Wednesday, June 06, 2007

தொண்டுப் பணியாளர்களும், தொலைந்து போகும்..


மனிதம் மரித்த பூமியில் மடிந்துபோன மற்றுமிரு தொண்டர்களுக்கு அஞ்சலித்து.


பணி என்றால், அதற்கான ஒப்பந்த வரைவு ஒன்றிருக்கும். அதற்குட்பட்டதான செயலிருக்கும். ஆனால் தொண்டு என்பது முற்றுமுழுதான சேவைக்குட்பட்டது. தொண்டுப்பணியாளர்களுக்கு சில உதவிகள் கிடைக்கப்பெறுவதாயினும், அவர்கள் சேவை, வழங்கப்படும் உதவிகளால் மட்டுறுத்திவிட முடியாததது. மற்றவர்களது மனத்திடம் கலைந்துபோன ஒரு சூழலில், திடமான மனத்துடனும், திறந்த மனப்பாங்கினுடனும் செயலாற்றுபவர்கள் சேவையாளர்கள்.

தொற்று நோய்சூழலிலும், தொடரும் யுத்தப்பிரதேசங்களிலும், இயற்கை அழிவுகளின்போதும், இந்தப் பணியாளர்களின் பணிநேரமென்பது காலவரையற்றது. சுருங்கக் கருத்துக் கூறமுடியாதது. அப்படியான ஒரு அர்ப்பணிப்புமிக்க பணியாளர்களது பணி, ஒரு போராளியின் பணிக்கோ, இராணுவவீரனின் பணிக்கோ, சற்றும் குறைவில்லாதது.


அத்தகைய அர்ப்பணிப்பு மிக்கப் பணியாளர்களைப் பலிகொள்ளும் பயங்கரம் தொடருகின்ற நாடாக சிறிலங்கா முன்னேறுகிறது. போராளிகள், பொதுமக்கள், ஊடகவியலாளர், மதகுருமார்கள், எனத் தொடர்ந்த கொலைப்பயங்கரம், தொண்டுப்பணியாளர்கள் வரை தொடர்ந்து வந்திருக்கிறது. நினைக்கவே கேவலமாக இருக்கக் கூடிய இந்த இழிசெயலில் இதுவரை மூதூரில் பிரான்ஞ் தொண்டுநிறுவனப் பணியாளர்கள், புனர்வாழ்வுக்கழகப் பணியாளர்கள், செஞ்சிலுவை சங்கப்பணியாளர்களென தொடர்ந்து பலியாகியுள்ளார்கள்.


ஏறக்குறைய இந்தப்படுகொலைகளுக்கான சூத்திரதாரிகள் யாரென தெரிந்திருக்கும் போதும், தெரியாதமாதிரி பாசாங்கு செய்யும் அரசு. அதற்குப் பச்சாதாபம் காட்டிக் கரங்கோர்க்கும் பார்வையாள பாத்திரம் வகிக்கும் பல்வேறுநாடுகள். பார்த்துக்கொண்டிருக்கும் நாங்கள். யாருக்கும் வலியில்லை.


யுத்தத்தின் பல்லிடுக்குகளில், இடுக்கிக்கொண்டதில் இடுப்பொடிந்து போன தாயொருத்தி, தன்னைத் தூக்கிச்சுமந்த அவனோ அவளோ அழிக்கப்பட்டசேதி கேட்டு அரண்டுபோவாள். அவளுக்கு வலிக்கும். தூக்கிவளர்த்த சொந்தச்சகோதரியும், பெற்றுமகிழ்ந்த அன்னையும், இந்தத்துன்பச் செய்தியில் துவண்டுபோவார்கள். அவர்களின் இழப்பில் வலிபடுபவர்களும், வதைபடுபவர்களும், இவர்களே. இனி..


மனிதநாகரித்தை மரிக்கச்செய்து, கிடப்பில் போட்ட தலைவர்கள், இரத்தம் தோய்ந்த கைகளோடு, எழுந்து நின்று கைகுலுக்கிக்கொள்வார்கள், கரங்கூப்பிக்கொள்வார்கள், அநியாயப்படுகொலையென அறிக்கைவிடுவார்கள். அஞ்சலித்துத் துக்கிப்பார்கள், துதிசொல்வார்கள். இறந்துபோன உயிர்களுக்கு இழப்பீட்டுத்தொகையில் விலைபேசுவார்கள். மனிதநாகரீகத்தை மறைத்திட்ட பேர்வழிகளை, விசாரணைக்குழுவைத்து விரட்டிப்பிடிப்போமென்பார்கள். விரைவில் மறந்து போவார்கள். மறந்தும், முக ஆடியில் தம் முகநாடி பாக்கமாட்டார்கள்..




3 comments:

கலை said...

எதைச் சொல்ல முடியும்? :((((

theevu said...

தங்களது இராணுவத்தினரது சடலத்தையே பெற்றுக்கொள்ள மறுக்கும் ஒரு மனிதாபிமானமற்ற அரசிடமிருந்து வேறென்னத்தை எதிர்பார்க்கமுடியும்?

மலைநாடான் said...

கலை!

பகிர்வுக்கு நன்றி.

தீவு!

நீங்கள் குறிப்பிட்டிருப்பது உண்மைதான்.ஆனாலும் இந்தப்பார்வையாள பங்குதாரர்களை நினைத்தால்தான் வேதனையாகவிருக்கிறது. வேடிக்கையாகவிருக்கிறது.