்ல படம்! இன்று தான் பார்த்தேன். விரிவாக இதுபற்றி பின்னர் எழுதுகிறேன்.

குமரன் (Kumaran) said...

மலைநாடான்,

இந்திரா பார்த்தசாரதியின் எழுத்துகள் நிறைய படித்ததில்லை. இணையத்தில் அவ்வப்போது தட்டுப்படும் (பெரும்பாலும் திண்ணை வலைப்பக்கத்தில் தட்டுப்படும்) அவரது எழுத்துகளைப் படித்திருக்கிறேன். அவை எல்லாம் ஏதோ ஒன்றைச் சொல்ல வந்துவிட்டு முழுவதும் சொல்லாமல் விட்டது போலவே ஒரு தோற்றத்தைக் கொடுக்கின்றன. நீங்கள் சொன்ன இந்த நூலை முடிந்தால் தேடிப் படிக்கிறேன்.

தரையின் மேல் விண்மீன்கள் படத்தை நானும் பார்த்த பிறகு தான் வலைப்பதிவர்கள் நிறைய பேர் அதனைப் பற்றிப் பேசியிருப்பதைக் கவனித்தேன்.